“கள்வம்!’ என்பார்க்கும் துயில் இல்லை; காதலி மாட்டு உள்ளம் வைப்பார்க்கும் துயில் இல்லை; ‘ஒண் பொருள் செய்வம்!’ என்பார்க்கும் துயில் இல்லை; அப் பொருள் காப்பார்க்கும் இல்லை, துயில்.
திருடர்களுக்கும் தூக்கம் இல்லை. ஒரு பெண்ணை விரும்பும் தலைமகனுக்கும் தூக்கம் இல்லை. செல்வத்தை ஈட்டுபவனுக்கும் தூக்கம் இல்லை. அச்செல்வத்தைத் திருடு போகாது காப்பாற்றுபவனுக்கும் தூக்கம் இல்லை”
அதன் பின்னான நாட்கள் அபூர்வாவிற்குச் சாதாரணமாய் சென்றன.வேலையில் முன்பை விட பலமடங்கு கவனமாய் இருந்தாள்.
ப்ரஜீஷும் தேவையற்ற எந்த வாதங்களையும் தொடங்கவில்லை.எல்லாம் சரியாகச் சென்றால் எப்படி (கதையில்) வாழ்க்கையில் சுவாரஸ்யம் ஏது.
அன்றைய இரவு நல்ல ஆழ் தூக்கத்தில் இருந்தவளின் கைப்பேசி எங்கோ ஒலிப்பதைப் போன்ற சத்தத்தை எழுப்ப கைகளால் துழாவி எடுத்துப் பாதி கண்களில் திரையைப் பார்த்தவளுக்கு அதில் ப்ரஜீஷின் பெயரைப் பார்த்த நொடி தூக்கம் மொத்தமாய் தொலைந்திருந்தது.
“சா…சொல்லுங்க!”
“கால் பண்ணா எடுக்க இவ்ளோ நேரமா…”
“…”
“சரி சொல்றதைக் கவனமா கேளு…இப்போ என் ட்ரைவர் வந்து உன்கிட்ட ஒரு பேக் தருவாரு…வாங்கிப் பபத்திரமா வச்சுக்கோ..நானா கேட்காத வரை அதெல்லாம் எக்காரணம் கொண்டும் வெளியில் வரக் கூடாது புரியுதா?”
“இப்போ போய் எப்படி???”
“உன்னை யாரும் கடிச்சு தின்னுட மாட்டாங்க…கீழே போ காம்பவுண்ட் சுவரு வழியா அவர் தர்ற பையை வாங்கிக்கோ அவ்ளோதான்..எதையுமே ஒரே வார்த்தையில சரினு கேட்டுக்குற பழக்கமே இல்லையா…ட்ரைவர்ட்ட பேசிட்டு அகெயின் லைன்ல வரேன்..வெயிட்..”,என்றவன் அவளின் பதிலுக்குக்கு கூட காத்திராமல் அழைப்பைத் துண்டித்திருந்தான்.
அபூர்வாவிற்கோத் தலையும் புரியாத வாலும் புரியாத நிலை.இருந்தும் அவன் கூறுவதைச் செய்ய வேண்டிய நிலையாதலால் எழுந்துச் சென்று ஜன்னலின் வழியே வெளியே எட்டிப் பார்த்து நின்றிருந்தாள்.
அடுத்த பத்து நிமிடத்தில் ஒரு கார் வந்து நிற்கச் சரியாய் அவளது கைப்பேசியும் ஒலித்தது.
“ஓகே ப்ரஜீஷ்.”,என்றவள் தீபாவை எழுப்ப மனமின்றி கதவைத் திறந்து படிகளில் இறங்கிச் சென்று பேந்தப் பேந்த விழித்து நிற்க அந்த ஓட்டுநரோ அக்கம் பக்கம் பார்த்தபடி அவளிடம் பெரிய ட்ராவல் பையைக் கொடுத்துவிட்டு மலையாளத்தில் ஏதோக் கூறிச் சென்றார்.
அவள் அதைத் தூக்கிக் கொண்டு உள்ளேச் சென்று கதவைத் தாழிடும் வரையிலும் அவர் அங்கேயே நின்றிருக்க அவளது அறையின் விளக்கு அணைந்தவுடன் கார் கிளம்பும் சத்தம் கேட்டது.
அந்தப் பையையே வெறித்துப் பார்த்திருந்தவள் பின் அதைக் கொண்டு போய் சமையலறையில் இருந்த பரணில் வைத்துவிட்டு வந்துப் படுத்தாள்.தூக்கம்தான் வருவேனா என்றது.என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியாமல் இரவு முழுவதும் புரண்டு படுத்தப் படியே பொழுதைப் போக்கினாள்.
காலையில் சீக்கிரமேத் தயாரானவளாய் அலுவலகத்திற்குக் கிளம்ப தீபாவிடம் இரவு நடந்த எதையும் கூறாமல் விட்டிருந்தாள்.
இரவின் குழப்பமேத் தீராத நிலையில் அலுவலகத்திற்கு வந்தவளுக்கு அடுத்தக்கட்ட அதிர்ச்சியாய் அவளது தளம் முழுவதும் பரபரப்பாய் இருந்தது.என்ன ஏதென ஒன்றும் புரியாமல் அவளது அறைக்குச் சென்றாள் அபூர்வா.
அவளது அறை மொத்தமும் தலைகீழாக இருந்தது.ப்ரஜீஷின் அறையில் ராஜீவ் யாருடனோ தீவிரமய் எதோ பேசி நிற்க இத்தனைக் களேபரத்தில் ப்ரஜீஷைக் காணவில்லை.
சில நிமிடங்கள் வெறும் பார்வையாளராகவே நின்றிருந்தவளைப் பார்த்தவனாய் ராஜீவ் அவளை வெளியே வருமாறு ஜாடைச் செய்ய அதைக் கண்டுகொண்டவளாய் மெதுவாய் வெளியேச் சென்றாள்.
“அண்…”
“ஹா வாங்க அபூர்வா..இன்னும் கொஞ்ச நேரத்துல முடிஞ்சுரும்..வாங்க அங்க வெயிட் பண்ணலாம்..”,என்றவன் பேசியத் தொனியே வித்தியாசமாய் இருந்தது.
சற்றுத் தூரம் தள்ளியிருந்த கண்ணாடித் தடுப்புக் கொண்ட அந்தச் சிறு மீட்டீங் அறையில் இருவருமாய் சென்று அமர கதவு தானாய் மூடும் வரைக் காத்திருந்தவனாய்,
“டா அந்த பேக்?”
“வீட்டுல இருக்குணா…”
“ஷ்…சாதாரணமா இரு…நமக்கு வேண்டாதவங்க யாரோ ரெய்ட்க்கு சொல்லிருக்காங்க…ப்ரஜீயோட வீடு ஆபீஸ்னு மொத்த இடமும்….எர்லி மார்னிங்ல இருந்த ப்ரஜீஷை வீட்ல லாக் பண்ணிடாங்க..
போன் எல்லாம் சுவிட்ச் ஆப்…நல்ல வேளை அவனுக்கு நேத்தே விஷயம் தெரிஞ்சு உஷாராய்ட்டான்…”
“!!!!!!”
“என்ன அப்படிப் பாக்குற?”
“இல்ல…ரெய்ட் னா நம்மகிட்ட எல்லாம் சரியா இருந்தாப் பாத்துட்டுப் போயிறப் போறாங்க..இதுக்கு ஏன் ணா இவ்வளவு டென்ஷன்…”
“ம்ம்..அது..அதெல்லாம் முதலாளிங்க டிபார்ட்மெண்ட்…அவன் ப்ரெண்ட்னாலும் எல்லாம் எனக்குத் தெரியாது..அவன் சொல்றதை நான் செய்யணும் அவ்ளோ தான் டா…”,என்றவன் மழுப்பலாய் பதில் கூற அதற்கு மேல் எதுவும் கேட்கத் தோன்றாமல் அமைதியாகிவிட்டாள் அபூர்வா.
மதியத்திற்கு மேல் அனைவரும் அங்கிருந்து கிளம்ப அடுத்த நொடி ராஜீவ் ப்ரஜீஷை அழைக்க முயற்சித்துக் கொண்டிருந்தான்.அபூர்வா தனது அறையை ஒழுங்குபடுத்தி விட்டு ராஜீவிடம் பேசுவதற்காக ப்ரஜீஷின் அறையைத் திறக்க அவன் பேசியவற்றைக் கேட்டு அப்படியே நின்றிருந்தாள்.
“இதுல ஏன் டா அவளை இழுத்துவிட்ட..மாட்டிருந்தோம்னா என்ன ஆகுறது..வர வர நீ எப்போ என்ன பண்ணுவனு ஒண்ணும் புரிய மாட்டேங்குது…
காலையிலே என்கிட்ட பேசும் போதே அவளுக்குச் சந்தேகம் வந்திருந்துது.நான் ஏதோ சொல்லி சமாளிச்சேன்..அவளும் அதுக்கு மேல கேட்காம விட்டுட்டா…
அவ மேல சந்தேகம் வந்து விசாரிச்சுருந்தாங்கனா பயத்துல அவளே உளறிருப்பா…என்னவோ பண்ணு ப்ரஜி நீ…”,என்றவன் தற்செயலாய் திரும்ப எதையும் கேட்காதவளாய் கஷ்டப்பட்டுச் சிரிக்க முயன்றாள் அபூர்வா.
“நான் அப்பறமா கூப்டுறேன் டா..பை..”,என்று அழைப்பைத் துண்டித்தவனாய் அவளை அழைத்தான்.
ஏதோ சரியில்லை என்பது நன்றாகவேப் புரிந்தாலும் யாரிடமும் எதைப் பற்றியும் கேட்கவும் முடியாது என்றறிந்துத் தனக்குள்ளேயே ஆயிரம் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
சிந்தனைக் கலைந்தவளுக்குப் பக்கத்து மேசையில் இருந்தவர்களின் பேச்சு காதில் விழுந்தது.
“ம்ம் பின்ன சி எம் லெவல்ல எல்லாம் ஆள் வச்சுருக்காரே அவர் தான்..அவரோட நியூ பிஸினஸ் ஓபன் பண்ணது எல்லாமே எதாவது ஒரு மினிஸ்டர் தான்..”
“ம்ம் பெரிய இடம்னா ஆயிரம் விஷயங்கள் இருக்கும் நமக்கு எதுக்கு வம்பு…”
இப்படியான சம்பாஷனைகளைக் கேட்டவளுக்குத் தான் எப்படிப்பட்ட இடத்தில் வேலை செய்கிறோம் என்ற பயமே பிரதானமாகியிருந்தது.
ஏதேதோ யோசித்தவளுக்குத் தலையெல்லாம் சுற்றிக் கொண்டு வர யார் யாரோ பேசும் சத்தம் மட்டும் கேட்ட நிலையில் கண்விழிக்க முடியாமல் அப்படியே மயங்கியிருந்தாள்.
மீண்டும் அரை மயக்க நிலையில் கண் திறக்க முயற்சித்தவளுக்கு ராஜீவ் அங்கு இருப்பதை உணர மட்டுமே முடிந்தது.அவன் ஏதோ கேட்பதை உணர்ந்தாலும் அவளால் பதில் கூற முடியவில்லை.சில நிமிடங்களில் மீண்டும் மயக்கத்திற்குச் சென்றிருந்தாள்.
தெளிவடைந்து அவள் கண்விழித்தப் போது அறையில் யாரும் இருந்திருக்கவில்லை.கையில் ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருக்க மிகவும் அசதியாய் உணர்ந்தாள் அபூர்வா.
சில நிமிடங்களில் நர்ஸ் ஒருவர் உள்ளே நுழைய அவளைப் பார்த்ததும் சிநேகமாய் புன்னகைத்தார்.
“இப்போ எப்படி இருக்கீங்க அபூர்வா…”
“கொஞ்சம் டயர்டா இருக்கு சிஸ்டர்.”
“ம்ம் ரொம்பவே இருக்கும் ஒரு நாள் ஆயிடுச்சு நீங்க எழுந்துக்க…”
“இல்ல…அப்படியெல்லாம் இல்ல..”எனும்போதே வேகமாய் உள்ளே நுழைந்தான் ப்ரஜீஷ்.
“தேங்க் காட்…கண் முழிச்சுட்டியா நீ…அந்த பேக் சேஃபா இருக்கும் தான?”
அத்தனைச் சோர்விலும் கோபம் வந்தது அபூர்வாவிற்கு.எந்த நிலையில் பார்க்கிறான்.பேருக்காகவாவது நலன் பற்றி விசாரிக்கத் தோன்றாதா என்று எண்ணியவளாய் அமைதியாய் அவளிருக்க அதற்குள் அங்கு வந்த ராஜீவ் மெதுவாய் அவனைத் தன்புறம் இழுத்து ஏதோக் கூற அவன் இடவலமாய் தலையசைத்தப்படி அமைதி காத்து நின்றான்.
“இப்போ எப்படி டா இருக்கு?”
“பரவால்ல..என் போன் தரீங்களா..ரூம்மேட்க்கு கால் பண்ணணும்..”
“நேத்து உன்னை அட்மிட் பண்ண உடனேயே அவங்களுக்கு இன்பார்ம் பண்ணிட்டோம்..நைட் அவங்க தான் உனக்கு துணையா இருந்தாங்க…இப்போ தான் கிளம்பிப் போய்ருப்பாங்கனு நினைக்குறேன்…”
“ஓ….”
“என்னாச்சு…மார்னிங் நல்லா தான இருந்த அபூர்வா?”
“தெரியல..சில விஷயங்களை எப்படி எடுத்துக்குறதுனு தெரியாம எதோ குழப்பம்…வேற ஒண்ணுமில்ல..”
அவளின் பேச்சின் வித்தியாசம் உணர்ந்தவனாய் ப்ரஜீஷை வெளியே காத்திருக்கச் சொன்னவன் அவளருகில் இருந்தச் சேரை எடுத்துப் போட்டு அமர்ந்தான்.
“இங்க பாரு அபூர்வா…நீ தேவையில்லாம எதையும் குழப்பிக்க வேண்டிய அவசியம் இல்ல…உன் வேலையை நீ பாக்குற அதுக்கான சம்பளம் உனக்கு வருது அவ்வளவு தான்.”
“உண்மை தான்…ஆனாலும் ஒரு ப்ரெண்டா உங்களால எப்படி இப்படி இருக்க முடியுது…தப்புனு தெரிஞ்சும் அதுக்குத் துணை போறீங்க?”
“ஹே யூ…இதுதான் உன் லிமிட்…”,என்று அதட்டியவாறு அவளருகில் வந்து நின்றான் ப்ரஜீஷ்
“ப்ரஜி…”
“நீ சும்மா இரு…உன்னால தான் இவ இந்தப் பேச்சு பேசிட்டு இருக்கா…என்ன தெரியும் எங்களைப் பத்தி உனக்கு…நான் உன் முதலாளி…நீ என்கிட்ட சம்பளம் வாங்குற எம்ப்ளாயி..அவ்வளவு தான் உனக்கான இடம்…
தேவையில்லாம இனி பேசின என்ன பண்ணுவேன்னு எனக்கேத் தெரியாது.உடம்பு சரியானதும் அந்தப் பேக்கை கொண்டு வந்து என்கிட்ட கொடுத்துட்டு டெர்மினேஷன் லெட்டரைக் வாங்கிட்டுப் போய்ட்டே இரு…காட் இட்?!”
கிட்டத்தட்ட கர்ஜித்துவிட்டு அவன் வெளியே செல்ல யாரை சமாதானப்படுத்துவது என்று புரியாமல் ப்ரஜீஷின் பின் ஓடினான் ராஜீவ்.அபூர்வாவோ கலங்கிய கண்களைத் துடைத்தபடி வாசலையே வெறித்திருந்தாள்.