குறள் 811:

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை

பெருகலிற் குன்றல் இனிது

மு.வ விளக்க உரை: அன்பு மிகுதியால் பருகுவார் போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதை விடத் தேய்ந்து குறைவது நல்லது.

பெங்களூரின் மார்கழி நேர காலை, விடிந்தும் விடியாத அந்த அதிகாலையில் போர்வைக்குள் தன்னை மொத்தமாய் சுருட்டிக் கொண்டு ஆழ் உறக்கத்தில் இருந்தாள் விடியல்.

எத்தனை அழகான பெயர் என்று முதல்முறை சந்திப்பவர்கள் கூறாமல் இருந்ததே கிடையாது. 25 வயது அழகி. ஆம் அழகியே தான்.

பெங்களூரின் நவ நாகரீகத்தைக் கண்டு புளித்துப் போகும் அத்தனை கண்களுக்கும் அவள் பேரழகி தான்.

இளங்கோ வாசந்தி தம்பதியரின் ஒரே மகள். சிறு நிறுவனத்தின் முதலாளி அவள் தந்தை. இருக்கும் சொத்துக்களுக்கு ஒரே வாரிசு அவரின் செல்ல மகள்.

தென் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இளங்கோ தொழில் விஷயமாய் பெங்களூர் வந்து முப்பது வருடங்களுக்கு மேல் ஆகி விட்டிருந்தது. இப்போது மூவருக்குமே கன்னடம் தண்ணீர் பட்ட பாடு.

“வாசு சின்னுவை எழுப்பவா?”

“இன்னும் கைக்குழந்தை மாதிரி தாலாட்டுங்க ப்பா.. போய் எழுப்புங்க.. உங்களால தான் அவ கெட்டு குட்டிச் சுவரா இருக்கா..”

“சரி சரி காலையிலேயே ஆரம்பிக்காத வாசும்மா..”, என்றவர் மகளின் அறைக் கதவை மெதுவாய் திறந்து கொண்டு உள்ளே சென்று அவளின் தலையருகில் அமர்ந்து முடிகளை வருடிக் கொடுத்தார்.

“ப்பா..”, என்றவள் தூக்கக் கலக்கத்தோடே நகர்ந்து தந்தையின் மடியில் படுத்துக் கொண்டாள்.

“சின்னு எழுந்துரு டா.  அப்பாவும் அம்மாவும் இன்னைக்கு ஊருக்கு போறோமே நேரம் ஆகுது டா.”

“பொறுப்பே இல்ல பா. வயசு பொண்ணை விட்டுட்டு பொண்டாட்டியோட ஜாலியா ஊர் சுத்தப் போறீங்க.”

“கழுத குலதெய்வ கோவிலுக்கு தான போறோம். உனக்கு வர முடியாத நிலைமை இல்லைனால் உன்னை விட்டுட்டு போவேனா சின்னு.”

“ம்ம் அப்படியே ஃபீடிங் பாட்டில் வாங்கி தரேன் குழந்தைக்கு பால் ஊட்டுங்க.”, என்ற படி அறையின் திரைச் சீலைகளைத் திறந்து விட்டார் வாசந்தி.

“ம்மா.. அப்பா என்னை கொஞ்சினால் பொறுக்காதே உனக்கு..”, என்றபடி கண்களை கசக்கி எழுந்தமர்ந்தாள் விடியல்.

“கல்யாணம் பண்ணி உன் புருசனை கொஞ்சு டி. நான் எதுவும் சொல்ல மாட்டேன்.”, என்றவர் அவளது போர்வையை  இழுத்து மடிக்க ஆரம்பித்திருந்தார்.

“விட்டால் என்னை அப்படியே கொண்டு போய் வாஷிங் மிஷின்ல போட்டுருவ மா நீ..”, என்றதில் வாசந்தி சிரித்திருந்தார்.

மகள் இரு கை நீட்டி தாயை அழைக்க கட்டில் ஓரத்தில் அமர்ந்தவரின் இடுப்பைக் கட்டிக் கொண்டு மடியில் படுத்துக் கொண்டாள்.

“நான் உங்க இரண்டு பேரையும் மிஸ் பண்ணுவேன்.”, என்றவள் தாயின் முகத்தை நிமிர்ந்து பார்க்க கன்னம் கிள்ளி முத்தம் வைத்தவராய் மகளை கொஞ்சி கெஞ்சி குளிக்க அனுப்பியிருந்தார்.

தாயும் தந்தையும் கிளம்புவதற்குள் குளித்துத் தயாரானவள் அழகிய லெனின் சுடிதாரில் வந்து வழினுப்பினாள்.

மகளுக்கு ஆயிரம் பத்திரங்களைக் கூறிவிட்டு இருவருமாய் காரில் அமர ஓட்டுநர் காரை கிளப்பியிருந்தார்.

வாசல் கதவைப் பூட்டி விட்டு வந்தவள் தாய் வைத்திருந்த காபியை வாசனை பிடித்த படி பின்பக்க திறந்தவெளித் திண்டில் அமர்ந்திருந்தாள்.

நேரம் காலை ஒன்பதைத் தொட்டு விட்டால் அவளுக்கு இது போன்ற நிதானமான பொழுதுகள் அமையாது.

அதற்காகவே முடிந்த வரை சீக்கிரமாகவே காலையில் எழுந்து விடுவாள்.

எம்பிஏ முடித்து விட்டிருந்தவளுக்கு இயல்பாகவே தொழிலின் மீதான ஆர்வம் இருக்க தந்தையோடு சேர்ந்து தொழிலைப் பார்த்துக் கொள்கிறாள்.

பல நேரங்களில் இளங்கோவே தடுமாறும் சூழ்நிலைகளைக் கூட வெகு சாதாரணமாய் கையாண்டு விடுவாள் விடியல்.

அவர்களின் க்ளையண்டுகளை கையாள்வதில் கெட்டிக்காரி என்று சொல்லி சொல்லி பெருமை பட்டுக் கொள்வார் இளங்கோ.

காபியை பருகி முடித்தவள் அன்றைய நாளிதழை சில நிமிடங்கள் புரட்டி விட்டு அவளது விருப்பமான அறைக்குள் நுழைந்தாள்.

அன்றாடத்தில் இன்றியமையாதது அந்த அமைதியான காலை காபியும் அரை மணிநேர நடனமும் தான்.

அந்த அறைக் கதவைத் திறந்ததுமே ஆளுயர புகைப்படம் அவளது அரங்கேற்றத்தில் எடுக்கப்பட்டது கண்களுக்கு நிறைவாய் தொங்கிக் கொண்டிருக்கும்.

அங்கிருக்கும் நடராஜர் சிலையை வணங்கியவள் சலங்கையை தொட்டு வணங்கி விட்டு காலில் அணிந்து கொண்டு அவளுக்கு விருப்பமான பாடலை ஒலிக்க விட்டு நடனத்தைத் தொடங்கியிருந்தாள்.

அதன் பின்னான பொழுதுகள் அனைத்தும் அட்டவணைப்படி இருக்கும் அவளிடத்தில் நடனத்தை முடித்தவள் மீண்டுமாய் கீழே வந்து தாய் வைத்திருந்த மாவை எடுத்து தனக்குப் பிடித்தவாறு முறுகலான நெய் தோசையாய் வார்த்து எடுத்துக் கொண்டு வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தாள்.

சில நிமிடங்களிலேயே அவர்களது பிஏ விஜயிடம் இருந்து அவளுக்கு அழைப்பு வந்திருந்தது.

“சொல்லுங்க விஜய்..”

“குட் மார்னிங் விடியல். மீட்டிங்க்கு எல்லாம் ரெடி பண்ணியாச்சு நீங்க ரெடினால் நான் வீட்டுக்கு வந்துருவேன்.”

“ஒரு டென் மினிட்ஸ் கழிச்சு கிளம்புங்க விஜய். நான் அல்மோஸ்ட் ரெடி தான்.”

“ஓகே விடியல் பை.”, என்றதில் அழைப்பைத் துண்டித்தவள் உணவை முடித்து விட்டு அறைக்குச் சென்று லேசான ஒப்பனையை முடித்து வந்து வாசல் கதவை பூட்டும் நேரம் உள்ளே நுழைந்தார் அங்கு வேலை செய்யும் கனியம்மாள்.

“விடியல் கண்ணு அதுக்குள்ளே கிளம்பிட்டியா?”

“இன்னைக்கு மீட்டிங் இருக்கு ஃப்ரூட்டி.. நீங்க வரணுமேனு நினைச்சுட்டே இருந்தேன். இந்தாங்க சாவி. நான் வரட்டுமா?”

“விஜி தம்பி வரலையா?”

“வந்துருவார் அப்போவே கால் பண்ணிட்டார்.”, என்ற நேரம் கார் வந்து வாசலில் நிற்க அவரிடம் விடைபெற்று கிளம்பினாள்.

ஓட்டுநருக்கு அருகில் அமர்ந்திருந்த விஜய் புன்னகைத்து கையசைக்க விடியல் பின்னிருக்கையில் அமர்ந்த படி அவனோடு பேசத் தொடங்கினாள்.

“விஜி நீங்க ரெக்கமெண்ட் பண்ண சீரிஸ் பாத்தேன். செம இன்ட்ரெஸ்டிங். முடிக்காம தூங்கவே முடியலை.”

“அதுக்குள்ளே முடிச்சுட்டிங்களா?”

“ம்ம் நேத்து வந்ததில் இருந்து அந்த வேலை தான் அம்மாகிட்ட செம டோஸ்..”, என்றதில் இருவரும் சிரித்தனர்.

விஜய் ஒரு வகையில் இளங்கோவிற்கு தூரத்து சொந்தம். ஆனால் அது இங்கு அவன் வேலைக்கு சேர்ந்த பின் தான் அவருக்கே தெரிய வந்தது.

அவனின் நேர்மையும் வேலைத் திறனும் நல்ல மதிப்பைக் கொடுத்திருக்க சொந்தம் என்றதில் மகளுக்கு முழு நேர பாதுகாப்பு அரணாய் அவனை நியமித்திருந்தார் இளங்கோ.

விடியலை விட இரண்டு வயது பெரியவன் என்பதால் இருவருக்கும் இடையில் இயல்பாகவே ஒரு அழகிய நட்பு உருவாகியிருந்தது.

பெங்களூர் சாலை நெரிசலில் தப்பித்து அந்த பிரம்மாண்டமான கட்டிடத்தை அடைந்தவர்கள் அதன் மூன்றாம் தளத்தில் இருந்த தங்களின் அலுவலகத்திற்கு மின்தூக்கியில் ஏறினர்.

“V Games”, என்ற அந்த பெயர் பலகையை கடந்து இருவருமாய் உள்ளே செல்ல விடியல் தனது எம்டி அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

கேமிங் கம்பெனியான அதில் வேலை செய்பவர்கள் பெருமளவில் இளைஞர்களே. மேல்தட்டு அலுவலக சம்மந்தப்பட்ட பதவிகளில் மட்டுமே சற்று வயதானவர்களைக் காணலாம்.

அலுவலகமும் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி பார்பதற்கே ஒருவித ஆர்வத்தைக் கொடுக்குமளவிற்கு இருக்கும்.

சிறு சிறு அறைகள், அங்கங்கு குஷன்களும் சோபாக்களும் என வேலை செய்வதற்கு ஏற்ப இலகுவான மனநிலையைக் கொடுப்பதாய் இருக்கும்.

இளங்கோ சற்று கடுமையானவர் முதலாளி என்ற பார்வையில் தான் அனைவரிடமும் பேசுவார் பழகுவார்.

ஆனால் விடியல் வந்த பிறகு தட்டிக் கொடுத்து வேலை வாங்குவதை தனது பார்முலாவாக மாற்றிக் கொண்டாள்.

ஆளுக்குத் தகுந்தாற் போல் பேசி தட்ட வேண்டிய நேரத்தில் தட்டி தோள் கொடுக்க வேண்டிய நேரத்தில் தோள் கொடுத்து என இந்த தலைமுறைக்குத் தகுந்தாற் போன்று வேலை வாங்கினாள்.

“சின்னு இந்த காலத்து பசங்க என்ன இப்படியிருக்காங்க. ஒரு வார்த்தை பேசினால் உடனே உன் வேலையும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்னு தூக்கிப் போட்டுட்டு போறாங்க!”

“..”

“நாங்க எல்லாம் ஒரு வேலை கிடைக்க எவ்வளவு பாடுபட்டோம் தெரியுமா? இந்த தலைமுறைக்கு எல்லாமே டேக் இட் ஈசியா போச்சு..”

“ப்பா.. காலத்துக்கு தகுந்தா மாதிரி மனுஷங்களும் மாறுறது இயற்கை தான. தாத்தாகிட்ட கேட்டா அவங்களை மாதிரி நீங்க இல்லனு சொல்லுவாங்க. சோ இது தான் லைஃப் சர்க்கிள். ரிலாக்ஸ் பா..”

வேலைகளுக்குள் தன்னைத் தொலைத்துக் கொண்டவளின் கைப்பேசி மதியம் இரண்டு மணியளவில் அலார ஒலியெழுப்ப அதை அணைத்து விட்டவளாய் விஜயின் இன்டர்காமிற்கு அழைத்தாள்.

“போலாம் விடியல் மத்ததை நான் பார்த்துக்குறேன்.”, என்றதும் தனது உள்ளறைக்குச் சென்றவள் ஜீன் பேண்டும் அழகான ஷார்ட் டாப்புமாய் தயாராகி கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பியிருந்தாள்.

அவளது கார் அந்த அழகிய ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குள் நுழைய காரிலிருந்து இறங்கியவள் விஜயோடு ஐந்தாவது தளத்தில் இருந்த அந்த மிகப் பெரிய ஹாலின் வாசலில் நின்றிருந்தாள்.

“ஓகே விஜி நான் முடிச்சுட்டு உங்களுக்கு கால் பண்றேன்.”

“நான் இங்கேயே தான் இருப்பேன் குட்லக்..”, என்றவனுக்கு கண்சிமிட்டி உள்ளே சென்றவள் அங்கிருந்த ஆர்கனைசரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள அவளை அழைத்துச் சென்று முதல் வரிசையில் அமர வைத்திருந்தாள் அந்த யுவதி.

அது ஒரு தொழிலதிபர்கள் பங்கேற்றிருந்த தொழில் முறை மீட்டிங் அதற்கிடையில் அவர்களின் பொழுதுபோக்கிற்காக சில பல நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்காக இருந்தவர் மைக்கோடு மேடையின் நடுவில் நிற்க அனைவரும் அடுத்து என்ன என்ற கேள்வியோடும் ஏற்கனவே தலை வலிக்கிறது என்ற முக பாவனையோடும் அமர்ந்திருந்தனர்.

“லேடீஸ் & ஜென்டில்மென் உங்க எல்லாரோட மூளைக்கும் கொஞ்சம் ரெஸ்ட் கொடுக்குறதுக்காக நம்ம கூட ஒரு ஸ்பெஷல் பெர்சன் இருக்காங்க.”

“…”

“தி யங் டேலெண்ட்டெட் அண்ட் ப்யூட்டிபுல் V..”, என்றதில் இருக்கையில் இருந்து எழுந்து கொண்டவள் மேடையேற பல கண்கள் அவளை சுவாரஸ்யமாய் தீண்டிச் சென்றன.

“ஸ்டேஜ் இஸ் யுவர்ஸ்..”, என்றதற்கு புன்னகைத்து தனக்கு வழங்கப்பட்ட ஹெட்செட் போன்ற மைக்கை காதில் மட்டிக் கொண்டாள் விடியல்.

“ஹே கைஸ்..”, என்றதில் கைப்பேசியில் தலை கவிழ்ந்திருந்த வயதில் பெரிய தொழில் அதிபர்கள் சிலர் கூட நிமிர்ந்து பார்த்திருந்தனர்.

“ஐ நோ எல்லாரும் வொர்க் டென்ஷன்ல உங்க ப்ரசென்டேஷனை முடிக்க ரொம்பவே டென்ஷனா இருக்கீங்க. பட் கொஞ்ச நேரத்துக்கு அதெல்லாம் மறந்துரலாமே..”, என்றவள் கன்னடமும் ஆங்கிலமும் கலந்து பேசிக் கொண்டிருந்தாள்.

“சோ ஐ அம் மென்ட்டலிஸ்ட் V”, என்றதில் பலர் புருவம் சுருக்கி மொபைலில் அவளைப் பற்றி தெரிந்துகொள்ள முனைந்தனர்.

“ஐயோ மென்டல் இல்ல.. மென்டலிஸ்ட்.. சும்மா கொஞ்ச நேரம் உங்க மைண்ட்குள்ளே போயிட்டு வெளியே வரலாம்னு நினைக்குறேன். ஷேல் வி ஸ்டார்ட்?”, என்றதில் ஓரளவு கரகோஷங்கள் அவள் காதை எட்டியிருந்தன.

முகத்தில் இருந்த புன்னகை மாறாமல் அடுத்து வந்த இருபது நிமிடமும் அனைவரையும் தன்னைத் தாண்டி யோசிக்க விடாதவாறு அனைவரையும் ஆச்சரியத்திற்குள் வைத்திருந்தாள்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

9 comments

MalarMurugan September 2, 2026 - 8:06 am

விடியல் 😍😍😍
இது என்னடா புதுசா இருக்கே 🤔🤔🤔

SME September 2, 2026 - 8:32 am

விடியல் 😍😍😍அருமையா துவக்கம்👍👍👍👍

Kavi Natarajan September 2, 2026 - 9:51 am

Super start ma

Meenakshi Subburaman September 2, 2026 - 9:53 am

விடியல் பெயரே புதிதாக இருக்கிறது.ஆளும் செம சுறுசுறுப்பாக இருக்கிறாள்

srichitra September 2, 2026 - 11:39 am

Nice start.

Mathy September 2, 2026 - 2:29 pm

நைஸ் ஸ்டார்ட் 🤩🤩🤩

Kiruthika M September 2, 2026 - 6:26 pm

Vidiyal rmba different ah Iruku ka🤩 Super start waiting for more ❤️

suganyavel September 2, 2026 - 6:52 pm

Super💕 start

Mrs Beena loganathan September 3, 2026 - 8:11 pm

விடியல்
பெற்றவர்களின் வாழ்க்கைக்கு
விடியலாக பிறந்த மகளே
வித்யாசமான பெயர்….
வித்தகி 👏🏻👏🏻👏🏻💐🔥❤️❤️ வாழ்த்துக்கள்

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode