மலர்-3

by ஸ்ரீ
1 comment 53 views
A+A-
Reset

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை

மு.வ விளக்க உரை: மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?

தாம்பரத்தில் இருக்கும் தனது அத்தை கலைச்செல்வியின் வீட்டிற்கு வந்ததுமே அவள் போக்கில் மங்கை உள்ளே ஓடிவிட கார்த்திகேயன் அவளது உடைமைகளை எடுத்துக் கொண்டு பின்னேச் சென்றான்.

“அத்தை!!!”, என்றவள் கழுத்தோடு கட்டிக் கொண்டு குதிக்க கலைச்செல்வியோ எதிர்பாராத தாக்குதலில் திணறிப் போனார்.

“பாப்பா… ட்ரெயின் சீக்கிரமே வந்துருச்சா? என்ன டி இப்படி மெலிஞ்சு போயிட்ட?”

“உன்னை பார்க்காம தான் இளைச்சு துரும்பா போயிட்டேன் அத்தை..”

“அந்த வாய் மட்டும் குறையவே இல்லை. ஆமா எங்கே டி என் புள்ளை?”

“ஐயையோ மறந்தே போயிட்டேன்.”, என்றவள் வெளியே ஓட கையில் அவளது பையோடு நின்றவனை நோக்கி படியில் இறங்கி வந்திருந்தார் தாமோதரன்.

“ஹாய் மாமா..”

“ம்ம் பையை கூட எடுக்காம உன் அத்தையை பார்க்க ஓடியாச்சா?”

“எப்படியும் நீங்க இரண்டு பேரும் உங்க பையனை வேலை வாங்க மாட்டீங்க எனக்காக எதோ ஒரு வேலை பண்ணிணா மாதிரி இருக்கட்டுமே..”

“ஓய் நான் வேலை பார்க்க மாட்டேன்னு உன்கிட்ட சொன்னேனா?”

“வீட்டுக்கு வந்த பிள்ளையை இப்படி ஆளாளுக்கு கேள்வி கேட்டு நிக்குறீங்களே இதெல்லாமே நல்லாவா இருக்கு என்ன கலை நம்ம வீட்டுல இதுதேன் சொல்லிக் கொடுத்தாகளா?”, என்று அவளது அப்பத்தாவை போல பேசிக் காட்ட தாமோதரனே சிரித்திருந்தார்.

“ம்ம் இப்படி பார்க்க எவ்வளவு அழகாயிருக்கு. அதை விட்டுட்டு விறைப்பாவே திரிஞ்சா எப்படி மாம்ஸ்..”

“கொஞ்சம் கூட பயமே இல்லாம போச்சு பாப்பா உனக்கு..”

“ஆகா எல்லாரும் பாப்பானு கூப்பிட்டாலும் நீங்க கூப்பிட்டா தனி அழகு மாம்ஸ்..”, என்றவள் அவரோடு சோபாவில் அமர்ந்து கொள்ள கார்த்திகேயனும் கலைச்செல்வியுமாய் சிரித்தபடி நின்றிருந்தனர்.

“எப்படியிருக்க நீ? அப்பத்தா போன் பேசினாலே உன்னைப் பத்தி தான் ஆவலாதி சொல்றாங்க. “

“கிழவிக்கு வேற வேலை இல்லை எப்போ பார்த்தாலும் என்னைத் திட்டிட்டே இருக்கு மாம்ஸ். மருமகனா நீங்க கேளுங்க அப்போ தான் பயம் வரும்.”

“கழுத..”

“என்னப்பா இவ அம்மாச்சியையே இப்படி பேசுறா?”

“இதெல்லாம் கம்மி ஊர்ல போய் பாரு இரண்டு பேரும் வடக்கையும் தெற்கேயுமா தான் நிப்பாங்க.”

“உங்க ஆச்சிக்கு என்னைப் பார்த்து பொறாமை கார்த்தி மாமா.. எல்லாரும் என்னைய கொஞ்சுறாகனு கிழவிக்கு காண்டு..”

“அது சரி..”

“நிஜமா.. நீ வேணா உன் அம்மாவையே கேளு உண்மையா இல்லையானு.”

“நம்ம குடும்பத்தில் நீ யாரை மாதிரி வந்தியோ டி வாயாடி கழுத..”

“அத்தை..”

“சரி சரி ஊர்ல எல்லாரும் எப்படியிருக்காங்க? என்ன நிலவரம்?”

“பெருசா ஒண்ணும் இல்லை மாமா. அப்பத்தா இப்போ தான் உருப்படியா ஒரு முடிவுக்கு வந்துருக்கு. நான் எப்படியும் உருப்பட போறதில்ல அதனால திருமாக்கு பொண்ணு பார்க்கலாம்னு சொல்லிடுச்சு.”

“அப்போ நீ என்ன கல்யாணமே கட்டப் போறதில்லையா?”

“நான் ஏன் அப்படியிருக்கணும்? பொறுமையா கிரிக்கெட் டீம் கேப்டனா உலகத்தையே திரும்பி பார்க்க வைச்சுட்டு அப்பறமா புருஷன் குழந்தை குட்டியா வாழ ஆரம்பிச்சுருவேன்.”

ஒரு நொடி கணவரைப் பார்த்த கலைச்செல்வி மங்கையிடம்,

“பேசாம என் புள்ளையை கட்டிக்கோ டி அப்பறமா நீ நினைச்சதை சாதிக்கலாம். என்ன சொல்ற?”, என்றதில் தாமோதரன் லேசாய் புன்னகைக்க கார்த்திகேயனும் மங்கையும் அதிர்வாய் ஒருவரைப் ஒருவர் பார்த்தனர்.

“உன் வாழ்க்கை என்னோடேயா தாங்குவியா மாமா நீ?”, என்றதில் நடப்பிற்கு வந்தவனாய் தாய் தந்தையைப் பார்க்க இருவரும் சத்தமாய் சிரித்திருந்தனர்.

“பாப்பா எல்லாமே விளையாட்டா போச்சா உனக்கு?”

“யாரு நான் விளையாடுறேனா? வந்தவளை பல்லு கூட தேய்க்க விடாம உட்காந்து கல்யாணம் பேசிகிட்டு இருக்குறது நீங்க..”

“அதானே நீ போய் ரெடியாகிட்டு வா கண்ணா..நாம எல்லாம் சேர்ந்து சாப்பிடலாம்.”

“பத்தே நிமிஷம் ஓடி வரேன் மாம்ஸ்..”,என்றவள் மாடியறைக்கு ஓடினாள்.

“என்ன டா கார்த்தி.. நீ என்ன சொல்ற?”

“ம்மா.. அவளும் நானும்.. அதெல்லாம் ஒத்து வராது மா.. அப்படி எல்லாம் நினைச்சது கூட இல்லை.”

“இதுவரை நினைக்கலைனால் என்ன இனி யோசி..”, என்றதில் கார்த்திகேயனுக்கு பதில் கூற முடியா நிலை. அவனது எண்ணவோட்டம் அறிந்தவராய் தாமோதரன்,

“உங்கம்மாக்கு அண்ணனை சம்மந்தியாக்கணும்ங்கிற அவசரத்தில் உன்னையும் பதட்டப்படுத்துறா நிதானமா யோசி டா..”, என்றவர் தோள் தட்டி உணவு மேசைக்குச் சென்றார்.

மங்கை குளித்துத் தயாராகி கீழே வந்தபோது கார்த்திகேயன் மொத்தமாய் எதோ ஒரு யோசனையில் தன்னைத் தொலைத்திருந்தான்.

“உங்க புள்ளையும் நானும் பார்த்தே பல வருஷம் ஆச்சு. சரி நாமளும் முறைப் பையனோட ஜாலியா சென்னையைச் சுத்தி பார்த்தோமா போட்டோ போட்டு என் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைச்சு எல்லாரையும் வெறுப்பேத்தினோமானு இருக்கலாம்னு பார்த்தா..

என்ன அத்தை நீ.. பாரு உன் மவன் எப்படி பயந்து போய் இருக்கான்னு.”

“நான் என்ன டி பண்ணேன்?!”

“பின்ன என்னைக் கட்டிக்கச் சொன்னால் அவன் வேற எப்படி இருப்பான்?”

“டேய் கார்த்தி அவ சொல்றது உண்மையா டா? அதனாலேயா இப்படியிருக்க. நான் மனசிலே பட்டதை கேட்டேன் டா.”

“ம்மா அதெல்லாம் ஒண்ணுமில்ல மா..”

“ஆமா அதெல்லாம் ஒண்ணுமில்ல அவன் மனசில் இருக்குற சொப்பனசுந்தரி தான் எல்லாம்.. இல்ல கார்த்தி மாமா?”, என்றதில் கார்த்திகேயனுக்கு புரையேறியது.

“எதையாவது உளறாத மங்கை சாப்பிட்டு வா வெளியில் போலாம்.”

“ஓகோ நான் உளறேனா? மனசாட்சியைத் தொட்டு சொல்லு? எப்படியிருக்கா உன் சொப்பனசுந்தரி?”

“அது யாரு பாப்பா?”

“என்ன மாம்ஸ் நீங்க இப்படி ஒரு அப்பிராணியா இருக்கீங்க.. எல்லாம் உங்களுக்கு வேண்டியவங்க தான்.”

“மங்கை உன்னை கொல்ல போறேன்.”

“நீ இன்னமும் அமைதியா இருந்தனு வை அப்பறம் என்னை தான் கல்யாணம் பண்ணிட்டு காலம் பூரா கஷ்டப்படணும். தேவையா உனக்கு?”

“!!!”

“ஹேய் ஒரு வேளை ப்ரேக்கப் பண்ணிட்டீங்களா?”

“மங்கை!!!”

“சும்மா சொல்லு மாமா.. முழுசா நனைஞ்சாச்சு இனி முக்காடு எதுக்கு.”

“!!”

“மாம்ஸ் என் கெஸ் கரெக்ட்டுனா இவனும் உங்க தங்கச்சி பொண்ணு ஸ்வப்னாவும் லவ்வாங்கிஸா இருக்கணும். அதுவும் எப்போ, சார் காலேஜ் படிச்ச காலத்திலேயே.. என்ன கரெக்ட்டா?”

“உன்னை கொல்ல போறேன் டி..”

“ம்ம் உண்மையைச் சொன்னால் கோவத்தை பாரு. இதுக்கு என் அண்ணணும் அந்த கருவாப்பய நெடுமாறன் அண்ணணும் சப்போர்ட்டு..”

“டேய் கார்த்தி இவ என்னடா சொல்றா??”

“ம்மா அவ எதோ உளர்றா மா..”

“மாம்ஸ் நான் பொய் சொல்லுவேனா? இவனுங்க எல்லாம் அப்போவே கூட்டுக் களவாணிங்க. அப்பறம் வேலை அது இதுனு எல்லாம் பிசி ஆனதில் எனக்கு எதுவும் தெரியலை.

அத்தை மகனே உனக்கு நல்லது தான் பண்றேன் ஒழுங்கா ஒத்துகிட்டு கல்யாணம் பண்ணிக்குற வழியைப் பாரு.”, என்றவள் உணவை வாயில் திணித்த படி அவனைப் பார்த்து புருவங்களை உயர்த்தினாள்.

அத்தனை நேரம் அமைதியாய் இருந்த தாமோதரனுக்கு மகனின் பதட்டம் மங்கையின் கூற்றை உண்மையென உணர்த்தியது.

“என்ன கார்த்தி அத்தைகிட்ட பேசட்டுமா?”

“ப்பா அது…”

“சொல்லு டா சொன்னா தானே தெரியும்?”

“ஆமா பா நானும் ஸ்வப்னாவும் காதலிக்குறோம். அவ வேலையில் ஜாயின் பண்றதுக்காக வெயிட்டிங். அதுக்கப்பறம் பேசலாம்னு இருந்தோம் பா..”, என்றவன் தயக்கமாய் அன்னையைப் பார்த்தான்.

“ம்மா… உன் மனசில் இப்படியொரு எண்ணம் இருக்கும்னு நினைக்கலை மா. இவ எல்லாருக்கும் செல்லப் பிள்ளை எனக்கும் அப்படி தான். உன் எண்ணம் தெரிஞ்சுருந்தா முன்னாடியே சொல்லிருப்பேன் மா.. தப்பா எடுத்துக்காத..”

“அய்யய்யே ரொம்ப தான். என்ன அத்தை காலம் பூரா உன்னையும் என்னையும் சேர்த்து ஒரே வீட்டில் மாம்ஸால சமாளிக்க முடியுமா சொல்லு? ஸ்வப்னா தான் உனக்கு சரி வீட்டுக்கு மூணாவது டாக்டர் வேற. சந்தோஷமா சரினு சொல்லுவியா?!”

“…”

“என்ன மாம்ஸ் ஒண்ணும் சொல்ல மாட்றீங்க?”

“எனக்கு என்ன டா அவனுக்கு பிடிக்குறது தான் முக்கியம். உன்னால எவ்வளவு பெரிய விஷயம் தெரிய வந்துருக்கு..”

“குட் அப்போ அதுக்கு ட்ரீட் இன்னைக்கு எனக்கு பீட்சா வேணும். நோ அட்வைஸ் நோ சொற்பொழிவு.”

“அதானே கடைசியில் உனக்கு வேண்டியதை சாதிச்சுக்குவியே.. சரி சரி வாங்கிக்கோ.”

“தேங்க் யூ மாம்ஸ்.. என்ன அத்தை நீ ஏன் அமைதியா இருக்க பாரு கார்த்தி மாமா பாவமா உட்காந்துருக்கான்.”

“உனக்கு பிடிச்சா எனக்கும் சம்மதம் தான் டா கார்த்தி..”

“ம்மா!!”

“டேய் நிஜமா தான். நீயும் இவளும் பேசுற அளவு கூட ஸ்வப்னாவோட நீ பேசி நான் பார்த்ததில்லையா அதான் அப்படி ஒரு எண்ணம் வரவேயில்லை.

எப்படியோ சொந்தம் விட்டுப் போகாம யாரு மனசும் நோகாம கல்யாணம் நடந்தா சரி தான். இந்த வாயாடி நான் தூக்கி வளர்த்த பிள்ளையே நம்மகிட்டேயே காலம் பூரா இருந்துரட்டும்னு ஒரு எண்ணம். இப்போ தெளிவாய்ட்டேன் டா”

“ச்ச எம்புட்டு நல்ல அத்தை நீ.. இன்னொரு பையனை பெத்துருக்கலாம்ல. நானே கட்டிருப்பேன்.”

“இல்ல பாப்பா நீ சொன்னது தான் சரி நீயும் நானும் ஒரே வீட்டில் இருந்தா உன் மாமா பாவம் இல்லை.”

“அடப்பாவி அத்தை.. இரு அப்பாட்ட போட்டு கொடுக்குறேன். உன்னை..”, என்றதில் மூவரும் சிரித்தனர்.

“அப்பறம் புது மாப்பிள்ளை சீக்கிரமே கல்யாண சாப்பாடு போடப் போற..”, என்றவள் தனது கையைத் தூக்கிக் காட்ட கார்த்தி தனது கையால் ஹைபை தட்டிக் கொண்டான்.

“தேங்க்ஸ் டி வானரம்..”, என்றவன் ஓடிவிட அவனைத் துரத்திக் கொண்டு ஓடினாள் மங்கை.

“என்ன கலை கவலைப்படுறியா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லங்க. நல்ல வேளை ஆரம்பத்திலேயே விஷயம் தெரிஞ்சுது இல்லைனால் தான் கஷ்டமா போயிருக்கும்.”

“நம்ம மங்கை குணத்துக்கு ராஜா மாதிரி மாப்பிள்ளை கிடைப்பான். இப்படி கள்ளம் கபடம் இல்லாம எத்தனை பேரால இருக்க முடியும் இல்ல..”

“ஆமாங்க அண்ணன் சொல்ற மாதிரி அந்த மீனாட்சியே தான் மகளா பிறந்துருக்கா. ஆமா உங்க தங்கச்சியும் அவங்க வீட்டுக்காரரும் இதுக்கு என்ன சொல்லுவாங்களோ தெரியலையே?”

“இரண்டு பேருக்கும் பிடிச்சு போனப்பறம் யாரு என்ன சொல்ல முடியும். நான் மச்சான்கிட்ட பேசுறேன் கலை.”

.அங்கு மாடிக்குச் சென்றவளைப் பிடித்து நிறுத்தியவனாய் முன்னந்தலையை கலைத்து சிரித்தான் கார்த்திகேயன்.

“தேங்க்ஸ் டி மங்கை.”

“ஐயே உனக்காக இது கூட பண்ண மாட்டேனா. ஆனாலும் என்கிட்ட ஒரு தடவையாவது சொல்லிருக்கியா அவளைப் பத்தி?”

“ம்ம் அப்படியில்லை. யாருக்கும் தெரிய வந்தா என்ன நடக்குமோனு ஒரு பயம். நடுவில் இரண்டு குடும்பத்துக்கும் நடந்த சண்டையெல்லாம் உனக்குத் தெரியாததா?”

“அதுவும் சரி தான் ஆனாலும் அந்த ஸ்வப்னாவுக்கு இப்படி ஒரு மட்டமான டேஸ்ட் இருந்துருக்க வேணாம் கார்த்தி மாமா..”

“கொழுப்பு டி உனக்கு. என் அருமை தெரியலை. ஹாஸ்பிட்டல்ல வந்து பாரு புரியும்.”

“போனா போகுதுனு ஒத்துக்குறேன். கொஞ்சம் பார்க்குற மாதிரி தான் இருக்க நீயும். சொல்ல போனால் அந்த கருவாயனுங்களுக்கு நீ தேவலை தான்.”, என்றதில் இருவருமாய் சிரித்தனர்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

1 comment

srichitra July 11, 2026 - 1:55 pm

Very nice

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode