வசம்-5

by ஸ்ரீ
9 comments 542 views
A+A-
Reset

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக் கழுந்தும் அளறு

மு.வ விளக்க உரை: எழுப்பிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப் பேதைத் தன் ஒருபிறவியில் செய்து கொள்ள வல்லவனாவான்.

ஆர்பாட்டமாய் வரவேற்பை முடித்து வீட்டிற்கு வந்த போதே மணி பத்தைத் தொட்டிருக்க மேகலை முன் செல்லாது ஒதுங்கிக் கொள்ள வள்ளியும் பேச்சியம்மாளுமே நாச்சியார் தயாராக உதவி செய்தனர்.

எத்தனை முயன்றும் நாச்சியாருக்கு அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் போக தாயின் கையைப் பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்திருந்தாள்.

“ம்மா.. வேணாம் மா.. நான் போ மாட்டேன்.”

“நாச்சி.. கத்தாதட்டி..”, என்றவருக்கு மற்றவர்களை நினைத்து பதட்டமும் மகளை நினைத்து வருத்தமும் நெஞ்சை வலிக்கச் செய்தது.

“ம்மா.. ப்ளீஸ் மா.. என்னை அனுப்பாத.. எனக்கு.. இதெல்லாம்..”, என்றவள் குழந்தையென ஏங்கி நிற்க சத்தம் கேட்டு மேகலை உள்ளே வந்திருந்தார்.

“ஒண்ணுமில்ல மதினி.. இதோ கிளம்பிட்டா..”, என்ற வள்ளி மகளின் முகத்தை அழுந்தத் துடைத்து விட்டார்.

“எல்லாம் போக போக பழகிப் போயிரும். என்னத்துக்கு இப்படி கத்தி ஊரைக் கூட்டுற நாச்சி?”

“…”

“இதெல்லாம் சொல்லி வைக்குறதில்லையா? வெளியில இருக்குவுக என்ன நினைப்பாக..”, என்றவர் வெளியே செல்ல வள்ளி ஒரு வழியாய் சமாதானப்படுத்தி நாச்சியாரை மாடிக்கு அனுப்பி வைத்தார்.

வாசலில் இருந்து உள்ளே செல்லாமல் நின்றவளுக்கு கையெல்லாம் நடுங்க வியர்த்து வழிந்தது. வேறு வழியில்லை என்றுணர்ந்து மெதுவாய் கதவில் கை வைத்து தள்ளி உள்ளே நுழைந்தாள்.

அகத்தியன் நாற்காலியில் அமர்ந்து கட்டிலில் கால் நீட்டியிருந்தான். நாச்சியார் உள்ளே வந்ததை உணர்ந்தும் ஒரு மாற்றமும் இல்லை அவனது உடல்மொழியில்.

தயக்கத்தோடு அவனருகில் சென்றவள் பாலை அவனிடம் நீட்ட அதை வாங்கி ஒரே மூச்சில் குடித்தவன் கடைசி சிறிது அளவோடு அவளிடம் நீட்ட நாச்சியார் அதைப் பார்த்து விட்டு மேசையில் வைக்கச் சென்றாள்.

“உன்னை குடிக்கணும்னு சொல்லலையா?”, என்றதில் பட்டென குடித்து முடித்து டம்ளரை மேசையில் வைத்திருந்தாள்.

“இப்படி உட்காரு.”, என்றவன் தனது காலுக்கு அருகில் இருந்த இடத்தைக் காட்ட பயத்தோடு நுனியில் அமர்ந்தாள்.

“கீழே என்னவோ சத்தமா கிடந்துதே என்ன விசயம்?”

“”!!”

“உன்னைய தானே கேட்குறேன்..”, என்றவன் லேசாய் குரலை உயர்த்தியதில் கண்ணீர் கன்னம் தொட்டிருக்க பேச முடியாமல் தவித்தாள்.

“என்னத்துக்கு அழுவுற?”, என்றவன் லேசான குளறலோடு சற்று முன்னே வந்து கண்ணீரைத் துடைக்க கையை நீட்ட அவசரமாய் பின் சாய்ந்திருந்தாள் நாச்சியார்.

“எனக்..கு.. பய..மா.. இருக்கு..”

“என்னைய பார்த்தா???”

“!!!”

“இல்ல இதெல்லாம் பார்த்தா?”, என்றவன் கட்டிலில் இருந்த அலங்காரத்தைப் பார்த்து கேட்க வேகமாய் ஆமென தலையசைத்திருந்தாள்.

“அப்போ நான் குடிச்சுருக்குது பயமா இல்லையா?”, என்றவனின் நிதானமில்லா பார்வை அவளை மேலும் மேலும் மனதளவில் உடைத்துக் கொண்டிருந்தது.

“சொல்லு..”

“அது.. பி..பிடிக்கல..”, என்றவளின் பயம் அப்பட்டமாய் பேச்சிலும் முகத்திலும் தெரிய,

“சரி அதுக்கு ஏன் இப்படி பயந்து கிடக்க.. பயத்துலயே செத்து கித்து தொலைஞ்சுற போற.. முதல்ல நல்லா மூச்சை இழுத்து விடு..”

“”…”

“சொல்றேன்ல செய்..”, என்றதில் வேக வேகமாய் மூச்சை இழுத்து விட்டாள்.

“ம்ம் இப்போ சொல்லு உன் பயம் போக என்ன பண்ணணும்?”

“என…க்கு.. த்தூங்கணும்..”

“அவ்ளோ தான போ போய் படு”, என்றதில் அவனைப் பார்த்து நாச்சியார் திரு திருவென முழித்திருந்தாள்.

“எதுக்கு பேய் முழி முழிக்குற. உள்ளே தள்ளி படுத்து தூங்கு..”, என்றதில் வேகமாய் நகர்ந்து அமர்ந்தவள் அவனுக்கு முதுகு காட்டிப் படுத்துக் கொள்ள அகத்தியன் தனது சட்டையைக் கழற்றி விட்டு பொத்தென அவளுக்கு அருகில் இருந்த இடத்தில் விழுந்தான்.

நெஞ்சம் படபடக்க புடவையை இறுக்கிப் பிடித்தப்படி கண்களை இறுக மூடியிருந்தாள் நாச்சியார். போதையும் களைப்பும் அகத்தியனைத் தூக்கத்திற்குள் தள்ள, படுத்த சில நொடிகளில் உறங்கியும் விட்டிருந்தான்.

நடந்த எதையுமே எதிர் பாராதவளாய் நாச்சியார் மெது மெதுவாய் விழி திறந்து லேசாய் தலையைத் திருப்பிப் பார்க்க அகத்தியன் நல்ல உறக்கத்திற்கே சென்றிருந்தான்.

அப்போது தான் நிம்மதியாய் உணர்ந்தவள் மெதுவாய் எழுந்து அமர்ந்தாள். கடந்த ஒரு மணி நேரத்தில் எத்தனை வகையான உணர்வுகள் மனதைப் போட்டு அழுத்தி விட்டன.

அதிலும் முதலிரவு என்ற ஒன்றை நினைத்தாலே குமட்டிக் கொண்டு வந்தது அவளுக்கு. அதிலும் கணவனாகப் பட்டவனின் நடவடிக்கைகளைக் கவனித்த வரை இன்றைய இரவு வாழ்க்கையில் மீண்டும் வரவே கூடாது என்று நினைக்கும் அளவிற்கு இருக்கப் போகிறது என்பது தான் அவளின் எண்ணம்.

ஒரு வேளை அவன் தன்னிலையில் இல்லாதது கூட எதுவும் நடக்காமல் போனதற்கு காரணமாய் இருக்குமோ என்று தோன்றியது.

ஆனால் நிதானத்திலே இல்லாதவனுக்கு எப்படி தன் நிலை புரிய வாய்ப்பிருக்கிறது என்றும் எண்ணாமல் இருக்க முடியவில்லை.

ஒரு வகையில் இந்த நொடிக்கு நாச்சியாருக்குத் தேவையான நிம்மதியையும் தனிமையையும் அவன் கொடுத்திருந்ததில் பெரும் நிம்மதி அவளுக்கு.

சில நாட்களுக்குப் பின்னான சற்றே மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைத்த முதல் இரவாகிப் போனது பெண்ணவளுக்கு. மீண்டும் அதே ஓரத்தில் ஒன்றிக் கொண்டவளாய் படுத்தவளுக்கு உறக்கம் கண்களைத் தழுவ அப்படியே உறங்கியிருந்தாள்.

காலை அகத்தியனுக்கு முதலில் விழிப்பு வந்திருக்க மெதுவாய் எழுந்தவனுக்கு சுற்றம் உரைத்ததும் முதல் வேலையாய் அருகில் தலை திருப்பிப் பார்க்க கால்களைக் குறுக்கிக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள் அவனின் மனைவி.

சில நொடிகள் அவளையே பார்த்திருந்தவன் பின் மெதுவாய் தட்டி எழுப்ப லேசாய் அசைந்தவளுக்கு அவனின் முகம் பார்த்து தூக்கம் மொத்தமாய் கலைந்திருக்க வேகமாய் எழுந்தமர்ந்து தன்னை ஒரு முறை சரிபார்த்துக் கொண்டாள்.

“எப்போ பார்த்தாலும் பதறிட்டே கிடக்கியே என்னத்துக்கு?”

“…”

“நல்லா தூங்குனியா?”, என்றதற்கு எல்லா பக்கமுமாய் தலையை ஆட்டி வைத்தாள் நாச்சியார்.

“இனி இதுதான் உன் வீடு இங்கனதான் உன் வாழ்க்கை. சும்மா தொட்டதுக்கெல்லாம் பயந்து முழிச்சுட்டு இருக்காம போய் பொழப்பை பார்க்கணும்.”

“!!”

“என்ன மண்டையில ஏறுதா.?”

“ம்ம்..”

“இந்த ம்ம், சரி இப்படி மொட்டை மொட்டையா பேசாத. புருசனை வாங்க போங்கனு கூட பேச முடியாதா உனக்கு?”

“அப்படியெல்லாம் இல்லங்க. இனி ஒழுங்கா இருக்கேன்.”

“ம்ம் இந்த தேன் குரலை கேட்கவே எவ்ளோ நல்லாயிருக்கு. அதை விட்டுட்டு ம்ம் ம்ஹும்னு.. சரி போ நீ போய் குளிச்சு கீழே போ நான் அப்பறம் வாரேன்.”, என்றபடி அகத்தியன் எழுந்து கொள்ள வேகமாய் கட்டிலை விட்டு இறங்கியவள் தனக்கான உடைகளை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றிருந்தாள்.

சுடிதார் அணிந்து கொண்டு கீழே வந்தவளை மேகலை அதிருப்தியாய் பார்த்த படி எழுந்து சமையலறைக்குள் செல்ல என்ன செய்வதென புரியாமல் அவர் பின்னே சென்றவள் சமையலறை வாசலில் நின்றாள்.

“உள்ளே வா.. என்னவோ விருந்தாளி கணக்கா அங்கன நிக்குற..”

“..”

“நேத்து தான் கல்யாணம் முடிஞ்சுருக்கு. புடவை கட்டியிருக்கணும்னு தெரியாதா? தேவையில்லாத விசயமெல்லாம் தெரியுது.. இந்தா காபியை புடி..”, என்றதில் முணுக்கென கண்ணீர் எட்டிப் பார்த்தது சிறியவளுக்கு.

“காலங்காத்தால ஏன் கண்ணை கசக்கிட்டு கிடக்க? வந்தன்னைக்கே உன் புருசனையும் என்னையும் பிரிச்சு விட்டுறாத ஆத்தா..”

“..”

“காபியைக் குடிச்சுட்டு அவனுக்கும் கொண்டு போய் கொடு. வரும் போது சீலையை கட்டிட்டு வா.”

“அத்த.. எனக்கு சேலை கட்டத் தெரியாது.. அதான் கட்டல..”

“சரியா போச்சு. நல்லா கட்டி வந்துருக்கான். போய் கொண்டா நான் கட்டி விடுதேன்.”, என்றவருக்குத் தலையசைத்து வேகமாய் மாடிக்குச் சென்றாள்.

அகத்தியன் குளித்துக் கொண்டிருக்க காபியை மேசை மேல் வைத்தவள் ஒரு புடவையை எடுத்துக் கொண்டு கீழே ஓடினாள்.

“சாப்பிடுவியா மாட்டியா நீ? சேலை இடுப்புல நிக்கவாவது சதை வேண்டாமா?”

“..”

“நான் பேசுறதெல்லாம் பெருசா எடுக்காத. என் வாய் கொஞ்சம் அப்படி தான் மனசுல எதுவும் வைச்சுக்கிட மாட்டேன். அப்போ பேசுனதும் அப்படி தான்.

ஊர் வாயை அடைக்க முடியுமா காலங்காத்தால அக்கம் பக்கம் இருக்குறவ என்னத்தையோ பேச  நானும் அந்தக் கடுப்புல உன்ட்ட என்னத்தையோ பேசிட்டேன். மனசில வைச்சுக்கிடாத என்ன?”

“உள்ளதை தானே பேசினீங்க அத்த.. பரவால்ல..”

!!”

“என்னைப் பெத்தவங்களே அம்புட்டு பேச்சு பேசும் போது உங்க மகன் வாழ்க்கையை நினைச்சு உங்களுக்கு வருத்தம் இருக்கும்ல.”

“இங்கே பாரு என்ன பெரிய மனுசியாட்டம் பேசிட்டு கிடக்க?! தப்பு எல்லாரும் பண்றது தான். விடு ஏதோ கிரகம் அது நடக்கணும்னு இருந்துருக்கு.

இனி நீ எப்படி இருக்கியோ அது தான் முக்கியம். புரியுதா?”, என்றதற்கு கண்ணீரைத் துடைத்த படி தலையாட்டியவளைப் பார்த்தவருக்கு மனம் சற்று பாரமாகிப் போனது.

என்னதான் திருமணமே முடிந்தது என்றாலும் அவளின் உருவமும் குரலும் இன்னும் குழந்தை மணம் மாறாததாய் தான் இருந்தது.

மேகலை எப்போதும் இப்படி தான் அந்த நொடி தோன்றுவதை பேசி விட்டு அதன் பின் எதிர் தரப்பின் நிலையை யோசித்து வருந்துவார்.

“சரி பொசுக்கு பொசுக்குனு அழுவாத. ஒரு இரண்டு நாளைக்கு யாராவது வரப் போக இருப்பாங்க. அப்பறம் நாம மூணு பேரு தான்.

அதை விட பாதி நேரம் நாம இரண்டு பேர் தான் வீட்டுல. போ போய் அவன் என்ன ஆனான்னு பாரு.”, என்றவரோடு வெளியே வந்தவள் மாடிக்குச் செல்ல அவள் வைத்துச் சென்ற காபி டம்ளரை வெறித்த படி நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தான் அகத்தியன்.

காபி அப்படியே இருப்பதைக் கவனித்தவளாய் புடவை முந்தியைத் திருகிய படி மெதுவாய் அதைக் கையில் எடுக்கச் சென்றாள்.

“என் கையில கொடுத்துட்டு கூட போக முடியாத அளவு என்ன வேலை வெட்டி முறிச்சீகளாம்?”, என்றவனின் நிதானமான கேள்வி அவளை இன்னுமாய் பதட்டமாக்கியது.

“கேட்டா கேட்டதுக்கு பதில் வரணும்..”

“இல்ல.. அது.. புடவை.. அத்தைகிட்ட கட்டிக்குறதுக்காக போயிட்டேன்.”

“புடவை கட்டத் தெரியாதா?”

“ம்ஹும்..”

“..”

“அது.. தெரியாதுங்க..”

“நாளையிலிருந்து சொல்லு நானே கூட கட்டி விடுவேன். ஆனால் காபி இனி உன் கையால தான் வரணும்.”, என்றவனின் உணர்வுகளற்ற பார்வை அவளது அகன்று விரிந்த கண்களிலேயே இருந்தது.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

9 comments

Aandal Venkatraghavan August 11, 2026 - 7:44 am

காத்திருந்தாய் அன்பேங்குற போல காலைலயே திவ்யமா எபிசோட் படிச்சாச்சு😍 எனக்கு மேகலையைப் பிடிச்சிருக்கு. பிராக்டிகலான கேரக்டரா இருக்காங்க.. இந்த அகா என்ன மாதிரினுதான் அஞ்சு எபிசோடா படிச்சும் புரிய மாட்டேங்கறது. இவன் கொஞ்சம் அன்புக்கு ஏங்கிப் போயிருக்கான் போல.. அதை அவகிட்ட எதிர்ப்பார்க்குறானோ

😍😍

ஸ்ரீ August 11, 2026 - 7:56 am

Ore veetil moonu vitham..😁😄😄

MalarMurugan August 11, 2026 - 8:06 am

மேகலை பேசிட்டு அப்புறம் யோசிக்கிறாங்க 😏😏
நான் சொன்ன மாதிரி இவன் அன்ப காட்ட ஆள் இல்லாம இப்போ இவ கிட்ட அத குடுக்கவும் அவ கிட்ட இருந்து கிடைக்கனும்னு நெனைக்கிறானோ 🤔🤔
அகத்தியன் 🤗🤗🤗
சும்மா சும்மா முழிக்காதமா நாச்சியார் 😏😏😏

😍😍

ஸ்ரீ August 11, 2026 - 8:10 am

Athane mulichute irundha avanum than ena seivan..😂

Kavi Natarajan August 11, 2026 - 9:14 am

💞💞💞💞💞💞💞💞

srichitra August 11, 2026 - 10:16 am

Nice

Mathy August 12, 2026 - 12:01 pm

பரவாயில்லை மேகலா பேசினாலும் தப்புனு உணர்ந்து அவளுக்காக யோசிக்கிறாங்க நாச்சியை நல்லபடியா பார்த்துப்பாங்க…..

அகி 🥰 சும்மா இந்த சவுண்ட்டுக்கெல்லாம் மிரளாத நாச்சி அவனுக்கு டெய்லி உன் கையால ஃகாபி குடிக்கணுமாம் 😂

suganyavel August 12, 2026 - 6:43 pm

Nice👍

gomathyraja August 14, 2026 - 12:06 pm

Hero oru type thaan irukkkar

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode