“கற்றார்முன் தோன்றா, கழிவு இரக்கம்; காதலித்து ஒன்று உற்றார்முன் தோன்றா, உறா முதல்; தெற்றென அல்ல புரிந்தார்க்கு அறம் தோன்றா; எல்லாம் வெகுண்டார் முன் தோன்றா கெடும்.
இழந்த பொருள்களுக்காக வருந்துதல் கற்றுணர்ந்த பெரியோர்களுக்கு இல்லை. சிறந்த நிலையை அடைய ஊக்கத்துடன் செயல்படுபவரிடத்து அந்நிலை விரைவில் கிட்டவில்லையே என்ற முயற்சித் துன்பம் இல்லை. அறத்தின் நல் இயல்பைத் தீயவர்கள் அறிய முடியாது. கோபம் கொள்பவர் முன் எல்லா நன்மைகளும் புலப்படாமல் போகும்.”
இரு தினங்கள் கழித்து அலுவலகத்திற்கு வந்தவள் இன்னுமாய் சோர்ந்துப் போயிருந்தாள்.இந்த வேலையை நம்பி எத்தனை கனவுகள் கண்டிருப்பாள்.தன் வீட்டில் உள்ளவர்களுக்கு எத்தனை ஆசைகளை வளர்த்திருப்பாள்.இப்போது இப்படி ஆகி விட்டதே என்று நினைத்து நினைத்து நொந்து போயிருந்தாள்.
அதை விடவும் மிகப் பெரும் கவலை டெர்மினேஷன் பற்றியதாக இருந்தது.நான்கு மாத கால அனுபவத்தோடு வெளியில் வேலை தேடுவதே கடினமெனில் அவர்களே வேலையை விட்டுத் தூக்கி விட்டார்கள் என்றால் நிச்சயமாய் வேலை கிடைக்கச் சாத்தியமே இல்லை..
இப்படி பல்வேறு சிந்தனைகளோடு தனதறைக்குள் நுழைந்தவளை ராஜீவ் தனதறைக்கு வருமாறு தொலைப்பேசியில் அழைக்க அங்குச் சென்றாள் அபூர்வா.
“வா டா…எப்படியிருக்க?”
“இப்போ பரவாயில்லை ணா..”
“….”
“சார் எப்போ வருவார்…ஃபார்மலிட்டீஸ் முடிச்சா நான் கிளம்பிருவேன்..அப்பறம் அந்த பேக்கை எங்கக் கொண்டு வந்து தரணும்னு சொன்னார்னா அதையும் பண்ணிடுவேன்..”
அவன் ஏதோ கோவத்துல சொன்னதெல்லாம் பெருசா எடுத்துக்காத அபூர்வா.நீ உண்மையா எங்களுக்கு கிடைச்ச ரொம்ப நல்ல எம்ப்ளாயி..உன் மேல இருந்த நம்பிக்கைனால தான அவ்வளவு முக்கியமான பைல்ஸை எல்லாம் உன்னை நம்பிக் கொடுத்துருக்கான்..”
“அதைப் பண்ணாமலே இருந்துருக்கலாம்…”
“இங்கப் பாரு அபூர்வா..அன்னைக்குச் சொன்னதுதான் இப்பவும் சொல்றேன்…பெரிய இடத்து விஷயங்களில் நாம தலையிடாம இருக்குறது தான் நல்லது…மாசம் முதல் தேதி ஆனா நமக்கு சம்பளம் வருதா அத்தோட நம்ம வேலை முடிஞ்சுது..”
“அந்தச் சம்பளமே எதோ கெட்ட வழியில வர்ற பணத்துல தான் கிடைக்குதுனா அது எனக்கு வேண்டாம்னு தான் சொல்றேன்..”
“வாதாடுறதுல எந்த பயனும் இல்ல…உண்மையா சொல்லணும்னா இப்போ இங்க நீ ப்ரஜீஷை எதிர்த்துட்டு போனா கண்டிப்பா இந்த ஸ்டேட்ல எங்கேயும் உன் படிப்புக்கு ஏத்த வேலையைச் செய்ய முடியாது அதுதான் உண்மை..நான் முதல்ல இருந்து உன் நல்லதுக்காகத் தான் பேசிட்டு இருக்கேன் அபூர்வா புரிஞ்சுக்கோ..”
சோர்வாய் தலையில் கைவைத்து அமர்ந்தவளைப் பார்ப்பதற்கே பாவமாய் இருந்தது ராஜீவிற்கு..
“இப்போ நான் என்ன தான் பண்ணணும்?”
“நீ பாட்டுக்கு போய் உன் வேலையைக் கவனி…அது போதும்..”,என்றவனைப் பார்த்து ஒன்றும் கூறத் தோன்றாமல் எழுந்து வெளியே சென்றிருந்தாள் அபூர்வா.
அடுத்த ஒரு மணி நேரத்தில் ப்ரஜீஷ் அலுவலகத்தை அடைந்திருக்க எப்போதும் போல் கையில் குறிப்பேடுடன் போய் அவன் முன் நின்றாள்.ஒரு முறை நிமிர்ந்து பார்த்தவன் அவளது காலை வணக்கத்திற்குத் தலையசைத்து விட்டு அன்றைக்கான வேலைகள் பற்றி அவன்போக்கில் கூற ஆரம்பித்திருந்தான்.
“இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ள இதெல்லாம் மெயில் பண்ணிடுங்க..”
“ஓகே ப்ரஜீஷ்..”,என்றவள் திரும்பித் தனதறைக்குப் போக எத்தனிக்க அவனது குரல் அவளைத் தடுத்து நிறுத்தியது.
“சோ உங்க அண்ணன் நல்லா தைரியம் கொடுத்து தான் அனுப்பிருக்கான்?”
“….”
“அவன் ஒரு சென்ட்டிமென்டல் இடியட்…”
“எல்லாரும் உங்களை மாதிரி இருந்துடுவாங்களா?!”
“!!!”
“இல்ல ஹாஸ்பிட்டல்ல அப்படி ஒரு நிலைமையில் இருக்குற பொண்ணுகிட்ட கூட உங்க காரியத்தைப் பத்தி விசாரிக்குறதுல தான குறியா இருந்தீங்க அதைச் சொன்னேன்…”
“அதுல எனக்குத் தெரிஞ்சு தப்பு எதுவும் இல்ல..எனக்கு இருந்த கொஞ்ச மனித நேயத்தோட உன்னை ஹாஸ்பிட்டல்ல சேர்த்து அதுக்கானப் பில்லையும் கட்டிட்டேன்..”
“…..”
“சரி ஒரு விஷயம் எனக்குப் புரியவே இல்ல…உன் பிரச்சனை தான் என்ன?அந்த பைல்ஸ் எதையாவது படிச்சியா?”
“அடுத்தவங்களோட விஷயங்களில் மூக்கை நுழைக்குற பழக்கம் எனக்கு எப்பவும் கிடையாது.சில விஷயங்கள் தற்செயலா காதுல பட்டது…அதை ஏத்துக்க முடில…நான் இன்னும் அந்த மாதிரியான சூழ்நிலைக்குப் பழகல அவ்ளோ தான்…”
ஒருவிதத்தில் அவளின் வெளிப்படையானப் பேச்சு அவனை ஆச்சரியப்பட்டுத்தியது.அவள் மிகவும் தைரியசாலி எல்லாம் இல்லை என்பதும் அவன் அறிந்ததே.இருந்தும் எதற்கும் வளைந்துக் கொடுக்காமல் வெளிப்படையாய் இருப்பதுவும் எல்லாருக்கும் முடியாத ஒரு விஷயம் ஆயிற்றே..
“ம்ம்..ஓகே லீவ் தட்…நாளைக்கு நைட் ஒரு பத்து மணிக்கு மேல என் ட்ரைவர் வருவார்..அந்த பேக்கைக் கொடுத்து விட்டுரு..எனிவே தேங்க்ஸ் பார் யுவர் ஹெல்ப்..”,என்றவன் கணிணியை நோக்கி பார்வையைத் திருப்பிக் கொள்ள இடவலமாய் தலையசைத்த வண்ணம் தனதிடத்திற்குச் சென்று வேலையைத் தொடர்ந்தாள் அபூர்வா.
“ஏன் டி அவங்க என்னவோ பண்ணிட்டுப் போறாங்கனு உன் வேலையைப் பார்ப்பியா..அதை விட்டுட்டு தேவையில்லாம ஏன் பேசுற அவர்கிட்ட?”
“அக்கா நீங்களும் இப்படி சொல்லாதீங்க…ஏதோ தப்பு இருக்கப் போய் தான இங்க கொண்டு வந்து மறைச்சு வைக்குறாங்க…”
“அய்யய்யே…போதும் நிறுத்து…நாலு நாளா இதேப் பாட்டைத் தான் பாடிட்டு இருக்க…உனக்குப் புரிய வைக்க எனக்கு சக்தி இல்ல…என்னவோ பண்ணு போ”,என தீபாவிடமும் வாங்கிக் கட்டினாள்.இருந்தும் அவளால் ஏனோ அதை மறக்க முடியவில்லை.
இந்தப் பிரச்சனை ஓரளவு முடிந்ததாக நினைத்திருந்த நேரத்தில் தான் அடுத்த இருபது நாட்களில் ப்ரஜீஷிடமிருந்து வந்திருந்த மின்னஞ்சல் அடுத்த இடியை இறக்கியது அவளுக்கு.
வேலை நிமித்தமாய் அவன் செல்லும் டெல்லி பயணத்தில் அவளும் சேர்ந்துச் செல்ல வேண்டியிருப்பதாக வந்த தகவலே அது.ராஜீவ் தனிப்பட்ட காரணங்களால் இதில் கலந்து கொள்ள முடியாததால் அவனிடத்தில் இவளை அழைத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தான்.
பிடிக்காத மருமகள் கைப்பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் நிலை தான் இவளுக்கும்..ஏனோ அவனைப் பற்றிய ஒரு நல்லது கூட தெரியாததால்(இல்லாததால்) சாதாரணமாய் அவளது வேலையில் இருக்கும் விஷயங்களைக் கூட அவளால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போனது.
இதற்கும் தீபாவிடமும் ராஜீவிடமும் ஒரு ஆட்டம் ஆடிவிட்டு தான் தயாராகியிருந்தாள்.
மறுநாளிலிருந்து மீட்டிங் என்று இருந்த நிலைமையில் முந்தைய நாள் இரவே அங்கு சென்றுத் தங்கிவிடுவது என்று முடிவு செய்து மாலை எட்டு மணியளவில் விமானத்திற்கு முன்பதிவு செய்திருந்தான்.
அபூர்வாவின் முதல் விமானப் பயணம் பயம் பதட்டம் என எல்லாமும் கலந்த மன நிலையில் விமான நிலையத்தில் நுழைந்தது முதல் விமானத்தில் ஏறி அமரும் வரையிலும் அவன் பின்னே சிறு குழந்தைப் போல் ஓட்டமும் நடையுமாய் சென்றாள்.
அனைத்தையும் கண்டும் காணாததுமாய் தன் கைப்பேசியைத் துழாவியபடி அவனிருக்கையில் அமர அவளின் ஜன்னலோர இருக்கையிலிருந்து வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
விமானம் கிளம்பும் நேரத்தில் தனக்குத் தெரிந்த அத்தனைக் கடவுள்களையும் மனதில் வேண்டிக் கொண்டவளாய் கண்களை இறுக மூடிக் கொண்டிருக்க அந்த சிடு மூஞ்சி சிவராமனுக்கே ஒரு நொடி புன்னகை பூத்திருந்தது.தன் விரல் கொண்டு லேசாய் அவளது கையில் தட்டியவனாய் அவளைப் பார்த்திருக்க,
கண் திறந்தவள் அவன் தன்னைப் பார்த்திருப்பதை உணர்ந்துத் தன்னை நிதானப்படுத்திக் கொள்ள முயன்றாள்.
“முதல் தடவைனால அப்படி இருக்கும்…ரிலாக்ஸ்…நீயும் இப்படி தம் கட்டி உட்காந்தேனா…அதுலேயே செத்துப் போயிருவ…”,என அக்கறையாய் ஆரம்பித்து அவன் பாணியிலேயே முடித்திருந்தான்.
ஒன்றும் கூறாமல் அவன் கூறியது படி தன்னை ஆழ் மூச்செடுத்து அமைதிப் படுத்தியவளாய் முன்னிருந்தப் புத்தகத்தை எடுத்து கையில் வைத்துக் கொண்டாள்.
அவனும் அதன் பின் எதுவும் பேசாமல் தன் வேலையைப் பார்க்க இரண்டு மணி நேரப் பயணம் முடிந்தால் போதுமென வெளியே வந்தவள் பெரூ மூச்சொன்றை வெளியிட்டாள்.
அவர்கள் விமான நிலையத்தின் வாசலை அடைந்த நேரம் இவர்களுக்கானப் பெயர் பலகையோடு ஒருவர் காத்திருக்க தன் கைப்பையை அவரிடம் கொடுத்தவாறு ப்ரஜீஷ் முன்னே செல்ல அவள் பையை வாங்க வந்தவரிடம் வேண்டாம் என மறுத்துவிட்டு அவர்களைப் பின் தொடர்ந்தாள் அபூர்வா.
அடுத்துக் கிட்டதட்ட ஒரு மணி நேரப் பயணம் அபூர்வாவிற்கோ போதும் போதுமென ஆகிவிட்டிருந்தது.விமானப் பயணம் இந்தப் போக்குவரத்து நெரிசல்,காரின் ஏசிக் காற்று என அத்தனையும் சேர்ந்து தலைவலியைக் கொடுத்திருந்தது.
கார் கண்ணாடியின் மீது தலை சாய்த்தவளாய் கண்மூடிக் கொண்டவள் அவர்கள் தங்க வேண்டிய நட்சத்திர விடுதியை அடைந்தவுடன் சோர்வாய் இறங்கிச் சென்றாள்.
அவன் வழக்கமாக வரும் இடம் போலும்,அவனைப் பார்த்ததுமே வரவேற்பாளர் புன்னகை முகத்தோடு எதைப் பற்றியும் விசாரிக்காமல் கையில் சாவியோடு அவர்களை அழைத்துச் சென்றார்.
ப்ரஜீஷின் அறையைத் திறந்து அவனது பையை உள்ளே வைத்துச் சென்றவர் அபூர்வாவின் அறைக் கதவை திறக்கச் சென்றார்.
“மானிங் 7 மணிக்கு கிளம்பினா சரியா இருக்கும்..சோ மேக் யுவர்செல்ப் ரெடி அக்கார்டிங்லி..”
“ஷுவர் ப்ரஜீஷ்…”
“அண்ட் எனக்கு சாப்பிட எதுவும் வேண்டாம்..உனக்கு வேணும் னா கீழே ரெஸ்டாரண்ட்டல போய் சாப்பிட்டுக்கோ…ஓகே குட் நைட்..”,என்றவன் அறைக்குள் நுழைந்து கதவைப் பூட்டிக் கொள்ள இருந்த எரிச்சலில் மேலும் கடுப்பாகியிருந்தாள்.
எங்குச் சென்று என்ன செய்வது என்று புரியாதவளாய் பின் அங்கு வந்த பணியாளிடம் ப்ரெட் மற்றும் பால் கொண்டு வருமாறு கூறிவிட்டு தனக்கான அறையில் கட்டிலில் விழுந்தாள்.
அறையைச் சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு அலுப்பையும் மீறி ஒருவித சந்தோஷம் வந்திருந்தது முதன் முறையாய்.அந்த அறையின் அளவு தான் அவர்களின் மொத்த வீடே இருக்கும்.படிப்பு என்ற ஒன்று அவளை எங்கு கொண்டு வந்திருக்கிறது என்று நினைத்து மகிழ்ந்தாள்.
தன் தங்கை என்னவெல்லாம் படிக்க நினைக்கிறாளோ படிக்க வைக்க வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டாள்.அடுத்த அரை மணி நேரத்தில் அவளுக்கென வந்த ப்ரெட் பாலை உண்டுவிட்டு அப்படியே கண்ணயர்ந்திருந்தாள்.
திடீரென பாதி இரவில் விழிப்பு வர இருக்கும் இடம் புரியாமல் சட்டென எழுந்து அமர்ந்தவளுக்கு அப்போது தான் தனியாக இருப்பதே நினைவிற்கு வந்தது.வந்தக் களைப்பில் எதைப் பற்றியும் யோசிக்காமல் தூங்கி விட்டவளுக்கு இப்போது என்னவோ போல் இருக்கச் சற்று வெளிக் காற்று வேண்டும் போல் இருக்க எழுந்து அவளறையின் பால்கனிக்குச் சென்றாள்.
இவர்கள் இருந்தது ஐந்தாவது தளமாதலால் அங்கிருந்து கீழே சாலைப் பார்ப்பதற்கு மிகவும் நன்றாகவே இருந்தது.விளக்குகள் எதையும் போடத் தோன்றாமல் இவள் சென்று நிற்கப் பக்கத்து அறையின் பால்கனியில் கேட்ட வித்தியாசமான சத்தத்தில் தன்னை மறந்து அங்குப் பார்த்தவள் அப்படியே நின்று விட்டிருந்தாள்.
அங்கு ப்ரஜீஷுடன் ஒரு பெண் மிகவும் நெருக்கமாய் கையில் மதுக் கோப்பையோடு அதற்கு மேல் அவர்களிருந்தக் கோலத்தை அவளால் காண சகிக்காமல் சட்டென உள்ளே நுழைந்து திரைச்சீலையைப் போட்டுவிட்டு வந்துப் படுத்துக் கொண்டாள்.
ஏனோ ஒரு மாதிரி அருவருப்பாய் காணக் கூடாததைக் கண்டுவிட்டதைப் போன்ற உணர்வில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது அபூர்வாவிற்கு.எப்படி இப்படியெல்லாம் நடந்து கொள்ள முடிகிறது.தான் உலகம் தெரியாமல் இருக்கிறோமா…இல்லை பெரிய இடத்துப் பிள்ளைகள் எல்லாமே இப்படி தான் இருப்பார்களா…
என்னவோ இதெல்லாம் நமக்குத் தேவையில்லாத விஷயங்கள்..வந்த வேலையைப் பார்த்துவிட்டு ஊர் போய் சேரலாம் என்று தனக்குத் தானேக் கூறிக் கொண்டவளாய் போர்வைக்குள் தன்னை அழுத்திக் கொண்டுத் தூங்க முயன்றாள்.