527
“கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல்
மு.வ விளக்க உரை: சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல், ஒருவன் தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாதக் காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது.”
அடுத்த நாள் காலையிலேயே வள்ளியும் முருகனும் அகத்தியனின் வீட்டிற்கு வந்து விட்டிருந்தனர். அகத்தியன் வெளியே சென்றிருக்க மேகலை வந்தவர்களை உபசரித்து அமர்த்தினார்.
நாச்சியார் தாய் தந்தையை வரவேற்று விட்டு அவர்கள் அருகிலேயே அமைதியாய் நின்றிருந்தாள்.
“சம்மந்தி என்ன திடீர்னு வீட்டைக் காலி பண்ண போறீக?”
“அதுவும் எங்க சொந்த வீடு தான் அண்ணாச்சி. அவனுக்கு அங்கே இருக்குறதுக்கு தான் விருப்பம். அதான் சரினு முடிவெடுத்துட்டோம்.”
“ஓ!!”, என்றவருக்கு வேறு என்ன கேட்பது என்று புரியவில்லை. மகளோடு பேசட்டும் என்று நினைத்தவராய் மேகலை எதோ கூறிவிட்டு உள்ளே செல்ல அதற்காகவே காத்திருந்தவராய் வள்ளி மகளின் கைப்பற்றி சோபாவில் அமர்த்தினார்.
“நாச்சி என்ன டி நடக்குது? நீ எப்படியிருக்க?”
“எனக்கென்ன நீங்க பண்ணி வைச்ச கல்யாணத்தை கட்டிகிட்டு நல்லா தான இருக்கேன்.”, என்ன தான் பெற்றவர்களை மனதுத் தேடினாலும், பார்த்தவுடன் அவர்கள் தனக்கு செய்தவை கண்முன் வர வார்த்தைகள் துடுக்காகவே வந்துவிடுகிறது.
“நாச்சி ஏன் டி இப்படியெல்லாம் பேசுற? ஏன் இப்போ திடீர்னு வீட்டை மாத்துறாங்க? நீ வேண்டாம்னு சொல்ல வேண்டியது தான?”
“ஏன் சொல்லணும் என்னைப் பார்க்க கூட உங்களுக்கு எல்லாம் பிடிக்கலை தான? என்னால உங்களுக்கு அவமானம் தான? நான் இங்கிருந்து போனால் நல்லது தான்.”
“!!”
“அதுவுமில்லாம எனக்கு இங்கே யாரையும் பார்க்க வேண்டாம். அருவறுப்பா இரக்கமா கோவமா இப்படி எல்லாம் என் மேல விழுற எந்த பார்வையும் எனக்கு பார்க்க வேண்டாம்.”
“நாச்சி!!”
“எனக்குத் தெரிஞ்ச என்னைப் பத்தி தெரிஞ்ச யாருமே இல்லாத எங்கேயாவது போயிடணும். இங்கேயே இருக்க இருக்க பைத்தியமாயிருவேனோனு பயமா இருக்கு மா..”, என்றவள் முகத்தை கைகளுக்குள் புதைத்துக் கொண்டு அழ வள்ளியும் முருகனும் மொத்தமாய் உடைந்து போயினர்.
சரியாய் அகத்தியன் அந்த நேரம் உள்ளே வர கதறி அழும் மனைவியைக் கவனித்தவனாய்,
“இப்போ என்னத்துக்கு இப்படி ஒப்பாரி வைச்சுட்டு இருக்க?!”, என்று கத்தியதில் சட்டென நிமிர்ந்தவள் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு எழுந்து நின்றாள்.
வந்தவர்களை எதுவும் சொல்ல முடியாதவனாய் அகத்தியன் மனைவியிடம் கத்த அவர்களுக்கோ கொடுமைகாரனில் இருந்து அரக்கனாகவே மாறி விட்டிருந்தான்.
“மாப்பிள்ள.. நாங்க..”
“எப்போ பார்த்தாலும் எதையாவது சொல்லி நச நசனு அழுதுகிட்டு.. போய் பொழப்பை பாருங்க.”, என்றவனின் எண்ணம் அவர்கள் தான் மனைவியை ஏதோ கூறி அழ வைத்திருக்கிறார்கள் என்பதாய் இருந்தது.
“நீ கிளம்பு மா.. அங்கே போனப்பறம் ஒரு நாள் வாங்க..”, என்ற படி நாச்சியார் பேச்சை முடித்துக் கொள்ள, மனமில்லாமல் இருவரும் அங்கிருந்து கிளம்பியிருந்தனர்.
அகத்தியன் மாடிக்குச் சென்றிருக்க மேகலை நாச்சியாரின் கையில் சொம்புத் தண்ணீரைத் திணித்து மேலே அனுப்பி வைத்தார்.
நாச்சியாருக்குமே சற்று பயமாய் தான் இருந்தது. தந்தையின் கோபத்தைப் பார்த்திருந்தவளுக்கு அகத்தியனின் கோபத்தை நினைத்தால் படபடப்பாய் இருந்தது.
அறைக்குள் இருந்தவன் பீரோவிற்குள் இருந்து பணத்தை எடுத்து எண்ணிக் கொண்டிருக்க தண்ணீரோடு தயக்கமாய் அவனருகில் நின்றிருந்தாள் நாச்சியார்.
பணத்தை எண்ணி முடித்தவன் அவளிடம் சொம்பை வாங்கிக் கொண்ட படி,
“அதென்ன எப்போ பார்த்தாலும் அழுதுட்டே இருக்குறது? பொம்பளைகளுக்கு மட்டும் அதெப்படி தான் பொசுக்குனு கண்ணீர் வருமோ தெரியல..”
“…”
“என்னவாம் உங்க அப்பாக்கு?”
“இல்ல என்ன திடீர்னு அங்கே போறோம்னு கேட்டாங்க. நான் தான் ஏதோ யோசனையில கத்திட்டேன்.”
“நீயே கத்திவிட்டு நீயே அழுவியா?”
“எனக்கே தெரியலை..”
“அவங்க உன்னை கேட்காம எனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்த கோவம். அப்படி தான?”
“இல்ல.. அது..”
“..”
“உங்களைனு இல்ல.. என்னை நம்பாம அவசரமா..”
“இந்நேரத்துக்கு அந்த கோவம் வைராக்கியமா இல்ல மாறிருக்கணும்?”
“!!!”
“என்ன முழிக்குற? உன்னை நம்பாம போனவங்களுக்கு அவங்க எண்ணம் தப்புனு புரிய வை. நீ யாருனு அவங்களுக்கு காட்டு.”
“நான்.. நான் என்ன பண்ண முடியும்?”
“நல்ல படிக்குறவ தான நீ? ஒழுங்கா படி வேலைக்கு போ. உனக்குனு ஒரு அடையாளத்தை தேடு. இப்படிபட்ட என் பொண்ணை நான் புரிஞ்சுக்காம போயிட்டேனேனு யோசிக்க வை.”
“என்னால.. அதெல்லாம் முடியாது.. எனக்கு..”
“இரண்டு நாளா உன் அத்தை பின்னாடியே சுத்துறியே.. அவங்க புருசன் செத்து போகும் போது வெறும் 36 வயசு தான். பிள்ளையும் ஒண்ணும் உருப்படியா இல்ல.”
“!!”
“அவங்களும் உன்னை மாதிரி செல்லமா வளர்ந்தவங்க தான். ஆனா அதுக்கப்பறம் வாழ்க்கைக்கு ஏத்த மாதிரி தன்னை மாத்திகிடல? இத்தனை வருசத்துல ஒரு துணையும் இல்லனாலும் எந்த ஆம்பளையும் அவங்களை நெருங்க நினைச்சதில்ல.”
“!!”
“பொடச்சிங்கிற திமிரு இருக்கணும். நீ தப்பு தான் பண்ணின. தரங்கெட்டு போகல. அதை முதல்ல நீ மனசுல நிறுத்து. மத்ததெல்லாம் தன்னால மாறும்.”, என்று அவன் பேச பேச உதடு துடிக்க நின்றிருந்தாள் நாச்சியார்.
தனக்காக தன்நிலை புரிந்து கொள்ள யாருமில்லையே என்ற தவிப்பு கணவனின் பேச்சில் உடைப்பெடுக்க காத்திருந்தது.
அகத்தியன் அவளையே பார்த்திருக்க சட்டென அவனது சட்டையை இரு கைகளாலும் பற்றிக் கொண்டு மார்பில் நெற்றி முட்டி கதறியிருந்தாள்.
அவன் அவளைத் தடுக்கவோ திட்டவோ இல்லை அவனது இடதுகரம் மட்டும் பட்டும் படாமல் அவளது முதுகைச் சுற்றியிருந்தது.
“என்னை எதுக்கு கல்யாணம் பண்ணீங்க..”
“…”
“உங்களைப் பார்க்கும் போதெல்லாம் தான் என்னைப் பார்த்து எனக்கு அசிங்கமா இருக்கு. நீங்களும் அத்தையும் என்னை நாலு வார்த்தை சொல்லி காமிச்சா கூட பரவால்லனு இருக்கு.”
“…”
“நான், என் எண்ணம், இந்த உடம்பு எல்லாமே அசிங்கம். ஏன் என்னை கல்யாணம் பண்ணீங்க..”, என்றவள் அவனது சட்டையை இரு கைகளாலும் பிடித்து உலுக்கிய படியே அழுது கரைந்தாள்.
அவளது தாடையை இறுகப் பற்றித் தன்னை பார்க்க வைக்க கண்களை மறைத்த கண்ணீரில் மங்கலாய் அவன் முகம் கலைந்து கிடந்தது.
“நானும் அம்புட்டு உத்தமனெல்லாம் இல்ல. எனக்கும் இதை விட்டா கல்யாணம் நடக்க வாய்ப்பில்ல. அதான் கட்டிகிட்டேன். நீயே சொன்னியே ஊருக்குள்ளே எனக்கு எந்த விதமான நல்ல பேரும் இல்லைனு.
இந்த கெட்டவனை எவ கட்டுவா? அதான் உங்கய்யா அசந்த நேரமா உள்ளே புகுந்து கல்யாணத்தை நடத்திகிட்டேன்.”, என்றவன் அவளது உதட்டில் அழுத்தமாய் இதழ் பதிக்க அதிர்ந்து விழிகளை இறுக மூடியிருந்தாள் நாச்சியார்.
“இனி என் பொண்டாட்டிகிற நினைப்பும் இந்த முத்தமும் மட்டும் தான் உன் நியாபகத்துல இருக்கணும்.”, என்றவன் அவள் தாடையிலிருந்து கையை எடுக்க அப்பட்ட அதிர்ச்சியோடு அவனையே பார்த்திருந்தாள்.
“தேவையில்லாம இனி யோசிப்பியா?”, என்றதற்கு வேக வேகமாய் இல்லை என்று தலையசைத்தாள். சில நொடிகள் அவளது விழிகளைப் பார்த்திருந்தவன் பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்பியிருந்தான்.
நாச்சியாருக்கு இன்னுமும் நடந்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. முதல் முத்தம் அடி வயிற்றில் ஏதேதோ செய்தது. அவன் பிடித்திருந்த இறுக்கம் இப்போதும் இருப்பதாய் தோன்றியது.
அனைத்தையும் விட அவனது பார்வை அது இன்னுமின்னும் ஏதேதோ செய்தது பெண்ணவளை. மகன் சென்ற பின் மருமகளைத் தேடி வந்த மேகலை பேயறைந்தாற் போல் அமர்ந்திருந்த மருமகளைப் பார்த்து பதறினார்.
அழுதழுது கண்ணெல்லாம் வீங்கியிருக்க முகமெல்லாம் சிவந்து தலை கலைந்து அமர்ந்திருந்தவளின் கரங்களைப் பற்றிக் கொண்டார்.
“ஏட்டி என்னாச்சு? அடிச்சுட்டானா என்ன? இன்னைக்கு வரட்டும் அவன். என்ன தான் மனசில நினைச்சுட்டு இருக்கான்.
சின்ன பிள்ளைட்ட பக்குவமா பேசத் தெரியாதவன் எல்லாம் எதுக்கு கல்யாணம் பண்ணுதான். நீ பயப்படாத நான் இருக்கேன்.”, என்றவர் தோள் தட்டிய வண்ணம் அவளைச் சமாதானப் படுத்த கட்டிலில் அமர்ந்திருந்தவள் அவரை இடுப்போடு கட்டிக் கொண்டு விசும்பினாள்.
“என் பெத்தாரு அழாதட்டி. என்னை விட உன் நிலைமை மோசம் பெத்தவுகளும் உருப்படியில்ல கட்டிகிட்டவன் அதுக்கும் மேல. எந்த நேரத்துல பெத்தேனோ இப்படி பாடா படுதேன். நீ அழாத டி. இன்னைக்கு அவன் வரட்டும்.”
“அத்தை அவங்க ஒண்ணும் சொல்லல..”, என்றவள் ஏங்கிய படியே வார்த்தைகளை முடிக்க அதற்கும் கண்மண் தெரியாமல் அகத்தியனுக்குத் தான் அர்ச்சனை நடந்தது.
காலையில் சென்றவன் இரவு பத்து மணிக்கு தான் வீடு வந்து சேர்ந்திருந்தான். அதுவும் கையில் பரோட்டா கவரோடு. மேகலை வரவேற்பறை சோபாவில் படுத்திருக்க வீடு முழுவதும் நாளை கொண்டு போக வேண்டிய சாமான்களின் மூட்டைகளால் நிறைந்திருந்தநு.
நாச்சியார் உணவு மேசையில் அமர்ந்திருக்க வந்தவன் மாடிக்குச் செல்லாது கையை மட்டும் கழுவிவிட்டு வந்து உணவு மேசையில் அமர்ந்தான்.
அவன் அருகில் வந்ததும் வயிற்றில் பட்டாம்பூச்சி படபடக்க அவனை நிமிர்ந்தும் பார்க்காது உணவைப் பரிமாறினாள் நாச்சியார்.
“ஏலே நீ பண்றது ஒண்ணும் சரியா படலை.”, என்ற மேகலை தலை முடியை கொண்டையிட்ட படி அவனருகில் வர அவனோ கேள்வியாய் மனைவியைப் பார்த்து வைத்தான்.
நாச்சியாரோ மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் தவித்தவளாய் அவஸ்தையாய் நின்றிருந்தாள்.
“நானும் புருஷன் பொண்டாட்டிக்கு நடுவுல வர வேணாம்னு பார்த்தா, என்னலே சும்மா அந்த பிள்ளையை அழ விடுறது. அப்படி கோவத்தை அடக்க முடியாதவன் என்னத்துக்கு கல்யாணம் பண்ணுத?”
“!!”
“இன்னொரு தடவை அவ அழுதானு தெரியட்டும் நடக்குறதே வேற சொல்லிட்டேன்.”, என்றவர் மகனை நன்றாக முறைத்து விட்டு அறைக்குள் சென்றிருந்தார்.
அகத்தியன் பக்கவாட்டில் தலை நிமிர்த்தி மனைவியைய் பார்க்க நாச்சியார் அவசரமாய்,
“இல்ல நான் எதுவும் சொல்லல. அத்தையா ஏதோ புரிஞ்சுட்டு..”, என்றவள் தடுமாற பக்கத்து நாற்காலியை அவள் அமருவதற்காக நகர்த்தி வைத்தான்.
ஒன்றும் பேசாமல் நாச்சியார் அதில் அமர தான் கொண்டு வந்த பொட்டலத்தைப் பிரித்து அவள் முன் வைத்தான்.
நாச்சியார் ஒன்றும் பேசாமல் பரோட்டாவை பிசைந்து பாதியை அவன் தட்டில் வைத்து விட்டு அவனைப் பார்க்க ஒன்றும் கூறாமல் உண்ண ஆரம்பித்திருந்தான்.
நாச்சியாருக்கும் காலையை விட இப்போது மனம் வெகுவாய் இயல்பிற்கு வந்திருந்தது. கணவனாகியவனின் மீது நம்பிக்கைக்கு மேலான ஒருவித உணர்வு சிறிதாய் எட்டிப் பார்த்தது.
அத்தனை பேரையும் கண்ணில் விரல் விட்டு ஆட்டுபவன் தனக்காக செய்யும் விஷயங்கள் அவளது இளமனதை அவளறியாமலே ஈர்க்கத் தொடங்கியிருந்தது.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
7 comments
அகத்தியா 🤭🤭🤭 உங்க அம்மா ஒரு ஆள் போதும் போல 🤭🤭🤭
நீங்க வேற மேகலை 🤭🤭🤭 உங்க பையன் ஒன்னும் பண்ணல 😏😏😏
நாச்சியார் 🤗🤗🤗🤗
Ippo vanthava kooda nallavannu purinjuppa pola…
Megalai neenga thaan purinjukkanum
👌👌👌👌👌👌👌👌
Superb update sis 👏 👌 megalai super mamiyaar. Iniyavadhu naachi, un future plus un purusan nai pathi yosimma
N
அடி பொலி எபிசோட் அக்கா😍😍 மேகலை சரியான இரும்பு பெண்மணி தான்.. அம்மாடி நாச்சியா.. அவங்கட்ட நாலு கத்துக்கிட்டாளே நீ ஊரை வித்துடலாம்டா கண்டு🤭🤭🤭 என்னடா பேசிகிட்டு இருக்கும்போதே பொசுக்குனு காரியத்துல இறங்கிட்ட ஆத்தாடி ஷாக்ல ஹார்ட் பீட் ஸ்டாப்ட் டா எனக்கு.. எபி செம்ம க்கா 😍
Very nice.