காதல்-18

by ஸ்ரீ
0 comments 48 views
A+A-
Reset

தோழி கூற்று

வேரல்வேலி வேர்க்கோட் பலவின்

சார னாட செவ்வியை யாகுமதி

யாரஃ தறிந்திசி னோரே சாரற்

சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்

உயிர்தவச் சிறிதே காமமோ பெரிதே.

என்பது, இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு வரைவு கடாயது.

பாடியவர்

கபிலர்

வீட்டிற்கு வந்தவன் யாரையும் பொருட்படுத்தாமல் இரண்டிரண்டு படிகளாய் தாவி தனதறைக்குச் சென்றான். மீண்டும் வயிற்றை பிரட்டிக் கொண்டு வர பாத்ரூமிற்குச் சென்று அப்போது தான் அறைக்குள் வந்தவள் அவனைப் பார்த்து அப்படியே நின்றுவிட்டாள்.

“மாமா!!!””

“குள்ளச்சி போன்ல என்ன சொன்ன?”

“ம்ம் அதான் ரொம்ப சீன் போட்டியே அப்பறம் என்ன?”

“அரசி சத்தியமா சந்தோசத்துல தலைகுள்ள குத்தாட்டமே நடந்துட்டு இருக்கு. . சொல்லு டீ என்ன சொன்ன. . ”

பதில் கூறாமல் அவன் கையை எடுத்து தன் வயிற்றில் வைத்தவள்,”நீ அப்பா ஆகப் போற மாமா. . ”,என்று முடித்த நொடி அவளை அப்படியே தன்னோடு இறுக்கிக் கொண்டான்.

“அரசி அரசி…”என அவள் முகம் மொத்தத்தையும் முத்தத்தால் நினைத்தவனின் கண்களில் ஆனந்த பளபளப்பு. அதற்குள் அவன் வந்த வேகத்தை பார்த்து பயந்தவர்களாய் வெற்றிச் செல்வியும் மலரொளியும் அங்கு ஓடி வந்திருந்தனர்.

“எய்யா எழிலு என்னாச்சு. . பதட்டமா வந்தா மாதிரி இருக்குனு ஆச்சி சொன்னாக. . ”

“சித்தி. . நீங்க ஆச்சியாக போறீக. . அம்மா சீக்கிரமே உன் பேத்தியோ பேரனோ நம்ம வீட்டுக்கு வர போறா. . ”,என்றவன் குழந்தையாய் ஆர்பரிக்க அந்த ஆறடி ஆண்மகனை மறுபடியும் குழந்தையாய் கண்டனர் பெண்கள் மூவரும்.

இருவரும் பொழிலரசியை திருஷ்டி கழித்து அணைத்துக் கொள்ள எழில் அவளை அழைத்துக் கொண்டு கீழே சென்றான். வீடே ஒரு வழி ஆகிக் கொண்டிருந்தது எழிலமுதனால். அதியமான் தான் அவனை கிண்டல் செய்து கொண்டிருந்தார்.

“ஏலேய் பாத்துலே இத்தனை நாளும் சண்டியர் மாதிரி அலைஞ்சுட்டு இருந்தவன் ஒரே நாள்ல சின்ன புள்ளையா ஆய்டியேல. . ”

“போப்பா என்ன வேணா கேலி பேசிக்கோ. . என் புள்ள வெளியே வந்தப்பறம் இரண்டு பேருமா சேர்ந்து எல்லாரையும் ஒரு கை பாக்குறோம். . ”

அதன் பின்னான ஒவ்வொரு நாட்களும் அரசிக்கு வாழ்வில் மறக்க முடியா வசந்தகாலமாய் இருந்தது. தாய்மையின் பூரிப்பு ஒரு புறமென்றால் மொத்த குடும்பமும் அவளை தலையில் வைத்து கொண்டாடியது மறுபுறம்.

அங்கிங்கு நகர விடாமல் சில நேரங்களில் எழிலுக்கே கூட அவளிடம் பேசும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. அந்தளவிற்கு ஒருவர் மாற்றி ஒருவர் அவளுக்கு தேவையானதை கவனித்துக் கொண்டிருந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் ஏழு மாதங்கள் ஓடிவிட வீடே திருவிழா கோலம் பூண்டிருந்தது. அரசிக்கு இன்று வளைகாப்பு.

அப்போதுதான் எழுந்தவள் மெதுவாய் எழுந்து குளிக்கச் செல்ல அவளுக்காக வெந்நீர் முதற்கொண்டு போட்டு வைத்திருந்தான் எழில். குளித்து முடித்து வந்தவள் புடவையை மாற்ற எழில் கையில் பாலோடு உள்ளே வந்தான்.

“என்ன டீ பொண்டாட்டி ரெடியா. . ”

“மாமா ஆனாலும் ரொம்ப கவனிக்குற உன் புள்ளை வெளியே வந்தப்பறம் என்னை கவனிக்காம விட்ட உனக்கு இருக்கு. . ”

“ஆங்ங் அப்பறம். . என் புள்ள வந்தப்பறமும் உன்னையே கொஞ்சிகிட்டு கிடப்பாகளா. . ”

“ஓஹோ அவ்ளோ ஆய்டுச்சா. . ”

“குள்ளச்சி உனக்கு அப்பறம்தேன் எனக்கு எல்லாமே. . உனக்குத் தெரியாதா. . ”

“ம்ம் நல்ல கவுத்துரு. . சரி சொல்லு உனக்கு பொண்ணு வேணுமா இல்ல பையனா?”

“ஏதோ கடையில் போய் இட்லி வேணுமா தோசை வேணுமாங்குற மாதிரி கேக்குற. . எந்த புள்ளையா இருந்தா என்ன டீ. . பத்து மாசம் சுமந்து உயிரை கொடுத்து பெத்துக்குற வைலி குறைய போகுதா என்ன. . ”

“நீ எப்பவுமே ஹீரோ மாமா. . ”

“ம்ம் இப்படியே பேசிகிட்டே இருந்தா ஆச்சி வந்து அதுக்கும் என்னைதேன் குத்தம் சொல்லும். . ”

என்றவன் அவளுக்கு முடிந்த உதவியை செய்து அவளை பொறுமையாய் கீழே அழைத்துச் சென்றான்.

வளைகாப்புநல்ல படியாய் முடிந்து விருந்தினர்கள் அனைவரும் விடைபெற்றுச் செல்ல பாக்கியம் இருவரையும் அமர வைத்து திருஷ்டி சுத்தி முடித்தார்.

“ஏட்டீ பொழிலு இனி நீ இன்னமும் சாக்கிரதையா இருக்கனும். . பாத்து பொறுமையா நடக்கணும். . நல்ல குனிஞ்சு நிமிர்ந்து வேலை செய்யணும். . புரியுதா. . ”

“சரி ஆச்சி. . ”

அவர்கள் கூறிய அனைத்தையும் சிரத்தையாய் செய்தாள். ஒன்பதாம் மாத முடிவில் திடீரென்று ஒருநாள் பொழிலுக்கு பிரசவ வலி எடுக்க ஆரம்பிக்க வீட்டின் ஆண்கள் யாரும் இல்லாமல் போக போன் போட்டு எழிலை அழைத்தனர்.

அவன் வரும் வரையுமேபல்லை கடித்துக் கொண்டு வலி பொருத்தவளுக்கு அவனை கண்டதும் சட்டென கண்ணீர் வழிந்தது.

“மாமா ரொம்ப வலிக்குது. . ”

“ஒண்ணுமில்ல டீ சீக்கிம் ஆஸ்பத்திரிக்கு போய்டலாம். . கொஞ்சம் பொறுத்துக்கோ. ”என்றவன் காரை கிளப்பிக் கொண்டு மருத்துவமனை நோக்கி விரைந்தான்.

அவள் உள்ளேசெல்லும் வரையிலுமே அவள் கையை இறுகப் பற்றிருந்தவன் அவள் கைவிடுத்துச் சென்ற நேரம் அத்தனை கண்ணீரையும் வெளிக் கொணர்ந்தான்.

யார் கூறும் சமாதானமும் அவன் காதை எட்டியதாய் தெரியவில்லை. . முத்துதான் அவனோடே இருந்தான்.

“ஏலேய் மாப்ள என்னதிது பச்ச புள்ளையாட்டம். . தைரியமா இருலே. . ”

“மாமா பிரசவம் மறுபிறவி அது இதுனு சொல்லுதாகளே. . தாயும் பிள்ளையும் கண்ல பாக்குறதுக்குள்ள உயிர் போய் வருதுலே. . ”

எனும்போதே நர்ஸ் கையில் குழந்தையோடு வெளியே வந்தார். அடித்துபிடித்து எழுந்தவன் அவரிடம்,

“அரசி??”

“என்னண்ணே பிள்ளைய பாக்காம பொண்டாட்டியை விசாரிக்கீகளே. . தாயும் சேயும் நல்லா இருக்காங்க. . இந்தாங்க உங்க பொண்ணை பாருங்க. . ”

சிறியதொரு தேவதை மாநிறத்தில் அப்படியே அவன் ஜாடையில். கன்னத்தில் தன் சிறு விரல்களை வைத்தவாறு உறங்கிக் கொண்டிருந்தாள். ஆர்வத்தில் கையை நீட்டிவிட்டானே தவிர விரல்கள் நடுங்கியது அவளை கையில் வாங்குவதற்கு. .

“ம்மா அப்படியே நீயே கையில வச்சுரேன். . ”என்று நர்ஸிடம் கூற வாய்விட்டுச் சிரித்தவளாய் அவன் கைகளில் குழந்தையை கொடுத்தாள். கைகளின் சூடு மாறியவுடன் என்ன தோன்றியதோ தூக்கத்திலேயே அழகாய் புன்னகைத்தாள் அவனின் இளவரசி.

மொத்த குடும்பமும் ஆளாளுக்கு குழந்தையை கொண்டாட ஒவ்வொரு முறை தூக்கும் போதும் பாத்து பாத்து என பதறிக் கொண்டிருந்தான்.

“ஏலேய் உன்னையே தூக்கி வளர்த்தவளே நா இந்த சின்ன குட்டியை தூக்க தெரியாதா. . சத்த நேரம் பேசாம போலே அங்கிட்டு. . ”, என பாக்கியம் அவன் வாயடைத்துஅமர வைத்தார்.

ஒரு வழியாய் பொழிலை வார்ட்டுக்கு மாற்ற அயர்வாய் அவனை ஏறிட்டவளின் நெற்றியில் அழுந்த இதழ் பதித்திருந்தான்.

“ரொம்ப கஷ்டப்பட்டியா அரசி. . ”

“கஷ்டபடாம புள்ள பெற முடியுமா மாமா. . ஆனாலும் உன் சந்தோசத்தை நினைச்சுகிட்டேன் வலி எல்லாம் தெரியவே இல்ல. . ”,என அயர்வான புன்னகையை கொடுத்தவளை இடையோடு சாய்த்துக் கொண்டான்.

மூன்று நாட்களுக்குப் பின் வீடு திரும்பியவளுக்கு கீழிருந்த அறையையே ஏற்பாடுசெய்திருந்தான் எழில். உடல் தேறி வரும் வரை மாடியெல்லாம் ஏறக்கூடாது என முடிவாய் கூறிவிட்டான்.

பகல் நேரரத்தில் கடைக்குச் செல்லாமல் தன் மகளோடு பொழுதை கழித்துக் கொண்டிருந்தான். கவள் உறங்குவது அழுவது சோம்பல் முறிப்பது என ஒவ்வொன்றையும் அதியசித்து பார்த்திருந்தான்.

பதினாறாம் நாள் பெயர்சூட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்திருக்க யாரிடமும் என்ன பெயர் என்பதை கூறமாட்டேன் என சாதித்துவிட்டான் எழில்.

“யோவ் மாமா எனக்குகூட சொல்லகூடாதா. . சஸ்பென்ஸ் தாங்காதுனு உனக்கு தெரியும்ல. . சொல்லுடா. . நா யார்ட்டையும் சொல்ல மாட்டேன். ”

“குள்ளச்சி முடியாதுனா முடியாது. . ஐயர்கிட்ட சொல்லும்போதே நீயும் கேட்டுக்கோ. . ”,என்றவன் தன்னை முறைத்தவளை பார்த்துநமட்டுச் சிரிப்பு சிரித்தவாறு அங்கிருந்து நகர்ந்தான்.

ஐயர் வந்து பூஜையை முடித்து குழந்தைக்கான பெயரைக் கேட்க தன் அரசியை பார்த்து புன்னகைத்தவனாய்,”அமுதரசி. . ”,என்று  கூறி முடிக்க அரசிக்கு முகம் தாமரையாய் மலர்ந்து போனது.

“ஏன்டா இருக்குற ஒரு அரசிக்கே உன் அலப்பறை தாங்காது இதுல இவளுமா டே. . ”

“சித்தப்பூ இந்த அமுதனுக்கு எப்பவுமே ஒரே அரசிதேன். . இவ என் அம்மு. . ”

“சரிதேன் எல்லா தெளிவாதாம்லே யோசிக்குற. . ”என்று அனைவருமாய் சிரிக்க வேணி வேகமாய் பின்பக்கம் ஓடினாள்.

என்னவோ ஏதோவென தமிழ் அவளைப் பின் தொடர வெட்கச் சிரிப்போடு அவனை ஏறிட்டவளின் பார்வையே செய்தியை தெளிவாய் பகிர்ந்திருந்தது தமிழுக்கு.

அதற்குள் மலரொளியும் பூம்பாவையுமே விஷயத்தை யூகித்திருக்க அவளின் முகம் பார்த்து உறுதி செய்துவிட்டனர்.

“ஏட்டீ வேணி நல்லா பண்றீக டீ அக்காவும் தங்கச்சியும். . மூணு ஆச்சிங்க இருக்கோம்ங்கிறதுக்காக வருசத்துக்கு ஒருத்தியா போட்டி போடுவீக போலயே”,என பூம்பாவை சிரிக்க வேணி தமிழின் தோளில் முகம் புதைத்துக் கொண்டாள்.

மூன்று வருடங்களுக்குப் பிறகு,

அங்கயர்கண்ணி படபடப்பாய் நகத்தை கடித்து துப்பிக் கொண்டிருந்தாள். அவள் தலையில்லதட்டியவளாய் வேணி அவளருகில் அமர தலையை தேய்த்தவாறே பாவமாய் முறைத்தாள்.

“அண்ணி!!!”

“ஏன் டீ பொண்ணுபாக்கதான வாராக அதுக்கு எதுக்கு இப்படி உக்காந்துருக்க என் தம்பியை பிடிச்சுருக்குனு சொன்ன தான. . ”

“அண்ணி அதில்ல பிரச்சனை அவரு மூணு வருசத்துக்கு முன்னாடியே என்னை பிடிச்சுருக்குனு சொன்னாக. . நாதேன் வழக்கம் போல ஓவரா பேசிட்டேன். . இப்போ அவரே மாப்பிள்ளைனு நினைக்கும் போது கொஞ்சம் பயமா இருக்கு. . ”

“சின்னபுள்ள மதிரி பேசாத கண்ணி. . அவன் உன்மேல எம்புட்டு பாசம் வச்சுருந்தா சொன்ன வாக்கை காப்பத்துறான். அவனை பார்த்து பயப்படுதியே. .  போ போய் இந்த சேலையை கட்டிட்டு வா. .  அதுகுள்ள நா பெத்த மவன் அங்க யாரை என்ன உயிரை வாங்கிட்டு இருக்கான்னுபாத்துட்டு வரேன். ”

அழகிய பட்டுப்புடவையில் அளவான நகைகளோடு தலைக்கு மல்லியை சூட்டிக் கொண்டிருந்த அரசியை பின்னிருந்து அணைத்துக் கொண்டவன் கழுத்து வளைவில் முகம் வைத்து கண்ணாடியில் அவளை ஏறிட அழகாய் புன்னகைத்தவள் என்னவென்பதாய் புருவமுயர்த்தினாள்.

“என் மக அளவுக்கு இல்லைனாலும் நீயும் கொஞ்சம் அழகுதேன் குள்ளச்சி. . ஸ”

“ஆங் அப்படியா அப்போ உன் மகளையே போய் கொஞ்சிக்கோ போ. . ”

“சும்மா சொன்னா உடனே சண்டைக்கு வந்துருவியே. . கோச்சுகாத டீ. .  ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன். . அடுத்த மாசமே இரண்டு கல்யாணம். . வீடே நிறைஞ்சுபோன ஒரு நிம்மதி டீ. . ”

“உண்மைதான் மாமா. . கண்ணிக்கு பாத்துருக்க மாப்பிள்ளையும் நல்ல குணமாதான் தெரியுது. என்ன இந்த இளவேனில் அப்பாவும் கொஞ்சம் இறங்கி வந்துருந்தா நல்லாயிருந்துருக்கும். . ”

“ஏன் டீ நல்ல நேரத்துல அந்தாளை நியாபகப் படுத்துற. . அவனெல்லாம் ஒருஆளு. . இத்தனை வருசமும் அவளை ஒண்ணும் பண்ணாம விட்டதே பெருசு. . அவ இங்க வந்த ஆறுமாசத்துல மூணு தடவை அவளை தேடி ஆளை அனுப்பிட்டான் மெட்ராஸுக்கு. . அவனை கண்காணிக்க சொல்லி வச்ச ஆளு மூலமா எனக்கு விஷயம் தெரிஞ்சு போலீஸு கேஸுனு பயமுறுத்தி அடக்கி உக்கார வச்சுருக்கேன். . என்ன பிறவியோ சாதி வெறி பிடிச்சு அலையுது. . ”

“சரி விடு மாமா. . நா உனக்காக ஒண்ணு வச்சுருக்கேன். . ”

“என்ன டீ பேச்சே சரியில்ல. . என்ன வச்சுருக்க. . வேணாம் கீழே எல்லாரும் தேடுவாக சொன்னா கேளு. . ”

என்றவனை அதற்குமேல் பேச விடாமல் தன் இதழை அவனிடத்தில் சேர்ந்திருந்தாள் அரசி. இருவரும் தங்களுக்கான உலகில் சஞ்சரிக்க துவங்கிய நேரம் பட்டுபாவாடை சரசரக்க கொலுசொலியோடு தத்தி வந்தாள் அமுதரசி. .

“ஏ பொழிலு என்ன பண்ற?”

“அடிக் கழுத எத்தனை தடவை சொல்றேன் பேரை சொல்லி கூப்புடாதனு. . ”

“என்ன எழிலு இவ என்னை எப்போ பாரு எதாவது சொல்லிட்டே இருக்கா. . ”

வாஞ்சையாய் மகளை தன் கையில் தூக்கிக் கொண்டவன் தட்டாமாலை சுற்றியவாறே தன் அரசியையும் கையணைப்பில் கொண்டு வந்தான்.

“இரண்டுஅரசியில ஒருத்தி எனக்கு வாரிசா வந்து வரம் கொடுத்தவ இன்னொருத்தி வாக்கப்பட்டு வந்து வாழ்க்கையே கொடுத்தவ. . நீங்க இல்லாம இந்த எழிலு வெறும் செல்லா காசுதேன். . ”

“மாமா உனக்காக நா எழுதினது ஒண்ணு சொல்லவா?”

“ம்ம். .  “

ஏழு பிறவிக்குமான வரத்தை இப்பிறவியிலேயே

உன் ஒருவனைப் பெற்றதால் அடைந்துவிட்டேன்.

இந்த அரசியின் அரசனான அமுதனே

உனையன்றி வேறெவரால் இக்கன்னிகையின்

பிறவிக்கு மோட்சமளிக்க இயலும். .

மரணித்த என் உணர்வுகளுக்கு உயிரளித்து

உன்னில் சரிபாதியென வரமளித்து

நண்பனாய் தோள் தாங்கியவன்

காதலனாய் கணவனாய்

காதல் கள்வனாய்  மொத்தமாய்

உன் காதல் சாம்ராஜியத்திற்கு

எனை கடத்திச் சென்றாயடா. .

மீண்டு வரும் எண்ணமில்லை

அப்படியே எனை புதைத்துக் கொள் உன் காதல் கடலில். . ”

       

                                     ******முற்றும்****

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode