கதவு திறந்து அவள் வந்த ஓசையில் நினைவிற்கு வந்தவன் அவளை நோக்கி கை நீட்ட அருசில் வந்தவளை தன் மீது அமர்த்திக் கொண்டான்.

“ரொம்ப சந்தோஷமா இருக்கேளா?”

“ம்ம்..”

“எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம்.உங்க மேல எவ்வளவு பாசம் இல்ல..அப்பா அம்மாக்கு பரம திருப்தி..”

“ஏன் எதுவும் பேச மாட்றேள்?!”

“எல்லாருக்கும் வாங்கினியே எனக்கு எதுவும் இல்லையா?”,என்றவன் அவளது இதழில் பார்வையைப் பதித்து கேட்க அவளோ சற்றே அவன்புறம் திரும்பி அமர்ந்து பையிலிருந்து எதையோ எடுத்தாள்.

“எனக்குமா வாங்கின?!”,என்றவனின் குரலில் உண்மையான ஆச்சரியம் இருந்தது.

“ம்ம்..”,என்றவள் பெட்டியைத் திறக்க அழகான இதய வடிவ டாலர் நடுவில் “I”,என்ற எழுத்தை தாங்கியிருந்தது.

“இதைப் போட்டுக்குறேளா?”,

“போட்டு விடு ”,என்றவனின் பார்வை மொத்தமும் அவளது முகத்தில் நிலைத்திருக்க அவனது செயினை எடுத்தவள் பல்லால் ஹுக்கை பிளந்து டாலரை அதில் கோர்த்து மீண்டும் பல்லால் அதை இறுக்கி விட்டு நிமிர்ந்த நேரம் அவளது இதழ்கள் அவனது இதழ்களுக்குள் இருந்தன.

அவன் பின்தலை முடிக்குள் அவளது விரல்கள் ஊர்வலம் நடத்த தன்னவனின் அழுத்ததில் இடுப்பெலும்பே உடைந்துவிடும் போல் இருந்தது.

“எங்க டி இருந்த இத்தனை நாளும்..”

“….”

“எனக்காகவே பிறந்தவளை இத்தனை வருசம் அந்த கடவுள் என் கண்ணில் காட்டாம விட்டுட்டார்.”

“…”

“ஏன் டி எனக்காக இப்படி உருகுற..எனக்காக என்னை சார்ந்தவங்களையும் உனக்கு பிடிச்சுருமா?”

“…”

“இன்னும் அம்பது அறுபது வருசம் கழிச்சும் உன்னோட இப்போ இருக்குற இதே மாதிரி நான் இருக்கணும்.”

“…”

“உன் மேல பைத்தியமா இருக்கேன்.இந்த பைத்தியத்தை தெளியவே விட்டுறாத டி மாமி..நீ எப்பவும் எனக்கு வேணும்.”

“….”

“பேசுடி..”,கூடலுக்கு நடுவில் இத்தனையையும் பேசிக் கொண்டிருந்தவனின் முதுகை வருடிக் கொண்டே இருந்தாள் உணர்ச்சிக் களிப்பில் இருந்த பெண்ணவள்.

“இந்த வீரா இல்லாத ஒரு நிமிஷம் கூட வாழ்க்கையில் நரகம் நேக்கு.ஐ லவ் யூ வீரா..”,என்றவள் எப்போதும் போல் அவனது கழுத்து வளைவில் இதழ் பதித்தாள்.

“ஐ லவ் யூ இசை..மேட்லி..என் கூடவே இரு..”,நேற்று அவளிருந்த நிலையில் இன்று அவன்.கடவுளின் சித்தம் என்பதை தவிர என்ன சொல்வது இந்த உறவை.

ஒருவர் மற்றவரை விட ஆயிரம் மடங்கு தன் இணையைத் தேடித் துடிக்கிறார்கள்.இதன் பெயர் நேசம் காதல் அன்பு உரிமை என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும்.அந்தப் பந்தத்திற்கு அவையெதுவுமே தேவையிருக்கவில்லை.

களித்து களைத்திருந்தவளின் பாதத்தில் தலை வைத்துப் படுத்திருந்தவனை எழுப்பும் வழி தெரியாமல் தவித்தாள் ஏழிசை.

“இங்க வாங்கோ..ஏன் இப்படி பண்றேள்”,

“கத்தாத டி..”

“ரொம்ப அடம்..காலில் இருந்து கையை எடுங்கோ”

“வாழ்க்கை பூராவும் இந்த காலடியில் தான் இருக்க போறேன்..தினமும் கத்திட்டே இருக்க போறியா..”

“சரி நகைக் கடைக்கு போனோமே உனக்கு மெட்டி வாங்க நியாபகப் படுத்திருக்கலம்ல?”

“அதுக்கென்ன அவசரம்.பொறுமையா கூட வாங்கிக்கலாம்.அப்போ நேக்கு நியாபகமும் இல்லை.”

“நான் நீ கேட்குறதை இன்னிக்கே கொண்டு வந்து தர்றதா சொன்னேனே நியாபகம் படுத்திருக்கணும் நீ..”

“அதெல்லா…ஏற்கனவே வாங்கி வைச்சுட்டேளா?”,என்றவளைப் பார்த்து புன்னகைத்தவன் தான் வாங்கி வைத்திருந்ததை எடுத்து வந்தான்.

“எப்போ வாங்கினேள்?!என்னோட தானே இருந்தேள்.”

“மதியம் ஆபீஸுக்கு கொண்டு வரச் சொல்லிருந்தேன்.”

“அதான் மீட்டிங்னு சொல்லி போனேளா?!”

“ம்ம்..”,என்றவள் அவளது மெட்டியை கழட்டிவிட்டு தான் வாங்கிய புது மெட்டியை இரு கால் விரல்களிலும் அணிவித்தான்.

அதன் பின் கொலுசை எடுத்தவன் அதையும் அணிவித்து நிமிர இரு கை விரித்து அவனை அழைத்தவளிடம் மறுயோசனையின்றி தன்னை ஒப்படைத்திருந்தான்.

ரவீந்தரின் அறையில் ரவி வாய் ஓயாமல் அன்று நடந்ததைப் பற்றி தான் பேசிக் கொண்டிருந்தான்.உமையாளுக்கு அனைத்தும் காதில் விழுந்தாலும் அதையும் மீறிய சிந்தனையில் இருந்தாள்.

“அண்ணி பழக்கமெல்லாம் அம்மாவை மாதிரியே இருக்கு பேபி.ரொம்ப அமைதி பொறுப்பு..இல்ல..”

“ம்ம்..”

“அண்ணாவே லேசாக கண்கலங்கினா மாதிரி இருந்தது.”

“ம்ம்..”

“என்ன யாளு என்ன யோசனை?!”

“ஒண்ணுமில்ல அவங்க சட்டுனு இதை கையில் போட்டு விட்டதும் ஒரு மாதிரி இருக்கு.”

“ம்ம்..அதுவும் அவங்க வாங்கி கொடுத்ததா இருக்கணும்னு நினைச்சுருக்காங்க பாரு.ஈஸ்வர் மச்சானுக்கும் ரொம்ப சந்தோஷம்.”

“இப்போ தான் உண்மையாவே எனக்கு கூட பிறந்தவங்க இல்லையேனு தோணுது பேபி..”

“அதான் உனக்கு அக்கா கிடைச்சுட்டாங்களே..நாங்க எல்லாரும் இருக்கோம் டா..”,என்றவன் எப்போதும் போல் தான் பேசினான் ஆனால் உமையாளுக்கு இப்போது தான் அது சரியாய் மனதில் பதியத் தொடங்கியிருந்தது.

தன் மகளின் கழுத்தில் இருந்த செயினையே பார்த்திருந்தாள் காவ்யா.

“என் தங்கச்சி போட்ட செயினைப் பார்த்து கண்ணு வைக்காத கவி”என்ற கணவனை முறைத்தாள்.

“ரொம்ப ஹேப்பியா இருக்குங்க..”

“ம்ம் உங்க எல்லாரையும் பாக்குற அப்போ எல்லாம் எனக்கு கொஞ்சம் பொறாமையா இருக்கும்.இந்தியால இல்லாததுனால சிப்ளிங் பீல்னு வர்ற அளவு யாரும் பழகினதும் இல்ல.ஏழிசை சட்டுனு அண்ணானு சொன்னதும் ஒரு மாதிரி சந்தோஷம் கவி.நல்ல பொண்ணு..”

“ம்ம்..அண்ணாவுக்கு கல்யாணம்னு ஒண்ணு நடக்குமாங்குறது ஒரு பக்கம் கவலையா இருந்தாலும் வர்றவங்க எப்படியிருப்பாங்கனு இன்னொரு கவலை உண்டு எனக்கு.

என்ன இருந்தாலும் ஒரு பொண்ணுக்கு தாய் வீடு சுகம்ங்கிறது தனி இல்லையா..அம்மா அப்பா காலத்துக்கு அப்பறம் என்னவாகும் எப்படியிருக்கும்னு ரொம்ப வொரி பண்ணிருக்கேன்.

ஆனால் கடவுள் இப்படி ஒரு அழகான மூத்த மருமகளை எங்க குடும்பத்துக்கு கொடுப்பார்னு நினைக்கவே இல்லங்க.ரூம்குள்ள போய் ராகவ் அப்படி ஒரு அழுகை.நொடிக்கொரு தரம் அந்த லாக்கெட்டை திறந்து திறந்து பர்த்துக்குறான்.

திவ்யாவுக்கு காலேஜ் போகவே மனசில்லையாம்.நான் இங்கேயே இருக்க போறேன்னு ஒரே அடம்.

அடுத்த வாரம் ஊருக்கு கிளம்பனும்னு நினைச்சா எனக்கே கடுப்பா தாங்க இருக்கு”,என்றவள் முயன்று சிரிப்பை அடக்கினாள்.

“அதானே பார்த்தேன்.அம்மா தாயே எனக்கு பொழப்பெல்லாம் அங்க தான் இருக்கு.நீ பாட்டுக்கு லீவை எக்ஸ்டெண்ட் பண்ற நினைப்பெல்லாம் கொண்டு வந்துறாத.”,என்று பதறியவனைப் பார்த்து சிரித்தாள் காவ்யா.

மறுநாள் வீரேந்திரன் வேலைக்கு கிளம்பும் நேரம் மிகப்பெரும் பார்சலைத் தூக்கியபடி பாதுகாவலர்கள் அவனது அறைக்கு வர பால்கனியிலிருந்து என்னவென்பதாய் எட்டிப் பார்த்தாள் ஏழிசை.

சுவரில் இருந்த வீரேந்திரனின் ஆளுயர படத்தைக் கழட்டிவிட்டு அவர்கள் மாட்டிய பெரிய புகைப்படத்தைப் பார்த்தவளின் கண்கள் விரிந்தது.

தன்னவன் கோட் சூட்டில் நாற்காலியில் அமர்ந்திருக்க அவனுக்கு அருகில் அவள் ரிசெப்ஷன் புடவையில் அவன் தோளில் கை வைத்தபடி நின்ற வரவேற்பில் எடுத்த புகைப்படத்தை விட்டு விழியகலாமல் நின்றாள்.

“இப்போதான் ரூம்க்கு தனி களை வந்திருக்கு டி மாமி..”,என்றவனும் அதையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.