ஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த ஆயினும்ஊழ் கூட்டும் படியன்றிக் கூடாவாம் – தேட்டம் மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின் தரியாது காணும் தனம்.
விளக்கம் உலகத்தில் நாம் சம்பாதிக்க வேண்டியவை எண்ணிலடங்காது இருப்பினும் , விதி என்ன நிர்ணயம் செய்கிறதோ அதைத் தவிர வேற எதுவும் நம்மிடம் சேராது, ஆதலால் பொருள் சேர்க்க வேண்டும் என்ற ஆசையை விட்டு அடுத்தவருக்கு உதவும் நல்ல மனிதர் இவர் என்ற மரியாதையை முதலில் சம்பாத்தியம் செய்யுங்கள்.”
மறுநாள் தாயிடம் விஷயத்தைக் கூற அவருக்குமே சற்று அதிருப்தியாய் தான் இருந்தது.
“என்னடா கண்ணா.”
“ம்மா..அவ வேலை அப்படி என்ன பண்றது..பெருசா எடுத்துக்காதயேன்..”
“வேணும்னா இன்னொரு நாள் பார்க்கலாம் டா..”
“அதெல்லாம் வேண்டாம்..நாள் கம்மியா தான் இருக்கு..அப்பாகிட்ட புரிய வையேன் ப்ளீஸ்..”
“சரி நான் பார்த்துக்குறேன்..அன்னைக்கு முகூர்த்த சம்மந்தப்பட்டது மட்டும் தான். மத்ததை நாம எல்லாருமா போய் ஞாயித்துக் கிழமை எடுத்துக்கலாம். இந்த சின்னதுங்க இல்லைனா ஒரு வழி ஆக்கிடும்.”,என்றபடி ராகினி உள்ளே செல்ல அன்பிற்கு சற்று நிம்மதியாய் இருந்தது.
வெள்ளிகிழமை காலையிலேயே அன்பு பெற்றோருடன் காரில் கிளம்பியிருக்க காயத்ரியின் குடும்பம் முன்னரே வந்து கடையில் காத்திருந்தது.
“வாங்க அண்ணே அண்ணி..”
“வாங்க சம்மந்தி..”
“ரொம்ப நேரம் ஆச்சா வந்து..”
“இல்ல இல்ல இப்போ தான் ஒரு பத்து நிமிசம் இருக்கும்.முதல்ல மாப்பிள்ளைக்கு பாத்துரலாம்ங்களா?”
“ம்ம் போலாம் வாங்க…”,என்றபடி ஆண்கள் தளத்திற்குச் சென்று பட்டு வேட்டி சட்டை மற்றும் ரிசெப்ஷனுக்கான உடைகளையும் எடுத்துக் கொண்டு மணமகளுக்கான தளத்திற்கு வந்து புடவைகளைப் பார்க்க ஆரம்பித்தனர்.
பெரியவர்கள் மட்டுமே இருக்க அன்பு ஒன்றும் கூறாமல் அவர்கள் தேர்வு செய்வதை அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தான்.ஏனோ காயத்ரி வந்திருக்கலாமோ என்ற எண்ணம் எழுவதை அவனால் தடுக்க முடியவில்லை.
பின் ராகினியே சட்டென அவனைப் பார்த்து விட்டு காயத்ரிக்கான புடவையைத் தேர்வு செய்யுமாறு கூற லேசாய் எழுந்த புன்னகையை மறைத்த வண்ணம் புடவைகளை பார்வையிட ஆரம்பித்தான்.
தங்கநிற ஸரி சேலையில் சிகப்பு பார்டரோடு இருந்த அந்தப் புடவையைப் பார்த்ததும் பிடித்து விட்டிருந்தது அவனுக்கு.பெரியவர்களுக்கும் திருப்தியாய் இருக்க அதையே எடுத்துக் கொண்டனர்.
ரிசெப்ஷனிற்கு அவனது சூட்டிற்கு ஏற்ற வண்ணம் அழகான அடர்நீல நிற டிசைனர் புடவையை எடுத்து கொடுக்க காயத்ரியின் சித்தி சிரித்தவாறே,
“சின்னதுல இருந்தே எனக்கும் சரி அவன் தங்கைக்கும் சரி அவன் எடுத்து கொடுக்குறது தான் பிடிக்கும்..”,என்றவர் புன்னகையோடு கூறிவிட்டுத் திரும்ப எதிர் கண்ட காட்சியில் அவரது கண்கள் விரிந்தன.
என்னவென்பதாய் அன்புச்செல்வனும் திரும்பிப் பார்க்க கம்பீரமாய் நடந்தாலும் முகத்தில் சிறு பதட்டத்தோடு வந்து கொண்டிருந்தாள் காயத்ரி.தன்னைக் கண்டதும் மலர்ந்து போன அன்புச்செல்வனின் முகத்திற்காகவே தான் வந்தது சரி என ஆயிரமாவது முறையாய் நினைத்துக் கொண்டாள்.
தன் மகனுக்காக வந்திருக்கிறாள் என்பதை அறிந்து கொண்ட தாயுள்ளம் வாஞ்சையாய் இருவரையும் பார்த்துவிட்டு கணவனை நோக்கி அர்த்தமுள்ள பார்வையைப் பதித்தது.
“வேலை முடிஞ்சுதா மா?!”
“இல்ல மா..மினிஸ்டர் வர்றதுக்கு இன்னும் நேரமாகும் போல தெரிஞ்சுது அதான் தலையைக் காட்டிட்டு போயிலாம்னு வந்தேன்.”
“நல்ல புள்ள..இதுக்காக இப்படி வரணுமா நாங்க பாத்துக்க மாட்டோமா..”,என்றபடி எடுத்து வைத்த துணிகளையெல்லாம் அவளிடம் காட்ட மகிழ்ச்சியாய் பிடித்திருக்கிறதென தலையசைத்தாள்.
“ஆனாலும் மருமகளே இந்த யுனிபார்ம்ல கம்பீரமாக இருக்க மா..”,என்று ராகவன் கூற லேசாய் தலைச் சொரிந்தவாறே தேங்க்ஸ் பா என்றாள்.அன்னைத் தந்தையிடமும் ஓரிரு வார்த்தை பேசிவிட்டு அவள் கிளம்பத் தயாராக,
அத்தனை நேரமும் பார்வையாளனாய் மட்டுமே நின்றிருந்த மகனிடம்,”அன்பு பாவம் எப்படி களைச்சுத் தெரியுறா பாரு வெளிலே ஜுஸ் எதாவது வாங்கிக் கொடுத்து அனுப்பிட்டு வா கண்ணா..”என்றார்.
“சரிம்மா என்றவன், பின்பு நினைவு வநந்தவனாய் மாடியில் ஒரு சட்டையைப் பார்க்க வேண்டும் என்று கூறி அவளையும் அழைத்துச் சென்றான். பெரியவர்கள் புன்னகையோடு அனுப்பி வைக்க எதுவும் பேசாமல் மாடியை நோக்கி நடந்தவனை கவனித்தபடியே உடன் நடந்தாள் காயத்ரி.
அங்கிருந்த ஹேங்கரில் பேருக்கு ஒரு சட்டையை எடுத்தவன் அவளிடம் ஒன்றுமே கூறாமல் ட்ரெயல் ரூமை நோக்கி நடக்க ஒன்றும் புரியாதவளாய் அந்த அறையை விட்டு சற்று தள்ளி நின்று யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.
“காயூ ஒரு நிமிஷம் இதைப் பாரேன்..”,என்றவனின் குரல் கேட்டு மலர்ந்த முகமாய் இரண்டு அடி எடுத்து வைத்தவளைப் பிடித்து உள் நிறுத்தியிருந்தான் அன்பு.
நடப்பது எதையுமே எதிர்பாராதவளாய் அவனது புஜத்தை இறுக்கிப் பிடித்திருந்தவளின் நிலையுணர்ந்து நொடியில் அணைத்து விலகியவன்,”நான் வெளியில் இருக்கேன் காயூ..ரிலாக்ஸ் ஆகிட்டு வா..”,என்றவன் காற்றென வெளியேறியிருந்தான்.
நடந்ததை உணர்ந்தவளின் முகமோ அப்படியாய் சிவந்து விட்டிருந்தது.இருந்தும் சமாளித்து உடனே வெளியேறியவளுக்காக வாசலிலேயே நின்றிருந்தவன் போலாமா எனக் கேட்க தலையசைப்போடு அங்கிருந்து நகர்ந்தாள்.
கீழே பெரியவர்களிடம் விடைப்பெற்று அவளை வெளியே அழைத்து வந்தவன் எதிரிலிருந்த பழரசக் கடையில் அவளுக்காக ஆர்டர் செய்த பின்னே அவள்புறம் முகத்தைத் திருப்பினான்.
“நான் தான் பார்த்துக்குறேன்னு சொன்னேன்ல இப்படி அவசரமா வரணுமா காயூ?!”
“நமக்காக சேர்ந்து எடுக்குற முதல் துணி நான் இல்லாம எப்படி அன்பு அதான்..”,என்றவளின் குரல் காற்றாய் ஒலித்தது.
“ஏன்டி இப்படி ரேவதி மாதிரி காத்து தான் வருது ரேஞ்ச்ல பேசுற”,என்றவனை முறைக்க நினைத்தவள் மீண்டுமாய் விழி தாழ்த்திக் கொண்டு கையிலிருந்த குவளையைப் பார்த்திருந்தாள்.
“என்னடி..அப்படி வாய் பேசுவ..இப்போ என்னாச்சு”,என்றவன் உல்லாசமாய் சிரித்து வைக்க செல்லமாய் அவன் கையில் அடித்தாள் காயத்ரி.
“சாரி காயூ..ப்ளான் பண்ணி எல்லாம் எதுவும் பண்ணல..உன்னை சட்டுனு பார்த்தவுடனே ஒரு மாதிரி சந்தோஷமா ஆகிடுச்சு.இருந்தாலும் எனக்காக தான் நீ வந்தனு தெரிஞ்சு அதுக்கு பதிலா தேங்க்ஸ்னு சொல்றதை விட எனக்கு உன்னை எவ்வளவு பிடிக்கும்னு காட்டணும்னு நினைச்சேன்..எதோ எனக்கே ஒரு மாதிரி தான் இருக்கு..”
“….”
“என்னடி லவ் பண்ணு பண்ணுனு சொல்லிட்டு..இதுக்கே இப்படி இருக்க..நான் என்ன டிஆர் மாதிரி லவ் பண்ணுவேன்னு நினைச்சியா?”,என்றான் அவளை இயல்பாக்கும் பொருட்டு.
“போடா..நான் கிளம்புறேன் நேரமாயிடுச்சு..நைட் பேசுறேன்”,என்றவளின் நிலை உணர்ந்தவனாய் மீண்டும் சமாதானமாய் கையழுத்தி விழிகளால் விடை கொடுத்து அனுப்பினான்.
வீட்டிற்கு வந்து வெகு நேரம் வரையிலுமே தாயும் தந்தையும் காயத்ரியைப் பற்றி தான் பேசிக் கொண்டிருக்க இன்னுமின்னுமாய் அவனை ஆக்கிரமிருத்திருந்தாள்.
“நல்ல பொண்ணு இல்லங்க…பாவம் அத்தனை முக்கியமான வேலையிலும் நமக்காக வந்துருச்சே..”
“ஆமா ராகினி..குணமான பொண்ணா தான் இருக்கு..அதுவும் அந்த வேலைக்கு ஏத்த கம்பீரமா இருக்கா இல்ல..பார்க்கும் போதே பெருமையா இருந்தது.”
“ம்ம் ஆமாங்க..நம்ம அன்பு மேல ரொம்ப பாசமா இருக்கா..இத்தனை நாள் தள்ளி போனது இப்படி ஒரு அருமையான மருமகளை கண்ணில் காட்ட தான் போலங்க..”
அந்த நாள் முழுவதுமே காயத்ரியால் இயல்பாக இருக்க முடியாமல் போனது.எத்தனை முயன்றும் மனம் மொத்தமும் அன்புவே ஆட்சி செய்தான்.இரவு அவனது அழைப்புக்காக காத்திருந்தாள்.
“சொல்லு பொண்டாட்டி என்ன பண்ற எப்போ வீட்டுக்கு வந்த?!”,அலமாரியில் எதையோ தேடியபடி அன்பு இயல்பாய் கேட்க மறுபுறம் அமைதியாகவே இருந்தது.
“காயூ என்னாச்சு?!”
“சாப்ட்டேன் அன்பு..நீ சாப்பிட்டியா என்ன பண்ற?!”
“இன்னுமா நீ நார்மல் ஆகல?!”
“அவ்ளோவா தெரியுது?”
“ம்ம் என்னாச்சு என் பொண்டாட்டிக்கு..இப்படியெல்லாம் இருக்க மாட்டாளே..”
“…”
“சரி எனக்கு ஐஸ்கிரீம் சாப்பிடணும் போல இருக்கு வந்து கூட்டிட்டு போறியா? “
தன்னைப் பார்க்க விரும்புகிறான் என்பதை உணர்ந்தவளும் சரி வரேன் என்று கூறி கிளம்பியிருந்தாள்.
வெளியில் வந்தவன் அவளது பைக்கை எதிர்பார்க்க அவளோ தன் காரில் வந்திருந்தாள்.அமைதியாக உள்ளே அமர்ந்தவனைப் பார்க்காமலே,
“பைக் ஓட்டிட்டு வர்ற மூட் இல்ல அன்பு அதான்..”
“ம்ம்..போலாம்..”,என்றவன் சற்றுத் தள்ளிச் சென்றதும் காரை நிறுத்துமாறு கூற நிறுத்திய நொடி அவளை இழுத்து இறுக அணைத்துக் கொண்டான்.
“இதுக்கெல்லாம் குறைச்சல் இல்ல..அப்பறம் ஏன் இப்படி மந்திரிச்சு விட்ட மாதிரியே அலையுற காயூ..”அத்தனையையும் தன் கை வளைவுக்குள் வைத்த அவன் கேட்டுக் கொண்டிருக்க சற்றே தெளிந்தவளாய் அவளும் அவனைத் தன்னோடு இறுக்கிக் கொண்டாள்.
ஆதரவாய் அவளது முதுகைத் தடவிக் கொண்டே அவள் பேசுவதற்காக காத்திருந்தான்.
“லவ் யூ அன்பு..”
“இதை நீ நடுராத்திரில இப்படி தான் நடுரோட்ல சொல்லுவியா பைத்தியம்”
“போடா..என்னனு எனக்கே தெரியல..அத்தனை உரிமையா நீ சாதாரணமா இருந்தது ரொம்பப பிடிக்குது அன்பு..உன்கிட்ட சொன்னதை விட பல மடங்கு உன்னைத் தேடிருக்கேன் டா..எத்தனையோ ராத்திரி பைத்தியம் மாதிரி உன்னை என் பக்கத்துல நினைச்சு புலம்பி அழுதுருக்கேன்..
இப்போ உன்னை பார்த்த பின்னாடி நடக்குற ஒவ்வொரு விஷயமும் எனக்கு உணர்த்துரது ஒண்ணு தான்.நான் இன்னும் முன்னாடியே உன்னைத் தேடி வந்துருக்கணுமோ..
என்னோட காதலை புரிய வைக்க முயற்சி பண்ணிருக்கணுமோனு இருக்கு..சாரி அன்பு..”,என்றவள் இன்னுமின்னும் தன்னை அவனோடு இறுக்கிக் கொண்டாள்.
“காயூ நீ போலீஸா இருக்கலாம்..தைரியமா வாழலாம்..கேஷுவலா பழகலாம்..ஆனால் அது எல்லாத்தையும் தாண்டி நீ ஒரு பொண்ணு டி..உன் மனசு மென்மையா தான் இருக்கும்..நீயா வந்து என்கிட்ட பேச்சை ஆரம்பிக்கிறது ஒண்ணும் சாதாரண விஷயம் இல்லையே..என்ன சமாதானம் சொன்னாலும் எது எப்போ நடக்கணும்னு இருக்கோ அது அப்போ தான் டா நடக்கும்.
இனி தேவையில்லாத கவலையெல்லாம் பட்டு உன்னை நீயே குழப்பிக்காத புரிஞ்சுதா..”
“ம்ம்ம்…”
“எப்பவும் போல ஜாலியா இருப்பியாம்..”
“ம்ம்..”
“சந்தோஷமா கல்யாணம் பண்ணிப்பியாம்..”
“ம்ம்..”
“அதுக்கப்பறம் இன்னைக்கு கவனிச்ச மாதிரியே உன்னை தினம் தினம் ஸ்பெஷலா கவனிப்பேனாம்..”
“ம்ம்..ஹே ச்ச..”,என்றவள் பிரிந்து கொள்ள சீட்டில் சாய்ந்தமர்ந்தவாறு சத்தமாய் சிரித்தான் அன்புச்செல்வன்.
“ஆனாலும் நீ ரொம்ப மோசம் டா..நல்லவன் மாதிரி ஊரை ஏமாத்துற..”,என்றவள் ஸ்டியரிங்கில் முகத்தை மறைத்துக் கொள்ள லேசாய் அவளது காதோர முடிக்கற்றைகளை ஒதுக்கினான்.
வாகாய் முகத்தைத் திருப்பி அவனைப் பார்த்தவளின் முகத்தில் அப்படியாய் ஒரு பூரிப்பு.இருந்தும் கேட்க வேண்டியதை தெளிவுபடுத்திக் கொள்ள எண்ணியவனாய்,
“நிஜமாவே நீ சொன்ன காரணத்துக்காக தான் ஒரு மாதிரி இருந்தியா காயூ..இல்ல நடந்தது பிடிக்கலைனாலும் சொல்..”,என்றவனின் வார்த்தைகள் அவளது பூவிதழ்களுக்குள் சிக்கிக் கொண்டது.
பதற்றத்தை மறைக்க எண்ணியவளாய் அவனது சிகையை அழுத்திப் பிடிக்க சஞ்சலங்கள் மறைந்து தன்னவளின் இதழோடு யுத்தமிட ஆரம்பித்திருந்தான் அந்த காதல் கள்வன்.
நொடிகள் நீண்டு கொண்டே போக இருவரின் அருகாமை மற்றவருக்குத் தேவையாய் இருக்க மனமின்றி பிரிந்து அமர்ந்தனர்.
காயத்ரிக்கோ அவனைத் திரும்பி பார்க்கும் திரானி கூட இல்லாமல் போக தலையை மொத்தமாய் வெளிப்புறம் திருப்பிக் கொண்டாள்.காலையில் நடந்தது தற்செயலாய் இருந்ததால் எதுவும் யோசிக்கத் தோன்றாதவனுக்கு இப்போது நடந்ததை உள்ளமர்த்திக் கொள்ள நிச்சயமாய் நேரம் ஆகும் எனும் நிலை தான்.
வெளியில் அவர்களின் காரை வேகமாய் தாண்டிச் சென்ற காரின் சத்தத்தில் இருவருமே உணர்ச்சிகளைக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்க பெரும்பாடு பட்டு காயத்ரி அன்பின் மீது பார்வையைத் திருப்பினாள்.
அத்தனை நேரம் அவளின் அவஸ்தைகளை ரசித்துக் கொண்டவன் வேறேதும் கூறாமல் கைகளை விரிக்க கூடு கண்ட பறவையாய் அவனிடத்தில் அடங்கிக் கொண்டாள்.
உச்சந்தலையில் அழுந்த இதழ் பதித்தவன் ஆறுதலான ஸ்பரிசத்தையும் கொடுத்து அவளை விலக்கி அமர்த்தினான்.
“லவ் யூ பொண்டாட்டி..இன்னும் கல்யாணத்துக்கு அப்பறம் எவ்வளவோ இருக்கு..இனி இப்படியெல்லாம் பயமுறுத்தாத போலீஸம்மா..”
“ஐயோ போதும் போதும்..நான் வீட்டுக்கு போணும்..”
“நீதான் டி என்னையே கூட்டிட்டு வந்த இப்போ வீட்டுக்குப் போணும்னு சொன்னா நான் என்னவோ உன்னை கடத்தி வைச்சுருக்குற மாதிரி பேசுறியே..”
“உண்மையாவே என்னைக் கடத்தி உனக்குள்ள போட்டு லாக் பண்ணி தான் டா வைச்சுட்ட”,என்றவள் புன்னகை மாறாமல் வண்டியைக் கிளப்பினாள்.