அதற்கு பின் இருவக்குள்ளும் எந்த விதமான பேச்சு வார்த்தைகளும் ஏற்பட்டிருக்கவில்லை. கோட்டையின் பிரமாண்டமான கதவைப் பார்த்தவளின் விழிகள் அதுவாய் மிரண்டு விழித்தது.

அந்த அழகிய தோட்டத்தைக் கண்டவளுக்கு சற்று மனம் மட்டுபட்டது.அதைத் தாண்டி எதிரே தெரிந்த கோட்டையை பார்த்தவள் மிரண்டே விட்டாள்.

தன் தந்தை இத்தனை பெரிய இடத்தில் வேலை செய்தார் என்பதையே ஏற்க முடியாதவளுக்கு இப்போது தான் அந்த குடும்பத்து மருமகள் என்பதை சத்தியமாக ஏற்க முடியவில்லை.

ராஜராஜனும் பர்வதமும் கோட்டையை மொத்தமாய் அலங்கரித்திருந்தனர்.வண்ண மலர்களும் கலர் கலர் விளக்குகளுமாய் கோட்டை மிளிர்ந்தது.

காரில் இருந்து இறங்கியவன் அப்படியே அமர்ந்திருந்தவளைக் கேள்வியாய் நோக்க நிலைமை உணர்ந்தவளாய் வேகமாய் இறங்கி அவன் பின் சற்று ஒளிந்து நின்றாள்.

நேற்றுவரை தன்னைப் பார்த்தே மிரண்டவள் இன்று தன் பின்னே தஞ்சம் அடைவதைப் பார்த்தவனுக்கு சிரிப்பாய் இருந்தது.

அவனின் பரந்த தோள்களுக்குள் மொத்தமாய் ஒழிந்து விட்டவளை வெளியில் நிறுத்தும் வழி தெரியவில்லை அவனுக்கு.அங்கிருந்த தோட்டகாரர்கள் அத்தனை பேர் கண்களும் அவர்களையே பார்த்து நிற்க வெளி வாசலிலேயே அனைவரும் இவர்களுக்காக காத்திருந்தனர்.

குனிந்த தலை நிமிராமல் நிற்பவளை விட்டு நகர்ந்து அவளது பக்கவாட்டில் நின்றான் வீரேந்திரன்.

“வா இந்திரா”,என்றழைத்த பர்வதத்தின் கைகளில் ஆரத்தி தட்டு இருந்தது.அவர் முகம் கொள்ளா சந்தோஷத்தோடு ஆர்த்தி கரைக்க வீரேந்திரன் மெதுவாய் தன்னவளிடம்,

“இவங்க தான் என் அம்மா அப்பா..தம்பிங்க அப்பறம் தங்கச்சிங்க.எல்லாரும் உன்னை தான் பார்க்குறாங்க தலையையாவது நிமிர்த்து”,என்று கூற தயக்கமாய் நிமிர்ந்தவளுக்கு பர்வதத்தின் முகத்தைப் பார்த்தவுடன் தன் தாயின் நினைவு வந்துவிட்டது.

சட்டென கண்கள் கலங்க அதற்குள் அவள் நெற்றியில் பொட்டை வைத்தவர் ஆதரவாய் கன்னம் தட்டினார்.சற்றும் யோசிக்காது பெரியவர்களின் காலில் விழுந்து அவள் நமஸ்கரிக்க இதை எதிர்பாராதவனாய் நின்றிருந்தவன் தானும் அவளோடு சேர்ந்து வணங்கினான்.

“இரண்டு பேரும் நூறு வருசம் நல்லாயிருக்கணும்”,என்றபடி உள்ளே நடக்க,

“ஏழிசை..”,என்ற குரலில் நிமிர்ந்தவள் தன்னை புன்னகையோடு பார்த்திருந்த காவ்யாவைக் கண்டதும் வேகமாய் சென்று அணைத்துக் கொண்டாள்.

அவளது விம்மலில் முதுகு குலுங்க காவ்யா அவளை ஆதரவாய் தேற்றிக் கொண்டிருந்தாள்.வீரேந்திரனுக்கு அப்போது தான் கணபதி என்றோ சொன்னது நினைவு வந்தது.

“நம்ம பெரிய பாப்பா படிக்குற காலேஜ்ல தான் தம்பி என் பொண்ணும் படிக்குறா..”

“இவங்க இரண்டு பேரும் க்ளாஸ் மேட்டாமே இந்திரா..நல்ல ப்ரெண்ட்ஸூமாம்..நேத்து விஷயத்தை சொன்னவுடனே காவ்யா சொன்னா.”

“ம்ம்..”,என்றவன் மாடியேறி தனதறைக்குச் சென்றுவிட சிறியவர்கள் அவளைச் சுற்றிக் கொண்டனர்.

“அழாதே ஏழிசை.இங்க பாரு.எல்லாரும் உன்கிட்ட பேசுறதுக்கு தான் காத்துருக்காங்க..”,என்றபடி காவ்யா அவளைத் திருப்பி நிறுத்தினாள்.

“ஹாய் அண்ணி”,என்றபடி ரவீந்தர்,திவ்யா மற்றும் ராகவ் புன்னகைக்க பதிலுக்கு தலையசைத்தாள்.

“இவர் என் ஹஸ்பெண்ட்,இது ரவியோட வைஃப் உமையாள்.”,என்றதற்கு ஈஸ்வர் சிநேகமாய் சிரிக்க உமையாள் வந்தவளை அளவிடும் பார்வை பார்த்து நகர்ந்து கொண்டாள்.

“இங்க வந்து உட்காரு மா..”என்ற பர்வதத்தை நெருங்கி அவளருகில் அமர்ந்தவள் தலை நிமிர்த்தவே இல்லை.

“இங்கே பாரு மா..இனி இது தான் உன் வீடு உன் குடும்பம் நாங்க எல்லாம் இருக்கோம்.சந்தோசமா இருக்கணும் சரியா.”,என்ற ராஜராஜனை நன்றியோடு நோக்கியவள் சம்மதமாய் தலையசைத்தாள்.

“களைச்சு தெரியுற பாரு..எல்லாரும் சாப்பிட போங்க நான் அவளை கூட்டிட்டு வரேன்”,என்ற காவ்யா அவளை அழைத்துக் கொண்டு சற்று தனியாகச் சென்றாள்.

“அண்ணன் எதுவும் சொல்லிட்டாறா?!”,என்றவளைப் புரியாமல் பார்த்தவள் இல்லையென தலையசைக்க நிம்மதியாய் இருந்தது காவ்யாவிற்கு.

“அவர் நல்லவர் தான் நான் தான் சொல்லிருக்கேனே என்ன, கொஞ்சம் கோவம் அதிகம் வரும்.மத்தபடி உன்னை நல்லா பாத்துக்குவாரு.நீ எதுக்கும் கவலைப் படாத..நானும் இன்னும் பத்து நாள் கழிச்சு தான் ஊருக்கு போறேன்.அதுகுள்ள உனக்கு இங்க பழகிடும் சரியா?”

“சரி காவ்யா..உன்னை இங்க பார்ப்பேன்னு நான் நினைக்ககவே இல்ல.எத்தனை வருஷம் ஆயிடுத்து உன்னை பார்த்து.”,என்றவள் லேசாய் சிரிக்க அவள் கன்னத்தைத் தட்டியவளாய்,

“ம்ம் இப்படி சிரிச்சுட்டு இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கு..சரி வா எல்லாரும் காத்துருப்பாங்க..நீ போய் அண்ணாவை சாப்பிட கூட்டிட்டு வா.”

“??”

“என்ன??”

“அவர் எங்க இருப்பார்?”

“ஐயோ சாரி..மாடியேறி இடது பக்கம் கடைசி ரூம்.சீக்கிரம் வந்துரு..”,என்றவள் உணவு மேசையை நோக்கிச் செல்ல, தயக்கமாய் மாடியேறினாள் ஏழிசை.

காவ்யா கூறிய அறையின் முன் நின்றிருந்தவள் என்ன செய்வதென புரியாமல் கையைப் பிசைந்து நிற்க கதவின் வண்ணக் கண்ணாடியில் நிழலாடுவதைக் கண்டவன் சட்டென கதவைத் திறக்க பயந்து ஓரடி பின்னே சென்றாள் ஏழிசை.

“வந்தா கதவைத் தட்ட மாட்டியா?உள்ளே வா.”,என்றவனைப் பின் தொடர்ந்தவள் தயக்கமாய்,

“உங்களை சாப்பிட வரச் சொன்னா..”

“எனக்குப் பசிக்கல..நீ போய் சாப்பிடு..”

“ஓ..இல்ல பரவால்ல நானும் செத்த நேரம் கழிச்சே சாப்பிடுறேன்..”

“எனக்காக நீ காத்திருக்க வேணாம்.யாரும் எதுவும் கேட்க மாட்டாங்க..போ..”

“….”

“என்ன?!”,என்று சற்றே எரிச்சல் குரலில் கேட்டவனைப் பார்க்க முடியாமல்,

“இல்ல நேக்கு தனியா அங்க இருக்க ஒரு மாதிரி இருக்கு.நீங்க எப்போ வரேளோ அப்போவே போறேன்.”,என்றவளை விசித்திரமாய் பார்த்தவன் ஒன்றும் சொல்லாது வா என்று அழைத்துச் சென்றான்.

அத்தனை நேரம் கேட்ட சத்தங்கள் எல்லாம் நின்றிட இவர்கள் இருவரையும் பார்த்ததும் அவரவர் தட்டை நோக்கி குனிந்து கொண்டனர்.

இவர்கள் இருவருக்குமாய் தட்டை வைத்த வேலைக்கார பெண்மணி இனிப்பை பரிமாறி விட்டு வீரேந்தரனுக்குப் பின் சிக்கனை ஏழிசைக்கு கொண்டு போக சட்டென நியாபகம் வந்தவனாய்,

“அவ இதெல்லாம் சாப்பிட மாட்டா..சைவத்தை மட்டும் பரிமாறுங்க.”,என்று கூற பெரியவர்கள் முகத்தில் ஒரு திருப்தி பரவியது.

ஒவ்வொருவராய் உணவை முடித்து எழுந்து கொள்ள வீரேந்திரன் அவள் சாப்பிடுவதற்காக காத்திருந்தான்.ஏதோ சிந்தனையில் உணவை அளந்து கொண்டிருந்தவள் அவன் தனக்காக காத்திருப்பதை உணர்ந்து மடமடவென சாப்பிட்டு விட்டு எழுந்து கொண்டாள்.

கை கழுவி வந்தவன் அவளிடம்,”எனக்கு வெளியில் வேலை இருக்கு.நீ அம்மாவோட இல்லைனா காவ்யாவோட இரு.”,என்றான்.

“சரி”,என்றவளை அழைத்துக் கொண்டு தனது பெற்றோர் அறைக்குச் சென்றவனை இரண்டு நிமிடம் அமருமாறு கூறி பேச்சைத் தொடங்கினார்.

“கண்ணா..நாளை மறுநாள் வரவேற்புக்கு ஏற்பாடு பண்ணிருக்கோம்.”

“எதுக்குப்பா அதெல்லாம்..”

“உனக்கு தேவைப்படாம இருக்கலாம் ஆனால் சேதுபதி வீட்டு மூத்த மருமகளுக்கு வேணும் டா.உன் மனைவினு ஊரறிய சொல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கு.”

“…”

“சாயந்திரம் பாட்டி பெரியப்பா உன் அத்தை சித்தி எல்லாரும் வராங்க.”

“அதுக்குள்ள எல்லாருக்கும் ஏன் சொல்றீங்க?”

“ஏன் இந்திரா..”,என்ன சொல்வதென தெரியாமல் அமைதி காத்தவன் சில நொடிகளுக்குப் பின்,

“சரி என்னவோ பண்ணுங்க,எனக்கு வேலையிருக்கு நான் வர்ற வரை இவ உங்க கூட இருக்கட்டும்.இல்ல ரெஸ்ட் எடுக்கணும்னா மேல ரூம்க்கு போய்க்கோ”,என்று பெற்றோரிடம் ஆரம்பித்து மனைவியிடம் முடித்து எழுந்து கொண்டான்.

தவிப்பாய் தன்னை பார்ப்பவளிடம் சமாதானம் கூறத் தோன்றாமல் விடுவிடுவென வெளியே சென்றிருந்தான்.

“ஏழிசை..”

“ம்மா..”,என்றவளை வாஞ்சையாய் பார்த்தவர் தன்னருகில் அழைக்க அவரருகில் சென்றவள்,

“நேக்கு அப்படி தான் கூப்பிட வர்றது..கூப்பிடலாமோல்யோ?”

“உனக்கு எப்படி தோணுதோ அப்படியே கூப்பிடு”,என்றவர் ராஜராஜனைப் பார்த்து சிரித்தார்.

“என்னம்மா மருமகளே இந்த அப்பாவை கண்டுக்க மாட்ட போலேயே”,என்றவரைப் பார்த்ததும் கண்ணீர் வந்துவிட்டது.

“இனி யாரைம் அப்படி கூப்பிட முடியாதேனு ரொம்ப வருத்தமா இருந்தேன் பா..”,என்றவளின் தலையை வருடிக் கொடுத்தார்.

பர்வதம் அங்கிருந்த அலமாரியில் இருந்து ஒரு பெரிய தட்டை அவளிடம் நீட்டினார்.கேள்வியாய் நோக்கியவள் மேலிருந்த துணியை விலக்கிப் பார்க்க விலையுயர்ந்த பட்டுப் புடவையும் சில வைர நகைகளும் இருந்தன.

“இதெல்லாம் வேண்டாம் மா..”

“சாய்ந்திரம் உன்னைப் பார்க்க சமஸ்தானத்தில் இருந்து நிறைய பேர் வருவாங்க.இதெல்லாம் போட்டுக்கலனா நல்லாயிருக்காது.கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு இதெல்லாம் போட்டு தயாராகி வா..ம்ம்?”

“சரிம்மா..”

“போ கண்ணா..முகமே சோர்வா இருக்கு பாரு..சாயந்திரம் என் மருமகளை சிரிச்ச முகமா பார்க்கணும்..போ”,என்றவர் தோள்தட்டி அனுப்பி வைத்தார்.

“நல்ல பொண்ணு,இல்ல பர்வதம்?”

“ஆமாங்க..நம்ம இந்திராவை நல்ல பார்த்துப்பானு தோணுது..”,என்று உணர்ந்து கூறினார்.