மலர்-4

by ஸ்ரீ
2 comments 586 views
A+A-
Reset

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின்

மு.வ விளக்க உரை: இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?

அன்றைய தினம் மதியத்திற்கு மேல் தான் பயிற்சி என்பதால் கார்த்திகேயனோடு ஊர் சுற்ற கிளம்பியிருந்தாள் மங்கை. காரில் அமர்ந்ததில் இருந்து அவன் எதோ கேட்க வருவதும் தயங்குவதுமாய் இருப்பதாய் தோன்ற மங்கையே பேச்சை எடுத்தாள்.

“எதோ கேட்க நினைக்குற கேளு மாமா..”

“அது.. அம்மாக்கு இருந்த நினைப்பு உனக்கும் இருந்துதா மங்கை?!”

“??!”

“இல்லை எதோ கஷ்டமா இருக்கு அம்மா அப்படி கேட்பாங்கனு நினைக்கவே இல்லை. நீ எப்பவும் எனக்கும் பாப்பா தான் டா.. உண்மையைச் சொல்லு!”

“என்ன மாமா நீ அப்படி ஒரு நினைப்பு இருந்தா மனசுக்குள்ளேயே எல்லாம் வைச்சுக்குற ஆளா நானு? அதுவுமில்லாம சின்ன வயசிலேயே நீயும் ஸ்வப்னாக்காவும் தான்னு மனசுல பதிஞ்சு போச்சு.

தேவையில்லாம யோசிக்காம வீட்டில் விஷயத்தைச் சொல்லிட்டோம்னு சந்தோஷமா இருப்பியா அதை விட்டுட்டு..”

“அம்மாவுக்கு அப்படி ஒரு நினைப்பு இருந்ததே தெரியாம இருந்துருக்கேனே அதான் ஒரு பதட்டம். உன்னால தான் எல்லாம் தேங்க் யூ பாப்பா..”

“பாரு டா.. இப்போவாவது அவங்களை  எனக்கு இன்ட்ரோ கொடுக்கலாம்ல.. சின்ன வயசில் பார்த்தது.”

“அவளும் மாலுக்கு வரேன்னு சொல்லிருக்கா டி.”,என்று கண் சிமிட்டியவனைப் பார்த்து வாயை பிளந்தாள்.

“டாக்டரு சரியான கேடி தான். சரி சொல்லு உனக்கு மாதிரியே அந்த கருவாயனுங்களுக்கும் எதாவது காதல் கதை இருக்கா?”

“நல்லா கேட்ட போ. நம்ம குடும்பத்தில் காதலாவது கத்திரிக்காயாவது. எனக்கு சொந்த மாமா மகளுக்கே எப்படி உதறுதுனு பார்த்தயில்ல. “

“அப்படியா சொல்ற?”

“உங்கப்பாவை நீ என்னனு நினைச்ச உன்கிட்ட செல்லம் கொஞ்சிகிட்டு அலையுற மாதிரியே தான் ஊருக்குள்ளேயும்னு நினைக்குறியா?”

“ஏன் மாமா அப்படி சொல்ற?”

“நிஜமா தான் சொல்றேன். நாம எல்லாம் என்ன படிச்சாலும் என்ன பெரிய நிலைமைக்கு வந்தாலும் சில விஷயங்களில் எல்லாம் எந்த முற்போக்கு சிந்தனையும் கிடையாது. அதெல்லாம் உன் அண்ணனுங்களுக்கு நல்லாவே தெரியும். அதனால தான் அடக்க ஒடுக்கமா இருக்கானுங்க.”

“ச்ச எங்க அப்பாவை என்ன காதல் படத்துல வர்ற அப்பா ரேஞ்ச்க்கு சொல்ற? அப்படியெல்லாம் கிடையாது மாமா.”

“பாப்பா உனக்கு அவர் காட்டுற முகம் வேற குடும்பம் கௌரவம்னு வரும் போது அவர் காட்டுற முகமே வேற. உனக்கு ஒண்ணு.. சரி விடு இப்போ எதுக்கு இந்த பேச்சு. உங்க அப்பா அபியும் நானும் அப்பாவாவே இருந்துட்டு போட்டும்.”, என்றவன் எதையோ அப்படியே விட்டுவிட்டு சிரித்து பேச்சை மாற்றியிருந்தான்.

அந்த பிரம்மாண்டமான மால்-ஐ அடைந்து உணவு உண்ணும் தளத்திற்கு அவர்கள் செல்ல அங்கு ஏற்கனவே அவர்களுக்காக காத்திருந்தாள் ஸ்வப்னா.

இருவருக்கும் பொதுவாய் கையசைத்தவளைப் பார்த்து புன்னகைத்தவளாய் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டள் மங்கை.

“எப்படியிருக்கீங்க சின்ன வயசுல பார்த்தது. இப்போ ஆள் அடையாளமே தெரியலை.”

“நான் நல்லாயிருக்கேன் மங்கை. நீ எப்படியிருக்க ஊரில் எல்லாரும் நல்லாயிருக்காங்களா?”

“எல்லாரும் நலம். ஆமா உங்களுக்கு வேற நல்ல டாக்டரே கிடைக்கலையா?”, என்றவளின் தலையில் மெனு கார்ட்டை வைத்துத் தட்டினான் கார்த்திகேயன்.

“ரொம்ப தேங்க்ஸ் மங்கை. அத்தான் விஷயத்தை சொன்னப்போ என்னால நம்பவே முடியலை. எப்படி டா வீட்டில் விஷயத்தைச் சொல்றதுனு அவ்வளவு பயம். இப்போ அதெல்லாம் ஒண்ணுமேயில்லனு ஆக்கிட்ட”

“என்ன கொடுமை இது சொந்த மாமா பையன், அவங்களைப் பிடிச்சுருக்குனு சொல்ல இத்தனை பயமா?”

“சென்னை வந்தாலும் சில குணம் வழக்கம் எல்லாம் மாறாம அப்படியே தான இருக்கு. முடிஞ்சு போன சண்டை எல்லாம் தூக்கிட்டு வந்து முடியாதுனு சொல்லுவாங்களோனு நினைச்சேன்.

மாமா சரினு சொன்னதுலேயே பாதி நிம்மதி வந்துடுச்சு. அதெல்லாம் உனக்குப் புரியாது.”, என்றவளைப் பார்த்து தோளை குலுக்கியவளாய் கதையளந்தபடி உணவு உண்ண ஆரம்பித்திருந்தாள்.

கார்த்திகேயனையும் ஸ்வப்னாவையும் சேர்த்து பார்த்ததில் மங்கைக்கு அப்படியாய் ஒரு மகிழ்ச்சி. அங்கிருந்தே திருமாளவனுக்கும் நெடுமாறனுக்கும் போனில் அழைத்து விஷயத்தைக் கூறி அனைவருமாய் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தனர்.

மதியத்திற்கு மேல் பயிற்சி மறுநாள் மேட்ச் என பரபரப்பாய் சென்றது மங்கைக்கு. மாநில அளவில் சிறந்த ப்ளேயராய் தேர்வாகியதோடு அவர்களது அணியும் வெற்றி பெற்றிருந்தது.

அடுத்தது அவளது கனவான ரஞ்சி ட்ராபி தான். இந் நிலையில் அப்போது தான் நேரம் கிடைக்க வசந்திடமிருந்து எந்த செய்தியும் வராததை எண்ணியபடியே அவனுக்கு அழைத்தாள்.

முழு அழைப்பும் சென்று நின்றது. மீண்டுமாய் அழைக்க  மறுபுறம் வேறு ஒருவரின் குரல் கேட்டது.

“ஹலோ வசந்த் இல்லையா?”

“மங்கை நான் அருண் பேசுறேன்.”

“டேய் அவனை எங்க டா?”

“வசந்த்…”

“என்ன டா சொல்லு..”

“டீம் தோத்துடுச்சு மங்கை இந்த அறிவு கெட்டவன் கையை அறுத்துகிட்டான்.”

“டேய் என்ன சொல்ற நீ?!!!”

“யாருக்குமே என்ன பண்றதுனு தெரியலை நல்ல வேளையா காப்பாத்திட்டோம். உனக்கு மேட்ச் இருந்ததால உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டான்.”

“இப்போ எங்கே டா இருக்கீங்க?”

“ஹாஸ்பிட்டல்ல தான். ஒரு மண்ணும் புரியலை, இவனுங்க பேசுறது. நீ வர முடியுமா மங்கை?”

“நான் வீட்டில் பேசிட்டு சொல்றேன் டா வை.”, என்றவள் தனது தந்தைக்கு அழைத்து விஷயத்தைக் கூற அவர் அங்கு யாரையாவது அனுப்புவதாய் கூறினார்.

“ப்பா ப்ளீஸ் பா. நான் போகணும். அந்த லூசு பய வேற எதுவும் பண்ணிடுவானோனு பயமா இருக்கு பா.”, என்றவளுக்கு குரல் கம்மியது.

“கண்ணு இப்போ என்ன நீ போகணும் அவ்வளவு தானே. அப்பா அடுத்த ப்ளைட்டிலேயே டிக்கெட் போடுதேன். அழாத பாப்பா.. தனியா எப்படியா போவ நீயி?!”

“அதெல்லாம் நான் பத்திரமா போயிட்டு வந்துருவேன் பா..”

“சரி இரு நான் டிக்கெட் பார்த்துட்டு கூப்புடுறேன்.”, என்று அழைப்பைத் துண்டித்ததும் தன் அத்தையைப் பார்க்க கீழேச் சென்றாள்.

கலைச்செல்வியிடம் விஷயத்தைக் கூற கணவரும் மகனும் சர்ஜரி என வெளியே சென்றிருக்க மங்கையைத் தனியாக அனுப்ப பயந்து விழித்தார்.

“அத்தே அதெல்லாம் நான் பார்த்து போயிப்பேன். எனக்கு தான் ஹிந்தி தெரியுமே சமாளிச்சுருவேன் அத்தே. நீ பயந்து மாமாவையும் பதட்டப்படுத்தாத. நான் கிளம்புறேன் என்ன!”

“சரி பாப்பா.. அப்பப்போ எனக்கு போன் பண்ணு என்ன, திக்கு திக்குனு இருக்கும் டி. பத்திரம்.”,என்று பல தடவை அறிவுரை கூறி மனமின்றி அவளை ஏர்போர்ட்டிற்கு அனுப்பி வைத்தார்.

அதற்குள் திருமா அவளுக்கு அழைத்து விவரங்களைக் கேட்டுவிட்டு அங்கு தொழில் முறையில் தெரிந்தவர் ஒருவர் ஏர்போர்ட்டில் அவளை அழைத்துச் செல்வார் என்றும் கூறினான்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் விமானத்தில் ஏறி அவளுக்கான இருக்கையில் அமர்ந்தவளுக்கு அத்தனை நேர தைரியமும் தகர்ந்து தொண்டை அடைத்தது.

வசந்தின் குடும்ப சூழ்நிலை அவள் அறிந்தது தான். இருந்தாலும் அவன் தாய் தந்தையைப் பற்றிக் கூட சிந்திக்காமல் இப்படி ஒரு முடிவை எடுக்கத் துணிந்தவனை நினைத்து ஒரு புறம் கோபமும் வந்தது.

கோபம் ஆற்றாமை அனைத்துமாய் சேர்த்து அவளை ஒருவாறு படுத்த கண்களை இறுக மூடி தன்னை கட்டுக்குள் கொண்டு வர பாடுபட்டாள்.

தன் போக்கில் கைகளை இறுகப் பிசைந்தபடி அமர்ந்தவளின் கவனத்தை கலைத்தது அருகில் கேட்ட குரல்,

“எக்ஸ்க்யூஸ் மி? ஆர் யூ ஓகே?”, என்றதில் சட்டென கண்களைத் திறந்தவளின் அருகில் பால் வண்ணத்தில் அடர்ந்த தாடியோடு நல்ல உயரமும் கட்டுமஸ்தான தேகமுமாய் அமர்ந்திருந்தான் ஒரு இளைஞன்.

“ஹான்??”

“எந்து பிரஷ்ணம். ஏதோராளு விளிக்கட்டே?”

“??!”

“சாரி சாரி யாரையும் கூப்பிடணுமா எதுவும் பிரச்சனையா?”

“இல்லை அதெல்லாம் ஒண்ணும் இல்லை. தேங்க் யூ..”, என்றவள் நேராய் அமர்ந்து தன்னைச் சரி செய்து கொண்டாள்.

அவன் தன்னிடமிருந்த தண்ணீர் பாட்டிலை அவளிடம் நீட்ட சற்றே தயங்கியவள் பின் வாங்கி சிறிது அருந்தினாள்.

“தேங்க் யூ…”

“நோ ப்ராப்ளம். எல்லாம் ஓகே அல்லே?”

“ம்ம்..”

“பை த வே ஐ அம் உன்னி முகுந்தன்.”

“ஹாய் நான் மாமலர் மங்கை.”

“மா.. மலர் நைஸ் நேம்.”, என்றதும் புன்னகைத்தவளுக்கு அவனின் முகம் சற்று பரிட்சையமாய் பட்டது.

“எந்து சம்பவிச்சு?! வல்லி..ச்ச ரொம்ப டென்ஷனா இருந்தீங்களே?”

“..”

“ஜஸ்ட் அ ட்ரவல் ப்ரெண்ட்டா நினைச்சு பரையலாம் அங்கில்.. இல்லைனாலும்..”

“அது என் ப்ரெண்ட் ஒருத்தன்…”, என்றவள் விஷயத்தைக் கூற அவனுக்கு சற்று ஆச்சரியமாய் இருந்தது.

“ஆயிளுக்காக நீங்க போறீங்களா?”

“என்னோட நல்ல ப்ரெண்ட் அவன். மனசு கேட்கலை அதான். அதுவுமில்லாம அங்கே பணத்துக்கு கஷ்டப்படுவான்.”

“க்ரேட் ஈ மாதிரி ப்ரெண்ட்ஷிப்பெல்லாம் ரொம்ப ரேர்.”

“உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே.. மதுரை வந்துருக்கீங்களா?”

“மதுரை?? நோ நான் வந்தா சென்னை, கோவை தான். தமிழ்நாட்டில் வேற ஒரு இடமும் அறியில்லா.”

“ஆனால் எங்கேயோ நிச்சயமா பார்த்த மாதிரி தான் தோணுது.”, என்றதில் லேசாய் சிரித்தவன்,

“சினிமா காணுண்ண ஷீலமுண்டோ?”

“சினிமா??? ம்ம் பார்ப்பேனே. ஓ ஹே நீங்க ஹீரோ உன்னி முகுந்தனா?!”, என்றதில் அவனது புன்னகை இன்னுமாய் விரிந்தது.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

2 comments

srichitra July 12, 2026 - 3:39 pm

Very nice

Kavi Natarajan July 17, 2026 - 3:44 am

Very nice

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode