மொய் சிதைக்கும், ஒற்றுமை இன்மை; ஒருவனைப்
பொய் சிதைக்கும், பொன் போலும் மேனியை; பெய்த
கலம் சிதைக்கும், பாலின் சுவையை; குலம் சிதைக்கும்,
கூடார்கண் கூடிவிடின்

 

ஒற்றுமை இன்மை ஒருவனது வலிமையை ஒழிக்கும். பொய் பேசும் பண்பு உடம்பை அழிக்கும். பால் வைக்கப்பட்ட அசுத்தமான பாண்டம் பாலின் சுவையைக் கெடுத்துவிடும். அது போன்று தீய நட்பு தன் குலத்தையே அழித்து விடும்.”

ப்ரஜீஷ் அழைப்பைத் துண்டிப்பதற்காகவே காத்திருந்தவளாய் அபூர்வா அவளிடத்தில் இருந்து தன் கட்டை விரலை உயர்த்தி புருவத்தால் செய்கை செய்ய இருந்த கடுப்பில் தன் மேஜையில் இருந்த பேப்பர் வெயிட்டை எடூத்து அவள் மேல் எரிவது போல் செய்தவன் கடுப்புடன் எழுந்து வெளியே சென்று விட்டான்.

அவனுக்கு இதில் விருப்பமில்லை என்பது நன்றாகவே புரிந்தாலும் என்ன செய்வது என்று அவளுக்குப் புரியவில்லை.எதுவாயினும் நல்லதாய் மட்டுமே அவனுக்கு நடக்க வேண்டும் என கடவுளை வேண்டிக் கொண்டாள்.

பிரஜீஷோ வெகுவாய் குழம்பியிருந்தான்.வீட்டிற்குச் சென்றவுடன் முதல் கேள்வியாய் அவளுடன் பேசியதைப் பற்றி தான் அம்மா விசாரிப்பார்.என்ன பதில் கூறுவது என கோடி முறையாய் யோசித்தவன் பின் ஒரு முடிவுக்கு வந்தவனாய் இதில் விருப்பமில்லை என்று கூறி விடலாம் என்ற உறுதியோடு கிளம்பிச் சென்றான்.

ஆனால் வீட்டிலோ நிலைமை தலைகீழாய் இருந்தது.அவன் கார் சத்தத்தைக் கேட்டு வாசலுக்கே வந்து வரவேற்றார் சௌமியா.ஏதோ சரியில்லை என்று உணர்ந்தவனாய் அமைதியாய் அவரோடு உள்ளே சென்றவன் சோர்வாய் சோபாவில் அமர சௌமியாவேப் பேச்சை ஆரம்பித்திருந்தார்.

“ப்ரஜி உன்னி அங்கிள் போன் பண்ணிருந்தார்..இரண்டு பேரும் பேசினீங்களாமே…லிசாக்கு இந்தக் கல்யாணத்துல சம்மதமாம்..இதைக் கேட்ட அப்பறம் தான் எங்களுக்கு உயிரே வந்தது.

உனக்கும் சம்மதம் தானே கண்ணா..கண்டிப்பா நீ ஒழுங்கா பேசினதுனால தான அந்தப் பொண்ணுக்கும் பிடிச்சுருக்கு…என்ன டா நான் பாட்டுக்குப் பேசிகிட்டு இருக்கேன்..நீ எதுவோமே சொல்ல மாட்ற..”

சௌமி அவன் இப்போ தான வந்துருக்கான்..கொஞ்சமாவது ரிலக்ஸ் ஆக விடு..போ ப்ரஜி நீ போய் ரெஃப்ரெஷ் ஆய்ட்டு வா..”

“ப்பா…அது வந்து..எனக்கு இது ஒத்து வரும்னு தோணலப்பா..”

“நினைச்சேன் நான் சந்தோஷப்பட்டுடா தான் அந்தக் கடவுளுக்குப் பொறுக்காதே..என்ன பிரச்சனை ப்ரஜி?”

“ம்மா..தேவையில்லாம டென்ஷன் ஆகாதீங்க…அவசரப்பட்டு முடிவு எடுக்குற விஷயம் இல்லையே இது..அவ…ரொம்பவே மார்டன் டைப்னு தோணுது..உங்களுக்கு செட் ஆகுறது ரொம்பவே கஷ்டம்..”

“டேய் குடும்பம் நடத்தப் போறது நீ…உனக்கு ஒத்து வருமானு பார்க்குறதை விட்டுட்டு எங்களைப் பத்தி யோசிச்சேன்ங்கிற…”

“ஓ..காட்..கொஞ்சமாவது புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க மா..”

“நீ தான் புரிஞ்சசுக்க மாட்ற…எந்தக் கல்யாணத்துலேயும் எல்லாமே சரியா அமையாது ப்ரஜி.நாம தான் சரியா மாத்திக்கணும்..

உண்மையைச் சொல்லணும்னா எனக்கு உடம்பு முன்னே மாதிரி இல்ல என் காலத்துக்குள்ள உன் வாழ்க்கையை சரி பண்ணணும்னு தான் தினமும் நான் கடவுளை வேண்டிட்டு இருக்கேன்..”,என்றவர் அழ ஆரம்பித்திருக்க தலையில் கை வைத்து அமர்ந்து விட்டிருந்தான் ப்ரஜீஷ்.

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்தவனாய்,”இப்போ என்ன கல்யாணம் தான பண்ணிக்குறேன்..உங்களுக்குத் தோணுறதைப் பண்ணுங்க..பட் நாளைக்கே இதுல எதாவது பிரச்னைனு வந்தா அப்பவும் இப்படி அழுதுகிட்டு என்கிட்ட வந்து நிக்காதீங்க அவ்ளோ தான் சொல்லிட்டேன்..”,என்றவன் தனதறைக்குச் சென்று கதவை ஓங்கி அறைந்துச் சாத்தியிருந்தான்.

“சௌமி நீ அவசப்படுறியோனு தோணுது..ப்ரஜி காரணம் இல்லாம இப்படி சொல்ல மாட்டான்…கொஞ்சம் நிதானமா…”

“என்னங்க அவசரபடுறேன்..அவன் வயசு பசங்க எல்லாம் கல்யாணம் ஆகி குழந்தைங்களோட இருக்காங்க..இவன் பதிலுக்காக காத்திருந்து காத்திருந்து வயசு ஏறினது தான் மிச்சம்..அவன் தான் சொல்றான்னா நீங்களும் அதை யெல்லாம் பெருசா எடுத்துகிட்டு இருக்கீங்க..

உண்மையைச் சொல்லுங்க நீங்களே மனப்பூர்வமாவா என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?இத்தனை வருஷம் நாம சந்தோஷமா இல்ல?முடிஞ்சா அவனுக்கு அட்வைஸ் பண்ணுங்க…இல்லையா விட்டுருங்க நானே பாத்துக்குறேன்….உங்க தம்பிங்களுக்கும் அவங்க பொண்டாட்டிங்களுக்கும் பதில் சொல்லியே என் உயிர் போகுது..”,என்றவர் மீண்டும் அழத் தொடங்க அதற்கு மேல் மோகன் எதுவும் பேசாமல் அமைதியாகிவிட்டிருந்தார்.

அதற்குப் பின் தன் திருமணப் பேச்சில் எந்த வித தலையீடும் இல்லாமல் அவன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தான் ப்ரஜீஷ்.அடுத்த இரண்டு நாட்களில் நிச்சயத் தேதியும் திருமணத் தேதியும் குறிக்கப்பட்டது.

ஒரு வாரத்தில் நிச்சயதார்த்தமும் அடுத்த ஒரு மாதத்தில் திருமணமும் என்று முடிவாகியிருக்க மோகனும் சௌமியாவும் தனது மகள்களோடு லிசாவின் நாட்டிற்குச் சென்று நிச்சயத்தை முடித்து வருவதாய் ஏற்பாடு செய்யப்பட்டது.எத்தனை கூறியும் ப்ரஜீஷ் வர முடியாது என்றுக் கூறிவிட சௌமியா அவனைக் கட்டாயப்படுத்த வேண்டாம் என்று கூறிவிட்டார்.

மொத்தத்தில் இத்தனை வருடமும் ப்ரஜீஷ் தட்டிக் கழித்ததற்கு எல்லாம் சேர்த்து இப்போது சௌமியா மொத்தப் பொறுப்பையும் தன் கையில் எடுத்திருந்தார்.யார் கூறுவதையும் காது கொடுத்துக் கேட்பதற்கு அவர் தயாராய் இல்லை.

ராஜீவிற்கும் அபூர்வாவிற்கும் யாருக்காகப் பேசுவது என்றே தெரியாத நிலை.ப்ரஜீஷிடமும் இதைப் பற்றிப் பேசுவதற்கு உண்மையில் பயமாய் இருந்தது.அவனும் வேலைப் பற்றிய பேச்சுகளைத் தவிர மற்றதை பேச விரும்பாமல் தவிர்க்கிறான் என்பது வெளிப்படையாகவேத் தெரிய அவர்களும் அதனால் அமைதி காத்தனர்.

கண்மூடித் திறப்பதற்குள் நிச்சசயமும் முடிந்து விட்டிருந்தது.இரு தினங்களுக்கு சௌமியா அவனிடம் அங்கு நடந்த அத்தனையையும் கூறிக் கொண்டிருந்தார்.அதிலும் லிசாவைப் பற்றிய புராணத்தை அவனால் கேட்கவே முடியவில்லை.இது பத்தாது என தன் சொந்தபந்தம் அத்தனைப் பேருக்கும் போன் செய்து அவனது திருமண செய்தியை விளம்பரப்படுத்துவதையே முழுநேர வேலையாகக் கொண்டிருந்தார்.

இதற்கு நடுவில் இருமுறை லிசா வேறு அவனுக்கு வீடியோ கால் செய்திருந்தாள்.ஒரு முறை ஏதோ காரணம் கூறித் தவிர்த்தவனால் அடுத்த முறைத் தவிர்க்க முடியாமல் போயிருந்தது.

அழைப்பை ஏற்றவனுக்கு ஹாய் என்று கையில் மதுக் கோப்பையோடு இருந்தவள்  புன்னகைத்துக் கூற அருகிலேயே ஒருவன் கிட்டத்தட்ட அவளை அணைத்தபடி முழு போதையில் இருந்தான்.

அவன் பார்வையின் திசையுணர்ந்தவளாய்,ஹே ஹி இஸ் மார்க்…மை கரண்ட் பாய் ப்ரெண்ட்”,என்றவள் அவன்புறம் சாய்ந்து கூற அவனோ பதிலுக்கு ஆமோதிப்பாய் தலையசைத்தப்படி அவள் கன்னத்தில் தன் முத்தத்தைப் பதித்திருந்தான்.

இரண்டொரு நிமிடங்கள் பேருக்கு எதையோப் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்த பின் தான் ப்ரஜீஷால் இயல்பாய் மூச்சு விடவே முடிந்தது.இப்போதே ஒவ்வொரு நாளும் இத்தனை கொடுமையாய் இருந்தால் திருமணத்திற்குப் பின்னான வாழ்க்கையை நினைத்தால் தலை வலியெடுத்தது ப்ரஜீஷிற்கு.

ஆனால் அடுத்த ஒரே வாரத்தில் அத்தனையும் தலைகீழாய் மாறிவிட்டிருந்தது.லிசாவின் தந்தை, மோகனிற்கு அழைத்து தன் மகளுக்குத் திருமணத்தில் விருப்பமில்லை எனவும் எத்தனை கூறியும் கேட்கவில்லை என்றும் அவளது விருப்பத்தை மீறி இதைச் செய்வது சரிவராது என்றும் கூறினார்.

கேட்டதிலிருந்து மோகன் ஒருபுறம் என்ன செய்வதெனப் புரியாமல் தவித்திருக்க சௌமியாவோ பூஜையறையே கதியென அழுது கரைந்தார்.மகள்கள் மாற்றி மாற்றி பெற்றவர்களை அழைத்துச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தனர்.

இதற்குள் நிச்சயம் முடிந்த அடுத்த அரைமணி நேரத்தில் காட் என்கேஜ்ட் எனத் தன் சமூக வலைதளப் பக்கங்களில் ப்ரஜீஷையும் இணைத்து ஸ்டேட்ஸ் போட்டு வைத்திருந்தவளால் அன்று ஊரே வந்து ப்ரஜீஷிற்கு வாழ்த்துச் சொல்லியது என்றால் இன்றோ அவனுக்கு விஷயம் தெரிந்த ஒரு மணி நேரத்தில் ஹேப்பிலி ப்ரேக்ட் அப்..என்ஜாயிங் சிங்கிள்ஸ் லைப் என்று அவள் போட்டிருந்ததைப் பார்த்து அழைப்பு மேல் அழைப்பு வர ஆரம்பித்திருந்தது ப்ரஜீஷிற்கு.

தேவையற்றத் தலைவலி வேண்டாம் என்று எண்ணியவனாய் போனை அணைத்து வைத்துவிட்டு வேலைக்குத் தயாராகி வந்தவனை ஆச்சரியமாய் பார்த்திருந்தனர் மோகனும் சௌமியாவும்.

“ப்ரஜி…”

“என்னப்பா சீக்கிரம் சொல்லுங்க வேலை இருக்கு…”

“என்ன டா எதுவுமே கேட்காம…”

“என்ன கேட்க சொல்றீங்க அதான் சோஷியல் மீடியால போட்டு ஊருக்கே விஷயத்தை சொல்லிட்டாலே…அண்ட் ஒரு விதத்துல எனக்கு இதுல ரொம்பவே நிம்மதி தான்…நான் முதல்லயே சொன்னேன்..நீங்க தான் கேட்கல..”,என்றவனின் பார்வை சௌமியாவிடம் படிந்து மீண்டது.

“ப்ரீயா விடுங்கப்பா கொஞ்ச நேரத்துக்கு எந்த கால் வந்தாலும் அட்டெண்ட் பண்ணாதீங்க..சும்மா ஏதோ துக்கம் விசாரிக்குற மாதிரி விசாரிச்சு இரிடேட் பண்ணுவாங்க…நான் கிளம்புறேன் பை..”,என்றவன் அவன் போக்கில் சென்றுவிட மோகனும் சௌமியாவைத் தான் குற்றம் சாட்டும் பார்வைப் பார்த்து வைத்தார்.

அவன் வருவதற்கு முன்பாகவே ராஜீவும் அபூர்வாவும் அவனுக்காக அவனது அறையில் காத்திருக்க வந்தவனோ எந்த உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாது அவன் இருக்கையில் அமர்ந்தான்.

“ப்ரஜி நீ எதுவும் மனசுல போட்டுக் குழப்பிக்காத…”

“ராஜீவ் எனக்கு இதில் விருப்பமில்லனு நான் எப்பவோ சொல்லிட்டேன்..சோ இதுல எந்த எதிர்பார்ப்பும் இல்ல..ஏமாற்றமும் இல்ல..ஐ அம் பெர்பெக்ட்லி ஆல்ரைட் டா…”

“….”

“ஆனாலும் இதோ இருக்கா பாரு இவளைச் சொல்லணும்..என் இஷ்டத்துக்கு லைஃபை என்ஜாய் பண்ணிட்டு இருந்தேன்…எதை எதையோ பேசி என்னைக் குழப்பி இப்போ பாரு என்ன நிலைமைக்கு வந்துருக்கேன்னு..”,என்றவன் விளையாட்டாய் கூற அபூர்வாவின் கண்களில் நீர் கோர்த்திருந்தது.

“ஹே சும்மா விளையாட்டுக்குத் தான் சொன்னேன்..இதைப் போய் சீரியஸா எடுத்துக்குற…”

“இல்ல ..ஐ அம் ஓகே…இதோ வந்துட்றேன்..”,என்றவள் வேகமாய் அங்கிருந்து வெளியேறியிருந்தாள்.

“ப்ச்…ராஜீவ் இன்னைக்கு எந்த மீட்டிங் இருந்தாலும் கேன்சல் பண்ணச் சொல்லிடு அவகிட்ட.. நான் கொஞ்ச நேரம் தனியா இருக்கணும்…”

“ம்ம் சரி டா…டேக் கேர்..”,என்றவனும் அங்கிருந்து கிளம்ப மனமின்றி வெளியேறினான்.

தன் இருக்கையில் பின் சாய்ந்து கண்களை மூடியவனுக்கு ஒருவித வெறுமை சூழ்ந்திருந்தது.திருமணம் நின்றதை விட அத்தனைப் பேரும் ஏதோ பரிதாபமாய் தன்னைப் பார்ப்பதைத் தான் அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அத்தனைக்கும் காரணமானவளோ இதை விழாப் போன்று கொண்டாடிக் கொண்டு இருக்கிறாள்.எதுவும் செய்யாத தான் இப்படி அத்தனைப் பேருக்கும் பதில் சொல்லிக் கொண்டு இருக்கிறோமே என்ற கோபம் கொஞ்சம் கொஞ்சமாய் அவனுள் அதிகரித்துக் கொண்டிருந்தது.

எரிச்சலுடன் அங்கிருந்துக் கிளம்பியவன் ஓட்டுநரை வர வேண்டாம் என்று கூறிவிட்டுத் தானே காரை ஓட்டிக் கொண்டு கண் போன போக்கில் போகத் தொடங்கியிருந்தான்.ஒரு மணி நேரத்திற்குப் பின் ஓரிடத்தில் நிறுத்தியவனுக்கு கண்ணில் பட்டது அங்கிருந்த மதுபானக் கடை.

எதைப் பற்றியும் யோசிக்காது காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றவன் கண்மன் தெரியாமல் குடிக்க ஆரம்பித்திருந்தான்.உயர்தர மதுபானங்களே ஓரளவிற்கு மேல் அவனுக்கு ஒத்துக் கொள்ளாத நிலையில் அங்கிருந்த அடிமட்ட பானங்களைக் குடித்தவனுக்கு என்ன செய்கிறது என்று கூடப் புரியாத நிலைக்குக் கொண்டுச் சென்றிருந்தது.

வழக்கம் போல் அரை மயக்க நிலையில் இருந்தவனுக்கு ஏதோ ஒரு உள்ளுணர்வு தோன்ற ராஜீவிற்குத் தான் இருக்கும் இடத்தின் லொக்கேஷனை ஷேர் செய்து விட்டிருந்தான்.

அதைப் பார்த்த அடுத்த நிமிடம் அலுவலகத்திலிந்து ராஜீவ் கிளம்பிய வண்ணம் அபூர்வாவிடம் விஷயத்தைக் கூற அவள் தானும் வருவதாய் கூறி அவனோடு கிளம்பிச் சென்றாள்.

போகும் வழி மொத்தமும் கண்களில் நீர் அதுவாய் வழிந்து கொண்டிருக்க ராஜீவுமே அவளைச் சமாதானப்படுத்தும் நிலையில் இல்லை.ஒருமணி நேரப் பயணம் ஒரு யுகமெனக் கழிய அவ்விடத்தை அடைந்தவன் அபூர்வாவைக் காரிலேயே இருக்குமாறு கூறிவிட்டு வேக வேகமாய் உள்ளேச் செல்ல அங்கு கேட்ட விஷயத்தில் உலகமே நின்று விட்டிருந்தது ராஜீவிற்கு.

கண்கள் எல்லாம் சிவந்துப் போயிருக்க அத்தனை வேகமாய் ஓடி வந்தவனைப் பார்த்தவளுக்கு பயம் இன்னுமாய் அதிகரித்திருந்தது.

“ப்ரஜீஷை எங்க ணா?”

“நெஞ்சு வலினு சொன்னானாம்..ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணி பக்கத்துல உள்ள ஹாஸ்பிட்டல்க்கு அனுப்பி வச்சதா வேலைப் பார்த்த பையன் சொல்றான்..”என்பதைக் கேட்டவள் சர்வமும் அடங்கிப் போயிருந்தாள்.