மலர்-1

by ஸ்ரீ
0 comments 234 views
A+A-
Reset

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

விளக்க உரை: இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள்.

அதிகாலை நேரத்தின் வனப்பு ஆயிரம் அழகிகளுக்கு சமமல்லவா? அதுவும் பாண்டிய குல பேரரசி ஆளும் மதுரையின் அழகை வர்ணிக்கவும் வேண்டுமா! அப்படியான விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் ட்ரக் பேண்ட் டிசர்டில் தனது காலை நேர ஜாக்கிங்கை ஆரம்பித்திருந்தாள் மங்கை.

முழுப் பெயர் மாமலர் மங்கை வயது 22 பட்டப்படிப்பை முடித்திருக்கிறாள். முத்துப் பாண்டியன் குணவதி தம்பதியரின் இளைய மகள். அவளது அண்ணன் திருமாவளவன். வயது 27 எம்பிஏ முடித்துவிட்டு தன் குடும்பத் தொழிலான ஜவுளிக் கடையைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

மதுரையில் இவர்களின் கட்டைப்பை இல்லாத வீடில்லை எனுமளவிற்கான பெரிய கடையும் குடும்பமும். அவர்களது வீடு ஒரு தெருவில் ஆரம்பித்து மறு தெருவில் முடியும் என்பது தான் அந்த தெருவிற்கான அடையாளமே.

“KP ஜவுளிக்கடல்”, மதுரைக்கு அடையாளமெனில் வளவன் குடில் என்பது எந்த தெருவின் அடையாளம். முத்துப் பாண்டியனின் தந்தை கனியன் சிறு தொழிலென ஆரம்பித்த ஜவுளி வியாபாரம் இன்று விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது.

கனியன் பூங்கோதை தம்பதியருக்கு முத்துப் பாண்டியன்,இனியன் மற்றும் கலைச்செல்வி என்று மூன்று பிள்ளைகள்.

முத்துப் பாண்டியன் தான் தலைப் பிள்ளை. அடுத்ததாய் இனியன், அவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு நெடுமாறன் அமுதினி என இரண்டு பிள்ளைகள்.

அண்ணன்களின் இளவரசியாய் கலைச்செல்வி அவருக்கு திருமணம் முடிந்து சென்னையில் கணவர் தமோதரனோடு இருக்கிறார். இவர்களுக்கு ஒரே மகன் கார்த்திகேயன். பிரபல மருத்துவமனையில் எலும்பு அறுவை சிகிச்சை நிபுணராய் பணிபுரிகிறான்.

தந்தை கனியனுக்குப் பிறகு முத்துப் பாண்டியனும் இனியனும் கடைப் பொறுப்பை எடுத்துக் கொள்ள தற்போது அடுத்த தலைமுறையான திருமாவளவனும் நெடுமாறனும் அவர்களோடு தொழிலைக் கவனித்துக் கொண்டனர்.

தாத்தா பாட்டி சித்தப்பா சித்தி அப்பா அம்மா என மொத்தக் குடும்பத்திற்கும் செல்லப் பிள்ளை மங்கை. வீட்டின் கடைக்குட்டி. அந்தக் குடும்பத்தின் இந்த ததலைமுறை என்பது, முதலில் கார்த்திகேயன் அவனைத் தொடர்ந்து திருமாவளவன் அதற்குப் பின்னர் நெடுமாறன் அவனை விட ஒரு வயது சிறியவளான அமுதினி.

முத்துப் பாண்டியனுக்கு தன் மூத்த மகனிற்குப் பின் தவமாய் தவமிருந்து  ஐந்து வருடங்களுக்குப் பின் பிறந்தவள் தான் மங்கை.

அந்த மதுரையை ஆளும் மீனாட்சியே தனக்கு மகளாய் பிறந்துவிட்டாள் என்று சிலாகித்துக் கூறாத நாளே இல்லை எனுமளவிற்கு மகளின் மேல் பாசப் பித்து அவரிடத்தில்.

அதற்கேற்றாற் போல் சிறு வயது முதலே துறுதுறுவென பார்ப்பவரை அப்படியே கவர்ந்து விடுபவள் தான் மங்கை. குடும்பத்தையே ஆட்டிப் படைப்பவர் முத்துப் பாண்டியன் எனில் அவரையே கண்ணுக்குள் விரல் விட்டு ஆட்டும் திறமை கொண்டவள் அவரின் மகள்.

காலை கண்விழித்தவராய் தனதறையில் இருந்து வெளியே வந்தவர் ஹாலில் இருந்த செய்தித் தாளைப் பிரித்து படித்தபடி அமர வாசலில் கனியனும் பூங்கோதையும் பேசிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது.

நொடிக்கொரு தரம் மணியையேப் பார்த்திருந்த முத்துப் பாண்டி அடுத்த பத்து நிமிடத்தில் கையிலிருந்த பேப்பரைத் தூக்கி வைத்துவிட்டு கையில் தண்ணீர் பாட்டிலோடு வாசலுக்குச் சென்றார்.

“வந்துட்டியான். ஏன் டா ஊரு உலகத்துல எவனுமே பிள்ளை பெக்காத மாதிரி ரொம்ப தான் சேவகம் பண்ணிட்டு திரியுற நீயி. உம்மக அதான் கேட்க ஆளில்லாம இந்தா ஆட்டம் போட்டுட்டு கிடக்கா..”

“என்ன கிழவி காலையிலேயே என்னைய பத்தி கரிச்சு கொட்டலைனால் தூக்கம் வராதே உனக்கு.”

“எலே மங்கை அப்பத்தாவை அப்படி கூப்பிட கூடாதுனு சொல்லிருக்கேனா இல்லையா..”

“இதெல்லாம் பண்ணாதனு உனக்கு நான் எத்தனை தடவை சொல்லிருக்கேன் பா..”, என்றவள் தண்ணீரை வாங்கிக் குடிக்க ஆரம்பித்தாள்.

“கொஞ்சமாச்சும் மட்டு மரியாதை இருக்கா பாரு..”

“எங்கப்பாவை நான் கூப்பிடுறேன் உனக்கு ஏன் எரியுது ஃப்ளவர்..”

“காலையிலேயே உங்க சண்டையை ஆரம்பிக்காதீங்க எலே மங்கை இங்கே வா..”,என்ற தாத்தா கனியனின் சாய்வு நாற்காலியின் கைப்பிடியில் அமர்ந்து கொண்டாள்.

“சொல்லு தாத்தா எனக்கு என்ன வைச்சுருக்க?”

“ம்ம் நாலு எரும மாடு வைச்சுருக்காரு போய் மேய்போ..”

“ப்பா..”

“ம்மா நீயும் தான் சும்மா கிடயேன். எப்போ பார்த்தாலும் அவளை எதாவது சொல்லிக்கிட்டு. நீ போ தங்கம் குளிச்சு சாப்பிடு..”

“ம்ம் அப்படியே இடுப்புல வைச்சு ஊட்டு. போடி போய் குளி போ..”

“போறேன் போறேன் கத்தாத அப்பத்தா..”,என்றவள் தாத்தாவிற்கு கன்னத்தில் முத்தம் வைத்து நகர்ந்தாள்.

“முத்துப்பாண்டி, இத்தனை நாள் எப்படியோ உம்மவளுக்கு கல்யாண வயசு வந்தாச்சு அப்பறம் போற இடத்தில் அவ தான் கஷ்டப்பட போறா பாத்துக்க..”

“ம்மா பொம்பளை பிள்ளைக தாய் தகப்பனோட இருக்குற வரை தான் இந்த சுதந்திரமெல்லாம் அப்பறம் ஆயுசுக்கும் பொறுப்பும் சுமையும் தான் விடுமா..”, என்றவர் உள்ளே சென்றுவிட பூங்கோதை கணவனைப் பார்த்தார்.

“அது கடைக்குட்டி பூவு அவ அண்ணன்காரனே கொஞ்சிட்டு தான் திரியுறான் அப்பறம் அப்பனையா கேட்கணும் விடு அதெல்லாம் பொறுப்பா மாறிக்குவா.”

“என்னவோ போங்க.யாரும் சொல்றதை கேட்குறதில்லை.”

உள்ளே சென்ற மங்கை நேராய் சமையலறைக்குச் செல்ல சித்தி விஜயலட்சுமியை பின்னிருந்து கட்டிக் கொண்டாள்.

“சித்தி குழம்பு மணக்குது. ஒரே ஒரு வாய் இட்லி கொடுங்க..”

“குளிக்காம கொள்ளாம உள்ளே வராதனு சொல்லிருக்கேனா இல்லையா எப்படி வேர்த்துருக்கு பாரு.. போடி குளிச்சுட்டு வா..”

“மங்கை என் கண்ணுல குளிச்சுட்டு வாடி”,என்று வந்த அன்னையை பார்த்துக் கண்சிமிட்டியவளாய் அவரை நெருங்க வேகமாய் தள்ளி நின்றவர்,

“சாமி கும்பிடணும் கண்ணு மேல படாத போ முதல்ல..”

“என் செல்ல குணா சொன்னால் நான் கேட்ப்பேன்.குளிச்சுட்டு வரேன்”, என்றவள் வெளியே செல்ல அண்ணன்கள் இருவரும் சித்தப்பா இனியனோடு சாப்பாட்டு மேஜையில் அமர்ந்திருந்தனர்.

“ஹாய் ஹாய்..”

“இப்போ தான அண்ணே தேடினேன் குட்டிச் சாத்தானை காணும்னு மூக்கு வேர்த்துருச்சு பாரேன்.”

“சித்தப்பா உங்க மகனை சும்மா இருக்க சொல்லுங்க இல்ல..”

“என்னடி பண்ணுவ மாமங்கை.”

“கருவாப்பயலே உனக்கு இன்னைக்கு இருக்கு”,என்றவள்  அவனை அடிக்கப் போக திருமா அவளது தூக்கிக் கட்டிய தலைமுடியை பிடித்து இழுத்தான்.

“காலையிலேயே ஆரம்பிக்காத டி. அண்ணன்னு மரியாதை இருக்கா..”

“அண்ணனுக்கு எதுக்கு மரியாதை? நிறைய பாசம் இருந்தா போதும் என்ன சித்தப்பா?”

“ஆமா பாப்பா.. நீ சொன்னால் சரியில்லாம போகுமா..”

“நல்ல பீப்பா மாதிரி ஆகிட்டு வர்ற இவ பாப்பாவா? ஏன் பா?!”

“மாறா அண்ணே வேணாம் என்ட்ட வம்பு பண்ணாத..”

“உண்மையைச் சொன்னால் கோபம் வேற வருதா இப்படியே போச்சு டீமில் உன்னை செலெக்ட் பண்ண மாதிரி தான்.”

“டேய் கருவாயா ப்ளீஸ் உன் கருநாக்கை வச்சு சபிக்காத. சித்தப்பா பாருங்க சித்தப்பா..”

“டேய் பாப்பாவோட விளையாட்டை பத்தி எதாவது சொன்ன அவ்வளவு தான் சொல்லிட்டேன்.”, என்ற நேரம்  மங்கைகக்கு அமுதினி அழைத்தாள்.

அமுதினி திருமணம் முடிந்து கணவனோடு துபாயில் செட்டில் ஆகியிருக்க காலையும் மாலையும் இங்கு அனைவரோடும் பேசாமல் அன்றைய நாள் அவளுக்கு முடியாது.

“அம்மு செல்லம் என்ன பண்ற? மாம்ஸ் எப்படியிருக்காங்க?”

“…”

“நான் நல்லாயிருக்கேன் இன்னும் இரண்டு நாள்ல சென்னை போணும் ஸ்டேட் லெவல் மேட்ச் இருக்கு. உன் ஆசை அத்தையையும் அத்தை பெத்த ரத்தினத்தையும் பார்க்க போறேன். “, என்றவள் பேசிபடியே மாடியேறியிருந்நாள்.

ஆம் மாமலர் மங்கையின் ஒரே லட்சியம் இந்திய கிரிக்கெட் அணியில் சேருவது தான். சிறுவயதில் தமையன்களோடு விளையாட்டாய் ஆரம்பித்த விஷயம் நாளடைவில் கிரிக்கெட் தான் தன் வாழ்க்கை எனுமளவிற்கு மாறியிருந்தது.

ஆரம்பத்தில் வீட்டில் அனைவரும் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை எனினும் நாளாக ஆக அவளது ஆர்வத்தை உணர்ந்து தங்களது முழு ஆதரவையும் கொடுத்தனர்.

அதன் விளைவு மாவட்ட அளவில் சிறந்த வீராங்கனையாக தேர்வானவள் இப்போது மாநில அளவில் விளையாடப் போகிறாள். இதில் அவளது திறமையை நிருபிப்பதன் மூலம் இந்திய அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகளை அவள் நெருங்க முடியும்.

“ஏன் டா மாறா இவளுங்க தினமும் அப்படி என்ன தான் பேசுவாளுங்க..”

“அண்ணன்காரன் நம்மளை ரெண்டும் மதிக்குறது இல்லை. இதுங்க மட்டும் என்னவோ மணிகணக்கா பேசிட்டு இருக்குதுங்க திருமா.”, எனும் போதே முத்துப் பாண்டி வர பேச்சை நிறுத்திவிட்டு அமைதியாய் உணவை உண்ண ஆரம்பித்தனர்.

அடுத்த பதினைந்து நிமிடத்தில் குளித்து தயாராகி பாவாடைச் சட்டையில் தூக்கிப் போட்ட கொண்டையோடு வந்து அமர்ந்தவளைப் பார்த்து பூங்கோதை முறைத்தார்.

“பொண்ணா லட்சணமா தாவணி கட்டமாட்டியாட்டி?”

“நீ எனக்கு அப்பத்தா வா? மாமியாரா எதாவது சொல்லிட்டே இருக்க..”, என்றவள் இட்லியைத் தட்டில் வைத்துக் கொண்டு அமர்ந்தாள்.

“உன் மாமியா எதுவும் சொல்லிட கூடாதுனு தான் நான் சொல்லுதேன்.”

“ஆரம்பிக்காத அப்பத்தா..பசிக்குது..”, என்றவள் உணவை உண்ணத் தொடங்க மற்றவர்கள் கடை விஷயமாய் பேசத் தொங்கியிருந்தனர்.

“பாப்பா அத்தைக்கு போன் போட்டு சொல்லிட்டேன் மாமா ஸ்டேஷனுக்கு வந்து உன்னை கூப்பிட்டுக்குவார் என்ன..”

“சரி சித்தப்பா நான் ப்ரெண்ட்ஸோட தங்குறேன் சொன்னா கேட்குறீங்களா யாராவது?”

“நல்லாயிருக்கு நீ பேசுறது அத்தை வீடு இருக்கும் போது போய் வெளியே தங்குவியா நீயி?”

“அதான் தங்கலையே.. நான் கோச்கிட்ட சொல்லிட்டேன் அவரும் சரினு சொல்லிட்டார்.”

“அண்ணே இந்த மேட்ச் மட்டும் நல்லா விளையாடிட்டா அடுத்து ரஞ்சி ட்ராபி தான்..”

“அது எங்க நடக்கும் லே?”

“மும்பைல நடக்கும் பா.. ஜாலி அப்படியே ஊரும் சுத்திப் பார்க்கலாம்.”

“ம்ம் கல்யாணம் பண்ணி புள்ளைகுட்டி பெத்துக்காம ஊரூரா சுத்திகிட்டு இரு. எல்லாரும் சேர்ந்து தான் அவளை உருப்படாம ஆக்குறீங்க..”

“அப்பத்தா நாளைக்கே உன் பேத்தி இந்தியாக்காக விளையாடினா உனக்கு பெருமை தான அப்போ பல்லை காட்டிகிட்டு வராத என் பேத்தி தான் இதுனு..”

“என்னவோ ஒண்ணும் உருப்புடுறதுக்கா தெரியலை. பாண்டி பேசாம பெரியவனுக்கு பொண்ணு பார்க்க ஆரம்பி உம்மக எப்படியும் இப்போதைக்கு கல்யாணம் பண்ணுற மாதிரி தெரிலை. என் பேரனுக்கு வயசாகுதா இல்லையா?”

“அப்பாடா.. இன்னைக்கு தான் உன் வாழ்க்கையிலேயே உருப்படியா ஒரு விஷயத்தை சொல்லிருக்க அப்பத்தா..”, என்றவளை பூங்கோதை முறைக்க மற்றவர்கள் சிரிப்பை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தனர்.

Have any thoughts?

Share your reaction or leave a quick response — we’d love to hear what you think!

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Focus Mode