101
“மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல்
மு.வ விளக்க உரை: இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.”
ஆண்கள் அனைவரும் கடைக்கு கிளம்பிய பின் தாய் மற்றும் சித்தியோடு சமையலறையில் அமர்ந்து கதையளந்து கொண்டிருந்தாள் மங்கை.
“ம்மா இந்தக் கிழவிக்கு என்னை கண்டாலே ஆகலையே ஏன்?”
“மங்கை..”
“சரி சரி சொல்லு .”
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல கண்ணு. உன் நல்லதுக்கு தான் சொல்றாங்க “
“உன்னைப் பபத்தி தெரிஞ்சுமே கேட்டேன் பாத்தியா! சித்தி நீங்க சொல்லுங்க..”
“பிடிக்காதுனு எல்லாம் கிடையாது உங்க அப்பா நீ பிறந்ததில் இருந்தே ரொம்ப செல்லம் கொடுக்குறாருல அதேன்..
எத்தனை தடவை சொல்லியும் கேட்கவே இல்லை பத்தாததுக்கு உன் சித்தப்பா அண்ணனுங்கனு எல்லாம் நீ என்ன சொன்னாலும் சரி சரினு சொல்லிடுதாங்களே அதனால தான்.”, எனும்போதே மங்கையின் கைப்பேசி அழைக்க எடுத்துப் பார்த்தவள் கலைச்செல்வியின் பெயரைப் பார்த்து துள்ளலாய் அழைப்பை ஏற்றாள்.
“அத்தே எப்படியிருக்க?”
“ம்ம் நானா போன் போட்டா தான் அம்புட்டு பாசமும்..”
“கோவிச்சுக்காத அத்தே உன்னோட மிஸ்டர் பெர்ஃபெக்ட்க்கு பயந்து தான் போன் போடுறதே கிடையாது. அப்பறம் அட்வைஸ் பண்றேன்னு ஆரம்பிச்சுருவாருல.”
“கழுத மாமாவையே கலாய்க்குறியா?”
“எனக்கு இருக்குற ஒரே மாமாவை நான் கலாய்க்காம?”
“அது சரி.. சென்னைக்கு எல்லாம் பேக் பண்ணிட்டியா?”
“ம்ம் பண்ணியாச்சு நாளான்னைக்கு பஸ் ஏற வேண்டியது தான் பாக்கி..”
“இந்த தடவை கார்த்தியும் இருக்கான் உன்னை வெளியிலே கூட்டிட்டு போகச் சொல்லிருக்கேன். இத்தனை வருசமும் படிப்பு வேலைனு ஊர் ஊரா சுத்தினவன் இப்போ தான் வீட்டில் இருக்கான்.”
“அட அட அப்படியே புடிச்சு ஒரு கல்யாணத்தை பண்ணி வைச்சுரு அத்தை. அப்பறம் வெள்ளகாரி எவளையாவது கூட்டிட்டு வந்துற போறான்.”
“என்ன டி என் புள்ளையை அவன் இவன்ங்கிற?”
“இங்கேரு டா இன்னைக்கு தான் அவன் டாக்டரு பிறந்ததில் இருந்து எனக்கு கார்த்தி மாமா தான். ரொம்ப பண்ணாத அத்தே..”
“சரி சரி அம்மா சித்தியெல்லாம் எங்கே?”
“தோ எல்லாரும் இங்கே தான் பேசு”, என்றவள் அழைப்பை ஸ்ப்பீக்கரில் போட்டுவிட்டு அமர்ந்து கேரட்டைக் கொரித்துக் கொண்டிருந்தாள்.
மதியத்துக்கு மேல் தனது இருசக்கர வாகனத்தை எடுத்தவள் ஆண்கள் அனைருக்குமாய் உணவை கொண்டுச் சென்றாள். நேராய் ஐந்தாவது மாடியில் இருக்கும் அலுவலக அறைக்குள் நுழைந்தவள் அண்ணனிற்கு அழைத்தாள்.
“வந்துட்டியா டி?”
“ம்ம் ரூமில் தான் இருக்கேன் எல்லாரும் வாங்க..”
“வரேன் மங்கை..”, என்றவன் மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு மாடிக்குச் சென்றான்.
“ஏலே மங்கை நம்ம குடும்பத்திலேயே நீ தான் நிறம். இப்படி வேகாத வெயில்ல வந்து கருத்துப் போயிட போறலே.”
“ம்ம் இவ நாள் மொத்தமும் அந்த க்ரவுண்ட்ல தான் கிடக்கா அப்போ எல்லா கருக்காதவ இப்போ கருத்துருவாளாக்கும்.”, என்று மாறன் திருமாவின் காதை கடிக்க அவனை மிரட்டி கண்ணை உருட்டினாள் மங்கை.
அங்கிருந்து கிளம்பியவள் பாத்திரங்களை வீட்டில் கொடுத்துவிட்டு நேராக மைதானத்திற்குச் சென்று விடுவாள். மூன்றில் இருந்து ஏழு மணி வரை மங்கை எங்கே என்று கேட்டால் அந்தத் தெருவின் குழந்தை கூட அழைத்துச் சென்றுவிடும்.
தான் விளையாடுவது பயிற்சிப் பெறுவது என்பதைக் கடந்து சிறியவர்களுக்கும் சொல்லிக் கொடுப்பாள். இதுதான் இப்போதைக்கு அவளின் ஒரு நாளின் செயல்கள்.
“மங்கை..”
“வாலேய் வசந்த் ப்ராக்டிஸ் முடிஞ்சுதா?”
“ம்ம் நாளைக்கு மும்பை கிளம்புறேன்ட்டி..”
“நல்லா பண்ணு டா கண்டிப்பா இந்த தடவை டீமில் செலெக்ட் ஆகிடுவ.,”
“எனக்கெல்லாம் நம்பிக்கை இல்லை.. பார்ப்போம்.”
“ஏன் டா இப்படி பேசுற..கண்டிப்பா செலெக்ட் ஆவ முதல் உன் மேல நீ நம்பிக்கை வை”
“எல்லா தும்பிக்கையும் வைக்குறோம்.. சரி வர்றியா பரோட்டா சாப்பிட போலாம்..”
“என் வாயை அடைக்கத் தெரிஞ்சவன் டா நீ.. வா போலாம்..”, என்றவள் அவனோடு கிளம்பியிருந்தாள்.
பதினோறாம் வகுப்பில் இருந்து வசந்தும் மங்கையும் நண்பர்கள். இருவருக்குமான ஒரு பொதுவான விஷயம் கிரிக்கெட். அதைத் தவிர பணம் வசதி குடும்பப் பின்னணி என அனைத்துமே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் தான்.
வசந்தின் தாயும் தந்தையும் கூலித் தொழில் செய்து குடும்பத்தை கவனிக்க வசந்திற்கு கல்லூரி படிப்பிற்கே முத்துப் பாண்டியன் தான் உதவினார்.
அவனும் எப்படியாவது இந்திய அணியில் சேர்ந்து விடுவதற்கான கனவில் இருக்க ரஞ்சி டிராபி இறுதிப் போட்டிக்காக தமிழ்நாடு அணியில் மும்பை செல்லவிருக்கிறான்.
இருவருமாய் பரோட்டா சாப்பிட்டு விட்டு வசந்த் மங்கையை அவளது வீட்டில் இறக்கிவிட்டான்.
“நாளைக்கு தயாரா இரு நானே ரயில்வே ஸ்டேஷன்ல விடுறேன்.”
“அதெல்லாம் வேண்டாம் மங்கை.. பசங்க வருவானுங்க..”
“ஓ அப்போ சரி நான் நேரா ஸ்டேஷனுக்கே வந்துறேன்.”, எனும்போதே இவர்களது சத்தத்தில் குணவதி வெளியே வந்தார்.
“வசந்து நாளைக்கு கிளம்பனும்ல கொஞ்சம் இரு வாரேன்.”, என்றவர் உள்ளே செல்ல பூங்கோதையைத் தேடி உள்ளே வந்தான்.
“அப்பத்தா..”
“வாலே வசந்து சாப்பிடு உட்காரு..”
“வேணாம் அப்பத்தா நாங்க சாப்ட்டோம். நாளைக்கு ஊருக்கு போறேன் அதான் சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்.”
“நல்ல படியா போயிட்டு வாலே..”, என்றவர் இடுப்பில் இருந்த சுருக்குப் பையிலிருந்து விபூதியை அவனுக்கு பூசிவிட்டு இரு ஐநூறு ரூபாய் நோட்டை கைகளில் திணித்தார்.
“அப்பத்தா!!!இதெல்லாம் வேணாம்..”
“என்ன வேணாம். நாலு இடத்துக்கு போற புள்ள நல்லா சாப்பிட்டு விளையாடி வா..”
“ஃப்ளவர் எனக்கு?”
“ம்ம் குமட்டுலேயே நாலு குத்து தாரேன் வா..”, எனும்போதே குணவதி கையில் சிறு பையோடு வந்தார்.
“இந்தா வசந்து தொக்கு, பொடி எல்லாம் வைச்சுருக்கேன்.. நல்லா சாப்பிடணும் என்ன, விளையாட்டுல முடிவு என்னவா இருந்தாலும் கவலை படக் கூடாது சரியா? மங்கைட்ட உன்னைப் பத்தி கேட்டுகிடுவோம்
எதுவானாலும் அவளுக்கு ஒரு போன் போடு மாமா உனக்கு வேண்டியதை செஞ்சு கொடுத்துப்புடுவாக என்ன?”
“சரி அத்தை வரட்டுமா..”, என்றவனின் கரகரத்த குரலை உணர்ந்தவளாய் மங்கை அவனை வாசலுக்கு தள்ளி வந்தாள்.
“ஏலேய்.. என்ன?!”
“இவங்களுக்காகவாவது வாழ்க்கையில ஜெயிச்சுரணும்ட்டி..”
“…”
“நன்றிக்கடனோட வாழறது ரொம்ப கொடுமையா இருக்கு மங்கை..”
“செருப்பு பிஞ்சு போவும் என்ன பேச்சு பேசுத.. நீ என் ப்ரெண்டுலே உனக்கு பண்ணாம.. நாளைக்கு உன் பிள்ளைக்கு அத்தைனு நான் முறை செய்யணுமா வேணாமா? பேச வந்துட்டான்.”
“…”
“நல்லா ரெஸ்ட் எடு எதுவானாலும் போன் போடு என்ன..”
“சரி மங்கை வரட்டுமா..”
“ம்ம் சரி டா.. டா டா..”,என்றவள் அவன் தெருமுனைக்குச் செல்லும் வரை நின்று கையசைத்துவிட்டு வந்தாள்.
“அப்பத்தா நானும் ஊருக்கு போறேன்ல காசு குடு..”
“எம்மவ வீட்டுக்கு தான போக போற.. ராச உபசாரம் தான் கிடைக்க போகுது அப்பறம் எதுக்குட்டி உனக்கு காசு..”
“அதான எனக்குனால் அஞ்சு பைசா நகர்த்த மாட்டியே.. நான் அப்புச்சிகிட்ட வாங்கிப்பேனே..”, என்றவள் பழிப்புகாட்டிச் சென்றாள்.
மறுநாள் தனக்கு வேண்டியவற்றை ஒரு முறை சரிபார்த்து வைத்து கொண்டு இருக்க குணவதியும் விஜயலட்சுமியும் பெரிய பையோடு அவளறைக்குள் வந்தனர்.
“அதானே பார்த்தேன். இன்னும் நாத்தனாருக்கு எதுவும் கட்டலையேனு நினைச்சேன்..”
“அப்பத்தா சொல்ற மாதிரி வாய் தான்டி உனக்கு. அங்கே போயும் அத்தை மாமாகிட்ட இப்படி வாயாடிகிட்டு இருக்காத பாப்பா..”
“அங்கே ஒழுங்கா இருப்பேன் சித்தி நோ டென்ஷன்.”
“இவ சொல்றானு நீயும் நம்புறியே விஜி..”, என்ற அன்னையைப் பார்த்து கண்ணடித்தவளாய் அவர் மடியில் தலை சாய்த்துக் கொண்டாள்.
“ஆனாலும் நீ சித்தியெல்லாம் எப்படி இவ்வளவு ஒரு நல்ல அண்ணியா இருக்கீங்க.. இந்த காலத்துல இப்படியெல்லாம் இருப்பாங்களா என்ன?”
“ஏன் இல்லாம.. உங்க அப்பாவும் சித்தப்பாவும் எங்களை நல்லா பார்த்துக்கிடுறங்க. உன் அத்தை செல்வியுமே எங்களை அக்கா மாதிரி தான் பார்க்குறா. அப்பறம் நாங்க இப்படி இல்லாம இருப்போமா சொல்லு?”
“ம்ம் அதென்னவோ சரி தான். மாமா கூட இங்கே அப்பா சித்தப்பாவோட எல்லாம் பழகுறது அண்ணன் தம்பி மாதிரி தான் இருக்கும்.”
“ஆமா அண்ணனை மாதிரி ஒரு மாப்பிள்ளையெல்லாம் பாக்குறது ரொம்ப அபூர்வம். நம்ம அமுதினி மாப்பிள்ளையும் அந்த ரகம் தான. நல்ல குணம்.”
“ஆமாக்கா நம்ம மங்கைக்கும் அதே மாதிரி ஒரு இடம் அமைஞ்சுட்டா போதும்.”
“அதானே அப்படியே என்னை கோர்த்து விடுவீங்களே இரண்டு பேரும். இப்போதைக்கு எல்லாம் நோ கல்யாணம். டீமில் சேரணும் நிறைய மேட்ச் விளையாடணும். எவ்வளவோ இருக்கு.”
“உன்னோட ஆசையை புரிஞ்சுகிட்டு வர்ற மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் கட்டிகிட்டு அப்பறம் விளையாடேன் பாப்பா..”
“அப்பறம் அப்பத்தா சொல்றது தான் நிஜமாகும்..”
“என்னது?”
“என் மாமியார் என் குமட்டுலேயே குத்துவா. போங்க சித்தி. குறைஞ்சது இன்னும் அஞ்சு வருஷம். அப்பறம் தான் கல்யாணம். அதுகுள்ளே இரண்டு அண்ணனுக்கும் கல்யாணம் பண்ணி அண்ணிகளோட கொஞ்ச நாள் வம்பு வளர்த்துட்டு அப்பறமா நான் ஜாலியா கல்யாணம் பண்ணிக்குறேன்.”
“ம்ம் உனக்குனு இருக்குறவன் இனிமேலா பொறக்க போறான். அந்த சாமி போட்ட கணக்கை நாம மாத்த போறதில்ல.. சரி அப்பா சித்தப்பா வர்ற நேரமாச்சு நாங்க கீழே போறோம். நீ நேரமே படுத்துக்கோ கண்ணு.”, என்றபடி பெண்கள் இருவருமாய் கீழே சென்றனர்.
மாலை வசந்தை வழியனுப்புவதற்காக இரயில் நிலையம் வந்திருந்தாள் மங்கை. ஏனோ அவனது முகமே சரியில்லாததைப் போன்று தோன்றியது.
“ஏன் டா முகமே சரியில்லை எதுவும் பிரச்சனையா?”
“இல்ல மங்கை.. என்னவோ மனசே ஒரு மாதிரி இருக்கு. இந்த தடவை எப்படியாவது செலெக்ட் ஆகிருவேன்ல?”
“எதுக்கு இம்புட்டு பயம்? விளையாட்டை விளையாட்டா பாரு வசந்த்..”
“என் நிலைமை தெரிஞ்சும் இப்படி சொல்லாத டி.. இது தான் வாழ்க்கையே..”
“நீ ரொம்ப யோசிக்குறியோனு தோணுது. நம்ம மீனாட்சி மேல பாரத்தை போட்டுட்டு நிம்மதியா போயிட்டு வா நல்லதாவே நினைப்போம் டா..”
“ம்ம்…”
அவனோடு செல்லும் மற்றவர்களிடம் அவனைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறி அனுப்பினாலும் ஏதோ உறுத்தலாகவே இருந்தது மங்கைக்கு.
அன்றைய பொழுது அப்படியாய் கழிய மறுநாள் சென்னைக்குக் கிளம்பியிருந்தாள்.
காலையில் இரயில் நிலையத்தில் இறங்கிய நேரம் அவளுக்காக காத்திருந்தான் கார்த்திகேயன்.
“ஹே கார்த்தி மாமா நீ வர்றதா அத்தை சொல்லவே இல்லை..”
“வா வாயாடி எப்படியிருக்க? எத்தனை வருஷம் ஆச்சு பார்த்து அதான் சர்ப்ரைஸ்.”
“பாருடா நான் நல்லாயிருக்கேன். நீ எப்படியிருக்க? எங்க கூடவே தான சுத்துன எப்படி இப்படி ஒரு அறிவாளியா மாறின நீ?”
“கொழுப்பு குறையவே இல்லை உனக்கு..”
“ஹா ஹா உங்க வீட்டு பெரிய டாக்டர்ட்ட போட்டு கொடுத்துறாத அப்பறம் இன்னைக்கு பூரா அட்வைஸ் பண்ணி தாளிச்சுருவார்.”
“எங்கப்பாவையே டென்ஷன் ஆக்குற ஒரே ஆளு நீயா தான் இருப்ப..”
“இதெல்லாம் ஒரு ஜாலி மாமா.. சரி ரொம்ப பசிக்குது இங்கே இருந்து போறோமா இல்லையா?”
“சரி சரி வா போலாம்..”, என்றவன் பையை வாங்கிக் கொள்ள அவனோடு கதையளந்தபடி நடக்க ஆரம்பித்திருந்தாள்.
Have any thoughts?
Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!