நசை நலம் நட்டார்கண் நந்தும்; சிறந்த
அவை நலம் அன்பின் விளங்கும்; விசை மாண்ட
தேர் நலம் பாகனால் பாடு எய்தும்; ஊர் நலம்
உள்ளானால் உள்ளப்படும்

 

முகமலர்ச்சியின் நன்மை நண்பர்கள்பாற் சிறந்து தோன்றும். அவைகளின் நன்மை அன்பினால் தோன்றும். விரைந்த செலவையுடைய தேரின் நன்மை அதைச் செலுத்தும் பாகனாற் பெருமை பெறும். ஊரின் நன்மை அரசனது நற்செயல்களால் மதிக்கப்படும்.

ப்ரஜீஷின் அணைப்பிலிருந்து விலகியவளுக்கு அவனை நிமிர்ந்துப் பார்க்கும் தைரியம் கூட இல்லை.தன் துப்பட்டாவின் நுனியை இறுகியப் பற்றியவாறு குனிந்த தலை நிமிராமல் அவள் நிற்க ப்ரஜீஷோ தனது தலையை இரு கைகளாலும் அழுந்தக் கோதி நிமிர்ந்தான்.

மெதுவாய் அவளது அருகில் சென்றவனைக் கண்டு பின் நகர்ந்தவள் சுவற்றில் முட்டி நின்றாள்.அவளை விட்டு இரு அடி தூரத்தில் நின்றவன் அவளையேப் பார்த்திருக்க அவன் ஏதேனும் பேசுவான் என்று எதிர்பார்த்தவள் அமைதியாய் இருப்பதைக் கண்டு மெதுவாய் விழி நிமிர்த்திப் பார்த்தாள்.

“இப்பவும் சொல்றேன் நான் உனக்கு வேண்டாம்..எங்க இருந்தாலும் நீ நல்லாயிருக்கணும்னு நான் மனசார நினைக்குறேன்..இன்னொரு தடவை யோசிச்சு முடிவெடு அபூர்வா..”

“எங்க இருந்தாலும் நல்லாயிருப்பேன்..ஆனா உங்க கூட இருந்தா சந்தோஷமாவும் இருப்பேன் கண்டிப்பா..”,அவனது அருகாமையில் குரல் உள்ளேயே போயிருந்தது பெண்ணவளுக்கு.இருந்தும் தன் மனதின் எண்ணத்தை எப்படியாவது அவனிடம் கூறிவிட வேண்டும் என்றத் தவிப்பில் பேசினாள்.

அவளது இரு கைகளையும் இறுக்கமாய் பற்றித் தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டவன் ஆழ்ந்த குரலில்,

“என்னைப் பாரு…”

“…”

“இப்போ பிடிச்சுருக்க இந்தக் கையை இனி என் உயிர் இருக்குற வரை விட முடியாது. நீயே நினைச்சா கூட.. சம்மதமா?”, அவன் கேட்ட விதத்தில் உதட்டில் புன்னகை கண்காளில் லேசாய் கண்ணீர் என ஆமோதிப்பாய் தலையசைத்தாள் அபூர்வா.

“நான் ரொம்ப ரொம்ப கெட்டவன் நிறைய தப்பு பண்ணிருக்கேன்..தொழில் முறையில இன்னும் பண்ணிட்டு தான் இருக்கேன்..ஆனா எத்தனை சீக்கிரம் முடியுமோ எல்லாத்தையும் சரி பண்றேன்..அதுக்கு இதே காதலோட எப்பவும் நீ என்கூட வேணும்..இருப்பியா?”

மீண்டும் மௌனமானதொரு தலையசைப்பு மட்டுமே பதிலாய் அவளிடத்தில்.அவள் கண்களையேப் பார்த்திருந்தவன் சிறிதும் யோசிக்காது அவள் தலையைத் தன்புறம் இழுத்து நெற்றியில் அழுந்த இதழ் பதித்திருந்தான்.

“லைஃப்ல இதுவரை யார்கிட்டேயுமே இதை சொன்னதில்ல…முதல் காதலா நான் நினைச்ச பொண்ணுகிட்ட கூட…இப்போ உன்கிட்ட சொல்றேன்..ஐ லவ் யூ அபூர்வா…வில் யூ மேரி மி??”

அவனின் வேகம் பற்றி அறிந்தவள் தான் என்றாலும் இத்தனை வெளிப்படையாய் அப்போதே தன் மனதை எடுத்துரைப்பான் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.முகம் மொத்தமும் செம்மையுற்றவளாய் தன் ஒரு கரம் கொண்டு கண்களை மூடிக் கொண்டவள் ஆம் என்பதாய் மேலும் கீழுமாய் தலையசைத்துத் தன் சம்மதத்தைத் தெரிவிக்க அவ் வெட்கத்திற்குக் காரணமானவனின் உதட்டில் அழகானதொரு புன்னகை அரும்பியது.

மெதுவாய் இரண்டடி பின்னே நகர்ந்தவன் தன் பேண்ட் பாக்கெட்டிற்குள் கைவிட்டபடி எதிரிலிருந்தவளிடம்,

“யாருக்கு எப்படியோ..உன்கிட்ட நல்லவனா மட்டுமே இருக்கணும்னு நினைக்குறேன்..அது நடக்கணும்னா இப்படி அடிக்கடி ப்ளஷ் பண்ணிட்டு என் கண் முன்னாடி வராத..”,என்று அவன் கூறியது புரிவதற்கே சில நொடிகள் எடுத்தது அபூர்வாவிற்கு.அதற்கு மேல் அங்கு நிற்க முடியாதவளாய் வெளியே ஓடியிருந்தாள்.

ப்ரஜீஷின் முகத்தில் புன்னகை மாறாமல் அப்படியே இருந்தது.இந்த உணர்வு எதோ ஒருவித மயக்கத்தைக் கொடுத்தது.அதை அவன் அத்தனை எளிதில் கலைக்க விரும்பவில்லை.

தன் வயதிற்கும் இப்போது இருக்கும் மனநிலைக்கும் சுத்தமாய் ஒத்துப் போகவில்லை என்றாலும் அவனறியாமல் மனதில் பட்டாம் பூச்சி பறக்கத் தான் செய்தது.

எத்தனை வயதானால் என்ன காதல் எப்போதுமே ஒருவித போதை வஸ்து தான்.அதன் தேவை தன் இணையின் உடலை அடையும் நோக்கமாய் அல்லாது மனதை வென்றிட்ட களிப்பாய் இருக்கும் பட்சத்தில் போதையின் வீரியம் சற்று அதிகமாகத் தானே இருக்கும்.

அன்று முழுவதுமே இருவரும் அந்த மோன நிலையில் தான் இருந்தனர்.ஊரையே மிரட்டும் ஒருவன் தன்னிடம் இப்படி ஒருவனாய் மாறியதை அபூர்வாவால் இன்னமும் நம்ப முடியவில்லை.இரவு வீட்டிற்கு வந்தவள் வேலை அனைத்தையும் முடித்துவிட்டு தீபாவோடு சேர்ந்து இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்க ப்ரஜீஷிடமிருந்து அழைப்பு வந்தது.

என்ன செய்வதெனப் புரியாமல் தட்டோடு மொட்டை மாடிக்குச் செல்பவளை விசித்திரமாய் பார்த்து வைத்தாள் தீபா.

“ஹலோ…”

“ம்ம் சொல்லுங்க..”

“என்ன மேடம் நிறைய டயலாக் எல்லாம் பேசுவீங்களே..இப்போ என்ன இவ்வளவு அமைதி..”

“அது..அதெல்லாம் இல்லையே..”

“ம்ம் தெரியுது..”

“…”

“இப்போ தான் உன் அண்ணன்கிட்ட விஷயத்தை சொன்னேன்…உன்கிட்ட பேசுறேன்னு சொன்னான்..”

“ஓ…நானே பேசணும்னு நினைச்சேன்..பட் எப்படி சொல்றதுனு தெரில அதான்…”

“அவன் அதெல்லாம் தப்பா எடுத்துக்க மாட்டான்..அதுவும் உன்னை எல்லாம்…அப்படி என்ன ஒரு பாசமோ தெரில…”

“உங்களுக்குப் பொறாமை..முதல்ல இருந்தே…”

“அண்ணானு கூப்பிடுறதுக்கெல்லாம் பொறாமையா…”

“அப்பறம் நாளைக்கு ஊருக்குப் போகலாம்னு இருக்கேன்..”

“என்ன திடீர்னு..எதுவும் ப்ராப்ளமா?”

“இல்ல அதெல்லாம் இல்ல…நம்ம விஷயத்தைப் பத்தி அப்பா அம்மாகிட்ட பேசப் போறேன்..”

“அதுகுள்ளேயா…ஒத்துப்பாங்காளா?”

“உங்க பதில் தெரியுறதுக்காகத் தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்..ஒரு வேளை நீங்க முதல்ல என்கிட்ட இதைப் பத்தி பேசிருந்தா கூட நேரம் வரும்போது சொல்லலாம்னு இருந்துருப்பேனோ என்னவோ..

ஆனா இது நானா ஆரம்பிச்ச விஷயம் அப்போ அவங்ககிட்ட சொல்லணும் இல்ல..அதான்…இல்லைனா எதோ ஒரு மாதிரி ஏமாத்துற பீல் வரும்…எதுக்குத் தேவையில்லாம..உடனே சம்மதிச்சுருவாங்களானு எல்லாம் தெரில..பார்க்கலாம்..”

“….”

“ஹலோ என்னாச்சு..அமைதியாயிட்டீங்க…”

“நீ ரொம்பவே வித்தியாசமானவ அபூர்வா…”

“…”

“சரி பார்த்துப் பத்திரமா போய்ட்டு வா..நான் வேணா பேசட்டுமா?”

“இல்ல நான் முதல்ல சொன்னா தான் சரியா இருக்கும்..வேணும் னா பேசின அப்பறம் கால் பண்ணித் தரேன் நீங்க பேசுங்க…”

“சரி..காலையில் கிளம்பிட்டு மெசெஜ் பண்ணு..”

“ம்ம் சரி வச்சுரவா..”

“ம்ம் குட் நைட்..”

“குட் நைட்..”,என்று வைத்தவளுக்கு ஒருபுறம் காதலின் பூரிப்பும் மறுபுறம்  நாளைப் பெற்றோரிடம் பேசுவதைப் பற்றிய எண்ணமும் என இருவேறு மனநிலைகள் ஆட்கொண்டிருந்தன.

அதிகாலையிலேயே கிளம்பியவள் ப்ரஜீஷிற்கு மெசெஜ் அனுப்பிவிட்டு பேரூந்தில் ஏறியிருந்தாள்.விஷயம் எதையையும் கூறாமால் தான் வார விடுமுறைக்காக வருவதாய் ஏற்கனவே வீட்டில் தெரிவித்திருக்க அவள் வீட்டை அடையும் நேரம் மற்ற மூவருமே அவளுக்காக ஆவலாய் காத்திருந்தனர்.

சற்று நேரம் பொதுவான உரையாடல்களில் கரைய அவளது தங்கை தையல் வகுப்பிற்குச் சென்று வருவதாய் கூறிவிட்டு கிளம்பிய பின் அபூர்வா தாயையும் தந்தையையும் அழைத்து கூடத்தில் அமர்ந்தாள்.

“என்ன டி எதோ சொல்லணும்னு நினைக்குற ஆனா தயங்குற என்னனு சொல்லு?”

“ம்மா..அது…”

“என்ன அபூர்வா எங்ககிட்ட பேச என்னத் தயக்கம் சொல்லு..”

“எனக்கு…நான் ஒருத்தரை விரும்புறேன் பா…”

“!!!”

“தயவு செஞ்சு கோபப்படாம நான் சொல்றதைக் கேளுங்க ம்மா ப்ளீஸ்..”

“நான் தான் முதல்ல அவரைப் பிடிச்சுருக்குனு சொன்னேன்..ஒரு மாசம் முன்னாடி அவருக்கு திடீர்னு ஹார்ட் அட்டாக்..அதை என்னால தாங்கிக்கவே முடில..ரொம்பவே பயந்துட்டேன்..அப்போ தான் அவர்கிட்ட என் மனசுல இருக்குறதைப் பத்தி சொன்னேன்..அவர் முடியாதுனு சொல்லிட்டாரு…”

“ஏன்??”

“ஏன்னா அவருக்கும் எனக்கும் ஒரு பன்னிரண்டு வயசு வித்தியாசம்..அதனால…”

“என்ன டீ நினைச்சுட்டு இருக்க நீ…அபூர்வா நீ எங்களை மாதிரி கிடையாது ரொம்பவே தெளிவான பொண்ணுனு ஊர் மொத்தம் உன் பெருமை தான் பேசிட்டு இருப்பார் அப்பா..நீ என்னனா இப்படி ஒரு விஷயத்தைச் சொல்ற!”

“ம்மா…அது…இப்போ அவருக்கும் என்னைப் பிடிச்சுருக்குனு சொல்லிட்டார்..நேத்து தான்…உடனேயே உங்ககிட்ட பேசிடலாம்னு தான் கிளம்பி வந்துட்டேன்..கண்டிப்பா நான் தப்பான ஒருத்தரை தேர்ந்தெடுக்க மாட்டேன் மா…”

“…..”

“என்னப்பா எதுவுமே பேச மாட்றீங்க?”

“இல்ல மா என்ன சொல்றதுனு தெரில..அவங்க வீட்டுக்கு விஷயம் தெரியுமா?

“இல்லப்பா தெரியாது..இனி தான் பேசுவாங்க…”

“பையன் யாரு மா?உன்கூட வேலைப் பாக்குறவரா?”

“இல்லப்பா என் எம் டி…””

“என்னது??!!”

“அபூர்வா நீ என்ன பேசுறனு புரிஞ்சு தான் பேசுறியா..அவங்க எல்லாம் எவ்வளவு பணக்காரங்க..நமக்கு எப்படி ஒத்து வரும்…காசுக்காகத் தான் இதெல்லாம் பண்றோம்னு யாராவது ஒருத்தர் தப்பா பேசினாலும் அப்பறம் உயிரோடேயே இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்..”

“ம்மா…ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க…”

“இல்ல டீ வயசு வித்தியாசம் பணக்காரங்க..இதெல்லாம் எப்படி ஒத்துவரும் சொல்லு…”

“ம்மா..உனக்கும் அப்பாக்கும் கூட பத்து வயசு வித்தியாசம் இருக்கு தான..உண்மையா அதனால தான் அது எனக்குப் பெரிய விஷயமா தெரில…”

“ஆனா இந்தச் சின்ன வயசுல ஹார்ட் அட்டாக்னு எல்லாம் சொல்றியே…”

“அது…அதெல்லாம் இப்போ நல்லாயிருக்கார்..”

“சரி அவங்க வீட்ல இதுக்கு சம்மதிப்பாங்களா?”

“அவர் சம்மதிக்க வைப்பார் பா கண்டிப்பா..”

“அபூர்வா உனக்கு நாங்கச் சொல்லி தெரியுறதுக்கு ஒண்ணும் இல்ல…பணக்கார வீட்டுப் புள்ளைங்க எல்லாம் எல்லாத்தையும் பெருசா எடுத்துக்காதுங்க மா..சுத்துற வரை சுத்திட்டு விட்டுட்டு போயிட்டா என்ன ஆகும்..சொல்லு..எங்களுக்கு நீ நல்லாயிருக்கணும்ங்கிற எண்ணம் இருக்காதா சொல்லு..

நீ படிச்ச புள்ள…பொறுப்பானவளும் கூட அதனால நீ காதலிக்குறேன்னு சொல்றது கூட எனக்குப் பெரிய விஷயமா தெரில..கண்டிப்பா யோசிச்சு தான் முடிவு எடுத்துருப்ப..ஆனா பையன் பக்கத்துல எப்படி இருக்குமோனு பயமா இருக்கு மா..”

“அப்பா..எனக்கு எப்படி உங்களுக்குத் தைரியம் கொடுக்குறதுனு தெரில..ஒரு தடவை அவர்ட்ட பேசிப் பாருங்க..அப்பறம்…”

“உள்ளே வரலாமா”,என்றக் குரலில் தன் பேச்சை அப்படியே நிறுத்திவிட்டு விழி விரித்து நின்றிருந்தாள் அபூர்வா.யாருக்காக யாரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறாளோ அவனே கண்முன் கம்பீரமாய் வந்து நிற்பதை அவளாலேயே நம்ப முடியவில்லை.

முந்தைய தினம் பேசும் போதும் தான் வரவா என்று கேட்கவில்லை.காலையில் அனுப்பிய குறுஞ்செய்திக்கும் பதிலில்லை.எதாவது வேலையில் இருப்பான் என்று நினைத்தவளுக்கு அவனின் இந்த திடீர் வருகை ஆச்சரியத்தை விட மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தது.

“யாருங்க..யாரு வேணும்?”

“ம்மா..அவர் தான் ப்ரஜீஷ்..அது எங்க எம் டி..”,அவள் கூறக் கேட்டப் பெரியவர்கள் இருவருக்கும் அதிர்ச்சி தாங்கவில்லை.அபூர்வாவின் தந்தை அவசரமாய் வாசலுக்குச் சென்று அவனை வரவேற்று உள்ளே நாற்காலியில் அமர வைத்தார்.

தன்னவளின் விழி விரிப்பிலிருந்து இன்னும் மீளாதவனாய் அவளைப் பார்த்தபடியே இருந்தவன் அவளது கண்ணசைவில் சூழல் உணர்ந்து தலைத் திருப்பிக் கொண்டான்.

“சாரி சொல்லிட்டு வர முடில..நான் வர்றது அபூர்வாவுக்கே தெரியாது..”

“அதனால என்ன பரவால்ல…நானே உங்களை எப்போவாவது பார்த்தா நன்றி சொல்லணும்னு நினைச்சுட்டு இருந்தேன்..”

“எதுக்கு?”

“டெல்லில என் பொண்ணை பத்திரமா பார்த்துகிட்டது மட்டுமில்லாம பாதுகாப்பா வீட்டுக்கும் அனுப்பி வச்சுருந்தீங்களே..அதுக்காக என்னைக்கும் கடமை பட்டுருக்கோம்..”

“அப்படி பார்த்தா உங்க பொண்ணு என் வாழ்க்கையே மாத்திருக்கா அதுக்கு நான் எவ்வளவோ நன்றி சொல்லணும்..”,என்றவனின் பார்வை மீண்டுமாய் அபூர்வாவின் மீதே படிந்தது.

அவனின் பார்வையேப் பெரியவர்களுக்கு தன் மகள் மீதான அவனின் ப்ரியத்தை உணர்த்தியிருந்தது.

“சோ..எனக்கு சுத்தி வளைச்சுப் பேசத் தெரியாது..அபூர்வா எல்லா விஷயத்தையும் சொல்லிருப்பானு நினைக்குறேன்..எனக்கும் அவளைப் பிடிச்சுருக்கு..கல்யாணம் பண்ணிக்கணும்னு விரும்புறேன்..உங்களோட முடிவைப் பொறுத்து நானும் அப்பா அம்மாகிட்ட பேசுறேன்..

நான் சரியா பேசுறேனானு எனக்குத் தெரிலை பட்..விஷயம் இவ்வளவு தான்..கண்டிப்பா நீங்க பாத்துக்கிட்ட அதே அளவு பாசத்தோட நானும் அவளைப் பார்த்துக்குறேன்..பார்த்துப்பேன்..தட்ஸ் இட்..”,என்றவன் சாதாரணம் போல் பேசி முடித்து விட அபூர்வா அவனையே இமைக்காமல் பார்த்திருந்தாள்.