பத்தாவது நிமிடத்தில் கையில் ஒரு பையோடு வந்தவன் வீரேந்திரனிடம் அதைக் கொடுக்க உள்ளிருந்த பெட்டியை எடுத்தவாறு இன்ஸ்பெக்டரை அழைத்துக் கொண்டு கணபதியின் மகளை நோக்கிச் சென்றான்.

பயத்தில் எழுந்து நின்று தன்னை வெறித்தவளைப் பார்த்தவன் ஒரு நொடி விழி மூடி தன்னை நிதானித்து கொண்டு அவளது கைப் பிடித்து அங்கிருந்த கணபதியின் புகைப்படத்திற்கு எதிரே நின்றான்.

அங்கிருந்த யாரும் என்ன ஏதென யோசிக்கும் முன் கையிலிருந்த தங்கத் தாலியை அவள் கழுத்தில் சேர்த்திருந்தான்.

அத்தனை குழப்பத்திலும் அவளது அதிர்ச்சி நிறைந்த கண்களை விட்டு தன் விழிகளை அங்கு இங்கு நகர்த்தியிருக்கவில்லை அவன்.

“இன்ஸ்பெக்டர் இனி இவங்களை இங்கிருந்து கூட்டிட்டு போறதுல எந்த பிரச்சனையும் இருக்காதுனு நம்புறேன்.”

“யெஸ் சார்.”,என்றவரின் முகத்தில் மிகப்பெரும் பிரச்சனை தவிர்க்கப்பட்டதே என்ற நிம்மதி இருந்தது.

“அடிப்பாவி ஊமைக் கொட்டான் மாதிரி இருந்துட்டு..யாரு யா நீ என் குடும்பத்தை சீரழிக்கவே வந்தியா…எனக்கு மருமகளா ஆக வேண்டியவளை..”,இன்னும் என்னென்ன பேசியிருப்பாளோ வீரேந்திரனின் கை அருகிலிருந்த அவள் கணவனின் மீது பதிந்ததில் தானாகவே வாயை மூடிக் கொண்டாள்.

“இதுக்கு மேல சத்தம் வந்தது கொன்னு புதைச்சுருவேன்.”,என்றவன் ஒரு நொடியில் தன் மனைவியாய் மாறியிருந்தவளிடம்,

“போ உன் பொருளை எல்லாம் எடுத்துட்டு வா..”

“ராஜு..”

“இங்க தேவையில்லாம யாரும் இருக்கக் கூடாது நாங்க கிளம்பின உடனே கதவை சாத்தி சாவியை என்கிட்ட கொண்டு வந்து கொடு.”

“சரி அண்ணையா..”

“நீ தான் இங்க வா..”,கணபதியின் தங்கை அமைதியாய் வந்து நின்றாள்.

“இனி இவ வீரேந்திரனோட மனைவி.தேவையில்லாம அவ விஷயத்தில் மூக்கை நுழைச்சா…”,வேகமாய் இடவலமாய் தலையசைத்தாள்.

“போலாமா?!”,என்றவனின் கர்ஜனையில் கையில் பையோடு கிட்டத்தட்ட ஓடி வந்தாள் வீரேந்திரனின் மனைவி.

ஒருவன் அவளது பையை வாங்கிக் கொள்ள தனது தந்தையின் புகைப்படத்தை கையில் எடுத்துக் கொண்டவள் கணவனோடு சேர்ந்து நடந்தாள்.

காரில் அவள் ஏறுவதற்காக காத்திருந்தவன் பின் ஏறி கதவைச் சாற்றினான்.அடுத்த நொடி இமை மூடி இருக்கையில் பின் சாய்ந்து கொண்டான்.

சில நிமிடங்கள் அமைதியிலும் அழுகையிலுமாய் கரைய,

“உன் பேர் என்ன?”,என்றவனின் குரலில் தூக்கி வாரி போட்டது அவளுக்கு.

“ஏன் இப்படி பயப்படுற..எனக்குமே இன்னும் நடந்ததை ஏத்துக்க முடியல.சரியா தப்பானு கூட தெரியல.பட் இதை இனி மாத்த முடியாது.உன் பேர் என்னனு கேட்டேன்?”

“ஏ…ஏழிசை”

“எனக்கு கொஞ்சம் டைம் கொடு நிச்சயமா எல்லாத்தையும் சரி பண்ணிடுவேன்.இனி நீ ஏழிசை வீரேந்திரன் சேதுபதி.பிடிச்சாலும் பிடிக்கா விட்டாலும் இதை மாத்திக்க முடியாது.சரியா?!”சரியென பொம்மையைப் போல் தலையசைத்தாள்.

வீரேந்திரன் மீண்டும் கண்மூடி தலை சாய்த்துக் கொண்டான்.ஹோட்டாலின் வாசலில் கார் நின்றவுடன் பழக்க தோஷத்தில் அவன் போக்கில் முன்னே செல்ல ஏழிசை விழித்து நின்றிருந்தாள்.

“மேடம் வாங்க..”,என்ற ராஜுவின் குரலில் தயக்கமாய் உள்ளே வந்தவளின் நினைவு வந்தவனாய் நடையின் வேகத்தைக் குறைத்திருந்தான் வீரேந்திரன்.

தனது அறைக்குள் செல்ல அவளுக்கு வழிவிட்டு நின்றவன் ராஜுவிடமிருந்து அவளது பையை வாங்கிக் கொண்டான்.

“நாளைக்கு மார்னிங் ஊருக்கு கிளம்பலாம் ராஜு..”,

“சரி அண்ணையா..”,என்றவன் சென்றுவிட கதவை தாளிட்டு உள்ளே வந்த நேரம் கணபதியின் போட்டோவை இறுகப் பிடித்தபடி அழுது கொண்டிருந்தாள் அவனின் மனைவி.

ரூம் சர்வீஸிற்கு அழைத்து உணவை ஆர்டர் செய்து காபியும் ஆர்டர் செய்தான்.அடுத்த பத்து நிமிடத்தில் அனைத்தையும் அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டுச் சென்றனர்.

“அழுது அழுது வீக்கா இருப்ப கொஞ்சமாவது சாப்பிடு..நல்ல ரெஸ்ட் எடு”,என்றவன் குளியலறைக்குள் நுழைந்து கொள்ள என்ன செய்வதென தெரியாமல் காபியை எடுத்து பருக ஆரம்பித்தாள்.

வெளியில் வந்தவன் உணவுகள் அப்படியே இருப்பதைப் பார்த்து கடுப்பானவனாய்,

“நீ ஒண்ணும் குழந்தை இல்லை.கொஞ்சமாவது சூழ்நிலையை புரிஞ்சு நடந்துக்கோ.சாப்பிடாம அடுத்து மயங்கி விழுந்து இருக்குற பிரச்சனையில் உன்னை வேற ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிட்டு அலைய முடியாது புரியுதா?!”,சற்று மட்டுப் பட்டிருந்த அவளின் கண்ணீர் மீண்டும் கன்னம் தொட்டது.

“சாப்பிட தான சொன்னேன் ஏன் அழற?!”,என்று கத்தியவனைப் பாவமாய் பார்த்தவள்,

“நேக்கு அசைவம் சாப்பிட்டு பழக்கமில்ல..”,என்று திக்கித் திணறி கூறி முடித்தாள்.

அப்போது தான் அவளது மொழியை உணர்ந்தவனாய்,”ஆனா..உங்க அப்பா சாப்பிடுவாரே?!”

“அது.அம்மா சாப்பிட மாட்டா..அப்பாவும் அம்மாவும் லவ் மேரேஜ்.”

“ஓ!!”,என்றவன் அவளுக்குத் தகுந்த மாதிரியான உணவை ஆர்டர் செய்தான்.

“இதெல்லாம் நீங்க சாப்பிடுங்கோ..உங்களுக்கும் பசிக்கும் தானே..”,என்றவளை பார்த்தபடி நாற்காலியில் அமர்ந்து உணவை உண்ண ஆரம்பித்தான்.

அதற்குள் அவளுக்கான உணவும் வந்துவிட அவளும் உண்டு முடித்தாள்.

“நீ ரெஸ்ட் எடு நான் வெளியே போயிட்டு வரேன்..”,என்றதும் அரண்டு விழித்தவளைப் பார்த்து உண்மையாகவே பாவமாய் இருந்தது.

“நீ பயந்த சுபாவம்னு உங்கப்பா சொல்லிருக்காரு..ஆனால் இந்த அளவுனு நான் நினைக்கல..இங்க நீ பாதுகாப்பா இருப்ப நிம்மதியா தூங்கு..வெளியில் என் ஆட்கள் எப்பவும் இருப்பாங்க.சீக்கிரமே வந்துட்றேன்.சரியா?”

“கண்டிப்பா சீக்கிரம் வந்துருவேளோனோ?”

“வந்துருவேன்.”,என்று திரும்பியவனின் உதடுகள் புன்னகையில் மலர்ந்தது.

அவன் சென்றதும் சற்று நிம்மதியாய் உணர்ந்தாள் ஏழிசை.என்ன ஏதென்று எதுவும் தெரியாமல் இந்த நொடி இவன் மனைவியாய் இங்கு இருக்கிறோமே அடுத்து என்ன?தன் எதிர்காலம் என்ன என்ற கேள்விகளை நினைத்தாலே தலைவலி எடுத்தது.

அனைத்தையும் ஒதுக்கித் தள்ளியவளாய் தனக்கான மாற்று உடையோடு குளிக்கச் சென்றாள்.

வந்து படுத்தவளுக்கு இருந்த நிலைமையில் தூக்கம் அதுவாய் கண்களைத் தழுவியது.

வெளியில் சென்று வருவதாய் கூறியவன் அந்த ஹோட்டலின் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தான்.வீட்டிற்கு விஷயத்தைக் கூற வேண்டும்.யார் என்ன மாதிரியான மனநிலையில் இருப்பார்க்கள் என்று தெரியவில்லை.

கணபதி என்ற ஒரு நல்ல மனிதருக்காக தான் செய்த இந்த செயல் சரியென்றே பட்டது வீரேந்திரனுக்கு.

தான் அவளை மனைவியாகவும் அவள் தன்னை கணவனாகவும் ஏற்க எத்தனை நாட்கள் ஆகும் என்றே புரியவில்லை.

எது எப்படியானாலும் அவளுக்கான மரியாதைக்கும் பாதுகாப்புக்கும் எப்போதும் முழு பொறுப்பாய் இருக்க வேண்டும் என்று உறுதி எடுத்தவனாய் தன் தந்தையை போனில் அழைத்தான்.

“சொல்லு இந்திரா..”

“அப்பா..ஒரு விஷயம் பேசணும்.அம்மா பக்கத்தில் இருந்தாங்கனா ஸ்பீக்கரில் போடுங்களேன்.”

“சொல்லு கண்ணா..என்னாச்சு..”

நடந்ததைக் கூறிவிட்டு அவன் அமைதி காக்க மறுபுறமும் அமைதியாய் இருந்தது.

“ப்பா.”

“என் மருமகளைப் பத்திரமா கூட்டிகிட்டு வா கண்ணா..”,என்ற மனைவியை புன்னகையாய் பார்த்திருந்தார் ராஜராஜன்.

“ம்மா..”

“இந்திரா நம்மை நம்பினவங்களுக்கு என்ன பண்ணணுமோ அதை தான் பண்ணிருக்க..வருத்தப்படாம நிம்மதியாக அடுத்து நடக்கப் போறதைப் பார்ப்போம் டா..சாப்டியா நீ?”

“ம்ம் ஆச்சு மா..உங்க இரண்டு பேருக்கும் நிஜமாவே வருத்தம் இல்லையா?!”

“எங்க பிள்ளைக்கு நாங்க எதிர்பர்த்து காத்திருந்த குடும்ப வாழ்க்கை அமைஞ்சுருக்கு இந்திரா..எந்த சூழ்நிலையில் நடந்திருந்தாலும்,நடந்த கல்யாணம் உண்மை..உன் சந்தோஷம் தான் எங்களுக்கு பிரதானம் புரியுதா?”

“ம்ம்..”

“சரி கண்ணா காலையில் சீக்கிரமே கிளம்பி வந்துருங்க..”,என்றவரோடு மேலும் சில நொடிகள் பேசிவிட்டு போனை வைத்தவனுக்கு மனதின் குழப்பம் மறைந்து சற்று பழைய திடம் திரும்பியிருந்ததாய் தோன்றியது.

தாய் தந்தையைத் தவிர நடந்ததை புரிய வைக்க வேண்டிய நிலையில் வேறு யாரும் இல்லை என்பதில் தெளிவாக தான் இருந்தான்.அவர்களும் நிலைமையை சரியாய் புரிந்து கொண்டது தனி தெம்பை கொடுத்திருந்தது.

தன்னைச் சுற்றியிருந்த இருளை வெறித்தவனுக்கு வெகு நேரமாய் இங்கே இருப்பது உரைக்க எழுந்து அறைக்குச் சென்றான்.

தன்னிடம் இருந்த சாவி கொண்டு கதவைத் திறந்து கொண்டவன் அங்கே சென்ற நேரம் இரவு விளக்கு வெளிச்சத்தில் அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்தாள் ஏழிசை.

கட்டிலின் ஓரத்தில் காலை குறுக்கி தன் தந்தையின் படத்தை இறுக்கிப் பிடித்தவாறு இருந்தவளை பார்க்கும் போது ஒருவித உணர்வு மனதை அழுத்தியது.

அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவன் அவனறியாமல் அப்படியே உறங்கியும் போனான்.எங்கோ கேட்ட சத்தத்தில் விழித்தவனைப் பார்த்து திருதிருவென முழித்தாள் ஏழிசை.

“சாரி சாரி..தண்ணி தாகமா இருந்தது.மூடி தவறி கீழே விழுந்துடுத்து.”

மணியைப் பார்த்தவன் காலை நான்கு என்பதை உணர்ந்து தன்னைச் சீர்படுத்தி நிமிர்ந்து அமர்ந்தான்.

“நாம இப்போ மைசூர் கிளம்பணும்.”

“?!”

“நம்ம வீட்டுக்கு..”

“ஓ சரி..”,என்று ஓரமாய் நின்றவளை கை நீட்டி விரல்களை வளைத்து வா என அழைக்க தயக்கமாய் வந்தவளை எதிர் சோபாவில் அமருமாறு கூறினான்.

“எதாவது சொல்லணுமா?”

“அது..”

“எதுவாயிருந்தாலும் சொல்லு..”

“அப்பா உங்களோட நன்னா பழகுவாரா?”

“ம்ம்..”

“அதனால தான் அவரை கொன்னுட்டாளா?”

“உன் அப்பா இறந்ததுக்கு காரணம் நான் கிடையாது..”

“ஆனா அவரை வெட்டிட்டதா தானே சொன்னா..”

“அதுக்கு காரணம் வேற யாரோ..”

“ஓ…”,என்றவளின் முகத்தில் குழப்பம் மண்டிக் கிடந்தது.

“என்னை நம்புறியா?”

“ஆங்ங்!!”

“என் மேல உனக்கு நம்பிக்கை இருக்கானு கேட்டேன்..”

“ம்ம்…”

“அப்போ நான் சொல்றதையும் நம்பு.உங்கப்பாவோட கடைசி வார்த்தை நீ தான்.”

“உங்களோட பேசினாரா?”,என்றவளுக்கு குரல் கரகரத்தது.

“ம்ம்…என் பொண்ணு பத்திரம்னு சொன்னார்.அதனால தான் உன்னைத் தேடி வந்தேன்.நீ எதையும் புரிஞ்சுக்குற நிலைமையில் இல்ல.அதே நேரம் உன்னை அங்க விட்டுட்டு வர்றது நல்லதுனு எனக்கு தோணல.

உங்கப்பா எனக்காக எவ்வளவோ பண்ணிருக்கார்.அதனால உன்னை நல்லபடியா பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு.மைசூர் போனதுக்கு அப்பறம் உனக்கு எந்த பிரச்சனையும் வராது.நடந்தையே நினைச்சு கவலைபடாம தைரியமா இருக்கணும் புரியுதா..”

“ம்ம்..”

“உங்க ஆத்துல இதுக்கு என்ன சொல்லுவாளோ?!”

“எதுக்கு??!”

“இதுக்கு..”,என்றவள் தன் தாலியைக் காட்டினாள்.

“அதெல்லாம் நான் பார்த்துப்பேன்.உன்னை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க.சரியா..”

“ம்ம் சரி..”

“என் பேரு என்ன?”

“ஆங்!!!”

“இல்லை உனக்கு என் பேராவது தெரியுமானு கேட்குறேன்.”

லேசாய் தலை குனிந்தவள் மெதுவாய்,”வீ..வீரேந்திர சேதுபதி..”,என்றவள் இன்னுமாய் குனிந்து கொண்டாள்.

லேசாய் இதழ் விரித்தவனின் பார்வை அவளது மூக்குத்தியின் மீது படிந்து மீண்டது.அழகிய ஒற்றை வெள்ளைக் கல் மூக்குத்தி அவளது வெளிர் நிறத்திற்கு பாந்தமாய் இருந்தது.

“சரி நீ போய் ரெடியாகிட்டு வா.அதுக்கப்பறம் நான் தயாராகுறேன்.”,என்றபடி அவன் அலைப்பேசியை கையில் எடுக்க ஏழிசை எழுந்து தயாராகச் சென்றாள்.

“ராஜு இன்னும் அரை மணி நேரத்துல கிளம்பணும்..”,என்றவன் மேலும் சில நிமிடங்கள் பேசிவிட்டு இருக்கையிலிருந்து எழுந்த நேரம் தலையில் கட்டிய ஈரத் துண்டோடு புடவையில் வந்து நின்றவளைப் பார்த்தவன் முதல் முறையாய் அவளைச் சரியாய் கவனிக்க முயற்சி செய்தான்.

பால் நிறம் ஒல்லியான தேகம் அவனுக்கு ஏற்றவாறான உயரம் சின்னதாய் பிறை நெற்றி கூர் மூக்கு அதற்கு மகுடமாய் அந்த மூக்குத்தி அத்தனைக்கும் மேல் இரு கோடுகள் போல் வரையப்பட்ட அந்த இளஞ்சிவப்பு இதழ்கள்.

சட்டென பார்வையைத் திருப்பியவனிடம்,”உங்க ஆத்துல யாரெல்லாம் இருப்பானு தெரியலை.அதான் புடவை கட்டினேன்.”,என்றவளின் தயக்கக் குரலை உணர்ந்தவனாய் ஆமோதிப்பாய் தலைசைத்து விட்டு நகர்ந்தான்.

அவனது எக் யூ வி சீரான வேகத்தில் மைசூரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.தன்னருகில் இருப்பவனை அவ்வப்போது ஓரப் பார்வை பார்த்த வண்ணம் அமைதியாய் அமர்ந்திருந்தாள் ஏழிசை.

“நீ வேலை பார்த்த பேங்க்ல இருந்து ரிலீவிங் லெட்டர் கொடுக்க சொல்லிருக்கேன்.ஒரு வாரத்துல வந்துரும்.அதில்லாம முடிக்க வேண்டிய வேலை எதுவும் இருக்கா?”

“இல்ல..அந்த வீடு மட்டும் தான் மத்தபடி என் திங்க்ஸ் எல்லாம் எடுத்துண்ட்டு வந்துட்டேன்.”

“ம்ம்..”

“இனி சென்னை வர வேண்டியது இருக்காது தானே?!”

“இருக்காது.இங்க இருக்குற யாரையும் பார்க்க வேண்டிய அவசியமும் இருக்காது.”,என்றவுடன் அவள் முகத்தில் ஒருவித நிம்மதி.

“உன் அத்தையோட இருக்க பிடிக்குமா?”,இல்லை என்பதாய் வேகமாய் தலையசைத்தாள்.

“ஏன்?”

“அது..அவா புள்ளையை பார்த்தா நேக்கு பயம்..”

“அப்பறம் ஏன் அந்த வீட்டை விட்டு வராமயே இருந்த?”

“என் அம்மாவோட பூர்வீக வீடு அது.அப்பாவோட வேலை காரணமா நான் இங்க இக்குறதே நல்லதுனு சொன்னார்.அதுவுமில்லாம எங்க மாமா என்னை போக விடல..நான் அப்போவோட போனா அப்பாவை கொன்னுடுவேன்னு சொன்னார்..”

“இதெல்லாம் அப்பாக்கு தெரியுமா?”

“நான் சொன்னதில்லை.அவரே பாவம் அம்மா இல்லாம தனியா கஷ்டப்படுறார் இதுல என்னைப் பத்தின கவலை ஏன்னு சொல்றது இல்ல.”

“அப்படியெல்லாம் ஒருத்தர் நினைச்சவுடனே யாரையும் கொல்ல முடியாது.அவரு சொன்னதெல்லாம் மனசுல வைச்சுகிட்டா அமைதியா இருந்த?”

“அது..வந்து…”

“???!”

“அத்தை புள்ளை இருக்கானோன்னோ அவன்..என்கி..”,கண்கள் கலங்கியது.

“அழாதேனு சொல்லிருக்கேன்.”,என்றவனின் அதட்டலில் உள்ளடக்கியவளாய்

“நான் அப்பா சொல்ற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணினா என்னை…என்கிட்ட தப்பா நடந்துடுவேன்னு சொன்னான்.”

“….”

“அப்பாகிட்ட பேசி எப்படியும் அவா அம்மா சம்மதம் வாங்கிடுவா..நான் தேவையில்லாம எதாவது பண்ணினா என்னையும் அப்பாவையும்..”,தொண்டை அடைத்தது அவளுக்கு.

தன்னருகில் கதவில் இந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளிடம் கொடுத்து குடிக்க வைத்தான்.

“ஒரு வேளை நீ உன் அப்பாகிட்ட எல்லாத்தையும் சொல்லிருந்தா நிறைய விஷயங்களை தடுத்திருக்கலாம்.”,என்றவன் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டான்.