வீரேந்திரனின் அறைக்குள் வந்தவள் கையிலிருந்த தட்டை மேசையில் வைத்துவிட்டு அப்போது தான் அறையை ஒழுங்காய் கவனித்தாள்.

அவர்களின் சென்னை வீட்டின் பாதியளவு அந்த அறையே இருந்தது.நடுநாயகமாய் இருந்த மிகப் பெரும் மரக்கட்டில் அதைத் தாண்டி ஒரு அலுவலக அறை அமைந்திருக்க மற்றொரு ஓரத்தில் ஒப்பனையறையோடு கூடிய குளியலறை இருந்தது.

கட்டிலுக்கு எதிரில் மூடியிருந்த திரைச் சீலையை விலக்கியவளின் கண்கள் விரிந்தது.மிகப் பெரிய பால்கனி அதன் நடுவில் காபி டேபிளும் அதன் எதிர்புறம் இருவர் அமரக் கூடிய ஊஞ்சலும் போடப்பட்டிருக்க கீழிருந்து படர்ந்திருந்த சாதிமல்லிச் செடியின் வாசனையில் தன்னையேத் தொலைத்து விட்டிருந்தாள் ஏழிசை.

மீண்டும் அறைக்குள் வந்தவள் தன் தந்தையின் படத்தை பார்த்து மனதார வேண்டினாள்.

“இதெல்லாம் உங்களால தான் பா நேக்கு கிடைச்சுருக்கு.அவருக்கு என்னைப் பிடிச்சுருக்கோ இல்லையோ நல்ல ஒரு குடும்பம் கிடைச்சுருக்கு.எப்பவுமே என் கூடவே இருங்கோ பா.”

கட்டிலில் படுத்தவளுக்கு உறக்கம் வருமென்று தோன்றவில்லை.சற்று நேரத்தில் எழுந்தவள் முகம் கழுவி பர்வதம் கொடுத்திருந்த புடவையைக் கையில் எடுத்தாள்.

அதற்கு ஏற்றவாறான ஒரு ரவிக்கையைத் தன் பையிலிருந்து எடுத்துக் கொண்டு ஒப்பனை அறைக்குச் செல்ல எத்தனிக்க கதவு தட்டும் ஓசை கேட்டு கதவைத் திறந்தாள்.

“பெரியம்மா கொடுக்க சொன்னாங்க மா..”,என்றவாறு வேணி கை நிறைய மல்லிகை பூ சரத்தை வைத்திருந்தாள்.

அதை வாங்கிக் கொண்டவள் புடவையைக் கட்டி முடித்து நகைகளையும் அணிந்து கொண்டாள்.தன் நீள் முடியைப் பின்னி மல்லியை மொத்தமாய் சூடிக் கொண்டவள் தன்னைத் தானே கண்ணாடியில் பார்த்து பிரமித்துப் போனாள்.

தாய் இந்த வரையில் இதெல்லாம் செய்த நியாபகம் அதன் பின் பொட்டை கூட கண்ணாடியைப் பார்த்து வைத்ததாய் நினைவில்லை.

மீண்டும் கதவு தட்டப்பட பர்வதம் அவளை அழைப்பதாய் வேலைக்கார பெண் கூறிச் சென்றாள்.தயக்கமாய் வெளியே வந்தவள் படிகளில் இறங்கத் திரும்பிய நேரம்,

“வாவ்..”,என்ற சத்ததில் அதிர்ந்து நின்றாள்.அவள் பயந்துவிட்டதை உணர்ந்த திவ்யாவும் ராகவும் வேகமாய் அவளருகில் வந்து,

“சாரி சாரி அண்ணி பயந்துட்டீங்களா..”

“…”

“செம க்யூட்டா இருக்கீங்க அண்ணி..”,என்ற ராகவைப் பார்த்து புன்னகைத்தவள்,”தேங்க் யூ”,என்றாள்.

“ஹா..பரவால்ல..உங்களுக்கு பேச வருது நான் கூட நீங்க ஊமையோனு நினைச்சுட்டேன்”,என்று திவ்யா கூற பாவமாய் பார்த்தாள் ஏழிசை.

“அச்சோ நீங்க என்ன இப்படி க்யூட்டா இருக்கீங்க..அண்ணனைப் பார்த்து ஊரே பயப்படும் அவங்க பொண்டாட்டி இப்படி பயந்து போலாமா?”

“நேக்கு இதெல்லாம் புதுசா இருக்கு..”

“ம்..போகப் போக பழகிடும் அண்ணி..எங்க கூட எல்லாம் சகஜமா இருங்க..உங்க ரிசெப்ஷன் முடிஞ்சவுடனே நாங்க காலேஜுக்கு கிளம்பிடுவோம்.அப்பறம் ஆறு மாசம் வனவாசம் தான்.”

“ஓ..”

“ஆமா எங்க போறீங்க?”

“அம்மா வர சொன்னா..அதான் கீழ போறேன்.”

“ஓ ஓகே போயிட்டு வாங்க..இப்போ ஒரு கூட்டமே வந்து ரவுண்டு கட்டும் என்ஜாய்”,என்றவர்கள் ஓடிவிட ஏழிசை தான் பயத்தை மொத்தமாய் குத்தகைக்கு எடுத்திருந்தாள்.

“அப்பா,அம்மா இல்லையா?”

“இதோ..”,என்றவர் முடிப்பதற்குள்,

“இங்கே தான் டா இருக்கேன்”,என்றபடி இருவரும் தங்கள் எதிரில் இருந்தவளைப் பார்த்து பூரித்துப் போயினர்.

“என் தங்கமே!”,என்றபடி பர்வதம் மருமகளுக்கு திருஷ்டி கழித்தார்.

“ஏங்க நான் போய் மருமகளை மனையில் உட்கார வைச்சுட்டு வரேன்.”,என்றவர் அவளோடு பூஜையறை நோக்கிச் சென்றார்.

ஏழிசை விளக்கேற்றி நமஸ்கரித்து விட்டு நிமிர அருகிலிருந்த அறைக்குள் அழைத்துச் சென்றவர் அங்கு நடுவில் போட்டிருந்த மிகப் பெரும் நாற்காலில் அவளை அமர்த்தினார்.

“ஏழிசை,இங்கேயே உட்காந்துரு டா நான் போய் வர்றவங்களை வரவேற்கணும்.எல்லாரும் வந்து உனக்கு நலுங்கு வைச்சு ஆரத்தி கரைச்ச அப்பறம் உன் ரூமுக்கு போ.”

“ம்மா..காவ்யா?!”

“அவ பொண்ணு தூங்காம ஒரே அழுகை அதான் சமைதான படுத்திட்டு இருக்கா.நான் அவளை வர சொல்றேன்.”,என்றவர் கன்னம் தட்டி அங்கிருந்து நகர்ந்தார்.

தன்னருகில் இருந்த காலி சேரைப் பார்த்தவளுக்கு வீரேந்திரனின் முகம் கண்முன் தோன்றி மறைந்தது.

சற்று நேரத்தில் வாசலில் பல குரல்கள் கேட்ட ஏழிசைக்கு பதட்டம் அதிகமானது.என்ன செய்வதென தெரியாமல் நாற்காலியின் பிடியை இறுக்கிப் பிடித்திருந்தவள் கதவு திறந்த சத்தத்தில் எழுந்து நிற்க அங்கு பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாய் வந்தவனைப் பார்த்து சற்று ஆசுவாசப்பட்டுக் கொண்டாள்.

வீரேந்திரனோ தன்னை மறந்து அவளையே பார்த்திருந்தான்.தேவதையாய் தன்னெதிரில் நிற்பவளை விட்டு கண்ணசைக்க முடியாமல் போயிருந்தது.

தாலி என்ற ஒரு கருவி அத்தனை உரிமையையும் நொடியில் கொடுத்துவிடுமா என்ற கேள்வி இதோடு கோடி முறையாய் அவனது மனதில் எழுந்தது.

கல்லூரி காலம் வரை பல பெண்களைப் பார்த்து கடந்தவன் தான் எனினும் ஏழிசை மீதான ஒருவித உணர்வு அவனுக்கு புதிதாய் இருந்தது.அதிலும் அவள் தன்னையே சார்ந்து இருப்பது இன்னுமாய் பிடித்தது.

அவன் சிந்தனையை கலைத்த வண்ணம் வந்த அவளது குரலில் தன்னிலைக்கு வந்தான்.

“வந்துட்டேளா..காணுமேனு நினைச்சுன்டே இருந்தேன்.”

“எதுக்கு இவ்வளவு பதட்டம்?!”

“இல்லை அம்மா நிறைய பேர் வருவானு சொன்னா அதான்.”

“அம்மா??!”

“நம்ம அம்மா தான்..”,என்றவள் இயல்பாய் கூற வீரேந்தினுக்கு இவள் தன்னை முழுதாய் சாய்க்காமல் விடப்போவதில்லை என்றே தோன்றியது.

“இந்த புடவையெல்லாம் அப்பா அம்மா தான் கொடுத்து போட்டுக்க சொன்னா..”,என்று தயங்கியவளைப் பார்த்தபடி அவளருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தவன்,

“உனக்கு பிடிச்சுருக்கா?!”

“ம்ம்..”

“ரொம்ப நல்லாயிருக்கு”,என்றவனை விழி விரித்துப் பார்த்தவளிடம் அடுத்து என்ன கூறியிருப்பானோ அதற்குள் அத்தனை பெண்களும் உள்ளே நுழைந்திருந்தனர்.

வெளியில் இருந்த பேச்சு சிரிப்பு எதுவும் இப்போது இல்லை.அனைவரும் மணமக்களைப் பார்த்து புன்னகைக்க வீரேந்திரன் பொதுவாய் ஒரு தலையசைப்பை அளித்தான்.ஏழிசையோ குனிந்த தலை நிமிரவே இல்லை.

தன்னருகில் இருப்பவனை கடைக்கண் பார்வை பார்க்க அவனோ இன்னுமாய் நிமிர்ந்து அமர்ந்திருந்தான்.பெண்கள் ஒவ்வொருவராய் இருவருக்கும் நலுங்கு வைத்து முடிக்க,பல பேரின் வயிற்றெரிச்சலை கண்கூடாகவே காண முடிந்தது. இறுதியாய் தன் கன்னத்தைப் பற்றிய சுருங்கிய தோல் கொண்ட கரங்களைக் கண்டு நிமிர்ந்தாள் ஏழிசை.

அதற்குள் அத்தனை நேரம் அமைதியாய் இருந்தவன் வாய் திறந்தான்.

“எப்படியிருக்கீங்க பாட்டி..”

“பரவால்லையே என் பேரனுக்கு இந்த பாட்டியை நினைவு இருக்கு”

“நீங்க தான் என்னை மறந்து உங்க புள்ளையோடேயே இருக்கீங்க.”

“ம்ம் பொண்ணு வீட்ல வந்து வாழற அளவுக்கு உன் தாத்தா என்னை வைச்சுட்டு போகலை வீரேந்திரா.”

“எப்போதும் இது ஒண்ணு சொல்லிடுங்க..கொஞ்ச நாள் இருந்துட்டு தான் போகணும்.”

“கண்டிப்பா இருப்பேன்.என் பேத்தியை நீ எப்படி கவனிச்சுக்குறனு பார்க்க வேணாமா..”,என்றவர் ஏழிசையின் தலையில் கைவைத்து ஆசீர்வதித்தார்.

“இந்த பையன் சும்மா அப்படி தான் விரைப்பா இருப்பான்.அதெல்லாம் பார்த்து பயந்துடாத..இந்த பாட்டி உனக்கு துணையிருக்கேன்.வாலாட்டினா சொல்லு சரியா?”,என்றதும் அவளை மீறி மென்னகைத்திருந்தாள்.

அதன்பின் பெண்கள் நலுங்கு பாட்டு பாட வேண்டும் என இருவர் பேச்சை ஆரம்பிக்க பேச்சும் சிரிப்புமாய் அந்த இடம் நிறைந்தது.

“எத்தனை நாள் தான் நாம கல்யாண பொண்ணுக்கு பாடுறது.ஒரு மாற்றமா இருக்கும் பொண்ணை பாட சொல்லுங்க கேட்போம்.”

“பொண்ணு பேசவே காசு கேட்கும் போல இருக்கா இதுல எங்கே பாட வைக்குறது?”

“என்ன சித்தி இப்படி சொல்லிட்டீங்க,ஏழிசை ரொம்ப நல்லா பாடுவா..அவ கர்நாடக சங்கீதம் கத்துருக்கா..பாடு ஏழிசை..”,என்ற காவியாவை பரிதாபமாய் பார்த்தாள்.

எல்லாரும் அவளையே பார்த்திருக்க அவள் லேசாய் தலைதிருப்பி கணவனைப் பார்த்தாள்.சம்மதமாய் அவன் தலையசைக்க லேசாய் குரலைச் செருமிக் கொண்டவள்,

வானவில்லாய் ஆணும் வண்ண மேடாய் பெண்ணும்

இருந்தால் இன்னும் வானின் அழகு கூடும்

சுட்டு விரலாய் நீயும் கட்டை விரலாய் நானும் 

எழுதும் எதுவும் கவிதையாக மாறும் 

விடாமலே உன்னை தொடர்ந்திடும் என்னை

ஒரே ஒரு முறை மனதினில் நினை ம்ம்ம் 

என்னை என்ன செய்தாயடா 

எங்கிருந்து வந்தாயடா

என்னை பாடு படுத்த

 

எங்கு கொண்டு சென்றாயட 

என்னை தேடி எடுக்க நான்

என்னை தேடி எடுக்க

இன்பம் துன்பம் துன்பம் இன்பம்

இன்பம் என்று நீ சுகம் ரெண்டும் கொடுக்க 

சுகம் ரெண்டும் குடுக்க நீ

எங்கிருந்து வந்தாயடா

முடித்த நொடி கண்களை கண்ணீர் மறைத்திட சூழ்நிலை உணர்ந்து அடுத்த நொடியே தன்னைத் தேற்றிக் கொண்டாள்.

அனைவரும் அவள் பாடலைப் பாராட்ட வீரேந்திரனோ அதன் வரிகளிலேயே கட்டுண்டு போனான்.அவளது நிலையை இதை விட அழகாய் உரைத்திட முடியுமா என்று தோன்றியது அவனுக்கு.பர்வதத்திற்கும் ராஜராஜனுக்கும் மனம் நிறைந்து விட்டிருந்தது.

நலுங்கு முடிந்து வீரேந்திரன் எழுந்து சென்றுவிட பெண்கள் படை ஏழிசையை சூழ்ந்து கொண்டது.

பர்வதம் காவ்யா திவ்யா என அனைவரும் வந்தவர்களை கவனிப்பதில் மூழ்கிவிட விருந்தினர்களுக்கிடையில் சிக்கிக் கொண்டாள் ஏழிசை.

“பார்த்தியா இதான் நேத்து பெஞ்ச மழையில் இன்னைக்கு முளைச்ச காளான்ங்கிறது.”

“சரியா சொன்ன..வெறும் கணக்கு பிள்ளையா இருந்தவனோட மகளுக்கு வந்த வாழ்வை பார்த்தியா?!”

“அதுவும் இந்த கோட்டைக்கு மூத்த மருமகளா!!ம்ம் எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பனை வேணும்.”

“வந்தன்னைக்கே வைரத்துல இல்ல இளைச்சு விட்டிருக்கான் நம்ம வீரேந்திரன்.”

தனக்கு கேட்காது என நினைத்து பேசினார்களோ, கேட்க வேண்டும் என்று நினைத்து பேசினார்களோ அனைத்தும் தெளிவாய் அவள் காதில் விழுந்து வைத்தது.

“ஏ பொண்ணே போய் கொஞ்சம் குடிக்க தண்ணி எடுத்துட்டு வா“,என்று ராஜராஜனின் தங்கை கூற அனைத்தையும் பார்த்துக் கொண்டு நின்ற உமையாளுக்கு உள்ளுக்குள் திருப்தியாய் இருந்தது.

தண்ணியைக் கொண்டு வந்து அவரிடம் கொடுக்க டம்ளரைத் தொட்டு பார்த்தவர்,

“தண்ணினா வெறும் தண்ணியா கொண்டு வருவ கொஞ்சம் சுடு தண்ணி கொண்டு வா.”,என்று உத்தரவு போல் கூற எங்கிருந்து தான் வந்தானோ தண்ணீரை அப்படியே கீழே தட்டிவிட்டான் வீரேந்திரன்.

அரண்டு போனவளாய் கண்ணாடி துகள்களை எடுக்க கை வைத்தவளின் கைப் பிடித்து எழுப்பியவனின் முகத்தில் இருந்த கோவத்தில் வெலவெலத்து போனாள் ஏழிசை.

இழுத்த வேகத்தில் கண்ணாடி கையை கிழித்து லேசாய் இரத்தம் வேறு கொட்டத் தொடங்கியது.யாருக்கும் என்ன செய்வதென புரியாமல் நின்றிருக்க,தன் கைப்பிடியில் இருந்தவளை ஆத்திரமாய் பார்த்தவன்,

“உன் பேர் என்ன?”

“ஏ..ஏழிசை..”

“முழுப் பெயர் என்ன?”

“ஏழிசை கண…ஏழிசை வீரேந்திர சேதுபதி..”

“அந்த நினைப்பு இன்னும் மனசுக்குள்ள வந்தா மாதிரி தெரியல.யாரு என்ன சொன்னாலும் செய்வியா? இதுக்கெல்லாம் தான் நான் சம்பளம் கொடுத்து ஆள் வைச்சுருக்கேன்.”,என்றவன் தன் அத்தையை முறைக்க அவரது முகம் கறுத்துவிட்டது.

“பங்கஷன் முடிஞ்சா ரூம்க்கு போய் உட்கார வேண்டியது தான..ம்மா..”,என்றவனின் கர்ஜனையில் அவனருகில் வந்த பர்வதம் சமாதானமாய் அவன் தோள் தொட்டார்.

“நீ போ கண்ணா..நான் அவளை ரூம்க்கு அனுப்புறேன்.”,என்றதைக் கேட்டு விறுவிறுவென மாடியேறிச் சென்றுவிட்டான்.மழையடித்து ஓய்ந்ததைப் போல் இருந்தது.

“ஏன் டி உனக்கு அறிவில்லையா அதான் இத்தனை வேலையாள் இருக்காங்களே அவங்களைத் தண்ணி கேட்டா தர மாட்டாங்களா??”,என்றார் அத்தையின் கணவர்.

“விடுங்க மாப்பிள்ளை அவ சாதாரணமா கேட்டுருப்பா..பர்வதம் மருமக கையில் ரத்தம் வருது பாரு.”,என்று பேச்சை மாற்றி திசைத் திருப்பினார் ராஜராஜன்.

காவ்யாவும் திவ்யாவும் அதற்குள் முதலுதவிப் பெட்டியோடு வர அவளை அமர வைத்து விரலைத் துடைத்து கட்டுப் போட்டு விட்டனர்.

உமையாளுக்கோ மனம் எரிந்தது.கல்யாணமே வேண்டாம் என்றவன் இன்று மனைவிக்காக இத்தனை பேசி விட்டானே.இதே நிலையில் தான் இருந்திருந்தால் ரவி நிச்சயமாய் இப்படியெல்லாம் பேசியிருக்க மாட்டான் என்ற எண்ணம் வந்து போனது.

தம்பி தங்கைகள் தன் அண்ணனின் கத்தலில் மொத்தமாய் அமைதியாகி விட்டிருந்தனர்.

“சின்ன விஷயத்துக்கு கூட ஏன் தான் அண்ணா இப்படி கோப படுறாரோ?”,என்ற காவ்யாவைப் பார்த்து புன்னகைத்தவனாய் ஈஸ்வர்,

“அக்மார்க் குடும்பத் தலைவனா மாறிட்டாரு உங்க அண்ணன்.”

“அண்ணி செம பயந்த டைப்பா இருக்காங்க..எப்படி தான் அண்ணாவை சமாளிப்பாங்களோ தெரில.”- திவ்யா.

“இருந்தாலும் அண்ணா பண்ணதுல எந்த தப்பும் இல்லை.அத்தை வேணும்னே தான் அண்ணிகிட்ட குரல் உயர்த்திருப்பாங்க.அவங்க பொண்ணை அண்ணா கல்யாணம் பண்ணிக்கலையேங்கிற காண்டா இருக்கும்”-ராகவ்.

“நல்ல வேளை அந்த சிடுமூஞ்சி எல்லாம் நமக்கு அண்ணியா வரல டா ராகவா.”

“அதே தான்..”,இப்படியாய் இவர்களின் உரையாடல் இருக்க பர்வதம் மருமகளின் தோள்தட்டி,

“நீ ரூமுக்கு போ ஏழிசை.”,என்ற மாமியாருக்குத் தலையசைத்தவளாய் மெதுவாய் மாடியேறியவள் ஏதோ சிந்தனையில் கதவைத் திறக்க அவள் உள் நுழைய காத்திருந்தவனாய்,

“இங்க நீ என் பொண்டாட்டி யாருக்கும் வேலை செய்யுறதுக்காக நான் இங்க உன்னை கூட்டிட்டு வரலை புரியு..”,என்றவனைப் பாய்ந்து வந்து இறுக அணைத்திருந்தாள் அவன் மனைவி.

அவள் அழுகிறாள் சமாதானம் செய்ய வேண்டும் என்பது கூட தோன்றாமல் சிலையாய் நின்றிருந்தான் அவளது அணைப்பினில்.

அவன் தோள்பகுதி சட்டை மொத்தமும் ஈரமாக சிறு இடைவெளி கூட இல்லாமல் கழுத்தைக் கட்டிக் கொண்டு நிற்பவளை தேற்ற வேண்டும் என்று உரைத்தவனாய் மெதுவாய் அவளது முதுகைத் தடவிக் கொடுத்தான்.

புடவை மற்றும் பூவின் வாசம் ஒரு புறம் அவளது வாசம் ஒரு புறமெனத் திண்டாடிக் கொண்டிருந்தான் வீரேந்திரன்.

“சரி அழாத.என்னால கோவத்தை அவங்ககிட்ட காட்ட முடியாது.அதான் உன்னைத் திட்டிட்டேன்.”

“….”

“சட்டுனு அவங்க அப்படி கேட்டதும் கோவம் வந்துருச்சு.அழாதனு சொல்றேன்ல..”

“….”

“ஐ அம் சா..”,சட்டென பிரிந்து அவனது இதழ்களில் கை வைத்து நிறுத்தினாள்.அத்தனை அருகில் அவன் முகத்தைப் பார்த்த பின்பே தன் நிலை உணர ஓரடி தள்ளி நின்றவள்,

“சாரி எல்லாம் சொல்லாதேள்..நீங்க திட்டினதுக்காக அழல..”

“ பின்ன?!”

“இதுவரை யாரும் எனக்காக இவ்வளவு உரிமையாய் பேசினது இல்ல.அதான்..நீங்க அவாகிட்ட அப்படி பேசினதும் அழுகை வந்துடுத்து.”,என்றவள் தவறியும் நிமிர்ந்திருக்கவில்லை.

என்ன நினைத்தானோ சட்டென அவள் கரம் பற்றி இழுத்தவன் மீண்டுமாய் அவளைத் தன் தோள் சாய்த்துக் கொண்டான்.முதுகில் ஆதரவாய் தட்டியவன்,

“தைரியமாக இருக்கணும்.தப்புனு தெரிஞ்சா எதிர்த்து கேட்கணும்.யாரைப் பார்த்தும் பயப்படக் கூடாது புரியுதா?”,அத்தனை மென்மையாய் அவனுக்குப் பேசத் தெரியும் என்பதையே அப்போது தான் உணர்ந்தான்.

“ம்ம்..”

“யாரைப் பார்த்தாவது இனி பயப்படுவியா?”

“….”

“என்ன?”

“உங்களைப் பார்த்தா தான் ரொம்ப பயமா இருக்கு..”,அவனது கைக்குள்ளேயே இருந்து கொண்டு அவனைப் பார்த்தே பயமாய் இருக்கிறது என்பவளை எந்த ரகத்தில் சேர்ப்பது என்று புரியாமல் நெற்றியைச் சொறிந்தவனின் இதழ்களில் புன்னகை வந்திருந்தது.

தன்னிலிருந்து அவளை பிரித்தவன்,”நான் என்ன சிங்கமா புலியா?”

“…”

“சொல்லு?!”

“இல்ல..அது தெரியல நானும் சாதாரணமா இருக்கணும்னு தான் நினைக்குறேன் ஆனால் முடியல..”,என்றவள் லேசாய் விழி உயர்த்தி அவனைப் பார்த்தாள்.

“அந்த பயம் போறதுக்கு ஒரு வழியிருக்கு..”,என்று தீவிர முகத்தோடு கூறுபவனைக் கேள்வியாய் பார்த்தவளை மீண்டும் தன் அருகில் இழுத்து நிறுத்தியவன்,

“இப்படி இருக்கும் போது பயம் இருக்குறதா தெரியலையே?!”,என்று கேட்டதில் சட்டென அவனுக்கு முதுகுகாட்டி நின்று கொண்டாள்.

சில நிமிடங்கள் அப்படியே நின்றிருக்க அவனது சத்தத்தைக் காணாமல் பின் திரும்பி பார்த்தவளைப் பார்த்த வண்ணம் குளியலறைக்குள் புகுந்து கொண்டான் வீரேந்திரன்.

வேக மூச்சுக்களை எடுத்தவள் நடந்ததையெல்லாம் நினைக்க முகம் சிவந்து விட்டது.அவனை எதிர்கொள்ளும் திரானியில்லாமல் பால்கனி கதவைத் திறந்தவளுக்கு  மதியத்தை விட இப்போது சாதி மல்லியின் மணம் பல மடங்கு அதிகரித்திருக்க மனம் அதுவாய் சமன்பட்டது..

அதில் தன்னைத் தொலைத்தவளாய் எங்கோ வெறித்து நிற்க காவ்யா வந்து தோள் தொட்டதும் நினைவிற்கு வந்தாள்.

“அண்ணா சாப்பிட போயாச்சு வா ஏழிசை.”,என்றவளைப் பார்த்து தயங்கியவள்,

“இல்லை காவ்யா எல்லாரும் சாப்பிட்டு போகட்டும்.தேவையில்லாம அவங்களுக்கு சங்கடமா இருக்கும்.”,என்றாள்.

அவளைப் பார்த்து புன்னகைத்தவளாய் சாப்பாடை அறைக்கே அனுப்புவதாய் கூறிச் சென்றாள் காவ்யா.

அண்ணணிடம் விஷயத்தைக் கூறிவிட்டு அவளுக்கான உணவைத் தட்டில் போட்டு வேலைக்கார பெண்ணிடம் கொடுத்தனுப்பினாள்.

தனது உணவை முடித்துவிட்டு சில பொருட்களை எடுத்துக் கொண்டு ஏழிசையை தேடிச் சென்றாள் காவ்யா.அவள் சாப்பிடும் வரை காத்திருந்து பின் அவளை அழைத்துக் கொண்டு அலுவலக அறைக்குச் செல்ல கேள்வியாய் நோக்கியவளிடம் கையிலிருந்த புடவையைக் கொடுத்து மாற்றி வரக் கூறினாள்.

எதற்காக என்பது புரிந்தவளுக்கு மயக்கம் வராத குறை தான்.இதையெல்லாம் பற்றி யோசிக்காது அவனை கட்டிக் கொண்டு கண்ணீர் விட்டதை நினைத்தால் தன்னையே கொட்டிக் கொள்ளலாம் போல் இருந்தது.

சாப்பிடச் சென்றவன் தன்னை அழைக்காமல் சென்றதன் காரணமும் இப்போது விளங்கியது.வழக்கமான தனது பயத்தை துணைக்கு வைத்துக் கொண்டு காவ்யா கூறியதெல்லாம் செய்து முடித்தவள் வெளியே வந்த நேரம் கட்டில் மொத்தமும் மலர்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது.

“வீட்டில் நிறைய சொந்தங்கள் இருக்குறதால அம்மா உன்னை இங்கேயே இருக்க சொல்லிட்டாங்க.ஆல் த பெஸ்ட்..அண்ணா இப்போ வருவார்.நான் வரேன்.”,என்றவள் தோழியின் கன்னம் கிள்ளி அணைத்துச் சென்றாள்.