“இன்னாமை வேண்டின், இரவு எழுக! இந் நிலத்து மன்னுதல் வேண்டின், இசை நடுக! தன்னொடு செல்வது வேண்டின், அறம் செய்க! வெல்வது வேண்டின், வெகுளி விடல்!
ஒருவன் தனக்கு இழிவு வரவேண்டுமானால் பிறரிடம் கையேந்த வேண்டும். இந்நிலத்தில் நிலைத்து நிற்க வேண்டுமானால் புகழ் உண்டாகும்படியான செயலைச் செய்ய வேண்டும். தான் இறந்த பிறகு தன்னுடன் துணை வர வேண்டுமானால் தருமம் செய்ய வேண்டும். பிறரை வெற்றிக் கொள்ள வேண்டுமானால் கோபத்தை விட வேண்டும்.
ராஜீவ் அங்கிருந்துக் கிளம்பிய பின் அபூர்வா தனதறைக்குச் சென்றுவிட ப்ரஜீஷ் அவனது அறையில் கணிணியிலும் கைப்பேசியிலுமாய் எதையோ தீவிரமாய் பார்த்துக் கொண்டிருந்தான்.
அபூர்வாவிற்கோ உறக்கம் வர மறுத்தது.யாரோ தங்களைப் பின் தொடர்வதைப் போன்ற உணர்வு..அத்தனையும் அவளது கற்பனை என்றுத் தெரிந்தாலும் அந்த எண்ணத்தை அவளால் நிறுத்த முடியவில்லை.ஒரு கட்டத்தில் எப்படியும் தூங்கப் போவதில்லை என்று உணர்ந்தவளாய் சற்று நடந்து வரலாம் என்று நினைத்தவாறு அறையை விட்டு வெளியே வந்தாள்.
நேரம் இரவு பனிரெண்டைக் கடந்திருந்தும் ப்ரஜீஷின் அறையில் இன்னும் விளக்கு எரிந்துக் கொண்டிருக்க கதவும் லேசாய் திறந்திருந்தது.மெதுவாய் உள்ளே எட்டிப் பார்த்தவள் அவன் இன்னமும் கணிணியோடு அமர்ந்திருப்பதைக் கண்டு உள்ளேச் சென்றாள்.
“இன்னுமா முழிச்சுட்டு இருக்கீங்க?”
“நீ மட்டும்?”
“எதாவது ஒரு கேள்வி கேட்டா ஒழுங்கா பதில் சொல்றீங்களா?”
“ராஜீவோட மெசெஜ்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..ஏர்போர்ட்ல இருந்து வீட்டுக்குப் போய்ட்டு இருக்குறதா சொன்னான்..”
“ஓ…அவரையும் டார்கெட் பண்ணுவாங்களா?”
“!!!!”
“இல்ல…அது..”
“அவனைப் பொதுவா என் ப்ரெண்டா வெளிப்படுத்திக்குறது கிடையாது.மத்தவங்களை மாதிரி அவனும் ஒரு எம்ப்ளாயி அவ்வளவு தான்..ஆபத்தான விஷயங்களில் இருந்து எப்பவுமே எல்லாரையும் தள்ளி தான் வைச்சுருப்பேன்…தேவையில்லாத டென்ஷன் வேண்டாம் பாரு..”
“ம்…”
“இங்க வராதனு படிச்சுப் படிச்சு சொன்னேன்…எங்க கேட்குறான்..”,எனும்போதே ராஜீவிடமிருந்துக் குறுஞ்செய்தி வந்திருக்க அதற்குப் பதில் அனுப்பிவிட்டு அவளிடம் திரும்பியவன்,
“உனக்கும் தூக்கம் வரலைனு தெரியுது…தேவையில்லாம எதையும் நினைச்சு குழப்பிக்காத என்னை நம்புறவங்களை நான் கண்டிப்பா கை விட மாட்டேன்..”
“ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க…”
“இல்ல இந்த மனுஷங்க எத்தனை சுலபமா மாறிடுறாங்கனு நினைச்சா…”
“…..”
“அவருக்கு நான் எத்தனையோ உதவி பண்ணிருக்கேன்..இப்போ அவருக்குப் பிரச்சனைன உடனே பண்ணின எல்லாத்தையும் மறந்துட்டு என்னைக் கொலை பண்ற அளவு வந்துருக்கார்…இவ்வளவு தான் பணக்காரங்களோட வாழ்க்கை…”
பழைய நினைவுகளில் ஆழ்ந்திருந்தவனாய் சில நிமிடங்கள் அமைதியாய் இருக்க அவளும் அவனேப் பேசட்டும் எனக் காத்திருந்தாள்.
“நான் படிப்பை முடிச்சுட்டு இந்தியா வந்தப்பறம் என்ன பண்ணப் போறேன்னு எந்த ஐடியாவுமே இல்லாம தான் இருந்தேன்..கொஞ்ச நாள் என் இஷ்டம் போல சந்தோஷமா இருந்தேன்..அப்போ ஒரு நாள் தாத்தா என்னைக் கூப்பிட்டு பிஸினஸை நீ தான் பார்த்துக்கணும்னூ சொன்னார்.
எனக்குப் பெருசா எந்த ஐடியாவும் இல்லாததுனால சரி பாத்துக்குறேன்னு சொன்னேன்..சரியா ஒரு மாசம் அப்பா மூலமா எங்க பிஸினஸ் பத்தி மொத்தத்தையும் தெரிஞ்சுக்கிட்டேன்..அதுக்கப்பறம் ஒரு பத்து நாள் அப்பாவோட மேற்பார்வையில் வேலைப் பார்த்தேன்..
அவருக்கும் தாத்தாவுக்கும் என் மேல நிறையவே நம்பிக்கை வந்திருந்தது.பொறுப்புகள் மொத்தமும் என்கிட்ட இருந்தாலும் அப்பாவோட கையெழுத்தில்லாம எந்த வேலையும் நடக்காது…
எனக்கும் அது பெரிய விஷயமா தெரியாததுனால எதுவும் சொல்லல..என்னை நான் வெளிக் காமிச்சுக்க விரும்பல..சோ என் பேரைத் தவிர என்னைப் பத்தி எந்த விதமான விவரமும் எங்கேயும் இருக்காது.ஈவன் இப்போவும் அப்படிதான்..
ஆபீஸில் கூட என் ப்ளோர்ல என் கபின் தவிர நிறைய பீபுள் கிடையாது..உனக்கேத் தெரியும்..அதனால என்னால இன்ட்டிபெண்டன்டா இருக்க முடிஞ்சசுது..அப்படி ஒரு தடவை வெக்கேஷன்க்காக ட்ரிப் போயிருந்த இடத்துல தான் அந்த மினிஸ்டரைப் பார்த்தேன்..அக்ட்சுவலி அவர் அப்போ ஆட்சியில் இல்லாத நேரம்..
இருந்தாலும் நல்ல செல்வாக்கு…பட் இது எதுவுமே எனக்கு அப்போ தெரியாது.ஐ ஹட் ஸீரோ நாலெட்ஜ் அபௌட் பாலிட்டிக்ஸ்..அவரை நான் பார்த்ததே ஒரு பப்ல தான்…அளவுக்கு அதிகமாக் குடிச்சுட்டு மலையாளத்துல உளறிட்டு இருந்தார்.அப்படிதான் அவர்பக்கம் என் கவனம் போச்சு…”,என்றவன் அன்றைய நாளின் நினைவுகளுக்குள் சென்றிருந்தான்.
“ஹலோ…ஆர் யூ ஓ.கே?”
“மலையாளி யா?”
“யா…நீங்க நிதானமா இல்ல…எதுவும் உதவி வேணுமா?”
“தேங்க் யூ யங் மேன்..என்னை என்னோட ஹோட்டல் ரூம்ல ட்ராப் பண்ண முடியுமா?”
“ஷுவர்…வாங்க…”,என்றவன் கைத் தாங்கலாய் அவரை அழைத்துத் தனது காரில் அமர்த்திவிட்டு அவர் கூறிய ஹோட்டலுக்குச் சென்றான்.அவரது அறையில் அவரைப் படுக்க வைத்துவிட்டுத் திரும்ப எத்தனித்த நேரம் அவன் கைப் பிடித்துத் தடுத்தவர் அவன் பெயரை விசாரித்து அவரது கைப்பேசியில் அவனது எண்ணைச் சேமித்துக் கொண்டதோடு மறுநாள் தன்னோடு இரவு உணவில் கலந்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அவர் ஏதோ போதையில் பேசுகிறார் என்று நினைத்தவனாய் ம்ம் எனத் தலையாட்டிச் சென்றான்.ஆனால் மறுநாள் காலையிலேயே அவனுக்கு ஒரு புது எண்ணில் இருந்து அழைப்பு வர எடுத்துப் பேசியவனுக்கு ஆச்சரியம் அவர் தான் அழைத்திருந்தார்.கட்டாயமாக வர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தார்.
இத்தனை தூரம் அவர் கூறிய பின் போகாமல் இருந்தால் நன்றாக இருக்காது என்று நினைத்தவனாய் இரவு அந்த ஹோட்டலுக்குச் சென்றான் ப்ரஜீஷ்.
இவனுக்காகவேக் காத்திருந்தவரைக் கண்டு கொண்டு அவர் அருகில் சென்றுத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
“வாங்க வாங்க தம்பி…உங்களைப் பார்த்ததுல ரொம்ப சந்தோஷம்..”
“ஹலோ…”
“கேரளால எங்க?”
“எர்ணாகுளம்…நீங்க?”
“திருவனந்தபுரம்..”
“ஓ…ஓகே..”
“பாருங்க ஒரே ஸ்டேட்காரங்க..இப்படி நாடுவிட்டு நாடு வந்து சந்திக்கணும்னு இருக்கு…ஐயோ நான் பாட்டுக்குப் பேசிட்டே இருக்கேன்…என்ன சாப்டுறீங்க?”
இருவருக்குமான உணவுகளை ஆர்டர் செய்துவிட்டு ப்ரஜீஷ் அமைதியாய் இருக்க அவரேப் பேச்சை ஆரம்பித்தார்.
“அப்பறம் தம்பி என்னைப் பபத்தி கேள்விப்பட்டுருக்கீங்களா…அது சரி அதனால தான உடனே வந்து உதவி பண்ணிருக்கீங்க..”
“சாரி…எனக்குத் தெரியலையே…”
“என்ன தம்பி போன வருசம் வரை நம்மக் கட்சி தான் ஆட்சில இருந்தது.நான் தான் அந்த டிபார்ட்மெண்ட் மினிஸ்டரே…”
“ஓ…சாரி சார்…சட்டுனு அடையாளம் தெரியல…”
“அட பரவால்ல விடுங்க..அப்பறம் தம்பி என்ன பண்றீங்க?”
“நான் அப்போவோட சேர்ந்து பிஸினெஸ் பார்த்துக்குறேன்…”
“நல்லது நல்லது…”,எனும்போதே இருவருக்குமான உணவு வர பேச்சை நிறுத்திவிட்டு உண்ண ஆரம்பித்திருந்தனர்.
“அப்பறம் தம்பி..எப்போ ஊருக்குப் போறீங்க?”
“இன்னும் நாலு நாள்ல கிளம்பிருவேன்…நீங்க?”
“நானும் அடுத்த வாரத்துல கிளம்ப வேண்டியது தான்..பிஸினஸ்னு சொன்னீங்க என்ன பிஸினஸ்னு சொல்லலியே?”
“A&M க்ரூப் ஆப் கம்பனிஸ் எங்களோடது…”
“அட மோகன் சார் பையனா நீங்க…பெரிய இடம்னு சொல்லுங்க..”,புன்னகை மட்டுமே பதிலாய் அளித்தவன் அமைதியாய் இருக்க அவரே மீண்டும் தொடர்ந்தார்.
“எனக்காக ஒரு உதவி பண்ண முடியுமா தம்பி?”
“என்னனு சொல்லுங்க முடிஞ்சா கண்டிப்பா பண்றேன்..”
“என்ன இப்படி சொல்லிட்டீங்க…உங்களால முடிலனு அப்பறம் யாரு முடிக்குறது.அடுத்து வர்ற எலெக்ஷனுக்கு நீங்க எங்க கட்சிக்கு நிதி உதவி பண்ணிணா..கட்சியில் பேசி உங்களுக்கும் ஒரு தொகுதியே கூட நான் வாங்கித் தரேன்…என்ன சொல்றீங்க??”
“அரசியல் பத்தி எல்லாம் எனக்கு ஐடியா இல்ல சார்..அதுமட்டுமில்லாம பொறுப்பு மொத்தமும் அப்பாகிட்டதான் இருக்குறதுனால என்னால எதுவும் கை வைக்க முடியாது…”
“என்ன தம்பி நீங்க…ஒரு வயசு வரை தான் அப்பாவை சார்ந்து இருக்கணும்..அதுக்கப்பறம் எல்லாம் நானே ராஜா நானே மந்திரினு இருந்தா தான் நம்மளையும் நாலு பேர் மதிப்பாங்க என்ன நான் சொல்றது?”
“ம்ம் சரி தான்…இன்னும் எனக்கு முழு பொறுப்பையும் ஏத்துக்கணும்னு ஐடியா வரல…அதுவரை இப்படி ஜாலியா இருக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்…”
“அதுவும் சரி தான்..இந்த வயசுல வாழ்க்கையை என்ஜாய் பண்ணாம வேற எப்போ பண்றது…நல்லது தம்பி..எப்போவாவது அரசியல் ஆசை வந்தா கண்டிப்பா நம்ம கட்சியில் தான் சேரணும்…”
“கண்டிப்பா சார்..சரி நான் கிளம்புறேன்…தேங்க்ஸ் ஃபார் தி டின்னர்..”,என்றவன் கைக்குலுக்கி நகர்ந்தான்.
அதன்பின் கேரளா வந்து தனது வேலைகளில் அவரைப் பற்றி மறந்தும் போயிருந்தான்.அடுத்த ஆறு மாதத்திற்குள் மோகனிற்கு திடீரென இருதயக் கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை வர மொத்தப் பொறுப்பையும் ப்ரஜீஷ் ஏற்றுக் கொண்டிருந்தான்.
தொழில் மொத்தமும் இப்போது ப்ரஜீஷின் கையில் வந்திருந்தது.ராஜீவும் அங்கு வேலைக்குச் சேர்ந்து சில மாதங்கள் ஆகியிருந்தது.ஒரு முறை அவனது பணப் பரிவர்த்தனையில் மிகப் பெரும் தொகை ஒரு பங்குதாரரிடம் மாட்டிக் கொள்ள இவன் எத்தனைப் பொறுமையாய் கூறியும் அவரிடமிருந்து ஒழுங்கான பதிலோ தொகையோ வந்திருக்கவில்லை.
விசாரித்த வரையில் அவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் அவனிடம் பணத்தை ஒப்படைக்காமல் ஏமாற்ற நினைக்கிறார் என்றும் தகவல் கிடைத்த நிலையில் என்ன செய்யலாம் என்று யோசித்தவனாய் நம்பிக்கையான ஒருவரின் மூலம் சில அடியாட்களின் தொடர்புகளைப் பெற்று அவர்களை வைத்துப் பணத்தைப் பெற முடிவு செய்தான்.
தன் தந்தையின் உடல்நலம் கருதி இதையெல்லாம் கூற வேண்டாம் என்று எண்ணியவனாய் தானே செயல்படுத்தியும் காட்டினான்.அந்தப் பங்குதாரரின் மகனைக் கடத்தி வைத்து மிரட்டித் தனக்கானப் பணத்தையும் பெற்றுக் கொண்டான்.
அந்த வேலையை முடித்த போது அவனுக்கு அப்படியாய் ஒரு மகிழ்ச்சி.காரணமே இல்லாமல் ஒரு வித பெருமை.அதுவும் அந்த நபரின் கண்களில் தெரிந்தப் பயம் அது அவனுக்கு ஒரு போதையைக் கொடுக்க ஆரம்பித்திருந்தது.
அதன் பின் அந்த அடியாட்கள் அவனது விசுவாசிகளாய் மாறியிருந்தனர்.அந்த பங்குதாரரின் வாயிலாக அரசல் புரசலாய் தொழில் வட்டத்தில் இந்தச் செய்தி பலரை எட்டியிருந்தது.சிலர் அவர்களின் தொழிலுக்கும் உதவிப் பெற ப்ரஜீஷிடம் வந்திருந்தனர்.அதற்கான ஊதியமாய் வரும் தொகையில் கணிசமான சதவீகிதப் பணத்தை அவனுக்குக் கொடுத்துச் சென்றனர்.
இந்த நிலையில் தேர்தலுக்கு இன்னும் மூன்றே மாதங்கள் இருந்த நிலையில் ஒரு பொது நிகழ்ச்சியில் அந்த மினிஸ்டரை மீண்டும் சந்திக்க நேரிட்டது.ப்ரஜீஷ் அவரைச் சுத்தமாக மறந்திருந்த போதிலும் அவரே வந்துத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தார்.
“தம்பி…ஆளே மாறீட்டீங்களே…”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல சார்..”
“உருவத்தைப் பத்தி சொல்லல தம்பி…தொழிலைப் பத்தி சொன்னேன்…அரசல் புரசலா கேள்விப்பட்டேன்…ம்ம் நல்லது தான் இந்தத் தொழில்ல இப்படி இருந்தா தான் பயம் இருக்கும் நம்ம மேல..”,என்ன சொல்வதெனத் தெரியாமல் புன்னகைத்துச் சமாளித்தவனின் காதருகில் சென்று,
“ஆள்பலம் பணபலம் இருக்கு அப்படியே அரசியல் பலத்தையும் சேர்த்துக்கோங்க…எல்லாம் நல்லதா தான் நடக்கும்..”
“அது…”
“யோசிக்காதீங்க தம்பி இன்னும் மூணு மாசம்தான் இருக்கு…ம்ம்னு சொல்லுங்க மத்ததயெல்லாம் நான் பாத்துக்குறேன்…அப்பறம் நம்ம ஸ்டேட்லயே உங்களை அடிச்சுக்க ஆள் இருக்க மாட்டாங்க…நீங்க பண்ற உதவிக்கு பத்து மடங்கா உங்களுக்குத் திருப்பிக் கிடைக்கும்னா பார்த்துக்கோங்களேன்…”
“ஒரு இரண்டு நாள் டைம் கொடுங்க யோசிச்சு சொல்றேன்..”
“தாராளமா யோசிங்க…ஆனா முடிவு மட்டும் நல்லதா சொல்லுங்க…வரட்டுமா…”
அவர் கூறுவதில் இருந்த நன்மை தீமைகளை ஆராய்ந்தவன் ராஜீவிடம் மட்டும் ஓரளவு விஷயத்தைக் கூற அவன் அரசியல் சகவாசம் எல்லாம் வேண்டாமே என்று கூறினான்.இருந்தும் ப்ரஜீஷால் இதை ஏனோ ஏற்காமல் இருக்க முடியவில்லை.
கூறியபடியே இரு தினங்களில் அவரிடம் சம்மதம் தெரிவித்திருந்தான்.அடுத்து வந்த தேர்தலில் அக்கட்சியே ஆட்சியைப் பிடித்திருந்தது.அதன் பின் வெளியுலகில் சாதாரணமாய் இருக்கும் ப்ரஜீஷின் பின்புலம் யாரும் எதிர்பாராததாய் இருந்தது.