“நீ ஏன் மா மன்னிப்பு கேட்குற இது தெரிஞ்சால் உன் புருசன் அதுக்கும் என் மேல கோபப்படுவான்.”
“இல்ல..”
“நான் எதோ தாகத்துக்கு தண்ணி கேட்டேன் அது என்ன அவ்வளவு பெரிய தப்பா?”
“அவருக்கு வேற எதோ டென்ஷன் அத்தை.அதான் அப்படி பேசிட்டார்.நீங்க இங்க இருக்குற வரைக்கும் சகஜமா என்னோட பேசலைனா நேக்கு கஷ்டமா இருக்கும்.உங்களுக்கு என்ன வேணுமோ கேளுங்கோ நானே கொண்டு வந்து தரேன்.”,என்றவளை விசித்திரமாய் பார்த்தவர்,
“ஏன் அண்ணி நிஜமாவே இது திடீர் கல்யாணம் தானா?”,என்று பர்வதத்தைப் பார்த்தவர், தன்னை பயந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஏழிசையைப் பார்த்து சிரித்தார்.
“நேத்து தான் இங்க வந்துருக்க அதுக்குள்ள நான் பேசாம போனா உனக்கு கஷ்டமா இருக்குமா?அண்ணி நம்ம இந்திரனுக்கு நீங்க உலகம் பூரா தேடியிருந்தாலும் இப்படி ஒரு பொண்ணு கிடைச்சுருக்க மாட்டா..”,என்றவர் ஏழிசைக்கு திருஷ்டி கழித்து நெட்டி முறித்தார்.
தெரியாமல் பேசி விட்டோமே பிரச்சனை பெரிதாகி விடுமோ கணவனுக்குத் தெரிந்தால் கோபம் கொள்வானே என்று பயந்திருந்தவளுக்கு பெரும் நிம்மதியாய் இருந்தது.
அதன் பின் அப்படி இப்படியாய் பொழுதை கழித்தவளுக்கு மதியம் அனைவரும் ஓய்வெடுக்கச் சென்ற பின் என்ன செய்வதென தெரியாமல் தனதறைக்கு வந்தாள்.
தன் பையிலிருந்த உடைகளை அடுக்கலாம் என்று எண்ணியவளாய் பையைத் திறக்க அப்போது தான் தன் கைப்பேசியை உயிர்பிக்காததே நினைவிற்கு வந்தது.
அதை சார்ஜில் போட்டு ஆன் செய்தவள் கணவனின் எண்ணில் இருந்து வந்த குறுஞ்செய்தியை திறந்து அவனது எண்ணை சேமித்து வைத்துக் கொண்டாள்.
துணிகளை அலமாரியில் அடுக்கிக் கொண்டிருந்தவளின் கண்களில் கீழே மறைத்து வைக்கப் பட்டிருந்த ஏதோ காலில் தட்டுப்பட்டது.
அத்தனையும் வீரேந்திரனின் புகைப்படங்கள்.சிறு வயது தொடங்கி கல்லூரி வரையிலும் எடுத்ததாய் இருக்க வேண்டும்.அப்போது தான் சுவரை கவனித்தவள் அங்கிருந்த ஆணிகளை கவனித்தாள்.
ஒவ்வொன்றாய் எடுத்து தனக்கு பிடித்த வண்ணம் ஆணிகளில் மாட்டி வைத்துவிட்டு சற்று தள்ளி வந்து பார்க்க அறைக்கே சற்று அழகு கூடியிருந்ததாய் தோன்றியது.
மாலை முடிந்து இரவாகியும் வீரேந்திரன் வீட்டிற்கு வந்திருக்கவில்லை.அழைத்துப் பேசவும் தயக்கமாய் இருக்க மற்றவர்கள் உறங்கச் செல்லும் வரை பொறுத்திருந்தவள் வாசலிலேயே காத்திருந்தாள்.
பதினொரு மணியளவில் அவனது கார் கோட்டைக்குள் நுழைய எழுந்து நின்றவளைக் கவனித்தவாறே அவளை நோக்கி நடந்து வந்தான்.
“ஏன் இங்க குளிருல உட்காந்துருக்க இசை..”,அவனது அழைப்பை உணர்ந்தவளுக்கு முகம் மலர்ந்து போனது.
“நீ எனக்கு அப்படியே நேரெதிர்.நான் இவ்வளவு எல்லாம் மத்தவங்களுக்காக யோசிக்க மாட்டேன்.”
“இல்லையே நேக்காக நிறைய யோசிச்சுருக்கேள்..”,என்றவள் ஒரு வேகத்தில் கூறிவிட்டு தலை குனிந்து கொண்டாள்.
அந்த இரவு விளக்கின் ஒளியில் அவளது மூக்குத்தியின் அழகில் மயங்கித் தான் போனான்.
மனமும் மூளையும் எத்தனை தெளிவாய் இருந்தாலும் அவனின் வயதிற்கே உரிய உடல் மாற்றங்கள் ஏற்படத்தான் செய்தது.ஏழிசை விலகி இருந்திருந்தாலும் அவனும் சாதாரணமாக இருந்திருக்க வாய்ப்புண்டோ என்னவோ.
அத்தனை உரிமையாய் அவளை அருகில் வைத்துக் கொண்டு மனதை அலைபாயமல் இருக்க வைக்க முடியவில்லை.
“இசை..”
“ம்ம்..”
“இங்க வா”,என்றவனின் குரல் நிச்சயமாய் உள்ளுக்குள் ஏதோ செய்தது பெண்ணவளுக்கு.ஒன்றும் கூறாமல் எழுந்து அவனருகில் சென்று நின்றவளைக் கை பிடித்து தன் அருகில் அமர்த்தினான்.
அவள் கைகளைத் தன் கரங்களுக்குள் வைத்துக் கொண்டவனின் பார்வை மொத்தமும் அவள் முகத்தின் மீதே இருந்தது.
சில நொடிகள் அப்படியே கரைய அவன் வலது கரம் மென்மையாய் அவளது கன்னம் வருடியது.அதற்கு வாகாய் தலை சாய்த்து விழி மூடிக் கொண்டவளுக்கு முகமெல்லாம் சிவந்து விட்டிந்தது.
கன்னத்தை அழுந்தப் பற்றியவனாய் நெற்றியில் இதழ் பதிக்க தளர்ந்து போன கரங்களால் அவனது காரங்களை இறுகப் பற்றிக் கொண்டாள்.
இருவரும் உணர்வுகளுக்குள் தங்களைத் தொலைக்க அவளது இதழ்நோக்கி அவன் நகர்ந்த நேரம் கூச்சம் தாளாமல் சட்டென அவனது தோளில் சாய்ந்து விட்டிருந்தாள்.
ஆணுக்கேயுரிய கர்வமும் மகிழ்ச்சியுமாய் அவளைத் தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டான் அந்த அன்பு கணவன்.
தலை நிமிர்த்தாமல் அப்படியே இருந்தவளின் முகத்தை நிமிர்த்த முயற்சி செய்ய அவளோ இன்னுமாய் அவனில் ஒடுங்கினாள்.
அவனது சட்டையை இறுக்கமாய் பற்றியிருந்ததை உணர்ந்தவன்,
“உனக்கு என்னைப் பார்த்து பயம் இருக்குற மாதிரி தெரியலையே”,என அவளது காதருகில் கிசுகிசுத்தவனின் மீசை குறுகுறுப்பில் இன்னுமாய் பதட்டமானவள் சட்டென அவனுக்கு முதுகுகாட்டி அமர்ந்து கட்டிலின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டாள்.
மேலும் அவளைச் சீண்டிப் பார்க்க எண்ணம் இருந்தாலும் நேரமாவதை உணர்ந்தவனாய் எழுந்து அவளெதிரில் நின்று மீண்டுமாய் ஒரு நெற்றி முத்தத்தை பதித்து உறங்குமாறு கூறி நகர்ந்து நின்றான்.
அவனது முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியாதவளாய் தன்னிடத்தில் சென்று படுத்துக் கொண்டாள் ஏழிசை.
வீரேந்திரனுக்கோ அவளின் வெட்கமும் வாசனையும் பலவித உணர்வுகளைக் கொடுத்திருந்தது.பால்கானிக்குச் சென்றவன் சுருட்டை எடுத்து பற்ற வைத்த வண்ணம் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டிருந்தான்.
ஒரு மணி நேரம் கடந்திருக்க சத்தமில்லாமல் சென்று தன்னிடத்தில் படுத்தவன் சில நொடிகளில் தூங்கியும் போனான்.
மறுநாள் எழுந்ததில் இருந்தே அவன் ஏழிசையைப் பார்க்கவில்லை.யாரிடமும் கேட்கவும் முடியாமல் உணவு உண்பதற்காக கீழே செல்ல கதவைத் திறந்த நேரம் காவ்யாவோடு அறை வாசலில் நின்றிருந்தாள் ஏழிசை.
இரு கைகளிலும் முட்டி வரை மெஹந்தி போட்டிருக்க லேசாய் கலைந்த தலையோடு நின்றவளிடமிருந்து விழியகற்ற கடினமாய் இருந்தது.
“மார்னிங் ணா..நான் வரேன் ஏழிசை”,என்றபடி காவ்யா சென்றுவிட அவன் என்ன கூறுவான் என்ற எதிர்பார்ப்போடு உள்நுழைந்தாள்.
“குட் மார்னிங்..”
“குட் மார்னிங்..ஏன் இவ்வளவு காலையிலேயே இதெல்லாம்..எதுவும் சாப்பிட்டியா?”
“அப்போ தான் சாய்ந்திரத்துக்குள்ள நன்னா பத்துமாம்.நான் இனி தான் சாப்பிடணும் நீங்க போய் சாப்பிடுங்கோ.இன்னைக்கும் வேலைக்கு போணுமா?”
“இல்லை..அம்மா ஒரு நாள் வெளியில் போக வேண்டாம்னு சொன்னாங்க.”
“ஓ சரி..நீங்க போங்கோ நான் இங்க இருக்கேன்.”,என்றவள் இன்னமும் முந்தைய நாளின் நிகழ்வுகளில் இருந்து வெளிவராதது நன்றாகப் புரிந்தது வீரேந்திரனுக்கு.
அவனறியாமல் முகத்தில் சிறு மென்னகை தோன்றியிருக்க சம்மதமாய் தலையசைத்த வண்ணம் அவளைக் கடந்து கீழே சென்றான்.
தனதறையில் நாற்காலியிலும் கட்டிலிலுமாய் அமர்ந்தவள் பால்கனியின் ஊஞ்சலை நோக்கிச் சென்றாள்.
லேசாய் காலால் ஆட்டிவிட்ட படி அமர்ந்தவளுக்கு தன்னவனின் செயல்களே மனதை ஆக்கிரமித்திருந்தன.என்ன முயன்றும் முகத்தின் சிவப்பை மறைக்க முடியவில்லை. அவளால்.
“அவன் நியாபகம் அலை மோதிட குளிர் தென்றலும் தளிர் மேனியில் கொதிக்கின்ற போது இள மனம் எழுதிடும் புது பாட்டு இதை எனதுயிர் தலைவனும் கேட்டு வளை கரத்தை வளைத்து இழுத்து குலவிட வராணம் வசந்தம் இடத்து”
என்று பாடலை லேசாய் பாடிக் கொண்டிருந்தவளை அறை வாசலில் இருந்து ரசித்திருந்தான் வீரேந்திரன்.தான் வந்தது தெரிந்தால் நிச்சயம் பாட்டை நிறுத்தி விடுவாள் என்றறிந்தவனாய் அங்கேயே நின்றவன் மெதுவாய் அவளை நோக்கிச் சென்றான்.
அதைப் போலவே சட்டென பாடலை நிறுத்தியவள் அவன் கையிலிருந்த உணவுத் தட்டைப் பார்த்து மேலும் பதறினாள்.
“நீங்க ஏன் இதெல்லாம் எடுத்துண்டு வரேள்.நான் போய் சாப்பிட்டுக்க மாட்டேனா?”
“இருக்கட்டும் உட்கார்.”
“இல்ல அது…”
“எது?”
“வேணிகிட்ட சொல்லிருக்கேன் அவ கொண்டு வருவா.”
“அப்போ இதை என்ன பண்றது?”
“….”
அவளின் முக பாவங்களை ரசித்தனுக்கு கீழே உணவறையில் நடந்தது கண்முன் விரிந்தது.