“தேவையில்லாம என் மேல கை வைச்சுட்டீங்க வீரேந்திரன்..”,வாக்கியம் முடிவதற்குள் அங்கிருந்தவனின் கரம் பேசியவனின் முகத்தை பதம் பார்த்திருந்தது.
“அடிங்…யாரை பேர் சொல்லி கூப்டுற..அண்ணையா டா அவரு..”,என்றவனின் கை மீண்டும் அடிப்பதற்காக ஓங்கிய நேரம் அந்த பெயருக்கு சொந்தகாரனின் குரலில் அப்படியே நின்று விட்டிருந்தது.
“ராஜு..”
“மன்னிச்சுருங்க அண்ணையா..”,
“மிஸ்டர் வருண்..நீ பெரிய டாக்டரா இருக்கலாம்..பல பெரிய புள்ளிகள் உனக்கு பக்கபலமா இருந்துருக்கலாம்..ஆனால் இப்போ இங்க நான் நினைச்சால் மட்டும் தான் நீ வெளியே போக முடியும்.அதுவுமில்லாம சாகும் போது இத்தனை டென்ஷன் தேவையில்லாதது.
நீ பண்ணின தப்பு உனக்கே தெரியும் அதே தப்பை பண்றதுக்கு இனி எவனும் யோசிக்கணும்.நாளைக்கு விடியும் போது உன் பிணத்தைப் பாக்குற எல்லாருக்குமே தெரியும் அதை பண்ணிணது நான் தான்னு.
ஆனாலும் சாட்சியா யாரும் இருக்க மாட்டாங்க..உன்னை ஏவி விட்டவங்களுக்கு உன்னோட சாவு ஒரு பாடம்”,என்றவன் கட்டியிருந்த கறுப்பு வேட்டியின் ஒரு நுனியைப் பிடித்தவாறு எழுந்து நின்றான்.
“ராஜு!!”
“நான் பாத்துக்குறேன் அண்ணையா நீங்க கிளம்புங்க..”
கையிலிருந்த சுருட்டைப் பற்ற வைத்த வண்ணம் அவன் அங்கிருந்து நகர அடி வாங்கியிருந்தவனோ தன் உயிருக்காக மன்றாடிக் கொண்டிருந்தான்.
வெளியில் வந்து தன் காரில் அமர்ந்தவனை சுமந்து கொண்டு இரவின் நிசப்தத்தை கலைத்துப் பறந்தது அந்த எக்ஸ் யூ வி.
அவனருகில் அமர்ந்திருந்த ஐம்பத்தைந்து வயதுடைய கணபதி அவனை தயக்கமாய் பார்த்தார்.
“சொல்லுங்க கணக்கு..”
“ஒண்ணுமில்லை தம்பி..”
“ஊரே அண்ணையானு கூப்பிடுற என்னை தம்பினு கூப்பிட உங்களுக்கு உரிமையிருக்குனால்..எதை வேணும்னாலும் என்கிட்ட நீங்க சொல்லலாம்னு உங்களுக்கே தெரியும்..”
“புதுசா என்னப்பா..இந்த மைசூரு நம்ம கோட்டை..ஏழு தலைமுறைக்கு சொத்து இருக்கு..இந்த வேலையெல்லாம் விட்டுற கூடாதா..”
“இது ஒரு வழிப் பாதை கணக்கு..எனக்காக இதையெல்லாம் நிறுத்தணும்னு நான் நினைச்சாலும் என்னைச் சுத்தி இருக்குறவங்களுக்காக இதை நான் பண்ணி தான் ஆகணும்.இந்த பயம் நம்ம மேல இருக்குற வரை மட்டும் தான் இந்த இடம் நம்ம கோட்டை..இதெல்லாம் உங்களுக்கும் தெரியும்.”
“தெரியும் தான்..ஆனாலும் மனசு கேட்க மாட்டேங்குதே பா..கல்யாணம் குடும்பம்னு இல்லாம இப்படி மத்தவங்களுக்காக உன் வாழ்க்கையை அழிக்கணுமா..”
“அப்பா அம்மா தம்பிங்க தங்கச்சிங்க இது தான் கணக்கு என் வாழ்க்கை என் குடும்பம்.அதுவுமில்லாம கல்யாண வயசில் இருக்குறவங்களுக்கே..”,என்றவன் லேசாய் திரும்பி அவரைப் பார்த்துவிட்டு வெளியே பார்வையைத் திருப்பிக் கொண்டான்.
அதற்குள் அவனது கார் கோட்டைக்குள் நுழைந்துவிட இத்தனை நேரம் பேசிய பேச்சுகள் அடங்கி முகம் இறுக உள்ளே செல்பவனைப் பார்த்தவருக்கு பெருமூச்சொன்று எழுந்தது.
கோட்டை ராஜ காலத்து அரண்மனைப் போன்றதொரு கட்டிடமாய் கம்பீரமாய் இருந்தது.வெளி வாசலில் இருந்து அரைக் கிலோ மீட்டருக்கு தோட்டம் கண்கவர் மலர்களால் நிறைந்திருக்க அதனைக் கடந்து வீட்டின் நடுப் பகுதியில் அழகிய நீரூற்று வண்ண வண்ண மீன்களைச் சுமந்து கொண்டிருந்தது.
அதைத் தாண்டி கார் நிறுத்துமிடம் பரந்து விரிந்திருக்க வீட்டைச் சுற்றிப் பார்க்க எப்படியும் ஒரு நாள் தேவைப்படும் எனுமளவிற்கு பரந்து விரிந்து பிரம்மாண்டத்தை பறை சாற்றியது.
நடுநிசியின் அமைதியில் தனதறைக்குள் நுழைந்தவன் கட்டிலில் அப்படியே விழுந்தான்.காலையிலிருந்து பம்பரமாய் சுற்றி உழைத்த களைப்பில் அடுத்த நொடி உறங்கியும் போனான்.
வீரேந்திர சேதுபதி,சேதுபதி வம்சத்தின் மூத்த வாரிசு.ராஜராஜ சேதுபதி பர்வதவர்த்தினி தம்பதியரின் தலைமகன்.அவனைத் தொடர்ந்து காவ்யா, அடுத்தவன் ரவீந்திர சேதுபதி அவனுக்குப் பின் திவ்யா கடைக்குட்டி ராகவ் சேதுபதி என ஐந்து பிள்ளைகள்.
ராஜராஜ சேதுபதி மிகவும் கனிவானவர்.ஆனால் பல நேரங்களில் அதுவே மிகப்பெரும் பிரச்சனையாகி விட்டிருந்தது அந்த குடும்பத்திற்கு.
பரம்பரை பணக்காரர்கள் என்பதால் பணத்திற்கு குறைவில்லாமல் இருக்க,உதவி என்று யார் வந்தாலும் தயங்காமல் செய்து விடுவார் ராஜராஜன்.அவரின் குணத்தை தனது சுயநலத்திற்காக பன்படுத்தி அவரின் சொத்துக்களை ஒரு கூட்டம் ஆக்கிரமிக்கத் திட்டமிருக்க,சரியாய் அந்த நேரத்தில் தொழிலில் பொறுப்பேற்றவன் வீரேந்திர சேதுபதி.
வெளிநாட்டில் தனது எம் எஸ் பட்டத்தை முடித்து வந்தவன் இங்கிருந்த நிலை கண்டு தொழிலை தன் கையில் எடுத்துக் கொண்டான்.
ஆனால் அங்கிருந்த அரசியல் கூட்டத்திற்கும் அடியாட்களுக்கும் அவனது வெளிநாட்டு படிப்பு பயத்தைத் தரவில்லை.இதை உணர்ந்தவனோ மொத்தமாய் தன்னை மாற்றியிருந்தான்.
ஆள்பலம் பணபலம் அரசியல் பலமென ஒரு தனி ராஜ்ஜியத்தையே தன்னைச் சுற்றி உருவாக்கியிருந்தான்.உருவத்திலிருந்து அனைத்தையும் அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொண்டான்.
எப்போதுமே காவி அல்லது கருப்பு வேஷ்டி கதர் சட்டை கழுத்தில் ஒரு தங்கச் சங்கிலியும் ஸ்படிக மாலையும்,கையில் வெள்ளி காப்பு.பிரச்சனைகளை கையாளும் விதம் அவனை வெளிவட்டாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்பவனாய் தோற்வித்தது.
எதைப் பற்றிய கவலையும் இன்றி தொழிலையும் குடும்பத்தையும் சமன்படுத்துவதையே முழு மூச்சாய் கொண்டிருந்தான்.
அடுத்த ஒன்றரை வருடத்தில் அவன் எட்டிய உயரம் கற்பனைக்கு அப்பாற்பட்டது.அவனது சிறு பார்வையே எதிர் நிற்பவரை பத்தடி தள்ளி நிற்க வைத்திருந்தது.
இதில் அவன் குடும்பமும் அடக்கம்.பெற்றவர்களுக்கு அவனது ஆளுமை மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் பிள்ளை தங்கள் கையை விட்டு வெகுதூரம் சென்று விட்டதாய் தோன்றியது.
சிறியவர்களுக்கு அண்ணன் என்றாலே மரியாதையோடு கலந்த ஒருவித பயம்.சிறுவயதில் சிரித்து மகிழ்ந்து விளையாடியவன் தான் எனினும் படிப்புக்காக அனைவரும் வெளியூர் சென்று திரும்பியிருந்த நேரம் இருந்தவனைப் பார்த்தால் சகஜ நிலை வர மறுத்தது.
சாதாரணமாய் இருந்த கோட்டையும் இப்போதெல்லாம் பலத்த பாதுக்காப்புடனும் தமையனைச் சுற்றி எப்போதும் ஐந்தாறு அடியாட்களும் நின்ற வண்ணம் இருக்க இயல்பாய் வீரேந்திரன் தனித்து விடப்பட்டான்.
ஆனால் இது எதையும் கருத்தில் கொண்டதில்லை அவன்.ஒரு விதத்தில் அவனுக்கு இந்த உலகம் பிடித்திருந்தது.அவனுடன் அதிக நேரம் செலவிடுபவர்கள், அவனின் கணக்குப் பிள்ளை கணபதி.அலுவலகத்தில் அவனது பிஏ ஷ்யாம்.
அவர்கள் இருவரும் வீரேந்திரனுக்கு வலது கை போன்றவர்கள்.அத்தனை விசுவாசம் அவனின் மீது.கணபதி நல்லது கெட்டதை எடுத்துரைப்பார் எனில் ஷ்யாம்,முதலாளி சொன்னால் எதிர் பேச்சின்றி கிணத்தில் கூட குதித்து விடுவான்.
காலை நேர சூரிய வெளிச்சத்திலும் பறவவைகள் சத்தத்திலும் கண் விழித்தவன் தனது உடற்பயிற்சியை முடித்துவிட்டு குளித்துத் தயாராகி உணவு மேசையில் வந்தமர்ந்தான்.
தாயும் தந்தையும் அவனுக்காக காத்திருப்பதை உணர்ந்தவன் அமைதியாய் அவர்கள் எதிரில் அமர்ந்தான்.
“சாப்டீங்களா”
“ம்ம் ஆச்சு கண்ணா..நீயும் சாப்பிடு”,என்றபடி பர்வதவர்த்தினி அவனுக்கான உணவைப் பரிமாறத் தொடங்கினார்.
“இந்திரா..”
“சொலுங்கப்பா..”
“என்ன கண்ணா முடிவு பண்ணிருக்க?!”
“எதைப் பத்தி?!”
பெரியவர்கள் ஒருவரையொவர் பார்த்துக் கொள்ள அவர்களைப் புரியாமல் பார்த்தான் வீரேந்திரன்.
“நேத்து காலையிலே ஒரு பொண்ணு போட்டோ இருக்குனு சொல்லி உன் கையில் கொடுத்தோமே பா..விவரம் கூட சொன்னோமே..”
கணக்கு திருமணத்தைப் பற்றி பேசியதன் அர்த்தம் இப்போது புரிந்தது.
“ஓ…மறந்தே போயிட்டேன்..அந்த கவர் என் ரூமில் இருக்கும்னு நினைக்குறேன் பா..”
“இப்படி சொன்னா என்ன அர்த்தம் இந்தர்.நாங்க நல்லாயிருக்கும் போதே உன் கல்யாணத்தைப் பார்க்கணும்னு எங்களுக்கு ஆசை இருக்காதா..
உனக்கப்பறம் பிறந்தவங்களுக்கே கல்யாணம் முடிஞ்சாச்சு..”
“ம்மா..உங்க ஆசைக்காக எல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியுமா..என் நிலைமை உங்களுக்கே தெரியும்.எந்தப் பொண்ணுக்கும் இதெல்லாம் ஒத்து வராதும்மா..
அதுவுமில்லாம என் பொண்டாட்டியா ஒருத்தி வந்தா அவளுக்கு சந்தோஷத்தை விட ஆபத்து தான் அதிகமிருக்கும்.இந்த பேச்சை இதோட விடுங்களேன்.”,என்றவன் எழுந்து சென்றுவிட பர்வதவர்த்தினி கண்களில் கண்ணீர் கோர்த்திருந்தது.
ராஜராஜன் ஆதரவாய் மனைவியின் தோள் பற்றினார்.
“அவனைப் பத்தி தெரிஞ்சும் நீ ஏன் வருத்தப்படுற பர்வதம்.”
“அதுக்காக அப்படியே விட்டுட முடியுமாங்க.இவனுக்கு கல்யாணம் பண்ணாம காவ்யாக்கு பண்ணும் போது அது தப்பாகத் தெரியல.
ஆனால் ரவீந்திரன் கல்யாணத்துல வந்தவங்க எல்லாரும் இவனைப் பத்தி தான் கேட்டாங்க.இந்த வருசம் திவ்யாவும் படிப்பை முடிச்சுருவா அடுத்து அவளுக்கும் கல்யாணம் குழந்தைனு ஆகிடும்.
நமக்கும் வயசாகுது.நம்ம காலத்துக்கு அப்பறம் அவனுக்கு ஒரு துணை கண்டிப்பா வேணும்ங்க.”
“நீ சொல்றது எல்லாமே சரி தான் மா..ஆனா அவனுக்கே விருப்பம் இல்லாத அப்போ நாம என்ன பண்ண முடியும்.விடு காலம் தான் எல்லாத்துக்கும் பதில் சொல்லணும்.”,என்றவருக்குமே மனது கவலையாய் தான் இருந்தது.
அதற்குள் ரவீந்திரனும் அவனது மனைவியுமாய் உணவு மேசைக்கு வர பேச்சை நிறுத்திவிட்டு அவர்களைக் கவனிக்கத் தொடங்கினார் பர்வதம்.
ரவீந்திரனும் அவனது மனைவி உமையாளும் ஏற்றுமதி தொழிலைக் கவனித்துக் கொண்டனர்.
உமையாளின் தந்தை பெங்களூரில் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவர்.எம்பிஏ முடித்த மகளை தனது தொழில் வாரிசாக அறிமுகப்படுத்தியிருந்தார்.தொழில் சம்மந்தப்பட்ட ஒரு மீட்டிங்கில் தான் இருவரும் முதன் முதலில் சந்தித்துக் கொண்டனர்.
கண்டவுடன் காதல் அதன்பின் பெரியவர்களிடம் கூறி அடுத்த ஆறே மாதத்தில் திருமணம் முடிந்திருந்தது.
என்ன தான் தன் கணவன் தொழிலைப் பார்த்துக் கொண்டாலும் ஊருக்குள் வீரேந்திரனுக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் உமையாளுக்கு சற்று அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
ரவீந்திரன் தொழிலைப் பார்த்துக் கொண்டாலும் முக்கிய முடிவுகளுக்கு வீரேந்தினின் கையெழுத்தும் அனுமதியும் மிகவும் முக்கியம்.தன் கணவனிடமுமே சில நேரங்களில் புலம்பியிருக்கிறாள்.
“ஏன் பேபி நீங்களும் சேதுபதி வீட்டு வாரிசுதான அப்படியிருக்க உங்க அண்ணணுக்கு மட்டும் என்ன தனி மரியாதை..”
“பேபி..அதெல்லாமே அவரு சம்பாதிச்சது.அவ்வளவு ஏன் இந்த சேதுபதி குடும்பமே காணாம போற நிலைமை வந்தப்போ அதை தூக்கி நிறுத்தினது அண்ணா தான்.இதெல்லாம் தெரிஞ்சும் இப்படி கேட்குறியே..”,
“இருந்தாலும்..”
“ஷ்..நமக்கு கிடைக்குற நேரமே கொஞ்சம் அதிலும் தேவையில்லாம பேசி நேரத்தை வீணடிக்காத யாளு பேபி..”,என்றவாறு பேச்சை நிறுத்திவிடுவான்.
உமையாள் பெற்றோருக்கு ஒரே மகள்.சிறு வயதிலிருந்தே முக்கியத்துவத்தோடே வளர்ந்து பழகியவளுக்கு இங்கு இந்தப் பெரிய குடும்பத்தில் சமாளிக்க முடியவில்லை.
நல்ல அன்பான கணவன்,வசதியான குடும்பம் இதெல்லாம் கடந்து அவர்களுக்கான தனிமையையும் முக்கியத்துவத்தையும் அதிகம் எதிர்பார்த்தாள்.
கணவனும் தன் வார்த்தைகளை பெரிதாய் எடுத்துக் கொள்ளாததால் ஏற்பட்ட கோவம் அனைத்தும் இயல்பாய் அந்தக் குடும்பத்தின் மேலேயே திரும்பியது.
விளைவு யாரிடமும் அவ்வளவாய் பேச மாட்டாள்.அதில் மாமியாரும் அடக்கம்.சபை நாகரீகம் கருதி புருஷனோடு அமைதியாய் நிற்பாள்.கேட்டால் கேட்டதற்கு பதில் அவ்வளவே.இல்லையென்றால் ரவீந்திரன் ஏதேனும் கூறிவிடுவான் என்பதால் தான் அதையும் செய்து வந்தாள்.
“ம்மா..ப்பா..இன்னைக்கு வேலை முடிச்சுட்டு நாங்க பெங்களூர் போயிட்டு வரோம்.”
“நல்லது ரவி.நாளானைக்கு காவ்யாவும் மாப்பிள்ளையும் வராங்க.நீங்க எப்போ வரீங்க?”
“நாங்க இரண்டு நாள் அங்க தங்கிட்டு வரலாம்னு நினைச்சோம் மா..”
ஓ சரி கண்ணா”
“இல்ல மா ஒண்ணும் பிரச்சனை இல்ல நான் மட்டுமாவது நாளைக்கு வரப் பாக்குறேன்.”
“அதெல்லாம் வேணாம் பா..நீங்க உங்க ப்ளான் படி தங்கிட்டு வாங்க..”
“சரி பா..”,என்றவன் எழுந்து கொள்ள இப்போ இவங்க பொண்ணு வர்றதைப் பத்தி கண்டிப்பா சொல்லியே ஆகணுமா இந்த மனுசன் நாளைக்கே கிளம்பலாம்னு நச்சரிப்பார்.நிம்மதியா அம்மா வீட்டுக்கு கூட போக முடியாது என்று மனதிற்குள் புலம்பியவறே கணவனோடு அலுவலகத்திற்கு கிளம்பினாள் உமையாள்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!