எத்தனை பேர் இருக்கப் போகிறார்ளோ என்ன நடக்குமோ என்ற கவலையெல்லாம் ஏழிசைக்கு இருந்ததாகத் தெரியவில்லை.
மனம் மொத்தமும் தன்னவனையும் குடும்பத்தையும் காப்பாற்றிட வேண்டும் என்ற வெறி.முடிந்த அளவு சமையலறையிலிருந்து தூரமாய் ஒளிந்து நின்று கொண்டனர் பெண்கள் மூவரும்.
பத்து பேர் இருக்கலாம்,சமையலறை நோக்கி ஓடுவது தெரிந்தது.ஒவ்வொருவனும் இருந்த பலத்திற்கும் உயரத்திற்கும் நிச்சயமாய் தங்களால் தாக்குப் பிடிக்க முடியாது என்று புரிந்து கொண்டவள் நொடியும் யோசிக்காது வேணியின் கையிலிருந்த அரிவாள் மனையை பிடுங்கிக் கொண்டு தன் கையிலிருந்த சாவிக் கொத்தை அவள் கரத்தில் திணித்தவளாய் வேணியையும் கற்பகத்தையும் அருகிலிருந்த அறைக்குள் தள்ளி பூட்டியிருந்தாள்.
ராஜராஜனும் ராகவும் தட்டும் சத்தம் கேட்டு வந்தவர்கள் அவர்கள் கதவை உடைக்க நினைக்க அந்த காலத்து கதவு கம்பீரமாய் அசையாமல் நின்றது.
அதிலிருந்து சற்று தூரத்தில் இருந்த ஏழிசையின் புடவையை கவனித்தவனாய் ஒருவன் அவள்புறம் நகர்ந்து கை வைக்க இருந்த நேரத்தில் அரிவாள் மனையை அவன் மீது இறக்கியிருந்தாள்.
சத்தத்தை கேட்டு அனைவரும் அந்தப்பக்கம் வர பெண்ணவளுக்கோ மயக்கம் வந்தது. தலையை உலுக்கிக் கொண்டு கண்மன் தெரியாமல் ஆயுதத்தை வீசியவளை சில நிமிடங்களில் பின்னிருந்து பிடித்திருந்தான் ஒருவன்.
எப்படியும் ஷ்யாம் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் அசராமல் நின்றிருந்தவளை நோக்கி கையில் பெரிய கத்தியோடு ஒருவன் முன்னேறி வர கையை ஓங்கிய நேரம் புல்லட் ஒன்று அவன் நெற்றியில் துளைத்து வெளியேறியது.
அவன் மடங்கி கீழே விழ கையில் துப்பாக்கியோடு வெறி பிடித்தவனாய் நின்றிருந்தான் ராஜு.
மிகப்பெரும் களேபரத்துக்கு அந்த இடம் தயாராக அடுத்த இரண்டு பேர் உயிர் பிரிந்த நேரம் ஷ்யாம் போலீஸோடு வந்துவிட்டான்.
அத்தனை நேர அயர்வும் கண்ணைச் சுழற்ற புடவை மொத்தமும் இரத்தில் குளித்திருக்க அப்படியே மயங்கிச் சரிந்தாள் ஏழிசை.
ராஜுவும் ஷ்யாமும் அவளை நோக்கி ஓடி இருவருமாய் சேர்ந்து அவளை அங்கிருந்த சோபாவில் படுக்க வைத்தனர்.பக்கத்து அறையின் கதவைத் திறக்க வேணியும் கற்பகமும் ஓடி வந்தனர்.
“ஐயோ அம்மாக்கு என்னாச்சு?”
“வேணி மயக்கம் தான்..போய் தண்ணி கொண்டு வா”,என்றபடி ராஜு அடுத்த அறை நோக்கிச் செல்ல வேணி அவசரமாய் அவன் கையில் சாவியைக் கொடுத்துவிட்டு கற்பகத்தோடு ஓடினாள்.
ராகவ் மற்றும் பெரியவர்களின் அறைக் கதவைத் திறந்து விட வீட்டைப் பார்த்தவர்களுக்கு இதயமே நின்று போனது.குழந்தையை பர்வதம் கையில் பிடித்திருக்க ராகவ் பெற்றவர்களின் நலனைச் சோதித்தான்.
மூவருமாய் ஏழிசையைத் தேடி ஓடினர்.அந்த மயக்கத்திலும் அவள் இறுக்கிப் பிடித்திருந்த அரிவாள் மனையிலிருந்து இரத்தம் சொட்டியது.
“ஐயோ கண்ணா..என்ன டா ஆச்சு..என்னை பாரு டா..”,
“அண்ணி..எழுந்துருங்க..அண்ணி..”
“சார் மயக்கத்தில் இருக்காங்க பயப்பட ஒண்ணுமில்ல சார் நான் டாக்டருக்கு கால் பண்ணிட்டேன்”,என்ற ஷ்யாமை ராஜராஜன் நன்றியாய் நோக்கினார்.
அதற்குள் வேணியும் கற்பகமும் தண்ணீரோடு அங்கு வர நடந்த அனைத்தையும் மற்றவர்களிடம் கூறி முடிக்க ஷ்யாம் முதற்கொண்டு அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
“அண்ணியா???”
“ஆமாங்க ஐயா..அவங்களை இப்படியெல்லாம் பார்த்ததேயில்ல..நம்ம சின்னையாவே பார்த்தா மாதிரி இருந்தது.”
“…”
“பேசுறதே வெளியில கேட்காத பொறுமை நம்ம சின்னம்மா இன்னைக்கு பார்த்தப்போ அந்த காளியே வந்து அவங்களுக்குள்ளே இறங்கின மாதிரி இருந்தது எனக்கு.”
“எப்படியிருந்த அண்ணி…ஏஞ்சல் பாவம் மா..அவங்களுக்கு ஏன் மா இதெல்லாம் நடக்கணும்”,என்ற ராகவின் கண்கள் கலங்கியது.
“அந்த கடவுள் இன்னும் எத்தனை சோதனையை தான் என் மருமகளுக்குக் கொடுப்பரோ”,,என்ற பர்வதம் குழந்தையோடு சோபாவில் அப்படியே அமர்ந்துவிட்டிருந்தார்.
வீரேந்திரனின் அறைக் கதவைத் திறந்த ராஜு அவனது நலத்தை உறுதிபடுத்தி விட்டு மற்றவர்களிடம் வந்தான்.
“ஷ்யாம் சார் வெளியில் அத்தனை பேரும் மயக்கத்துல கிடக்குறாங்க..எதோ ஒரு வண்டி வந்ததா செக்யூரிட்டி அரை மயக்கத்தில் சொன்னான்.நல்ல வேளையா..”
“நீ எங்க போய் தொலைஞ்ச ராஜு உனக்கு தான் விடாம ட்ரை பண்ணிருக்காங்க..நீ எடுக்கலைனதும் எனக்கு கால் பண்ணி விஷயத்தை சொன்னாங்க.நீ வர கொஞ்சம் தாமதமாகியிருந்தாலும் என்ன நடந்துருக்கும்னு உனக்கு புரியுதா?”,கோபத்தில் கத்திக் கொண்டிருந்தான் ஷ்யாம்.
“மன்னிச்சுருங்க ஷ்யாம் சார்..அந்த நாயை கொல்லாம விடக் கூடாதுனு தான் கிளம்பி போயிட்டேன்.அண்ணையாவுக்கு தெரிஞ்ச ரைஃபில் ஷுட்டர் ஒருத்தரைப் பார்த்துட்டு கையோட அந்த ஜான் இருந்த ஹோட்டலுக்கு போயிட்டேன்.
கண்டிப்பா இந்நேத்துக்கு செத்துருப்பான்.இடது தோள்பட்டையில் இறங்கிடுச்சு கூட யாரும் இல்லை கண்டிப்பா பொழைக்க மாட்டான் சர்.”,என்றவனின் முகத்தில் குரூரர திருப்தி நிலவியது.
இருந்த இடத்தை விட்டு எழுந்தே விட்டிருந்தான் ஷ்யாம்.
“ராஜு!!!”
“உண்மையாக தான் சார் சொல்றேன்.எவ்வளவு தைரியம் இருந்தா அண்ணி மேலேயே கையை வைச்சுருப்பான்.அவன் எதிரே நின்னு அவன் கண்ணைப் பார்த்து கொல்லணும்னு தான் என் ஆசை ஆனாலும் நம்ம பக்கம் எந்த சேதாரமும் இருக்கக் கூடாதுனு தான்..அண்ணையா எழுந்து வந்தவுடனே இதை சொன்னா சந்தோஷப்படுவாரு இல்ல சார்.”
இவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த மற்றவர்களுக்கு அவர்களின் பாசமும் விசுவாசமும் புரிந்தது.அதற்குள் மருத்துவர் வந்துவிட ஷ்யாம் போலீஸிடம் பேசுவதற்காக எழுந்து சென்றான்.
வேணியின் பார்வை கோபமாய் தன் மீது விழுவதைப் பார்த்த ராஜு அறையை விட்டு வெளியே வர பின்னே வந்தவள் அவனிடம் கத்தினாள்.
“கொஞ்சமாச்சும் அறிவு இருக்காயா உனக்கு..”
“ஏய் வேணி என்ன வாய் ரொம்ப நீளுது..”
“கையே நீளும் பாக்குறியா பெரிய சண்டியரோ நீ..அங்க போய் ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகியிருந்தா..நான் என்னையா பண்ணிருப்பேன்.”,என்றவளின் கண்கள் கலங்கியது.
“வேணி!!!”
“அருவாவும் துப்பாக்கியும் மட்டும் தான் தெரியுமா உனக்கு..பக்கத்துலேயே இருக்குற என் மனசு புரியல இல்ல..சொல்றேன் கேட்டுக்கோ உனக்கு மட்டும் எதாவது ஆச்சு நான் உசுரோடேயே இருக்க மாட்டேன்.”,என்றவள் கண்ணீரைத் துடைத்தவாறு உள்ளே செல்ல ராஜுவோ அதிர்ச்சியிலிந்து விலகாமல் இருந்தான்.
பிரச்சனை எல்லாம் முடிந்தது என்று சற்றே ஆசுவாசமடைந்த ஷ்யாமின் கைப்பேசி சிணுங்கியது.அழைப்பை ஏற்று காதில் வைத்தவன் கேட்ட செய்தியில் இதயமே நின்று போனது.
ராஜுவைத் தேடி ஓரமாய் இழுத்து வந்தவனின் முகம் பயத்தில் முங்கியிருக்க ராஜு என்னவெனக் கேட்டான்.
“நீ சுட்டது ஜானோட தம்பி இரட்டைப் பிறவி அப்ரகாமாம்.ஆள் செத்துட்டான்.”
“என்ன?????”
“எனக்கே இது புது நியூஸ் ராஜு.அவனைப் பத்தி இதுவரை எந்த விஷயமும் வெளி வந்ததில்ல.எனக்கு பயமா இருக்குடா..அந்த ஜான்!!!!”
பின்னந்தலையில் வேகமாய் தட்டிக் கொண்டவனுக்குமே என்ன செய்வதென்று புரியவில்லை.ஜானின் கோபம் ஏழிசையின் பக்கம் திரும்பாமல் இருக்க வேண்டுமே என்று பலவாறாய் சிந்தனைக்குள் தன்னைத் தொலைத்தான் ராஜு.
ஒவ்வொருவரும் ஒரு ஒரு பயத்திலும் கலக்கத்திலும் தவித்திருக்க அன்றைய இரவு தூங்கா இரவாய் மாறிப் போனது கோட்டைக்கு.
அடுத்த நாள் காலையில் சற்றே தெளிந்தவளாய் எழுந்தமர்ந்தவள் தாரகையை தன் கையில் வாங்கிக் கொண்டு கணவனைப் பார்க்கச் சென்றாள்.
“நீங்க எழுந்து வந்தப்பறம் நான் இதெல்லாம் பண்ணிணேன் சொன்னா உங்களால நம்பக் கூட முடியாது வீரா.பேசுறதுக்கே எத்தனை பயப்படுவேன்.வாழ்க்கை எதையெல்லாம் கத்துக் கொடுத்துடுத்து பார்த்தேளா.
பொம்மனாட்டி பிறப்பே இது தான்.பிரசவத்திலிருந்து கஷ்டம் தான்.வளரும் வரை ஒரு வாழ்க்கை.கல்யாணம் முடிஞ்சு வேற மாதிரியான வாழ்க்கை.ஆனால் எல்லாத்துக்கும் நொடியில் தன்னை தயார் படுத்தின்டுறா.
களிமண் மாதிரி சூழ்நிலைக்கும் தன்னை சார்ந்தவங்களுக்கும் ஏத்த மாதிரி தன்னைத் தானே மாத்திண்டு வாழ்க்கையை ஒவ்வொரு கட்டத்தையும் போராடி முன்னேறிடுறா இல்ல..
நேக்கு அத்தனை தைரியம் எங்க இருந்ததுனு தெரியலை.உங்க எல்லரையும் காப்பத்தணும்ங்கிற எண்ணம் மட்டும் தான் இருந்தது.நீங்க எப்போதும் சொல்லுவேளே நம்ம மேல இருக்குற பயம் தான் நம்ம பலம்னு.
நீங்க ஒருத்தர் இல்லாம அந்த பயம் போயிடுத்து வீரா.கோட்டைக்குள்ளேயே வர்ற அளவு துணிஞ்சுட்டா.இது எல்லாத்துக்கும் பதிலடி தரணும்.சண்டை வேண்டாம்னு நினைக்குற நானே சொல்றேன்.இதுக்கு காரணமானவா யாரையும் விட்றாதேள்.
எனக்காக நீங்க பண்ண போற மிகப் பெரிய விஷயம் இது மட்டுமாதான் இருக்கும்.”,எனும் போதே வீரேந்திரனின் இதயத்துடிப்பு அதிகமாகி விட்டதற்கான கருவி ஒலி அறையெங்கும் எதிரொலித்தது.
சப்த நாடியும் அடங்கிப் போனவாளாய் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வெளியில் ஓடினாள்.
“அப்பா..ம்மா..ராகவ்”
“ராஜு டாக்டருக்கு போன் பண்ணு ஆம்புலனெஸ் வரச் சொல்லு”,என்றவளின் கதறலில் அனைவருமாய் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தனர்.
ஆம்புலன்ஸில் ஏறியபோது கூப்பிய கரங்களை இறக்கவே இல்லை ஏழிசை.கண்களில் கண்ணீர் வழிய மூடிய விழிக்குள் பலமுறை செத்துப் பிழைத்திருந்தாள்.
தன் மீது பார்வையின் தீண்டல் படர்வதாய் தோன்ற பதட்டமாய் கண் திறந்தவளுக்கு ஒரு நொடி உலகம் நின்று போனது.அவளின் வீரா விழிகள் கலங்க அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“வீ…வீரா..வீ…ரா..”,என்றவளுக்கு பேசுவதற்கு வார்த்தைகள் வர மறுத்தது.அவனது ஒரு விரல் மேலெழ அவசரமாய் தன் கையை அவனுக்கு கொடுத்தாள் ஏழிசை.
அத்தனை அயற்சியிலும் அப்படி ஒரு அழுத்தம் அவன் கரங்களில்.ஏழிசையின் கண்ணீர் நின்றிருந்தது.விழிகள் அவன் நலத்தையே பரிசோதித்துக் கொண்டிருந்தது.
மருத்துவமனையை அடைந்து அவள் கீழீறங்க பதட்டமாய் ஓடி வந்த ராஜுவும் ஷ்யாமும் அவளைப் பார்த்து அரண்டு விட்டனர்.
“ஏழிசை இங்க பாரு டா..என்ன டா ஆச்சு..”,கனவிலிருந்து விழித்தவளாய் ஷ்யாமை ஏறிட்டவள்,
“அவர் வந்துட்டாரு ணா..”,என்றது தான் தாமதம் இருவருமாய் உள்ளே ஏறிப் பார்க்க சோர்வாய் சிரித்திருந்தான் வீர்ந்திரன்.
உள்ளே சென்றவள் எதிர்பட்ட பெற்றவர்களிடம்,”உங்க புள்ளைக்கு என் மேல் இரக்கம் வந்துட்டுத்து.கண் முழிச்சுட்டார்.”,என்றவள் குழந்தையை கையில் வாங்கி அழுந்த இதழ் பதித்தாள்.
நான்கு மதங்களுக்குப் பின் ஆத்மார்த்தமாய் அவள் அளிக்கும் முத்தம்.ஸ்டர்க்செரில் உள்ளே வந்தவனைப் பார்த்த தாய் தந்தை தம்பி மூவம் அழுது கரைந்தனர்.