குறிஞ்சி தலைவி கூற்று

மாசறக் கழீஇய யானை போலப்

பெரும்பெய லுழந்த விரும்பிணர்த் துறுகல்

பைத லொருகலை சேக்கு நாடன்

நோய்தந் தனனே தோழி

பசலை யார்ந்தநங் குவளையங் கண்ணே.

கபிலர்

செய்தி

அவன்(நாடன்) அவளோடு இருந்தான்.  நன்றாகப் பசப்பு மொழிகளைக் பேசிவிட்டுப் பிரிந்து சென்றான்.  அவன் பசப்பியதை அவள் எண்ணும்போது அவள் கண்கள் அவனைத் தேடுகின்றன.  தேடும் கண்கள் ஒளி மங்கிப் பசலை பாய்ந்து கிடக்கின்றன.  – இப்படிச் சொல்கிறாள் அவள் (தலைவி). அழுக்கு நீங்கக் குளிப்பாட்டிவிட்ட யானையைப் போல் அடுக்கடுக்காக இணைந்து கிடக்கும் பெரிய மலைப்பாறை நல்ல மழையில் நனைந்திருக்கும்போது அதில் கலைமான் பைதல்நடை போட்டு ஏறிப் படுத்திருக்கும்.  அந்த நாட்டுக்காரன் அவன்.

மாலை நேரமாக அடுத்து வரவேற்பிற்கான பரபரப்பு தொற்றிக் கொண்டது அனைவருக்கும்.  வேணியும் கண்ணியுமாய் பொழிலை தயார் செய்து முடிக்க அதற்கு முன்னாகவே எழில் தயாராகி வந்து அவளுக்காக காத்திருந்தான்.

தாமிழ் அவனோடு அமர்ந்திருக்க பொறுமையிழந்தவனாய்,

“ஏலே எம்புட்டு நேரம்தேன் ரெடி ஆவாக. . மனுசன் பொறுமையே போயிரும் போலயிருக்கு. . ”

“அண்ணே நீ வேற என் பொண்டாட்டி டெய்லி ஸ்கூலுக்கு போறதுக்கே இப்படிதேன் ரெடி ஆகுறா அப்பறம் அல்யாண பொண்ணுனா சும்மாவா. . ”

“என்னது தினமுமா நாசமா போச்சு போ. . ம்ம் வாழ்க்கைல நிறைய பொறுமை வேணும் போலவே. . ”,எனும்போதே பொழிலை அழைத்துக் கொண்டு இருவரும் வர லேசாய் அவளை கண்டு முறுவலித்தவன் போலாமா என்பதாய் வாசலை நோக்கி கை நீட்ட பொழில் முன்னே சென்றாள்.

 அவள் புடவையின் பின் பகுதி லேசாய் மடங்கியிருக்க அதை பார்த்த எழில் அவளை நிற்குமாறு கூறி பட்டென கீழேயமர்ந்து அதை சரிசெய்ய மற்றவர்கள் கேலிச் சிரிப்பு சிரிப்பதை கவனியாதவனாய் எழுந்தவன் அவள் முகம் பார்க்க அவளோ அப்பட்டமான அதிர்ச்சியில் நின்றாள்.

“என்ன???”

“ம்கூம். . அது. . ”

“நீ பேசி முடிக்குறதுக்குள்ள விடிஞ்சுரும் போ நேரமாச்சு. . எல்லாரும் வர ஆரம்பிச்சுருப்பாக. . ”என்றவன் சாதாரணமாய் சென்றுவிட்டான்.

அதன்பின் மூச்சுவிடவும் நேரமில்லாமல் நேரம் கழிந்தது. சொந்தம் பந்தம் நண்பர்கள் தொழில் வட்டாரமென சத்திரமே திருவிழாய் காட்சியளித்தது.

இளவேனில் தன் நண்பர்களோடு உள்ளே நுழைய வாசலிலேயே அவளை கண்டுகொண்ட முகில் அங்கேயே சென்று வரவேற்றான். யாருக்கும் தெரியாமல் அங்கயர்கண்ணியை அழைத்து அவளுக்கு அறிமுகப்படுத்தினான்.

“ஹாய் அண்ணி. . எப்படியிருக்கீக. . ”

“ஏட்டீ நல்லாயிருப்ப நீ அவள அண்ணி நொண்ணினு எல்லாம் கூப்டு வைக்காத. . அவளே பயந்து போய் கிடக்கா. . ”

“பயமா எதுக்கு அதுவும் நா இருக்கும்போது??கவலையே படாதீங்க உங்களைத்தி யார்ட்டையும் எதுவும் சொல்லமாட்டேன். . ரொம்ப அழகா இருக்கீக. . இந்த கருவாப்பயல எப்படி புடிச்சது உங்களுக்கு??”

அவள் கேட்ட விதத்தில் இளவேனில் சட்டென சிரித்துவிட முகிலோ தங்கையை ஒண்ணும் செய்ய முடியாமல் தவித்தான். இருந்தும் தன் காதலை குடும்பத்தில் ஒருவரிடம் சொல்லிவிட்ட திருப்தியும் அவனுக்கு இல்லாமல் இல்லை.

வந்தவர்களை எல்லாம் கவனித்து சாப்பிட அனுப்பி அவர்கள் கிளம்பும் போது தாம்பூல பை கொடுத்து என ஒரு குறையுமில்லால் வரவேற்பு நடந்து முடிந்திருக்க மொத்த குடும்பமுமாய் மேடையில் நிற்க வைத்து குரூப் போட்டோ எடுத்து அன்றைய நாளின் மொத்த மகிழ்ச்சியையும் மறக்க முடியா நிழற்டமாய் படம் பிடித்து வைத்தனர்.

இரவு உணவு முடித்து மணமக்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல கண்ணியையும் முகிலையும் கடைசியாய் பெரியப்பாக்களோடு வரும்படி கூறிச் சென்றனர்.

எழிலுக்குத் தேவையானதை தமிழிடம் கொடுத்து அவர்களை மாடிக்கு அனுப்பிவிட்டு இங்கு வேணி பொழிலை தயார் செய்தாள். எந்த பதட்டமோ படபடப்போ இல்லாமல் சொன்னதை செய்தவளைப் பார்க்க வேணிக்கு ஆச்சரியமாக இருந்தது.

“ஆனாலும் அக்கா உங்களுக்கு ரொம்பதேன் தைரியம். . பெரியத்தானை நினைச்சு கொஞ்சமும் பயமில்லையா?”

“அமுதனை நினைச்சா எதுக்கு வேணி??உண்மையை சொல்ல போனா நீங்க எல்லாம் குடுக்குற பில்டப் அளவுக்கெல்லாம் அவன் மோசமில்ல. . ”

“ஏட்டீ பொழிலு இன்னும் என்ன அவன் இவன்னு மரியாதை இல்லாம. . இன்னும் நீங்க ஒன்னும் பள்ளிகூட பசங்க கிடையாது. . பாத்து நடந்துக்க இந்தா பிடி பாலை. . வேணி கூடிட்டு போத்தா. . ”என்ற பூம்பாவை நகர்ந்தார்.

பால் சொம்பை ஒரு நொடி வெறித்தவள் பாவமாய் வேணியிடம்,”ஓ இதுக்குதான் நீ பயமில்லையானு கேட்டியா??”என கேட்டு வைக்க வேணி அடக்க மாட்டாமல் சிரித்துவிட்டாள். அதற்குமேல் பேச்சை வளர்க்காமல் அவளை எழிலின் அறைவாசலில் விட்டுட்டு ஆல் த பெஸ்ட் க்கா என்று கூறிவிட்டு தனதறைக்குள் நுழைந்து கொண்டாள்.

தயக்கமாய் உள்ளே நுழைந்தவள் கதவை பூட்டிவிட்டு திரும்பிய போதுதான் தலை நிமிர்ந்தே பார்த்தாள். கட்டிலில் தான் அமர்ந்திருந்தான் எழில். பெரிய விசாலமான அறை நடுவே மரக்கட்டில் போடப்பட்டிருக்க உள்ளேயே அட்டாச்ட் பாத்ரூம் இருந்தது.

கட்டிலின் எதிர்புறம் சுவற்றில் டீவி மாட்டப் பட்டிருக்க கட்டிலின் பக்கவாட்டில் சுவரோரமாய் இரு பீரோக்கள் இருந்தது. அதனை ஒட்டி சுவற்றில் மாட்டப்பட்டிருந்த ஆளுயர கண்ணாடி.

“வா அரசி ஏன் அங்கேயே நின்னுட்ட. . ”

“ஆங்ங் ம்ம். . ”,என்றவள் அவனருகில் வந்து பாலைக் கொடுத்து பாதம் தொட குனிய சட்டென கைப்பிடித்து நிறுத்தியவன் பாலை அங்கிருந்த டேபிளில் வைத்துவிட்டு வந்தான்.

“சத்தியமா இதெல்லாம் நமக்கு தோதுபடாது. . கால்ல விழுறது இப்படி பவ்யமா இருக்குறதெல்லாம். . ”

“ம்ம் ஆமா. . ”

“ஏன் என்னவோ போல பேசுற. . ”

“இல்ல உன்னை நீ வா போனு சொல்ல கூடாதுனு சொன்னாங்க பேச ஆரம்பிச்சாலே எனக்கு அப்படிதான் கூப்ட வருது அதான். . ”

சற்று பற்கள் தெரியவே சிரித்தவன்,”அதுக்குதேன் மாமானு கூப்டுனு சொன்னேன். . ”

“அதுவும் வர மாட்டேங்குதே நா என்ன பண்ண…”

“ம்ம் அப்போ நாளைக்கு கிழவி முன்னாடி டேய் அமுதானு கூப்பிடு வீட்டையே இரண்டாக்கிரும். . ”

“ஐயோ அதான் ரொம்ப பயமா இருக்கு. . ”

அயர்வாய் கட்டிலில் அமர்ந்தவன் தன்னருகில் கைகாட்டி அவளை அமரச் சொல்ல ஓரடி இடைவெளியில் அமர்ந்தாள்.

“ஏய் குள்ளச்சி உனக்கு எப்படி கூப்ட வருதோ கூப்டு. . நீ நீயா இரு. . என்னைக்குமே நா உன் அமுதன்தேன். . வீணா கஷ்டப்பட்டுக்காத. . யாரும் ஒண்ணும் சொல்லமாட்டாக சரியா. . ”

“தேங்க்ஸ் அமுதா. . கூடிய சீக்கிரமே மாத்திக்குறேன். . இவ்ளோ சீக்கிரம் மாத்திக்க முடில. . அப்பறம். . ”

“என்ன கேளு??”

“ஏன் இப்படி முறைச்சு பாத்துட்டே இருக்க??”,மெதுவாய் வெளிவந்தன வார்த்தைகள்.

“எத்தனை வருச கனவு தெரியுமா இது. . ஒரு தடவையாவது பாக்கணும்னு நினைச்ச முகம் வாழ்க்கை மொத்தத்துக்கும் என் பொண்டாட்டியா. . சாதாரண விஷயமா. . கண்ணை சிமிட்டினா கூட எங்க என்னை விட்டு தள்ளிப் போய்ருவியோனு ஒரு பயம். . ”

“அமுதா. . சத்தியமா உன்னை மாதிரி ஒருத்தன் இந்த உலகத்துலயே இருக்க மாட்டான். என்னை இந்தளவு பாத்துக்குற ஒருத்தன் இருக்குறத நினைச்சா அந்த சந்தோசத்துலயே பசி தூக்கமெல்லாம் போய்டும் போல இருக்கு. . ”

“ம்ம் குள்ளச்சி பொய் சொன்னாலும் பொருந்த சொல்லு உன்னால சாப்டாம சாப்பாட்ட நினைக்காம இருக்க முடியும்??”

செல்லமாய் அவனை அடித்தவள் ஏதோ நினைவு வந்தவளாய்,”டேய் அப்பறம் சாய்ந்திரம் பண்ணா மாதிரி இன்னொரு தடவை பண்ணிறாத. . ”

“சாய்ந்திரமா நா என்ன பண்ணேன்??”

“ம்ம் புடவை மடங்கினதுக்காக யோசிக்காம கீழே குனிஞ்சு எடுத்துவிட்டியே. . அத்தை மாமா யாராவது பாத்துருந்தா. . ”

“ஒண்ணும் நடந்துருக்காது இங்கேரு அரசி உன் விசயத்துல மட்டும் நா யாரைப் பத்தியும் கவலபட மாட்டேன் எதைப்பத்தியும் கவலபட மாட்டேன். . எனக்கு தோணுறத செய்வேன். . அத மட்டும்தேன் செய்வேன். . சரியா. . ”

“சரியான பிடிவாதக்காரன்  நீ…சரி உனக்கு தோணுறதையே செய். . இப்போ கொஞ்சம் தூங்கு. . முகமே களைச்சுப் போய் தெரியுது பாரு. . ”

“ம்ம் தூக்கம் வருது ஆனாலும் தூங்க தோணல. . ”

“ம்ம் எல்லாம் தோணும் இங்க வா என்றவள் அவன் தலையை தன் மடியில் வைத்துக் கொள்ள பள்ளிகாலத்தில் தொடங்கி ஏதேதோ பேசியவன் அவனறியாமல் அப்படியே உறங்கிப் போனான். .

அவன் உறங்கியதை உறுதி செய்தவள் தலையணையை எடுத்து வைத்துவிட்டு எழுந்துச் சென்று புடவையை மாற்றி வந்தாள்.

சில நொடிகள் அவன் முகத்தையே அவள் பார்த்திருக்க சற்றே தூக்கம் கலைந்தவன் பக்கத்தில் கையால் தடவ தன்னை தேடுவதை உணர்ந்தவள் வேகமாய் சென்று அவனருகில் படுத்துக் கொண்டாள்.

அவள் கையை பிடித்துக் கொண்டே குழந்தையாய் உறங்குபவனை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை. . அவனேயே பார்த்திருந்தவளும் சிறிது நேரத்தில் கண்ணயர்ந்துவிட்டாள்.

ஒருவரின் அருகாமை இருவருக்குமே ஒருவித நிம்மதியை கொடுத்ததே அன்றி எந்த எதிர்பார்ப்பையும் தந்திருக்கவில்லை. இன்னுமும் அதே சொல்லத் தெரியா காதலும் அன்பும் மட்டுமே நிறைந்திருந்தது எழிலின் மனதில். அதே நேரம் அரசிக்குமே நண்பனாய் இத்தனை நாள் பார்த்த அதே அமுதன்தான் தெரிந்தானே ஒழிய கணவன் என்ற எந்தவொரு வித்தியாசமும் தோணவில்லை.

மறுநாள் காலை எங்கோ கதவு தட்டும் ஓசை கேட்பதாய் தோன்ற இருவருமே லேசாய் தூக்கம் கலைந்து எழுந்தனர். இரவு பிடித்த அவள் கை அப்போது வரையுமே அப்படியே இருந்தது. சிறு அசைவுகூட இல்லாத ஆழ்ந்த உறக்கம். .

தெளிவாகவே சில நொடிகள் தேவைப்பட எழிலே சென்று கதவை லேசாய் திறக்க வெற்றிச் செல்வி தான் நின்றிருந்தார்.

“எய்யா எழிலு நேரமாச்சு பாரு இரண்டு பேரும் தயாராகி கீழே வாங்க கோவிலுக்கு போணும். . ”

“ம்ம் வரோம்மா. . ”,என்றவன் கதவை பூட்டிவிட்டு வந்து கட்டிலில் அமர்ந்தான்.

“ரொம்ப நாளைக்கு இல்ல இல்ல ரொம்ப வருசத்துக்கு அப்பறம் இப்படி ஒரு தூக்கம் தூங்கிருக்கேன் அரசி. . ”

“நானுமே இப்படி தூங்கினதில்ல அமுதா. . அஞ்சு மணிக்கெல்லாம் முழிப்பு வந்துரும். . ”

வழக்கமான அளவான புன்னகை அவனிடத்தில்,”நீ போய் குளிச்சு ரெடி யாகு அரசி அப்பறம் நா போறேன். . ”,என்றவன் மீண்டுமாய் படுத்துக் கொண்டான்.

தன் துணியை எடுத்துக் கொண்டு சென்றவள் குளித்து வெளியே வர தன் துண்டை எடுத்துக் கொண்டு சென்றான் எழில். அதற்குள் புடவை மாற்ற எண்ணியவளாய் தன் பட்டுப் புடவை ஒன்றை எடுத்துக் கட்டிக் கொண்டாள்.

அவள் தயாராகி அமர்ந்திருக்க வெளியே வந்தவனிடம் ஒரு ஆச்சரிய பார்வை.

“இவ்ளோ சீக்கிரம் ரெடியாய்டியா. . நேத்து மட்டும் ஏன் அவ்ளோ நேரம்?”

“இப்படிதான் நா எப்பவுமே ரெடி ஆவேன் நேத்து இந்த வேணியும் கண்ணியும் சேர்ந்து என்னை ஒருவழி ஆக்கினதுனால தான் அவ்ளோ நேரம். . ”

“பரவால்ல என் நிலைமை மத்தவங்க அளவுக்கு மோசமில்ல. . ”,என்றவாறே உடை மாற்ற அரசி கட்டிலை ஓரளவு ஒழுங்குபடுத்தினாள். பின் இருவருமாய் கீழே இறங்கிச் செல்ல அனைவரின் கண்களுமே அவர்கள் மேல் தான்.

“ராசாவும் ராணியும் போலல இருக்காக ரெண்டு பேரும். . செல்வி உன் மருமவ ரொம்ப நல்லாயிருக்கா. . வரட்டுமா. . ”,என்றவாறு ஏதோ கொடுக்க வந்திருந்த பக்கத்து வீட்டு பாட்டி கிளம்பிச் செல்ல பாக்கியம் சென்று அவர் சென்ற இடத்திலிருந்த மண்ணை கையில் ஏந்தி வந்தார்.

“ரெண்டு பேரும் இப்படி நில்லுங்க. . காலங்காத்தாலேயே வந்துட்டா. . எங்க மருமவ எப்படியிருக்கானு எங்களுக்குத் தெரியாதாக்கும். . ”,என்று புலம்பியவாறே இருபுறமுமாய் சுற்றியவர் அவர்களை உள்ளே அனுப்பிவிட்டு பின் கட்டிற்குச் சென்றார்.

அதன்பின் பொழில் சமையலறைக்குள் சென்றுவிட எழில் சென்று சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தான். ஏற்கனவே அதியனும் அகத்தியனும் அங்கு அமர்ந்திருக்க இவனை கண்டதும் அதியன்,

“என்ன டே புது மாப்பிள்ளை முகமே சொலிக்குது. . கண்ணு கூசுதுலே. . ”

“காலையிலேயே ஆரம்பிச்சுடீகளா. . நல்ல தூக்கம் ஒரு வேளை அதனாலயா இருக்கும். . ”

“ம்ம் ஆமா ஆமா. . ”

“என்னதேன் சொல்லுங்க சித்தப்பா தூக்கம்தேன் ஒரு மனுசனுக்கு அத்தனை தெம்பையும் தருது. . ”,என்றவன் சோம்பல் முறித்துக் கூற அகத்தியன் வாய்விட்டே சிரித்தார்.

“எழிலு இந்த பயகிட்ட சிக்கிராத போய் பொழப்பு இருந்தா பாரு போ. . கிரகம் புடிச்சவன் வேவஸ்தை இருக்கா பாரு. . ”,என்றவர் அதியனின் தலையில் தட்டிச் செல்லஅவனுக்கு காபி எடுத்து வந்த பொழில் அவனை முறைத்துக் கொண்டே உள்ளே சென்றாள்.

அதன் பிறகு அனைவருமாய் கோவிலுக்குத் தயாராக தன் கார் சாவியை எடுப்பதற்காக எழில் தனதறைக்குச் சென்றான்.

“டேய் அமுதா உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா?”

“ஏய் குள்ளச்சி என்ன டீ கல்யாணம் ஆன மறுநாளே அறிவிருக்காங்குற?”

“பின்ன என்ன அதிய மாமா தான் உன்னை கிண்டல் பண்றாகனா நீயும் உக்காந்து விளக்கிட்டு இருக்க. . ”

“நா என்ன பண்ணேன். . நல்ல தூங்கினேன்னு தான சொன்னேன். . ”

“ஐயோ அமுதா உன்னை. . ”

“சத்தியமா புரில டீ. . ”

“கடவுளே கல்யாணம் ஆன ஒருத்தன் மறுநாள் வீட்ல இருக்குவங்கள பார்த்தா தூங்கினத பத்தியா கேப்பாங்க. . ஏன்டா இப்படி இருக்க. . கிச்சன்ல என்னை எல்லாரும் ஒருவழி ஆக்குனாங்க. . அங்க இருந்து தப்பிச்சு வந்தா நீ இப்படி பேசிட்டு இருக்க. . ”

“ஓ…இந்த விதத்துல நா யோசிக்கவேயில்லயே. . அவுகள பொருத்த வரதேன் நா நேத்து உன்னோட வாழ ஆரம்பிச்சுருக்கேன். ஆனா நா இத்தனை வருசமும் மனசுல உன் நினைப்புல தான வாழ்ந்துட்டு இருக்கேன். அப்படி ஒருநாள்தேன் நேத்தும். . அதான் என் போக்குல ஏதோ பேசிட்டேன். . ”

“அமுதா. . ”

“விடு அரசி நம்ம சித்தப்பா தானே. . போய்ட்டு போகுது விடு. . ”

“அது இல்ல”,என்றவள் ஆதரவாய் தோள் சாய்ந்து கொள்ள அப்போதும் அவளின் ஸ்பரிசத்தால் எந்தவித கிளர்ச்சியும் இல்லை அவனிடத்தில். . மென்மையாய் அவள் தலைகோதி விட அவளறியாமல் கண் கலங்கியது.

“என்ன அரசி பச்சை புள்ளையாட்டம். . என் மனசுல நிஜமாவே உன்னை பார்த்தா நமக்கு பிடிச்ச பாட்டு கேட்டா ஒரு இதம் வருமே அப்படிதேன் இருக்கு. . புருஷன் பொண்டாட்டி தாம்பத்யம் இதெல்லாம் சாதாரணமா கண்ணிமைக்குற நேரத்துல நடந்துற ஒரு விஷயம்.

என் அரசி எனக்கு அதெல்லாத்தையும் தாண்டின ஒருத்தி. . இப்போதைக்கு எனக்கு தேவையானது என்ன தெரியுமா. . நீ சொன்னியே நா தொலைச்ச 18 வருச காதலி அவ எனக்கு எப்போ கிடைப்பாங்குறது மட்டும்தேன். .

எனக்கு தெரியுது இன்னமும் உனக்கு இந்த அமுதன் உன்னோட புருஷனான நல்ல நண்பன்தேன். . அதை தாண்டி உனக்கே இயல்பா என் மேல காதல்னு ஒண்ணு வரும் பாரு அன்னைக்கு நிச்சயமா மொத்த உரிமையோட என் பொண்டாட்டியை என் பிள்ளைக்கு அம்மாவ ஆக்குற முடிவுக்கு வருவேன். .

அதுவரை யாரு பேச்சையும் பெருசா எடுத்துக்காத. . சரியா. . ”,என்றவன் அவளைப் பிரித்து நிறுத்தி விழி நோக்கி நிற்க அவனை சில நொடி அப்படியே பார்த்திருந்தவள் நிதானமாய்,”சரிங்க”,என்றாள்.

“கேக்கவே நாராசமா இருக்கு டீ தயவுசெஞ்சு பழைய படியே கூப்டேன். . ”

“இல்ல நா அப்படியே கூப்ட்டுட்டு இருந்தா நீ என் ப்ரண்டா மட்டுமே தான் தெரியுவ. . இனி புருஷனாதான் உன்னை பாக்க போறேன். . எத்தனை சீக்கிரம் முடியுமா என். . ”

“உன்னோட. . ”

“என்னோட காதல் புருஷனா பாக்க முயற்சி பண்றேன். . ”என்றவள் தலை குனிந்து கொள்ள அவள் உச்சந்தலையில் இதழ்பதித்து கீழே அழைத்துச் சென்றான்.

அதன்பின் அனைவருமாய் கோவிலுக்கு கிளம்பித் தயாராக எழில் அரசியோடு தமிழும் வேணியும் ஒரு காரில் பயணித்தனர்.

முன்னிருக்கையில் அமர்ந்திருந்த இருவரையும் பார்த்த வேணிக்கு அப்படியாய் ஒரு ஆச்சரியம். திருமணமாகி ஒருநாள் ஆனவர்களா இவர்கள் எனுமளவு மிகச் சாதாரணமாய் இருந்தனர்.

அதற்காக எப்போதுமே கண் பேசி கை கோர்த்து இருக்க முடியாதுதான் ஏன் அவளே அப்படியெல்லாம் ஒன்றும் இருந்ததில்லை. ஆனாலும் ஒருவித உணர்வும் பூரிப்பும் நமையறியாமல் நம்மிடம் இருக்கும்.

ஆனால் இவர்கள் இருவரையும் பார்க்க 10-15 வருடங்கள் வாழ்ந்த அந்யோன்ய தம்பதிகளாய் தான் தோன்றியது. சில விஷயங்களை ஏன்னென்ற கேள்வி இல்லாமல் நம்பத்தான் வேண்டும். அப்படி பட்டதுதான் இவர்களின் உறவும் என்றே நினைக்கத் தோன்றியது வேணிக்கு.

“என்ன பொழில் அக்கா இவ்ளோ அமைதியா வரீங்க. . ”

“ம்ம் அப்படியெல்லாம் ஒண்ணுமில்லயே வேணி…”

“பொய் பொய் அவளுக்கு பேச ஆரம்பிச்சா என்னை பேர் சொல்லி கூப்டுருவோம்னு பயம் அதேன் கஷ்டப்பட்டு அமைதியா வர்றா. . ”

எழில் பட்டென அப்படி கூறியதும் தமிழுக்கும் வேணிக்கும் அப்படி ஒரு ஆச்சரியம் இவனுக்கு இத்தனை இயல்பாய் கூட பேச வருமா என இருவருமே தங்களுக்குள் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

“அதெல்லாம் இல்ல யாரு சொன்னா. . நா சொன்னா சொன்னதுதான் இனி உன்னை. . ச்ச உங்களை வாங்க போங்கனு தான் பேசுவேன். . ”

கார் ஸ்டியரிங்கில் தாளமிட்டவாறே சிரித்தவனை பார்த்து முறைத்தவள் லேசாய் அவன் கையில் அடித்தாள்.

இப்படி அத்தனை மகிழ்ச்சியையும் கலந்த பயணத்தோடு கோவிலையடைய மனதார இறைவனை பிரார்த்தித்துவிட்டு அனைவருமாய் பிரகாரத்தில் அமர்ந்தனர். சரியாய் அந்நேரம் அரசியின் கைப்பேசி ஒலிக்க அதை எடுத்து அவள் ஆங்கிலத்தில் சரளமாய் பேச ஆரம்பிக்க முதல் முறையாய் எழிலின் முகம் வாட்டத்தை தாங்கி நின்றது.

அழைப்பில் கவனம் இருந்தாலும் பொழிலுமே அவன் முகமாற்றத்தை கண்டு கொண்டாள். அங்கிருந்து கிளம்பிய பின்னும் எழிலின் முகம் ஏதோ யோசனையிலேயே தான் இருந்தது. என்வென கேட்கலாம் என நினைத்திருந்தாலும் அதற்பிறகு இருவருக்குமான நேரம் என்ற ஒன்று கிடைக்காமலே போனது.

அக்கம்பக்கத்தினர் திருமணத்திற்கு வர முடியாத சொந்தங்கள் என மாறி மாறி வந்து போய்க் கொண்டிருக்க பாக்கியத்தை விட்டு நகர முடியவில்லை பொழிலால். எழில் வழக்கம்போல் தங்களறைக்குள் சென்றவன் பின் வரவேயில்லை.

இரவு உணவும் வேண்டாமென கூறிவிட அரசிதான் அவனுக்கான உணவை எடுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றாள்.

டீவி அதன்போக்கில் அலறிக் கொண்டிருக்க எழிலோ மொத்தமாய் வேறுலகத்தில் இருந்தான். தட்டை டேபிளில் வைத்தவள் அவனருகில் சென்று அமர எழுந்தமர்ந்தவன் அமைதியாகவே இருந்தான்.

“அமு. . என் ஒரு மாதிரியே இருக்கீங்க. . ”

“ம்ம் ஒண்ணுமில்ல. . ”

“இல்ல காலையிலே கோவில்ல இருந்தே பாக்குறேன் உங்க முகமே சரியில்ல. . என்னாச்சு. . ”

“இல்ல அது காலையிலே உனக்கு ஒரு போன் வந்துதே. . ”

“ம்ம் ஆமா என் கதை விஷயமா பேசினாங்க. . ”

“அது இல்ல அப்போ நீ எம்புட்டு அழகா இங்கிலீஷுல பேசின. . அததேன் நினைச்சுட்டு இருக்கேன். . ”

“இதுல நினைக்குறதுக்கு என்ன இருக்கு. . ”

“படிப்புல உனக்கும் எனக்கும் ஏணி வச்சாலும் எட்டாதுல. . அதான் ஒழுங்கா படிச்சுருக்கலாமோனு யோசிச்சுட்டு கிடக்கேன். . ”

“இதெல்லாம் ஒரு பிரச்சனையா?”

“பிரச்சனைனு இல்லதேன். . ஆனாலும் உன்னை காதலிச்சத தவிர எந்த விதத்துலயும் நா உனக்கு ஏத்தவன் இல்லையோனு ஒரு நினைப்பு. . ”

“டேய் தடிமாடு…”

“என்ன டீ பேரைச் சொல்லியே கூப்ட மாட்டேன்னு சொன்ன ஒருநாள் கூட ஆகல அதுகுள்ள இப்படி சொல்லிட்ட. . ”

“பின்ன என்ன வாழ்க்கைக்கும் படிப்புக்கும் என்ன சம்மந்தம். . படிப்பு நம்ம அறிவை வளர்த்துக்கதான். . உனக்கெல்லாம் படிக்காமயே அது நல்லா நிறையவே இருக்கு. . அதனால தேவையில்லாம யோசிக்காத. . புரியுதா. . ”

“ம்ம் என்னவோ சொல்ற இருந்தாலும் மனசு கேக்க மாட்டேங்குது. . ”

“ம்ம் இந்த சாப்பாட்டை வயித்துக்குள்ள தள்ளு எல்லாம் தன்னால கேக்கும். . ”

“அதான் வேணாம்னு சொன்னேன்ல ஏன் எடுத்துட்டு வந்த??”

“நீ சொன்னா நா கேட்றனுமா அப்படிதான் கொண்டு வருவேன். . சாப்டு. . ”

“முடியாது போ. . ”

“அமுதா என்ன இது குழந்தையாட்டம் அடம் பிடிக்குற. . உன் பனைமரம் உயரத்துக்கு இதெல்லாம் செட்டே ஆகல. . நானே ஊட்டி விடுறேன் ஒழுங்கா சாப்டு. . ”

என்றவள் உணவை ஊட்டிவிட மறுக்காமல் உண்ண ஆரம்பித்தவனுக்கு அத்தனை வருட தனிமையும் உரு தெரியாமல் மறைந்து போனது. என்னதான் தாய் தந்தை உறவுகள் இருப்பினும் எந்த ரத்த பந்தமுமில்லாத மனைவி என்பவளின் அன்பு என்றுமே அலாதிதான்.

தட்டை வைத்துவிட்டு வந்தவள் அவன் இன்னமும் படுக்காமல் டீவி பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து தயங்கியவாறே கதவை தாழிட்டு வந்தாள்.

பொறுமையாய் நகைகளை கழட்டி வைத்தவள் அப்படியே நிற்க தற்செயலாய் திரும்பியவன்,

“என்ன அரசி ஏன் அங்கேயே நிக்குற?”

“இல்ல பட்டுபுடவையை மாத்திக்கனும் அதான். . ”

“மாத்திக்க வேண்டிதுதான. . அதுல என்ன யோசனை?”

“இல்ல அது. . ”என்று அவள் மென்று முழுங்க அவளது மனநிலை உணர்ந்தவனாய்,

“குள்ளச்சி காலையிலே தான சொன்னேன். . என் முன்னாடி நீ எந்த கோலத்துல இருந்தாலும் என் பிள்ளையா தான் தெரியுவியே தவிர வேற எப்படியும் தெரிய மாட்ட. . போ அந்தபக்கமா போய் மாத்திக்க. . ”,என்றவன் டீவியை அணைத்துவிட்டு கட்டிலின் மறுபுறம் அமர்ந்து கொள்ள அவனைப் பற்றி தெரிந்தும் தானே இப்படி பேசியிருக்க வேண்டாம் என மனதிற்குள் தலையில் கொட்டிக் கொண்டாள்.

இரவு விளக்கை ஒளிரவிட்டு வந்து படுத்தபின் அவனும் தலைக்கடியில் கை வைத்தவாறு அவள்புறமாய் திரும்பி படுத்துக் கொண்டான்.

“அமுதா…”

“ம்ம்”

“ஒண்ணு கேக்குறேன் கேவலமா தான் இருக்கும் ஆனாலும் திட்டாத. . ”

“அப்படி என்ன கேக்க போற??”

“இல்ல இதுவரை நீ எந்த பொண்ணையும் சைட் அடிச்சதே இல்லையா??”

“என்னது??”

“இல்ல சும்மா தோணிச்சு அதான் கேட்டேன். . ”

“ஒரு வேளை நீ இந்த ஊர்லயே இருந்துருந்தனா உன்னை சைட் அடிச்சுருப்பேன். . வேற எந்த பொண்ணையும் பாத்ததேயில்ல. . அப்பறம்ல இந்த சைட் எல்லாம். . ஏனோ அதிலெல்லாம் ஆர்வம் இருந்ததில்ல. . ”

“அப்போ நீ ஒரு ஆஞ்சிநேயரா வாழ்ந்துருக்கனு சொல்லு. . ”

“ம்ம் ஆமா அவரு நெஞ்சை கிழிச்சா ராமர் இருந்தமாதிரி என் நெஞ்சை கிழிச்சுருந்தா நீ தான் இருந்துருப்ப. . ”

“கள்ளம் கபடமே இல்லாதவன் டா நீ. . எத்தனை பேருக்கு இப்படி நினைச்சதை நினைச்சபடியே எந்த சாயமும் பூசாம பேசிற முடியும்னு நிஜமா எனக்குத் தெரில. . நம்ம கல்யாணம் நடக்காம போயிருந்தா நிச்சயமா ஒரு நல்ல இதயத்தை தெரிஞ்சுக்காமயே போயிருப்பேன். . ”,

என்றவள் பேசிக் கொண்டே அவன்புறம் பார்க்க உறங்கிப் போயிருந்தான். பேசிய சுவாரஸ்யத்தில் கவனிக்காமல் போனவள் இப்போது பார்க்க முந்தைய தினம் போன்றே அவள் கையை தன் கைக்குள் வைத்தவாறு உறங்கியிருந்தான்.

லேசாய் திரும்பிப் படுத்தவள் அவன் தலைகோத நிர்மலமான முகத்தோடு உறங்கிக் கொண்டிருந்தான் அவளின் காதல் கள்வன்.