ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே – ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு

விளக்கம்
ஆற்றங்கரையில் உள்ள மரம், அரச வாழ்க்கை போகம் ஆகியவை நிலையில்லாமல் அழிந்து விடும். உழுதுண்டு வாழும் வாழ்வை விட மேலான வாழ்க்கை வேறு ஒன்று இங்கு இல்லை, மற்ற வேலை அனைத்தும் உழவை விட குறைவானவை தான்.

மறுநாள் மதியத்திற்கு மேல் இருவருமாய் சென்னைக்கு கிளம்பியிருந்தனர்.அன்புச் செல்வன் காரை ஓட்ட வழக்கம்போல் கதையளந்து கொண்டிருந்தாள் காயத்ரி.

பேசுவதற்கு விஷயங்கள் என்ன இருந்தது எப்படி தொடர்ந்தது என்று கேட்டால் இருவரும் முழித்து நிற்பது நிச்சயம்.

பாதி வழிக்கு மேல் காயத்ரி வண்டியை ஓட்டிக் கொண்டிருக்க அவளைச் சீண்டியபடியே அன்பு அமர்ந்திருந்தான்.

இரவில் ஹோட்டலை அடைந்தவர்கள் உணவை முடித்துவிட்டு படுத்துக் கொள்ள மறுநாள் மதியம் அனைவருக்குமாய் சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

சென்னை கிளம்புவதாய் முடிவு செய்தவுடனேயே காயத்ரி அத்தனை பேரையும் தொடர்பு கொண்டு அழைத்துவிட்டிருந்தாள்.

ஹெட் கான்ஸ்டபிள் மல்லிகா அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொள்வதாய் கூறியிருந்தாள்.

காலை எழுந்து உணவை முடித்து அழகிய மஞ்சள் நிற டிசைனர் புடவையை உடுத்திக் கொண்டவள் மிதமான ஒப்பனையில் அம்சமாய் தயாராகியிருந்தாள்.

அன்பு வெள்ளை கஷுவல் சட்டையும் நீலநிற ஜீன்ஸுமாய் கண்ணாடியில் தலை வாரிக் கொண்டிருக்க அவனைப் பார்த்த வண்ணம் சுவரில் சாய்ந்து நின்றிருந்தாள் காயத்ரி.

“என்ன மேடம் ஜி…”

“அழகா இருக்க டா புருஷா..”

“அட பாரு ஹனிமூன் வந்தோம்ங்கிறதையே நான் மறந்துட்டேன்.நீ தான் கரெக்ட் ப்ளோவில் இருக்க கண்மணி”,என்றவன் குறும்பாய் சிரித்தான்.

“அய்யே ச்ச..தெரியாம சொல்லிட்டேன்..ஆல்ரெடி லேட் நான் கிளம்புறேன்..”,என்ற நகரப் போனவளை இழுத்து நிறுத்தி இம்சை பண்ணியே நகர்ந்தான்.

“என் போனை பார்த்தியா காயூ ரொம்ப நேரமா தேடுறேன்.”

“இங்க தான் இருக்கும் இரு கால் பண்ணி பார்க்குறேன்..”,என்றவள் அன்புச்செல்வனின் கைப்பேசிக்கு அழைக்க பாடல் சத்தம் தலையணைக்கு அடியில் இருந்து வந்தது.

நானே தொலைந்த கதை நானறியேன் கண்மணியே

காதல் நுழைந்த வழி கண்டறிவாய் காதலியே

விண்ணில் மழை துளிகள் மின்னலாய் நின்றுவிட

மண்ணில் எனது நிழல் உன்னைப்போல மாறி விட

விரலோரம் கவிதை ஊறியதே

விழியோரம் காதல் கசிகிறதே

“ஹா தேங்க்ஸ் டி போலாமா..”,என்றவனைக் கைப்பற்றி நிறுத்தியவளை என்னவென்பதாய் அன்பு ஏறிட அழுத்தமாய் கன்னத்தைப் பற்றி இதழில் அழுந்த இதழ் பதித்தாள்.

“ஓய் என்னாச்சு?”

“உன் ரிங்டேன்காக”,என்றவள் சிரித்து மீண்டும் கன்னத்தில் இதழ் பதிக்க வாகாய் இரு கன்னங்களையும் புன்னகையோடு தாட்டி நின்றிருந்தான் அன்புச்செல்வன்.

பத்தரை மணியளவில் கிளம்பியவர்கள் மல்லிகா கூறியிருந்த ஹோட்டலை அடைய அவர்களுக்கு முன் வந்து காத்திருந்தாள் மல்லிகா.

“வாங்க மாமா..எப்படியிருக்கீங்க இரண்டு பேரும்..”

“எவ்வளவு கொழுப்பு..என்னை கண்ணுக்கு தெரியலையா உனக்கு?”

“அதான் மாமா கவனிப்புல செமயா இருக்கீங்களே கா நீங்க?”,என்றவள் கண்ணடிக்க காயத்ரிக்கோ முகம் சிவந்து போனது.

“ஹா ஹா நான் நல்லாயிருக்கேன் மா…நீங்க எப்படியிருக்கீங்க?”

“இன்னும் என்ன நீங்க வாங்கனு..மல்லிகானே கூப்பிடுங்க மாமா..”

“நீ சொன்னால் சரி தான்..”,என்றவனைப் பார்த்து புன்னகைத்தவளாய் காயத்ரியை கைப்பிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள்.

சிறியதான பார்ட்டி ஹால் போன்ற அமைப்பில் பஃபே முறையில் உணவு பரிமாற ஒரு ஓரம் மேசை போடப்பட்டிருக்க 50 பேர் அமரும் வகையில் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.

அறையின் நடுப்புறத்தில் “Congratulations Mr and Mrs Anbuselvan”,என்று ட்கோரேஷன் செய்யப்பட்டிருந்தது.

நேரமாக ஆக ஒவ்வொருவராய் வரத் தொடங்கியிருந்தனர்.இருபதிலிருந்து முப்பது பேரை அழைத்திருந்தாள் காயத்ரி.வந்தவர்கள் அனைவரும் வாழ்த்தி பரிசுகளைக் கொடுத்து பேசிக் கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்திலேயே மல்லிகா இருவரையுமாய் நடுவில் நிறுத்தி ஒரு சின்ன விளையாட்டு இருப்பதாய் கூற காயத்ரியோ அவளைப் பற்றி அறிந்தவளாததால் முடிவே முடியாது என்று கூறிக் கொண்டிருந்தாள்.

அத்தனை பேரின் ஆர்பரிப்பும் அவளை வாயடைக்க வைக்க போதுமாய் இருக்க அன்புவுமே சரியென்று சம்மதித்திருந்தான்.

கையில் ஒரு துணியோடு வந்த மல்லிகா காயத்ரியின் கண்களைக் கட்டிவிட்டு எதிரில் நான்கு காவலர்களோடு சேர்த்து நடுவில் அன்புச் செல்வனையும் நிற்க வைத்தாள்.அவர்களின் வாட்ச் ப்ரேசிலேட் என அனைத்தையும் கழட்டும் படி கூறிவிட்டு காயத்ரியிடம்,

“அக்கா உங்க எதிரில் இருக்குறவங்களில் கையைத் தொட்டு பார்த்து மாமாவை கரெக்டா கண்டுபிடிங்க பார்க்கலாம்.”

“மல்லிகா ஆனாலும் இது அநியாயம் கல்யாணம் ஆகி மூணு நாள் தான் ஆகுது..இதெல்லாம் கஷ்டம் இல்லையா?”,என்று சீனியர் ஆபீசர் ஒருவர் சிரிக்க மற்றவர்களும் ஆமோதிப்பாய் தலையசைத்தனர்.

“சார் நீங்க என்னனு நினைச்சுட்டீங்க எங்க மேடமை..”,என்றவள் அன்புச் செல்வனைப் பார்த்து கண்சிமிட்டிச் சிரித்தாள்.

அன்புவிற்குமே உள்ளுக்குள் சற்று பதட்டமாய் தான் இருந்தது.மாற்றி சொல்வது பிரச்சனை இல்லை ஆனால் காயத்ரி மனம் வருந்திவிடக் கூடாதே என்று நினைத்தபடி பேருக்கு சிரித்துக் கொண்டிருந்தான்.

காயத்ரி முதல் நபரின் கை மணிக்கட்டைப் பிடித்தவள் சில நொடிகளுக்குப் பின் இல்லை என்பதாய் தலையசைக்க அங்கிருந்தவர்கள் உற்சாகமாய் ஆர்பரித்தனர்.

வரிசையில் நான்காவதாய் நின்றிருந்த அன்புவிற்கோ பதட்டமும் உற்சாகமும் போட்டிப் போட்டுக் கொண்டிருந்தது.அடுத்த இருவரையும் சோதித்தவள் தற்போது கணவனிடத்தில் வந்து நின்றாள்.

மணிக்கட்டிலிருந்து உள்ளங்கை வரைத் தடவிப் பார்த்தவள் அவனைக் கடந்து அடுத்த நபரிடம் செல்ல அங்கு எப்போதும் போல் உற்சாக குரல்கள் கேட்டுக் கொண்டேதான் இருந்தன.

கடைசி நபரை பார்த்துவிட்டு மீண்டுமாய் அன்புவின் அருகில் வந்தவள் புன்னகையோடு அவனை லேசாய் முன்னிழுத்து அவனது கரம் பற்றி தோள் சாய்ந்து கொண்டாள்.

அவ்வளவுதான் மொத்த அரங்கமும் ஆர்பாட்டத்தில் மூழ்கிவிட்டது.எல்லாருக்கும் நம்பவே முடியாத நிலை தான்.எவ்வளவு நம்பிக்கை இருந்திருந்தால் அத்தனை உரிமையாய் கைப்பிடித்து சாய்ந்து கொள்வாள் என்று நினைத்து அதிசயித்தனர்.

அன்புச்செல்வனோ காதல் மொத்தத்தையும் கண்களில் தேக்கி அவளைத் தான் பார்த்திருந்தான்.எப்போதும் அவளது காதலுக்கு ஈடு இணையே இருக்கப் போவதில்லை என்றே தோன்றியது.

“என்ன மாமா..பார்த்தீங்காளா எங்க அக்காவை..”,என்ற மல்லிகாவைப் பார்த்து புன்னகைத்தவனாய் காயத்ரியை தன் கைவளைவிற்குள் வைத்துக் கொண்டான்.

அனைவருமாய் உணவருந்தத் தயாராக காயத்ரி சிலரோடு நின்று பேசிக் கொண்டிருக்க அன்பு அங்கிருந்த ஒரு சேரில் அமர்ந்திருந்த மல்லிகாவின் அருகில் வந்து அமர்ந்தான்.

“என்னைப் பத்தி உனக்கு ஏற்கனவே தெரியுமா மா?”

“ம்ம் அக்கா சொல்லிருக்காங்க..இப்படி ஒரு லவ்வை நான் பார்த்ததேயில்லை.சில நேரம் நானே திட்டிருக்கேன்.திரும்ப போய் பேசவும் மாட்றீங்க..அப்பறம் ஏன் அவரையே நினைச்சுட்டு இருக்கீங்கனு..”

“…”

“என்னவோ உங்க இடத்தில் இன்னொருத்தரை வைச்சு பார்க்க முடியலனு சொல்லுவாங்க..திடீர்னு உங்களுக்கு கல்யாணம் ஆனால் என்ன பண்ணுவீங்கனு கேட்பேன்..”

“அதை ஆகும் போது பார்த்துக்கலாம்னு சொல்லிடுவாங்க..ஆனால் அவங்க உங்களைத் தேடி வந்தது..”

“என்ன மா எதுவாக இருந்தாலும் சொல்லு?!”

“ஒரு பெரிய பிஸினஸ் மேன் பையன் ஒருத்தன் ஒரு சின்ன பொண்ணை…”

“??!!”

“அந்த கேஸ் அக்காகிட்ட தான் வந்தது.ஆதாரம் எல்லாம் சரியா இருந்தாலும் பணத்தை வைச்சு கேஸை ஒண்ணுமில்லாம ஆக்க முடிவு பண்ணிட்டாங்க.அது தெரிஞ்சு அக்கா அவனை கோர்ட்டுக்கு கூட்டிட்டு போற வழியில் என்கவுண்டர் பண்ணிட்டாங்க..”

“!!!!!”

“சில உயர் அதிகாரிகள் அக்காவுக்கு சப்போர்ட் பண்ணதால பிரச்சனை இல்லாம அவங்களுக்கு மூணு மாச சஸ்பென்ஷன் மட்டும் கிடைக்குற மாதிரி பண்ணிணாங்க..ஆனால் அந்த பையனோட அப்பா,அக்கா மேல கொலைவெறியில் இருந்தார்.

ஒரு நாள் அக்கா பைக்ல போகும்போது ஆளை வைச்சு அடிச்சு தூக்கிட்டான்.உயிர் பொழைச்சதே பெரிய விஷயம்னு தான் சொல்லணும்.கிட்டத்தட்ட மறுபிறப்பு மாதிரி.”

“?!!!!”

“அதிலிருந்து குணமான பின்னாடி தான் கோயம்புத்தூர்க்கு டிரான்ஸ்வர் வேணும்னு கேட்டு வாங்கினாங்க..அப்போவே உங்களுக்காக தான் இதைப் பண்ணிணாங்கங்கிறது என் யூகம் மாமா..”

“!!!”

“அக்கா உங்க மேல உயிரையே வச்சுருக்காங்க..நீண்ட ஆயுளோட இரண்டு பேரும் ரொம்ப வருசம் நல்லா வாழணும் மாமா..”,என்றவளை யாரோ அழைக்கும் சத்ததில் அங்கிருந்து சென்றிருந்தாள்.

அனைத்தையும் கேட்ட அன்புச் செல்வனோ சுற்றம் மறந்து அமர்ந்திருந்தான்.அவனுள் இந்த கேள்வி எப்போதுமே உண்டு.இத்தனை வருடங்கள் இல்லாது திடீரென காயத்ரி தன்னிடம் வந்ததற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்திருக்கிறான்.

அனைத்தையும் தனக்குள் எண்ணியபடி உழன்று கொண்டிருந்தவன் ஹோட்டல் அறையை அடையும் வரையிலுமே காயத்ரியிடம் ஒன்றும் பேசியிருக்கவில்லை.

“என்ன அன்பு என்னவோ போல இருக்க..தலைவலிக்குதா?”,என்று அருகில் வந்தவளை பிடித்து இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டான்.

கணவனின் திடீர் பதட்டத்தில் பயந்து போனவளாய் ஆதரவாய் முதுகை வருடியபடி,

“என்னாச்சு டா..சொன்னால் தான தெரியும்?”

“நீ ஏன் இத்தனை வருஷத்துக்கு அப்பறம் என்னைத் தேடி வந்த கண்மணி?”

“!!!!”

“சொல்லு டி..”

“அந்த மல்லிகாவை என்ன பண்ணலாம்..அதெல்லாம் ஒண்ணுமில்ல அன்பு..”,என்றவளைத் தன்னில் இருந்து பிரித்தவன் அவளோடு கட்டிலில் அமர்ந்தான்.

“சொல்லு காயூ..”

ஆழ்மூச்செடுத்தவளாய்,”செத்துப் போயிடுவோமோனு ஒரு பயம் வந்தப்போ அந்த செகண்ட் உன் முகம் கண்ணு முன்னாடி வந்துது அன்பு..”

!!!!”

“அந்த அக்ஸிடெண்ட்ல தூக்கி வீசப்பட்டப்போ மனசில் வேற எந்த எண்ணமும் இல்ல..உன்னோட ஒரு வாழ்க்கையை வாழாமயே போயிடுவேனோனு தான் தோணிச்சு.

உயிர் பிழைப்பேன்னு எல்லாம் நம்பிக்கை இல்ல..ஆனால் கண் முழிச்ச அப்போ எதைப் பத்தியும் யோசிக்காம உன்னைத் தேடி வரணும்னு முடிவு பண்ணிட்டேன்.

இந்த உயிர் என்னோட ஆசைக்காக தான் திரும்ப கிடைச்சுதுனு மனசார நம்பினேன்.ஒரு வேளை நீ இப்பவும் முடியாதுனு சொல்லிருந்தா…தெரியலை அன்பு என்ன பண்ணிருப்பேன்னு..”,என்றவள் குரல் நடுங்கியது.

மனைவியின் கன்னங்களை இரு கைகளுக்குள்ளும் அழுத்திக் கொண்டவனாய் விழி நிறைத்த நீரோடு நெற்றியில் அழுந்த இதழ் பதித்தான்.

“எப்பவும் சொல்றது தான் இந்த அன்புக்கு நான் தகுதியானவனானு தெரியல ஆனால் இதை யாருக்கும் விட்டுத் தரவே மாட்டேன் காயூ..லவ் யூ சோ மச்..”,என்றவனுக்கு வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது.

இரு தினங்களும் கணவனின் அன்பிலும் காதலிலும் திளைத்துப் போனாள் காயத்ரி.அன்புச்செல்வனோ தன் வாழ்வின் மொத்தமும் காயத்ரி என்ற முடிவிற்கு வந்திருந்தான்.யாருக்காகவும் எதற்காகவும் அவளைக் கண்கலங்க விடக்கூடாது என தனக்குள் கோடி முறையாய் நினைத்துக் கொண்டான்.

இருவருமாய் கோவைக்கு திரும்பியிருக்க மற்றவர்கள் கல்லூரி, வேலை என கிளம்பிய பின் ராகவன் ராகினியோடு காயத்ரிக்கு அன்றைய பொழுது கழிந்தது.

“ஏன் டா காயத்ரி உனக்கு எப்படி இந்த வேலை பிடிச்சுது?”

“சின்ன வயசில் இருந்தே யாரு என்ன ஆகப் போறனு கேட்டாலும் போலீஸ்னு தான் சொல்லுவேனாம் மா..அப்பறம் அதுவே மைண்ட்ல பதிஞ்சுடுச்சு.இருந்தாலும் நல்ல டிகிரி வேணும்னு தான் எம்பிஏ வரை படிச்சேன்.”

“ம்ம் ஆனால் உனக்கு பயமா இருந்தது இல்லையா கண்ணு?”

“முதல் எல்லாம் கொஞ்சம் இருந்தது மா..அதுவும் ஆம்பளைங்க தான் நிறைய பேர்.அதிலேயும் முரட்டுத்தனமா தான் இருப்பாங்க.பொண்ணுங்கிற இளக்காரம் வேற இருக்கும்.அதுவும் நமக்கு கீழ இருக்குறவங்களுக்கு இவ சொல்லி நான் கேட்கனுமானு ஒரு சிலர் நினைப்பாங்க.

எல்லாரையும் சமாளிக்குறதுக்குள்ள ஒரு வழி ஆகிடுவேன்.ஒரு ஆறு மாசம் தான் அப்பறம் தெளிவு வந்துடுச்சு.நாம குனிய குனிய குட்டிட்டே தான் இருப்பாங்க இப்படியே விடக் கூடாதுனு துணிஞ்சுட்டேன்.

நம்ம வேலையை சரியா செஞ்சா போதும் மத்தபடி யாருக்கும் நாம பயப்படத் தேவையில்லைனு புரிஞ்சுது.அதனால தான் வேலைல ரொம்ப கெடுபிடியா இருப்பேன்.உங்க புள்ளை தான் விதிவிலக்கு”,என்றவள் கண்சிமிட்டி சிரிக்க ராகவனும் ராகினியும் அவளோடு சேர்ந்து சிரித்தனர்.

“ஆனாலும் அன்பு முதல்ல போலீஸ்னு சொன்னதும் கொஞ்சம் பயம் தான் எங்களுக்கு.ஆமா எப்படி இவனுக்கு இந்த காதல் எல்லாம்..ரெம்ப அமைதியாவே இருப்பான்.யார்கிட்டேயும் பேசி கூட பார்த்தது இல்ல.”,என்றபடி ராகினி சிரிக்க ஒரு நொடி தயங்கியவள் பின் தங்கள் கதையை முழுதாய் கூறியிருந்தாள்.

ராகவன் ஆச்சரியமாய் அவளைப் பார்த்திருக்க ராகினியோ அதிர்ந்து பார்த்திருந்தார்.

“கடவுளோட சித்தம்னு தான் சொல்லத் தோணுது..”,என்ற ராகவன் மருமகளைப் பார்த்து சிரிக்க காயத்ரியும் அவரைப் பார்த்து புன்னகைத்தாள்.

“எம் புள்ளைக்காக நீ இத்தனை வருஷம் காத்திருந்தியா!!எங்க அன்பு ரொம்ப கொடுத்துவச்சவன்..”

“என்னம்மா இப்படி சொல்லிட்டீங்க..அன்பு மாதிரி ஒரு புருஷன் கிடைக்க நான் தான் கொடுத்து வைச்சுருக்கணும்..”

“உண்மையைச் சொல்லணும்னா நானும் அப்படி தான் இத்தனை நாள் நினைச்சேன் காயத்ரி மா..ஆனால் உனக்காக அவன் என்ன வேணும்னாலும் பண்ணலாம்..தப்பில்லை..”,என்ற மாமியாரைப் பார்த்து புன்னகைத்தவள் சட்டென பக்கவாட்டில் அவரைக் கட்டிக் கொண்டாள்.

வெளியில் சென்று உள்ளே நுழைந்த அன்புச்செல்வனின் கண்களில் பட்ட இந்தக் காட்சியில் பெரிதாய் ஒரு புன்னகை தோன்றியது.

“உட்காரு அன்பு நான் தண்ணி எடுத்துட்டு வரேன்.”,என்று உள்ளே சென்றவளையே மூவரும் பார்த்திருக்க ராகினி மகனிடம்,

“உன் மேல உயிரையே வைச்சுருக்கா டா கண்ணா..”

“!!!”

“மருமகளை நல்லா பார்த்துக்கோடா..”,என்று தோள்தட்டிச் சென்ற தந்தையை ஆச்சரியமாய் பார்க்க ராகினி அத்தனை நேர உரையாடல்களையும் அவனிடம் சுருக்கமாக கூறியிருந்தார்.

“நான் சொல்லலையேனு தப்பா எடுத்துக்காத மா..என் எண்ணம் புரியுது தான உனக்கு?”

“என் மகனை ரொம்ப நல்லா வளர்த்துருக்கேன்னு பெருமையா இருக்கு..தேவையில்லாம குழப்பிக்காத..”,என்றபடி அவரும் உள்ளே செல்ல காயத்ரி அவனருகில் வந்தமர்ந்தாள்.

“மாமியாரும் மருமகளும் ரொம்ப தான் கொஞ்சிக்குறீங்க போலேயே..”,என்றவன் சிரிக்க சுற்றும் முற்றும் பார்த்தவள் அவன் கன்னத்தில் அழுந்த இதழ் பதித்து நகர்ந்து கொண்டாள்.

மாலை சிறியவர்கள் கல்லூரியில் இருந்து வந்துவிட பேச்சிற்கும் சிரிப்பிற்கும் குறைவால்லாமல் இருந்தது.

“அண்ணி காலேஜ்ல இப்போ எல்லாம் எங்களுக்குத் தனி மரியாதை தெரியுமா..எங்க அண்ணி டிஎஸ்பிங்கிறதுனால தான்..”

“ஹா ஹா இதென்ன புதுக்கதை..”

“ஆமா அண்ணி உங்க ரிசெப்ஷனுக்கு ப்ரெண்ட்ஸெல்லாம் வந்துருந்தாங்க இல்ல..போயிட்டு டிபார்ட்மெண்ட் மொத்தம் பரப்பி விட்டுட்டாங்க..சோ இன்னைக்கு வரையும் நாங்க தான் ஹாட் டாப்பிக்..”,என்று இன்பா சிரித்தான்.

“அண்ணி ஒரு நாளாவது உங்க கார்ல போய் இறங்கிட்டா போதும்”,என்று தேனு கண்சிமிட்ட,

“கவர்மெண்ட் வண்டி உனக்கு சீன் போடுறதுக்கா..”,என்றவள் தேன்மொழியை கழுத்தோடு சேர்த்து தன்புறம் இழுத்துச் சிரித்தாள் காயத்ரி.

“உண்மையா கல்யாணத்துக்கு அப்பறம் எனக்கும் ஒரு அட்வான்டேஜ் இருக்கு தெரியுமா?”,என்று காயத்ரி குறும்பாய் கூற என்னவென்பதாய் மொத்தக் குடும்பமும் அவளைப் பார்த்திருந்தது.

“எதாவது கேஸில் கை கால் உடைச்சா கவலையே பட வேண்டாம்.சைலண்டா தம்பிகிட்ட அனுப்பி வைத்தியம் பார்த்துட்டு பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டதா ஒரு சர்டிபிக்கேட்டும் வாங்கிக்கலாம்”,என்று சிரிக்காமல் கூற ஆனந்தனோ அரண்டே போய்விட்டான்.

மற்றவர்கள் சத்தமாய் சிரிக்க கை எடுத்து தலைக்கு மேல் வைத்தவனோ,

“அண்ணி தெய்வமே நானே பாவம்..”,என்று கூற கண்களில் நீர் கோர்க்கும் அளவிற்கு சிரித்திருந்தாள் காயத்ரி.

விடுப்பு முடிந்து மறுநாள் காயத்ரி பணியில் சேர்வதாய் இருந்தது.அன்றைய இரவு அனைவருமாய் இரவு உணவிற்காக அமர்ந்திருக்க பேச்சும் சிரிப்புமாய் உணவு மேசை களை கட்டியது.

“அண்ணி உங்களுக்கு ஷிப்ட் எல்லாம் எப்படி?”

“பொதுவா ரொட்டேஷனலா தான் இருக்கும் இன்பா..நான் தான் நைட் ஷிப்ட் மட்டும் வேண்டாம்னு சொல்லிருக்கேன்.”

“அண்ணி நாளைக்கு காலேஜ் கிளம்புறதுக்குள்ள ரெடி ஆகிடுங்க..உங்களை யூனிபார்ம்ல பார்க்கணும்.”

“ஹா ஹா ரெடி ஆகிட்டா போச்சு தேனு..”

“காயத்ரி மதியத்துக்கு சாப்பாடு எடுத்துட்டு போறியா?”

“முடிஞ்சா வீட்டுக்கே வரேன் மா..நாளைக்கு போயிட்டு எப்படி நிலைமைனு பார்த்துட்டு சொல்றேன்.”

“அன்னைக்கு கோவில்ல மாதிரி எல்லாம் டென்ஷன் ஆகாதே டா மருமகளே”,என்று ராகவன் கூறியதற்கு அனைவரும் சிரிக்க காயத்ரி புருவத்தை சொறிந்தவாறே சிரித்தாள்.

“அன்னைக்கு அப்பாவும் அம்மாவும் அதைப் பத்தி தான் பேசிட்டே இருந்தாங்க அண்ணி..”

“வேலையில் அப்படியே இருந்து பழகிட்டேன் தம்பி..பொதுவாவே பொண்ணுங்க நம்ப எதிர் இருக்குறவங்களைப் பார்வையிலேயே இரண்டு அடி தள்ளி நிறுத்தணும்.

இதில் நான் பார்க்குற அநேகம் பேர் பொறுக்கிங்களா தான் இருப்பாங்க..அப்படியிருக்கும் போது பொறுமை நிதானம் எல்லாம் வேலைக்கு ஆகாது.”

இப்படியாய் இரவு உணவை முடித்து அனைவருமாய் உறங்கச் செல்ல இன்னமும் அன்பு இரவு உடை மாற்றாமல் இருப்பதை கவனித்தவளாய்,

“என்ன அன்பு தூங்கலையா காலையில் சீக்கிரமே கிளம்பணும்ல நீ?”

“ஐஸ்க்ரீம் சாப்பிட்டு வரலாமா கண்மணி”,என்றவன் கண்சிமிட்டிச் சிரிக்க,

“ரொம்ப தேறிட்ட டா புருஷா”,என்றவள் குஷியாய் வண்டிச் சாவியோடு வந்து நின்றாள்.

சொந்த வீட்டிலேயே திருட்டுத் தனமாய் இருவரும் வெளியே செல்வதை நினைத்து நினைத்து சிரித்தபடி கடையை அடைந்தனர்.

அவளுக்கு ஊட்டிக் கொண்டே தானும் உண்டு முடித்தவனாய்,

“ஆல் த பெஸ்ட் மிஸர்ஸ் அன்புச்செல்வன்.”

“ஹா ஹா தேங்க் யூ அன்பு..”

“கவனமா இருக்கணும் கண்மனி.உன்னையே நம்பி இப்போ புருஷன் நான் ஒருத்தன் இருக்கேன்னு நியாகம் வைச்சுக்கோ.”

“ஹே..”,என்றவள் அவனது தோள் சாய்ந்து கொண்டாள்.

“மிஸ்டர் காயத்ரிக்கு விஷ் எல்லாம் இல்லையா?”,அவன் கூறுவது புரியவே சில நொடிகள் எடுக்க புன்னகை இன்னுமாய் விரிந்தது பெண்ணிடத்தில்.

“நீ ஏன் அன்பு இப்படியிருக்க!”,என்றவள் கன்னம் கிள்ளிச் சிரித்து அவனுக்கும் வாழ்த்து கூறி அங்கிருந்து கிளம்பியிருந்தனர்.

மறுநாள் ஐந்து மணிக்கெல்லாம் அன்பு ஹோட்டலுக்குக் கிளம்பத் தயாராக காயத்ரி அவனுக்கு வேண்டியதை எடுத்துக் கொடுத்தாள்.

“நீ கிளம்புறதுக்குள்ள வந்துருவேன் காயூம்மா..இன்னும் தான் நேரமிருக்கே நீ வேணும்னா தூங்கு.”

“அதெல்லாம் வேண்டாம் அன்பு.நான் கீழே அம்மாக்கு போய் ஹெல்ப் பண்றேன்.டிபன் சாப்பிட கண்டிப்பா வந்துரு டா.”

“கண்டிப்பா வந்துருவேன் கிளம்பட்டுமா..”,என்றவன் கீழேயிறங்க வாசல் வரை சென்று வழியனுப்பி வந்தவள் மாமியாரோடு சமையலறையில் புகுந்து கொண்டாள்.

கதைப் பேசியபடி வேலைகளை கவனிக்கும் மருமகளை ராகினிக்கு அத்தனைப் பிடித்துப் போனது.அதன்பின் ஒவ்வொருவராய் எழுந்து வர அனைவருக்கும் காபி கொடுத்து மதிய உணவை பேக் செய்து வைத்து விட்டு குளிக்கச் சென்றவள் அரை மணி நேத்தில் தனது சீருடையில் கீழிறங்கி வந்திருந்தாள்.

“வாவ் அண்ணி செம மாஸ்..”,என்று சிறியவர்கள் ஆர்பரிக்க ராகவனும் ராகினியும் சிரித்தனர்.

அன்பு வந்தவுடன் அவனோடு காலை உணவை முடித்துவிட்டு தன் பைக்கை உயிர்பித்துக் கிளம்பியிருந்தாள்.

தன் பொறுப்பில் இருக்கும் ஒரு காவல் நிலையத்திற்குள் நுழைந்தவளுக்கு அனைவரும் விரைப்பாய் வணக்கம் வைத்து நகர சிறு தலையசைப்போடு தனதறைக்குச் சென்று அமர்ந்தவள் அன்றைய வேலைகளில் மூழ்கிப் போனாள்.

நாட்கள் அதன் போக்கில் நகர திருமணமாகி மூன்று மாதம் முடிந்திருந்த நிலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த அன்பு அறையில் வாடிய முகத்தோடு அமர்ந்திருந்த மனைவியைப் பார்த்து பதறியவனாய் அவளருகில் அமர்ந்தான்.

“என்னாச்சு டி?முகமே சரியில்ல..உடம்பு முடியலையா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல அன்பு..”

“அப்பறம் ஏன் இப்படி உட்காந்துருக்க வேலையில் எதுவும் டென்ஷனா?”

“நத்திங் அன்பு..மன்த்லி ப்ராப்ளம் தான்.”

“ஷப்பா..அதுக்காகவா இப்படி இருக்க..என்னாச்சு மூட் ஸ்விங்க்ஸ் அதிகமா இருக்கா என்ன?எங்கேயாவது போலாமா?”,என்றவனை முறைத்தாள்.

“என்னடி நல்லது தான கேட்குறேன் ஏன் முறைக்குற?”

“உண்மையாவே உனக்கு பெரிய விஷயமா தெரியலையானு எனக்கு புரில..நம்ம குழந்தையை ரொம்ப எதிர் பார்க்குறேன் அன்பு.”,என்றவள் அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.

“காயூ!!!”

“ப்ச்..கடுப்பா இருக்கு..டாக்டர்கிட்ட போலாமா?”

“லூசா டி நீ..கல்யாணம் ஆகி மூணு மாசம் தான ஆகுது..”

“ஆனால் நம்ம குழந்தை வேண்டாம்னு தள்ளி வைக்கலையே அன்பு”,என்றவளின் குரல் கம்மியது.

“கண்மணி,வேலை அலைச்சல் டென்ஷன்னு அவ்ளோ இருக்கு உனக்கு.ஒவ்வொருத்தர் உடல்வாகு ஒரு ஒரு மாதிரி டா..”

“….”

“யாரும் எதுவும் சொன்னாங்களா?”

“ஹே ச்ச ச்ச அதெல்லாம் இல்ல அன்பு நானே ரொம்ப எதிர்பார்க்குறேன்.அது இல்லனு ஆகும்போது ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு..”

“இப்போதான் டி லவ் பண்ணவே ஆரம்பிச்சுருக்கோம்..அதுகுள்ள என்னை ஏன் புள்ளைக்கு பேக் தூக்க வைக்க நினைக்குற”,என்றவன் சிரிக்க ஒன்றும் பேசாமல் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“இன்னும் கொஞ்ச நாள் ஜாலியா ரொமான்டிக்கா வாழ்க்கையை வாழ்ந்துட்டு அப்பறம் இந்த பொறுப்பை எல்லாம் தலையில் ஏத்திப்போமே..என்ன சொல்ற?”,என்றவன் நெற்றியில் இதழ் பதித்தான்.

“உன்னை பத்தி தெரிஞ்சும் நான் பீல் பண்ணிருக்க கூடாது”என்றவள் சற்றே தெளிந்திருந்தாள்.

“நம்மளை மாதிரி தான நம்ம புள்ளையும் இருக்கும் ஸ்லோவா பொறுமையா நம்மகிட்ட வரும்.”,என்றவனை செல்லமாய் அடிக்கத் தொடங்கியிருந்தாள் அன்பு மனைவி.