கந்தில் பிணிப்பர், களிற்றை; கதம் தவிர,
மந்திரத்தினால் பிணிப்பர், மா நாகம்; கொந்தி,
இரும்பின் பிணிப்பர், கயத்தை; சான்றோரை
நயத்தின் பிணித்துவிடல்!

 

யானையைக் கட்டுத் தறியினாலும், பாம்பை மந்திரத்தாலும், கீழ்மக்களைக் கொடிய இரும்பு விலங்காலும் வயப்படுத்துவர். சான்றோரை இன் சொற்களால் தன்வயப்படுத்துவர்.

தயக்கத்தோடே அவனருகில் சென்றவள் சமாதானம் கூறலாமா வேண்டாமா என்றக் குழப்பத்திலேயே சில நொடிகள் நின்றிருக்க பின் சற்றேத் தொண்டையைச் செருமியவாறு,

“ஒண்ணும் ப்ராப்ளம் இல்லையே?”

“ஆங்…நோ நத்திங்…”

“….”

“அப்பறம்.. உனக்கு எந்த ரூம் வேணுமோ எடுத்துக்கோ..சர்வெண்ட்ஸ் ரெண்டு பேர் எப்பவுமே இருப்பாங்க…அண்ட் ஹோட்டல் ரூம்ல இருந்து நம்ம லக்கேஜஸ் எல்லாம் இங்க வந்துருச்சு..வேற எதுவும் வேணும்னாலும் அவங்ககிட்ட சொல்லு வாங்கிட்டு வந்து தருவாங்க…”

இத்தனை நீளமாய் அவன் பேசிக் கேட்டவளுக்கு அதிலும் தனக்காக இத்தனை யோசிப்பவனுக்காக எதாவது செய்ய முடிந்தால் நன்றாக இருக்கும் என்றுத் தோன்ற தனதருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள் அபூர்வா.

“ஏதோ ஸ்ட்ரெஸ்ல இருக்கீங்கனு தெரியுது..இப்போதைக்கு இங்க இருக்குறது நான் மட்டும் தான்..ஷேர் பண்ணிக்கணும்னு தோணிணா சொல்லுங்க..நான் கேட்குறேன்..”

எதுவும் கூறாமல் அவளின் மறுபுறமாய் வெறித்திருந்தவன் அப்படியே அமைதியாய் இருக்க சில நிமிடங்கள் காத்திருந்தவள் பின் கட்டாயப்படுத்தத் தோன்றாமல் எழுந்திருந்தாள்.

கதவருகில் சென்றவள் மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்க்க அப்போதும் அவன் அசையாமல் இருக்க அமைதியாய் சென்றிருந்தாள்.மதிய நேரத்தில் மிகவும் அசதியாய் இருந்ததில் கீழிருந்த ஓர் அறைக்குள் சென்றவள் அப்படியே கண்ணயர்ந்திருந்தாள்.

மீண்டும் கண் விழித்த போது அறை மொத்தமும் இருளில் மங்கிக் கிடந்தது.மெதுவாய் எழுந்து விளக்குகளை ஒளிரவிட்டு விட்டு முகத்தைக் கழுவி வெளியே வந்தாள்.

ப்ரஜீஷின் அறை பூட்டியிருக்க இவளைக் கண்டதும் பணிப்பெண் வந்து ஏதும் வேண்டுமா எனக் கேட்க காபி வேண்டும் என்றுக் கூறியவள் ப்ரஜீஷைப் பற்றி விசாரித்தாள்.

அவன் மதியத்திலிருந்து வெளியே வரவில்லை என்றும் உணவு கூட உண்ணவில்லை என்றும் கூறினார்.எப்படியும் எதுவும் பேச மாட்டான் எனினும் எதாவது உண்ணவாவது எடுத்துச் செல்லலாம் என்று எண்ணியவளாய் அவனுக்கும் சேர்த்து காபி எடுத்து வருமாறு கூறினாள்.

லேசாய் கதவைத் தட்டிவிட்டு உள்ளே எட்டிப் பார்க்க மதியம் அமர்ந்திருந்த அதே நிலையில் அப்படியே அமர்ந்துக் கைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

பணிப்பெண்ணை காபி கோப்பைகளை அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டுச் செல்லுமாறு கூறியவள் அவனுக்கான காபியை நீட்ட நிமிர்ந்து அவளைப் பார்த்தவனாய் ஒன்றும் கூறாமல் அதை வாங்கிக் கொண்டான். அபூர்வா தனக்கான கோப்பையை எடுத்துக் கொண்டு அந்தச் சேரில் அமர்ந்தாள்.

“தேங்க்ஸ்….”,என்றவனுக்கு பதிலாய் லேசாய் புன்னகைத்தவள்,

“மதியமும் சாப்பிடலனு சொன்னாங்க..சாப்பிட எதாவது கொண்டு வரவா…மாத்திரை எல்லாம் சாப்பிடுறதுனால வயிறு புண்ணாகாம இருக்கும்…”

“கேன் யூ ப்ளீஸ் ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்…”ப்ரஜீஷ் கத்திய கத்தில் அரண்டே போயிருந்தாள் அபூர்வா.

“நான் ஒண்ணும் குழந்தை இல்ல புரியுதா…எனக்கு என்னைப் பாத்துக்கத் தெரியும்…இப்படி பம்பர் பண்றதை விட்டுட்டு போய் உன்னை நீ கவனிச்சுக்கோ…சும்மா இரிடேட் பண்ணிகிட்டு…கெட் லாஸ்ட்…”,என்று கண்மண் தெரியாமல் கத்தியவனாய் படுத்துக் கண்களை மூடிக் கொண்டான்.

விழிகளை நீர் மறைக்க அங்கிருந்து வெளியேறியவள் தனதறைக்குள் புகுந்துக் கொண்டாள்.எவ்வளவு நேரம் அழுதாளோ தெரியாது அப்படியே உறங்கியும் விட்டிருந்தாள்.

மறுநாளின் விடியல்  ஒருவித சோர்வுடனேயேத் தொடங்கியிருந்தது அபூர்வாவிற்கு.முந்தைய இரவு சாப்பிடாமல் வேறு படுத்ததால் பசி கையின் வலி என பலவித எரிச்சல்களோடேத் தொடங்கியது.

பணிப்பெண்ணின் உதவியோடு குளித்து முடித்தவள் முதல் வேலையாய் உணவருந்தச் சென்றாள்.பணிப்பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் இருக்க அவர் ப்ரஜீஷை தயார் செய்து வெளியே அழைத்து வந்தார்.

அபூர்வா பெரிதாய் எதுவும் கண்டு கொள்ளாமல் அவளது உணவிலேயே குறியாய் இருப்பதாய் காட்டிக் கொள்ள அவனுக்கும் பரிமாறிவிட்டு பணியாட்கள் உள்ளே சென்று விட்டிருந்தனர்.சில நிமிடங்களின் மௌனத்தை ப்ரஜீஷே கலைத்தான்.

“நேத்து ஏதோ ஒரு டென்ஷன்ல அப்படி பேசிட்டேன்…தப்பா எடுத்துக்காத…”

“நான் தப்பா நினைக்குற அளவுக்குப் பெரிய ஆள் எல்லாம் இல்லயே…என்ன இருந்தாலும் நீங்க என் முதலாளிங்கிறதை நான் மறந்துட்டேன்…எனக்கு நீங்க பார்த்துப் பார்த்து இத்தனை பண்ணிருக்கும் போது..

நீங்க சரியா சாப்பிடுறீங்களானு கூட கவனிக்கலனா…..அதான் வேற ஒண்ணுமில்ல…இனி தேவையில்லாம எதுவும் பேச மாட்டேன்…நீங்க ரிலாக்ஸா இருங்க..”எனும் போதே அவளது கைப்பேசி ஒலிக்க எடுத்துச் சென்று பேசிவிட்டு வந்தாள்.

“எனக்கு இதெல்லாம் புதுசா இருக்கு…இந்தத் துரோகம்..அதனால் வந்த வலி…இப்போ உன் கவனிப்பு எல்லாமே….அதான் ஒரு மாதிரியான ஸ்ட்ரெஸ்…”

“!!!!!”

“இந்த அக்ஸிடெண்ட்க்கு காரணமானவனை அல்மோஸ்ட் ட்ரேஸ் பண்ணியாச்சு…அவங்களுக்கு இன்பர்மேஷன் கொடுத்தது எனக்கு ரொம்பவே நம்பிக்கையான ஒரு ஆள்…நேத்து தான் ராஜீவ் சொன்னான்..

பாவம் அவன் தான் ஆபீஸையும் பாத்துகிட்டு இதையும் கவனிச்சுக்குறான்…என்னால அதையே ஏத்துக்க முடில..இதுல இந்த வீல் சேர்ல இருக்குறது அதை விட்டா கட்டிலேயே உக்காந்துருக்குறது…எழுந்து இரண்டு அடி நடக்குறதுக்குக் கூட யாரையாவது சார்ந்து இருக்குறது…

இதெல்லாம் என்னால ஏத்துக்கவே முடில…நான் இப்படி ஒரு இடத்துல உட்காந்திருந்ததா எனக்கு நினைவே இல்ல..இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க…நேத்து நீயா வந்து என்கிட்ட பேசினது….டோட்டலா…

என்ன சொல்றது…என் மேல் அக்கறைங்கிறதைத் தாண்டி இப்படி கேட்கணும்னு கூட யாரையும் பக்கத்துல விட்டது இல்ல…ராஜீவ் மட்டும் இதில் விதிவிலக்குனு சொல்லலாம்..அதனால தான் உன்கிட்ட கோபமா கத்திட்டேன்…”

“ஓ…சாரி நீங்க இத்தனை விஷயங்களை யோசிக்குறீங்கனு என்னால புரிஞ்சுக்க முடில…அதுவுமில்லாம நீங்க சொன்ன மாதிரி எப்பவுமே பிஸியா பார்த்த உங்களை அப்படி பார்க்க கஷ்டமா இருந்தது.அத்தனையும் மீறி எனக்காக வேணும்ங்கிறதை எல்லாம் நியாபகம் வச்சு செய்யும் போது நானும் உங்களுக்கு பதிலுக்கு செய்ய கடமை பட்டுருக்கேன்னு தோணிச்சு…

இந்த ஸ்ட்ரெஸ் இல்ல மூட் அவுட்ல இருக்கும் போது என்னை நான் எப்பவுமே தனியா வச்சுக்க மாட்டேன்..பிரச்சனையை ஷேர் பண்ணலனாலும் யாரோடயாவது போய் எதாவது பேசினா கொஞ்ச நேரத்துல மைண்ட் சரியாய்டும்..அப்படி தான் உங்களையும் பேச வைக்க முயற்சி பண்ணிணது…வேற எந்த நோக்கமும் இல்ல..”

“ம்ம்..எப்படியும் இன்னும் ஒரு நாலு நாள் அதுக்கப்பறம் லேப்டாப் கைக்கு வந்துரும்…வேலை ஆரம்பிச்சுட்டா மத்தது எல்லாம் மறந்துரும்..”

“அது ஏன் நாலு நாள்?”

“இந்த ராஜீவ் தான் உடம்பை பாத்துக்கோ அதுவரை நான் பாத்துக்குறேன்னு சொல்லிட்டான்.நாலு நாளுக்கு அப்பறமும் கிடைக்குமானு தெரியாது..”

“அவர் ரொம்ப நல்ல ப்ரெண்ட் உங்களுக்கு…”

“ம்ம்…”

“இப்படி ஒருத்தர் கூட இருக்கும் போது ஏன் உங்களுக்குத் தேவையில்லாதவங்களைப் பத்தி நினைச்சு உங்க மைண்டைக் குழப்பிக்குறீங்க?”

“ஈஸியா சொல்லிட்ட…”

“இல்ல உண்மையாவே எப்பவும் நம்மகிட்ட இருக்குற நல்ல விஷயங்களை பத்தி அதிகமா நினைக்கனும்…எப்பவோ எதோ ஒரு தப்பு நம்ம வாழ்க்கையில நடந்துட்டா கூட அதை அப்போவே கடவுள் நம்ம கண்ணுல காட்டிடாறேனு நிம்மதி தான் படணும்…

யோசிச்சுப் பாருங்க உங்களுக்குத் துரோகம் பண்ண அந்த நபர் பத்தி இப்பவும் தெரிய வராம இருந்திருந்தா நீங்க இன்னமும் அவரை நம்பிட்டே இருந்துருப்பீங்க தான…அதுவே எதிர்காலத்துல உங்களுக்கு மிகப் பெரிய ஆபத்தைக் கொடுக்கலாம் இல்லையா?

இது பிரச்சனையைக் கண்டிப்பா முடிக்காது ஆனாலும் நம்ம மனசை நாம சமாதானப்படுத்திகிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போலாம்..”

“ம்ம்…”,என்று மட்டும் கூறியவனுக்குப் புன்னகையைப் பதிலளித்துவிட்டு கை கழுவ எழுந்துச் சென்றிருந்தாள் அபூர்வா.

எத்தனை சுலபமாய் கூறிவிட்டாள் ஆனால் அதுதான் உண்மையும் கூட..நடந்த கெட்டதை மட்டுமே நினைத்து வெந்து நொந்து ஒன்றும் ஆகப் போவதில்லை தானே.அதுவும் உடலும் மனமும் சோர்ந்திருக்கும் இந்த நிலையில் நிச்சயமாய் தேவையியேயில்லை தான் என்று எண்ணியவன் அமைதியாய் அவளது அறைக்குச் செல்பவளையேப் பார்த்திருந்தான்.

அதன் பின் அன்றைய தினம் கடினப்பட்டு அந்த எண்ணங்களைத் தவிர்க்க நினைத்தவனாய் தனதறையில் தொலைக்காட்சியைப் பார்ப்பதும் கைப்பேசியில் எதையாவது செய்வதுமாய் பொழுதைப் போக்க நினைத்தாலும் பழக்கமில்லாத விஷயங்களில் மனம் லயிக்க மறுத்தது.

மதியத்திற்கு மேல் உறக்கமும் வராமல் அறையிலிருந்து வெளிவர நினைத்தவன் பணியாளை அழைத்து வீல் சேரின் உதவியோடு வீட்டின் முன்புறம் இருந்தத் தோட்டத்திற்குச் செல்ல அங்கு ஏற்கனவே நீச்சல் குளத்திற்குள் காலை விட்டபடி அமர்ந்திருந்தாள் அபூர்வா.

“தூங்கலையா?”

சட்டென அருகில் கேட்ட அவனது குரலில் தூக்கி வாரிப் போட அவசரமாய் எழுந்து தனது சுடிதாரின் கால்சட்டையை கீழே இறக்கி விட்டு நின்றாள்.

“இல்ல…தூக்கம் வரல அதான்…அதுவு…”

“என்ன பரவால்ல சொல்லு…”

“அதுவுமில்லாம இதெல்லாம் நான் சினிமால தான் பார்த்துருக்கேன்..இப்படி பெரிய வீடு ஸ்வுமிங் பூல் எல்லாம்…அதான் சும்மா கொஞ்ச நேரம் உட்காரலாமேனு…”,என்றவள் சொன்ன விதத்தில் அவன் அவளை விசத்திரமாய் பார்க்க அதற்குள் அவளுக்கு வந்த அழைப்பை ஏற்றுப் பேசச் சென்றாள்.

அவளையேப் பார்த்திருந்தவனை நோக்கி வந்தவள் லேசாய் தலையைச் சொரிந்தவாறு அவனருகில் கீழே புல்வெளியில் அமர்ந்தாள்.எவ்வித தயக்கமும் இருக்கவில்லை அவளிடத்தில்.

“உள்ளே இருந்து மோடா எடுத்துட்டு வர சொல்லவா?”

“இல்ல அதெல்லாம் வேண்டாம்..இது தான் நல்லாயிருக்கும்..இந்த வேலைக்கு வந்த அப்பறம் தான் கீழே உட்காருறதுங்கிறதே குறைஞ்சு போன மாதிரி இருக்கு..”,என்று இயல்பாய் கூறியவளிடம் சிறிது நேரம் பேச வேண்டும் போல் இருந்தது அவனுக்கு.

“மார்னிங் தான போன் பேசின..ஆபீஸும் இல்ல…பாய் ப்ரெண்டா…”

“ஏன் இப்படி…அதெல்லாம் இல்ல…காலையிலே அப்பா பேசினாங்க..இப்போ அம்மா…சாய்ந்திரம் ஆனா தங்கச்சி பேசுவா…”

“ஓ…தினமுமா?”

“ம்ம் ஆமா அங்க நடக்குறது எல்லாம் என்கிட்ட சொல்லாம அவங்களால இருக்க முடியாது..இங்க நடக்குறதை சொல்லாம என்னால இருக்க முடியாது…”

“அப்போ இந்த .அக்ஸிடெண்ட்?”

“இல்ல அதைச் சொல்லல…அப்பறம்…இது மட்டும் இல்ல..நீங்க சம்மந்தப்பட்ட எந்த விஷயமும் சொன்னதில்ல…”

“ஏன் அப்படி?”

“ஏன்னா…என்ன சொல்றது…அவங்களுக்குத் தெரிய வேண்டியது என்னைப் பத்தி மட்டும் தான்..உங்க விஷயங்கள் அவங்களுக்குத் தேவையில்லாதது..அதுமட்டுமில்லாம யாருக்கும் சொல்லாத, யாரும் சம்பந்தப்படாத விஷயத்தில் நான் இருக்கேன்னா அது என் மேல இருக்குற நம்பிக்கைனால தான…அடுத்தவங்களோட ப்ரைவஸியை எல்லாருக்கும் தெரியப்படுத்துறது தப்பு இல்லையா…”

“உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம் கூட உலகத்துல இருக்காங்களா?”

“ஏன் அப்படி சொல்றீங்க…எல்லாரும் அப்படி இல்லைனாலும் இப்படி இருக்குறவங்க அதிகம் தான்..என்ன நாம சந்திச்சுருக்க மாட்டோமா இருக்கும்…”

அடுத்து அவன் ஏதோ கேட்பதற்குள் அவனது கைப்பேசி அலறியது ராஜீவ் தான் அழைத்திருந்தான்.அவள் தன் போக்கில் தனது கைப்பேசியைத் துழாவ ஆரம்பித்திருந்தாள்.

“சொல்லு டா கிடைச்சானா?”

“…….”

“தேவையான விவரம் எல்லாம் சொன்னானா??”

“………”

“எவிடென்ஸ்?”

“………”

“அப்பறம் என்ன முடிக்க சொல்லிரு…”

“……”

“இதுல யோசிக்க ஒண்ணுமில்ல…அவன் உயிரோட இல்லங்கிற நியூஸ் இன்னும் பத்து நிமிஷத்துல எனக்கு வரணும்..”,என்பதைக் காதில் வாங்கியவளின் கைகள் அதுவாய் நடுக்கத்தில் கைப்பேசியைத் தவர விட்டிருந்தது.