அதிகாலை நேர பறவைகளின் சத்தத்தில் கண்விழித்தாள் ஏழிசை.பக்கவாட்டில் அமைதியாய் உறங்குபவனை சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனைக் கோபப்படுத்தாமல் பயப்படாமல் அவனுக்கு தொந்தரவாய் இல்லாமல் இருக்க வேண்டும் என தன்னுள் நினைத்துக் கொண்டவள் எழுந்து குளித்துத் தயாராகி கீழே சென்றாள்.
கோட்டையே அமைதியாய் இருந்தது.சமையலறையில் எட்டிப் பார்க்க அவளைக் கவனித்த வேணி ஓடி வந்தாள்.
“காபி சாப்பிடுறீங்களா மா?”
“ம்ம் சரி.அம்மா இன்னும் எழுந்துக்கலையா?”
“இல்லை மா பெரியம்மா ஏழு மணி போல வெளியே வருவாங்க.”
“ஓ..”,என்றவள் அவள் கொடுத்த காபியைக் குடித்துவிட்டு சற்றே தயக்கமாய்,
“அவர் என்ன சாப்பிடுவார்னு தெரியுமா?”
“சின்னையா காபி எதுவும் சாப்பிட மாட்டார்..எட்டு மணிக்கு நேரா காலை சாப்பாடு தான்.அப்போ டீ குடிப்பார்.”
“ஓ சரி..தேங்க்ஸ்”,என்றவள் புன்னகைத்து நகர்ந்தாள்.பூஜையறைக்குச் சென்றவள் விளக்கேற்றி வணங்கிவிட்டு தோட்டத்தில் இருந்து சில மலர்களைப் பறித்து சாமி படங்களுக்கு வைத்துச் சென்றாள்.
இரவு வெகுநேரம் கழித்து உறங்கியதாலோ என்னவோ வீரேந்திரன் தாமதமாய் கண்விழித்தான்.அறைக் கதவு திறக்கும் சத்தத்தில் எழுந்து அமர்ந்தவனைப் பார்த்து புன்னகைத்தாள் ஏழிசை.
“குட் மார்னிங்”,என்றவளைப் பார்த்து லேசாய் புன்னகைத்தவன்,
“குட் மார்னிங்..அப்போவே எழுந்துட்டியா?”
“ம்ம் அஞ்சு மணிக்கு எல்லாம் முழிப்பு வந்துரும்.நீங்க காபி எதுவும் சாப்பிட மாட்டேள்னு சொன்னா..”
“யாரு?”
“இல்ல கீழே போனேன் வேணிகிட்ட கேட்டேன் உங்களுக்கு என்ன எடுத்துட்டு வர்றதுனு தெரியலையேனு.அவ தான் சொன்னா.”
“ம்ம்..இன்னைக்கும் சொந்தகாரங்க நிறைய பேர் இருப்பாங்க.பார்த்து இருந்துக்கோ.”
“பயம் மொத்தமா போயிடுச்சு போல இருக்கே..”,என்றபடி குளிக்கச் செல்ல குழந்தையாய் புன்னகைத்தாள்.
அவன் குளித்து முடித்து வந்த நேரம் பால்கனியின் திரை விலகி இருக்க ஏழிசை அங்கு நின்று கொண்டு தலைமுடியை உலர்த்திக் கொண்டிருந்தது தெரிந்தது.
கவனம் எங்கோ இருக்க லேசாய் சோர்ந்திந்த முகத்தோடு மெதுவாய் விரல்களால் முடியை நீவிக் கொண்டிருந்தாள்.
தந்தையின் நினைப்பில் இருக்கிறாள் என்று உணர்ந்தவனுக்கு என்னக் கூறுவது என்று தெரியவில்லை.மூன்று நாட்களில் வாழ்க்கையில் எத்தனையோ திருப்பங்களைச் சந்தித்து விட்டவள் இத்தனை நிதானமாய் சூழ்நிலைக்கு பொருந்திப் போவதே பெரும் ஆச்சரியம் தான் என்று தோன்றியது.
கதவு தட்டும் ஓசையில் தன் சிந்தனை களைந்தவன் கதவைத் திறக்க கற்பகம் கை நடுங்க மல்லிச் சரத்தைப் பிடித்திருந்தாள்.
“பெரியம்மா கொடுத்து விட்டாங்க ஐயா.”,அதை கைகளில் வாங்கிக் கொண்டவன் கதவை சாற்றிவிட்டு வர அவனது காலடி ஓசையில் முகத்தை சிரித்தவாறு மாற்றியவளை அவன் கவனிக்கத் தவறவில்லை.
“அம்மா கொடுத்தாங்களாம்”
“தேங்க்ஸ்..உங்களுக்கு வெளியே போக நாழியாயிடுத்தோன்னோ தோ வரேன் இரண்டே நிமிஷம்.”,என்றவள் வேகமாய் இரு புறமும் சில முடிக்கற்றைகளை எடுத்து பின் போட்டு கீழே நுனி முடியை முடிச்சிட்டுக் கொண்டாள்.
கொடுத்த மலர் சரத்தை தலையில் வைத்த வண்ணம் கேர்பின்னை வாயில் வைத்தபடியே அவனை நோக்கி வந்தவள்,
“வாங்கோ போலாமா?”,என்று கேட்க ஒன்றும் கூறாமல் மென்மையாய் அவளை அணைத்து தோள் தட்டி விலக்கினான்.
“உன் கஷ்டத்தை என்னால புரிஞ்சுக்க முடியுது.அப்பாவை இழந்து இரண்டே நாள்ல இப்படியெல்லாம் இருக்குறது கஷ்டம் தான்.ஆனாலும் உன்னை யாரும் எதுவும் சொல்லிட கூடாதுனு தான் அப்பா அம்மா இத்தனை சீக்கிரமா ஏற்பாடு பண்ணிருப்பாங்கனு நினைக்குறேன்.
எது எப்படியிருந்தாலும் உன் அப்பா அம்மா உன் கூடவே தான் இருப்பாங்க.தைரியமா இரு..ம்ம்?”,என்றவனின் இடது தோளில் சாய்ந்து கொண்டாள்.
“என்னை ஏன் இப்படி கவனிக்குறேள்.எப்போ எல்லாம் நேக்கு ஆதரவு தேவைப்படுதோ உங்களை அறியாமையே நேக்கு அது கிடைச்சுடுது.அப்பாவோட ஆசீர்வாதம் தான் உங்ககிட்ட நான் வந்துருக்கேன்.தேங்க் யூ..”,என்றவள் விழி நீரைத் தட்டிவிட்ட படி நிமிர்ந்து நின்றாள்.
“முடிஞ்ச அளவு சீக்கிரம் வந்துருவேன்.பார்த்து இருந்துக்கோ.”
“ம்ம்”,என்றவளோடு கீழே உணவு மேசைக்குச் சென்றான் வீரேந்திரன்.
அவர்கள் இருவரும் சென்ற நேரம் உணவு மேசை காலியாக இருக்க அவர்களைத் தொடர்ந்து பர்வதமும் ராஜராஜனும் வந்தமர்ந்தனர்.
“குட்மார்னிங் பா..குட்மார்னிங் மா..”,என்றவளை நிமிர்ந்து பார்த்தவன் அமைதியாகவே இருக்க பெரியவர்கள் இருவரும் சிரித்த முகமாய்,
“குட்மார்னிங் மருமகளே..”,என்றபடி எதிர் மேசையில் அமர்ந்தனர்.
மூவருக்கும் தட்டை நிமிர்த்தி வைத்துவிட்டு அவள் பரிமாறத் தொடங்கினாள்.
தன் மகனையும் அவளையும் அந்தக் கோலத்தில் பார்த்தவர்களுக்கு அத்தனையாய் ஒரு திருப்தி.அவர்களையே கவனித்த வண்ணம் உணவை கொறித்தவனுக்கு தன்னருகில் இருப்பவளால் எல்லோரையும் புன்னகைக்க வைத்துவிட முடியும் என்றே தோன்றியது.
“சாம்பார் போடாவா இன்னும் கொஞ்சம்?”
“ம்ம்..”
“பா இன்னும் ஒரு இட்லி வைச்சுக்கோங்கோ..”
“மா உங்களுக்கு..”,என்று பார்த்து பார்த்து பரிமாறிக் கொண்டிருந்தவள் சற்று தூரத்தில் சில பேச்சுக் குரல்கள் கேட்க நாசூக்காய் பரிமாறுவதை நிறுத்திவிட்டு வேணியை அழைத்து நிறுத்திக் கொண்டாள்.
அர்த்தமாய் வீரேந்திரன் மனைவியைப் பார்க்க அவளும் அதை உணர்ந்து புன்னகைத்தாள்.சாப்பிட்டு விட்டு வீரேந்திரன் எழுந்து கொள்ள அதே இடத்தில் அமர்ந்தவளின் முன் இருந்த தட்டை எடுப்பதற்காக வேணி எத்தனிக்க,
“இல்ல பரவால்ல..இதுலேயே போடு வேணி..”,என்றவள் தலை குனிந்துக் கொண்டாள்.
பர்வதமும் ராஜராஜனும் எதையும் கவனியாதவர்களாய் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்க வீரேந்திரன் ஒரு நொடி ஆச்சரியத்தை மறைத்து கை கழுவச் சென்றான்.
“அம்மா ஐயா டீ சாப்பிடாமலேயே போயிட்டார்.”
“ஓ நான் கொடுத்துடுறேன் வேணி.”,என்றவள் வேகமாய் உணவை முடித்து எழுந்து கொண்டாள்.
அதற்குள் சில உறவினர்கள் பெரியவர்களிடம் பேசிய படி அமர பொதுவாய் சிரித்து விட்டு தன்னவனுக்கான டீயோடு மாடிக்குச் சென்றாள்.
கையைப் பிடித்து எழுந்தவன் காபி டம்ளரை அருகிலிருந்த டீப்பாவில் வைத்துவிட்டு அவளையே பார்த்திருக்க,
“இல்ல அது அம்மா ஆத்து பழக்கம்.அப்பா…அப்பா சாப்பிட்ட தட்டில் தான் சாப்பிடுவா.நேத்து மதியானம் அசைவம் இருந்தது அதுவுவில்லாம நேக்கு கொஞ்சம் பயம்.ராத்திரி இரண்டு பேரும் தனியா தான் சாப்பிட்டோம்.அதான்…”
“…”
“உங்களுக்கு பிடிக்கலைனா இனி பண்ணலை..”
வீரேந்திரனுக்கு தன் மனநிலை என்னவென்பதே புரியவில்லை.இத்தனை வருடத்தில் தன் தாய் கூட இதை செய்ததில்லை.அவர்களின் குடும்பத்தில் அப்படியான பழைய வழக்கமும் இருந்திருக்க வில்லை.
அப்படியிருக்க தனது எச்சில் தட்டில் அவள் உணவு உண்பதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டுமென்றே புரியாத நிலைதான் அவனுக்கு.
“ஏன் எதுவும் சொல்ல மாட்றேள்?”
“ம்ம் ஒண்ணுமில்ல..சரி நான் கிளம்பட்டுமா?”
“போய்ட்டு வாங்கோ மதியம் நேரமே சாப்பிட்டுருங்கோ..”
“சரி..”,என்றவன் அரை மனதாய் கிளம்பினான்.ஏனோ அவளிடம் நிறைய பேச்சு வளர்க்க வேண்டும் போல் இருந்தது.அவள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருந்தது.சிந்தனைகளை ஒதுக்கியவன் அறையை விட்டு வெளியே வர பழைய வீரேந்திரனாய் மாறியிருந்தான்.
அவன் கிளள்பியதும் கீழே வந்தவள் சிறியவர்கள் அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை கவனித்து விட்டு அங்குச் சென்றாள்.
“ஹாய் அண்ணி…”
“குட்மார்னிங்..”
“பாரு டா அண்ணி வாங்க பழகலாம் கோர்ஸ் ஸ்டார்ட் பண்ற அளவு இம்ப்ரூவ் ஆகிருக்காங்க.”,என்ற ராகவைப் பார்த்து புன்னகைத்தவள் திவ்யாவின் அருகில் அமர காவ்யா தன் கணவன் குழந்தையோடு அங்கு வந்தாள்.
“குட்மார்னிங் ணா..”,என்றவள் ஈஸ்வரைப் பார்த்து சிநேகப் புன்னகை உதிர்த்த வண்ணம் காவ்யாவின் குழந்தையை வாங்கிக் கொண்டாள்.
“ஜிஷா குட்டி…எங்க வந்துருக்காங்க..”,என்றபடி குழந்தையை மடியில் வைத்துக் கொண்டாள்.
“நீ போய் சாப்பிடு காவ்யா..நான் பாப்பாவை பார்த்துக்குறேன்.”
“அதெல்லாம் இல்ல ஏழிசை.நான் சீக்கிரம் வந்துடுறேன்”,என்றவள் ஓடியதைப் பார்த்தவர்களுக்கு சிரிப்பு வந்தது.
“அப்பறம் அண்ணி..நீங்க காலேஜ்ல எப்படி பயங்கர படிப்ஸ்னு கேள்வி பட்டேன்.”
“அப்படியெல்லாம் இல்ல ராகவ்.ஸ்கூல் மாதிரியே டெய்லி கொஞ்ச நேரம் படிச்சாலே போதும்.நிறைய மார்க் வாங்கலாம்.”
“என்ன இவ்வளவு பெரிய விஷயத்தை சாதாரணமா சொல்றீங்க…டெய்லி படிக்கணுமா..”
“பேசாம என்கிட்ட டியூஷன் வந்துரு அப்பறம் பாரு..”
“ஐய்யையோ தெரியாம கேட்டுட்டேன் ஆளை விடுங்க”,என்றவனைப் பார்த்து திவ்யாவும் சிரிக்க அப்போது ரவீந்தரன் தன் மனைவியுடன் அங்கு வந்தான்.
“ஹாய் குட்மார்னிங்”,என்று இருவருக்கும் பொதுவாய் ஏழிசை கூற உமையாளோ அவளைச் சற்றும் மதிக்காது அங்கிருந்து நகர்ந்து விட ரவீந்தரன் சமாளிப்பாய்,
“ஹாய் அண்ணி அவ கொஞ்சம் மூடி டைப் நீங்க எதுவும் நினைச்சுக்காதீங்க..”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல.நீங்க போய் சாப்பிடுங்கோ.”,எனும்போதே காவ்யாவின் குட்டி உதட்டைப் பிதுக்கி அழ ஆரம்பித்திருந்தாள்.
“ஐயோ ஆரம்பிச்சுட்டா இன்னும் கொஞ்ச நேரத்துக்கு நிறுத்த மாட்டா..திவ்யா போய் அக்காவை கூட்டிட்டு வா.”,என்று ராகவ் கூறினான்.
“அவளை ஏன் தொந்தரவு பண்ணிகிட்டு நான் பார்த்துக்குறேன்.அவ சாப்பிட்டு வரட்டும்”,என்றபடி குழந்தையைத் தூக்கிக் கொண்டு வாசலில் அங்குமிங்கும் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தாள்.
காவ்யாவை விருந்தினர்கள் சிலர் பிடித்துக் கொள்ள சிறிது நேரம் கழித்து வந்தவள் அங்கு ஏழிசையோடு விளையாடிய படியே உணவு உண்டு கொண்டிருந்த மகளைப் பார்த்து புன்னகைத்தாள்.
“என்ன ஒரு அதிசயம்.அழாம இருக்காளேனு பார்த்தா உன்கிட்ட சாப்பிட கூட செய்றாளா?”
“ஜிஷா குட்டி சமத்து இல்ல செல்லம்.”,என்றவளைப் பார்த்து தன் நான்கு பற்களைக் காட்டிச் சிரித்தது அந்த பூச்செண்டு.
“உன்னை இங்கே இப்படி பார்க்குறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ஏழிசை.”
“வாழ்க்கை யாருக்கு என்ன ரகசியத்தை வைச்சுருக்கும்னு யாருக்கும் தெரியுதில்லை.இல்ல காவ்யா!”
“உண்மைதான்.உனக்கு நியாபகம் இருக்கா அண்ணாவைப் பத்தி நான் எதாவது சொல்ல ஆரம்பிச்சாலே உன் காதில் ரத்தம் வருதுனு சொல்லுவியே”,என்றவள் சிரிக்க ஏழிசைக்கோ வெட்கமாய் இருந்தது.
“அது நீ..எப்பவுமே அவரைப் பத்தி பேசிட்டே இருப்பியோனோ..”
“ம்ம்..எங்க நாலு பேருக்குமே அண்ணா தான் முதல் ஹீரோ.அண்ணா காலேஜ் போற வரையும் நாங்க எல்லாருமே ரொம்ப க்ளோஸ்.அம்மா அப்பாவை விட எங்களுக்கு அண்ணா தான் வேணும்.
அதுவும் ராகவ் எல்லாம் அவருக்கு முதல் பையன் மாதிரி அவனுக்கு அண்ணா தான் யூனிபார்ம் கூட போட்டுவிடனும்.
இப்போ வரையும் அவனுக்கு அதெல்லாம் பெரிய குறை.அண்ணாவுக்கு அதிக பொறுப்பு இருக்குனு புரிஞ்சாலும் பழைய நாட்கள் வராமலே போயிடுச்சேனு அப்பப்போ பீல் பண்ணுவான்.”
“கொஞ்சம் சட்டுனு கோவம் வந்துடுது மத்தபடி பாசமேல்லாம் அப்படியே தான் இருக்கும்.அந்த இரக்கம் இல்லைனா என் தோப்பனார்காக நேக்கு இப்படி ஒரு வாழ்க்கை கொடுத்துருப்பாரா!”
“ஏய் என்ன இரக்கம் வாழ்க்கை கொடுத்தார்னு பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்ற..இங்க பாரு,சூழ்நிலை வேணும்னா சரியா இல்லாம இருந்துருக்கலாம் ஆனால் அண்ணா உன்னை அவரு மனைவியாக தான் பார்ப்பாரே தவிர கணபதி அங்கிளோட பொண்ணா பார்க்க மாட்டார்.
நேத்து அத்தை மேலேயே கோபப்பட்டதை நீயும் பார்த்த தான.அவருக்கு கிடைக்க வேண்டிய மரியாதையும் உரிமையும் உனக்கும் கிடைக்கணும்னு நினைக்குறார்.
உங்க இரண்டு பேருக்குமே மனசளவுல சில தயக்கங்கள் இருக்கலாம் ஆனால் அதையும் மீறி ஒரு அந்யோன்யம் இருக்கு ஏழிசை.”
“ம்ம்..”,என்றவளுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது. காவ்யா கூறுவதில் இருக்கும் உண்மைகள் அவளுக்கும் புரிந்து தான் இருந்தது.அவன் முதலிலிருந்தே அவள் மனதில் அதைதான் பதிய வைக்க முயற்சி செய்தான் என்பது புரிந்தது.
“பழசெல்லாம் மறந்து புதுசா வாழ்க்கையை ஆரம்பி ஏழிசை.அப்பா அம்மாவுக்கும் அவ்வளவு சந்தோஷம்.இங்கே எல்லாருக்கும் உன் சந்தோஷம் மட்டும் தான் வேணும்.
கொஞ்சம் சுய நலமுமே தான்,வீட்டுக்கு வந்த மருமகள் சந்தோஷமா இருந்தா தான் அந்த வீடே சந்தோஷமா இருக்கும்.நீ புத்திசாலி,புரிஞ்சுப்பனு நினைக்குறேன்”,என்ற தோழியை அணைத்துக் கொண்டாள் ஏழிசை.