அனைவரும் வேலைக்குச் சென்றுவிட சிறியவர்களும் இல்லாமல் வீடே வெறிச்சோடி இருந்தது ஏழிசைக்கு.காவ்யா ஈஸ்வரின் உறவினர் வீட்டிற்குச் சென்றிருக்க என்ன செய்வதென தெரியாமல் வழக்கமான தன் பிடித்த இடமான தோட்டத்தில் சென்று அமர்ந்தாள்.

சிறிது நேரத்தில் கார் சத்தம் கேட்க யாராய் இருக்கும் என்று எட்டிப் பார்த்தவளுக்கு காரினுள் உமையாளைப் பார்த்ததும் இந்நேரத்தில் வர மாட்டாளே என்ற எண்ணம் தோன்ற மெதுவாய் உள்ளே சென்றாள்.

சிறு தயக்கம் இருந்தாலும் கேட்காமல் இருக்கக் கூடாது என்று நினைத்தவளாய்,

“உமையாள்,இந்த நேரத்தில் வந்துருக்கேள் உடம்பு எதும் சரியில்லையா?”

“ம்ம் லேசாய் தலைவலி”

“காபி சாப்பிடுறேளா கொண்டு வர சொல்லவா?”

“இல்லை வேண்டாம் ரெஸ்ட் எடுக்குறேன்.”

“சரி டேக் கேர்.”,என்றவள் மீண்டுமாய் தோட்டத்திற்குச் சென்றுவிட தனதறைக்குள் வந்தவள் ஜன்னல் வழி ஏழிசையைத் தான் பார்த்திருந்தாள்.

அங்கு இருந்த பணிப்பெண்ணுடன் பேசியபடி சிரித்துக் கொண்டிருந்தாள்.அதற்குள் வேணி அவளுக்காக எதோ கொண்டு செல்வது தெரிந்தது.கற்பகம்  கை நிறைய பூக்களை வைத்துக் கொண்டு ஏதோ கதை அளந்து கொண்டிருந்தாள்.

வந்த பத்தே நாட்களில் எப்படி இப்படி பழகுகிறாள் என்ற எண்ணம் வந்திருந்தது உமையாளுக்கு.அவளுக்கும் இந்த வீட்டில் மரியாதைக்கு குறைவெல்லாம் இல்லை.கேட்டது கேட்ட நேரத்தில் கிடைக்கும் தான்.ஆனால் தான் யாருடனும் ஒட்டாததால் மற்றவர்களும் அதையே தான் தன்னிடம் கடைப்பிடித்தனர் என்பது புரிந்தது.

சிறிது நேரம் அறையில் இருந்தவளுக்கு மனம் ஒரு மாதிரியாய் இருக்க எழுந்து ஏழிசையை நோக்கிச் சென்றாள்.உமையாளைப் பார்த்தவள் சிநேகமாய் சிரித்து அவள் அமர இடம் விட்டு நகர்ந்து அமர்ந்தாள்.

“தூக்கம் வரலையா?”

“ம்ஹூம்.”

“நீங்க வேலை பார்த்தே பழகிருப்பேள் அதான் தூக்கம் வரலை.கொஞ்ச நேரம் இங்க உட்கார்ந்தா தலைவலி எல்லாம் காணாம போயிடும்.நான் கிளம்புறேன்.நீங்க இருங்கோ.”

“உங்களுக்கு வேலை எதுவும் இல்லைனா கொஞ்ச நேரம் இங்க உட்காரீங்களா?”,என்ற உமையாளை ஆச்சரியமாய் பார்த்தாள் ஏழிசை.

“எதுவும் பிரச்சனையா உமையாள்.எதுவானாலும் சொல்லுங்கோ?”

“அதெல்லாம் இல்லை..மனசுல சின்ன குழப்பம்..”

“எதைப்பத்தி..”

“என்னைப் பத்தி தான் கா..”,என்றவளைப் பாசமாய் பார்த்திருந்தாள் ஏழிசை.

“அப்படி கூப்பிடலாம் தான?”

“அப்படி தான் கூப்பிடணும்..”,என்றவளைப் பார்த்து புன்னகைத்தவள்,

“உங்ககிட்ட ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?”

“அக்கானு சொன்ன அப்பறம் இத்தனை தயக்கம் வேண்டவே வேண்டாம் என்ன கேட்க போற உமையாள்?”

“உங்களுக்கு இங்க இருக்க கஷ்டமா இல்லையா?”

“இங்கேயா ஏன்?”

“நீங்களும் என்னை மாதிரி தனியா வளர்ந்தவங்க அப்படியிருக்க இத்தனை பேரோட ஒரு ப்ரைவசியே இல்லாம..கஷ்டமா இல்லையா?”

“ஓ..உண்மையை சொல்லணும்னா எனக்கு நிறைய மனுஷா பக்கத்தில் இருக்கணும்னு ரொம்ப ஆசை.தனிமை பல நேரங்களில் கொடுமை உமையாள்.

அதுவுமில்லாம இங்க எல்லாரும் நமக்கான இடத்தை கொடுத்து தானே பழகுறா.அப்பா அம்மாவும் ரொம்ப நல்ல மாதிரி.காவ்யா என்னோட ப்ரெண்ட் அப்பறம் கடைசி இரண்டும் குழந்தைங்க மாதிரி சேட்டை பண்றா.இதெல்லாம் பிடிக்காம போகுமா?”

“ம்ம் எனக்கு கல்யாணம் ஆகி ஒரு வருசம் ஆகிடுச்சு ஆனாலுமே பெருசா ஒட்டுதலே வர மாட்டேங்குது கா.”

“…”

“அதுனாலேயே அவருக்கும் எனக்கும் மனக்கசப்பு வந்துருமோனு பயமா இருக்கு.”

“ரவியை உனக்கு பிடிக்குமா?”

“லவ் மேரேஜ் கா எங்களோடது..”

“அதுக்காக எப்போதுமே அந்த லவ் அப்படியே இருக்கும்னு யார் சொன்னா?”

“!!!”

“ரவிக்கு உங்களை பிடிக்குமா?”

“அவர் என்னைத் தவிர வேற எந்த பொண்ணையும் திரும்பி கூட பார்க்க மட்டார் கா.”

“அவர் உங்க ஆத்துக்கு வந்தா எப்படியிருப்பார்?”

“இங்க இருக்கறது மாதிரி தான்.ஏன்?”

“உங்க அப்பா அம்மாவோட பேசுவாரா?”

“ம்ம் அத்தை மாமாவும் எங்க அப்பா அம்மவும் ஒண்ணு தான்னு அடிக்கடி சொல்லுவார்.”

“அவர் உன்னோட சேர்த்து உன் மொத்தத்தையும் ஏத்துண்டு இருக்கார் உமையாள்.நீ அதுகுள்ள உன் குடும்பமும் அடக்கம்னு புரிஞ்சுண்டர்.நீ ஒரே பொண்ணு அப்போ உன் அப்பா அம்மாவையும் அவர் தான் பார்த்துக்கணும்ங்கிற தெளிவு இருக்கு.

ஆனால் உனக்கு ரவிங்கிற ஒருத்தர் மட்டும் போதும்னு தோண்றது..இல்லையா?”

“…”

“என்னாச்சு எதுவும் தப்பா பேசிட்டேனா?”

“இல்ல கா.நீங்க சொல்றது ரொம்ப சரி.அவருக்கான முக்கியத்துவத்தை ரொம்ப எதிர் பாக்குறேன்.எல்லாரும் பெரிய மாமாவைப் பத்தி பேசும் போது என்னை அறியாம ஒரு கோபம் வருது.”

“உண்மையை சொல்லணும் னா என் புருஷன் மாதிரி ரவி இல்லைனு நீ சந்தோஷம் தான் படணும் உமையாள்.அவருக்கு மரியாதையை விட ஆபத்து அதிகமா இருக்கு.ஒரு ஒரு நாளும் பயந்து பயந்து வாழறது ரொம்ப கொடுமை.அதெல்லாம் நோக்கு வேண்டாம்.”

“…”

“அப்பறம் இனி நான் இருக்கேன் என்னோட நேரம் கிடைக்கும் போது பேசு அப்படியே அம்மாவோடவும் பழக முயற்சி பண்ணு.அவா கண்டிப்பா உன் சந்தோஷத்துக்கு தடையா இருக்க மாட்டா டா..

உடனே எல்லாம் மாறிடும்னு சொல்ல முடியாது ஆனால் முயற்சி எடுக்காமலே இருந்தா எதுவும் மாறாது.

ரவியை ரவியோட குடும்பத்தோட ஏத்துக்க முயற்சி பண்ணு மத்த பிரச்சனை எல்லாம் தானாவே காணாம போயிடும்.சரியா?”

“ம்ம்..தேங்க்ஸ் கா மனசு கொஞ்சம் தெளிவாகியிருக்கு..”,அவள் கன்னம் தட்டி புன்னகைத்து மாடிக்குச் செல்பவளைப் பார்த்த பர்வதத்திற்கு எப்போதும் போல் மனம் குதுகலித்தது.

மாலை நான்கு மணிக்கெல்லாம் ரவீந்திரன் வீட்டிற்கு வந்து விட்டான்.காலையில் வீட்டிற்குச் சென்றவளிடமிருந்து அழைப்பும் வரவில்லை மெசெஜிற்கும் பதில் இல்லை என்றதும் பதட்டமாகி விட்டிருந்தான்.

வீட்டிற்கு வந்தவன் நேராய் தனதறைக்குச் செல்ல அங்கு அவனது பால்கனியில் மனைவிக்கு பூ வைத்து விட்டுக் கொண்டிருந்தாள் ஏழிசை.

ஒரு நொடி அப்படியே நின்று விட்டிருந்தான்.அழகிய கடல் நீல நிற ஷிபான் சேலையும் தலை நிறைய மல்லியுமாய் நின்ற மனைவியை ரசித்திருந்தான்.

அரவம் கேட்டு பெண்கள் இருவரும் திரும்ப ரவி ஏழிசை இருப்பதை மனதில் கொண்டு சிநேகப் புன்னகையோடு அவர்களிடம் சென்றான்.

“வாங்கோ ரவி..என்ன இத்தனை சீக்கிரம் வந்துட்டேள்.என் தங்கச்சியை பார்க்காம இருக்க முடியலை தானே?”,என்றவளின் கேள்வியில் உமையாள் முகம் சிவக்க ரவி லேசாய் சிரித்தான்.

“காலையில் வந்தவ ஒரு போன் கூட பண்ணலை அண்ணி..உடம்பு சரியில்லையோனு பயந்தே போயிட்டேன்.இவ வேற யார்கிட்டேயும் எதுவும் சொல்லவும் மாட்டாளே தனியா கஷ்டபடுறாளோனு ஒரே டென்ஷன்.வேலையை முடிச்சு ஓடி வரேன்.”,என்றவனின் பதட்டம் கண்டவளுக்கு மனம் கனிந்தது.

“நாங்க பேசிட்டே இருந்ததில் நேரம் போனதே தெரியலை.சரி நான் வரேன்.வேணிகிட்ட உங்க ரெண்டு பேருக்கும் காபி கொடுத்து விட்றேன் சாப்பிடுங்கோ.வரேன் உமையாள்.”,என்றவள் அறையைக் கடந்தது தான் தாமதம் தன் கணவனின் பிடிக்குள் இருந்தாள் உமையாள்.

உண்மையில் கணவனுக்காக தான் புடவைக் கட்டியிருந்தாள்.அவனுக்கு புடவை என்றால் அத்தனை பிரியம் ஆனால் அவளுக்கோ புடவையே ஆகாது.சரியாய் கட்டவும் வராது என்பதால் பெரிதாய் மெனக்கெட மாட்டாள்.

இன்று ஏழிசையோடு பேசிய பின் ஏனோ கணவனுக்காக அதைக் கட்ட வேண்டும் என்று தோன்ற ஏழிசையே உதவியும் செய்தாள்.

தினமும் கணவனோடு அந்யோன்யமாய் இருந்தாலும் இன்றைய அவனது அணுகுமுறை ரொம்பவே வித்தியாசமாக இருந்தது உமையாளுக்கு.

“யாளு பேபி என்ன ஸ்பெஷல் இன்னைக்கு?”

“சும்மா தான் கட்டலாம்னு தோணிச்சு..”

“எனக்காகவா?”

“!!!”

“சொல்லு யாளு?!”

“ம்ம்..”

“உன்னை இப்படி பார்க்க எத்தனை நல்லாயிருக்குத் தெரியுமா.உனக்கு கம்ப்படபிளா இருக்காதேனு நான் கட்ட சொன்னதில்ல.”

“இப்பவும் அக்கா தான் ஹெல்ப் பண்ணாங்க..”

“இனி சொல்லு நானே கட்டி விடுறேன்..”,என்றவனின் முகத்தில் அத்தனை காதல் கொட்டிக் கிடந்தது.

“லவ் யூ ரவி..”

“லவ் யூ யாளு மா..இப்படியே எப்பவும் ஹேப்பியா இரு.”,என்றவன் நெற்றியில் அழுந்த இதழ் பதித்தான்.

இரவு எட்டு மணியளவில் அனைவரும் இரவு உணவை முடித்திருக்க வாசலில் கேட்ட கார் சத்தத்தில் எட்டிப் பார்த்தவளின் விழிகள் தாமரையாய் விரிந்தது.

போனில் யாருடனோ பேசியபடி அவளை ஓரப் பார்வை பார்த்து மேல சென்ற கணவனைப் பின் தொடர்ந்து ஓடினாள் ஏழிசை.

அவன் அலைப்பேசியை வைக்கும் வரை கூட பொறுக்க முடியாதவளாய் மெதுவாய் அவனது முதுகில் சாய்ந்து மார்பில் கை வைத்து அணைத்துக் கொண்டாள்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் அழைப்பைத் துண்டித்தவன் தன் மார்பில் இருந்த அவளது கைப்பற்றி முன்னே இழுக்க வாகாய் அவனைக் கட்டி நின்றாள்.

“ஓய் மாமி இன்னும் குளிக்கலை..நீ தான் ரொம்ப சுத்தம் பார்ப்பியே..”

“ம்ம் பரவாயில்லை.ஒரு நாள் ஒண்ணும் ஆகாது.”

“கேடி..”

“வேலை எல்லாம் முடிஞ்சுதா?”

“இல்லை ஒன் அவர்ல ஒரு மீட்டிங் இருக்கு..இங்கே இருந்து பேசிக்குறேன்.”

“சாப்டேளா?”

“ம்ஹூம்..”

“ஐயோ அதை முதல்லயே சொல்றதுக்கு என்ன.போய் குளிச்சுட்டு வாங்கோ நான் போய் எல்லாம் எடுத்து வைக்குறேன்.”

“இங்கேயே கொண்டு வா இசை.சாப்பாடெல்லாம் முக்கியமில்ல உன் கூட இருக்கலாமேனு தான் வந்தேன்.”,என்றவனை  இன்னுமாய் தன்னோடு சேர்த்துக் கொண்டவள் இதழ் பதித்து விலக்கினாள்.

“இரண்டே நிமிஷம் எடுத்துண்டு வந்துடுறேன்.”,என்றவள் வேக வேகமாய் வெளியே ஓடினாள்.

“மெதுவா போ இசை..”,என்றவனின் குரல் காற்றில் தொடர்ந்து வந்து புன்னகையை அளித்திருந்தது.

அவனுக்காக தட்டில் உணவை எடுத்துக் கொண்டவள் அறைக்குள் நுழைய கையில் சிறு மெத்தையோடு பால்கனிக்குச் செல்லும் கணவனைப் பார்த்தவள் புன்னகையோடு அவனைப் பின் தொடர்ந்தாள்.

மெத்தையைப் போட்டுவிட்டு அதில் கால் நீட்டி அமர்ந்தவனின் அருகில் அமர்ந்தவள் தட்டை அவனிடம் நீட்ட வாங்கி இரு நொடியில் உண்டு முடித்தவன் மனைவியை மடி சாய்த்துக் கொண்டான்.

“மாமி ஹேப்பியா?”

“ரொம்ப..”

“முகத்திலேயே தெரியுது”,என்றவன் முகத்தில் கோலமிட்டுக் கொண்டிருந்தான்.

“சந்தோஷம்னா உடனே எக்ஸைட் ஆகுறது சோகம்னா அதுக்கும் ஒரேடியா அழுது வடியுறது..”

“எல்லா விஷயத்திலும் நான் அப்படி கிடையாது.ஆனால் நீங்க மட்டும் விதிவிலக்கு.நான் என்ன செய்யுறது.”

“ம்ம் திருப்பி என்னையே கேள்வி கேளு.”,என்றவன் அவள் மூக்குத்தியை வருடினான்.

“உன்கிட்ட ஒண்ணு சொல்லணும் இசை.”

“சொல்லுங்கோ..”,என்றவளுக்கு தன் கைப்பேசியை உயிர்பித்து ஒரு போட்டோவைக் காட்டினான்.

“இசை அறக்கட்டளை”,என்றிருந்த போஸ்டரில் அதன் அட்ரெஸும் போன் நம்பரும் கொடுக்கப்பட்டிருக்க பவுண்டர் என்ற இடத்தில் வீரேந்திர சேதுபதி மற்றும் ஏழிசை வீரேந்திர சேதுதி என்ற பெயரைப் பார்த்து கண்கள் கண்ணீரால் மறைத்தது.

“அழாதே மாமி..உன் ஆசைக்காக தான் பண்ணிருக்கேன்.சந்தோஷப்படணும்.”

எழுந்து அமர்ந்தவள் அவன் முகத்தையே பார்த்திருந்தாள்.என்ன சொல்வதென்று புரியவில்லை அவளுக்கு.

“நேத்து அத்தனை பேருக்கும் தேவையானதை நீ பண்ணின.ஆனால் உனக்கு என்ன வேணும்னு கேட்டா எல்லாம் இருக்குனு சொல்ற.உன் பணம் மொத்தத்தையும் இந்த வீட்டுக்காக செலவு பண்ணிட்ட.உன் கழுத்தில் இருந்த பிறந்த வீட்டு நகைனு இருந்ததையும் ஜிஷாக்கு போட்டுவிட்ட..

மொத்தமா உன் வீராவை சார்ந்து நிக்குறியே..அதெல்லாம் இந்த காலத்தில் எத்தனை பேருக்கு ஒத்து வரும்னு தெரியலை.புருஷன் காசாவே இருந்தாலும் நமக்குனு கையில் காசு இருக்கணும்னு நினைப்பாங்க..அப்படி ஒரு நினைப்பே உனக்கு இருக்குற மாதிரி தெரியலை டி.

இதுக்கெல்லாம் பதிலுக்கு எது பண்ணினாலும் கம்மியா தான் இருக்கும்.அதான் உன்னோட ஆசையை கொஞ்சம் பெரிய அளவில் நிறைவேத்தியிருக்கேன்.சந்தோஷமா?”

“வீரா..”,என்ற அழைப்பு அவளின் மொத்த உணர்வுகளையும் அவனிடத்தில் சேர்த்திருந்தது.

“வாழ்க்கையில் நேக்கு  கிடைக்காமயே இருந்த ஒரு விஷயம் ஆத்மார்த்தமான அன்பு மட்டும் தான்.அது இப்போ திகட்டத் திகட்ட கிடைக்குது உங்ககிட்ட.அதை தாண்டி அந்த காசெல்லாம் வைச்சு எனக்கு ஒண்ணும் ஆகப் போறதில்லனு தான் செலவு பண்ணிட்டேன்.

நேக்கு உங்களையும் இந்தக் கோட்டையையும் தாண்டிய வெளி உலகம் வேணும்னு தோணலை.”,என்றவள் அவனின் தோள் சாய்ந்து கொண்டாள்.