வீட்டிலிருந்து கிளம்பியவர்கள் நேராய் எக்ஸ்போர்ட் கம்பெனிக்கு முதலில் சென்றனர்.
ரவீந்திரன் இன்முகமாய் இருவரையும் வரவேற்க உமையாள் கணவனுக்கும்,முக்கியமாய் வீரேந்திரனுக்கும் பயந்து வந்து வரேவேற்றாள்.
நால்வருமாய் அவ்விடத்தைப் பார்வையிட்ட வண்ணம் வந்து கொண்டிருக்க ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீரேந்திரனைப் பார்த்து ஒருவித எதிர்பார்ப்போடு கைக்கூப்பி நின்றார்.
அவரைப் பார்த்தவனின் நடையின் வேகம் குறைய அவரருகில் நின்றவன்,
“எங்க சாமி நீங்க இருக்கும் போது என்ன ஐயா..நல்லாயிருக்கோம்.இந்த மகாராஜனுக்கு ஏத்த மகாராணியா இருக்காங்க உங்க பொஞ்சாதி.”,என்றவரைப் பார்த்து புன்னகைத்தாள் ஏழிசை.
அதற்குள் ஆண்கள் சிலரிடம் வீரேந்திரன் பேசச் செல்ல உமையாள் கைப்பேசியில் யாருடனோ பேசியபடி அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.
“அண்ணனையும் உங்களையும் பார்த்து எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம் அண்ணி.”என்ற ரவீந்தரைப் பார்த்து புன்னகைத்தவள் தொழிலாளர்களோடு நின்று பேசுபவனை ஆச்சரியமாய் பார்த்திருந்தாள்.
“அண்ணன் எப்பவும் இப்படி தான்..இப்போ பேசினாங்களே அந்தம்மாவோட பையன் தொழில் எதிரி ஒருத்தங்களுக்காக அண்ணனை கொல்ல வந்தான்.”
“!!!!”
“பயப்படாதீங்க.இப்போ அவன் உயிரோட இல்ல..இவங்க புருசன் கேன்சர் பேஷன்ட்,அண்ணா தான் ட்ரீட்மெண்ட் செலவெல்லாம் பார்த்துக்குறார். இருந்த ஒரே பையனையும் தொலைச்சுட்டு நிக்குறாங்களேனு இவங்களுக்கு இங்கேயே வேலைப் போட்டு கொடுத்தார்.
தன் பையன் அவரால தான் செத்துப் போனான்ங்கிறது கூட மறந்து அண்ணா மேல அவ்வளவு அன்பு..”
தன் கணவனின் மற்றுமொரு பரிணாமம் என்றே தோன்றியது ஏழிசைக்கு.முரடனாய் தன்னை வெளிக்காட்டுபவனுக்குள் இயல்பின் சாயல் அப்படியே தான் உள்ளது என்பது புரிந்தது.
மேலும் சில நிமிடங்கள் அங்கு இருந்துவிட்டு கிளம்பியவர்கள் அடுத்து சில்க் பேக்ட்ரிக்கும்,கன்ஸ்ட்ரேக்ஷன் கம்பெனிக்கும் சென்று முடிக்கவே மதியம் ஒன்றைத் தாண்டிருந்தது.அனைவருக்கும் தங்கள் திருமணத்திற்கான விருந்தாய் இன்றைய மதிய உணவு ஏற்பாடு செய்ப்பட்டிருந்தது.
அத்தனை இடத்திலும் அவளை அறிமுகப் படுத்தியவனின் முகத்தில் மற்றவர்களுக்குத் தெரியாமல் இருந்த மகிழ்ச்சியும் பூரிப்பும் பெண்ணவளுக்கு நன்றாகவே தெரிந்தது.
தன்னை பொக்கிஷமாய் பார்த்து நிற்க்கும் தன் கணவனைப் பார்க்க பார்க்கத் தெவிட்டவில்லை ஏழிசைக்கு.அவ்வப்போது அவளுக்கு ஏதாவது உண்ணக் கொடுத்து, சற்று நேரம் எங்கேயாவது அமர வைத்து என அத்தனையையும் கவனித்துக் கொண்டான்.அடுத்ததாய் அவர்கள் சென்ற இடம் வீரேந்திரனின் தலைமை அலுவலகம்.
“சேதுபதி க்ரூப் ஆப் கம்பனிஸ்”,என்ற பெயர் பலகையைத் தாங்கியிருந்த அந்த மிகப்பெரும் கட்டிடத்தின் கார் பார்கிங் பகுதியில் நின்றது வீரேந்திரனின் எக்ஸ் யூ வி.
அவர்களுக்காகவே கையில் பூங்கொத்துடன் காத்திருந்தான் ஷ்யாம்.
வீரேந்திரனின் அருகில் வந்து நின்றவள் அவனைப் பார்த்து சிநேகமாய் புன்னகைக்க பதிலுக்கு புன்னகைத்தவனாய்,
“குட்மார்னிங் சார்.வெல்கம் மேம்.”,என்றவன் தன் கையிலிருந்த பூங்கொத்தை அவர்களிடம் நீட்டினான்.
லிப்ட்டில் நுழைந்தவர்கள் ஐந்தாவது தளத்தில் இருந்த கான்ப்ரென்ஸ் அறைக்குள் நுழைந்த நேரம் எழுந்த கரகோஷத்தில் பதறிப் போனாள் ஏழிசை.
கிட்டத்தட்ட நூறு பேர் இருந்த அந்த ஹாலில் நடுநாயகமாய் போடப்பட்டிருந்த நாற்காலியின் முன் சென்று நின்றவர்களாய் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து வீரேந்திரன் அமரக் காத்திருந்தவளாய் அவனருகில் அமர்ந்தாள்.
முன்னே வந்த மேனேஜர் அவர்களுக்கான வாழ்த்தை மைக்கில் கூறிவிட்டு வீரேந்திரனைப் பேசுவதற்காக அழைத்தார்.
அவன் பேசுவதையே மெய்மறந்து பார்த்திருந்தவளைக் கடைக்கண்ணால் பார்த்தபடியே பேச்சை முடித்து அவன் அமர மேனேஜர் ஏழிசையைப் பேச வைக்குமாறு அவனிடம் கேட்டார்.
அதற்குள் வேண்டாம் என்பதாய் கண்சாடை காட்டியவளை கண்டுகொண்டவனாய் மேனஜரை அனுப்பிவிட்டு எழுந்து நின்று கொண்டான்.அனைவரிடமும் விடைபெற்று ஆறாவது மாடியில் இருந்த அவனது அறைக்கு அழைத்துச் சென்றான்.
அவர்கள் உள்ளே வரும் வரை காத்திருந்த ஷ்யாம் அவர்களுக்கான உணவை அங்கு வைத்துவிட்டு வெளியே சென்றான்.
“வெல்கம் மிஸர்ஸ் வீரேந்திரன்.”,என்றவனைப் பார்த்து புன்னகைத்தவளாய் அவன் நீட்டிய கரத்தோடு தன் கரம் கோர்த்து எதிர் நாற்காலியில் அமரப் போக அவள் கரம் அழுத்தி இழுத்தவன் தன் நாற்காலியில் அமர்த்தினான்.
“நீங்க உட்காருங்கோ..நான் அங்க இருக்கேன்.”
“என் எஜமானியம்மா இங்கே உட்கார்ந்தா இன்னும் அழகாயிருக்கு இந்த இடம்.”
“நான்..நேக்கு உங்களோட இசையா,மாமியா இருந்தாவே போதும்.”,என்றவளின் குரல் கரகரத்தது.அவள் நிலையுணர்ந்தவனாய் அவளது எதிரில் முட்டியிட்டு அமர்ந்தான்.
“என்ன பண்றேள் இப்படி உட்கார்ந்து பேசுங்கோ.”
“பதறாத டி..யாரும் வரமட்டாங்க இங்க..இனி இந்த உயிர் இருக்குற வரை நீ என்னோட இசை தான்.ஆனால் உனக்கு பிடிச்சாலும் பிடிக்காவிட்டாலும் காலையில் இருந்து நீ பார்த்த எல்லாருக்கும் எஜமானியும் கூட.கொஞ்சம் கொஞ்சமா பழகிக்கோ சரியா.”
“ம்ம்..”
“பசிக்குது டி..”,என்றவனின் வார்த்தைகளில் அனைத்தையும் மறந்து வேகமாய் எழுந்தவள் ஷ்யாம் வைத்திருந்த சாப்பாடு கூடையைப் பிரித்து உணவுகளைப் எடுத்து வைத்த வண்ணம் அவனை ஏறிட்டாள்.
“அசைவம் தானே பிடிக்கும் உங்களுக்கு.பரவாயில்லை நான் சாப்பிடதான் மாட்டேன் பரிமாறுவேன்.”
“அப்பறம் என் பொண்டாட்டி சாப்பிட முடியாதே..ஒரே தட்டு தான் இருக்கு”,என்றவனைக் கண்விரியப் பார்த்தாள் ஏழிசை.
“மாமி இது ஆபீஸ் இப்படியெல்லாம் பார்க்காத..”,என்றவன் குனிந்து உண்ண ஆரம்பிக்க ஏழிசைக்கோ முகம் சிவந்து விட்டிருந்தது.
அவன் உண்டு முடித்து கையோடு அவளுக்குப் பரிமாறினான்.தற்செயலாய் வீரேந்திரனிடம் பேசுவதற்காக வந்த ஷ்யாம் தன் முதலாளி அவர் மனைவிக்கு உணவு பரிமாறும் அழகில் ஆச்சரியப்பட்டு போனான்.
அவர்களின் தனிமையை கலைக்க விரும்பாதவனாய் அங்கிருந்து நகர்ந்தவன் வீரேந்தரனின் அறை எண்ணிற்கு அழைத்தான்.
“நான் தான் ஏற்கனவே சொன்னேனே முதலாளி தொழிலாளியை விட நம்மோட நேரடி தொடர்பில் அதிக நேரம் இருக்குறவாளை உறவா மதிச்சா அவங்களுக்கு பொறுப்பும் கூடும்.நமக்கும் ஒரு பாதுகாப்பு கிடைக்கும் அதான்.”
“என்னைப் பார்த்தா ஸ்கூல் போற பையன் மாதிரி இருக்கா உனக்கு?”,என்றவன் அவளைப் பார்த்து புருவம் உயர்த்த அதை ரசித்தவளாய்,
“நமக்கே புள்ளை வந்தாலும் உங்களை இப்படி தான் பார்த்துப்பேன்”,என்று கூறியவளை ஒன்றும் சொல்ல முடியாமல் நின்றான் வீரேந்திரன்.
மாலை சீக்கிரமே வீட்டிற்கு வந்த அண்ணனையும் அண்ணியையும் பார்த்த திவ்யாவும் ராகவும் வாய் பிளந்து நின்றனர்.
“வர மாட்டீங்கனு நினைச்சோம்.”,என்று பொதுவாய் கூறினாலும் ராகவின் பார்வை அண்ணணிடம் தான் பதிந்திருந்தது.
“அப்போ வர முடியாதுனு சொல்லிட்டு போயிருப்பேனே”,என்ற அண்ணனைப் பார்த்து வாயை மூடிக் கொண்டான்.அதற்குள் பெரியவர்கள் காவ்யா ஈஸ்வர் என அனைவரும் அங்கு வந்திருந்தனர்.
“ராகவ் இங்க பாரு உங்க அண்ணா உனக்காக எதோ வாங்கிருக்கார்”,என்ற ஏழிசையை நம்பாத பார்வை பார்த்தவன் அவனருகில் வர தன் கையிலிருந்த டப்பாவைத் திறந்து ஒரு செயினை கையில் எடுத்தவன் அதை தம்பியின் கழுத்தில் அணிவித்தான்.
அதன் லாக்கெட்டைத் திறக்க முயற்சி செய்து திறந்து பார்த்தவனின் கண்களில் நீர் கோர்த்திருந்தது.
பிறந்த குழந்தையான ராகவை தன் மடியில் வைத்தபடி அமர்ந்திருந்த வீரேந்திரனின் புகைப்படம் இருந்தது.
எதையும் யோசிக்காமல் அண்ணனை இறுகக் கட்டிக் கொண்டான் ராகவ்.
“ஐ மிஸ் யூ அண்ணா..”,என்றவனின் குரல் நடுங்கியது.லேசாய் அவனது முதுகில் தட்டியவனாய்,
“அந்த போட்டோவில் இருக்குற குழந்தையா தான் இப்பவும் நீ எனக்கு.அதே நேரம் நம்ம வயசுக்கும் சூழ்நிலைக்கும் ஏத்த மாதிரி நடந்துகிட்டு தான் ஆகணும்.எதுவாயிருந்தாலும் போன் பண்ணு புரிஞ்சுதா?”
ஆமோதிப்பாய் தலையசைத்தவன் சிறுதும் யோசிக்காது அண்ணணோடு சேர்த்து மறு தோளில் அண்ணியையும் கட்டிக் கொண்டான்.
“யு ஆர் மை ஏஞ்சல் அண்ணி”,என்றவனை ஆதரவாய் தோள்தட்டி நகர்ந்தாள் ஏழிசை.
“அப்போ நானு”,என்று திவ்யா சிணுங்க,
“உனக்கும் முன்னாடி நான் இருக்கேன் டி”,என்றபடி காவ்யாவும் அவர்களை நெருங்கினாள்.அந்நேரம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த ரவீந்தரும் உமையாளும் ஒன்றும் புரியாமல் நிற்க திவ்யா ரவியைக் கை பிடித்து இழுத்தாள்.
“அண்ணா நீயும் வா”,என்றபடி கட்டி நின்ற தன் பிள்ளைகளைப் பார்த்து பெரியவர்கள் கண்கலங்கி நிற்க ஏழிசை அவர்களை அப்படியே ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டாள்.
“சரி சரி போதும் நேரமாகலையா கிளம்புங்க”,என்றவன் ஏழிசையிடம் தன் கையிலிருந்த பையைக் கொடுத்துவிட்டு விறுவிறுவென மாடிக்குச் சென்று விட்டான்.
மிகவும் சந்தோஷமாய் இருக்கிறான் என்பது புரிந்தது ஏழிசைக்கு.அதன்பின் அனைவருக்குமாய் ஒரு கவரை வீரேந்திரன் வாங்கியதாய் அவள் கொடுக்க இறுதியாய் இருந்தது ஈஸ்வரும் உமையாளும்.
“மத்தவாளுக்கு எல்லாம் அவா அண்ணா வாங்கி கொடுத்துருக்கார்.ஆனால் நாம மூணு பேருக்கும் கூட பிறந்தவா இல்லையோன்னோ அதனால உங்களுக்கு தங்கையா நான் இதை வாங்கிருக்கேன்.
உமையாள் உங்களுக்கு அக்காவா நான் வாங்கிருக்கேன்.வாங்கிக்கோங்கோ”,என்று ஆசையாய் கொடுத்தவளைப் பார்த்து பதில் கூட பேசத் தோன்றாமல் நின்றிருந்தனர் இருவரும்.
தான் வாங்கி வந்திருந்த ப்ரேசிலேட்டை ஈஸ்வரின் கையில் அணிவித்து விட்டு உமையாளுக்கு வாங்கிய ப்ரேசிலேட்டை அவளுக்கு அணிவித்து விட்டாள்.
“நீங்க பெருசா நகை போட்டு நான் பார்க்கலை அதான் ஆபீஸுக்கும் போட்டுண்டு போற மாதிரி சிம்பிளா வாங்கினேன்.தப்பா எடுத்துக்காதேள்”,என்றவளைப் பார்த்து புன்னகைத்தவளாய் உமையாள் “தேங்க் யூ”,என்றாள்.
“இந்த குடும்பத்தில் என்னை கண்டுக்க ஆளே இல்லையேனு நினைச்சேன் டா ஏழிசை.இனி இது தங்கச்சி வீடு இங்க எல்லாரையும் ஒரு வழி ஆக்கிடலாம்”,என்றதைக் கேட்டு அனைவரும் சிரிக்க என்ன புரிந்ததோ ஈஸ்வரின் மகளும் குலுங்கிச் சிரித்தாள்.
“என் பட்டுக்கு ஒண்ணும் வாங்கலையே”,என்றபடி ஜிஷாவை கையில் வாங்கிக் கொண்டவள் தன் கழுத்தில் இருந்த செயினை கழட்டி குழந்தைக்கு அணிவித்தாள்.
“ஹே என்ன பண்ற ஏழிசை.”
“இது என் சம்பாத்தியத்தில் வாங்கினது என் மருமகளுக்கு நான் ஆசையா கொடுக்குறேன் உனக்கு என்ன காவ்யா”,என்றவள் அழுந்த இதழ் பதித்தாள்.
யாருக்கும் எதுவும் பேசும் மனநிலை இல்லாமல் போயிருந்தது.மொத்த குடும்பமும் இப்படி சேர்ந்து சந்தோஷமாய் இருப்பதைத் தவிர வேறென்ன வேண்டும் என்று தான் நினைக்கத் தோன்றியது.
அனைவரும் உள்ளே செல்ல பெரியவர்களின் அறைக்குச் சென்றாள் ஏழிசை.
“ப்பா..”
“வா மா..கடைசியில் என்னையும் அம்மாவையும் மறந்தாச்சு?”,என்றவர் சோகமாய் கூற அவரை லேசாய் அடித்த வண்ணம் அவரருகில் அமர்ந்தார் பர்வதம்.
“நம்ம புள்ளைங்க சந்தோஷத்தை விட வேற எதுவும் வேணுமா என்ன..அதை கொடுத்த ஏழிசை தான் நமக்கு கிடைச்ச பெரிய பரிசுங்க..”
புன்னகையாய் அவர்களை ஏறிட்டவள் பின் தயங்கிய வண்ணம் இரு சிறு பெட்டிகளை எடுத்து அவர்களை ஏறிட்டாள்.
“என்ன கண்ணா தயக்கம்?”
“அது..நான் உங்களுக்கும் ஒண்ணு வாங்கினேன்.”
“எங்களுக்கா என்னது டா?”
“அவாளுக்கு வாங்கினது போக என்கிட்ட இது வாங்க தான் பணம் இருந்தது மா..தப்பா எடுத்துக்காதேள்.”
“ஏழிசை மனசார கொடுக்குற பரிசில் சின்னது பெருசெல்லாம் கிடையாது கண்ணா..அதுவும் நீ கொடுத்தா அதை நாங்க மனசார வாங்கிப்போம்.”,என்ற மாமனாரை நெகிழ்ந்துப் பார்த்தவள் இருவருக்குமான மோதிரத்தை எடுத்துக் கொடுத்தாள்.
“அருமையாக இருக்கு மா..”,என்ற பர்வதத்தையும் ராஜராஜனையும் பார்த்தவளுக்கு மனம் கொள்ளா மகிழ்ச்சி வந்திருந்தது.
அங்கு அறையில் அமர்ந்திருந்தவனின் கண்களில் சின்னதாய் சந்தோஷ பளபளப்பு.ராகவ் தன்னை அத்தனை தேடுவான் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.
தன்னோடு சாய்ந்து நின்ற தம்பி தங்கைகளையெல்லாம் நினைக்க நினைக்க நெஞ்சம் அடைத்தது.அத்தனைக்கும் காரணமானவளை தன்னோடு புதைத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.
மதியம் ஆபீஸில் இருந்து கிளம்பியவனிடம் நகைக் கடைக்கு போகலாமா என்று அவள் கேட்க என்னவென்பதாய் பார்த்தான் வீரேந்திரன்.
“உங்க தம்பி தங்கைக்கெல்லாம் ஏதானும் வாங்கிண்டு போய் கொடுங்கோ.சின்னதுகள் வேற ஊருக்கு போறோம்னு ஒரே புலம்பல்.அதிலும் ராகவ் அவன் பாவம்.”
சரியென்றவன் கையோடு தனக்குத் தெரிந்த நகைக்கடை முதலாளிக்கு போன் செய்ய அவர்களுக்காக அரை மணி நேரம் கடையின் வாசலையே அடைத்துவிட்டு பின் பக்கமாய் இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றார்.
காலியாக இருந்த கடையைப் பார்த்தவளுக்கு ஆச்சரியம் தாளவில்லை.கூறியிருந்தால் வீட்டுக்கே கொண்டு வந்திருப்பேனே என்ற முதலாளியிடம் கடைசி நிமிட அவசரம் என்று கூறிவிட்டு ஏழிசையைப் பார்த்து வாங்குமாறு சமிஞ்சை செய்தான்.
ஒவ்வொருவருக்கும் யோசித்து பார்த்துப் பார்த்து வாங்கியவளை பார்ப்பதையே தன் முழு வேலையாய் வைத்திருந்தான்.
அனைத்தையும் எடுத்துவிட்டு அவன் கைப்பேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருக்க அவன் கவனிக்கவில்லை என்று நினைத்து பாதி பணத்தை ஷ்யாமை கொடுக்க வைத்து மீதீயை அவளது கார்டில் போடுவது தெரிந்தது.
கடையிலிருந்து வெளியே வந்தவளின் முகத்தில் அப்படியாய் ஒரு திருப்தி.
“ராகவ் உங்களை கட்டிண்டு முத்தம் கொடுக்க போறோன்.”,என்று சிரித்தவளை அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தான்.
“உனக்கு எதுவும் வாங்கிக்கலையா இசை..”
“நேக்கு எல்லாமே இருக்கு..வேணும்னா வாங்கிக்கிறேன்.”,என்றவள் மீண்டும் மற்றவர்களைப் பற்றி பேசிக் கொண்டு வந்தாள்.