மனைக்கு ஆக்கம் மாண்ட மகளிர்; ஒருவன்
வினைக்கு ஆக்கம் செவ்வியன் ஆதல்; சினச் செவ் வேல்,
நாட்டு ஆக்கம் நல்லன் இவ் வேந்து என்றல்; கேட்டு ஆக்கம்
கேளிர் ஒரீஇவிடல்.

 

நல்லியல்பு கொண்ட பெண்களால் குடும்பம் சிறப்படையும். படைப்பயிற்சி சிறப்பாகக் கொண்டவன் போரில் வெற்றியைப் பெறுவான் செங்கோல் அரசன் நாட்டை உயர்த்துவான். உறவினரை ஒதுக்கியவன் கேட்டினை அடைவான்.

அடுத்த இரு தினங்களில் அபூர்வாவின் கைக்கட்டு பிரிக்கப்பட்டு சில ப்சியோதெபி பயிற்சிகள் மட்டும் தொடர்ந்து செய்து வந்தால் போதும் என்று கூறியிருந்தனர்.

ப்ரஜீஷிற்கு இன்னமும் வலி இருந்ததால் முழுதாய் நடக்க முடிந்திருக்கவில்லை.இருப்பினும் இதற்கு மேல் இங்கு இருக்க முடியாது என்று கூறித் தேவையான மருந்து மாத்திரைகள் மற்றும் கேரளாவிலேயே நல்ல மருத்துவரையும் தேர்ந்தெடுத்து அங்கேயே இனி பார்த்துக் கொள்வதாய் கூறிவிட்டிருந்தான்.

மறுநாள் அதிகாலை விமானத்தில் இருவருக்குமாய் டிக்கெட் புக் செய்திருந்தான் ராஜீவ்.அன்றைய இரவு தன் உடமைகளை எல்லாம் அடுக்கிக் கொண்டிருந்தவளைப் பார்ப்பதற்கு ப்ரஜீஷ் வந்திருந்தான்.

“எல்லாம் எடுத்து வச்சுட்டியா?”

“வாங்க…ம்ம் வச்சுட்டேன்..”

“கேரளா ரீச் ஆனவுடனே அங்கயிருந்து உனக்குக் கார் தயாரா இருக்கும் நீ உன் வீட்டுக்குப் போய்டு..நானும் கொஞ்ச நாள் ஆபீஸ் வர மாட்டேன்..சோ ஒரு பத்து நாள் ரெஸ்ட் எடுத்துட்டு வா..ராஜீவ் ஆபீஸ் லேப்டாப் அரேன்ஜ் பண்ணிருப்பான் உனக்கு..சோ ரொம்ப முக்கியமா முடிக்குற மாதிரியான வேலை வந்தா அதுலேயே முடிச்சுக் கொடுத்துரு…சரியா?”

“ம்ம்ம்..”

“என்னாச்சு இவ்ளோ பேசினதுக்கு நீ ஒரு பத்துப் பக்கத்துக்காவது பேசுவனு நினைச்சேன்..”

“உண்மையா பேசுறதுக்கு அவ்ளோ இருக்குதான்..ஆனாலும் அதையெல்லாம் சொல்ற உரிமை எனக்கு இருக்கானு தெரில..அதுமட்டுமில்லாம உங்களுக்கு அட்வைஸ் பண்ற அளவு தகுதியும் எனக்கு இருக்கானோ தெரியல…”

“என்ன புதுசு புதுசா ஏதேதோ சொல்ற?”

“இல்ல உங்க பவர் என்னனு தெரியாம இத்தனை நாள்ல அளவுக்கு அதிகமாவே பேசிருக்கேன் தான்..ஆனா இப்போ கொஞ்சம் தயக்கமா இருக்கு..”

“லிசன்..தேவையில்லாம குழப்பிக்காத…என் அதிகாரத்தையோ என் பலத்தையோ எப்பவும் உன்கிட்ட நான் காட்டினதில்ல..அதுக்கான அவசியமும் இல்ல..உண்மையா அதெல்லாம் கடந்த ஒரு விஷயம் தான் நீ பேசுற எல்லாமே..சோ என்னனு சொல்லு..”

“தேங்க் யூ சோ மச்…புதுசா எஎதுவும் இல்ல…பாதுகாப்பா இருங்க…இன்னொரு தடவை இந்த மாதிரி நடக்காம பார்த்துக்கோங்க..அப்பறம்…அது…

அந்த தேவையில்லாத பழக்கத்தை எல்லாம் நிறுத்திக்க முயற்சி பண்ணுங்க…குடிக்குறதையும் சேர்த்து தான் சொல்றேன்…நீங்க நினைச்சா கண்டிப்பா உங்களை மாத்திப்பீங்க..முயற்சி பண்ணுங்க…இதெல்லாம் முழுசா மறக்குறதுக்கு ஒரே வழி உங்க குடும்பத்தோட கொஞ்சமவது டைம் ஸ்பெண்ட் பண்ணுங்க…

இங்க இருந்த இத்தனை நாள்ல நீங்க அவங்க கூட பேசி ஒருதடவை கூட நான் பார்க்கல..எப்பவும் நம்ம குடும்பத்தை விட யாராலேயும் நமக்கு நல்லது நினைக்கவே முடியாது.அப்பறம்…திரும்பவும் சொல்றேன்…ரொம்வே கவனமா இருங்க …”,பேசிவிட்டு அவனை நிமிர்ந்துப் பார்க்க அவனோ அழகிய புன்னகையோடு அமர்ந்திருந்தான்.

“லைப்ல சில விஷயங்கள் சில நபர்கள் நாம எதிர்பார்க்காததா இருக்கும்..அப்படிதான் நீயும் இந்த பத்து நாளும் என் வாழ்க்கையில எதிர் பாராதது.எதையும் எதிர்பார்க்காம நமக்காக அக்கறைக் காட்டுறவங்க கிடைக்குறது ரொம்ப ரேர்..நீயெல்லாம் எல்லாருக்காகவும் அக்கறைக் காட்டுறதுக்காகவே படைக்கப்பட்டவனு நினைக்குறேன்…

எந்த நிலையிலேயும் இந்த குணத்தை யாருக்காகவும் மாத்திக்காத..டோண்ட் நோ வொய் ஐ அம் சேயிங் ஆல் திஸ்…பட் தேங்க் யூ பார் எவ்ரிதிங்..ஹவ் அ குட் ஸ்லீப்..”,என்றவன் அங்கிருந்துச் செல்ல அபூர்வாவிற்குமே நினைத்ததையெல்லாம் கூறிவிட்ட ஒருவித நிம்மதி எழுந்திருந்தது.

மறுநாள் கூறியது போலவே கொச்சின் விமான நிலையத்தை அடைந்தவுடன் இருவருக்குமான கார்கள் வெளியில் தயாராக இருந்தன.கூடவே ராஜீவும் அவர்களை வரவேற்க வந்திருந்தான்.

பொது வெளியில் வழக்கம் போல் தங்களின் நட்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாகவே இருக்க ராஜீவ் அபூர்வாவிடம் பேசிவிட்டு அவளை வழியனுப்பி வைத்தான்.காரில் அமர்ந்த பின் அவள் இருவருக்குமாய் கையசைத்து தலையாட்ட ராஜீவ் மட்டும் பதிலுக்குக் கையசைத்து சிரிக்க ப்ரஜீஷ் அர்த்தமுள்ள பார்வையோடு நிறுத்திக் கொண்டான்.

காரினுள் அமர்ந்த பின் நீண்ட பெருமூச்சோடு கண்மூடி பின் சாய்ந்து அமர்ந்து கொண்டவனிடம் ராஜீவ் பேசிக் கொண்டு வந்தான்.

“ஆனாலும் ப்ரஜி ரொம்ப டென்ஷன் ஆயிடுச்சு டா..அப்பா அம்மா வேற எனக்கு போன் மேல போன்…இரண்டு நாள் ட்ரிப் ஏன் எக்ஸ்டண்ட் ஆச்சு எதுவும் பிரச்சனையானு…ஏதேதோ சொல்லி சமாளிச்சுட்டேன்..

அப்பறம் அந்தக் கட்சிகாரனுங்க வேற போராடட்ம் ஆர்பாட்டம்னு ஒரு வழி ஆக்கிட்டாங்க…எல்லாத்துக்கும் மேல நீ இங்க சேஃபா வரணும்ங்கிற டென்ஷன் வேற…ஷப்பா…”

“ரிலாக்ஸ் டா..ஏஞ்சல் எப்படி இருக்கா?சர்ஜரி பத்தி எதுவும் பேசினியா?”

“ம்ம் அவளுக்கு அதுல இஷ்டமில்ல டா..இப்படியே இருக்குறேன் வி.டுருங்கனு சொல்றா…நானும் கட்டாயப்படுத்த விரும்பல..சரி உன் இஷ்டம்னு சொல்லிட்டேன்…”

“ம்ம் பேசம நீயும் ஒரு நாலு நாள் லீவ் போட்டுட்டு அவங்களோட எங்கேயாவது போய்ட்டு வா..நான் தான் வந்துட்டனே வில் மேனேஜ்..”

“அதுக்கு இப்போ என்ன அவசரம்..நீ முதல்ல காலை குணப்படுத்திட்டு பழையபடி ஆபீஸுக்கு வா அப்பறம் அதெல்லாம் பார்த்துக்கலாம் டா..”

“ம்..”

“என்ன டா எதுவும் உன்னை டிஸ்டர்ப் பண்ணுதா..ஏன் ஒரு மாதிரி இருக்க?”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல டா..ஐ அம் ஓகே..கொஞ்சம் டயர்டா இருக்கு..”

“சரி வீட்டுக்குப் போய்ட்டு நல்லா ரெஸ்ட் எடு..உன்னை இப்படி பார்த்தா அம்மா கொஞ்சம் டென்ஷன் ஆவாங்க…நீயும் எதையாவது சொல்லி அவங்களை இன்னும் கஷ்டப்படுத்திறாத..”,

“சரி…”,இப்படியாய் அரைமணி நேரப் பயணத்தை முடித்து வீட்டை அடைந்திருந்தனர் இருவரும்.வாசலிலே அமர்ந்திருந்த மோகன் உள்ளே கார் வருவதைக் கவனித்து விட்டு குரல் கொடுக்க சௌமியா வாசலை நோக்கி வந்தார்.

ராஜீவ் இறங்கிவிட்டு ப்ரஜீஷிற்கான வாக்கிங் ஸ்டண்டை எடுத்துக் கொடுக்க வெளியே இறங்கியவனைப் பார்த்துப் பதறியவராய் இருவரும் அவனருகில் ஓடி வந்தனர்.

“என்ன டா ஆச்சு…எப்படி இது நடந்தது?”

“ஐயோ கடவுளே…ஏன் ப்ரஜி இப்படி இருக்க நீ..எதுவுமே சொல்ல மாட்டியா?ராஜீவ் நீயும் இவன் கூட சேர்ந்து இப்போ எல்லாம் இப்படி நடந்துக்குற…எவ்ளோ கேட்குறேன்…எதாவது சொல்றானானு பாருங்க..”

“ம்மா…ரொம்ப பசிக்குது..சாப்பிட எதாவது கொண்டு வாங்களேன்…அப்பறம் திட்டுங்க…”,என்றவனை அதிசயமாய் பார்த்தார் சௌமியா.

இத்தனை வருடங்களில் இப்படி ஒரு கேள்வி அவனிடமிருந்து வந்ததேயில்லை.அவருக்குத் தெரிந்து அவன் எட்டாவது ஒன்பதாவது படிக்கும் போது பசிக்கிறது என்றுக் கூறிக் கேட்டிருக்கிறார்.

அதன்பின் அவன் பேசுவதே குறைந்து விட்டிருந்த நிலையில் எங்கு உணவைப் பற்றியெல்லாம் கேட்பது.இப்போது அவன் கேட்டது அத்தனை வருத்தத்தையும் மீறி ஒருவித நிம்மதியைக் கொடுத்திருந்தது.

“ஐயோ சரி வா…சாப்பிட்டுட்டு அப்பறம் பேசிக்கலாம்..தள்ளுங்க முதல்ல வந்தவனை வாசல்லயே வச்சுகிட்டு”,என்றவர் வேகமாய் முன்னே செல்ல ப்ரஜீஷ் மென்னகையோடு ராஜீவைப் பார்த்து கண்சிமிட்டி உள்ளே நகர்ந்தான்.

மோகன் ஒரு புறம் அவன் கைப்பற்றியபடி வரவேற்பரையின் சோபா வரை வந்து அவனை அமர வைக்க ராஜீவ் கிளம்புவதாய் கூறிய நேரம் இருவருக்குமான உணவுத் தட்டோடு அங்கேயே வந்திருந்தார் சௌமியா.

“வீட்டுக்கு வர்றதே எப்போவாவது தான்..சாப்பிடாம போவியா…ஒழுங்கா சாப்பிட்டு கிளம்பு..”

“உட்காரு டா..எப்போ பார்த்தாலும் கால்ல சக்கரத்தைக் கட்டிட்டு பறந்துட்டே இருக்கோம்..சாப்பிட்டு போ..”,என்றவனை மூவருமே ஆச்சரியமாய் பார்த்திருந்தனர்.

உண்மையில் சுவையுணர்ந்து இப்படி சாப்பிட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது என்றேத் தோன்றியது ப்ரஜீஷிற்கு.போகிறப் போக்கில் பல நாட்கள் தட்டில் என்ன இருக்கிறது என்று கூடத் தெரியாமல் உண்டு முடித்துச் சென்றிருக்கிறான்.

சௌமியா அவனையேப் பார்த்திருக்க தற்செயலாய் அவரைக் கவனித்தவன் என்ன என்பதாய் செய்கை செய்ய ஒன்றுமில்லையென கூறிவிட்டு உள்ளே சென்றவர் பணிப்பெண் தயார் செய்து வைத்திருந்த மசாலா டீயைக் கொண்டு வந்து அவனிடம் நீட்டினார்.

அனைத்தையும் உண்டு முடித்தவுடன் பிள்ளையின் கண்களில் தெரியும் நிறைவை விட ஒரு தாய்க்குப் பெரிதாய் என்ன தேவை.அகம் மகிழ்ந்துப் போயிருந்தார் சௌமியா.

அவனின் கால் சரியாகும் வரை கீழ் தளத்தில் இருக்கும் அறையிலேயே தங்கிக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப் போவதாய் அவர் கூற அதற்கும் அவன் ஒன்றும் கூறாமல் இருந்தது உட்சகட்ட அதிர்ச்சியாகிப் போயிருந்தது அனைவருக்கும்.

பொதுவாய் அவனுக்கான விஷயங்களில் பிறர் தலையிடுவதோ கருத்துக் கூறுவதோ ப்ரஜீஷிற்குப் பிடிக்காத விஷயம்.அதிலும் தாய் ஏதேனும் கூறினால் உடனேயே இன்னும் நான் ஒன்றும் குழந்தையல்ல என்று எறிந்து விழுவான்.

ராஜீவ் நேரமாகி விட்டதெனக் கூறி அங்கிருந்து கிளம்ப மோகன் அவனோடு வாசல் வரைச் சென்றார்.சௌமியாவோ அதற்குள் பணியாட்களிடம் அறையைத் தயார் செய்வதற்கான வேலைகளைப் பற்றி கூற ஆரம்பித்திருந்தார்.

ஒரே நாளில் உலகமே வேறாய் மாறி விட்டதாய் தோன்றியது.உண்மையில் குடும்பத்தோடு செலவிடும் நேரம் மற்றவற்றைப் பற்றி யோசிக்க விடாமல் தான் செய்துவிடும் போலும் என்றுத் தனக்குள்ளேயே கூறிக் கொண்டான்.

அங்கு அபூர்வா காரில் கிளம்பியவுடனேயே தாய்க்கு அழைத்துத் தான் வரும் விஷயத்தைக் கூறிவிட்டு மாலையில் வந்துவிடுவேன் என்றும் கூறிவிட்டிருந்தாள்.

காரின் ஓட்டுநர் ப்ரஜீஷிற்கு மிகுந்த நம்பிக்கையானவராய் இருக்க வேண்டும்..அவ்வப்போது அவளின் சௌகரியத்தைப் பற்றியும் எதுவும் வேண்டுமா என்றும் கேட்டபடியே வாகனத்தை இயக்கிக் கொண்டிருந்தார்.

ப்ரஜீஷ் தனக்கான அறை தயாரானவுடன் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்வதாய் கூறிவிட்டு வந்து படுத்தவன் பல நாட்களுக்குப் பிறகான நிம்மதியான உறக்கத்திற்குள் சென்றிருந்தான்.

மீண்டும் கண் விழித்தபோது பின் மதிய வேளையாகி விட்டிருந்தது.அபூர்வாவின் நினைவு வந்தவனாய் எங்கு இருக்கிறாள் என்று விசரிக்க எண்ணி அவளது எண்ணிற்கு அழைத்தான்.

“ஹலோ..”

“ரீச் ஆய்ட்டியா?”

“இல்ல இன்னும் ஒரு பத்து பதினைஞ்சு நிமிஷத்துல ரீச் ஆய்ருவேன்..”

“ஓ சரி உன்னை ட்ராப் பண்ணிட்டு கிளம்புறதுக்கு முன்னாடி ட்ரைவரை எனக்கு கால் பண்ண சொல்லு..டேக் கேர்..”

“ம்ம் சொல்றேன்…நீங்களும் உடம்பைப் பாத்துக்கோங்க..”,அவன் அழைப்பைத் துண்டித்த அடுத்த நொடி ராஜீவ் அவளை அழைத்திருந்தான்.

“அண்ணா சொல்லுங்க…”

“கால் பண்ணேன் பிஸினு வந்தது..வீட்டுக்கு கிளம்ப போறேன்..சரி எதுக்கும் இன்னொரு தடவை முயற்சி பண்ணலாமேனு பார்த்தேன்…எடுத்துதுட்ட…ரீச் ஆய்ட்டியா டா?”

“இல்ல னா இன்னும் ஒரு பத்து நிமிஷத்துல ரீச் ஆய்டுவேன்..ப்ரஜீஷ் தான் கால் பண்ணிருந்தார் எங்க இருக்கேன்னு கேட்குறதுக்காக..”

“ஓ…ஆனாலும் பத்தே நாள்ல ஆளே மாறிட்டான்…”,என்றவன் காலையில் நடந்த விஷயங்களைக் கூற அபூர்வாவின் முகத்தில் அழகான புன்னகை உதித்திருந்தது.

“செம டோஸ் வாங்கிருப்பான் போலேயே உன்கிட்ட…”

“அண்ணா…அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல..ப்ரெண்ட்னு சொன்னப்பறம் நம்மளால முடிஞ்சதைப் பண்ணணும் தான…உங்க அளவுக்கு எல்லாம் என்னால முடியாது..ஏதோ என்னால பண்ண முடிஞ்தை பண்றேன்..”

“ம்ம் கரெக்ட்தான் டா..உண்மையா ரொம்ப சந்தோஷமா இருக்கு..சரி நீயும் உடம்பை பார்த்துக்கோ…ரீச் ஆய்ட்டு மெசெஜ் பண்ணு..நான் நாளைக்கு கூப்பிடுறேன்..”,என்றவன் அழைப்பைத் துண்டிக்கவும் அவள் வீட்டை அடையவும் சரியாய் இருந்தது.