ஏழு மணி ஆனதும் கார் சத்தம் கேட்க ஆர்வமயாய் எழுந்து வந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.ரவீந்தீரன் கார் உள்ளே நுழைய அவளைப் பார்த்ததும் மரியாதை நிமித்தமாய் அவளருகீல் கார் நின்றது.

“என்ன அண்ணி இங்க இருக்கீங்க?”

“இல்லை சும்மா காத்து வாங்கலாம்னு வந்தேன்.இரண்டு பேருக்கும் காபி கொண்டு வரட்டுமா?நீங்க போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வாங்கோ.”

“அதெல்லாம் வேண்டாம் அண்ணி..நீங்க ரொம்ப நேரம் இங்க இருக்காதீங்க..நல்லா இருட்டிருச்சு பாருங்க”

“சரி ரவி இப்போ வந்துடுறேன்.”,என்றவள் புன்னகைக்க பதிலுக்கு புன்னகைத்தவனாய் அவன் நகர அத்தனை நேரமும் தான் ஒருத்தி இருப்பதையே காணாதவளாய் அமர்ந்திருந்தாள் உமையாள்.

மெதுவாய் அங்கிருந்து நகர்ந்தவள் உள்ளே சில சிறியவர்கள் பெரியவர்களோடு இரவு நேரம் கழிந்தது.தன்னவனைக் காணாதவளுக்கு நேரமாக ஆக மனது சுணக்கம் கொண்டது.

அவள் முக வாட்டத்தைக் கவனித்தவராய் தனதறைக்கு அவளை அழைத்த பர்வதம் முட்டி வலிப்பதாகக் கூறி தைலம் தடவுமாறு கூறிவிட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்..

“டாக்டர்கிட்ட. போலாமா மா?”

“வேண்டாம் கண்ணா,வயசாகுதுல அதான் இதெல்லாம்…சரி நீ போய் தூங்கு ஏழிசை..”

“சரிம்மா வரேன்”,என்றவளுக்கு பார்வை தானாய் வாசலைத் தொட்டு மீண்டது.பொறுமையிழந்தவளாய் அவனுக்கு அழைக்க முழு அழைப்பும் சென்று ஓய்ந்தது.

வாசலில் அவனுக்காக வந்து அமர்ந்தவளுக்கு காரணமே இல்லாமல் அழுகை முட்டிக் கொண்டு வந்தது.பன்னிரெண்டு மணியளவில் கேட்ட கார் சத்ததில் முகத்தை அழுந்த துடைத்தவளாய் ஆசையாய் எழுந்து நிற்க காரில் இருந்து இறங்கியவனைப் பார்த்து நடுங்கிப் போனாள்.

கலைந்த முடியும் கசங்கிய சட்டையுமாய் வேட்டியை மடித்துக் கட்டியபடி வந்தவனின் முகத்தில் ஆத்திரம் கொட்டிக் கிடந்தது.அவனைப் பார்த்து மிரண்டவளாய் ஒரு அடி பின் நகர்ந்தவளைக் கவனித்தவன் ஒரு நொடி தன்னை நிதானித்தான்.

“இப்படி குளிரில் உட்காராதனு அன்னைக்கே சொன்னேன்ல..வா..”,என்றவன் மாடியேற அவனது வேகத்துக்கு கிட்டத்தட்ட ஓடினாள் ஏழிசை.

அறைக்குள் நுழைந்து தாழிட்டவள் திரும்பும் நேரம் அவனது இறுகிய அணைப்பிற்குள் இருந்தாள்.

“ரொம்ப நேரமா காத்திட்டு இருந்தியா..”

“….”

“திடீர் வேலை அவாய்ட் பண்ண முடியல..”,என்றவன் அவளை நகர்த்தி முகம் பார்க்க இன்னும் சற்று அதிர்ந்து தான் இருந்தது அவளது முகம்.தன்னை அவன் கவனிப்பதை உணர்ந்தவள்,

“போய் குளிச்சுட்டு வாங்கோ”,என்றபடி நகர்ந்த நேரம் அவனது இடது கையில் இருந்த இரத்தத்தைப் பார்த்து பதறிப் போனாள்.

“ஐயோ என்ன இது..அடிபட்டுருக்கா..நான் கேட்டுண்டே இருக்கேன்.”,என்று துடைத்தவளின் கைப் பற்றியவன்  தலையை நிமிர்த்தாமலே,

“விடு இசை..அது என் இரத்தம் இல்ல..”,என்றதும் அப்படியே கையை விட்டிருந்தாள்.

எதோ பேச வந்தவனை தடுத்தவள்,”முதல்ல குளிச்சுட்டு வாங்கோ..”,என்றதும் அமைதியாய் குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.

அவன் வெளியே வந்த நேரம் அறையில் ஏழிசையை காணாமல் பால்கனியில் எட்டிப் பார்த்தான்.அங்கும் அவளைக் காணாதவனுக்கு கோபம் வந்தது.

சில நொடிகளில் அறைக் கதவு திறக்கும் சத்ததில் அங்கு பார்த்தவனின் முகம் புன்னகையை தாங்கியிருந்தது.

அவனுக்காக சூடான பாலைக் கொண்டு வந்தவள் அவனிடம் நீட்ட அதை வாங்கிக் கொண்டவனாய் நகரப் போனவளை மறு கையால் பிடித்து தன்னருகில் அமர்த்தினான்.

“செம அப்செட்ல இருக்கியா மாமி?!”

“…”

“சாரி டி சீக்கீரம் வர முடியல.”

“ஒரு ஆளோட..”

“வேண்டாம்..எதுவும் சொல்லாதேள்..”

“ப்ச்..”

“இல்லை..அதெல்லாம் நேக்குத் தெரிய வேண்டாம்..நீங்க பத்திரமா இருங்கோ அது போதும்.”

“!!!”

“இப்படி இரத்தமெல்லாம் பார்த்தா என்னவோ பண்றது..உங்களுக்கு ஒண்ணுமில்லையே?”

“இல்ல டி நம்பு..”

“நிஜமாவே பயமோ கோவமோ இல்லையா?!”

“இல்ல..முதல் நாள் நீங்க என்னைப் பார்த்துக் கேட்டேளே உங்க மேல நம்பிக்கை இருக்கானு?”

“!!”

“அது இப்போ மலையளவு நேக்கு இருக்கு.இந்த உலகத்தில் உங்களை தவிர யாரையுமே நான் நம்பல.உங்க தொழில் விவரமெல்லாம் நேக்கு வேண்டாம்.

தினமும் வீட்டில் இருந்து எப்படி போறேளோ அப்படியே வரணும்.அது மட்டும் எனக்கு வாக்கு கொடுங்கோ போதும்.”,என்றவள் அழுத வண்ணம் அவனது தோளில் சாய்ந்து சட்டையை இறுகப் பற்றிக் கொண்டாள்.

“அழாத இசை..”,என்றவனின் கண்டிப்பு குரலில் தன்னை கட்டுப்படுத்த முயன்றாள்.

“நீ சாப்டியானு கேட்ட ஒரு வார்த்தைக்காகவே இன்னிக்கு இன்னும் அதிகமா கவனிச்சுக்குறாங்க டி மாமி..”,என்றவனைப் பார்த்து முறைத்தவள் மெதுவாய் அவனது மார்பில் குத்தினாள்.

“சாய்ந்திரத்தில் இருந்து எதிர்பார்த்தியா?!”

“ம்ம் ரொம்ப நேரம் தோட்டத்தில் தான் உட்கார்ந்துருந்தேன்.ரவி வரும் போது பார்த்துட்டு இருட்டிடுத்துனு உள்ளே வர சொன்னார்.ரொம்ப எதிர்பார்த்து வரலைனதும் கொஞ்சம் வருத்தமாய்டுத்து.”

“இனி நான் சொல்லவே போறதில்ல சர்ப்ரைஸா வரேன்”

“ம்ம்..”

அப்படியே தன்னருகில் இருந்தவளைத் தூக்கி மடியில் அமர்த்தியவனாய் அவளது கழுத்தில் முகம் புதைத்துக் கொள்ள அதற்காகவே காத்திருந்தவளாய் அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

காற்று கூட நடுவில் வந்து விடக் கூடாதென்று எண்ணிணாளோ,அல்லது தன்னவனை அப்படியே தனக்குள் புதைத்துக் கொள்ள எண்ணிணாளோ அவளது இறுக்கத்தில் ஆணவனே ஒரு நொடி மலைத்துத் தான் போயிருந்தான்.

பல மணி நேர எதிர்பார்ப்பு அதன்பின் அவன் நிலை கண்ட பரிதவிப்பு என அவனை விட அவளுக்கு அவன் அதிகமாய் தேவைப்பட்டான்.

முகமெங்கும் அவளின் முத்தங்கள் நிறைந்திருக்க தன்னை மொத்தமாய் அவளிடத்தில் கொடுத்து விட்டிருந்தான் அவளின் காதல் நாயகன்.

அவளின் வெட்கங்கள் தயக்கங்கள் அனைத்தையும் மீறிய அவளது ஆளுமை அந்த முரடனைப் பித்து கொள்ளச் செய்திருந்தது.

“மாமி…ரிலாக்ஸ்..”

“வீரா பத்திரமா இருக்கணும்..”

“ம்ம்..”

“ஐ மிஸ்ட் யூ வீரா..”,என்றவளின் கண்களில் கண்ணீரின் பளபளப்பைக் கண்டவனுக்கு அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அவளைக் கீழே தள்ளி அவளின் வேதனைக்கு மருந்தாக மாறி விட்டிருந்தான்.

பல மணி நேரங்களின் கொஞ்சல் கெஞ்சல்கள் முடிந்து ஓய்ந்து படுத்திருந்தவளின் முகத்தைப் பார்த்தவனுக்கு இன்னுமாய் காதல் பெருகியிருந்தது.

“மாமி நீ ரொம்ப மோசம் டி..”,என்றவன் அவளை வம்பிழுக்க அவளுக்கோ எதைப் பற்றிய கவலையும் இருப்பதாய் தெரியவில்லை.அசையாமல் அவன் மீதே படுத்திருந்தவள் அவனது விரலோடு விரல் கோர்த்து பிரித்து எதையோ யோசித்திருந்தாள்.

சில நொடிகளில் நிமிர்ந்தவள் அவன் விழிகளைப் பார்த்த வண்ணம்,”மிஸ்ட் யூ..நிஜமாவே..ரொம்ப ரொம்ப…”

“புரியுது டி..இனி எதிர்பார்க்காத..நானே முடியும் போதெல்லாம் சீக்கிரம் வந்துறேன்.சரியா?”

“ம்ம்ம்…”

“அதான் வீட்ல எல்லாரோடையும் அரட்டை கச்சேரி பண்றியே அப்பறமும் ஏன் இப்படியிருக்க நீ?”

“யாரும் நீங்களாக முடியாதோன்னோ..”

“லூசு..”

“நிஜமாவே அப்படிதான் இருக்கேன்..நேக்கு இத்தனை உரிமைப்பட்டவா யாரும் கூடவே இருந்ததில்லையா அதான் இப்படினு நினைக்குறேன்..

நீங்க எதுவும் வருத்தப்படாதேள்..போக போக சரியாயிடுவேன்.ம்ம்?”,என்றவள் நிமிர்ந்து அவனைப் பார்க்க வழக்கம் போல் அவளது மூக்குத்தியை வருடியவன்,

“எனக்கும் கூட என் மேல இப்படி பைத்தியமாய் யாரும் இருந்ததில்ல.நான் தான் சொல்லிட்டனே,இந்த கண்ணு என்னைத் தேடுற மாதிரி இந்த ஜென்மத்தில் வேற யாரும் என்னைத் தேட மாட்டாங்க டி..”

“ஐயோ மணி மூணா..நீங்க தூகுங்கோ காலையில் லேட் ஆகிட போகுது..”

“பரவாயில்ல பொறுமையா போலாம்.நம்ம ஆபீஸ் தான..என் மாமி உண்மையாவே செம்மையா கவனிச்சுட்டா..”

“அய்யே ரொம்ப தான்..தூங்குங்கோ நேக்கு தூக்கம் வருது.”

“ம்ம் இவ்வளவு நேரம் என்னை தூங்க விடாம பண்ணிட்டு இப்போ உனக்கு தூக்கம் வருதா?”,என்றவன் அவள் இடுப்பில் குறுகுறுப்பு மூட்ட லேசாய் சிரித்த வண்ணம் நெளிந்தவள் நிம்மதியாய் விழி மூடிக் கொண்டாள்.

காலை ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்தவள் குளித்துத் தயாராகி கீழே சென்று தோட்டத்தில் இருந்து பூக்களைக் கொண்டு வந்து பூஜையறையில் அமர்ந்தாள்.

பூவை சாற்றிவிட்டு விளக்கேற்றி கீழே அமர்ந்தவளுக்கு கண்கள் அதுவாய் கலங்கியது.தன்னவனுக்கு எந்த ஆபத்தும் நேர்ந்து விடக் கூடாது என கோடி முறையாய் வேண்டியவள் மாமியாரைத் தேடிச் சென்றாள்.

அத்தனை காலையில் அவரை எழுப்ப மனமில்லை எனினும் முந்தைய நாளே கேட்டு வைத்திருக்காத தன் மடத்தனத்தை எண்ணி தன்னைத் தானே திட்டிக் கொண்டவளாய் அவரது அறைக் கதவைத் தட்டி விட்டு காத்திருந்தாள்.

“ஏழிசை!என்னாச்சு மா இவ்வளவு காலையிலே?”

“ம்மா சாரி தொந்தரவு பண்ணிட்டேன்.நேத்தே சொல்ல நினைச்சேன் மறந்துட்டேன்.இன்னைக்கு வரலட்சுமி பூஜை.நம்ம ஆத்துப் பொண்ணுங்க திவ்யாவும் காவ்யாவும் கூட இருக்கா பூஜைக்கு ஏற்பாடு பண்ணிக்கவா?”

“இது உன் வீடு ஏழிசை..இதெல்லாம் கேட்கனுமா..என்ன வேணுமோ வேணியும் கற்பகமும் பண்ணுவாங்க,பூஜை சாமான் எல்லாம் சாமி ரூம்லேயே பீரோவில் இருக்கு ஒரு நிமிஷம் வரேன்,”என்றவர் உள்ளிருந்து சாவியைக் கொண்டு வந்துக் கொடுத்தார்.

“இந்தா கண்ணா நீ ஆரம்பி நான் குளிச்சு தயாராகி வரேன்.”

“அவசரம் இல்லை மா எப்படியும் ஒரு மணி நேரமாவது ஆகும்..நீங்க பொறுமையாவே வாங்கோ”,என்றவள் வேணியிடம் தேவையானதைச் செய்யக் கூறிவிட்டு கற்பகத்திடம் இன்னும் சில மலர்களைப் பறித்து வரச் சொன்னாள்.

தேவையான பூஜை சமான்களை எடுத்தவள் லட்சுமி முகத்தோடு புடவையை வைத்து நகைகளை இட்டு அலங்காரம் முடித்து மற்ற வேலைகளையும் விறுவிறுவென முடித்தாள்.

அத்தனையும் முடித்துவிட்டு அமர்ந்தவளுக்கு திருப்தியாய் இருந்தது.தானே செய்யும் முதல் வரலட்சுமி பூஜை.அதுவும் கணவனோடு கணவனுக்காக எனும்போது இன்னுமே மெனக்கெட்டிருந்தாள்.

சாம்பிராணியிட்டு அறை முழுவதும் சுவாமி படங்களுக்குக் காட்டியவள் ஒரு தட்டில் அதையும் கற்பூரத்தையும் எடுத்துக் கொண்டு தோட்டத்திற்குச் சென்று துளசி செடிக்கு பூஜையை முடித்து வந்து அமர்ந்து லஷ்மி சரஸ்ஹர நாமத்தை படிக்க ஆரம்பித்தாள்.

அடுத்த அரைமணி நேரத்தில் உள் நுழைந்த பெண்கள் அனைவருக்குமே கோவிலினுள் வந்து விட்டதை போன்ற ஓர் உணர்வு விழி மூடி ஸ்லோகம் கூறிக் கொண்டிருந்தவளின் பின்னால் அவர்கள் அமர்ந்து கொள்ள உமையாளோ தூக்கம் பறிபோன கடுப்பில் இருந்தாள்.

ஸ்லோகம் முடித்து கண் விழித்தவள் அவர்களைப் பார்த்து புன்னகைத்து 108 போற்றியை ஆரம்பிக்க அனைவரின் கைகளிலும் உதிரிப் பூக்களைக் கொடுத்து சமர்பிக்கச் செய்தாள்.

“அம்மா வாங்கோ ஆரத்தி காட்டுங்கோ”,என்று அழைக்க பர்வதம் முதல் ஆரத்தியை ஆரம்பிக்க தன் கையில் மணியை ஒலிக்க விட்டிருந்த படி பாடலைத் தொடர்ந்தாள் ஏழிசை.

மாவிலையும் தோரணமும்
மங்கலத்தின் அடையாளம்

 

ஊதுவத்தி எரிவதினால்
உள்ளத்திலும் ஒரு வாசம்

அம்மா நீ அருள் புரிந்தால்
அகிலமெல்லாம் அலங்காரம்
அன்றாடம் பாடிடுவோம்
அஷ்டலட்சுமி திருநாமம்

சங்கு சக்ரதாரி நமஸ்காரம்
சகல வரம் தருவாய் நமஸ்காரம்
பத்மபீட தேவி நமஸ்காரம்
பக்தர் தம்மைக் காப்பாய் நமஸ்காரம்

என்று முடித்தவள் பர்வதம் காட்டிய ஆரத்தியை கண்ணில் ஒற்றிக் கொண்டு மற்றவர்களுக்கும் கொடுத்தாள்.

“மா நீங்க முதல்ல நோன்பு கயிறைக் கட்டிக்கோங்கோ அப்பறம் நாங்க எடுத்துக்குறோம்.”,

பர்வதம் சரடைக் கட்டிக் கொள்ள ஏழிசை அவருக்கு சந்தன குங்குமம் கொடுத்து தனக்கும் இட்டு விடும் படி கூறினாள்.

“ஆசீர்வாதம் பண்ணுங்கோ மா..”

“தீர்க்க சுமங்கலியா தீர்க்காயுசா இருடா கண்ணம்மா..இத்தனை திருப்தியாய் பூஜை நடந்து பல வருசம் ஆச்சு”,என்றவரைப் பார்த்து புன்னகைத்தாள்.

“உமையாள்,காவ்யா நீங்களும் நேக்கு குங்குமம் வச்சு விடுங்கோ”,என்றவள் தன் நெற்றியிலும் தாலியிலும் குங்குமத்தை வாங்கிக் கொண்டாள்.

தானும் அவர்கள் இருவருக்கும் குங்குமம் வைத்து விட்டு திவ்யாவிற்கும் வைத்துவிட்டாள்.

அனைத்தும் முடித்துவிட்டு அவரவர் அறைக்குச் சென்ற நேரம் மணி எட்டைத் தொட்டிருந்தது.

இன்னமும் உறக்கத்தில் இருந்த கணவனைப் பார்த்தவள் நேரமாவதை உணர்ந்து அவனை எழுப்பினாள்.

கட்டிலின் அருகில் செல்லாமல் சற்று தள்ளி நின்று அங்கிருந்த ஒரு கம்பை வைத்து அவனைத் தட்டினாள்.

“மணி எட்டாயிடுத்து எழுந்துருங்கோ..”,என்றவளின் குரலில் உறக்கம் கலைந்தவன் அவளை இழுப்பதற்காய் தடவிய நேரம் குச்சியைப் பார்த்து குழம்பி அவளைத் திரும்பி பார்த்தான்

நெற்றி நிறைத்த சந்தன குங்குமமும் கழுத்தில் சிறிதான சரடுக் கயிறும் தலையில் சிறிது அட்சதைப் பூக்களுமாய் நின்றவளைப் பார்த்தவனுக்கு தூக்கம் மொத்தமாய் தொலைந்துவிட்டிருந்தது.

“ஓய் மாமி என்ன இத்தனை சீக்கிரம் எழுந்துட்ட?”

“நான் பூஜையே முடிச்சாச்சு கொஞ்சம் போய் குளிச்சு என்னோட கீழே வாங்கோளேன்.”

“எல்லாம் சரி எதுக்கு இப்படி பத்தடி தள்ளி நிக்குற நீ?”

“நான் மடியா இருக்கேன்.முதல்ல போய் குளிச்சுட்டு வாங்கோ”

“உன் பாஷையில் பாதிக்கு மேல ஒண்ணும் புரியல..ஒரு நிமிஷம் கிட்ட வா டி..”

“ப்ளீஸ் இன்னைக்கு ஒருநாள் மட்டும் வாங்கோளேன்.”

“சரி பாவமமாய் பார்க்காத வரேன்..”,என்றவன் எழுந்து கொண்டான்.

“நான் கீழே பூஜை ரூமில் தான் இருப்பேன் அங்க வந்துருங்கோ..”

“??!”

“சமத்து இல்ல ப்ளீஸ்..”,என்றவள் அதற்குமேல் நின்றால் வர மாட்டான் என்பதை உணர்ந்து வெளியே ஓடிவிட்டாள்.

பூஜை அறைக்கெல்லாம் சென்று எத்தனை மாதம் இருக்கும் என்ற யோசனையோடே குளிக்கச் சென்றவன் அடுத்த பதினைந்து நிமிடத்தில் கீழே இறங்கி வந்தான்.

உணவு மேசையில் இருந்த பர்வதமும் ராஜராஜனும் மகனைப் பார்த்து உணவு பரிமாறவா எனக் கேட்க,

“ஒரு நிமிஷம் வரேன் மா..இசை உள்ளே வர சொன்னா”,என்ற மகனைப் பார்த்து அகமும் முகமும் மலர்ந்து போனார் பர்வதம்.

“ஏங்க ரொம்ப திருப்தியான பூஜைங்க இன்னைக்கு..”

“ம்ம்..”

“என்னங்க எதுவும் பேச மாட்றீங்க?”

“மருமக நம்ம மகனை நினைச்சு கவலைப் படுறானு நினைக்குறேன் பர்வதம்..”

“!!”

“அவன் வர்ற வரையும் வாசலை விட்டு நகர மாட்றா..”

“அவளோட நல்ல மனசுக்கே என் புள்ளை நூறு வயசு நல்லாயிருப்பான்ங்க..”

“உண்மைதான் இந்த பொண்ணு குணத்துக்கு அவனை இவ்வளவு புரிஞ்சு நடந்துக்குறது பெரிய விஷயம்.இவளை நல்லா பாத்துக்கணும் பர்வதம்.”

“நான் எப்போவோ முடிவு பண்ணிட்டேன்.அவளும் எனக்கு காவ்யா போல மகள் தான்..”,என்ற மனைவியைப் பார்த்து புன்னகைத்தார் ராஜராஜன்.