“வளப் பாத்தியுள் வளரும், வண்மை; கிளைக் குழாம் இன் சொற் குழியுள் இனிது எழூஉம்; வன் சொல், கரவு எழூஉம், கண் இல் குழியுள்; இரவு எழூஉம், இன்மைக் குழியுள் விரைந்து
செல்வ வளம் எனும் பாத்தியுள் ஈகைக் குணம் வளரும். இன்சொல் எனும் பாத்தியுள் உறவினர் கூட்டம் வளரும். கருணையற்ற கடுஞ்சொற்களைப் பேசும் பாத்தியுள் வஞ்சனை வளரும். வறுமையாகிய பாத்தியுள் இரத்தல் எனும் பயிர் விளையும்.”
அவர்கள் இருவருக்கும் இடையில் நீண்டதொரு மௌனம் நிலவ இருவருமே பேச்சை ஆரம்பிக்காமல் அவரவர் சிந்தனைகளில் இருந்தனர்.பின் சற்றேத் தெளிந்தவளாய்,
“சாரி உங்க பெர்சனல்ல தலையிடுறேன்னு நினைக்க வேண்டாம்..என்னையும் ராஜீவ் அண்ணா அளவுக்கு மதிச்சு ப்ரெண்ட்னு நீங்களே சொன்ன அப்பறம் என்னால இதெல்லாம் சொல்லாம இருக்க முடியல…
இத்தனைப் பேர் புகழ் பணம் எல்லாம் இருந்தும் என்ன ப்ரயோஜனம் உங்களைப் பத்தின நல்ல அபிப்ராயம் யாருக்கும் இல்லையே…யாருக்காகவும் நாம வாழல தான்..ஒத்துக்குறேன்..ஆனா நம்ம இந்த உலகத்தை விட்டுப் போன பின்னாடி கொஞ்சமாவது சிலருக்கு நல்லது பண்ணிருக்கோம்னு இருக்கணும்…
இந்த இளமையும் அழகும் இருக்குற வரை நம்ம விருப்பப்படி எல்லாமே பண்ணிட்டு இருக்கலாம்..ஆனா ஆட்டம் முடிஞ்சு போய் உட்காரும் போது நமக்காக எத்தனைப் பேரை சம்பாதிச்சுருக்கோம்ங்கிறது தான் ரொம்பவே முக்கியம்..
இங்க வந்த இத்தனை நாள்ல ஒருதடவை கூட உங்கக் குடும்பத்தோட நீங்கப் பேசி நான் பார்க்கவேயில்ல…என் அம்மா என்னை நினைச்சுக் கவலைப்படுற மாதிரி தான உங்க அம்மா உங்களை நினைச்சு கவலைப்படுவாங்க…
உங்களுக்கு எத்தனை வயசு ஆனாலும் எவ்வளவு பெரிய ஆளா நீங்க இருந்தாலும் உங்க அம்மாவுக்கு நீங்க பிள்ளை தான…குடும்பத்தோட உங்க நேரத்தைச் செலவு பண்ண ஆரம்பிச்சாலேத் தேவையில்லாத இந்த பழக்கங்கள் எல்லாம் தானாவே கம்மி ஆய்டும்.”
“……”
“எனக்குப் பதில் சொல்லலனாலும் பரவால்ல…முடிஞ்சா உங்களை மாத்திக்கோங்க…அதுவே போதும்.”
“எல்லாத்தையும் ரொம்ப ஈஸியா நீ சொல்லிட்ட ஆனா அதெல்லாம் மாறுறது அத்தனை ஈஸி இல்ல அபூர்வா.நீ சொன்னது மாதிரி…எனக்காக நானே ஒரு உலகத்தை உருவாக்கிக்கிட்டேன்..
அதுக்குள்ளே யாரையும் கொண்டும் வர முடியாது.என்னை அங்க இருந்து வெளியேக் கொண்டு வரவும் முடியாது.என் அம்மா,ராஜீவ்னு எல்லாரும் களைச்சுப் போயிட்டாங்க…இப்போ நீ…நடக்காத விஷயங்களுக்காகத் தேவையில்லாம உன் நேரத்தை வீணடிக்காத…போ…”
“ம்ம் சரி தான் நீங்க சொல்றதும்…எனிவே சொல்லனும்னு தோணிச்சு சொல்லிட்டேன்…அப்பறம் கண்டிப்பா அது உங்க இஷ்டம் தான்..சரி நேரமாச்சு வாங்க சாப்பிட போலாம்..”,என்றவள் அவள்போக்கில் சென்றுவிட ப்ரஜீஷிற்கோ மனம் மொத்தமும் ஏதோ குழப்பத்தில் இருந்தது.
சிறு பெண் அவளிற்கு இருக்கும் தெளிவு ஏன் தனக்கில்லாமல் போனது.தானாய் இல்லை எனினும் ராஜீவோ அம்மாவோ சொல்வதையாவதுக் கேட்டிருந்தால் இத்தனைத் தூரம் கொண்டு வந்திருக்க வேண்டாமோ என்று தோன்றியது.
அவள் கூறியது போல் இளமையில் இதெல்லாம் நன்றாகத் தான் இருக்கும்..ஆனால் வயதானப் பின் தனக்கென யார் இருப்பார்கள்.ஒரு வேளைத் திருமணம் என்ற ஒன்று நடந்தாலும் அந்தப் பெண்ணிற்கு ஏற்றக் கணவனாய் நான் நிச்சயமாய் இருக்கப் போவதில்லை.அப்படியெனில் எதிர்காலம் என்ற ஒன்று சுத்தமாய் சரியில்லாத ஒன்றாகத் தான் இருக்கப் போகிறது என்று எண்ணியவனுக்கு பெரு மூச்சொன்றே எழுந்தது.
ப்ரஜீஷும் அபூர்வாவூமாய் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருக்க இருவருக்கும் நடுவில் மேசை மீது ப்ரஜீஷின் கைப்பேசி இருந்தது.சட்டென அதில் அழைப்பு வர தற்செயலாய் அதன் திரையைப் பார்த்தவளுக்குப் ப்ரைவேட் நம்பர் என்றப் பெயர் கண்ணில் பட ஒன்றும் பேசாமல் அவள்போக்கில் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
ப்ரஜீஷோ அதைப் பார்த்த பின் சற்றே அவசரமாய் அழைப்பை ஏற்க எண்ணிய நேரம் இருக்கும் இடம் உணார்ந்து நிதானித்தான்.அத்தோடு அழைப்பையும் துண்டித்திருந்தான்.
“நீங்க வேணும்னா பேசுங்க…நான் கிளம்புறேன்..”,என்றவள் தட்டோடு எழுந்துக் கொள்ள புன்னகையோடுத் தலையசைத்தவன் அடுத்த அழைப்பிற்க்காக காத்திருந்தான்.இரண்டு நிமிங்களில் மீண்டும் அழைப்பு வர உடனே அதை ஏற்றுப் பேச ஆரம்பித்திருந்தான்.
சமையலறையிலிருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவளுக்கு அவன் பேசுவது காதில் விழவில்லை எனினும் அவனது முக பாவமும் உடல்மொழியும் ஏதோ ஒன்று சரியில்லை என்று அடித்துக் கூறியது.இருந்தும் கண்டுக் கொள்ளாமல் விட்டு விட்டவள் உணவை முடித்து விட்டு தனதறைக்குச் சென்றிருந்தாள்.
அந்த அழைப்பிற்குப் பின் அன்றைய நாள் முழுவதுமே ப்ரஜீஷின் முகம் ஒளியிழந்து இருந்தது.என்னவெனக் கேட்கலாமா வேண்டாமா என்றக் குழப்பத்திலேயே அபூர்வா இருக்கக் குழப்பத்தை மேலும் அதிகரிப்பதாய் அடுத்த மூன்று மணி நேரத்தில் ராஜீவ் அங்கே வந்திருந்தான்.
வரவேற்பறையில் அமர்ந்திருந்தவள் அவனைக் கண்டதும் வரவேற்ப்பாய் புன்னகைத்து நலம் விசாரிக்க அவனும் பதிலுக்கு ஏதோ உரைத்தவனாய் ப்ரஜீஷைத் தேடிச் சென்றான்.
வெகு நேரமாகியும் இருவரும் வெளியே வராமல் இருக்க இதற்கு மேல் முடியாது என்று நினைத்தவளாய் லேசாய் கதவைத் தட்டிவிட்டு உள்ளே எட்டிப் பார்க்க இருவரும் பேசிக் கொண்டிருந்ததை அப்படியே நிறுத்தியிருந்தனர்.
“சாரி டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?”
“அதான் பண்ணிட்டியே…”
“ப்ச்ச்..அண்ணா என்னாச்சு எதுவும் பிரச்சனையா?”
“அது அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல டா…”
“இல்லனு உங்க வார்த்தை சொன்னாலும் கண்ணு ஏதோ இருக்குனு சொல்லுதே!”
“இவ வேற நேரம் காலம் தெரியாம கண்ணு வாய்னு…டேய் என்னால அவங்களைக் கூட சமாளிச்சுற முடியும்..ஆனா இவளை சத்தியமா முடியாதுடா…காட்…”
“ம்ம் இது நான் சொல்ல வேண்டிய டயலாக்…”
“அட என்ன நடக்குது இங்க…”
“அது ஒண்ணுமில்ல.எங்க எம் டி என்னை அவர் ப்ரெண்டா ப்ரொமோட் பண்ணிருக்கார்…”,என்று அபூர்வா கூற ஆச்சரியமாய் ராஜீவ் தன் நண்பனைப் பார்த்தான்.
“எல்லாம் உன்னை சொல்லணும்..இவளை என் தலையில் கட்டிவிட்டு இப்போ என்ன முழிக்குற…”
“இரண்டு பேரும் அப்படியே பேச்சை மாத்தாதீங்க…என்ன நடக்குது..ஏன் நீங்க திடீர்னு வந்துருக்கீங்க…என்னாச்சு?”லேசாய் யோசித்தவனுக்கு ப்ரஜீஷின் அமைதி சம்மதத்தைக் கொடுக்க,
“அது அந்த அக்ஸிடெண்ட்க்கு காரணமானவங்க யருனு தெரிஞ்சுருச்சு..”
“அதான் அன்னைக்கே யாரோ ஒருத்தர்…”
“இல்ல அவன் சொன்னவன் மெயின் ஆள் இல்ல..”
“ஓ!யாரு இதைப் பண்ணது?”
“ப்ரஜீஷ் யாருக்காக நிறையவே செஞ்சானோ அவர் தான்..ரொம்ப முக்கியமான மினிஸ்டர்..”
“என்ன மினிஸ்டரா??!!!”
“ம்ம்ம்..அதுவுமில்லாம இன்னுமும் இவனை கொலைப் பண்ற ப்ளான் இருக்கு..இங்க இருந்து அவன் கேரளாவை ரீச் பண்றதுகுள்ள எப்படியாவது முடிச்சுரணும்னு இருங்காங்க..”
“என்ன!!!!இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்…”
“நம்ம இடத்துல அவன் ஆட்கள் இருக்கும் போது..நாம அங்க ஆள் வச்சுருக்க மாட்டோமா!”
“இப்போ என்ன பண்ண போறோம்?”
“தெரியல..ஆனா இவன் இங்க இருக்குறது தான் அவனுக்கு சேஃப்..அடுத்ததா என்ன பண்ணலாம்னு யோசிக்கணும்..இப்போதைக்கு இங்க போலீஸ்ல தெரிஞ்வங்களை வச்சு செக்யூரிட்டி அலார்ட் பண்ணிருக்கேன்..ஆனா அது இங்க வீட்டுக்கு வெளியே மட்டும் தான்..”
அபூர்வா பதட்டமாய் ஏதோ யோசித்துக் கொண்டிருக்க ப்ரஜீஷ் முகத்தை சீரியஸாய் வைத்துக் கொண்டு,
“இப்போ ஏன் இல்லாத மூளையை போட்டு குழப்பிக்குற…”
“ம்ம் இங்க இருந்து எப்படித் தப்பிச்சுப் போகலாம்னு ப்ளான் பண்ணிட்ட்டு இருக்கேன்..”
“அதானப் பார்த்தேன்..பார்த்துக்கோ டா உன் தங்கச்சி எவ்வளவு நல்லவனு..”
“ஏன் டா அவகிட்ட வம்பு பண்ணிகிட்டே இருக்க…”
“நல்லா கேளுங்க ணா..”
“யாரு நானா…இவ சரியான ஊமைக் கொட்டான்…உன்னைப் பார்த்தவுடனே இப்படி நடிக்குறா..”
“இருக்குற நிலைமைக்கு நீ இப்படி விளையாடிட்டு இருக்க…என்ன தான் டா நினைச்சுட்டு இருக்க…”
“விடு ராஜீவ் எல்லாப் பிரச்சனைக்கும் கண்டிப்பா ஒரு முடிவு இருக்கும்..இதுக்கும் அப்படிதான்…நீ ப்ளான் பண்ண படி நாளைக்கு கிளம்பு அங்க அம்மா அப்பா ஏஞ்சல் எல்லாரையும் பார்த்துக்கோ…நான் எப்படியாவது சமாளிச்சுருவேன்..”,என்றவனின் முகத்தில் கடுமையேறியிருந்தது.
“எப்படி டா?”
“நான் பாத்துக்குறேன்னு சொல்றேன்ல…என் லேப்டாப்?”
“ம்ம் சரி பண்ணி கொண்டு வந்துருக்கேன்…”
“இது போதும்…ஒரு ஒருத்தனையும் ஓட விடுறதுக்கு…நீ இன்னைக்கு நைட் பிளைட்லேயே கிளம்பிடு…”
அதன் பின் அபூர்வா அங்கிருந்து வெளியேறிவிட மீண்டும் இருவருமாய் நிறைய விஷயங்களைப் பற்றிப் பேசி முடித்தனர்.மதிய உணவை முடித்துவிட்டு மூவருமாய் அமர்ந்து பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.
இரவு கிளம்புவதற்குள் ஆயிரம் முறையாய் ப்ரஜீஷை எச்சரித்திருந்தான் ராஜீவ்.
“ப்ரஜி…”
“நான் பார்த்துக்குறேன் டா..கண்டிப்பா போன தடவை மாதிரி கேர்லெஸா இருக்க மாட்டேன்…அங்க என் வீட்டைச் சுத்தி செக்யூரிட்டி டைட் பண்ணு தேவையில்லாம அம்மா அப்பாவை வெளியில் போக வேண்டாம்னு சொல்லு..”
“சரிடா…அபூர்வா…நீயும் பாதுகாப்பா இரு..சீக்கிரமே எல்லாம் சரியாய்டும்..தேவையில்லாம நீயும் இதுல மாட்டிக்க வேண்டியதா போச்சு…”
“அவ எல்லாம் எப்படியும் தப்பிச்சுருவா டா..கொல்ல வர்றவனுக்கு அட்வைஸ் பண்ணியே சாவடிச்சுருவா…”,என்று ப்ரஜீஷ் சிரிக்காமல் கூறிய விதத்தில் மற்ற இருவருமே சிரித்திருந்தனர்.
“நான் என்ன னா பண்ணேன்…எல்லார்கிட்டேயும் நமக்கான சுயத்தை வெளிப்படுத்த நம்மால் முடியாது இல்லையா..”
“உண்மைதான்..சரி டா என்ன தான் அவன் விளையாட்டா பேசுற மாதிரி இருந்தாலும் பிரச்சனை உண்மையாகவே ரொம்ப பெருசு..பாத்து இருந்துக்கோங்க…அங்கப் போய்ட்டு என்னால முடிஞ்ச வகையில் நிச்சயமா எதாவது பண்றேன்..”
“தைரியமா போய்ட்டு வாங்க…எல்லாம் நல்லதாவே நடக்கும்னு நம்புவோம்..”என்றவள் புன்னகை முகமாய் அவனை அனுப்பி வைத்தாள்.