மாடியேறியவன் வராண்டாவில் நின்று திரும்பி பார்க்க கற்பகம் மற்றொரு தோட்டக்கார பெண்ணிடமிருந்து முகம் நிறைத்த புன்னகையோடு மலர் சரத்தை வாங்கிக் கொண்டு ஓடுவது தெரிந்தது.
தன்னவளுக்காக தான் என்றது புரிந்தவனுக்கு முகமும் அகமும் மலர்ந்து போனது.அவள் எப்போது வேண்டுமானாலும் வருவாள் என்பதற்காக அறைக்குள் போகாமல் நொடிக்கொரு முறை படியைக் கவனித்தபடியே அங்கேயே நின்றிருந்தான் வீரேந்திரன்.
இருபது நிமிடம் கழித்து படிக்கட்டில் அரவம் கேட்க வேணி அவளோடு வந்து கொண்டிருந்தாள்.
“நான் போயிக்குறேன் வேணி நீ போய் வேலையை பாரு.”
“ஆங்ங் நல்லா சொன்னீங்க போங்க..இனி நான் இல்லாம நீங்க படியே இறங்கக் கூடாது மா..தலை சுத்தெல்லாம் இருக்குமாமே..பெரியம்மா சொன்னாங்களே.”
“இப்போ நன்னா தான் இருக்கேன்’”,என்றவள் சிரிக்க பதில் பேசாத வேணியைப் பார்த்து திரும்பியவள் அவள் பார்வை சென்ற திசையில் நின்ற கணவனைப் பார்த்து புன்னகைத்தாள்.
வேணி குடுகுடுவென கீழே சென்றுவிட அவளுக்காக கை கொடுத்து தனதறைக்குள் அழைத்துச் சென்றான்.
அறைக்குள் நுழைந்ததும் எப்போதும் போல் அவனைப் பின்னிருந்து இறுக அணைத்துக் கொண்டாள் ஏழிசை.
“இன்னிக்கு ஒரு நாள் என்னோட இருக்குறேளா?!”
“இங்கேயே தான் இருக்க போறேன்.”
“சின்னதுகள் இரண்டும் நாளைக்கு வராளாம்.”
“ம்ம்..”
“ராகவ் சொல்றான் அவனுக்கு பொண்ணு அதுவும் ஜிஷா குட்டி மாதிரி அழுமுஞ்சியா இல்லாம என்னை மாதிரி சமத்தா வேணுமாம்.”
“ம்ம்..”
மெதுவாய் அவனது தோள் தொட்டு தன்புறம் திருப்பியவள் அவன் முகம் பார்க்க எதோ சிந்தனையில் இருந்தான்.
“என்னாச்சு”
“இசை, காவ்யாக்கு டெலிவரில சின்ன சின்ன காம்ப்ளிகேஷன்ஸ் இருந்தது.அதெல்லாம் என்னனு விவரம் கேட்டுக்கோ.உனக்கு சின்ன பிரச்சனைக் கூட இருக்க கூடாது.”
“…”
“பிரசவ வலியெல்லாம் தாங்கிடுவியா டி..”
“…”
“ரொம்ப சந்தோஷம் இருக்கு ஆனால் அதையும் தாண்டி இதெல்லாம் தோணுது டி..சமாளிச்சுருவல..”
“…”
“குழந்தையை விட எனக்கு நீ முக்கியம் டி மாமி..”,என்றவனை தன்புறம் இழுத்து கழுத்து வளைவில் அழுந்த இதழ் பதித்தாள்.
“வீரா என் கூடவே இருந்தா போதும் எல்லாத்தையும் சமாளிச்சுருவேன்.இப்போ தான் முதல் புள்ளையே வரப் போறது இன்னும் மூணு பெண்டிங் அதுகுள்ள இப்படி பயந்தா எப்படி..”,
“இந்த விஷயத்துதல மட்டும் உன் பேச்சை நான் கேட்க போறதில்ல.கண்டிப்பா ஒரே குழந்தை தான்.”,என்றவனின் பிடிவாதக் குரல் ஏழிசைக்கு புன்னகையை வர வைத்திருந்தது.
“சும்மா சொல்றேன்னு நினைக்காத உன் மனசை மாத்திக்கோ..இந்த பத்து மாசமே எனக்கு பயமா இருக்கு.”
“வீரா..”
“ம்ம்..”
“ஏன் இப்படி இருக்கேள்..”
“எப்படி??”
“இவ்வளவு அன்பா,பாசமா..”
“ஏன்னு கேட்டா என்ன அர்த்தம்?நீ என் இசை அதனால தான்.”
“…”
“நான் நானாகவே இருக்கேன் டி.எதிர்பார்ப்பே இல்லாம அன்பு வைக்குறவ நீ தான்.நீ வந்த அப்பறம் உண்மையாவே பல மடங்கு உற்சாகத்தோட வேலை செய்யுறேன்.”
“…”
“நம்ம தான் எல்லா தொழில்லயும் லீடிங்ல இருக்கோம்.ஷேர்ஸ் கூட இந்த இரண்டு மாசத்துல எதிர்பார்க்காத ஹைக் தெரியுமா.”
“…”
“மனசும் மூளையும் ரொம்ப தெளிவா இருக்கு டி..அதுக்கு முழு காரணமும் நீ மட்டும் தான்..இப்போ..”,என்றவன் லேசாய் அவளது வயிற்றில் அழுத்திக் கொடுத்தான்.
என்ன தோன்றியதோ அவள் மடியில் தலை சாய்த்துக் கொண்டான் வீரேந்திரன்.
“எனக்காக ஒரு பாட்டு பாடு இசை..”
“!!”
“பாடு டி..”
“உன்னை, நான் அறிவேன்! என்னையன்றி யாறரிவார்? கண்ணில், நீர் வழிந்தால், என்னையன்றி யார் துடைப்பார்? யார் இவர்கள் மாயும் மானிடர்கள்! ஆட்டிவைதால் ஆடும் பாத்திரங்கள்!
உன்னை, நான் அறிவேன்! என்னையன்றி யாரறிவார்? கண்ணில், நீர் வழிந்தால், என்னையன்றி யார் துடைப்பார்?”
எனும்போதே கரகரத்த அவள் குரலை சரிசெய்த வண்ணம் மடியில் இருந்த தன்னவனின் விழியோர கண்ணீரைத் துடைத்தாள் அவனின் அன்பு மனைவி.
மறுநாள் காலையில் வந்ததும் வராததுமாய் தங்கள் பைகளைக் கூட எடுக்காமல் மாடிக்கு ஓடினர் திவ்யாவும் ராகவும்.
நல்ல உறக்கத்தில் இருந்த ஏழிசையை எழுப்ப மனமில்லாமல் படுத்திருந்த வீரேந்திரன் கதவு தட்டும் ஓசையில் எழுந்து கதவைத் திறக்க அவனைத் தள்ளாத குறையாய் உள்ளே வந்தவர்களைப் பார்த்து சிரித்து விட்டான்.
“மெதுவா வர மாட்டீங்களா?”,என்ற அண்ணனைப் பார்த்து தலை குனிந்து இருவரும் நிற்க அதற்குள் ஏழிசை கண் விழித்திருந்தாள்.அவள் எழுந்து அமரும் வரைப் பொறுத்தவர்கள் பின் ஆளுக்கொரு புறமாய் சென்று அவளைக் கட்டிக் கொண்டனர்.
“அண்ணி…”
“வந்தாச்சா இரண்டு பேரும்”,என்றவள் அவர்களின் கன்னத்தில் கை வைத்து தட்டிக் கொடுக்க வீரேந்திரனோ வெறும் பார்வையாளனாய்.
“கங்க்ராட்ஸ் அண்ணி..”
“தேங்க் யூ தேங்க் யூ..கொஞ்சம் இரண்டு பேரும் என்னை விடுறேளா..”,என்றவள் கணவனின் பார்வையைப் பார்த்து நெளிந்தாள்.
“அண்ணி எங்க சீனியர் டாக்டர்கிட்ட கேட்டு ஃபுட் சார்ட் வாங்கிட்டு வந்தேன்.ஒழுங்கா அதை தான் பாஃலோ பண்ணணும்.”
“சரி திவி.”
“அண்ணி நேத்து நான் உங்ககிட்ட பேசினதைக் கேட்டு ஓவி செம டென்..”,என்று உளறியவன் அண்ணனின் நினைவு வர கப்சிப்பென்று வாயை மூடிக் கொண்டான்.
“சரி அண்ணி நீங்க பொறுமையா வாங்க நான் குளிச்சிட்டு வரேன்..”,என்றவன் கழண்டு கொள்ள திவ்யா அண்ணியைப் பார்த்து சிரித்தவாறே அவனோடு பின்னே சென்றாள்.
கதவை சாற்றிவிட்டு வந்தவனுக்கு புயலடித்து ஓய்ந்தாற் போல் இருந்தது.
“ரொம்ப செல்லம் கொடுக்குற”,என்றபடி மனைவியைப் பார்க்க அவளோ சிரித்தாள்.
“ராகவ் ஏதோ சொன்னானே..”,என்றதும் அவளது புன்னகை விரிந்தது.
“அவ்வளவு பெரிய மனுஷனாயிட்டானா அவன்?!”,என்றவனின் நினைவில் சிறு வயது ராகவ் தான் இருந்தான்.
“உங்களுக்கே குழந்தை வரப் போறது”,என்றவளின் குரல் மெதுவாய் ஒலித்தது.லேசாய் புன்னகை அவனிடத்தில்.
“இரண்டு பேரும் உன் கூட ரொம்ப ஒட்டிக்குறாங்க..இதெல்லாம் நல்லதுக்கே இல்ல..”
“!!”
“என் முன்னாடியே எப்படி கட்டிக்கறாங்க நீயும் கொஞ்சிட்டு இருக்க”,என்றவன் அவளை முறைத்தான்.
வாய்விட்டே சிரித்திருந்தவள் அவனைத் தன்புறம் திருப்பி,”உங்களால தான் அவா நேக்கு கிடைச்சா.என்ன இருந்தாலும் என் ஆத்துக்காரரோட முதல் பசங்க இல்லையா அவா ரெண்டு பேரும்”,என்றவளின் இதழோடு இதழ் சேர்த்து கொண்டான் அவளின் வீரா.
காலை உணவை இருவருக்குமாய் மாடிக்கே கொண்டு வரச் சொல்லிவிட்டான்.தான் வேலைக்கு செல்லும் நேரம் ஏழிசையை கீழே விட்டுச் செல்ல மாலை அவன் வரும் வரையிலும் அங்கிருந்த அறையிலேயே தங்கிக் கொள்ளுமாறு கூறிவிட்டான்.
திவ்யாவும் ராகவும் ஏழிசையோடு வம்பளந்து கொண்டிருக்க உமையாள் தயக்கமாய் அவர்கள் அருகில் வந்தாள்.
“ஹாய் அண்ணி ஆபீஸ் போலயா?!”,என்று ராகவ் இயல்பாய் கேட்க ஏழிசை அவளைத் தன் அருகில் இருந்த சோபாவில் அமர்த்திக் கொண்டாள்.
“இல்ல ராகவ் இன்னைக்கு நான் வரலைனு சொல்லிட்டேன்.அக்காவோடயும் உங்களோடையும் இருக்கலாம்னு தான்.”,என்றவளைப் பார்த்து உற்சாகமாய் சிரித்தனர் சிறியவர்கள்.
“அப்பறம் கேளுங்க, சார் நேத்தே ப்ரோப்போஸ் பண்ணிட்டார் அந்த பொண்ணுகிட்ட”,என்று திவ்யா அவனை மாட்டிவிட ஏழிசை அதிர்ச்சியில் தன் வாயை முடிக் கொள்ள உமையாளோ அக்கம் பக்கம் பார்த்து விட்டு சிரித்துவிட்டாள்.
“என்ன ராகவ் உண்மையா?!”,என்ற ஏழிசையைப் பார்த்து ஆம் என்பதாய் தலையசைத்தவன் நடந்ததை மறைக்காமல் கூறினான்.
“எந்த தைரியத்தில் அந்த பொண்ணை காதலிக்குறேன்னு சொன்ன வீட்டில் தெரிஞ்சா?”,என்று உமையாள் கேட்க,
“எல்லாம் இரண்டு அண்ணிங்க இருக்குற தைரியத்தில் தான்”,என்றவன் கண்சிமிட்டிச் சிரித்தான்.
“விளையாட்டு இல்லை ராகவா!”,என்ற ஏழிசையின் மடியில் தலை சாய்த்துக் கொண்டவன்,
“அண்ணி நான் விளையாட்டுத் தனமா இருக்குறவன் தான் அதுக்காக இதிலெல்லாம் அப்படி இருக்க மாட்டேன் அண்ணி.அவள் என் மேல ரொம்ப அன்பு வைச்சுருக்கா.கண்டிப்பா நானும் அவளை நல்லா பார்த்துப்பேன் அண்ணி நம்புங்க.”,என்றவனை திருப்தியாய் பார்தாள் ஏழிசை.
“சமத்து டா நீ..இருந்தாலும் இதெல்லாம் தெளிவாக்கிகணும்னு தான் கேட்டேன்.”
“ம்ம் பார்த்தியா திவி காதலுக்கு பச்சைக் கொடி தான் காட்டுறாங்க..பேசாம நீயும் உன் மேட்டரை சொல்லிடு”,என்று ராகவ் அவளை மாட்டிவிட இருந்த இடத்தில் இருந்து எழுந்தே விட்டிருந்தாள் திவ்யா.
ஏழிசையும் உமையாளும் ஒருவரை ஒருவர் பார்த்து முழிக்க ராகவோ படுத்தபடி கால்மேல் கால் போட்டு ஆடிக் கொண்டிருந்தான்.
“சும்மா சொல்லு திவி.அண்ணிங்க இருக்க பயமேன்”,என்றவனை முறைத்தாள் ஏழிசை.
“அண்ணி..அது அவன் ஏதோ உளர்றான்..”
“எதே!”
“டேய் உன்னை கொன்னுடுவேன்..வாயை மூடு.”
“அவன் சொல்றது உண்மையா திவி?!”,என்ற உமையாளைப் பார்த்தவளின் கண்கள் கலங்கி விட்டிருந்தது.
அதைப் பார்த்து பதறியவளாய் ஏழிசை ராகவை எழுப்பிவிட்டு திவ்யாவை தன் புறம் அழைத்தாள்.
“அழாத டா..எதுவாயிருந்தாலும் சொல்லு?”
“அண்ணி அது..அவர் என்னோட சீனியர் டாக்டர்..”
“!!”
“பேர் விஷால்.”
“இரண்டு வருஷமா லவ் பண்றோம் அண்ணி..”,என்றவளுக்கு அவர்களின் முதல் சந்திப்பு நினைவில் வந்தது.
சென்னையின் அந்த பிரபல மாலின் ஃபுட்கோர்டில் தனக்கான சாப்பாட்டை வாங்கி விட்டு திரும்ப எத்தனித்தவளை இறுக அணைத்திருந்தது வலிய கரம்.
“ஹே பேபி..எப்படியிருக்க?”,என்ற குரலில் பதறிப்போய் திவ்யா திரும்ப எதிரில் இருந்தவன் அவளை விட பதட்டமாய் அவளைப் பார்த்திருந்தான்.
“இட்ஸ் ஓகே”,என்றவள் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பியிருந்தாள்.
“என்ன டா செம டோஸ்ஸா?!”
“நல்ல வேளை வந்த இல்லைனா போலீஸ் ஸ்டேஷன்ல தான் உட்காந்திருப்பேன்னு நினைக்குறேன்.”,என்று சிரித்தபடி தங்களைத் தாண்டி செல்பவளையே பார்த்திருந்தான் விஷால்.
மறுநாள் கல்லூரிக்கு வந்தவள் கைனிக் வகுப்பிற்காகச் செல்ல அங்கு மாணவிகளின் நடுவில் கம்பீரமாய் வெள்ளைக் கோட் அணிந்து வகுப்பு நடத்திக் கொண்டிருந்தவனைப் பார்த்து தலை சுற்றாத குறை தான்.