தாரகையைத் தூக்கி கொண்டு அறைக்குச் சென்ற ஏழிசையையே எதிர்பார்த்து காத்திருந்தான் வீரேந்திரன்.
குழந்தையை அவனின் வலதுபுறம் படுக்க வைத்துவிட்டு அவனருகில் வந்து நின்றவளைப் பார்த்தவன் சற்று தள்ளிப் படுக்க கிடைத்த சிறு இடத்தில் அவன் புறமாய் திரும்பிப் படுத்தவள் அவனது சட்டையை இறுகப் பற்றிக் கொண்டாள்.
சில நொடிகளில் அவளது பிடி தளர அவள் உறங்கி விட்டதை உணர்ந்தவனாய் அவளையே பார்த்திருந்தான்.
பல மாதங்களுக்குப் பின்னான அமைதியான தூக்கம் பெண்ணவளுக்கு.அன்று முழுவதுமே அந்த அறையை விட்டு கீழிறங்கவில்லை மூவரும்.
நாள் மொத்தமும் அவன் அவள் அவர்களாய் ஒரு ஒரு நொடியும் கழிந்தது.நான்கு மாதம் பேசாத கதைகள் எல்லாம் பேசித் தீர்த்தாள்.
இந்தக் குரலை கேட்காமல் தவித்துக் கிடந்தவனும் சலிக்கமால் கேட்டுக் கொண்டே இருந்தான்.
தாயைப் பார்த்து தானும் ஏதோ கதை சொல்லும் நோக்கில் வாயை அசைத்து கை கால்களை உதறி தாரகையும் தந்தையின் கவனத்தை தன்புறம் இழுத்துக் கொண்டிருக்க தன் இரு குழந்தைகளுக்கும் நடுவில் சொர்க்கத்தையே உணர்ந்தான் வீரேந்திரன்.
மனைவியும் குடும்பமும் கவனித்ததில் விரைவிலேயே உடல் தேறியிருந்தான்.பழைய மிடுக்கோடு கருப்பு வேஷ்டி சட்டையில் அவனைப் பார்த்தவளுக்கு இரு விழிகள் போதவில்லை.
உணவு மேசையில் அவன் அமர அருகில் நின்றிருந்த மருமகளோடு அவனைப் பார்த்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டது என்ற ஏக்கம் சந்தோஷமாய் மாறியிருந்தது பெரியவர்களுக்கு.
பல மாதங்களுக்குப் பிறகான அவனது தட்டில் உண்ணும் உணவு தொண்டைக்குள் இறங்கும் போதே அமிர்தமாய் இனித்தது ஏழிசைக்கு.
உணவை முடித்து வரவேற்பறைக்கு வர அங்கு ராகவ் தன் மொபைலில் எதையோ அனைவருக்கும் காட்டிக் கொண்டிருந்தான்.
அண்ணனைப் பார்த்தவன் புன்னகையாய்,”இதை உங்களுக்கு காட்டணும்னு தான் மொபைலுக்கு எடுத்தேன் ணா..”,என்றவன் காட்டியது அன்றைய இரவு வீட்டில் நடந்த சம்பவத்தின் சீசீடிவி காட்சிகளைத் தான்.
வீரேந்திரனுக்கோ வியப்பு அதிர்ச்சி பதட்டம் என உணர்ச்சிக் கலவையாய் இருந்தது ஒவ்வொரு நிமிடக் காட்சியும்.
அனைவருமே அமைதியாய் இருக்க அங்கு வந்த ஏழிசை என்னவென்பதாய் கணவனின் கையிலிருந்த மொபைலில் கவனத்தைப் பதித்தாள்.
ஒன்றும் கூறாமல் கணவனின் அருகில் அமர்ந்தவள் மொபைலை அணைத்து ராகவிடம் நீட்டினாள்.
“இதெல்லாம் வாழ்க்கையில் நான் மறக்கணும்னு நினைக்குற நாள் ராகவா..”
“தெரியும் அண்ணி..ஆனால் இது காலம் மொத்தமும் நாங்க பொக்கிஷமா பாதுகாக்க வேண்டியது.எங்களுக்காக இந்த குடும்பத்துக்காக நீங்க பண்ணின மிகப்பெரும் காரியம் அண்ணி இது.”
“….”
“உண்மையாவே அண்ணா, இரத்தம் சொட்டுற அரிவாள் மனையோட இவங்க மயங்கி இருந்ததைப் பார்த்து அரண்டு போயிட்டோம் தெரியுமா..”
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஷ்யாம் சில பைஃல்களோடு அங்கு வர மற்றவர்கள் எழுந்து உள்ளே சென்ற நேரம் ஏழிசையும் எழுந்து கொண்டாள்.
“ஆபீஸ் பைல் தான இசை நீ உட்காரு.”
“அதனால தான் எழுந்து போறேன்.நேக்கு இனி இதெல்லாம் சம்பந்தம் இல்லாதது.குழந்தையை குளிப்பாட்டணும் நான் வரேன்.வரேன் ணா”,என்றவள் உள்ளே சென்று விட்டிருந்தாள்.
“ஏதேதோ நடந்துருச்சு ஷ்யாம்.எப்படி இவ்வளவு கேர்லெஸா இருந்தோம்?”
“இல்ல சார் நம்ம கவனம் மொத்தம் ஜான் மேல இருக்கும் போது இங்க அவன் கைக்குள்ள போட்டுக்கிட்ட சில ஆட்களை வைச்சு காய் நகர்த்திருக்கான்.
நம்மை போட்டியா நினைக்குற கம்பெனிகாரங்க இரண்டு பேர் இதில் சம்மந்தப்பட்டுருகாங்க.
அவங்க பினாமியா தான் ஜான் இங்க நுழைஞ்சுருக்கான்.யார் யார்னு எல்லா விவரமும் எடுத்தாச்சு.நாம கண்டுபிடிச்சுட்டோம்னு அவங்களுக்கு இன்னும் தெரியாது சார்.நீங்க என்ன சொல்றீங்களோ பண்ணிடலாம்.”
“அந்த ஜான் இப்போ?”
“அவன் தம்பி செத்த வெறியில் இருக்கான் சார்.டென்டர் கைவிட்டு போனதால இங்க அவனுக்கு கிடைச்ச சப்போர்ட்டும் இப்போ குறைஞ்சுடுச்சு.மும்பையில் அவன் மேல இருக்குற கேஸை தூசு தட்ட சொல்லுவோமா சார்?”
“வேண்டாம்.அவனோட கணக்கை இந்த வீரேந்திரனே முடிக்கனும்.”,என்றவனின் முகம் இறுகிக் கிடந்தது.
மேலும் சில விவரங்களைக் கேட்டுக் கொண்டு அறைக்கு வந்தவனுக்கு குளியலறைக்குள் சத்தம் கேட்க மகளின் குரலில் கால்கள் அதுவாய் முன்னேறிச் சென்றது.
ஏழிசை மகளை காலில் போட்டு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்க விரல்களை வாய்க்குள் நுழைத்தவாறு அன்னையிடம் கதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
“அப்பறம் தாரகை குட்டி சமத்தா குளிச்சாங்களாம்.மம்மம் சாப்பிட்டு தூங்குவாகளாம்.அப்பறம் சாயந்திரமா அப்பாவோடு விளையாடுவாங்களாம்.இல்ல செல்லம்..”,என்றவளைப் பார்த்தவாறே கையில் துண்டோடு நின்றவன் குழந்தையை வாங்கிக் கொண்டு கட்டிலுக்குச் சென்றான்.
குழந்தைக்கு துடைத்து முடித்து பவுடர் போட்டு பொட்டு வைத்து உடையும் மாற்றிவிட்டவன் தன்னவளைத் தேட புடவையைச் சரிசெய்தவாறே அவனருகில் வந்தாள்.
“மாமி..”
“..”
“ஐ லவ் யூ”,என்றவன் இறுக்கமாய் அணைத்தக் கொண்டான்.
“அந்த சீசீடிவி பார்த்த அப்பறம்…”
“அவனை கொன்னுடுங்கோ எனக்காக அதைத் தவிர வேறெதுவும் கேட்க மாட்டேன்.”
“இசை…”
“அவன் பார்வை நோக்கம் எல்லாமே தப்பா இருக்கு.நேக்கு உடம்பெல்லாம் கூசறது இப்போ நினைச்சா கூட..”
“…”
“வீரா என் அத்தையும் அவா பையனும் கூட இங்க வந்திருந்தா..”,என்றதும் அவளை விலக்கி கேள்வியாய் நோக்கினான்.
“அவாளும் இப்போ ராஜுவோட கண்காணிப்பில் தான் இருக்கா.வரம்பு மீறி பேசிட்டா..நேக்கு மன்னிக்க மனசு வரலை.”
“!!!!”
“அவா பொண்ணுக்கான பாதுகாப்பை கொடுத்துருக்கேன்.அதே நேரம் இவா இரண்டு பேரும்…என்ன சொல்றதுனு தெரியலை வீரா”,என்றவள் தோள் சாய்ந்து கொண்டாள்.
“ரொம்ப கஷ்டம் கொடுத்துட்டேன் மாமி..”
“அப்படியெல்லாம் இல்லை.உண்மையா என்னால இத்தனை தைரியமா வெளி உலகத்தை எதிர்கொள்ள முடியும்னு நேக்கே தெரியலை.அதிலும் உங்களை யாரானும் எதாவது சொல்லிட்டா கோபம் ரொம்ப வந்துடுது.”
“புருஷனுக்கு ஏத்த பொண்டாட்டி..”,என்றவனின் குரலில் சின்னதாய் ஒரு சிரிப்பிருக்க தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்தவள் கழுத்து வளைவில் முகம் புதைத்துக் கொண்டாள்.
“ஊசிக்கு அழுதா பரவாயில்லையே ஊசி போடுறவாள பார்த்து அழுதா என்ன பண்றது.புது முகம் பார்த்தாலே ஒரே ஆர்பாட்டம் தான்.”,என்றவள் கட்டிலில் உறங்கும் குழந்தையைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இன்னைக்கு பாரு என் பொண்ணு எப்படி சமத்தா இருப்பானு.”,என்றவன் அதை நடத்தியும் காட்டியிருந்தான்.
மருத்துவமனைக்குள் சென்று விவரங்களைக் கூறிவிட்டு மருத்துவரிடம் பொதுவான ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டு ஊசி போடும் அறைக்குள் நுழைந்தனர்.
“வாங்க மேடம் இன்னைக்கு என்ன பண்ண போறானு தெரியலையே உங்க பொண்ணு”,என்று சிரித்த நர்ஸ் பின் வந்த வீரேந்திரனைப் பார்த்து வாயை மூடிக் கொண்டாள்.
ஏழிசையிடம் இருந்து குழந்தையை வாங்கியவன் நாற்காலியில் அமர்ந்து குழந்தையை மடியில் வைத்து கதை பேசிய வண்ணம் கண்ணைச் சிமிட்டி நாக்கை நீட்டி அவள் கவனத்தைத் தன்புறம் வைத்திருக்க ஏழிசையோடு சேர்ந்து ஊசி போட வேண்டியவளும் வேடிக்கை பார்த்தாள்.
வீரேந்திரன் திரும்பி ஒரு பார்வை பார்க்க வேகமாய் அருகில் வந்தவள் பஞ்சு கொண்டு குழந்தையின் தொடையைத் துடைத்து ஊசியைக் குத்தி எடுத்த பின்னும் தந்தையும் மகளும் நிகழ் உலகிற்கு வந்த பாடில்லை.
தாரகையின் சத்தமே இல்லாமல் போடப்பட்ட முதல் ஊசி என்பதை நினைத்து வியந்தவாறே நர்ஸ் சென்றுவிட ஏழிசையோ தன்னவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.
“என் பொண்ணு எவ்வளவு சமத்து பார்த்தியா..உங்களுக்கு எல்லாம் சமாளிக்கத் தெரியல டி.”,என்றபடி நிமிர்ந்தவன் மனைவியின் காரப் பார்வையில் வாயை மூடிக் கொண்டன்.
தந்தையின் பேச்சு தடைப்பட்டதில் சின்னவள் சிணுங்க மீண்டுமாய் இருவருக்கிடையில் மாட்டிக் கொண்டான் வீரேந்திரன்.
அன்று இரவு மகளை உறங்க வைத்துவிட்டு தன்னவனோடு பால்கனி ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள் ஏழிசை.
“வீரா..”
“சொல்லு மாமி..”
“உமையாளுக்கு வளைகாப்பு திவ்யா கல்யாணம்..வேலை நிறைய இருக்கு.”
“இதுக்கு மேல எதையும் தாங்குற சக்தி இல்லையோனு தோன்றது வீரா.குடும்பமா எல்லாரும் நல்ல விஷயமா கூடும் போது,எப்போ யாருக்கு என்ன நடக்குமோனு பயந்துண்டே இருக்க முடியாது.”
“தெரியும் இருந்தாலும் சீக்கிரம் முடிச்சுருங்கோ.அப்பறமே பங்ஷன் எல்லாம் பார்த்துக்கலாம்.”
“சரி மாமி..நீ சொல்லிட்டல..நான் பார்த்துக்குறேன்.இப்போ எனக்காக உன் பாட்டு பாடேன்..”,என்றவன் அவளை கீழிறக்கி அமர வைத்து மடியில் படுத்துக் கொண்டான்.
“உன்னை, நான் அறிவேன்! என்னையன்றி யாறரிவார்? கண்ணில், நீர் வழிந்தால், என்னையன்றி யார் துடைப்பார்? யார் இவர்கள் மாயும் மானிடர்கள்! ஆட்டிவைதால் ஆடும் பாத்திரங்கள்!
உன்னை, நான் அறிவேன்! என்னையன்றி யாரறிவார்? கண்ணில், நீர் வழிந்தால், என்னையன்றி யார் துடைப்பார்?”
இத்தனை நாள் போல் இல்லாது தூங்காமல் விழித்திருக்கும் இந்த இரவும் நிசப்தமும் மனதை குளிர் வித்திருந்தது ஏழிசைக்கு.