நிமிடங்கள் நரகமாய் நகர வெளியே வந்த டாக்டர் என்ன சொல்வதென தெரியாமல் ஏழிசையையே பார்த்திருந்தார்.

“தலையில் பயங்கரமா அடிபட்டிருக்கு..முயற்சி பண்றோம்..ரெஸ்பாண்ட் பண்ண மாட்டேங்குறார்.இப்படியே இருந்தா கோமாக்கு போக வாய்ப்பிருக்கு..”,என்றதும் அனைவரும் கதறி அழ ஏழிசை ஒன்றும் கூறாமல் எழுந்து உள் அறையைப் பார்த்தாள்.

மருத்துவர் அவளை உள்ளே அனுமதிக்க தலையில் கட்டப்பட்ட கட்டோடு உடல் முழுதும் ஒயர்கள் சூழ்ந்திருக்க கண் மூடிப் படுத்திருந்தவனைப் பார்த்தவளுக்கு பாதி உயிர் போய்விட்டிருந்தது.

“வீரா வாங்கோ ஆத்துக்கு போலாம்.நேக்கு ரொம்ப பயமாயிருக்கு.”

“….”

“யாரைக் கேட்டு இந்த நிலைமைக்கு வந்தேள்..உங்களோட உயிர் என் சொந்தம் என் அனுமதியில்லாம என்னை விட்டு போயிடுவேளா?”

“….”

“நான் உங்களை விட்டுக் கொடுக்க மாட்டேன் வீரா..வாங்கோ போலாம்..”,என்றவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது.உள்ளே வந்த ராகவ் அவளைத் தோள்பற்றி வெளியே அழைக்க,

“ராகவ் உங்க அண்ணாவை வர சொல்லு டா..என்னை பயமுறுத்தி பாக்குறார்.நேக்குத் தெரியும் அவர் என்னோட விளையாடுறார்.வர சொல்லு ராகவா”,என்றவளைப் பார்த்து அழுது கொண்டிருந்தான் சிறியவன்.

வெளியே இருந்த நாற்காலியில் அவளை அமர்த்த எதிரில் தவிப்பாய் நின்ற ராஜுவைக் கண்டவள்,

“இப்படி விட்டுட்டேளே..உங்களை எல்லாம் தான் நான் மலை போல நம்பியிருந்தேன்..ஏன் இப்படி பண்ணேள்.”,என்றதும் அவன் கண்களும் கலங்க ஷ்யாம் கிட்டத்தட்ட ஓடி வந்தான்.

“அண்ணா எல்லாரும் என்னை ஏமாத்திட்டேள் தான..”

“மா..நான் விஷயத்தைச் சொல்றதுக்குள்ள..சார்..”

“அந்த பகவானே என்னை ஏமாத்திட்டார்..உங்களை எல்லாம் என்ன சொல்றது..”,எனும் போது தாரகை வீறிட்டு அழுதாள்.

கண்களைத் துடைத்தவளாய் அவளை வாங்கிக் கொண்டு பசியாற்ற சென்றவளை அங்கிருந்த அனைவரும் இயலாமையோடு பார்த்திருந்தனர்.

“ஏங்க ஏழிசையை பார்த்தா எனக்கு பயமா இருக்குங்க பச்சை உடம்புகாரி என்னங்க இதெல்லாம்..யார் கண்ணு பட்டுதோ என் புள்ளை இப்படி கிடக்குறான்.அவனுக்கு ஏதாவது ஒண்ணு ணா நான் உயிரோடேயே இருக்க மாட்டேன்.”

“பர்வதம் நீ தான் புள்ளைங்களுக்கு ஆறுதல் சொல்லணும்.நம்ம இந்திராக்கு ஒண்ணும் ஆகாது.”,என்றவருக்குமே குரல் கரகரத்தது.

“ரவி, அக்கா…”,என்ற உமையாள் கதறிக் கொண்டிருந்தாள்.யாருக்கும் யாரும் ஆறுதல் கூறும் நிலையிலேயே இல்லை.

கோமாவிற்கு சென்று விட்டிருந்தான் வீரேந்திரன்.மருத்துவமனையே கதியென கிடந்தாள் ஏழிசை.கடந்த ஒரு வருடமாய் அவளை விட்டுச் சென்றிருந்த பயம் மறுபடியும் அவளைச் சூழ்ந்து கொண்டது.

காவ்யா ஈஸ்வர் விஷால் சேகர் கூட வந்து விட்டிருந்தார்.யாருக்கும் ஏழிசையைத் தேற்றும் வழி தான் தெரியவில்லை.எப்போதும் சிரித்த முகமாய் இருக்கும் பெண்ணை இந்த நிலையில் பார்க்க பார்க்க நெஞ்சம் பதைபதைத்தது.

ராஜுவோ வெறி பிடித்தவனாய் திரிந்து கொண்டிருந்தான்.தன் கண் முன்னால் நடந்ததை ஜீரணிக்க முடியால் தவித்தான்.அவனது கூட்டாளிகளே அவனை நெருங்க பயந்தனர்.

அனைத்து பொறுப்பையும் ஷ்யாம் தாங்கிக் கொண்டான்.ராஜுவைப் பற்றி அறிந்தவனாய் அவனை சமாதானப்படுத்த முயன்றான்.

“சொல்லுங்க சர்..அந்த நாய் தான இதுக்கு காரணம்..அன்னைக்கே சொன்னேன் அவனெல்லாம் உயிரோட விடக் கூடாதுனு..”

“ராஜு பொறுமையா இரு..”

“என்ன சார் பொறுக்கணும்..அண்ணி முகத்தை பார்க்க முடியல என்னால..பத்தடி தூரத்துல இருந்தும் ஒண்ணும் பண்ண முடியாம இருந்தேன் சார்..”,என்றவன் வெறி பிடித்தவனாய் கத்தினான்.

“ராஜு உனக்கு இருக்குற அதே வெறி எனக்கும் இருக்கு.ஆனால் அதைவிட இப்போ சார் குடும்பம் நமக்கு முக்கியம்.எப்போ என்ன பண்ணுவானோனு இருக்கு டா..

முதல்ல இவங்களை எல்லாம் கோட்டைக்குள்ள அனுப்பனும் டா புரிஞ்சுக்கோ.இன்னும் இரண்டு மாசத்துல டென்டர் விஷயத்துல அவன் ஜெயிச்சுட்டான்னு வை நிலைமை இன்னும் மோசமாயிடும் ராஜு..

நீ தான் எனக்கு இப்போ இருக்குற ஒரே பலம்..ஹெல்ப் பண்ணு”,என்றவனின் கண்களிலும் நீர்த்துளி.

“சார் அண்ணையாக்காக அண்ணிகாக என்ன வேணாலும் பண்ணுவேன்.நீங்க ஆக வேண்டியதை பாருங்க..”,என்றவன் கூட்டாளிகளைத் தேடிச் சென்றான்.

ரவியிடமும் ராஜராஜனிடமும் விஷயத்தைக் கூறி வீரேந்திரனை அனைத்து வசதிகளோடு கோட்டையில் வைத்து பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினான் ஷ்யாம்

அவர்களுக்கும் அதுவே சரியாய் பட அடுத்த நாளே வீட்டிற்கு அழைத்து வரப்பட்டான்.கீழிருந்த அறையில் அவனுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்க ஏழிசை அங்கிருந்து நகரவே இல்லை.

பத்து நாட்கள் கடந்திருக்க உமையாள் கருவுற்றிருந்தாள்.வீட்டின் சூழல் மனதின் அழுத்தம் என அனைத்தும் சேர்ந்து அவளை இன்னுமாய் பலகீனமாக்கியது.

பர்வதத்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட ராஜராஜனோ மொத்தமாய் உடைந்து போனார்.திவ்யாவிற்கும் ராகவிற்கும் யாரைப் பார்ப்பது யாரைத் தேற்றுவது என்று எதுவுமே புரியாத நிலை.

தொழில் லேசாய் ஆட்டம் காண ஆரம்பித்தது.ஷ்யாமால் தாக்கு பிடிக்க முடியாமல் திணறினான்.இதற்கு மேல் விட்டால் வீரேந்திரன் என்ற ஒருவன் அமைத்த சாம்ராஜ்யமே அழிந்துவிடும் என்று உணர்ந்தவன் நேராய் ஏழிசையைப் பார்க்கச் சென்றான்.

அவளோ குழந்தையை மடியில் போட்டு நினைவுகள் எங்கோ இருக்க அமர்ந்திருந்தாள்.

“ஏழிசை அண்ணா வந்துருக்கேன் மா..”

“….”

“ரொம்ப கஷ்டமா இருக்கு டா..சர் உன்னை இப்படி பார்க்க விரும்புவாரா சொல்லு..”

“…”

“நம்ம சாரை இந்த நிலைமைக்கு ஆக்கினவனை நாம சும்மா விடலாமா ஏழிசை.”,பார்வை மட்டும் அவன்புறம் திரும்பியது பெண்ணிடத்தில்.

“சார் இடத்துல நீ வந்து நில்லு மா..நாங்க எல்லாம் இருக்கோம்..”

“ஆனா அவர் இல்லையே ணா..நேக்கு அவரைத் தவிர எதுவுமே தெரியாதே..”,என்றவள் உதடு பிதுக்கி அழ வாசலில் நின்றிருந்த ராகவிற்கும் ரவிக்கும் கண்கள் கலங்கியது.

“அவனை கொன்னு புதைக்குற அளவு ஆத்திரம் இருக்கு மா..ஆனால் அதை விட முக்கியம் சாரோட இந்த சாம்ராஜ்ஜியம்.நாளைக்கே அவர் குணமாகி வந்து இப்படி விட்டுட்டீங்களேனு கேட்டா நாம என்னமா சொல்றது..”

“!!!”

“அவரு நிறைய உழைச்சுட்டார் டா..நிறையவே ஓடிட்டார் அதான் கொஞ்சம் ஓய்வு வேணும்னு நினைச்சுட்டார் போல.திரும்ப வரும் போது ஆயிரம் யானை பலத்தோட வருவார் டா..அப்போ அவரோட கோட்டையும் அரியணையும் அவருக்கு வேண்டாமா டா..”

“அண்ணா..ஆனா நான்…நான் என்ன ணா பண்றது..அவரை விட்டு நான் வர மாட்டேன்..”

“புரிஞ்சுக்கோ ஏழிசை..ராஜாளியா பறந்த மனுஷன் எப்போ கீழே விழுவான்னு ஒரு நரிக் கூட்டமே காத்திருக்கு..அதெல்லாம் உள்ளே நுழைய வழி கொடுத்துடாத ஒரு அண்ணணா என் மச்சானுக்காக கேட்குறேன்..ப்ளீஸ் ஏழிசை..”

“அவரை யாராலும் கீழே தள்ள முடியாது ணா..அவரோட இந்த நிலைமைக்கு காரணமானவன் யாரா இருந்தாலும் அவனுக்கு அவரே வந்து தண்டனைக் கொடுப்பார்.அதுவரை நான் என்ன பண்ணணும்னு சொல்லுங்கோ.”,என்றவளின் முகத்தில் ஒருவித திடம்.

“அவனை எல்லா வகையிலும் நிர்கதியாக்கி நிக்க வை ஏழிசை..சார் வந்து எடுக்குறதுக்கு அவன் உயிர் மட்டும் தான் மிச்சமிருக்கணும்.”,என்றவனின் குரலில் இருந்த வெறியை அங்கிருந்தவர்கள் நன்றாகவே உணர்ந்தனர்.

“அண்ணி நீங்க கவலைப்படாதீங்க..நானும் ராகவும் உங்களுக்கு பக்க பலமா இருக்கோம்.”

“வேண்டாம் ரவி.உமையாள் இந்த நேரத்தில் சந்தோஷமா இருக்கணும்.நீங்க ஏதிலேயும் தலையிடாதேள்.முடிஞ்சா அவளோட அம்மா அப்பாகிட்ட அழைச்சுண்டு போயிடுங்கோ”,என்றவளை அதிர்ச்சியாய் ஏறிட்டான் ரவி.

“அண்ணி!!!”

“தெளிவா தான் பேசுறேன் ரவி.திரும்ப கிடைக்காத காலம் இந்த முதல் தாய்மை.இப்போ அவளுக்கு சந்தோஷம் மட்டும் தான் வேணும்.என் தங்கைக்கு எந்த இடைஞ்சலும் வரக் கூடாது.இன்னொரு அசம்பாவிதம் நடந்தா இப்போ இருக்குற தெம்பு கூட என்னை விட்டு போயிடும் ரவி..ப்ளீஸ்.

எல்லாம் சீக்கிரமே சரி ஆகும்.உங்க அண்ணாவால ரொம்ப நாள் ஒரே இடத்தில் இருக்க முடியாது.அவரு எழுந்து வந்துட்டா போதும்.அதுவரை ப்ளீஸ் ரவி..”

“அண்ணா அண்ணி சொல்றது சரி தான்..நான் இங்க பாத்துக்குறேன்.நீ அண்ணியை நல்லா பார்த்துக்கோ ணா..சீக்கிரமே எல்லாம் சரியாகும் ரவி ணா..”,என்ற தம்பியை கட்டியணைத்துக் கண்ணீர் வடித்தான் ரவி.

மறுநாளின் விடியல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சவால்களோடு காத்திருந்தது.இயந்திர தனமாய் தயாராகி அலுவலகத்திற்கு செல்ல கிளம்பினாள் ஏழிசை.

“வீரா..உங்களுக்காக தான் நான் இந்த கோட்டையைத் தாண்டி வெளியே போறேன்.சத்தியமா நேக்கு ரொம்ப நாள் தாக்கு பிடிக்க முடியாது வீரா..வந்துடுங்கோ என்கிட்ட”,என்றவள் மொத்த அழுகையையும் தனக்குள் புதைத்துக் கொண்டு குழந்தையை கைகளில் அள்ளி இறுகக் கட்டிக் கொண்டாள்.

ரவி உமையாளோடு பெங்களுரு செல்ல கிளம்பினான்.ஏழிசையைப் பார்த்த உமையாள் தோள் சாய்ந்து அழ ஆரம்பித்திருந்தாள்.

“இங்க பாரு உமையாள்.பாப்பாவும் நீயும் சந்தோஷமா இருக்கணும்.இந்த பெரியம்மாவும் பெரியப்பாவும் உங்களை நினைச்சுண்டே தான் இருப்போம்.அக்கா நான் இருக்கேன் உனக்கு..”,என்றவள் கன்னம் தட்டி அனுப்பி வைத்தாள்.

பட்டாம் பூச்சியாய் சுற்றித் திரிந்த ராகவ் பார்மல் ட்ரெசில் வந்து நிற்க ஏழிசைக்கு மனம் கலங்கியது.எப்போதுமிருக்கும் துள்ளலும் புன்னகையும் ஒப்பிற்கும் இருந்திருக்கவில்லை.

பர்வதம் சோர்வாய் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்க தன் முன் வந்து நின்ற மூத்த மருமகளையும் மகனையும் ஏறிட்டார் ராஜராஜன்.

ஏழிசை குழந்தையை பர்வதத்தின் மடியில் கிடத்த அழுத்தமாய் பிடித்துக் கொண்டார்.

“இவ அப்பா எழுந்து என்கிட்ட பத்திரமா வரும் வரையும் நீங்க தான் இவளுக்கு அம்மா.உங்களை நம்பி தான் நான் மத்த வேலையை கவனிக்க போறேன் மா..பார்த்துக்கோங்கோ..”,அவரது பொறுப்பு உடம்பின் நலனை நிச்சயமாய் அதிகப்படுத்தும் என்று நம்பினாள்.

“ப்பா..உங்க புள்ளை என்னவோ மனசில் நினைச்சுண்டு தான் இத்தனை வீராப்பா படுத்துண்டு இருக்கார்.பத்திரமா பார்த்துக்கோங்கோ..உங்க ரெண்டு பேரை நம்பி என் உயிர் இரண்டையும் விட்டுட்டு போறேன் பா..”,என்றவளைப் பார்த்தவருக்கு கண்ணீர் தான் பதிலாய் வந்தது.

வாசலில் கால் வைத்த நேரம் ராஜு தன் கூட்டாளிகளோடு அவளுக்கு முன் வந்து நின்றான்.

“கோட்டையை சுத்தி காவல் அதிகமா இருக்கட்டும் ராஜூ”

“இருபத்தி நாலு மணிநேரமும் கண்கொத்தி பாம்பா இருப்போம் அண்ணி.”

“ராகவா நீ எக்ஸ்போர்ட் கம்பெனிக்கு கிளம்பு.எதுவாயிருந்தாலும் எனக்கோ ரவிக்கோ கால் பண்ணு.”

“சரி அண்ணி”,என்றவன் அவளைக் கட்டிக்கொண்டு அழுதுவிட்டான்.

“அண்ணா மேல நான் ரொம்ப கோவமா இருக்கேன் அண்ணி..என் ஏஞ்சலை இப்படி பார்க்க முடியல..தாரு குட்டி பாவம் அண்ணி..”,என்றவனின் தலை கோதியவள் பிரித்து நிறுத்தினாள்.

“எல்லா கோபத்தையும் அப்படியே வைச்சுரு ராகவ்.அவர் எழுந்து வரும்போது நம்ம கோவத்தை எல்லாம் அவர்கிட்ட காட்டணும்..”,என்றவள் தோள் தட்டி அனுப்பினாள்.

ராகவின் கார் கிளம்ப பாதுகாவலர்கள் சிலர் அவனது வண்டியை பின் தொர்ந்தனர்.

காவ்யாவையும் திவ்யாவையும் ஊருக்கே அனுப்பி விட்டிருந்தாள்.திருமணத்தை இப்போதைக்கு நடத்த போவதில்லை என விஷாலும் சேகரும் உறுதியாய் கூறிவிட்டிருந்தனர்.

அலுவலகத்தை அடைந்தவளை ஷ்யாம் பார்கிங்கிலேயே வரவேற்றான்.வழியில் பார்ப்பவருக்கெல்லாம் தலையசைத்தவள் மிரட்சியை மறைத்து வீரேந்திரனின் அறைக்குள் நுழைந்தாள்.

கடந்த முறை அவனோடு இங்கு இருந்த நியாபகங்கள் வதைத்தது.அத்தனை நேரம் அனைவருக்குமாய் ஆறுதல் கூறியவளுக்கு அதற்கு மேல் அடக்க வழி தெரியாமல் கதறி விட்டிருந்தாள்.

“ஏழிசை மா..வேண்டாம் டா..எல்லாம் சரியாகும் டா..”

“அண்ணா..என்னால முடில..நான் என்ன பண்ண போறேன் எதுவுமே தெரியல ணா..”

“உன் படிப்பு எல்லாத்தையும் உனக்கு புரிய வைக்கும் டா..”

“….”

“அது மட்டுமில்லாம வீரேந்திரன் சாருக்கு அடுத்து போர்ட் மெம்பர்ஸில் உன் பேர் தான் டா இருக்கு..”

“என்ன ணா சொல்றேள்!!!”

“ஆமா மா..சார் அப்போவே மாத்திட்டார் அவருக்கு நிகரான எல்லா பவரும் சேதுபதி க்ரூப் ஆஃப் கம்பனிஸ்ல உனக்கும் உண்டு டா..”

“அவர் எல்லாத்துக்கும் தயாரா தான் இருந்துருக்கார்..இல்ல ணா?”

“….”

ஆழ்மூச்செடுத்தவளாய்,”இன்னிக்கு என்ன பண்ணணும்?”

“கவர்மெண்ட் டென்டர் விஷயமா ஒரு மீட்டிங் இருக்கு மா..”

“சரி போகலாம்.”,என்றவள் எழுந்து வெளியே சென்றிருந்தாள்.