திருவின் திறல் உடையது இல்லை, ஒருவற்கு;
கற்றலின் வாய்த்த பிற இல்லை; எற்றுள்ளும்
இன்மையின் இன்னாதது இல்லை; ‘இலம்!’ என்னும்
வன்மையின் வன்பாட்டது இல்.

 

செல்வத்தைப் போல் ஒருவனுக்கு வலிமையுடையது வேறில்லை. கல்வியைப் போல் துணையாவது பிறிதில்லை. வறுமையைப் போல் துன்பமானது வேறு இல்லை. இல்லை என்று கூறாமல் ஈதலைப் போல் திட்பமானது வேறு இல்லை.”

காலை வேளை சூரியக் கதிர்கள் அறைக்குள் நுழைந்ததில் லேசாய் தூக்கம் கலைந்தவளாய் புரண்டுப் படுத்தவள் தன்னைச் சூழ்திருந்த ப்ரஜீஷின் கைகளுக்குள் இன்னும் வாகாய் ஒளிந்துக் கொண்டாள்.

சில நிமிடங்கள் அப்படியே விழித்திருந்தவளின் முதுகில் வைத்திருந்த தன் கைக் கொண்டு அவன் லேசாய் கிறுக்கிட கூச்சத்தில் நெளிந்தவளாய் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

“எழுந்துக்குற ஐடியா இல்லையா?”

“மணி என்னாச்சு??”

“எட்டு தான் ஆகுது..”

“ஐயோ…அவ்ளோ நேரமா…”,என்றவள் பதறி எழுந்து அமர்ந்தாள்.

“நீங்க முழிச்சு தான் இருக்கீங்களா?என்னை எழுப்பிருக்கலாம்ல..யாராவது வந்தாங்களா?”

“எத்தனை கேள்வி தான் கேட்ப…நான் முழிச்சு இரண்டு மணி நேரம் ஆச்சு..நீ நல்லா தூங்கிட்டு இருந்த சரி டிஸ்டர்ப் பண்ண வேணாமேனு அப்படியே இருக்கேன்..

அண்ட் நம்ம ரூம்க்கு தேவையில்லாம யாரும் வர மட்டாங்க..நானா கூப்பிடாத வரை..”,என்றவன் எழுந்துக் கட்டிலின் பின் சாய்ந்தவாறு அமர்ந்தான்.

“ஒரே நாள்ல இப்படி ஆய்ட்டீங்களே..புதுசா பாக்குற மாதிரி இருக்கு..”,என்றவள் தன் தலைமுடியைச் சேர்த்துக் கொண்டை போட்டுக் கொண்டே அவனைப் பார்க்க கை நீட்டி அவளைத் தன்புறம் அழைத்தவன் தன் இடது புறத் தோளில் சாய்த்துக் கொண்டவனாய்,

“வெளி உலகத்துத்துக்கான ப்ரஜீஷ் எப்பவுமே அப்படியே தான் இருப்பான்..ஆனா உன் ப்ரஜு வா இப்படியிருக்க பிடிச்சுருக்கு..”

“எனக்கும்..”,என்றவள் கண்சிமிட்டி அவன் கன்னத்தில் இதழ்பதித்துச் சிரித்த வண்ணம் குளித்துத் தயாராகச் சென்றாள்.

குளித்துத் தயாராகி அபூர்வா கீழே செல்ல அங்கு சௌமியா மட்டுமே அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்.

“குட்மார்னிங் அத்தை..”

“மார்னிங் டா..வா காபி சாப்டுறியா..”

“நான் போய் எடுத்துட்டு வரேன்..”

“அட உட்காரு வேலை செய்யுற பொண்ணு கொண்டு வருவா..அம்மா அப்பா இவ்ளோ நேரம் இங்க தான் இருந்தாங்க..எனக்குத் தெரிஞ்ச தமிழ்ல பேசினேன்..புரிஞ்சுதோ என்னவோ..”அதற்கும் சிரிப்பையே பதிலாய் அளித்தவள் தயக்கமாய்,

“சாரி அத்தை கொஞ்சம் லேட் ஆய்டுச்சு..நாளைக்கு சீக்கிரம் எழுந்துக்குறேன்.”

“அட நீ வேற கல்யாண அலுப்பு தீரவே இன்னும் நாலு நாள் ஆகும் பத்தாதுனு ஈவ்னிங் ரிசெப்ஷன் வேற இருக்கு கேட்கவே வேணாம்..லதாவும் லேகாவுமே இன்னும் எழுந்துக்கல…”

சரியாய் அந்த நேரம் லதாவும் லேகாவும் குளிக்கக் கூட இல்லாமல் மா காபி வேணும் என்று வர சௌமியா அபூர்வாவைப் பார்த்துச் சிரித்தார்.

“பாரு லதா…அதுக்குள்ள அம்மா மருமகளோட சேர்ந்து நம்மளை கலாய்க்குறாங்க..”

“ஆமா டீ..அப்போ அடுத்த லீவ்க்கு நம்ம வரும்போது நம்ம நிலைமை.. “

“அண்ணி…காலையிலேயே ஆரம்பிக்காதீங்க…”

“சரி குட்டிப் பொண்ணு கேட்குறதால விடுறோம்..”

“என்ன நடக்குது இங்க..நீ வானு தான் சொல்றீங்களா அண்ணியை?”

“அத்தை நான் தான் சொன்னேன்…அவங்க என்னை விட பெரியவங்க தான..அப்படியே கூப்பிடட்டும்..”

“ம்ம் அது சரி..ஆனாலும்  ப்ரஜீக்கு இப்படி ஒரு மனைவி வரணும்ங்கிறதுனால தான் இத்தனை நாள் கல்யாணம் தள்ளிப் போயிருக்கும் போல..”,என்றவரின் முகம் லேசாய் வாடிவிட மற்ற மூவரும் என்னவெனப் புரியாமல் அவரையே பார்த்திருந்தனர்.

“உண்மையா எவ்வளவு சந்தோசமா இருக்கேன் தெரியுமா அபூர்வா..எந்த பங்ஷன் போனாலும் பையனுக்கு கல்யாணம் பண்ணலையா ஏன் எதுக்கு எதுவும் பிரச்சனையானு ஆயிரம் கேள்வி கேட்பாங்க..

அதுக்கும் மேல என் முதுகுக்குப் பின்னாடி பல மாதிரி எல்லாம் பேசிருக்காங்க…அவனைப் பத்தி தப்பு தப்பா…”,எனும் போதே குரல் நடுங்கியது சௌமியாவிற்கு.

“அத்தை…”

“ம்மா…”

“இல்லடா ரொம்ப நாளா மனசுல உள்ளது சொல்லணும்னு தோணுது வேற ஒண்ணுமில்ல..அவன் பண்றது தப்புனு தெரிஞ்சாலும் ஒரு அம்மாவா இதையெல்லாம் பத்தி அவன்கிட்ட பேச நிறைவே தயக்கம் எனக்கு..

அதுவும் இல்லாம ஆரம்பத்துலேயே கண்டிச்சுருக்க வேண்டிய விஷயம் என் மாமனாரை மீறி அவனை எதுவும் சொல்ல முடில..சரி ஒரு கல்யாணம் ஆனா மாறிடுவான்னு நினைச்சா அப்படி ஒரு எண்ணம் அவனுக்கு இல்லவே இல்ல..

எல்லாத்துக்கும் மேல அவனுக்கு உடம்பு சரியில்லாம போனப்போ எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா…இதெல்லாம் நான் யார்கிட்டேயும் சொன்னது இல்ல..ஆனா நீ அவனை இத்தனை சீக்கிரத்துல திருத்துவனு நான் நினைக்கவே இல்ல டா..

கல்யாணத்துக்கு அவன் சம்மதம் சொன்னதுக்கு கூட என்ன வேணா காரணமா இருக்கும்னு நினைச்சேன்..ஆனா அவன் உன்னைப் பார்க்குற பார்வையிலேயே அவனுக்கு நீ எவ்வளவு முக்கியம்னு தெரிஞ்சப்போ ரொம்பவே சந்தோஷமா ஆய்டுச்சு..

கல்யாணம் மனைவிங்கிறவ வந்தா ஒரு ஆணோட வாழ்க்கை கண்டிப்பா மாறும்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க..”,என்றவர் அவளின் கன்னம் தடவி அழுத்திக் கொடுத்தார்.

“அத்தை..இனி நீங்க எதை நினைச்சும் கவலைப் படாம நிம்மதியா இருங்க…இன்னொரு தடவை நீங்க இப்படி அழற மாதிரி எந்த விஷயமும் நடக்காது..அதுக்கு நான் பொறுப்பு..”

“ஆனாலும் அண்ணாவை எப்படி இப்படி மாத்தினீங்க…டிப்ஸ் கொடுங்களேன்..”

“அண்ணி..என்னைப் பொறுத்த வரைக்கும் யாரும் யாரையும் மாத்த முடியாது.அவங்களா மாற நினைக்காத வரை..இப்போ அத்தை சொன்ன மாதிரி கல்யாணம் பண்ணி வரப் பொண்ணு தன் மகனைத் திருத்துவாங்கிற கான்செப்ட் எனக்குப் பிடிக்காதது.

யோசிச்சுப் பாருங்க 28-30 வருஷமா பெத்து வளர்த்தவங்களாலேயே மாத்த முடியாதவனை எங்கிருந்தோ வர்ற பொண்ணு மாத்துவானு நம்புறது…நம்ம பொறுப்பை அவ மேல திணிக்குறது மாதிரி தான..

இப்போ உங்க அண்ணனையே எடுத்துக்கிட்டாலும் ஒரு தொழில் சாம்ராஜ்யத்தையே கட்டி ஆள்றவர் ஊரே பயப்படுற ஒருத்தர்..அவருக்கு கீழே வேலைப் பார்த்த நான் போய் இப்படியிருங்க அப்படியிருங்கனு சொன்னவுடனே அதைக் கேட்டு சரினு சொல்லிருப்பார்னு நினைக்குறீங்களா..

ஒரு ப்ரெண்டா என் மனசுல பட்டதை நான் சொல்லிருக்கேன்..மே பி அத்தைக்கு அந்த வாய்ப்பு கூட கிடைக்கலை..ஒரு வேளை அவர் அத்தையோட நெருக்கமா இருந்துருந்தா எப்பவோ இது நடந்துருக்கலாம்..

எல்லாமே இப்படி தான் நடக்கணும்ங்கிறது நமக்கான விதி…அது யாரு மூலமா நடக்கணும்னு கடவுள் நினைக்குறாரோ அவங்க ஒரு கருவியா இருந்து அந்த விஷயத்தை முடிக்குறாங்க அவ்வளவு தான்.

அவருக்கே தன்னோட செயல்கள்ல மாத்திக்கணும்னு தோணிணதுனால மட்டும்தான் மாறிருக்கார்.இப்படிதான் கல்யாண வாழ்க்கை ஒருத்தரை மாத்துது..

தன்னோட கணவனுக்காகவோ/மனைவிக்காகவோ நம்மை கொஞ்சம் மாத்திக்கலாமே..மாத்திக்கிட்டா தப்பில்லையேனு அவங்க அவங்களுக்கேதோணிணா மட்டும் தான் வாழ்க்கை நல்லாயிருக்குமே தவிர…

யாருக்காகவும் எதையும் மாத்திக்க மட்டேன்னு இருக்குறவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சா அந்த பொண்ணோட வாழ்க்கை தான் வீணா போகும்..”,எனும் போதே ப்ரஜீஷ் கீழே வருவதைக் கண்டவளின் பேச்சு அப்படியே நின்றுவிட்டிருந்தது.

அவன் சென்று உணவு மேஜையில் அமர பெண்கள் கூட்டணி பிரிந்து அவரவர் வேலையைப் பார்க்கச் செல்ல சௌமியாவும் அவர்களுக்குத் தனிமை கொடுக்க எண்ணியவராய் அவரது அறைக்குள் நுழைந்து கொண்டார்.

“சாரி..பேசிட்டு இருந்ததுல காபி கொண்டு வராம விட்டுட்டேன்..என்ன சாப்பிடுவீங்க?”

“காபி பழக்கம் இல்ல க்ரீன் டீ  வேணும்..”

“இருங்க எடுத்துட்டு வரேன்..”,என்றவள் சமையல் பெண்ணிடம் சென்று கூற ஐந்தே நிமிடத்தில் அவனுக்கான க்ரீன் டீ தயாரகியிருந்தது.

அதை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தவள் புன்னகைத்து நிற்க தன்னருகில் இருந்த நாற்காலியை நகர்த்தி அவளை அமருமாறு கூறினான்.

“பரவால்ல யாராவது வந்தா நல்லாயிருக்காது..”

“உன்னைப் பக்கத்து சேர்ல தான உட்கார சொல்றேன்..அதுல என்ன நல்லாயிருக்காது”,என்று தன் டீயை சுவைத்த படியே ப்ரஜீஷ் கேட்ட விதத்தில் அவனை விளையாட்டாய் முறைத்தவளாய் அவனருகில் அமர்ந்தாள்.

“லேடீஸ் எல்லாம் ஒண்ணு கூடிட்டீங்க போலேயே…”

“நீங்க ஏன் ஜெலஸ் ஆகுறீங்க..”,என்றவள் புருவத்தை மேலும் கீழும் அசைத்துக் கேட்க தன் சுண்டு விரல் கொண்டு புருவத்தை வருடியவனாய்,

“ம்ம் பின்ன என் பொண்டாட்டிக்காக இவ்வளவு நேரம் வெயிட் பண்ணிட்டு அவளைக் காணுமேனு நானே கீழே வந்துருக்கேன்..”

“அடடா பொண்டட்டி மேலே அவ்வளவு லவ்வா?”

“எவ்வளவுனு ரூம்க்கு வந்தா டீடெய்ல்டாசொல்லலாம்..”

“ம்ம் அது சரி சொன்னது வர போதும்..ஆமா கேட்கணும்னு நினைச்சேன்…ஈவ்னிங் ரிசெப்ஷனுக்கு நான் ஒண்ணுமே ரெடி ஆகலையே என்ன பண்றது?”

“ம்ம் அதான் இரண்டு வானரங்கள் இருக்கே…அவங்க தான் உனக்கு ட்ரெஸ் எல்லாமே செலெக்ட் பண்ணாங்க..என் சூட் கூட நான் இனிமே தான் பார்க்கணும்..எப்படியும் சாலிட்டா இன்னும் ஒன் அவர் தான் கிடைக்கும்..அப்பறம் ஆளாளுக்கு ஒரு வழி பண்ண ஆரம்பிச்சுருவாங்க..

அதான் அந்த டைம் வேஸ்ட் பண்ணக் கூடாதுனு பொண்டட்டியைத் தேடி வந்துட்டேன்..இப்போ அவளா என்னோட ரூம்க்கு வந்தால் நல்லாயிருக்கும்..இல்லைனா யோசிக்காம தூக்கிட்டுப் போய்டுவேன்..”,என்றவன் டீயைக் குடித்து முடித்து எழுந்துக் கொள்ள அவனைப் பற்றி அறிந்தவளாய் அவசரமாய் எழுந்தவள் அவனுக்கு முன் மாடிக்குச் சென்றிருநதாள்.