582
“நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில்
மு.வ விளக்க உரை:
தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல், தக்கவற்றை நாடாமலிருத்தல், அன்பு இல்லாமை, நன்மை ஒன்றையும் விரும்பாமை ஆகியவை பேதையின் தொழில்கள்.”
ஒரு வாரம் கடந்திருந்தும் நாச்சியாரின் வீட்டில் எந்த மாற்றமும் இல்லை. தாயும் தந்தையும் அவளோடு பேசுவது இல்லை. நாச்சியார் அந்த அறையை விட்டு வெளியே வரவே இல்லை.
தனது மளிகைக் கடையைத் திறப்பதும் பெயருக்கு சிறிது நேரம் இருந்து விட்டு வேலை செய்பவரைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு வருவதுமே முருகனின் வாடிக்கையாகிப் போனது.
பெருமளவில் மனம் தளர்ந்திருந்தார் அவர். காரணம், இந்த ஒரு வாரத்தில் இரண்டு மூன்று பேரிடம் மகளின் திருமணத்திற்காக பேசியிருக்க ஒருவர் முகத்தில் அடித்தாற் போன்றே பேசியிருக்க மற்ற இருவரின் விருப்பமின்மை முருகனுக்குத் தெளிவாய் புரிந்தது.
ஏதோ சிறு பெண் தெரியாமல் செய்து விட்டாள், படிப்பைத் தொடரட்டும் பின்னர் பார்க்கலாம் என்ற பரந்த மனப்பான்மை எல்லாம் முருகனுக்கு இல்லை.
தன் சாதியில் தனக்கிருந்த பெயர் போய் விட்டதே. நற்பெயருக்கு கலங்கம் வந்துவிட்டதே அதை சரி செய்ய என்ன வழி என்பது தான் அவரின் மொத்த யோசனையும்.
இத்தனை நாட்கள் ஒட்டி உறவாடிய யாரும் இப்போது எந்த உதவியும் செய்வதாய் இல்லை. அதை விட ஒரு விவாகரத்தானவனுக்கு தன் மகளைக் கொடுக்குமாறு கூறியதில் மொத்தமாய் உடைந்து போனார்.
வெளியூரில் எல்லாம் பெண் கொடுக்கும் எண்ணம் முருகனுக்கு கிடையாது. முதல் மகளுக்கே எத்தனையோ நல்ல சம்மந்தங்கள் வந்திருந்தாலும் வெளியூர் என்பதாலேயே வேண்டாம் என்று மறுத்து உள்ளூர் மாப்பிள்ளைக்கு கட்டிக் கொடுத்திருந்தார்.
இந்த ஒரு வாரமென்பது அவரை மனதளவில் ஒன்றுமில்லாமல் மாற்றியிருக்க வீட்டில் யாரிடமும் எதுவும் கூறாமல் அன்றைய பின் மாலை அகத்தியனைத் தேடி அவனது வீட்டிற்குச் சென்றிருந்தார்.
வாசலில் நின்று குரல் கொடுக்க மேகலை எட்டிப் பார்த்து அவரை உள்ளே அழைத்து அமர வைத்தார்.
ஒரே ஊர் பக்கத்து தெரு ஆனாலும் முருகன் அகத்தியினின் வீட்டிற்குள்ளெல்லாம் வந்ததில்லை. எனவே தயக்கத்தோடு வீட்டைச் சுற்றி பார்வையை சுழற்றிய படி நாற்காலியில் அமர்ந்தார்.
கீழே இரண்டு படுக்கறையும் மாடியும் கொண்ட நடுத்தர குடும்பத்திற்கான பாந்தமான வீடாக இருந்தது. மேகலை மகனிற்கு குரல் கொடுத்ததில் லூங்கியும் பனியனுமாய் வந்து முருகனுக்கு எதிரில் அமர்ந்தான் அகத்தியன்.
“வணக்கம் தம்பி..”
“சொல்லுங்க என்ன முடிவு பண்ணிருக்கீக?”
“அது..”
“எதுவாயிருந்தாலும் பட்டுனு பேசுங்க..”, என்றதில் தண்ணீர் டம்ளரை கொண்டு வந்து வைத்து விட்டு சமையலறை வாசலில் நின்றார் மேகலை.
“உங்களுக்கும் உங்க அம்மைக்கும் நடந்ததெல்லாம் தெரியும்னு நினைக்கேன்.”
“தெரியும். அதுக்கு முன்னாடியே அவனோட உங்க மக பேசுறதை நிறைய தடவை நான் பார்த்துருக்கேன்”, என்றதில் முருகன் தர்ம சங்கடமாய் உணர்ந்தார்.
“உங்க இரண்டு பேருக்கும் இதுல..”, என்றவர் மேகலையைப் பார்க்க அகத்தியனோ,
“எனக்கு இதில் எந்த பிரச்சனையும் இல்ல. இதனால உம்ம மவளுக்கு ஒரு பிரச்சனையும் வராது. வேற?”
இப்படி வெட்டு ஒன்று துண்டு இரண்டு என மகன் பேசுவதில் முருகனின் நிலை உணர்ந்தவராய் மேகலை அவரிடம்,
“அவன் கல்யாணம் அவன் முடிவு தான். நீங்க வேற எதையும் யோசிக்காதீக அண்ணாச்சி..”, என்றதில் தாயை ஒரு பார்வை பார்த்தவன் முருகன் பேசுவதற்காக காத்திருந்தான்.
“எவ்வளவு சீக்கிரம் முடியுமோ கல்யாணத்தை வைச்சுகிடலாம்னு நினைக்கேன். மண்டபம் கிடைக்கலைனாலும் கோவிலில் கல்யாணத்தை முடிச்சு வரவேற்பு மாதிரி ஏற்பாடு பண்ணிடலாம்”
“உங்க விருப்பப்படி பண்ணிக்கோங்க. வரவேற்பு வைச்சு தான் ஆகணும் கட்சி கூட்டமெல்லாம் வரும். அதனால டீசெண்டா ஒரு மண்டபத்தை பாத்து சொல்லுங்க. நான் பேசி எந்த தேதிக்கு வேணுமோ முடிச்சுகிடலாம்.”
“நல்லது தம்பி. அப்பறம் கல்யாணத்தை சுருக்கமா பண்ணாலும் எம்மவளுக்கு தர வேண்டிய எல்லாமே..”
“எதுவும் வேண்டாம்..”
“!!!”
“என்னை கட்டிக்குறவளுக்கு என்ன வேணுமோ அதை நான் வாங்கி கொடுத்துக்குவேன். வேண்டா வெறுப்பா கல்யாணத்தை பண்றவரோட நகை நட்டு எனக்கு வேணாம்.
ஒரு வேளை எதிர்காலத்துல உம்ம மக விருப்பப்பட்டு உங்கட்ட கேட்டா தாராளமா கொடுத்துகிடுங்க. எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல.”
“அது எப்படி சரியா வரும்?”
“எல்லாம் வரும். வரவேற்புக்கு ஊர் முன்னாடி நிக்கும் போது எம் பொண்டாட்டி வெறும் கழுத்தோட நிக்க மாட்டா. வேறேதும் சொல்லணுமா?”
“இல்ல தம்பி. அப்போ நான் தேதியைக் குறிச்சுட்டு சொல்லுதேன்.”
“நல்லது.”, என்றவன் எழுந்து நிற்க முருகன் மனது நிறைத்த குழப்பத்தோடு கிளம்பியிருந்தார்.
வீட்டிற்கு வந்தவரின் யோசனை முகத்தை கவனித்தவராய் வள்ளி தயக்கத்தோடு அவரருகில் அமர மனைவியை ஒரு முறைப் பார்த்தவர் பின் விஷயத்தைக் கூறியிருந்தார்.
“என்னங்க இப்படி பண்ணிட்டீக? அவனுக்கு போய் எப்படி பொண்ணைக் கொடுக்க?”
“அவனை விட நல்லவனா சீமைக்குத் துரை எவனாவது உன் பொண்ணைக் கட்டத் தயாரா இருக்கானானு சொல்லுட்டி. இருந்தா சம்மந்தம் பேசி முடிச்சுப்புடலாம்.”
“ஏங்க அதுக்காக.. அரசியல் சகவாசமெல்லம் நமக்கு ஒத்து வருமாங்க?”
“நடக்குற எல்லாம் நமக்கு ஒத்துவராதாவா நடக்குது. நான் முடிவு பண்ணிட்டேன். இன்னும் நாலு நாளைக்குள்ளே கல்யாணத்தை முடிக்க போறேன். வேற எதையும் யோசிக்குறதா இல்லட்டி.”
“!!”
“போய் அவளை வரச் சொல்லு..”
“ஏங்க..”
“நடை பிணமா இருக்குற நான் புணமா போகணும்னு நினைக்குறியா நீ?!”, என்றதில் அதிர்ந்து நெஞ்சைப் பற்றிக் கொண்டவராய் மகளை இழுத்துக் கொண்டு வந்து கணவரின் முன் நிறுத்தியிருந்தார் வள்ளி.
“உனக்கு கல்யாணம் பேசிருக்கேன். ஒழுக்கமா வந்து தாலியை கழுத்துல வாங்குவியா? இல்ல திரும்பவும் ஓடிப் போயி கழுத்தறுப்பியா?”
“ப்பா..”
“கேட்டதுக்கு பதில் சொல்லு..”
“ப்பா நான் படிக்குறேன் ப்பா..”, என்றதில் இத்தனை நாள் இருந்த பொறுமையெல்லாம் காற்றில் பறக்க அருகில் இருந்த விசிறியை எடுத்து விலாசி விட்டிருந்தார்.
“படிக்க தான்ட்டி அனுப்பினேன். பொத்தி பொத்தி வளர்த்த பிள்ளையை படிக்க வைச்சு உசரத்தில் உட்கார வைச்சு பாக்க தான் ஆசைப்பட்டேன். ஆனால் அவ மொத்தமா சாக்கடையில் போய் விழுந்து எந்திரிச்சு வந்துருக்கா.
மறுபடியும் அவளை நம்ப நான் என்ன கோட்டிக்காரனா? உன் அம்மையும் அப்பனும் உசுரோட இருக்கணும்னு நினைச்சால் நான் சொல்றதை கேட்டுகிட்டு நட. இல்ல..”, என்றவர் ஆத்திரமாய் உள்ளே சென்றிருந்தார்.
நாச்சியாருக்கு தன் வாழ்க்கையை நினைத்து பெரும் பயம் பிடித்துக் கொண்டது. யார் மாப்பிள்ளை அவனுக்கு எல்லாமே தெரியும் என்றால் தன் எதிர்காலம் என்ன?
தந்தை பேசிய பேச்சில் இப்போது உயிரை விடுவதற்கு கூட துணிவில்லாமல் போயிருந்தது. அந்த யாரோ ஒருவரின் மனைவியான பின் ஒரு வேளை வாழ்க்கை நரகமாவது தான் விதி என்றிருந்தால் அப்போது யாருக்கும் பாரமின்றி உயிரை விட்டு விடலாம் என்று தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டாள்.
அதன் பின் கூறியது போலவே அடுத்த ஐந்து தினங்களில் வந்த முகூர்த்ததிலேயே திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தார் முருகன்.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் திருமணமும் அதன் அருகிலேயே இருந்த மண்டபத்தில் அன்று மாலையே வரவேற்பும் என ஏற்பாடு ஆனது.
அகத்தியனிடம் விஷயத்தைக் கூற அவன் வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் அன்றைய தினமே முடித்திருந்தான்.
நாச்சியார், நடப்பதற்கும் தனக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லாதது போல் அவளறையில் முடங்கிக் கிடக்க வள்ளி தனது பெரிய மகளின் உதவியோடு சிறிய மகளுக்கு வேண்டியதை எல்லாம் அழுது கரைந்த வண்ணம் ஏற்பாடு செய்தார்.
நாளை மறுநாள் திருமணம் என்ற நிலையில் அன்றைய மாலை சற்று நெருங்கிய உறவுகள் மட்டும் முருகனின் வீட்டிலில் இருக்க இரவு எட்டு மணியளவில் வாசலில் கேட்ட கூச்சலில் அனைவருமாய் வெளியே சென்றனர்.
நாச்சியாரின் முன்னாள் காதலன் தான் கழுத்து முட்ட குடித்து விட்டு வந்து தகராறு செய்து கொண்டிருந்தான். நாச்சியாரைப் பற்றி கண்டதை பேசுவதும் தூற்றுவதும் என யாருக்கும் அடங்காமல் தெருவில் நின்று கத்திக் கொண்டிருக்க நாச்சியார் வெளியே சென்று அவனை துரத்தும் எண்ணத்தில் வந்தாள்.
வாசல் படியை அவள் தாண்டுவதற்குள் கன்னத்தில் விழுந்த அறையில் சுருண்டு விழுந்திருந்தான் அவன். நாச்சியார் அதிர்ந்து போய் அப்படியே நின்று விட பெண்கள் இருவர் அவள் கரம் பற்றி ஜன்னலின் அருகில் நிறுத்தியிருந்தனர்.
“தண்ணிய போட்டு சலம்பிட்டு கிடக்க செத்த பயலே..”, என்ற படி கீழே விழுந்திருந்தவனின் காலரைப் பற்றித் தூக்கி நிறுத்தினான் அகத்தியன்.
“வாரதுக்கு முன்னாடி யாரு என்னனு தெரிஞ்சு வரணும்லே. இன்னொரு தடவை உன்னை அவப் பக்கம் பாத்தேன்… பார்க்குற இடத்துலேயே குழி தோண்டி புதைச்சுருவேன். புரியுதாலே?”
“அவ.. நான்..”
“இந்தா வாயை மூடு. எந்தப் பேச்சும் இருக்க கூடாது. பேசாம சோலியை பாத்துட்டு இருந்தா உனக்கு நல்லது. இல்ல வாழ்க்கை முழுசும் கோர்ட்டு கேஸுனு அலைய போறியா நீயி?”
“..”
“அவ இந்த அகத்தியனுக்கு நிச்சயம் பண்ண பொண்ணு. இன்னொருக்கா உன் பார்வை இல்ல உன் நினைப்பு கூட அவ மேல விழக் கூடாது. போலே கிளம்பு முதல்ல..”, என்றவன் மேலும் நாலு அடி வைத்து அங்கிருந்து அவனைக் கிளப்பியிருந்தான்.
அங்கிருக்கும் யாருக்கும் குரலை உயர்த்தக் கூட தோன்றாமல் போயிருந்தது. அந்தளவிற்கு தனி ஒருவனாய் சூழ்நிலையை மொத்தமாய் தன் கையில் எடுத்திருந்தான் அகத்தியன்.
மீசையை முறுக்கிய படி பக்கவாட்டில் திரும்பிவனின் பார்வை அதிர்ச்சியாய் தன்னை ஜன்னல் வழி பார்த்திருந்தவளின் மீது ஒரு நொடி பதிந்து மீண்டது.
வந்தவர்கள் தங்களுக்குள் சலசலத்துக் கொண்டிருக்க முருகன் பிறரறியாமல் மனைவியையும் மகளையும் பார்த்த வண்ணம்,
“இப்போ தெரியுதா இந்த கல்யாணத்துக்கு என்ன அவசியம்னு. நாண்டுகிட்டு சாகாம இருக்க ஒரே காரணம் அந்த எம் எல் ஏ தான். பாத்து நடந்துகோங்க. முக்கியமா நீ..”, என்றவர் மகளிடம்,
“இங்கே மாதிரி அங்கே போய் எதாவது பண்ணிட்டு கிடந்தா என்னை மாதிரி இருக்க மாட்டான். வெட்டிப் புதைச்சுருவான் நியாபகத்தில் இருக்கட்டும்.”, என்றதில் நாச்சியாருக்கு அவனது முகம் மனக் கண்ணில் தோன்றி மறைய உடல் அதிர்ந்து அடங்கியது.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!
7 comments
Nice
அம்மாடியோவ்…. எம்.எல்.ஏ நல்லவரா இல்ல கெட்டவரானு இருக்குதே அக்கா.. என்ன போடு போடுறான்.. இவன் நாச்சியை வன் சைடா எதும் விரும்பிருப்பானோ??? ரொம்ப எக்ஸைடிங்கா இருக்கு க்கா 😍
👌👌👌👌👌👌👌
Super💕
RJ
சோலி முடிஞ்சு … வாழ்க MLA.
அகத்தியன் செம 😍😍😍 யாருக்கும் அடங்காதவனா இருந்தாலும் தப்பானவன் இல்லை …..
அம்மாவோட அன்பை மட்டும் புரிஞ்சுக்கிட்டா நல்லா இருக்கும்…..
அந்த முன்னாள் காதலனுக்கு நல்லா வேணும் 😡😡😡🤬🤬🤬
அகத்தியன் 😘😘😍😍
இவனுக்கு அவளை முன்னாடியே ரொம்ப புடிக்குமோ 🤔🤔🤔
அவன் அன்ப வெளிப்படுத்த யாரும் அவனோட நெருக்கமா இல்லையோனு தோணுது 😏