வசம்-2

by ஸ்ரீ
11 comments 597 views
A+A-
Reset

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை

கையல்ல தன்கண் செயல்

மு.வ விளக்க உரை: ஒருவனுக்கு பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தை செலுத்துதல் ஆகும்.

முருகன் வீட்டுக் கூடத்தில் சில பல பெரியவர்கள் அமர்ந்திருக்க அடி வாங்கி உடலெல்லாம் வீங்கிய நிலையில் அறைக்குள் எங்கேயோ வெறித்த படி அமர்ந்திருந்தாள் நாச்சியார்.

“ஏன்ட்டி புத்தி இப்படி போச்சு உனக்கு? இருக்குற இடமே தெரியாதுனு சொல்லுவாக உன்னை.. இதுக்கு என்னைய மாதிரி வாயாடியை கூட நம்பிரலாம் போல ஊமை ஊரைக் கெடுக்கும்னு சொல்றது சரியாதேன் இருக்கு.”

“இவளைப் பார்க்க பார்க்க ஆத்திரமா வருதுட்டி. உன் அப்பாவைப் பாரு எல்லார் முன்னாடியும் தலை குனிஞ்சு உட்காந்துருக்காக. இப்படி அவங்களை பாத்ததே இல்லையே நானு.”, என்ற வள்ளி கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அமர்ந்தார்.

“நடந்ததை மாத்த முடியாது முருகா. அடுத்து என்னனு யோசி.”

“…”

“என்னத்தை யோசிக்க எவனோடேயோ போய் இரண்டு நாள் இருந்துட்டு வந்தவளை எவன் கட்டுவான்?”, என்று இன்னொருவர் கூறியதில் முருகன் கண்களை மூடித் திறந்தார்.

“விசயம் பெரிய அளவுல வெளியே தெரியாதப்பா.. காதும் காதும் வைச்சாமாறி கல்யாணத்தை முடிச்சுப்புடு..”

“என்ன மாமா இவ்வளவு சொல்றவரு உங்க பேரனுக்கு கட்டி வைக்குறது?”, என்றதில் அந்த நபர் பேசியவனை முறைத்தார்.

“இங்கே பாரு முருகா இது தான் நடைமுறை எங்களை எல்லாம் கூப்புட்டு வைச்சு பேசி ஒண்ணும் ஆவப் போறதில்ல. நாலு இடத்துல சொல்லி வை. எதாவது முடியுற மாறி வந்தா நாங்க எல்லாம் முன்ன நிக்கோம். என்னய்யா?”

“என்னைய கேட்டா கொஞ்ச நாளைக்கு ஆறப் போடு. அப்பறம் சூதானமா பார்த்து கல்யாணத்த முடிக்குறது தான் நல்லது.”

“அட யாருய்யா இவன் மறுபடியும் எப்போ என்ன நடக்கும்னு வயித்துல நெருப்பை கட்டிகிட்டு எத்தனை நாளுக்கு இருக்க?”

“உள்ளே வரலாமா?”, என்ற கணீர் குரலில் இவர்களின் பேச்சு தடைப்பட்டு அனைவருமாய் வாசலைப் பார்க்க வெள்ளைக் கதர் சட்டையும் கருப்பு பேண்டுமாய் நிலைப்படியில் கை வைத்த வண்ணம் ஒற்றைக் காலை மேல் படியில் வைத்த படி அசிரத்தையாய் நின்றிருந்தான் அகத்தியன். அந்த தொகுதியின் எம்எல்ஏ.

அது அவனது பதவியாக இருக்கலாம் ஆனால் அந்த பகுதி மக்களைப் பொறுத்தவரை கட்டப் பஞ்சாயத்துகாரன் குடிகாரன் கோபக்காரன் யாரையும் மதிக்காதவன் என்பதெல்லாம் தான் அவனின் அடையாளம்.

அனைவரும் அவனையே பார்த்திருக்க முருகன் மரியாதை நிமித்தம் எழுந்து அவனை வரவேற்றார்.

“வா அகத்தியா.. என்ன இந்தப் பக்கம்?”

“கல்யாண விசயம் பேசுறீக. கல்யாண வயசில் இருக்குற நான் இல்லாம?”, என்றதில் வள்ளியும் பேச்சியம்மாளும் உள்ளிருந்து எட்டிப் பார்த்தனர்.

“போச்சு இவன் என்னத்துக்கு வந்துருக்கான்னு தெரியலையே!”

“..”

“ம்மா ஒரு வேளை இவளை கல்யாணம் பண்ண கேட்டு..”

“ஆத்தாடி.. இவனா? ஐயோ ஐயோ இதையெல்லாம் பார்க்கவா நான் இன்னும் உசுரோட இருக்கேன்.”

“ம்மா கத்தாத கேட்டுற போகுது.”

“இவன் ஊருக்குள்ளே ஒருத்தனையும் மதிக்க மாட்டான்ட்டி. அவன் அம்மையே தலை விதியேனு தான் அவனோட இருக்கா. இந்த அரசியல் சகவாசமெல்லாம் நமக்கு என்னத்துக்குட்டி..”

“நாம புலம்பி என்ன பண்ண? நடக்குறதை பாப்போம் அமைதியா இரு.”

“இங்கே பாரு அகத்தியா ஏற்கனவே முருகன் நொந்து போய் இருக்கான். நீ வந்த விசயத்தை சொல்லிட்டு கிளம்பு. இதையும் உன் அரசியலா ஆக்காத சொல்லிப்புட்டேன்.”

“பெரியப்பா நான் அரசியல் பேச வந்திருந்தா கூட்டமா இல்ல வந்துருக்கணும். நான் இவரு பொண்ணை கட்டிக்க கேட்டு வந்துருக்கேன்.”, என்றதில் முருகன் அதிர்ந்து போய் பார்க்க அவனை எதிர்த்து அங்கு யாராலும் எதுவும் பேசாத முடியாத நிலையில் சில நொடிகள் அமைதியில் கரைந்தன.

“என்ன இப்படி கம்முனு இருந்தா என்ன அர்த்தம்?”

“அகத்தியா அது சின்ன பிள்ள.. ஏதோ அவசரப்பட்டு என்னத்தையோ பண்ணிப்புடுச்சு. அதுக்காக இதுதான் சாக்குனு நீ உள்ளே வாரது நல்லாயில்ல பாத்துக்க..”

“சின்ன பிள்ளையா? எல்லாம் கல்யாணம் கட்டி பிள்ளை பெக்குற பிள்ளை தான். உங்க எல்லாரையும் விட பொண்டாட்டியை நல்லா வைச்சு காப்பாத்துற வக்கு எனக்கு நிறையவே இருக்கு.

பொண்ணை பெத்தவரு சொல்லட்டும். நீங்க எல்லாம் கொஞ்சம்..”, என்றவன் வாயை மூடுமாறு செய்கை செய்ய அங்கிருந்த பெரியவர் தலையில் அடித்துக் கொண்டார்.

“தம்பி மன்னிச்சுகிடுங்க. இது நா மட்டும் எடுக்க கூடிய முடிவு கிடையாது. என் வீட்டம்மாட்ட பேசிட்டு பிறவு சொல்லுதேன்.”

“ம்ம் சரி எந்த பதிலானாலும் சொல்லி அனுப்பனும். திரும்ப திரும்ப நான் வந்து கேட்டுக் கிடக்க முடியாது. வாரேன்.”, என்றவன் யாரிடமும் ஒன்றும் கூறாமல் கிளம்பியிருந்தான்.

அனைவரும் கிளம்பிய பின்னும் முருகன் வரவேற்பறையில் அப்படியே அமர்ந்திருந்தார். மகள் வந்ததில் இருந்து ஒரு வார்த்தை அவளிடம் பேசியிருக்கவில்லை.

“ஏங்க அந்த பய..”

“எதையாவது பேசாத வள்ளி. யாரையும் பத்தி பேசுற தகுதி நமக்கு இப்போ இல்ல புரியுதா?”, என்றதில் நாச்சியார் ஓடி வந்து தந்தையின் காலை இறுகப் பற்றிக் கொண்டாள்.

“ப்பா.. என்னைய கொன்னு கூட போடுங்க. பேசாம இருக்காதீங்க பா..”

“..”

“நான் பண்ணது பெரிய தப்பு தான் ஆனால் அப்போ எனக்கு அது தெரியவே செய்யாது பா. என்னை மன்னிச்சுருங்க பா..”

“இப்போ கிடந்து அழுது கரைஞ்சு என்ன ப்ரயோஜனம்ட்டி. உன் மேல வைச்ச நம்பிக்கைக்கு ஊர் முன்னாடி தலை குனிய வைச்சுட்டியே..”, என்ற தாய் ஒரு புறம் அழ ஆரம்பிக்க பேச்சியம்மாள் தனது கணவனோடு தங்கையை முறைத்த படி நின்றிருந்தாள்.

அகத்தியன் மாலை வீட்டிற்கு வந்த போது அவனுக்காக வாசலிலேயே காத்திருந்தார் அவனது தாய் மேகலை. அவரைக் கடந்து உள்ளே சென்றவனின் பின்னே சென்றவராய்,

“ஏலே உனக்காக தான உட்காந்துருக்கேன். என்னனு கூட கேட்க முடியாதோ?”

“என்ன வேணும் உனக்கு?”

“காலையில அந்த அண்ணாச்சி கடை அண்ணாச்சி வீட்டுக்கு போனியாம்?”

“ஆமா அதுக்கு?”

“எதுக்குலே இப்படி பண்ணிட்டு கிடக்க? என்ட்ட சொன்னா நான் பொண்ணு பாக்க மாட்டேனோ உனக்கு?”

“எனக்குனு யாரும் எதுவும் பண்ண வேண்டாம்னு தானே நானே போய் பேசிருக்கேன்.”

“அகத்தியா!”

“இப்போ என்னத்துக்கு சும்மா சீனை போட்டு கிடக்க.. போ பேசாம..”

“அம்மானு கொஞ்சமும் பாசம் இல்லையாலே உனக்கு?”

“ஏன் இருக்கணும்? உனக்கு இருந்துச்சா? வேலை வேலைனு என்னைய சின்ன பிள்ளையில ஆச்சிகிட்டேயே விட்டுட்டு போனப்போ உனக்கு இருந்துச்சா?”

“!!!”

“வேலைக்கு போய் சம்பாதிச்சு அம்பானி ஆயிட்டீகளாக்கும்? சரி அங்கேயே விட்ட அப்படியே விட்டுத் தொலைச்சுருக்க வேண்டியது தான? உன் புருசன் போய் சேர்ந்துட்டார்னதும் என்னைய இங்கன ஏன் கூட்டிகிட்டு வந்த?”

“அகத்தியா..”

“இங்கே பாரு உன்னைய நான் தப்பே சொல்லல. உன் நிலைமை என்னவோ! ஆனால் தேவைப்பட்ட நேரம் எனக்கு கிடைக்காத பாசத்தை இப்போ என்கிட்ட எதிர்பார்த்தா தப்பு யார் மேல?”

“..”

“என்னை பேச வைக்காத சொல்லிட்டேன். என் தேவையை நான் பார்த்துக்கிடுவேன். ஊர்க்காரன் பேச்சு பொறுக்க முடியாதுனால் வீட்டை விட்டு வெளியேவே போகாத. நொய் நொய்னு உயிரை எடுத்துகிட்டு..”, என்றவன் அவனது அறைக்குள் நுழைந்து கதவைச் சாற்றிக் கொண்டான்.

அகத்தியன், மேகலை சங்கரன் தம்பதியரின் ஒரே மகன். நடுத்தர குடும்பம் அவர்களுடையது. மேகலையின் மாமியாரின் கொடுமை அவரை எந்த நிலையிலும் வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளியிருந்தது.

பெரிய சம்பளமென்று ஒன்றுமில்லை தான் ஆனாலும் மாமியாரின் பேச்சு பொறுக்காமல் சென்று வந்தவரால் குழந்தையைக் கவனித்துக் கொள்ள முடியாமல் போக மூன்று வயது வரை தாய் வீட்டில் மகனை விட்டிருந்தார்.

அந்த வயது வரை அகத்தியனுக்கு அவனது பாட்டி தான் தாய் என்று நினைத்திருந்தான். அவ்வப்போது வந்து பார்த்து செல்லும் மேகலை அவனைப் பொறுத்தவரை விருந்தாளி தான்.

பள்ளியில் சேர்க்கும் வயதில் அகத்தியனை மேகலை தன்னோடு தூத்துக்குடிக்கு அழைத்து வர பாட்டியைத் தேடி அழுது கரைந்ததில் அவனைக் காய்ச்சலில் தள்ளியிருந்தது.

பயந்து போன மேகலையின் தாய் பிள்ளையைத் தன்னோடே அழைத்துச் சென்று விட்டிருந்தார். அதன் பின்னும் அகத்தியன் தாய் தந்தை இடத்தில் வருவதற்கு பிரியப் படவேயில்லை.

எனினும் அவனது ஏழாவது வயதில் தந்தை இறந்து விட மேகலைக்குத் துணை அவள் மகன் தான் என்று முடிவு செய்தவர்களாய் அவனை மேகலையிடம் ஒப்படைத்திருந்தனர்.

ஆனால் ஏனோ அகத்தியனுக்கு அவனது பாட்டியோடு இருந்த ஒட்டுதல் தாயிடம் வரவேயில்லை. சாதரணம் போல் இருந்தவனுக்குள் மொத்த ஏக்கமும் தனது பாட்டியின் அன்பைத் தேடி தான் இருந்தது.

பதின் வயதைக் கடந்த பிறகு அந்த ஏக்கமே அவனை வெகுவாய் மாற்றி விட்டிருந்தது. வயதிற்கு மீறிய நட்புகள் அரசியல் ஆட்கள் என அன்பை நாடாத அதிகாரத்தின் பக்கம் ஆர்வம் சென்றது.

தனக்கு கிடைக்காத அன்பை தானும் யாருக்கும் கொடுக்கத் தேவையில்லை என்று எண்ணியவனின் நடவடிக்கைகள் பேச்சு வார்த்தைகள் எல்லாமே கரடு முரடானதாகவே இருந்தன.

தன்னை மதிப்பாய் நடத்துபவர்களுக்கு அவன் போன்ற நல்லவன் இல்லை. அதே நேரம் இந்தச் சாதிப் பெருமையும் பணப் பெருமையும் பேசித் திரிபவர்களுக்கு எல்லாம் அவன் முரடன் மூர்க்கன்.

அவ்வப்போது குடிப்பவன் தான் ஆனால் ஊரைப் பொறுத்த வரை அவன் ஒரு தண்ணீர் வண்டி கெட்ட சகவாசம் உண்டு அது இதென வாய்க்கு வந்ததையெல்லாம் கதை கட்டி விடுவர்.

இருபத்தி ஒன்பது வயதிலேயே எம் எல் ஏ என்பது ஒன்றும் சாதாரணம் இல்லையே! வேலைக்கு அஞ்சாதவன் தெரியாத வேலைகளே இல்லை எனுமளவு அத்தனைக்கும் இறங்கி வேலை செய்பவன்.

இப்படிப்பட்டவன் தான் அந்த வாயில்லா பூச்சியை பெண் கேட்டு வந்திருக்கிறான். எங்கிருந்து இவனுக்கு சாதகமாய் யாரேனும் பேசுவார்கள்! ஊர் மொத்தமும் சண்டை இழுத்து வைப்பதையே வேலையாய் காட்டித் திரிபவனைப் பற்றி நல்லதாய் கூற ஆட்களே இல்லை என்பது தான் வருத்தம்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

11 comments

Rajes

Rajigul Shan August 8, 2026 - 7:52 am

நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவனா . ஹீரோ

😍😍

ஸ்ரீ August 8, 2026 - 7:53 am

Athe athe..😍

SME August 8, 2026 - 7:52 am

ஹீரோ என்ட்ரி…
அதகளம் 👍👍👍

😍😍

ஸ்ரீ August 8, 2026 - 7:53 am

Aww thank you ka..😍

Aandal Venkatraghavan August 8, 2026 - 10:25 am

இவன் யாருக்கா.. நல்லவனா கெட்டவனானு சந்தேகமாவே இருக்குதே.. அகத்தியன் தான் ஹீரோனு புரியுது. அந்த புள்ளபுச்சி இவன் கிட்ட எப்படி பொழபைப்பானு தெரியலையே.. இன்டிரஸ்டிங் அக்கா😍

srichitra August 8, 2026 - 10:37 am

Nice

suganyavel August 8, 2026 - 11:02 am

Super💕

MalarMurugan August 8, 2026 - 11:47 am

அவளை நல்லா பத்துப்பானா 🤔🤔🤔
நீ நல்லவனா கெட்டவனா அகத்தியா 😏😏😏
ஊர் வாய மூட முடியுமா 😏😏😏😏
அவனோட anb🤔மொத்தமும் அவ ஒருத்திக்கி தானா

Kavi Natarajan August 9, 2026 - 4:42 pm

👌👌👌👌👌👌

Mathy August 9, 2026 - 10:33 pm

அகத்தியன் 🤩🤩 அடாவடியா பொண்ணு கேட்குறான்….
நாச்சியார் மேல லவ் இருந்திருக்குமோ 🤔
நைஸ் 💖💖💖

gomathyraja August 13, 2026 - 9:26 pm

Agathiyan thaan hero va

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode