வசம்-9

by ஸ்ரீ
6 comments 560 views
A+A-
Reset

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்

பீழை தருவதொன் றில்

மு.வ விளக்க உரை: பேதையிரிடமிருந்து பிரிவு நேர்ந்த போது, அப்பிரிவு துன்பம் ஒன்றும் தருவதில்லை, ஆகையால் பேதையரிடம் கொள்ளும் நட்பு மிக இனியதாகும்.

காலை உணவை முடித்து மூவருமாய் கிளம்பத் தயாராக வாசலிலிருந்து அகத்தியன் தனது இரு சக்கர வாகனத்தின் ஒலியெழுப்பியை அழுத்தினான்.

“நீ ஏன் டி இங்கேயே நிக்குற. ஹார்ன் அடிக்குறான் பாரு. போ..”

“பைக்லேயா?”

“பின்ன என்ன பிளைட்லேயா போவாங்க?”

“அத்த நீங்க எப்படி வருவீங்க?”

“நான் என் வண்டியில வந்துருவேன் டி. நீ போ..”

“நீங்க வண்டி ஓட்டுவீங்களா?!!”

“ஏன் நீ ஓட்ட மாட்டியா?”

“ம்ஹும் தெரியாது அத்த..”

“சரியா போச்சு.. நீ போ அவன் வந்தான்னால் எனக்கும் சேர்த்து காது கிழியும்.”, என்றதில் வேகமாய் வாசலுக்கு ஓடினாள் நாச்சியார்.

“எவ்வளவு நேரம்.. உன் அத்தையை எங்கே?”

“இதோ வராங்க.. அத்தை வண்டியில வந்துருவாங்களாம்..”

“ம்ம் நீ வா..”, என்றதும் அவன் பின்னே ஏறியவள் வீட்டை எட்டிப் பார்க்க மேகலை உள் கதவைப் பூட்டிக் கொண்டிருந்தார்.

அகத்தியனும் அங்கு ஒரு பார்வை பார்த்து விட்டு வண்டியைக் கிளப்பியிருந்தான்.

தெருவைக் கடந்து பிரதான சாலைக்கு வந்த பிறகும் பலர் அவனுக்கு வணக்கம் வைத்தும் கையசைத்தும் செல்ல அனைத்தையும் அமைதியாய் பார்த்திருந்தாள் நாச்சியார்.

 கணவனின் உருவத்தை மனதிற்குள் சற்று பதிய வைக்கும் பொருட்டு அவனின் பின்னந்தலையை வெறித்த வண்ணம் உருபோட்டுக் கொண்டிருந்தாள்.

நடுத்தரமான உயரமும் உடல்வாகும் லேசான முறுக்கு மீசை வெட்டி வீழ்த்தும் பார்வை முகத்தில் பெயருக்கு கூட எட்டிப் பார்த்திடாத சிரிப்பு. இப்படியாய் கணவனை அவதானித்தவள் வேகத்தடையில் போட்ட அழுத்தத்தில் கம்பியில் இருந்த கையை எடுத்து கணவனின் தோளை அழுந்தப் பற்றியிருந்தாள்.

ஒரு நொடி பக்கவாட்டில் திரும்பி அவளது கையைப் பார்த்தவன்  அவள் கையை எடுக்கச் செல்வதை உணர்ந்தவனாய்,

“ரோடு இங்க மேடு பள்ளமா தான் இருக்கும். ஒழுங்கா பிடிச்சு உட்காரு.”, என்றதில் கையை மீண்டுமாய் அவன் தோளிலேயே வைத்துக் கொண்டாள்.

வாகைகுளம் அருகே இருந்த அந்த சிறிய கோவிலின் முன் அகத்தியன் வண்டியை நிறுத்த நாச்சியார் கீழே இறங்கி புடவையை சரி செய்து கொண்ட வண்ணம் மேகலை வருகிறாரா என்று பார்வையைச் சுழற்றினாள்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் அவரும் வந்துவிட மூவருமாய் கோவிலுக்குள் நுழைந்தனர். அகத்தியன் ஏற்கனவே பேசியிருப்பான் போலும் கோவிலில் அலங்காரம் எல்லாம் முடித்து தயாராய் வைத்திருந்தார் பூசாரி.

மேகலைக்கு தம்பதி சமேதராய் மகனையும் மருமகளையும் பார்த்து மனம் நிம்மதியாய் இருந்தது. இருவரும் நீண்ட காலம் செழிப்பாய் வாழ வேண்டும் என மனதார வேண்டிக் கொண்டார்.

நாச்சியாருக்கு மூடியிருந்த விழிகளுக்குள் கண்ணீர் தேங்கி நின்றது. நினைத்தே பார்த்திராத பல விஷயங்கள் நடந்து விட்ட போதும் இப்போது ஏனோ மனம் சற்று இளகுவாய்  இருப்பதாய் தோன்றியது.

அவள் கண்ணைத் திறந்த நேரம் அகத்தியன் அவள் நெற்றியில் விபூதியை வைத்து வகிட்டில் குங்குமத்தை வைத்திருந்தான்.

திருப்தியாய் தரிசனத்தை முடித்து விட்டு அங்கிருந்த தூணருகில் மூவருமாய் அமர அகத்தியன் கைப்பேசியில் எதையோ பார்த்திருந்தான்.

“ஒரு பவுடரைப் போட்டு வர மாட்டியா டி. புதுப் பொண்ணாட்டமா இருக்க?”

“தோணவே இல்ல அத்த..”

“இப்படி பாவமா மூஞ்சியை வைச்சுக்க.. பாரு பைக்ல வந்ததுல தலையெல்லாம் எப்படி கலைஞ்சு கிடக்குனு.”, என்றவர் மருமகளின் முன்பக்க முடியை சரி செய்து விட்டார்.

“அத்த எப்படி நாள் மொத்தம் சேலை கட்டியிருக்கீங்க.. எனக்கு கச கசனு இருக்கு.”

“எல்லாம் பழக்கம் தான் டி.. உனக்கும் போக போக பழகிரும்.”

 இவர்களின் உரையாடலைக் கேட்டும் கேளாதவனாய் அமர்ந்திருந்தான் அகத்தியன்.

“சரி நான் கிளம்புறேன். நீங்க பார்த்து வாங்க..”, என்றவர் பொதுவாய் கூறினாலும் மகனைத் தான் பார்த்திருந்தார்.

“ஆச்சி வீட்டுக்கு போகணும். நீயும் அங்கேயே வந்துரு.”, என்றவன் எழுந்து கொண்டான்.

ஒரு வகையில் மேகலை எதிர்பார்த்தது தான். அவரது தாயின் வீடு மேகலை ஒரே மகள் எனவே ஒரே பேரனான அகத்தியனுக்குத் தான் அந்த வீடு. மேகலையின் தாய் இறந்த பின்பும் அந்த வீட்டை வாடகைக்கு கூட விடாமல் ஆள் வைத்து பராமரித்து  வருகிறான் அகத்தியன்.

இன்று இங்கு வருவதாய் மகன் கூறியயெதிலிருந்தே வேறொரு எண்ணமும் அவர் மனதில் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. இருந்தும் ஒன்றும் கூறாமல் அமைதியாக கிளம்பியிருந்தார்.

கோவிலிலிருந்து ஒரு ஐந்து பத்து நிமிடத்தில் அந்த வீட்டை அடைந்திருந்தனர். சிறிய தெரு போன்ற அமைப்பில் கடைசி வீடாய் இருந்தது.

வீட்டைச் சுற்றிலும் நல்ல இடமிருக்க நடுவில் மாடியும் கீழுமான வீடு வெள்ளை அடிக்கப்பட்டு பளிச்சென்று இருந்தது.

இவர்களுக்காகவே காத்திருந்தவராய் வயதான பெண்மணி ஒருவரும்  முப்பதுகளில் ஒரு ஆடவனும் நின்றிருந்தனர்.

“வா அகத்தியா..”, என்ற இருவருக்கும் அவன் தலையசைக்க மேகலையை வரவேற்ற வண்ணம் நாச்சியாரின் கன்னம் வழித்து முத்தம் வைத்துக் கொண்டார் அந்த பாட்டி.

“வாட்டி எம்பேரனை நல்லா பாத்துகிடணும் என்ன?”, என்றவரைப் பார்த்து புன்னகைத்தாள் நாச்சியார்.

“உள்ளே போங்க நான் வாரேன்.”, என்று அவர் சென்று விட அகத்தியன் நாச்சியாரோடு தனது வலது காலை எடுத்து  வைத்து உள்ளே நுழைந்தான்.

சிறிய வீடானாலும் அவர்கள் மூவருக்கும் போதுமானதான இடம் தான். ஏனோ நாச்சியாருக்கு அந்த வீட்டையும் சுற்றுப் புறத்தையும் பிடித்து விட்டது.

அகத்தியன் அங்கிருந்தவனோடு பேசிக் கொண்டிருக்க நாச்சியார் வீட்டைச் சுற்றிப் பார்த்த வண்ணம் மேகலையிடம் வந்தாள்.

“அத்தை அந்த காலத்து வீடு இல்ல? ரொம்ப நல்லாயிருக்கு.”

“ம்ம் எங்க அம்மா வீடு. நான் உன் புருசன் எல்லாம் பிறந்து வளர்ந்தது இங்கன தான்.”

“..”

“அவனுக்கு எங்க அம்மா தான் எல்லாமே.  நானே விருந்தாளி தான். இங்கேயிருந்து வரவே மாட்டேன்னு அப்படி அழுவான். எனக்கு பிள்ளையை விட்டுட்டு போகும் போது அழுகையா வரும்.

அவன் இங்க தான் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருப்பான். எங்கம்ம போய் வருசமானாலும் இந்த வீட்டை அவன் வாடகைக்கு விட மாட்டேன்னு ஒத்த காலுல நின்னுட்டான்.

பாதி நேரம் இங்கன தான் கிடப்பான். அவன் பொழப்புக்காக தான் கஷ்டப்பட்டு தூத்துக்குடியில இருக்கான்.”

“அதனால தான் உடனே இங்கே வந்துட்டாங்க போல..”, என்ற நேரம் அகத்தியன் வர மேகலை சமையலறைக்குள் சென்றிருந்தார்.

“தூத்துக்குடியிலேயே இருந்துருப்ப இங்கே இதெல்லாம் பழகிக்க நேரமெடுக்கும் உனக்கு. சின்ன கிராமம் தான்.”

“இல்ல நல்லாயிருக்கு.. ஒண்ணு கேட்கவா?”

“என்ன?”

“நாம மூணு பேரும் இங்கேயே வந்துருவோமா?”

“இங்கேயா?”

“ம்ம் எனக்கு நம்ம தெருவில இருக்கப் பிடிக்கலை. எல்லாரும்.. ஒரு மாதிரி பாக்குறாங்க..”

“…”

“உங்களுக்கு இங்கே இருந்து போக வர சிரமமா இருக்கும்னால் வேண்டாம். நான் சமாளிச்சுக்குவேன்.”

“உனக்கு காலேஜுக்கு போக நேரமெடுக்குமே?”

“பஸ் இருக்கும்ல நான் போய்க்குவேன்.”

“சரி இரண்டு நாள்ல வந்துரலாம்.”

“இரண்டு நாள்லேயா?!!”

“ஆமா ஏன்?”

“அதுக்குள்ளே.. எல்லாம்?!!”

“அதை நான் பாத்துகிடுதேன். உன் அத்தையை கூப்பிடு கொஞ்சம்.”, என்றதில் உள்ளேச் சென்று மேகலையை அழைத்து வந்தாள்.

“நாம மூணு பேரும் இங்கேயே வந்துருவோம்.”, இது மேகலை எதிர் பார்த்தது தான்.

“இவளுக்கு காலேஜுக்கு வசதிப்படுமா?”

“அவ சமளிச்சுக்குறதா சொல்றா. அவ தான் இங்கே வரலாம்னு கேட்டதே..”, என்றதில் மேகலை மருமகளைப் பார்க்க ஆம் என்பதாய் தயக்கமாய் தலையசைத்தாள் நாச்சியார்.

“சரிலே நீ ஆக வேண்டியதைப் பாரு.”, என்றதில் அகத்தியன் வெளியே செல்ல எத்தனிக்க மேகலை அவனிடம்,

“நான் வேணும்னா கொஞ்ச நாளைக்கு அங்கன இருந்துக்கவா? நீங்க இரண்டு பேரும் இங்க..”, என்றதற்கு நாச்சியார் ஏதோ கூற வருவதற்குள் ,

அகத்தியன் சில நொடிகள் மேகலையைப் பார்த்தான். பல வருடங்களாக மனதில் இருந்த ஏமாற்றம் அந்த நொடியில் வார்த்தையாக வெளி வந்தது.

“எப்பவுமே என் கூட இருக்கணும்னு உனக்குத் தோணவே தோணாதா? நீ வர வேண்டாம்னா நான் முதல்லேயே நாங்க இரண்டு பேரும் தான் இங்கே வரப்போறோம்னு சொல்லிருப்பேன்.”

“ஏல அது..”

“ஏன் உன்னோட ஒட்டவே மாட்டிக்கேன் கேட்டுட்டே இருப்பல இதோ இதான் பிரச்சனை. இந்தப் பிறவி இப்படி தான் இருக்கணும்ங்கிறது தான் என் தலையெழுத்து.”, என்றவன் கோபமாய் வெளியேறி விட மேகலை கண்கள் கலங்க அப்படியே அமர்ந்து விட்டிருந்தார்.

“அழாதீங்க அத்த..”

“எப்படி பேசிட்டு போறான் பாரு. எதிரில் இருக்குறவ மனசு சங்கடப்படுமேனு நினைக்கவே மாட்டான்.”

“..”

“உன்ட்ட தான சொல்லுதேன்.”

“என்ன இருந்தாலும் நீங்க அப்படி சொல்லிருக்க கூடாதுல?”

“கொழுப்பை பாத்தியா உன் புருசனுக்கு சப்போர்ட் பண்ணாத..”

“அப்படியெல்லாம் இல்ல.. நேத்து தான என் கூடவே இருங்கனு நானும் கேட்டேன். இன்னைக்கு இப்படி சொன்னா..”

“!!”

“எனக்கு அந்த தெருவும் மனுசங்களும் வேண்டாம்னு தோணுச்சு. இந்த வீடு இல்லைனா அங்கன தான் இருந்துருக்கணும். வேற வழியில்ல. அவங்களுக்கும் இங்கே இருக்க பிடிக்கும்னு நீங்க சொன்னதால தான் அப்படி கேட்டேன்.

மத்தபடி உங்களை விட்டுட்டு வரணும்னு எல்லாம் எந்த எண்ணமும் இல்ல அத்த..”

“சரி விடு டி என்னத்தையோ கேட்டு வைச்சு வாங்கியும் கட்டியாச்சு.  நீ இங்க வந்தப்பறம் நல்ல பேசி வைச்சு இருக்கணும். எதையோ தொலைச்ச மாதிரியே அலையாத புரியுதா?”

“ம்ம் சரி அத்த..”

இப்படியாய் பொழுது கழிய அன்று மாலையே அகத்தியன் நாச்சியாரின் வீட்டிற்குச் சென்று நாளை மறுநாள் வீட்டை காலி செய்வதாய் கூற முருகனுக்கும் வள்ளிக்கும் பெரும் பயமாகி விட்டது.

ஊரை விட்டே போகுமளவு இப்போது என்னவாகி விட்டது. அதிலும் இத்தனை வருடங்களாய் இங்கே இருந்தவர்கள் இப்போது தங்கள் மகளை ஏன் அங்கு அழைத்துச் செல்கிறார்கள் என்று பலவாறான எண்ணங்கள் ஓட ஆரம்பித்திருந்தன.

அதிலும் இதைச் சொல்வதற்கு மகள் வராததில் அகத்தியன் தான் அவளை வரவிடாமல் செய்து விட்டதாய் எண்ணினர்.

“நாச்சி வரலையா?”

“இல்ல வீட்டுல வேலை இருக்கு. அடுத்த வாரத்துல ஒரு நாள் அங்கே வாங்க நான் அட்ரெஸ் அனுப்பி விடுதேன்.”

“மாப்பிள்ள.. அது.. சீர்வரிசை பாத்திரபண்டம் எதாவது..”

“ஏன் நான் கை கால் விளங்காம கிடக்கேனா என்ன?”

“!!”

“வேணும்னால் சொல்லுங்க உங்களுக்கும் சேர்த்து நான் வாங்கிப் போடுதேன்.”, என்றவன் அங்கிருந்து கிளம்பியிருந்தான்.

“ஏங்க என்னங்க இது. அவ நம்ம கண் பார்வையிலயாவது இருப்பானு நினைச்சா.. எதுக்கு இப்படி ரெண்டே நாளுல வீட்டை காலி பண்ணி போறாங்க!!”

“எனக்கும் ஒண்ணும் புரியல வள்ளி!! நான் தான் அவசர பட்டுட்டேனோ?! இன்னும் கொஞ்சம் யோசிச்சு கல்யாணத்தை நடத்திருக்கணுமோ?”

“நடந்ததை யாரு மாத்த … எனக்கு பெத்த வயிறு கதி கலங்குது அவளை நினைச்சு. யாரு எப்போ செஞ்ச பாவமோ இப்படி நிம்மதியில்லாம அலையணும்னு இருக்கு”, என்றவர் அழுதுகொண்டே உள்ளே சென்றிருந்தார்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

6 comments

Kavi Natarajan August 13, 2026 - 4:46 pm

💞💞💞💞💞💞💞

MalarMurugan August 13, 2026 - 4:55 pm

நல்ல எண்ணமே வராது 😏😏😏
அகத்தியா 🤗🤗🤗🤗
உங்க அம்மா கேட்டது வேற காரணத்துக்காக நீ புரிஞ்சிக்கிட்டது ஒன்னு 😏😏😏😏
இருந்தாலும் அவங்களும் அப்படி கேட்டுருக்க வேண்டாம் 😏😏😏
நாச்சியார் 😍😍 எப்டியோ கேட்டுட்டா 😏😏

Raji Vijay August 13, 2026 - 4:58 pm

Superb update sis 👏. Vera idam porangalaa. Ini naachi happy. Agathiyan pathi nallathave ninaika maatangala. Omg.

srichitra August 13, 2026 - 8:15 pm

Very nice.

suganyavel August 13, 2026 - 8:17 pm

Super💕

Aandal Venkatraghavan August 14, 2026 - 6:31 am

அகத்தியனும் பாவம் தான் மேகலையும் பாவம் தான். அவங்கவங்களுக்கு அவங்கவங்க நியாயம்.. யாரையும் நாம குத்தம் சொல்ல முடியாது. நம்ம புள்ளபூச்சி ஓரளவு வாய் திறந்து பேச ஆரம்பிச்சுட்டா.. அகத்தியன் சிடுசிடுனு காட்டிக்கிட்டாலும் அவனுக்குள்ள நிறைய பாசத்துக்கான ஏக்கம் இருக்குது.. பாப்போம் என்ன நடக்குதுனு🤗

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode