“பெற்றான் அதிர்ப்பின், பிணை அன்னாள் தான் அதிர்க்கும்; கற்றான் அதிர்ப்பின், பொருள் அதிர்க்கும்; பற்றிய மண் அதிர்ப்பின், மன்னவன் கோல் அதிர்க்கும்; பண் அதிர்ப்பின், பாடல் அதிர்ந்துவிடும்
கணவன் ஒழுக்கத்தில் கலங்கினால் அவன் மனைவி தன் கடமையில் கலங்குவாள். கற்ற புலவன் அறிவு கலங்கினால் அவனது கருத்துக்களும் கலங்கும். குடிமக்கள் நிலை கலங்கினால் மன்னனது ஆட்சி நடுங்கும். பண் அதிர்ந்தால் பாடலும் அதிர்ந்து விடும்.”
அபூர்வாவைப் பாத்ததும் மொத்தக் குடும்பமும் மகிழ்ச்சியில் திளைத்தாலும் அவளது கையைப் பார்த்துப் பதறி விட்டிருந்தனர்.ஒன்றும் இல்லையென நூறு முறை சமாதானப்படுத்திய பின் தான் அவளை சாதாரணமாக இருக்கவே விட்டிருந்தனர்.
தாயும் தந்தையும் வேலைகளைக் கவனிக்கச் செல்ல அவள் தங்கையோ மெதுவாய் அவளிடம் வந்து,
“ஏன் கா உன் எம் டி ஆளு எப்படி இருப்பார்?செம ஹண்ட்சமா?”
“அடிப்பாவி…அக்காகிட்ட பேசுற பேச்சா டீ இது…”
“அக்கா கிட்ட தான் பேச முடியும்…ரொம்ப நல்லவரா இருக்காரே அவரே உன்னை கவனிச்சுக்கிட்டது மட்டும் இல்லாம ஊருக்கும் அவர் செலவுலயே அனுப்பி வச்சுருக்கார்.”
“ம்ம் ஆமா…நல்லவரு தான்.போடி போய் வேலையைப் பாரு..”
“உன்கிட்ட போய் கேட்டேன் பாரு…ப்பே..”
ப்ரஜீஷிற்கு பத்து நாட்களுக்கான வேலை தலைக்கு மேல் இருந்தது.இருந்தும் தினமும் காலை இரண்டு மணி நேரம் இரவு இரண்டு மணி நேரம் என வரவேற்பரையில் பேருக்கு கணிணியைத் திறந்து வைத்துக் கொண்டு வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை கவனிக்கத் தொடங்கியிருந்தான்.
அதில் முக்கியமாய் அவன் கவனத்தை ஈர்த்தது அவன் தாய் தந்தையின் அந்நியோன்யம்..இத்தனைக்கும் மோகனின் விருப்பமில்லாமல் நடந்த திருமணம் தான் அவர்களுடையது என்று தாத்தா கூறிக் கேள்விப் பட்டிருக்கிறான்.
இன்று இதைச் சொன்னால் யாரும் நம்புவார்களா என்று கூடத் தெரியவில்லை.அந்த அளவிற்க்கான புரிதல் இருவருக்கும் இடையில்.அதுவும் தந்தை தொழில் வட்டத்தில் எத்தனைப் பெரிய ஆளானாலும் வீட்டின் எஜமானியாய் அம்மா தான் இருக்கிறார் இன்று வரையிலும்.
அப்பா அம்மாவை கடிந்துப் பேசியதாகக் கூட அவனுக்கு நினைவில்லில்லை.அம்மாவும் அப்பாவுக்குத் தேவையான ஒவ்வொன்றையும் அவர் கேட்கும் முன்பே பார்த்துப் பார்த்துச் செய்துவிடுவார்.
அதிலும் அப்பாவின் இந்த ஓய்வு வாழ்க்கை அவர்களின் உறவை இன்னும் அழகாக்கியிருக்கிறதோ என்றுகூடத் தோன்றியது அவனுக்கு.மூன்று வேளை உணவும் இருவரும் சேர்ந்தே உண்டனர்.மாலையில் சிறிது நேரம் நடைப்பயிற்சி வீட்டின் தோட்டத்திலேயே…அதன் பின் சிறிது நேரம் இருவருமாய் சேர்ந்து பிடித்த பாடல் அல்லது படங்கள் என தொலைக்காட்சியில் சில நேரம் பொழுதைக் கழிக்கின்றனர்.
இதையெல்லாம் பார்த்தவனுக்கு உண்மையில் ஒரு அழகான வாழ்வைத் தொலைத்துவிட்டோமோ என்ற ஏக்கம் ஏதோ ஒரு மூலையில் மனதில் எழ ஆரம்பித்திருந்தது ப்ரஜீஷிற்கு.
அப்பாவைப் போல் தனது ஓய்வுகாலம் என்னவாக இருக்கப் போகிறது என்ற கேள்விக்கு அவனிடம் பதில்லில்லாமல் போயிருந்தது.அதன் பின்னான தன் வேலைகளில் தன்னைத் தொலைத்துக் கொண்டாலும் ஒரு நொடி இடைவெளியானாலும் இந்த எண்ணம் அவனைப் பெரிதாய் ஆக்கிரமித்திருந்தது.
பத்து தினங்கள் கடந்ததே தெரியவில்லை எனுமளவிற்கு பல விதங்களில் அவனது தினசரி வாழ்க்கை மாறியிருந்தது.கால் வலி குறைந்து ஓளவு நன்றாகவே நடக்க ஆரம்பித்திருந்தான்.சௌமியா அவனுக்குத் தேவையானதையெல்லாம் பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொண்டார்.
தனக்கு முடியாத இந்த நிலையில் தன்னுடைய தாயைத் தவிர யாரால் இப்படி பார்த்துக் கொள்ள முடியும்.இருந்தும் அவருக்கு இதுவரை ஒரு மகனாய் ஒன்றும் செய்ததில்லை என்று நினைத்த போது வருத்தமே மிஞ்சியது.
இத்தனை தினங்களில் ஒரு முறை அபூர்வாவை அழைத்துப் பேசியிருந்தான்.அவளும் உடல்நலம் தேறிவிட்டதாகவும் அடுத்த வாரத்தில் வேலைக்கு வந்து விடுவதாகவும் கூறியிருந்தாள்.ப்ரஜீஷிற்குமே உடல் தேறியிருந்தக் காரணத்தால் அவனும் அலுவலகத்திற்குச் செல்லலாம் என்ற எண்ணத்தில் தான் இருந்தான்.
முக்கியமாய் ராஜீவிற்கு ஓய்வு கொடுப்பதற்காகவே தான் செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தான்.அதன்படி அன்று அலுவலகத்திற்குக் கிளம்பத் தயாராகி வந்தவனுக்கு ஆயிரம் அறிவுரைகளைக் கூறி அனுப்பினார் சௌமியா.மோகனோ அவரைக் கிண்டல் செய்து கொண்டிருந்தார்.
“உன் புள்ள லீவ் முடிச்சு வேலைக்குத் தான் மா போறான்..ஏதோ முதல் நாள் ஸ்கூல்க்கு போற மாதிரி இருக்கு நீ பண்றதெல்லாம்…”அவர் கூறியதில் ப்ரஜிஷே லேசாய் சிரித்திருந்தான்.
அதிலும் மதியச் சாப்பாடு என்றப் பெயரில் அவர் கட்டிக் கொடுத்திருந்த டிபன் கேரியரைப் பார்த்த போது உண்மையாகவே அவரைப் பார்த்து முறைத்தான் ப்ரஜீஷ்.
“இன்னும் கொஞ்ச நாளைக்காவது வெளி சாப்பாடெல்லாம் வேண்டா…மருந்து மாத்திரைனு போடுற தான..இதான் நல்லது..நீயா தூக்கிட்டு போக போற…அப்பறம் என்ன?”,என்றவருக்கு லேசாய் மனதில் பயமும் இருந்தது எதாவது கூறிவிடுவானோ என..ஆனாலும் அமைதியாய் சென்றுவிட்டிருந்தான் ப்ரஜிஷ்.
அலுவலகத்தில் வழக்கம் போல் அவனுக்கு முன்பே வந்திருந்த அபூர்வா அவனுக்குப் பின்னே அவனது ட்ரைவர் கொண்டு வந்த டிபன் கேரியரைப் பார்த்து விழி விரிக்க அவனோ எல்லாம் உன்னால் தான் என்பதாய் அவளைப் பார்த்திருந்தான்.
அவர் சென்ற பின்பு வழக்கம் போல் தன் குறிப்பெடுடன் அவனது அறைக்குள் சென்றவள் புன்னகையோடு காலை வணக்கத்தைத் தெரிவித்தாள்.
“குட் மார்னிங்…எப்படியிருக்கீங்க..”
“பார்த்தாலே தெரியலையா பத்து நாள்ல இருந்த சிக்ஸ் பேக் எல்லாம் போய் பேமிலி பேக் ஆகுற நிலைமையில இருக்கேன்..”
“ஹா..ஹா..பரவால்ல உடம்பு தேறி வர வேண்டாமா..”
“ம்ம்…ஹவ் ஆர் யூ நவ்?”
“நல்லாயிருக்கேன்..ஹாங்..ஒரு நிமிஷம்..”,என்றவள் தனதறைக்குச் சென்று பையிலிருந்து எதையோ எடுத்து வந்தாள்.
“இந்தாங்க…”
“என்னது இது?”
“தெரியல…என் தங்கச்சி கொடுக்க சொன்னா என்னை நல்லபடியா கவனிச்சுகிட்டதுக்கும்..பத்திரமா ஊருக்கு அனுப்பி வைச்சதுக்குமாம்..”,என்றவளிடமிருந்து அதை வாங்கிக் கொண்டவன் அப்போதே அதைப் பிரித்துப் பார்க்க அழகிய கைக்குட்டை ஒன்று அவனது பெயரை எம்ராய்டரி செய்திருந்தது.
“தட்ஸ் சோ நைஸ்..தேங்க்ஸ் சொன்னேன் சொல்லு…”
“என்னதுனு என்கிட்ட சொல்லவே இல்ல..இப்போ தான் நானும் பாக்குறேன்..அவளே பண்ணிருக்கா போல..கண்டிப்பா சொல்றேன்..ஹவ் அ குட் டே..”,என்றவள் எப்போதும் போல் அன்றைய வேலைகளைக் குறிப்பெடுத்துக் கொண்டாள்.
மதிய உணவு நேரத்தில் ராஜீவைத் தனது அறைக்கு அழைத்தவன் அபூர்வாவையும் அழைத்தான்.அவள் எத்தனை மறுத்தும் விடாமல் தங்களோடு உணவை உட்கொள்ளுமாறு வலியுறுத்தி அமர வைத்திருந்தான்.
மூவருமாய் உணவருந்தி விட்டு அபூர்வா முதலில் எழுந்து கொள்ள நண்பர்கள் இருவருமாய் பேசியபடி உணவை உண்டனர்.
“நிறைய மாற்றம் வந்துருக்கு ப்ரஜி…சொல்லப் போனா இதுதான் நல்லாயிருக்கு…”
“ம்ம் ..”
“அம்மாக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குமே…பத்து நாளா நீ வீட்ல இருந்தும் எனக்கு கால் வராதப்போவே நினைச்சேன்..”
“ஹா…ஹா..ஆக மொத்தம் என்னைப் பார்த்தா எதாவது தப்பு பண்ணி மாட்டிக்குற ஸ்கூல் பையன் மாதிரி தான் இருக்கு அவங்களுக்கு..”
“எத்தனை வயசு ஆனா என்ன டா அப்பா அம்மாக்கு நாம குழந்தை தான…”
“உண்மை தான்…இப்பவும் எப்படி கவனிச்சுக்குறாங்க…அவங்களுக்காக வாழ்க்கையில எதுவுமே பண்ணலேயேனு கில்டியா இருக்கு ராஜீவ்..”
“ப்ரஜி!!”
“ஆமா டா…இந்தப் பத்து நாளும் அது தான் அடிக்கடி மூளையை குழப்பிகிட்டே இருக்கு..என்ன பண்ணலாம்னு ரொம்பவே யோசிக்குறேன்..”
“நான் சொல்லவா??”
“என்ன?”
“கல்யாணத்துக்கு சம்மதம் மட்டும் சொல்லு…அவங்களுக்கு அதைவிடப் பெருசா நீ எதுவும் பண்ணிட முடியாது டா ப்ரஜி…”
“டேய் நடக்குற விஷயமா எதாவது பேசு…”
“ஏன் டா நடக்காது…இப்போ எல்லாம் லேட் மேரேஜ் ரொம்பவே காமன்..நீ சரினு மட்டும் சொல்லு அம்மா பெஸ்டா ஒரு பொண்ணைக் கொண்டு வருவாங்களா இல்லையானு பாரு…”
“அது தான் டா என் பயமே…”
“!!!??”
“கல்யாண வாழ்க்கைக்கு எந்த விதத்துலேயும் தகுதியில்லாதவன் டா நான்..அப்படியிருக்க நீ சொல்ற பெஸ்ட்டான ஒரு பொண்ணோட வாழ்க்கையைக் கெடுக்க சொல்றியா?கண்டிப்பா என்னால அந்த தப்பை பண்ண முடியாது…”
“ப்ரஜி…”
“விடு ராஜீவ்.இந்த டாப்பிக் வேண்டாம்..என்னால இல்ல..எனக்காக அம்மா அப்பா யாருகிட்டேயும் தலைகுனியுற நிலைமை வந்தா என்னால தாங்கிக்க முடியாது..ஐ அம் ஹாப்பி வித் வாட் ஐ அம்..இனி குடிக்குறதைக் கூட நிறுத்திரலாம்னு இருக்கேன்..நாளைக்கு ஹவுஸ் கீப்பிங் கூப்பிட்டு இங்க இருக்குற பாட்டில் எல்லாத்தையும் க்ளீன் பண்ணிட சொல்லு..”
“சரி டா..எனக்கு ஒரு பதில் மட்டும் சொல்லு..”
“என்ன?”
“இதுக்கெல்லாம் காரணம் அபூர்வா வா?”
“….”
“இந்த அமைதியை சம்மதம்னு எடுத்துக்கலாமா?”
“தெரியல ராஜீவ்…அடுத்தடுத்து லைஃப்ல நடக்குற சில விஷயங்கள் இத்தனை நாள் புரியாததை எல்லாம் புரிய வைக்குதானு தெரில..நான் இதுவரை எனக்கு அடுத்தக்கட்ட மக்கள்னு யார் கூடவும் பழகினது இல்ல..
நம்ம சொசைட்டில அடுத்தவனுக்கு நல்லது நினைக்குறவங்களை விட போட்டி பொறாமை தான் அதிகம்.ஆனா எதுவுமே இல்லைனாலும் அவ வாழ்க்கையில அவ படுற திருப்தி…அது என்னை ரொம்ப யோசிக்க வச்சுருச்சு டா..அவளோட வயசுக்கு இருக்க வேண்டிய ஆசைகள் கனவுகள் எல்லாம் பெருசா அவளுக்காக எதுவுமே இல்ல…
பணம் மட்டுமே வாழ்க்கைனு வருஷங்களை வீணாக்கிருக்கேன்னு தோணிச்சு..இது இல்லாம தேவையில்லாத பழக்கங்கள்…இப்போ நினைச்சா அதுக்காக நிறையவே ரிக்ரெட் பண்றேன்..இனியாவது லைஃப்க்கு க்ரேட்புல்லா இருக்கணும்னு நினைக்குறேன்..
ஒரு சின்ன பொண்ணு வாழ்க்கையை வேற விதமா பார்க்க வச்சுருக்கா..நான் இதுவரை பெருசா ப்ரே பண்ணதெல்லாம் இல்ல…ஏன்னா எனக்குத் தேவைக்கு அதிகமாவே எல்லாம் இருந்துருக்கு..ஆனா அவ லைப்ல எப்பவும் எங்க இருந்தாலும் நல்லாயிருக்கணும்னு மனசார ப்ரே பண்ணிக்குறேன்..ஷி வில்…”,என்றவன் கண்ணாடி வழியே வெளியே வெறித்திருக்க இப்படி ஒரு புது மனிதனாய் ப்ரஜீஷைப் பார்த்தவனுக்கு மனம் நிறைந்து போயிருந்தது.
“உண்மை தான் டா உன்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சும் உனக்காக யோசிக்குறதுக்கு எல்லாராலேயும் முடியாது நிச்சயமா..இன்னும் சொல்ல போனா உன்னைப் பத்தி அத்தனை சீக்கிரம் எல்லாரும் புரிஞ்சுக்க மாட்டாங்க..”
“ம்ம்..தேவையில்லாத கோபத்தையும் வன்மத்தையும் வளர்த்து வாழ்க்கையை வீணாக்கிட்டேனோனு தோணுது..எப்பவுமே முடிஞ்சதைப் பத்தி நினைச்சு நேரத்தை விரயமாக்குற ஆள் நான் இல்ல..ஆனா இந்த விஷயத்துக்காக ரொம்பவே ரிக்ரெட் பண்றேன் டா…”
“ரொம்ப யோசிக்காத ப்ரஜி…இனி நடக்குறது எல்லாம் நல்லதா நடக்கும்னு நம்புவோம்..”சம்மதமாய் தலையசைத்தவன் புன்னகையோடு தன் வேலையைப் பார்க்கச் சென்றான்.