விழாவின் நாயகனுக்கும் நாயகிக்கும் பெரிய நாற்காலிகள் போடப்பட்டிருக்க தன் ஆருயிர் மனைவியை கரம் கோர்த்து அழைத்து வந்தான் வீரேந்திரன்.

பட்டு வேவ்டி சட்டையில் கம்பீரமாய் அவனிருக்க அந்த தங்க சரி சேலையில் அவனுக்கு நிகராய் பொருத்தமாய் வந்தவர்களை விட்டு ஒருவரும் விழியகற்றவில்லை.

நலுங்கு வைத்து வளையல்கள் போட்டு விட ஆரம்பிக்க அவள் அருகில் அமர்ந்தவன் அனைத்தையும் ரசித்துக் கொண்டிருந்தான்.

பர்வதம் தொடங்கி பெண்கள் அனைவரும் வளையல் அடுக்கி முடித்து வீரேந்திரனை வளையலிட அழைத்தனர்.

கை நிறைய சந்தனத்தை எடுத்தவன் இரு கன்னத்தையும் தாங்கியவாறு மென்மையாய் அழுந்தத் தடவி குங்குமமிட்டு தன் சட்டைப் பையிலிருந்த வைர வளையல்களை இரு கைகளிலும் அணிவித்து நிமிர்ந்தான்.

இருவரின் கண்களிலும் தெரிந்த காதலைப் பார்த்த சிறியவர்கள் அனைவரும் சொக்கிப் போக பர்வதம் இரு கை நீட்டி திருஷ்டி கழித்தார்.

அதன்பின் காவ்யாவோடு ஈஸ்வர் வந்து தான் வாங்கி வந்திருந்த நகைப்பெட்டியை அவளிடம் நீட்டி ஆசீர்வதித்தான்.

முதல் வரிசையில் இருந்த விஷாலையும் அவன் தந்தையையும் ஏழிசை அழைக்க திவ்யாவின் மகிழ்ச்சிக்கு அளவில்லாமல் போனது.

மரியாதை நிமித்தமாய் வீரேந்திரனே சேகரை அருகில் சென்று அழைத்து வந்தான்.

“என்ன ஏழிசை மத்தவங்க போடட்டும் மா..”

“இருக்கட்டும் மாமா..நீங்களும் இனி நெருங்கின சொந்தமாயாச்சே..”,என்றவளைப் பார்த்து புன்னகைத்தவர் கொண்டு வந்த பரிசைக் கொடுத்து ஆசீர்வதித்துச் சென்றார்.

“வாழ்த்துக்கள் டா ஏழிசை..”என்ற விஷால் தன் பரிசைக் கொடுத்து சிரித்தான்.

“மாம்ஸ்..வந்தன்னைக்கே கவுத்துட்டீங்களே எல்லாரையும்..”

“வா டா நல்லவனே காலையிலே இருந்து ஆளையே காணும் செம பிஸி போலயே”,என்றவன் ஓவியாவை கண்காட்ட கையெடுத்து தலைமேல் வைத்தவனாய்,

“டாக்டரே புண்ணியமா போகும்..மீ பாவம்..”

“என்ன மச்சான் என்ன இருந்தாலும் நீ என்னோட ஸ்வீட் மச்சான்..உன்னை மாட்டிவிடுவேனா..”,என்றபடி தோளில் கைபோட்டுச் சென்றான்.

ரவியும் உமையாளும் ஆளுக்கொரு கரத்தில் வளையல் அணிவிக்க புன்னகையோடு ஏழிசை அவர்களிடம்,

“அடுத்த பங்ஷன் சீக்கிரமே வரணும்..இரண்டு பேரும் சொல்லப் போற குட் நியூஸ்காக வெயிட்டிங்”,என்றவளைக் கட்டிக் கொண்டாள் உமையாள்.

வீரேந்திரனுக்கே ஆச்சரியம் தான் உமையாள் இப்போதெல்லாம் இத்தனை இயல்பாய் பேசுவது பழகுவது நினைத்து.

ஓவியா அவளருகில் புகைப்படம் எடுக்க வரும் நேரம் ஏழிசை கணவனை அர்த்தமுள்ள பார்வைப் பார்க்க உடனே தன் தம்பியைப் பார்த்தான் வீரேந்திரன்.

இயல்பாய் நிற்பதாய் ஓவியாவின் அருகில் நின்றிருந்தவனைப் பார்த்தவனுக்கு புன்னகை அரும்பியது.

ஷ்யாம் தன் மனைவி குழந்தையோடு வந்திருந்தான்.அவர்களைப் பார்த்ததும் ஏழிசை மகிழ்ச்சியாய்,

“வாங்க அண்ணா..அண்ணி வாங்க..”,என்றதும் இருக்கும் இடம் உணர்ந்து பதறி விட்டார்கள் இருவரும்.அத்தனை பணக்காரர்களும் சுற்றி நிறைந்திருக்கும் வீட்டில் தன்னை உரிமையாய் அழைப்பவளை நினைத்து நினைத்து பூரித்துப் போனான் ஷ்யாம்.

வீரேந்திரனின் மீது அளவு கடந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவன் அவனின் விழிப்பார்வை தன் மீது விழாதா என்று ஏங்கும் பணக்காரர்கள் இருக்க அவனுக்கு இத்தனை நெருக்கமாய் வேலை செய்வதையே பெருமையாய் கருதியவனுக்கு இது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை உணராதவளாய் இயல்பாய் பாசமாய் அழைத்தவளுக்காக எது வேண்டுமானாலும் செய்ய வேண்டும் என்று தனக்குள் நினைத்துக் கொண்டான்.

ஏழிசைக்காக வாங்கி வந்த வெள்ளிக் காப்பை அவள் கரங்களில் ஷ்யாமின் மனைவி அணிவிக்க குழந்தையை கொஞ்சிவிட்டு சாப்பிட அனுப்பி வைத்தாள்.

விழா சிறப்பாய் முடிந்திருக்க கீழிருந்த அறையில் அவளுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தனர் உமையாளும் காவ்யாவும்.

“அக்கா முதல் வேளையா சுத்தி போடணும்.”

“ஆமா உமையாள் எல்லார் கண்ணும் ஏழிசை மேல தான்.”

“அதுலேயும் ஒருத்தங்களை கவனிச்சீங்களா அப்படியே அப்பட்டமா தெரியுது அவங்க கண்ல பொறாமை.”

“ஒவ்வொரு கண்ணும் ஒரு மாதிரி..கண்ணடி மட்டும் படவே கூடாது..”,என்று அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க தன் மீதான அவர்களது பாசத்தில் நெகிழ்ந்து போனாள் ஏழிசை.

உண்டு முடித்த நேரம் வீரேந்திரன் அறைக்குள் நுழைந்தான்.பெண்கள் இருவரும் எழுந்து கொள்ள,

“சாப்டியா இசை..டயர்டா இருக்கா?”

“சாப்ட்டேன் அதெல்லாம் ஒண்ணுமில்லை.என்னனு சொல்லுங்கோ!”

“ஒரு நிமிஷம் என்கூட வா..”,என்றவன் கை கொடுக்க மெதுவாய் எழுந்தவள் கேள்வியாய் அவனோடு சென்றாள்.

பந்தி நடைபெற்ற இடத்தைப் பார்த்தவளுக்கு விழிகள் விரிந்தன.உறவினர்கள் விருந்தினர்கள் உண்டு முடித்திருக்க ரவி காவலுக்கு இருப்பவர்களை உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தான்.

சட்டென தன் கணவனைப் பார்க்க அவனோ புன்னகையாய் அவளோடு நடந்தான்.

“நீதான சொல்லுவ மத்தவங்களோட ஆசீர்வாதம் வேணும்னு..என் இசைக்கும் பொண்ணுக்கும் அது இன்னைக்கு நிறையவே வேணும் அதான்.எல்லாருக்கும் ஸ்வீட் மட்டும் வைச்சுட்டு நீ கிளம்பு நான் பாத்துக்குறேன்.”

கண்கள் கலங்கி விட்டிருந்தது பெண்ணவளுக்கு.தனக்காக என்னவெல்லாம் செய்கிறான்.சொல்லாமலே எவ்வளவு புரிந்து கொள்கிறான்.இதை விட சிறந்த பரிசாய் எதையும் தர முடியாது என்றல்லவா இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கிறான் என்று நினைக்க நினைக்க நெஞ்சம் நிறைந்து போனது.

பந்தியில் முதலாய் வேணியும் கற்பகமும் அமர்ந்திருக்க அதைத் தொடர்ந்து தோட்டக்காரர்களும் மற்ற வீட்டு வேலை செய்பவர்களும் அமர்ந்திருந்தனர்.

எதிர் திசையில் ராஜுவோடு சேர்ந்து காவலுக்கு இருப்பவர்கள் அனைவருமாய் அமர்ந்திருந்தனர்.

ராகவ் திவ்யா ரவி என்று அனைவரும் ஒரு ஒரு பாத்திரத்தை கையில் வைத்து நிற்க பின்னால் வந்த காவ்யாவும் உமையாளும் கூட சென்று நின்று கொண்டனர்.

தன் கையில் இருந்த இனிப்பு பாத்திரத்தை அவளருகில் நீட்டி நின்றான் வீரேந்திர சேதுபதி.எவ்வளவு நேரமெடுத்தாலும் ஏழிசையால் நிதானத்திற்கு வர முடியாமல் போயிருந்தது.

வேணியின் இலையில் அவள் இனிப்பை வைத்தது தான் தாமதம் வேணி அழுது விட்டிருந்தாள்.கற்பகம் அவளைச் சமாதானப்படுத்த வழி தெரியாது தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

“என்ன வேணி இது..சந்தோஷமா சாப்பிடு”

“ம்மா..உங்க மனசுக்கு நீங்களும் ஐயாவும் நூறு வருசம் நல்லாயிருப்பீங்க..”,என்றவள் கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.

ராஜு அருகில் வந்ததும் அவன் எழுந்து நிற்க வீரேந்திரன் அவன் தோள் தொட்டு இருக்கையில் அமர்த்தினான்.

தன் சட்டையிலிருந்து சிறு பொட்டலத்தை எடுத்தவன் வீரேந்திரனிடம் நீட்டினான்.

யோசனையாய் வாங்கிப் பார்த்தவன் அதிலிருந்த விபூதி குங்குமத்தை புன்னகையோடு ஏழிசையிடம் நீட்ட அவள் எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டாள்.

சேதுபதி குடும்பத்து வாரிசுகள் பரிமாற தாங்கள் உணவு உண்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாமல் போயிருந்தது அங்கிருந்த அனைவருக்கும்.

பர்வதமும் ராஜராஜனும் விருந்தினர்களை கவனிப்பதில் மும்முரமாய் இருந்தாலும் இங்கு நடந்தது எதுவும் அவர்களது கண்களை விட்டு தப்பவில்லை.

பர்வதமே ஒரு நொடி கண்கலங்கித் தான் போனார்.அவர் அனைவரிடமும் பேதமின்றி பழகுபவர் தான் எனினும் சமஸ்தான வழக்கத்திலேயே பிறந்து வளர்ந்தவருக்கு வேலையாட்களை சரிசமமாய் நடத்தும் அளவு தெரிந்திருக்கவில்லை.

இன்று தன் மகனின் செயல் அதற்கு காரணமான மருமகளின் மலர்ந்த முகம் அனைத்தும் பலமடங்கு நிறைவைக் கொடுத்திருந்தது.

விருந்தினர்கள் அனைவரும் கிளம்பியிருக்க ராகவ் மற்றும் திவ்யா நண்பர்களோடு இரவு கிளம்புவதாய் இருந்தனர்.

ராகவ் அண்ணியோடு கதையளந்து கொண்டிருந்தான்.

“ஏஞ்சல் என்ன ஆனாலும் ஹாஸ்பிட்டல் போறதுக்குள்ள எனக்கு சொல்லிடணும்.நான் தான் முதல்ல பொண்ணைத் தூக்குவேன்..டீலா?”

“நான் இருக்குற வலியில் உனக்கு கால் பண்ணிண்டு இருப்பேனா?”,என்றவள் முறைக்க அனைவரும் சிரித்தனர்.

“அப்போ உங்க ஆத்துக்காரரைப் பண்ண சொல்லுங்க..”

“உனக்கு கொழுப்பு ரொம்ப ஏறிடுச்சு ராகவ்.”

“ஆமா அண்ணி இதுல இருந்து தான்..”,என்றவன் தன் செயின் லாக்கெட்டை காட்டினான்.

“ஷப்பா இவன் அலப்பறை முடியவே இல்ல..”,என்று திவ்யா கூற மற்றவர்கள் சிரித்தனர்.

வீரேந்திரனை அழைத்துக் கொண்டு அங்கு வந்த பர்வதமும் ராஜராஜனும் அனைவரையும் நேராய் அமருமாறு கூற நீள சோபாவில் வீரேந்திரன் ஏழிசை மற்றும் காவ்யா ஈஸ்வர் குழந்தையோடு உட்கார பக்கத்து சோபாவில் ரவிந்தரன் உமையாளோடு அமர்ந்தான்.

அவர்களது சேர் கைப்பிடியில் திவ்யாவும் ராகவும் அமர்ந்து கொள்ள அனைவருக்குமாய் திருஷ்டி சுத்தினார் பர்வதம்.

சிறியவர்கள் கிளம்பத் தயாராக ஏழிசையிடம் பேசிக் கொண்டிருந்த ஓவியாவை இயல்பாய் பர்வதத்திடம் அறிமுகப்படுத்தினாள்.

“ம்மா..இது தான் ஓவியா.”

“ம்ம் பங்ஷன் டென்ஷன்ல சரியாகவே பேச முடில கண்ணா.இன்னொரு தடவை லீவுக்கு கண்டிப்பா வா சரியா?”

“சரி ஆன்ட்டி..”,என்றவளைப் பார்த்து அர்த்தமாய் புன்னகைத்தாள் ஏழிசை.

“அப்பறம் கல்யாண பொண்ணு இன்னும் ஒரு மாசத்தில் நிச்சயதார்த்தம்..ஹேப்பியா?”

“அண்ணி எல்லாம் கனவு மாதிரி இருக்கு அண்ணி.அவருக்கும் அங்கிளுக்கும் ரொம்பவே சந்தோஷம்.”

“அப்போ உனக்கு இல்லையா?”,என்றவளின் கேலி புரிந்து ஓடிவிட்டாள் திவ்யா.

அனைவைரயும் வழியனுப்பிவிட்டு கணவனோடு மாடியேறினாள் ஏழிசை.அத்தனை சோர்வையும் மீறி முகம் பிரகாசித்தது.

அவளுக்கான இரவு உடையாய் சட்டையும் பைஜாமாவையும் போட வைத்து தானும் அலுப்பு தீர குளித்து வந்தவன் மனைவியின் காலை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டான்.

கடந்த இரு மாதங்களாய் இது வாடிக்கையாகி போனது இருவருக்கும்.எந்தவித ஈகோவும் இன்றி அவன் ஒவ்வொரு முறை தனது காலைத் தொடும் போதும் அவன் பக்கம் இன்னுமாய் சாய்ந்து போகும் பெண்ணவளின் மனது.

காலைப் பிடித்து விட்டவாறே அவளையே பார்த்திருந்தவன்,

“மனசுக்கு நிறைவா இருக்கு மாமி..”

“ம்ம்…நேக்கு பேச வார்த்தையே இல்ல..என்ன சொன்னாலும் உங்க அன்புக்கு ஈடாகாது..”

“எல்லாம் சுயநலம் தான் என் இசை சந்தோஷமா இருந்தா நான் இன்னும் சந்தோஷமா இருப்பேன்.அதனால தான்.”,என்றவனை நோக்கி அவள் கைநீட்ட வளையலின் சத்தம் காதுக்கு இனிமையாய் இருந்தது.

“அழகா இருக்க டி மாமி..”

“உங்களுக்கு அப்படி தெரியலைனா தான் ஆச்சரியம்.”

“நல்லா பேசக் கத்துக்கிட்ட”,என்றவன் ஏழிசை வயிற்றை சொரிந்து கொள்வதைப் பார்த்து வழக்கம் போல் அவள் பின் அமர்ந்து  சட்டையை தூக்கிவிட்டு எண்ணெயை மெதுவாய் உருண்டை வயிற்றில் தடவ ஆரம்பித்தான்.

தன்னவனின் மார்பில் சாய்ந்திருந்தவள் அவன் கரம் மீது தன் கரத்தை வைத்து அசைத்துக் கொண்டிருந்தாள்.

“உன் பொண்ணு பிறக்கும்போதே ஜடை பின்னுற அளவு முடியோட பிறப்பாளோ மாமி..முடி நிறைய இருந்தா தான இந்த பீல் இருக்கும்னு சொல்லுவாங்க”,என்றவன் சிரிக்க அப்படியே தலையைத் தூக்கி அவனைப் பார்த்து முறைத்தாள்.

சட்டென அவளது நெற்றியில் முத்தம் வைத்தவன் அப்படியே அவளது வலது தோள்பட்டையில் தன் தாடையை வைத்தபடி எண்ணெயை தேய்த்துக் கொண்டிருந்தான்.

“வீரா..”

“என்ன டி?”

“ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..”

“நானும் தான்.”

“நிறைய நாள் பயத்தோடேயே தனியா இருந்துருக்கேன் வீரா..”

“….”

“இப்போ என்னைச் சுத்தி எப்பவுமே யாராவது இருக்கா..என்னை நன்னா கவனிச்சுக்குறா..”

“….”

“எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம்..உங்களோட இருக்குற தைரியம் தான் நான் எல்லாரோடவும் தைரியமா பழகுறேன்.பழைய பயம் கூட இப்போ இல்லை தான நேக்கு?”,என்றவள் அவனைப் பார்க்க ஆம் என்பதாய் தலையசைத்தான்.

“பக்கத்தாத்து மாமி சொல்லுவா ஒரு பொண்ணுக்கு ஆம்படையான் மட்டும் சரியா அமைஞ்சுட்டா வாழ்க்கையில் வேற எதுவுமே வேண்டாம்னு.அது ரொம்ப உண்மை.”

“ஊர் மொத்தமும் உங்களை கோவக்காரர்னு சொல்றா ஆனா என்கிட்ட ஒரு தடவை கூட நீங்க அதை காட்டினதே இல்லை.இதை சொன்னா கூட யாரும் நம்பமாட்டா..”

“என் மேல நானே கோபப்பட முடியுமா டி?”,எனும்போதே தடவிக் கொண்டிருந்த கையில் உள்ளிருந்து ஒரு தீண்டல் வர சட்டென கையை எடுத்துக் கொண்டவன்,

“ஹே மாமி..”

“ம்ம் அவளுக்கு அப்பா வீட்டுக்கு வர்ற நேரம் தெரியுமே அதான் எழுந்துட்டா..”

“நிஜமாவா?”

“ஆமா எப்பவும் இந்த நேரம் எக்ஸ்ட்ரா அக்டிவா இருக்கா”,என்றவள் புன்னகைத்து வயிற்றில் அவன் கையை வைத்து லேசாய் அழுத்தியவாறே,

“குட்டித் தங்கம் அப்பா வந்தாச்சு ஹைபை கொடுக்குறீங்களா?”,என்று கேட்க மீண்டுமாய் ஒரு தீண்டல் அவனது கரத்தில்.தன் உயிர்களைப் பின்னிருந்து இன்னுமாய் இறுக அணைத்துக் கொண்டான் வீரேந்திரன்.