விளக்கம் எந்த வகையில் ஆராய்ந்து பார்த்தாலும், இந்த உடம்பு நிலையில்லாதது, புழுக்களும், நோய்யும் நிறைந்து வாழும் குடிசை. இதை அறிந்த நல்லவர்கள் தாமரை இலை தண்ணீரில் வாழ்தாலும், அதுனுடன் ஒட்டாமல் வாழ்வது போல் இந்த உலகத்தில் பற்று இல்லாமல் வாழ்வார்கள், இந்த உண்மையை புரியாதவரிடம் /உணர முடியாதவரிடம் இதை பற்றி பேச மாட்டார்கள்.”
ராகினி காலையிலேயே கணவனிடம் காலண்டரும் கையுமாய் போய் நின்றார்.தன் மகனை மணக்கோலத்தில் பார்க்கும் ஆர்வம் அந்த தாய்க்கு.அவரை ஏறிட்டு பார்த்த ராகவன் சிரித்தே விட்டிருந்தார்.
“விட்டா நீ நாளைக்கே கல்யாணம் பண்ணி வைச்சுருவ போலேயே ராகி..”அசடு வழிந்தவராய் கணவர் அருகில் அமர்ந்தவர் புதன் கிழமை போவதைப் பற்றி பேசினார்.
“அப்பறம்ங்க.”
“என்ன சொல்லு?!”
“இல்ல..இன்னைக்கே ஜோசியரைப் பார்த்து அடுத்த முகூர்த்தமா இரண்டு மூணு குறிச்சுட்டு வந்துட்டா சீக்கிரமே ஆக வேண்டியதைப் பார்க்கலாம்ல..”
“உன் புள்ளை பண்ணுறது காதல் கல்யாணம் மனசில இருக்கா??!”
“??!!”
“எல்லாருக்கும் சொல்லணும் சொந்த பந்தத்துகிட்ட பேசணும்..உன் அண்ணன் தம்பிகிட்டேயே சொன்னா என்ன சொல்லுவாங்களோ!”
“நம்ம மேல அக்கறை இருக்குறவங்க நம்மளை கண்டிப்பா புரிஞ்சுப்பாங்கங்க..இப்போ எல்லாம் அன்பு முகத்துல அப்படி ஒரு தெளிர்ச்சி கவனிச்சீங்களா?
அதைப் பார்த்தா வேற எதுவும் எனக்குத் தோணல…அதுவுமில்லாம இரண்டு பேரும் ஒரே வயசு வேற.காலா காலத்துல நடக்க வேண்டியது நடந்தா தான்ங்க நல்லது..”,என்று தயக்கமாய் முடித்தவரை வாஞ்சையாய் பார்த்த ராகவன்,
“பாசத்துல உன்னை அடிச்சுக்க ஆளு இருக்குமா சொல்லு..எல்லாம் நல்லபடியா நடக்கும் வா ஜோசியரைப் போய் பார்த்துட்டு வந்துருவோம்..”,என்றதும் சிறு பிள்ளையாய் எழுந்து சென்றார் ராகினி.
அனைவரும் ஆவலாய் எதிர்பார்த்த புதன்கிழமையும் அழகாய் விடிந்தது.அன்பு கணக்குப் பிள்ளையிடம் அரை நாள் பொறுப்பை விட்டிருக்க ஆனந்தனும் மாலை க்ளினிக்கிற்கு செல்வதாய் கூறிவிட்டான்.
இரட்டையர்கள் இருவரும் அழாத குறையாக கேட்டும் விடுமுறை எடுக்க வேண்டாம் என ராகவன் கூறிவிட பாவமாய் அண்ணனை பார்த்துச் சென்றனர்
காலை பத்து மணிக்கு வருவதாய் முந்தைய நாளே காயத்ரியிடம் கூறியிருந்தவன் தயாராகி கீழே செல்வதற்குள் மீண்டும் ஒரு முறை தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொண்டு தன்னைத் தானே பின்னந்தலையில் தட்டிக் கொண்டான்.
அழகான வெங்காய நிற முழுக்கைச் சட்டையை பாதி மடித்து விட்டிருக்க கருப்பு நிற பேண்ட் அதற்கு அம்சமாய் பொருந்தியிருந்தது.
கடைக்குச் செல்லும் போதெல்லாம் பிள்ளை பெரிதாய் தன்னை கவனித்துக் கொள்வதே இல்லை என்று வருத்தப்பட்ட பெற்றோருக்கு இப்போது அவனைப் பார்த்த போது மனம் மகிழ்ந்து போனது.
ஆனந்தன் பெரியவர்களுக்குத் தெரியாமல் உதடு வளைத்து பிரமாதம் என்று கூற ஒன்றும் கூறாமல் சிரித்தவன் அவன் முதுகில் தட்டி அழைத்துச் சென்றான்.
காயத்ரியின் வீட்டு வாசலில் கார் நின்றவுடனே அவளது அப்பா உள்ளே இருந்து ஓடி வந்தார்.
“வாங்க வாங்க உள்ளே வாங்க..”,என்று அனைவரையும் வரவேற்று உள்ளே அமர்த்த காயத்ரியின் தாய் அனைவரையும் வரவேற்று அவர் அருகில் அமர்த்தி ராகினியிடம் பேச ஆரம்பித்தார்.
பரஸ்பர அறிமுகங்கள் முடிந்திருக்க உதவிக்காக வந்திருந்த காயத்ரியின் சித்தி அவளை அழைத்துக் கொண்டு வந்தார்.
கடல் நீல நிற பட்டுப்புடவையில் அளவான நகைகளும் உறுத்தாத ஒப்பனையுமாய் வந்தவளைப் பார்த்தவனின் விழிகள் அவனறியாமல் தனக்குள் பதித்துக் கொண்டிருந்தது.
அனைவருக்கும் வணக்கம் தெரிவிக்குமாறு அவளது சித்தி கூற பொதுவாய் கீழே விழுந்து நமஸ்காரம் செய்தாள்.தன் கையிலிருந்த காபி டம்ளரை அவளிடம் கொடுத்து அனைவருக்கும் கொடுக்கச் சொல்ல ஒவ்வொருவரையும் பார்த்து புன்னகைத்தவாறே தட்டை அவர்கள் முன் நீட்டினாள்.
ராகினிக்கும் ராகவனுக்கும் திருப்தியாய் இருக்க ஆனந்தன் முதல்முறை அவளைப் பார்ப்பது போல் புன்னகையோடு நிறுத்திக் கொண்டான்.இறுதியாய் தன்னவனுக்கு காபியை நீட்ட அந்த ஒரு நொடியைக் கூட வீணாக்க விரும்பாதவளாய் அவனைப் பார்த்துக் கண்சிமிட்டி நகர்ந்தாள்.
“பசங்க விருப்பத்தைத் தாண்டி இந்த கல்யாணத்துல பேச ஒண்ணுமில்ல..நீங்க எதுவும் சொல்லணும்னா சொல்லுங்க”,என்று ராகவன் காயத்ரியின் தந்தையிடம் கூறினார்.
“எங்களுக்கு இருக்குறது ஒரே பொண்ணு ஆஹா ஓஹோனு இல்லைனாலும் எங்களோட எல்லாமும் அவளுக்குத்தான்.மத்தபடி நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படியே பண்ணிக்கலாம்.”
“நல்லதுங்..ஜோசியரைப் பார்த்து நாலு நாள் குறிச்சு வைச்சுருக்கோம்.உங்களுக்கு தோதுபடுற மாதிரி எது அமையுதோ அந்த முகூர்த்ததிலேயே கல்யாணத்தை வைச்சுப்போம்.”
காயத்ரியை உள்ளே அழைத்துச் சென்று தேதிகளை அவளிடம் கேட்டு சித்தி அவள் அக்காவிடம் கூற அவர் தனது கணவனிடம் கூறினார். இன்னும் இருபதே தினங்களில் இருந்தது முகூர்த்தம்.
“இவ்வளவு சீக்கிரம்னா எப்படி..ஏற்பாடு பண்ண முடியுமா?!”,என்று காயத்ரியின் தந்தை யோசிக்க ராகினி,
“கல்யாணத்தை மருதமலையில் வைச்சுப்போம் ரிசெப்ஷன் மட்டும் எல்லாரையும் கூப்பிட்டு பண்ணிடலாம்.என்னங்க?”,என்று கணவரை ஏறிட்டார்.
“அதுவும் சரி தான்.அன்பு நீ என்னப்பா சொல்ற?”
“எல்லாருக்கும் எது ஒத்து வருதோ அதையே பண்ணிக்கலாம்ப்பா “,என்றவனை உள்ளிருந்து எட்டிப் பார்த்துச் சிரித்தாள் காயத்ரி.
அதன் பின் திருமண ஏற்பாடுகள் பற்றிய பேச்சுகள் தொடங்கியிருக்க அனைவருக்குமான மதிய உணவு அங்கேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அன்புச்செல்வனிற்கு எந்தவித குழப்பமுமின்றி அன்றைய பொழுது கழிந்தது நிம்மதியாய் இருந்தது.பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்க மெதுவாய் வெளியே சென்றவன் மொபைலை எடுத்து காயத்ரிக்கு குறுஞ்செய்தி அனுப்ப ஆரம்பித்தான்.
“வாழ்த்துக்கள் பொண்டாட்டி..”
“நன்றி புருஷா..அது எப்படி டா பார்த்த எல்லா நாளுமே அடுத்த மாசத்துலேயே இருக்கு?!”
“நானும் கேட்டேன் இந்த மாசமே எதுவும் இல்லையானு அம்மா கேவலமா பார்த்துட்டு போயிட்டாங்க..”
“அடப்பாவி..நல்லாயிருந்த புள்ள இப்படி ஆகிருச்சே..”
“எல்லாத்துக்கும் காரணம் ஒருத்தி தான்..”
“அவளுக்கும் இதுக்கு மேல உன்னை விட்டு இருக்க முடியும்னு தோணல அன்பு..”
“காயூ..”
“இன்னும் நம்ப முடியல என்னால..”
“நான் வேணா உள்ளே வந்து நம்ப வைக்கட்டுமா?”
“ம்ம் எனக்கு ஓகே..”
“நான் வர மாட்டேங்குற தைரியம் உனக்கு..”
“ஆமா என் புருஷன் அவ்வளவு நல்லவன் ஆச்சே..”
“இருபதே நாள் அதுவரைக்கும் நல்லவன் பட்டத்தை சுமந்து தான் ஆகணும்..”
“…”
“வெட்கப்படுறியா என்ன?!”
“ஹே என்ன டா ரொம்ப ஓட்ற..”
“மேடம் இதுக்கே வா..”,அதற்குள் ஆனந்தன் அவனை அழைத்துக் கொண்டு வர அப்படியே மொபைலைப் பாக்கெட்டில் வைத்துவிட்டு உள்ளே சென்றான்.
சாப்பாட்டை முடித்துவிட்டு அன்புவின் குடும்பம் கிளம்பத் தயாராக ராகினி உள்ளே சென்று காயத்ரியிடம் விடைபெற்று வரச் சென்றார்.
“வரட்டுமா டா..”
“வாங்கம்மா..”
“இந்தா இது கோவில்ல சாமிக்கிட்ட வைச்சு எடுத்த கயிறு..வேலை விஷயமா நாலு இடத்துக்கு போவ..இதை கையில் கட்டிக்கோ என்ன..”
“சரிம்மா..”,வாஞ்சையாய் கன்னத்தைத் தட்டிக் கொடுத்தவர் அங்கிருந்து நகர கடைசியாய் கிளம்பியவன் அவளிருந்த அறை வாசலில் நின்று,”வாரேன் காயூ”,என்று சொல்ல அழகாய் ஒரு தலையசைப்போடு விடைக்கொடுத்து அனுப்பினாள்.
வீட்டிற்கு வந்ததும் ஆனந்தனும் அன்பும் வேலைக்கு கிளம்பியிருக்க ராகினியும் ராகவனுமாய் இரு வீட்டாருக்கும் அழைத்து விஷயத்தைத் தெரிவித்தனர்.
“நம்ம அன்பா இப்படி..என்னவோ போண்ணே இந்த காலத்துல யாரையும் நம்ப முடியல..”
“மாமா எல்லாம் சரிதான்..ஒரே பொண்ணு அப்போ அவுக குடும்ப பொறுப்பும் நம்ம அன்பு மேல தானா..பொண்ணோட அம்மாக்கு வேற உடம்பு சரியில்லையாமே..”
பேசி முடித்தவர்களுக்கு கல்யாணமே முடிந்தது போன்ற நிம்மதி.ராகவனின் யோசனையான முகத்தைப் பார்த்தவர் அவருக்கு குடிப்பதற்கு மோர் கொண்டு வந்து கொடுத்து அருகில் அமர்ந்தார்.
“அதெல்லாம் சரிதான் போன்ல பேசுறதுக்கே இந்தப் பேச்சு இன்னும் கல்யாணத்துக்கு என்னென்ன காத்திருக்கோ!”
“என் வீட்டாளுங்க ஏதும் சொன்னா எனக்காக நீங்க பொருத்துகிடுங்க..உங்க அண்ணன் தம்பி எது சொன்னாலும் உங்களுக்காக நான் பொறுத்துக்கிடுவேன்.
நமக்கு அன்பு ஆயுசுக்கும் நல்லாயிருக்கணும்ங்க..அது போதும்..”,மனைவியின் பேச்சில் சற்றே தெளிந்தவராய் அழகாய் புன்னகைத்தார் ராகவன்.
மாலை வீட்டிற்கு வந்த சிறியவர்கள் இருவரையும் கையில் பிடிக்க முடிவில்லை.அதுவும் இருபதே நாளில் திருமணம் என்று கேள்விப்பட்டவர்களுக்கு ஏனோ அப்படி ஒரு குஷி.ராகினியும் ராகவனும் தங்களுக்குள் சிரித்துக் கொள்ள நோட்டும் கையுமாய் மாடி ஏறியவர்களை ராகினி என்ன என்று கேட்டார்.
“ம்மா..நேரமே இல்ல..எவ்வளவு ப்ளான் பண்ணணும்.நம்ம குடும்பத்துலேயே இப்படி ஒரு கல்யாணம் நடந்தது இல்லனு சொல்லணும் எல்லாரும்.அண்ணாக்கும் அண்ணிக்கும் லைஃப் புல்லா மறக்கவே முடியாத மாதிரி பெஸ்டா பண்ணணும் மா..”
“சரி சரி எல்லாம் பண்ணலாம்..கொஞ்சம் மூச்சு வாங்கிக்கோடி..”,என்றவர் தலையில் தட்டிச் சென்றார்.
இரவு வீட்டிற்கு வந்தவன் தாயிடம் விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டான்.
“ம்மா..நிஜமாவே ஒண்ணும் பிரச்சனையில்லையே..மாமா பெரியப்பா எல்லாம் அப்பாகிட்ட ஒழுங்கா பேசினாங்கல?”
தனதறைக்கு வந்தவன் காயத்ரியை அழைக்க அதற்காகவே காத்திருந்தவளாய் ஒரே அழைப்பில் எடுத்திருந்தாள்.
“அன்பு ஐஸ்கிரீம் சாப்பிட போலாமா..வரியா?!”
“மணி என்ன ஆகுது என்ன விளையாடுறியா காயூ..”
“ப்ளீஸ் ப்ளீஸ் போலாம் இன்னைக்கு ஒரு நாள் தான்..”
“இப்போ போய் நான் வண்டியை எடுத்தேன் அவ்ளோ தான்..அப்பா அம்மாக்கு விளக்கம் சொல்லி கிளம்புறதுக்குள்ள விடிஞ்சுரும்.”
“ச்ச இவ்வளவு தானா..நான் வரேன் நீ சுவர் ஏறி குதிச்சு வந்து சமத்தா பைக்ல ஏறினா போதும் என்ன சொல்ற?!”
“ஏன் டி படுத்துற..”,என்றவாறு நெற்றியைத் தடவியவனின் முகம் மலர்ந்து போயிருந்தது.
“இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..அதனாலனு கூட வைச்சுக்கோயேன்…ப்ளீஸ் ப்ளீஸ்..”
“அவனவனுக்கு கல்யாண டென்ஷன் இருந்தா நீ என்ன டென்ஷன்ல இருக்க..சரி நீ வா நான் வெளில வரேன்”,என்றவனுக்குமே ஒரு வகையில் மனம் குதுகலித்துக் கொண்டு தான் இருந்தது.
யாருக்கும் தெரியாமல் சொந்த வீட்டிலேயே திருடன் போல் பதுங்கிப் பதுங்கித் தயாராகி வந்தவனுக்கு தன்னை நினைத்து சிரிப்பு வந்தது.மணி இரவு பணிரெண்டரை ஆகியிருக்க பொறுமையாய் வீட்டின் வெளிச் சுவற்றைத் தாண்டிக் குதித்து நின்ற நேரம் பைக்கைத் தள்ளியபடியே அவன் வீட்டு வாசலுக்கு வந்தாள் காயத்ரி.
“நம்ம கதையில் எல்லாமே உல்ட்டாவா தான் இருக்கும் போல..நான் திருட்டுத்தனமா உன்னைக் கூட்டிட்டு போணும்.இங்க என்னடானா!”
“இதெல்லாம் ஒரு விஷயமா இது இதுதான் பசங்க பண்ணணும்னு ரூல்ஸா என்ன..ஏன் இப்போ நான் உன்னை கூட்டிட்டு போறது உனக்கு ஜாலியா இருக்குல..இதெல்லாம் வரலாறு அன்பு..”,என்றவள் அவன் முதுகில் சாய்ந்து கொண்டாள்.
“என்ன டி ஆச்சு..”
“…”
“ஹே அழறியா என்ன?!”,என்றவன் வண்டியை நிறுத்த எத்தனிக்க அவனைத் தடுத்தாள்.
“வண்டியை நிறுத்தாத அன்பு..ஒண்ணுமில்ல நல்லா தான் இருக்கேன் ப்ளீஸ்..”
தன் ஒரு கை கொண்டு அவளது கையை அழுந்தப் பிடித்தவனாய் வண்டியை மெதுவாய் இயக்கிக் கொண்டிருந்தான்.
“ரொம்ப சந்தோஷமா இருக்கு அன்பு..காலையில் இருந்து நடந்ததெல்லாம் நினைச்சு நினைச்சு தூக்கம் கூட வர மாட்டேங்குது.எனக்கு ப்ரெண்ட்ஸ்னு பெருசா யாரும் இல்ல.அதான் உன்னைப் பார்க்கணும் போல இருந்துச்சேனு வந்துட்டேன்.”
“….”
“லவ் யூ அன்பு”,என்றவள் தலையை ஒரு புறமாய் சாய்த்து முதுகில் அப்படியே சாய்ந்து கொண்டாள்.அதற்குள் கடையும் வந்திருக்க தன்னைத் தேற்றியவளாய் இறங்கி கடைக்குள் சென்றாள்.
வண்டியை நிறுத்திவிட்டு வந்தவன் அவள் கொடுத்த ஐஸ்கிரீமை கையில் வாங்கியபடி அவளையே பார்த்திருந்தான்.
“ஏன் டா மொறைக்குற..”
“இன்னொரு தடவை அழு…அப்போ சொல்றேன்..”
“…”
“சந்தோஷமா இருக்க வேண்டிய நேரத்துல ஏன் சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் எமோஷனல் ஆகுற காயு..”
“….”
“சந்தோஷத்துனால அழறதா இருந்தா இனி நீ தினமும் அழ வேண்டியதா இருக்கும் பரவாயில்லையா..”
“…”
“நல்ல நடுராத்திரி ரோட்ல உட்காந்துட்டு பேசுறதுக்கு பதிலும் சொல்லாம…உன்னை என்ன பண்ணலாம்..”
“கல்யாணம் பண்ணிக்கோ..”
“ம்ம் இப்போ பண்றதுக்கெல்லாம் சேர்த்து கல்யாணத்துக்கு அப்பறம் இருக்கு உனக்கு..”
மனம் நிறைத்த அமைதியாய் ஒரு சிரிப்பு அவளிடத்தில்.
“ஏன் டி இப்படி பண்ற..”
“டென்ஷன் ஆகாத செல்லக்குட்டி..சரியாய்டுவேன்..என்னவோ நடக்குறதெல்லாம் அளவுக்கு அதிகமா சந்தோஷத்தைக் கொடுக்குதா அதனால என்னையும் மீறி இப்படி..”
“சரி விடு..அப்பறம் வெள்ளிக்கிழமை புடவை எடுக்க போலாம்னு சொன்னாங்க..”
“வெள்ளிக்கிமையா!!!”
“எதுவும் முக்கியமான வேலை இருக்கா?!”
“மினிஸ்டர் மீட்டிங்க்கு பந்தோபஸ்துக்கு போணும் அன்பு..”,என்றவளின் முகம் இன்னுமாய் சோர்ந்து விட்டிருந்தது.அன்பிற்குமே என்ன சொல்வதென்று புரியாத நிலை.
“மதியத்துக்கு மேல..ச்சச நல்ல நேரம் எதோ காலையிலே தான் சொன்னாங்க..”,என்றவனின் யோசனையான முகத்தைப் பார்த்தவளுக்கு மனம் சுணங்கிவிட்டது.
“சாரி அன்பு..”
“ஏய் நீ அடி தான் வாங்க போற..சரி விடு நம்ம கல்யாணத்துக்கு எல்லாமே என் செலெக்ஷனா இருந்துட்டு போட்டும்..உனக்குப் பிடிக்கலைனாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ..”,என்றவன் புன்னகைக்க வாடிய முகத்தோடு அவனையே பார்த்திருந்தாள்.
“புடவை தான காயூ..ஃப்ரியா விடு..அப்பறம் வாழ்க்கை பூராவும் நாம ரெண்டு பேரும் சேர்ந்து எத்தனை வேணும்னாலும் எடுத்துக்காலாம்..”
“ம்ம் அம்மா அப்பா என்ன சொல்லுவாங்கனு தெரிலையே..”
“அவங்களுக்கு தான் உன் வேலை பத்தி தெரியுமே அதெல்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க..வீட்ல நான் பேசிக்குறேன்..”
“டேய் நான் சொன்னது நம்ம வீட்டைப் பத்தி தான்..”,என்றவளை வாஞ்சையாய் பார்த்திருந்தான் அன்பு.
“தேவையில்லாம யோசிக்காத நான் பார்த்துக்குறேன்.நீ வீட்ல பேசிட்டு யாரெல்லாம் வருவாங்கனு சொல்லு.இங்க எப்படியும் நான் அப்பா அம்மா தான் வருவோம்.”
“சரி அன்பு…”
“இப்படியே ப்யூஸ் போன பல்ப் மாதிரி இருந்தனா அப்பறம் உன்னை சரி பண்றதுக்கு எதாவது பண்ணிடுவேன்..பார்த்துக்கோ..”,என்றவன் சீரியசாய் கூற காயத்ரிக்கு அவன் கூறியதன் பொருள் புரியவே சில நொடிகள் தேவைப்பட்டது.
“ஹேய்..”,என்றவளின் முகம் சிவந்து விட்டிருக்க ரசனையாய் அதைப் பார்த்திருந்தவன் அமைதியாய் தன் கையிலிருந்த ஐஸ்கீரிமை எடுத்து அவளுக்கு ஊட்டிவிட்டான்.