இடும்பைக்(கு) இடும்பை இயலுடம்(பு) இதன்றே
இடும்பொய்யை மெய்யென்(று) இராதே – இடுங்கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு

விளக்கம்
நிலையில்லாத இந்த உடம்பை, மெய் என்று கருதி அதற்கு அனைத்தும் செய்கிறாயே, மெய் என்று கூறும் உடல் பொய் என்பதை உணர்ந்து, வறியவருக்கு விரைந்து காலம் தாழ்த்தாமல் ஈகை செய்க, மக்கள் ஊழின் வினைப்படி நல்ல காரியம் செய்து செல்ல வேண்டும் என்று நினைக்கும் சொர்க்கம் உங்களுக்கு வாசல் கதவை திறக்கும்.”

“என்ன பிறவி நீயெல்லாம்னு யோசிக்குறியா அன்பு?!”,என்றவள் தன்னையே பார்த்து அமர்ந்திருந்த அன்பை பார்த்து சிரித்தாள்.

“உண்மையாவே அப்படி தான் பார்க்குறேன்”,என்றவனும் லேசாய் சிரித்திருந்தான்.

“நான் நினைக்குறதை சொல்றதுக்கு சரியான வார்த்தைகள் கிடைக்க மாட்டேங்குது காயூ.உன்னளவு அழகா மனசை வெளிப்படுத்த தெரியலை மே பி..ஆறேழு வருஷத்தை வேஸ்ட் பண்ணிருக்கேன்.

இதுக்கு மேல அந்த தப்பை சரி பண்ற வேலை மட்டும் தான் பார்க்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்”,என்றவன் சீரியஸாய் கூறியபடி குறும்பு மின்ன அவளை ஏறிட சட்டென நிமிர்ந்தவள் அவனைப் பார்த்து சிரித்த வண்ணம் தோளில் சாய்ந்து கொண்டாள்.

இருவருமாய் நிறைய நிறைய பேசினார்கள்.கார் இலக்கில்லாமல் அதன் போக்கில் சென்று கொண்டிருக்க மதிய நேரத்தில் வயிறு காலியாகி அழைப்பு விடுத்த போதே இந்த உலகத்திற்குள் வந்திருந்தனர்.

“பசிக்குது அன்பு..”

“ஐயோ சாரி காயூ பேசிட்டே இருந்ததுல மணியை கவனிக்கல..அடுத்து எந்த ஹோட்டல் வருதோ நிறுத்துறேன்.ம்ம்..”

“உண்மையாவே நீ இவ்வளவு பேசுவியா?ரொம்பவே சந்தோஷமான நாள் இன்னைக்கு எனக்கு.”

“என் நிலைமை அதை விடவும் மோசம்”,என்றவன் அழகாய் புன்னகைக்க ஒன்றும் கூறாமல் தலையை வெளியில் திருப்பிக் கொண்டாள் காயத்ரி.

அந்த பிரபலமான உணவகத்தின் முன் காரை நிறுத்தியவன் அவள் இறங்கும் வரை காத்திருந்து அவளோடு பேசியபடி உள்ளே நுழைந்தான்.

மீண்டும் பலப்பல கதைகள் அவர்களின் செவிகளை நிறைத்திருக்க இருவருமே பெயருக்கென ஆர்டர் செய்ததை உண்டு முடித்திருந்தனர்.கை கழுவச் செல்ல எழுந்தவன் தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து பர்ஸை எடுத்து அவளிடம் கொடுத்தபடி அவன்போக்கில் சென்றுவிட்டான்.

காயத்ரியின் முகத்திலோ அழகானதொரு புன்னகை.அதெப்படி வந்துவிடுகிறதாம் இந்த நம்பிக்கையும் உரிமையும்.அதுவும் அன்புச் செல்வனிடத்தில் இதையெல்லாம் அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

காலையில் அவன் தன்னை பார்த்த பார்வையிலேயே எத்தனை உரிமை.சொல்லப்போனால் ஒரு ஆணாய் பெண்ணை அளவிடும் முதல் பார்வை அது தான் அவனிடத்தில்.

கண்ணைத் தவிர அவனது பார்வை எங்கும் அலை பாய்ந்ததில்லை இத்தனை வருடங்களில்.அதைவிட இப்போது அவனின் செயலில் பெண்ணவளுக்கு இன்னுமாய் ஆச்சரியம்.அந்த சிந்தனைகளிலே தொலைந்திருந்தவள் அவள்போக்கில் அமர்ந்திருக்க தன் பின்னே நிழலாடியதாய் உணர்ந்தவள் சட்டென திரும்பிப் பார்த்தாள்.

“ஹாய் காயத்ரி”

“ஹே ஹாய் சந்தோஷ் எப்படியிருக்கீங்க…எவ்வளவு நாள் ஆகுது உங்களைப் பார்த்து..”

“எனக்கென்ன சூப்பரா இருக்கேன்.உங்களை இங்க பர்ப்பேன்னு நினைக்கல ஆனால் சரியான நேரத்துல தான் பார்த்துருக்கேன்.”

“!!”

“அடுத்த வாரம் என் கல்யாணம் கண்டிப்பா வரணும் நீங்க..”

“ஹே வாழ்த்துகள் சந்தோஷ்.”

“தேங்க் யூ..”,எனும்போதே அன்பு அவர்களின் அருகில் வந்திருந்தான்.

“அட!!!”,என்று சற்று சத்தமாகவே கூறியவனைப் பார்த்து புன்னகைத்தவாறே அன்பு நின்றிருக்க காயத்ரியே இருவருக்குமான அறிமுகத்தை செய்து வைத்தாள்.

“அன்பு இவரு சந்தோஷ் என் பேட்ஜ் மேட்..சந்தோஷ் இது..”

“உங்க ஆளு தான!”,என்றவன் குஷியாய் சிரிக்க அன்பிற்கு சட்டென ஒரு மாதிரி ஆகிவிட்டிருந்தது.அவனை ரசித்திருந்தவளாய் ஆமோதிப்பாய் தலையசைக்க சந்தோஷ் அவனிடம் கை குலுக்கினான்.

“பேட்ஜ்ல இருந்தப்போ உங்களைப் பத்தி சொல்லிருக்காங்க..நான் கூட நினைச்சுருக்கேன்.இந்தப் பொண்ணு என்ன பைத்தியமா எந்த நம்பிக்கையில் உங்களை நினைச்சுட்டு இருக்கானு..பட் பரவால்ல இத்தனை வருசத்துக்கு அப்பறம் நீங்க தான் ஒண்ணு சேரணும்னு விதி எத்தனை ஸ்டாராங்கா இருந்திருக்கு.உண்மையாவே ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்க ரெண்டு பேரையும் சேர்த்து பார்க்குறதுக்கு..”

“சந்தோஷ் கொஞ்சம் மூச்சு வாங்கிக்கோங்க என் மானம் போகுது..இன்னைக்கு தான் ஓகே சொல்லிருக்கான் அதுகுள்ள அவனை ஓட வைச்சுருவீங்க போலேயே..”

“பாருடா அதானா விஷயம்.சாரி சாரி அன்பு, நிறைய பேசி உங்க நேரத்தை வீணடிச்சுட்டேன்.அப்பறம் நேக்ஸ்ட் வீக் என் கல்யாணம் நீங்களும் கண்டிப்பா வரணும்”,என்றபடி அவனுக்கும் பத்திரிக்கையைக் கொடுத்தவன் அங்கிருந்து கிளம்பியிருந்தான்.

“போலாமா அன்பு?”

“ம்ம் போலாம்..”,என்றவனின் உதட்டோர புன்னகை மட்டும் இன்று முழுவதும் மறையப் போவதில்லை என்று தோன்றியது.

காரினுள் அமர்ந்தவள் பத்திரிக்கையைப் பார்த்த வண்ணம்,

“கல்யாணம் பொள்ளாச்சியில தான் அன்பு நீயும் வரியா?”

“முடியுமானு தெரில டா நான் ட்ரை பண்றேன் “,என்றான் இயல்பாய்.

“ம்ம் சரி..”

“காலையில் சொன்னது வேலைக்கு ஆகாது காயூ.நெக்ஸ்ட் வீக் வீட்டில் பேசலாம்னு தோணுது”,ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவன் எதைப் பற்றி கூறுகிறான் என்பதை உணர்ந்தவளுக்கு முகம் மலர்ந்து போனது.

“உனக்கு பிரச்சனையில்ல..”,என்றபடி அவள் முகம் பார்த்தவனுக்கு அவளது மலர்ச்சியே பதில் சொல்ல சட்டென அவளது முன்நெற்றியில் தட்டியிருந்தான்.

“லூசு..”

“ஏதே?!!”

“ம்ம் பின்ன நீ என்ன நினைச்ச”,என்றவன் சீட்டில் சாய்ந்த வண்ணம் சத்தமாக சிரிக்க அவனையே பார்த்திருந்தவள் லேசாய் அவன் கன்னம் கிள்ளி தன் உதட்டில் வைத்துக் கொண்டாள்.

“ஓய்!!”

“வெரி சாரி இந்த வெட்கம் எல்லாம் சத்தியமா வர மாட்டேங்குது அன்பு..எனக்கு நீ நாளைக்கே கல்யாணம்னு சொன்னாலும் ஜாலியா ஓகே சொல்லிருவேன்.”

“நீ ஏன் இப்படியிருக்க காயூ..உன் ப்ரெண்ட் பேசினதைக் கேட்ட அப்பறம் ஒரு மாதிரி ஆகிடுச்சு இன்னமும் நாம ஏன் லேட் பண்ணணும்னு ஒரு எண்ணம்.

ஒரு பையனா எனக்கே அத்தனை கேள்வி,இன்னும் கல்யாணம் ஆகலையா வயசு ஏறிட்டே போகுதேனு..அப்பாவும் அம்மாவும் பதில் சொல்லி ஓஞ்சு போயிருக்காங்க.

அப்போ உன் நிலைமை இன்னமும் கஷ்டம் இல்ல..அங்கிளும் ஆன்ட்டியும் எத்தனை பேரை சமாளிக்கணும்.அதான் வீட்ல சொல்லிரலாம்னு தோணுது.”

“உனக்கு என்ன தோணுதோ பண்ணு அன்பு..அப்பாகிட்ட எப்போ பேசணும்னு மட்டும் சொல்லு நான் பேசிட்றேன் அவ்வளவு தான்.”,என்று தோள் குலுக்கியவளைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருக்கலாம் என்று தோன்றியது அன்புச்செல்வனுக்கு.

அவளை வீட்டில் இறக்கிவிட்டு கடைக்குச் சென்று அமர்ந்தவனுக்கு அதன் பின்னான வேலைகள் வேறெதையும் பற்றி சிந்திக்க விடாமல் ஆக்கியிருந்தன.

இரவு வழக்கம் போல் நேரம் கடந்து வீட்டிற்கு வந்தவனை வரவேற்றவர்கள் அவனது தம்பிகளும் தங்கையும்.ராகினியும் ராகவனும் காலை சீக்கிரமே எழுந்து விடுவதால் ஒன்பதரை மணிக்கு மேல் விழித்திருக்கக் கூடாது என்பது அன்புச்செல்வனின் எழுதப்படாத கட்டளை.

கல்லூரி நாட்கள் என்றால் ஆனந்தன் மட்டும் அவனுக்காக காத்திருந்து உணவு எடுத்து வைத்து சிறிது நேரம் பேசிவிட்டு உறங்கச் செல்வான்.வார இறுதி எனில் மூவருமே அண்ணணுக்காக காத்திருப்பர்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மூவரும் அமர்ந்து டீவி பார்த்துக் கொண்டிருக்க வந்தவனைப் பார்த்தவர்களின் கண்களில் சிறிதான ஆச்சரியம்.

அதைக் கவனித்தவனும் ஒன்றும் பேசாமல் குளித்து வருவதாய் கூறி மாடிக்குச் சென்று உடை மாற்றி வந்தமர்ந்தான்.

அவனுக்கான சாப்பாடு மேஜையில் தயாராய் இருக்க மூவருமாய் அவனையே பார்த்திருந்தனர்.

“ஏன் டா இப்படி பாக்குறீங்க?!”

“என்னவோ ஒண்ணு சரியில்ல ண்ணே..”

“என்ன சரியில்ல..எல்லாம் சரியாதான் இருக்கு.”

“ஆனந்த் அண்ணே நீ சொல்லு இந்த மொகரையில எதோ ஒண்ணு புதுசா இருக்குல..”,என்றபடி தேன்மொழி அவனது கன்னத்தைத் திருப்பி ஆனந்தனிடம் காட்ட சட்டென கையைத் தட்டி விட்டவனாய்,

“இப்போ நான் சாப்பிடனுமா வேணாமா?”

“சரி சரி டென்ஷன் ஆகாம சாப்பிடுண்ணே..”,என்றவள் சேரில் அமர்ந்த படியே டீவியில் கவனத்தைச் செலுத்தினாள்.

அன்புச் செல்வன் சாப்பிட்டு முடித்த நேரம் அவனது கைப்பேசி குறுஞ்செய்தி வந்ததற்கான சத்தம் எழுப்ப காயத்ரி தான் அனுப்பியிருந்தாள்.

இவன் தான் காலையில் இருவருமாய் எடுத்திருந்த புகைப்படத்தை அனுப்பச் சொல்லியிருந்தான்.ஒரு நொடி அதைப் பார்த்தவன்,

“ஹே வாலு”,என்றழைக்க மூவருமாய் அவனை நோக்கித் திரும்பியிருந்தனர்.

அந்தப் புகைப்படத்தை அப்படியே பெரிதாகி போனை அவர்களை நோக்கித் திருப்பி விட்டு எழுந்து கை கழுவச் சென்றான்.அதைப் பார்த்தவர்களோ வாய் பிளந்து அமர்ந்திருக்க அன்புச் செல்வனின் போன் மூவரின் கைகளிலும் பாடாய் பட்டது.

“ஏய் ஏன் இப்படி சத்தம் போடுறீங்க அம்மா அப்பா எழுந்துற போறாங்க மொட்டை மாடிக்கு போங்க நான் வரேன்”,என்றவன் கைப்பேசியை வாங்கிக் கொள்ள மூவரும் அதிர்ச்சி மாறாமல் மாடிக்குச் சென்றனர்.

புகைப்படத்திற்கு பதில் அனுப்பிவிட்டு புன்னகையோடு ஒரு நொடி அதைப் பார்த்திருந்தவன் பின், வாசல் கதவைப் பூட்டிவிட்டு மாடிக்குச் சென்றான்.

“அண்ணே சரியானா ஆளு நீ..இதனால தான் பாக்குற பொண்ணெல்லாம் குறை சொல்லிட்டு இருந்துருக்க..”

“ஆமா அண்ணே நானே இதை எதிர்பார்க்கல..பை த வே ஜோடி பொருத்தம் சூப்பர்”,என்று ஆனந்தன் சிரித்தான்.

“அய்யய்யே கொஞ்சம் என்னையும் பேச விடுறீங்களா..நீங்க நினைக்குற மாதிரி எல்லாம் ஒண்ணுமில்ல..”,என்றவன் அனைத்தையும் மேலோட்டமாய் கூறி முடித்தான்.

“வாவ் அண்ணே என்ன ஒரு லவ் ஸ்டோரி..சான்சேயில்லையே..”

“அண்ணி போலீஸா..எப்படிண்ணா இப்படி..”

“காயத்ரி அன்புச்செல்வன்,பெயர் பொருத்தம் கூட சூப்பர் போ..”,குழந்தைகளாய் ஆர்பரிப்பவர்களைப் பார்த்தவனுக்கும் சந்தோஷம் நிச்சயம் இரட்டிப்பாகியிருந்தது.

“போதும் போதும் அதுக்குள்ள என்னை மாட்டி விட்றாதீங்க..உங்ககிட்ட மறைக்க வேண்டாம்னு தோணிச்சு அதான் உடனே சொல்லிட்டேன்.அப்பாகிட்ட பார்த்து பக்குவமா தான் பேசணும்.அதுவரைக்கும்…”

“கண்டிப்பா வாயைத் திறக்கவே மாட்டோம்.”,மூவரும் ஒரு சேர கூறிய விதத்தில் சத்தமாய் சிரித்திருந்தான் அன்பு.

“அண்ணா அவங்ககிட்ட பேசலாம்..கால் பண்ணு..”

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.இந்த வாரத்தில் ஒரு நாள் நேர்லேயே கூட்டிட்டு போறேன்..இப்போ போய் தூங்கு போ”,என்றவன் தங்கையையும் தம்பியையும் துரத்துவதிலேயே கவனமாய் இருந்தான்.

அவனுக்கு உதவ நினைத்தவனாய் ஆனந்தன் சிறியவர்கள் இருவரையும் கீழே தள்ளிச் சென்றான்.மொபைலைக் கையில் எடுத்தவன் காயத்ரிக்கு அழைத்தான்.

“சொல்லு அன்பு.உன்னை என்னவோனு நினைச்சேன்..பரவால்ல அந்த அளவு மோசமில்ல..”

“ஹே ஆனாலும் கிடைக்குற நேரத்துல எல்லாம் என்னை கலாய்க்குற..தூங்கலையா நீ?!”

“தூக்கம் வரல..உன்கிட்ட பேசலாமானு யோசிச்சுட்டு இருந்தேன் நீயே பண்ணிட்ட..”

“யோசிக்க என்ன இருக்கு..பேசணும்னா உடனே கூப்பிட வேண்டியது தான?”

“ம்ம் இனி யோசிக்க மாட்டேன்..சரி சொல்லு என்ன பண்ற சாப்டியா?”

“ம்ம் வீட்டின் பெரிய தலைங்களுக்கு நம்ம விஷயத்தைப் பத்தி சொல்லிட்டேன் அதான் லேட் இல்லைனா அப்போவே கால் பண்ணிருப்பேன்.”

“என்ன??!!ஓ தம்பி தங்கச்சிகிட்டேயா ஒரு நிமிசம் பயந்துட்டேன்.”

“…”

“என்ன சொன்னாங்க??”

“என்ன சொல்லுவாங்க அந்த வாலுக்கு உன்கூட பேசணுமாம்..பெயர் பொருத்தமே சூப்பராம்.ஜோடி பொருத்தம் அதைவிட நல்லாயிருக்காம்..”,என்றவன் சிரிக்க அவளுக்குமே ஒருவித சந்தோஷம் மனதை நிறைத்திருந்தது.

“அன்பு..”

“சொல்லு காயூ..”

“லவ் யூ..”

“!!!”

“திரும்ப சொல்ல மாட்டியா டா?”

“டா வா இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் பண்ணிக்க போறோம்னு நினைப்பு இருக்கா?”

“நீ கிழவனே ஆனாலும் நான் அப்படிதான் கூப்பிடுவேன்..நான் சொன்னதுக்கு பதில் வரவே இல்லையே இன்னும்?”

“வார்த்தையா சொல்றதை விட சீக்கிரமே எங்க வீட்டு மருமகளா உன்னை உட்கார வைச்சு அழகு பார்க்கணும்னு நினைக்குறேன் காயூ..”

“…”

“என்ன ஆளை காணும்?”

“லவ் யூ டா புருஷா..”,என்றவள் போனை வைத்திருந்தாள்.இங்கு அன்புவோ இதழ் நிறைத்த புன்னகையோடு வானத்தை வெறித்திருந்தான்.

காயத்ரி…இரண்டு நாட்களில் வாழ்க்கையையே அழகாக மாற்றியிருந்த ஒரு பெயர்.தனக்காக அவள் எந்த எல்லைக்கும் செல்வாள் தன்னோடு இருக்கும் நொடிகள் எல்லாம் அவளது விழி பரவி நிற்கும் ஒருவித ரசிப்புத்தன்மை.

இயல்பாய் எந்தவித தயக்கமுமின்றி வெளிப்படும் அவளது காதல்.காலையிலிருந்து இப்போது வரை அவனை முழுவதுமாய் ஆக்கிரமித்திருந்த “அவள்”.இனி அவளின் தவிப்புக்கு காரணமாக ஒரு நாளும் தான் இருந்து விடக் கூடாது என்று ஓராயிரம் முறையாய் மனதில் நினைத்துக் கொண்டான் அன்புச்செல்வன்.

மறுநாளின் விடியல் அழகாய் ஆரம்பித்திருக்க சிறியவர்கள் நால்வரும் தங்களுக்குள் எதோ பேசுவதும் சிரிப்பதுமாய் இருக்க ராகினியும் ராகவனும் அதை கவனித்துக் கொண்டு தான் இருந்தனர்.

அன்பும் ஆனந்தனும் வேலைக்கு கிளம்பியிருக்க சிறிது நேரத்தில் சிறியவர்கள் இருவரும் கல்லூரி பேரூந்தில் கிளம்பியிருந்தனர்.

“டேய் அன்புண்ணே கதை செமல..”

“ம்ம் நானும் நேத்துல இருந்து இதைதான் நினைச்சுட்டு கிடக்குறேன்.”

“அப்போ உன் காதலுக்கு மரியாதை கிடைச்சுரும் வீட்ல..”

“ஹே ஏன் டி இப்படி பண்ற..அவசரப்பட்டு எதுவும் உளறிடாத தேனு..”

“ச்ச அதெல்லாம் பண்ணுவேனா..இரண்டு அண்ணியைப் பார்த்தாச்சு ஆனந்த் அண்ணணுக்கும் இது மாதிரி கதை இல்லாம இருந்தா சரி தான்..”,என்றவள் சிரிக்க இன்பாவுமே அதை நினைத்துச் சிரித்தான்.

இன்று கல்லூரியில் நடக்கவிருக்கும் விழாவிற்காக இறுதி ஆண்டு மாணவர்களை ஆடிடோரியத்தில் அமர வைத்திருக்க சிறிது நேரத்தில் சிறப்பு விருந்தினராய் வரவேற்க்கப்பட்டவளைப் பார்த்து தேன்மொழியும் இன்பரசனும் வாய் பிளந்தனர்.

“காயத்ரி மேம் நம்ம ஊரோட புது டிஎஸ்பி..அவர்களை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.”

“டேய் அண்ணி டா..”

“ஆமா தேனு..அண்ணாக்கு வீடியோ கால் போடலமா?!”

“ஹே செம ஐடியா கால் பண்ணு கால் பண்ணு..”,

இன்பாவின் மொபைலில் இருந்து அழைப்பு வந்ததைப் பார்த்து சற்று பதறியவன் வீடியோ கால் என்றவுடன் என்னவாய் இருக்கும் என்று குழப்பத்தோடே அழைப்பை ஏற்றான்.

இன்பா மேடையை சூம் செய்தபடி மொபைலைப் பிடித்திருக்க அங்கு போலீஸ் உடையில் கம்பீரமாய் நின்றவளைப் பார்த்து கண்கள் அதுவாய் விரிந்தன அன்புச் செல்வனிடத்தில்.

இரண்டொரு நிமிடம் அதையே பார்த்திருந்தவன் உதட்டில் ஒட்டிய புன்னகையோடே காலை கட் செய்திருந்தான்.