“ப்பா செம கடுப்பா இருக்கு..இவளெல்லாம் என் கால் தூசுக்கு சமமாவாளா?”

“விடு உமையாள் காத்தடிச்சா குப்பை கூட கோபுரத்துக்கு போக தான் செய்யும்.”

“என்னவோ பா..இவ என் மாமியார் மாமனாரை அம்மா அப்பானு கூப்பிடுறதும் அவங்க மருமகளே மருமகளேனு கொஞ்சுறதும் சகிக்கலை பா.”

“ம்ம் எப்பேற்பட்ட குடும்பம் ஆனாலும் அந்த தலைக்கணம் இல்லாத மனுஷங்க.நீ ஒழுங்கா இருந்தா உன்னையும் கொஞ்ச போறாங்க.”,என்ற அன்னையைப் பார்த்து உமையாள் முறைக்க பொது இடம் என்பதால் ஒன்றும் கூறாமல் பொறுமையை இழுத்துப் பிடித்திருந்தார் அவள் தந்தை.

மணமக்களுக்கு நடுவில் ஒரு பத்து நிமிடம் ஓய்வு கொடுக்க ஏழிசையோ துவண்டு விட்டிருந்தாள்.

“இசை ஓகே தான?”

“ரொம்ப டயர்டா இருக்கு ணா..”

“ஐயோ இந்த அண்ணைவை மட்டும் சொல்லாத டி..எவனாவது கேட்டு தப்பா நினைக்க போறான்.”

“உங்களுக்கு உங்க பிரச்சனை..”,என்றவளின் முனகலில் வந்த சிரிப்பை அடக்கியவனாய் அனைவரின் கண்களையும் உறுத்தாத வண்ணம் அவளோடு வழக்காடிக் கொண்டிருந்தான்.

அந்நேரம் மேடையேறிய ஷ்யாம் தயக்கமாய் தள்ளி நிற்க வீரேந்திரன் அருகில் அழைத்தான்.

“இவன் தான் ஷ்யாம்.”

“வணக்கம் மேடம் கங்க்ராஷுலேஷன்ஸ்..”

“தேங்க் யூ அண்ணா..”,என்றவளைப் பார்த்து வீரேந்திரன் முழிக்க ஷ்யாமிற்கோ மனம் நெகிழ்ந்து விட்டிருந்தது.

“சார் க்ரௌட் இன்னும் கம்மி ஆகல முடியுறதுக்கு ரொம்ப நேரம் ஆயிடும் முடிஞ்சா டூ மினிட்ஸ் ப்ரஸ் மீட் முடிச்சுரீங்களா..”

“ம்ம்..சரி ஷ்யாம் அரெண்ஞ்ச் பண்ணு ரொம்ப நேரம் வேணாம்..”

“ஆல் செட் சர் நீங்க வந்தா போதும்”,என்றவனை மெச்சுதலாய் ஒரு பார்வை பார்த்தவன் ஏழிசையோடு அங்கிருந்த கான்பிரன்ஸ் ஹாலிற்குள் நுழைந்தான்.

“வாழ்த்துக்கள் மிஸ்டர் & மிஸர்ஸ் வீரேந்திரன்”,என்ற வெளிநாட்டுப் பத்திரிக்கை நிருபரைத் தொடர்ந்து,

“வாழ்த்துக்கள் அண்ணையா”,என்ற குரல்களும் பலத்த கரகோஷமும் எழுந்தன.

“தேங்க் யூ சோ மச் எவ்ரிஒன்.இவங்க மிஸ் ஏழிசை கணபதி.இனி மிஸர்ஸ் ஏழிசை வீரேந்திர சேதுபதி.எங்க வாழ்க்கையோட மிக முக்கியமான நாள்ல நீங்க எல்லாரும் பங்கெடுத்துகிட்டதுக்கு மிக்க நன்றி.”,என்றவன் கைகூப்பி நிற்க அவளும் கணவனோடு சேர்ந்து கைக் கூப்பினாள்.

“சார் ஒன் மோர் ப்ட்டோகிராப் ப்ளிஸ்”,என்ற குரல்களில் அவளது தோள் மீது கைப்போட்ட வண்ணம் இருவருமாய் சிரித்து நிற்க இதை தொலைக்காட்சியில் பார்த்திருந்த பல கண்கள் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்தான.

“சீம சிறுக்கி எப்படி இளிச்சுகிட்டு நிக்குறா பாரு..இதுக்காகவா இவ அப்பனை நாம கொன்னோம்..எல்லாம் சரியா போயிட்டு இருந்தது எங்கேயோ இருந்து வந்தவன் எல்லாத்தையும் கெடுத்து நாசமாக்கிட்டான்.”,என்ற கணபதியின் தங்கையின் கண்களில் குரோதம் கொப்பளித்தது.

“நம்ம தொழிலை எல்லாம் அழிச்சவன் இப்படி சந்தோஷமா நிக்குறதை பார்க்க முடியலை”,என்றபடி தன் கையிலிருந்த மதுக் கோப்பையை தூக்கி எறிந்தான் அந்த நெடியவன்.

ஆஜானுபாகுவாய் இருந்தவனின் உடல் வலிமையே கூறியது அவன் வெளிநட்டுக்காரன் என்று.

“ரிலாக்ஸ் ஜான்..”

“நோ ஐ காண்ட்..”

“இப்போ தான் அவனுக்கான பலகீனம் ஒண்ணு நமக்கு கிடைச்சுருக்கு.கண்டிப்பா அவனை ஓட விடலாம்.கவலையே படாத அங்க பார்த்தியா அவங்க இரண்டு பேர் கண்ணுலேயும் எத்தனை சந்தோஷம்னு.

அதை கொஞ்சம் கொஞ்சமா எடுத்தாலே போதும் அவன் துவண்டுருவான்.”,என்றபடி வேட்டையாடத் துடிக்கும் நரியாய் அவர்களது பார்வை தொலைக்காட்சியில் படிந்தது.

இரவு வீட்டிற்கு வந்த போது மணி நள்ளிரவு பனிரெண்டைத் தாண்டியிருந்தது.விட்டால் மயங்கி விடும் அளவில் இருந்தாள் ஏழிசை.

வீரேந்திரன் மாடியேற ஏழிசை தன் மாமியாரைத் தேடிச் சென்றாள்.

“ம்மா..”

“வா கண்ணா ரொம்ப டயர்டா இருக்கியே..”

“இந்த நகையெல்லாம் இங்கேயே வைச்சுட்டு போகலாம்னு தான் வந்தேன்.தூக்க கலக்கத்தில் எதையும் தொலைச்சுரக் கூடாதே..”

“இதெல்லாம் இனி உன்னோடது தான் மா..”

“ம்மா உங்க கிட்ட இருக்கட்டும் நேக்கு வேணும் போது வாங்கிகுறேன்.”,என்றவள் நாற்காலியில் அமர்ந்துவிட அதற்கு மேல் பேச்சை வளர்க்காமல் அனைத்தையும் வாங்கி வைத்துக் கொண்டார் பர்வதம்.

தனதறைக்கு வந்தவளுக்கு மயக்கமே வந்துவிடும் போல் இருந்தது.அப்படியே காட்டிலில் படுத்தவள் கண்ணயர முற்பட வீரேந்திரன் அவளருகில் வைந்து கன்னம் தட்டினான்.

“இசை அப்படியே படுக்காத..போய் குளிச்சுட்டு வா உடம்பு வலி கேட்கும்.”

“அவ்வளவு தெம்பு நேக்கு இருக்குனு தோணலை..நான் இப்படியே படுத்துக்குறேனே..”

“புடவையையாவது மாத்து டி மாமி..கசகசனு இல்லையா..”

“ம்ஹுகும்..”,என்றவளைத் திருப்பி அவளது புடவையின் தலைப்பில் குத்தியிருந்த பின்னை அவனே கழட்டினான்.

“ஐயோ என்ன பண்றேள்..”,என்று அலறிவளை கண்டு கொள்ளாதவனாய் புடவையை நீக்கிவிட்டு அவளை அப்படியே கையில் ஏந்தியவன் குளியலறைக்குள் சென்று நிறுத்தினான்.

“குளிக்குறியா இல்லை நானே குளிப்பாட்டவா?”,என்றவனின் கேள்வியில் வேகமாய் கதவைச் சாற்றிக் கொண்டாள்.

குளித்து முடித்து இரவு உடைக்கு மாறியவளுக்கு உண்மையாகவே சற்று தெம்பு வந்ததாய் தோன்றியது.

கட்டிலில் படுத்திருந்தவனைப் பார்த்தபடியே இரவு விளக்கை ஒளிர விட்டு விளக்கை அணைத்துவிட்டு வந்து படுத்தவள் எதுவுமே கூறாது அவன் மார்பில் தலை சாய்த்துக் கொண்டாள்.

“மாமி..”

“ம்ம்..”

“இப்போ பெட்டர் தான?”

“ம்ம்”

“அதான் புருஷன் பேச்சை கேட்கணும்னு சொல்றது..”,என்றவனின் விரல்கள் தானாய் அவளது தலையைத் தடவிக் கொண்டிருந்தது.

“நிஜமாவே உங்களுக்கு என்னைப் பிடிச்சுருக்கா?”,என்றவளைக் குனிந்து பார்த்தவன் தடவிக் கொண்டிருந்த விரலால் லேசாய் தட்டினான்.

“என்ன கேள்வி இது?”

“ப்ச்ச் சொல்லுங்கோ..”

“என்னடி பிரச்சனை உனக்கு?”

“இல்ல..இன்னைக்கு வந்தவா எல்லாரும் எவ்ளோ பெரிய பெரிய ஆட்கள்.அவா எல்லாமே உங்களைப் பார்த்து பயந்து மரியாதையா நடந்துக்குறா.உங்க உயரம் என்னனு தெரியாமேயே இருந்துட்டேனோனு..”

“…”

“உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் பொருத்தமே இல்லாதவளா இருக்கேனோனு தோண்றது.”

“தூக்க கலக்கத்துல மூளை சரியா வேலை செய்யாதாம் தூங்கு டி..”,என்றவனின் குரலில் காட்டம் வெளிப்படையாகவே தெரிந்தது.

“ப்ச்…”

அவளை கீழே தள்ளி அவள்புறமாய் திரும்பிப் படுத்தவன் கையை தலைக்கு அடியில் கொடுத்தவாறு மற்றொரு கையால் அவள் தாடையைப் பிடித்து அழுத்தி தன் புறம் திருப்பினான்.

“எனக்கும் டயர்டா தான் இருக்கு..எதுக்கு என்னை கடுப்பேத்துற இப்போ?”,என்றபோது அவளின் கண்கள் கலங்கியிருந்தன.

“இசை..”,என்றவனின் அதட்டலில் அழுகையை அடக்கிக் கொண்டாள்.

“நீ சொல்றது படியே பேசுறேன்,என் தகுதிக்கு சமமா இருக்குற யார் என்னைக் கல்யாணம் பண்ணிருந்தாலும் இப்படி இரண்டு நாள்ல அவளை எனக்குள்ளேயே வைச்சுக்கணும்னு நான் நினைச்சுருக்க கூட மாட்டேன்.”

“…”

“இந்தக் கண்ணு என்னைத் தேடுற மாதிரி வேற எவளும் என்னைத் தேட மாட்டா டி பைத்தியம்.”

“காதலுக்கும் பணத்துக்கும் எதாவது சம்மந்தம் இருக்கா?இரண்டு நாள்ல காதல் வருமானு எல்லாம் உடனே கேட்காத..வந்துருக்கு அதை நீ நம்பி தான் ஆகணும்.”

“நான் ஒண்ணும் பொண்ணுங்களையே பார்க்காதவன் கிடையாது.ஃபாரின்ல போய் படிச்சவனுக்கு..”,என்றவனை சோகம் மறந்து முறைத்தாள் ஏழிசை.

“காண்டாகுதுல..அப்படி தான் எனக்கும் இருக்கு..அத்தனை பேர் முன்னாடி சந்தோஷமா என் பொண்டாட்டினு சொல்லிட்டு வந்து நின்னா நீ கேனைத்தனமா ஏதேதோ பேசிட்டு இருக்க”,என்றவன் நிமிர்ந்து படுத்துக் கொண்டான்.

மீண்டுமாய் அவன் மார்பில் சாய்ந்து கொண்டவள் ஒன்றும் பேசாமல் அமைதியாகவே படுத்திருந்தாள்.

“இன்னும் உனக்கு குழப்பம் போகல இல்ல?”

“…”

“ஒண்ணு மட்டும் நல்லா புரிஞ்சுக்கோ உன் இடத்தில் வேற யார் என்ன நிலைமையில் என் பக்கத்தில் இருந்தாலும் என் மனசு தடுமாறாது.காலையில் நமக்குள்ள நடந்தது உடல் சார்ந்தது மட்டுமில்ல.அது உனக்கும் தெரியும்.

வீரேந்திரன் மனசுக்குள்ள வர்றதுக்கான முழு தகுதியும் இந்த ஜென்மத்துல உனக்கு மட்டும் தான் இருக்கு.தேவையில்லாம யோசிக்குறதை விட்டுட்டு ஒழுங்கா தூங்கு.”,என்றவன் இன்னுமாய் தன்னோடு சேர்த்துக் கொண்டான்.

“ஸாரி..ஏதோ குழப்பத்துல பேசிட்டேன் தப்பா எடுத்துக்காதீங்கோ..”

“இப்படியெல்லாம் சமாதானம் ஆக முடியாது..”

“வேற என்னவாம்?”

“என் பேர் சொல்லி சாரி சொல்லு..”

“ஐயோ உங்களோட…அது…அப்போ ஏதோ..சும்மா சும்மா கேட்டா எப்படி..”,என்றவளின் வெட்கம் அவனின் முகத்தில் புன்னகையைக் கொண்டு வந்திருந்தது.

“இந்த ரூம்க்குள்ள அந்த பேர் கேட்டுட்டே இருக்க தான் எனக்கு பிடிச்சுருக்கு..சொல்லு..”

“ஸாரி வீரா..”,என்றவள் மாலையைப் போன்றே அவனது கழுத்து வளைவில் இதழ் பதித்து அவனை ஏறிட இருந்த களைப்பும் மீறி அவன் மலர்ந்து விட்டிருந்தது.

“குட் நைட் டி மாமி..இனியாவது நிம்மதியா தூங்கு..”,என்றவனோடு குழந்தையாய் ஒன்றியவள் சில நொடிகளில் உறங்கியும் போனாள்.

மறுநாள் கண்விழிப்பதே பெரும் விஷயமாய் இருந்தது ஏழிசைக்கு.கண்ணெல்லாம் எரிந்து திறப்பதற்கே கடினப்பட்டவள் அரைத் தூக்கத்திலே அருகில் கை வைத்து தேட கட்டிலில் கணவனைக் காணாமல் கண்ணைக் கசக்கியபடி எழ முயற்சித்தாள்.

“இங்கதான் டி இருக்கேன்.இவ்வளவு தேடுறவ நைட் என்னவோ டயலாக் எல்லாம் பேசின”,என்றவன் குளித்து தலையைத் துவட்டியவாறே வந்து நின்றான்.

“ஏன் அதுக்குள்ள எழுந்துட்டேள்?”

“அதுகுள்ளேயா சரி தான் மணி பத்தாச்சு..”

“என்னது???”என்றவள் அவசரமாய் எழுந்து அமர்ர்ந்தாள்.தன் தலை முடியைக் கோதி கொண்டையிட்டவள் அவசரமாய் குளியலறைக்குள் நுழைய எத்தனிக்க பிடித்து தன்புறம் இழுத்தவன்,

“ஏன் இப்படி பறக்குற..பொறுமையா ரெடியாகு.”

“நீங்க இன்னைக்கு வேலைக்கு போணுமா?”

“பின்ன இப்படியே கட்டில் வேலையை கவனிக்கலாமா?”

“அய்யே எப்போ பார்த்தாலும் இதே பேச்சு.விடுங்கோ நான் போறேன்.”,என்றவளின் கன்னத்தில் இதழ் பதித்தே விடுவித்திருந்தான்.

அவளுக்காகவே காத்திருந்தவன் அவள் குளித்து தயாராகும் வரை தன் வேலை பாதி அவளின் மேல் கவனம் மீதி என அங்கேயே அமர்ந்திருந்தான்.

“வாங்கோ போலாம்.ரொம்ப நாழியாயிடுத்தே என்னை எழுப்பிருக்கலாமோனோ.”

“ம்ம் எழுப்பிருக்கலாம் தான்..சரி இன்னைக்கு ஒரு நாள் என் பொண்டாட்டி நல்லா தூங்கிகட்டுமேனு தான் எழுப்பல..”,என்றவனின் பதிலில் முகம் சிவந்து விட்டிருக்க அவனை வெளியே தள்ளாத குறையாக அழைத்து வந்தாள்.

சொந்தபந்தங்கள் காலையிலேயே கிளம்பியிருக்க உணவு மேசையில் சிறியவர்களோடு பர்வதமும் ராஜராஜனும் அமர்ந்திருந்தனர்.

வழக்கம் போல் அண்ணனைக் கண்டவுடன் வாய்க்கு பூட்டுபோட்டு கொள்ள புன்னகையோடு ஏழிசை தான் அனைவருக்குமான காலை வணக்கத்தைத் தெரிவித்தாள்.

“சாரி மா..தூங்கிட்டேன்..நாழியாயிடுத்து.”

“பரவால்ல கண்ணா நேத்து படுக்கும் போதே மணி ஒண்ணு இருக்கும்.இப்போ உடம்பு பரவாயில்லை தான?”

“ம்ம் மா..”,என்றவள் நின்ற படியே கணவனுக்குப் பரிமாற சிறியவர்கள் அவர்களை வெகுவாய் ரசித்திருந்தனர்.

“அண்ணி அண்ணாக்கு மட்டும் ஸ்பெஷல் கவனிப்பா இருக்கு இதெல்லாம் நல்லதுக்கே இல்ல..”,என்று ராகவ் அண்ணியிடம் வம்பிழுத்தான்.

வீரேந்திரன் வழக்கம் போல் எந்த உணர்வுகளுமின்றி உண்டு கொண்டிருக்க திவ்யாவும் காவ்யாவும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.ரவீந்தரும் உமையாளும் ஏற்கனவே வேலைக்கு கிளம்பியிருக்க பெரியவர்கள் தங்கள் பிள்ளைகளை ரசித்த வண்ணம் உணவருந்திக் கொண்டிருந்தனர்.

“நோக்கு என்ன வேணும்னு சொல்லு நானே பண்ணித் தரேன்.இதெல்லாம் ஒரு விஷயமா ராகவ்”,என்றவள் புன்னகைக்க

“ஹா இது பேச்சு..வேணி அக்கா சமையல் போர்..நல்ல காரசாரமா ஒரு நண்டு வறுவல் பண்ணித்தாங்க அண்ணி..”,என்றவன் சிரிக்காமல் கூற ஏழிசையோ பாவமாய் முழித்தாள்.

காவ்யாவும் திவ்யாவும் சத்தமாகவே சிரித்துவிட வீரேந்திரனுக்குமே சிரிப்பு வந்திருந்தது.

“உனக்கு உங்க அண்ணா தான் சரி.ஐயோ பாவமேனு கேட்டா என்னையே கேலி பண்ற..”,என்றவள் பாவமாய் கூற ராகவோ பதட்டமாய்,

“ஐயோ நீங்க அம்மாவை விட க்யூட் இன்னொசென்ட் அண்ணி..சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன்..சாரி சாரி..”,என்றவனைப் பார்த்து புன்னகைத்தவள் பாதி சாப்பாட்டில் எழுந்து நின்ற கணவனைப் பார்க்க அவனது ஒரு நொடி பார்வையும் அதன் அர்த்தத்தை உணர்த்தி விட்டிருந்தது.

ஒன்றும் கூறாமல் இயல்பாய் அவன் எழுந்த இடத்திலே அமர்ந்தவள் உணவை உண்ணத் தொடங்கினாள்.தனக்காக உணவை வைத்துச் சென்றவனை நினைத்தவளுக்கு முகத்தின் மலர்ச்சியை பிறர் அறியாமல் மறைத்து வைக்க பெரும்பாடாய் இருந்தது.

“ஹே திவி கவனிச்சியா?”

“ம்ம் ஆமா டா ராகவ்..இவங்க இரண்டு பேரும் செம லவ்ஸ் பண்றாங்க டா..ஆனாலும் யாருக்கும் எதுவும் அன்கம்போர்டபிளாவே தெரியல பாரேன்”

“ம்ம் அப்பாவும் அம்மாவும் இருக்குற மாதிரியே இருக்காங்க..”

“ஆமா..அண்ணாவுக்கு லேட்டா கல்யாணம் நடந்தாலும் பெர்பெக்ட் பார்ட்னர் கிடைச்சுருக்காங்க இல்ல..”

“ஆமா திவி.அங்க பாரு அம்மா அப்பா முகத்தை அவ்வளவு சந்தோசம்.”,என்றது இவர்களின் உரையாடலாய் இருக்க அருகில் ஈஸ்வரும் காவ்யாவும் கூட அவர்களைப் பற்றி தான் பேசிக் கொண்டிருந்தனர்.

“கல்யாணம் ஆகி மூணு வருசத்துல ஒரு நாளாவது இதெல்லாம் நீ பண்ணிருக்க?”,என்ற புருசனை முறைத்தவளாய்,

“கண்ணு வைக்காதீங்க..”

“ஆமா டி எல்லாம் என் நேரம்..ஆனாலும் என் மச்சானுக்கு இப்படி ஒரு மனைவி அமைஞ்சதுல எனக்கு ரொம்பவே சந்தோஷம்.”

“உண்மை தாங்க..அண்ணன் கடைசி வரை தனியாவே இருந்துருவாரோனு ரொம்ப பயந்தேன்.அம்மாவுக்கு இருந்த ஒரே கவலை அது தான்.இப்போ இவங்களை இப்படி பாக்குறதுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்குங்க.”

அதற்குள் உணவை முடித்திருந்தவள் எல்லாருக்கும் பொதுவாய் தலையசைத்துவிட்டு சமையலறைக்குள் சென்றாள்.கணவனுக்கான டீயை எடுத்துக் கொண்டு மாடியேறுபவளையே பார்த்திருந்த பர்வதத்தின் கண்கள் கலங்கியிருந்தது.

“என்ன பர்வதம் சந்தோஷமா இருக்க வேண்டிய நேரத்துல கண்ணை கசக்கிட்டு இருக்க பசங்க எல்லாம் இருக்காங்க பாரு.”

“இந்தர் போனில் விஷயத்தை சொன்னதும் சந்தோஷம் இருந்தாலும் அவன் குணத்துக்கு இந்த பொண்ணு ஒத்து வருமோனு பயம் இருந்ததுங்க ரொம்பவே.ஆனால் அவங்க இரண்டு பேரும் எத்தனை அந்யோன்யமா இருக்காங்க பார்த்தீங்களா.நம்ம புள்ளையும் அந்த பொண்ணை புரிஞ்சு நடந்துக்குறான்.”

“உண்மை தான் பர்வதம்.நமக்கு அப்பறம் இந்த குடும்பம் உடைஞ்சுடாதுங்கிற நம்பிக்கை எனக்கும் மலையளவு வந்திருச்சு.”,இப்படியாய் ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கு காரணமானவளோ பல துயர்களைக் கடந்து வரப்போவதை அறியாமல் தன்னவனின் கை சிறைக்குள் கட்டுண்டிருந்தாள்.