வீரேந்திரன் வேலைக்கு கிளம்ப அவனோடு வாசல் வரை வந்த ஏழிசையைப் பார்த்து பாதுகாவலர்கள் வணக்கம் வைத்தனர்.
சிநேகமாய் சிரித்தவள்,”எல்லாரும் சாப்டேளா?”,என்று கேட்க வீரேந்திரன் உட்பட அனைவரும் அவளைத் தான் பார்த்தனர்.
இதுவரை அப்படியெல்லாம் யாரும் கேட்டதில்லை.அதே நேரம் பக்கவாட்டு வழியில் சென்று சமையலறையில் குரல் கொடுத்தால் எந்த நேரமும் எதுவானாலும் அவர்களுக்கு கிடைத்துவிடும்.
மதிய வேளையில் ஷ்யாம் அவர்களுக்கு சாப்பாடை ஏற்பாடு செய்துவிடுவான் என்பதால் வீரேந்திரன் எதையும் கண்டு கொண்டதில்லை.
இன்று இவள் இப்படி கேட்டதும் விசித்தரமாய் அவளைப் பார்த்து நின்றான்.
“இல்ல உங்களைப் பாதுகாக்குறவா அவா வயிறும் மனசும் நிறைவா இருக்கணும்.அதான் கேட்டேன்.”,என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் அவள் கூற இவளை இப்படியே மாடிக்குக் கடத்திச் சென்றால் என்ன என்பது போல் பார்த்தவனின் பார்வையின் பொருளை புரிந்து கொண்டவள் லேசாய் நகர்ந்து நின்றாள்.
“சாப்பிட்டோம் மேடம்..”,என்ற ராஜுவைப் பார்த்து புன்னகைத்தவள்,
“அண்ணினு சொல்லுங்கோ”,என்று பொதுவாய் கூறிவிட்டு இரு படிகள் மேலேறி அவர்கள் கிளம்ப வழிவிட்டாள்.
மலர்ந்த முகமாய் தன்னை வழியனுப்புபவளை விட்டு நகர்வது பிரம்ம ப்ரயத்தனமாய் இருந்தது வீரேந்திரனுக்கு.அவன் கிளம்பியதும் உள்ளே வந்தவளைப் பிடித்துக் கொண்டனர் ரராகவும் திவ்யாவும்.
“என்ன அண்ணி பையனை ஸ்கூலுக்கு அனுப்பியாச்சா ?”,என்ற ராகவைப் பார்த்து முறைத்தாள் ஏழிசை.
“நாளைக்கு நோக்கும் கல்யாணம் ஆகுமோ இல்லையோ அப்போ பாக்குறேன் என்ன நடக்குதுனு..”
“அவன் கிடக்குறான் அண்ணி..ஆனாலும் உங்க ஜோடி சூப்பர்”,என்று திவ்யா கூற முகம் மலர்ந்து வீட்டிருந்தது ஏழிசைக்கு.
காவ்யாவின் மகளின் அழுகுரலில் அனைவரும் திரும்பி பார்க்க கடுப்பாய் நடந்து வந்தவளைப் பார்த்து பாவமாகிப் போனது ஏழிசைக்கு.
“என்னாச்சு காவ்யா?”
“அந்த கொடுமையை ஏன் கேட்குற வார வாரம் இதான் பிரச்சனை.எண்ணெய் தேய்ச்சு குளிப்பாட்றதுகுள்ள ஷப்பா…”
“இங்க கொடு நான் தேய்ச்சு விடுறேன்.”,என்றபடி குழந்தையை வாங்கியவள் சற்று ஓரமாய் சென்று அமர்ந்து எதிரில் துண்டை விரித்து குழந்தையைப் படுக்க விட்டாள்.
சில நொடிகள் குழந்தையோடு விளையாடி அதன் அழுகையை நிறுத்தியவள் கையில் எண்ணையை எடுத்து அதற்கு தடவியபடியே பாட ஆரம்பித்தாள்.
“எனைத்தள்ளும் முன் குழி கன்னத்தில்… என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணே… எனைக்கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள்… என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே…”
குழந்தை அவளையேப் பார்த்திருக்க அழுத்தி அதன் கை கால்களைப் பிடித்து விட்ட படி உடல் முழுதும் எண்ணையைத் தடவியவள் பத்து நிமிடத்தில் காவ்யாவின் அருகில் வந்தாள்.
அத்தனை நேரமும் அவளையே பார்த்திருந்த மூவரையும் பார்த்து சிரித்தது அந்த குட்டி வாண்டு.
“நானே குளிப்பாட்டவா காவ்யா?சமத்து குட்டி இல்ல செல்லம்..”,என்று குழந்தையை கொஞ்சியபடியே கேட்டாள்.
“ஐயோ புடவையெல்லாம் எண்ணெய் பாரு ஏழிசை நீ போய் புடவை மாத்திக்கோ..”
“இதில் என்ன இருக்கு நீ போய் குளிப்பாட்டு போ..”,என்றவளைப் பார்த்து சிநேகமாய் சிரித்தவள் அங்கிருந்து நகர திவ்யா அவள் முன் எண்ணெய் பாட்டிலை நீட்டினாள்.
“அண்ணி ப்ளீஸ் எனக்கும் மசாஜ் பண்ணி விடுங்க..”
“இதுக்கென்ன ப்ளீஸ் வா உட்காரு திவ்யா..”,என்றவள் பொறுமையாய் எண்ணெயைத் தடவி மசாஜ் செய்து விட்டுக் கொண்டிருந்தாள்.
அவர்களுக்குத் தெரியாமல் அதை தன் கைப்பேசியில் புகைப்படம் எடுத்த ராகவ் அண்ணணிற்கு அனுப்பி வைத்தான்.
தம்பியின் பெயரை திரையில் பார்த்தவன் புருவங்கள் சுருங்க புகைப்படத்தை திறந்து பார்க்க தன்னவள் தங்கைக்கு செய்து கொண்டிருந்த வேலையில் புன்னகை வந்திருந்தது.
தன் மெசேஜை அண்ணன் உடனே பார்த்துவிட்டதே பெரும் ஆச்சரியமாய் இருக்க அண்ணனை வம்பு செய்ய எண்ணியவனாய்,
“அண்ணி அடுத்து எனக்கும்..”
“சரி ராகவ் போய் எண்ணெய் எடுத்துட்டு வா போ..”,என்றவளை நோக்கி வந்த பெரியவர்கள்,
“என்ன நடக்குது இங்க?”,என்ற பர்வதத்தைப் பார்த்து சிரித்தவள் தன் வேலையை கவனிக்க திவ்யா தாயிடம்,
“நீ உன் பெரிய புள்ளையை தான் கவனிக்குற மா..அதான் நாங்க அண்ணிகிட்ட சரண்டர் ஆகிட்டோம்.”
“ஆமா என் புள்ளையை நான் பார்த்துகிட்டா அவன் உங்களைப் பார்த்துப்பான்.ஆனால் இனி எனக்கு அந்த வேலையும் கிடையாது பேசாம அப்பாவும் நானும் கோவில் குளம்னு டூர் போலாம்னு இருக்கோம்.”,என்றதைக் கேட்டு மூவரும் சிரித்தனர்.
ராகவ் எண்ணெயை ஏழிசையிடம் கொடுத்துவிட்டு சில நொடிகளில் தன் அண்ணனுக்கு வீடியோ கால் செய்து அவர்களுக்குத் தெரியாமல் பக்கத்தில் வைத்து விட்டான்.
“இவன் வேற ரொம்ப சோதிக்குறான்..”,என்று எண்ணியவனாய் அழைப்பை ஏற்ற வீரேந்திரன் தன் மனைவியின் பக்கவாட்டுத் தோற்றத்தில் மயங்கி தான் போனான்.
இடுப்பில் சொருகியிருந்த புடவையும் சற்றே முகத்தில் விழுந்திருந்த முடிக் கற்றைகளும் அவளை பேரழகியாய் காட்டியது.தன்னவளின் பேச்சு சத்தத்தில் நினைவு வந்தவனாய் திரையில் கவனத்தைப் பதித்தான்.
“என்ன முடி இது ஏதோ தேங்காய் நார் மாதிரி இருக்கு..இவன் வாய் பேசுற அளவு உடம்பை ஒழுங்கா கவனிச்சுக்குறது இல்லை மா..”
“சரியா சொன்ன ஏழிசை..காலேஜூக்கு போய் ஒண்ணும் உருப்படியா இல்ல..”,என்ற பர்வதத்தின் பதிலில் இங்கு புன்னகைத்தான் வீரேந்திரன்.
“அவனவன் காசு செலவு பண்ணி கலரிங் எல்லாம் பண்ணிணா என்ன இப்படி சொல்றீங்க இரண்டு பேரும்?”
“இதெல்லாம் பேஷன் இல்ல..இருபது நாள் எண்ணெயே வைக்காம விட்டா முடி தானாவே இப்படி ஆகிடும்.இனி வாரத்துக்கு ஒரு தடவை எண்ணெய் தேய்ச்சு குளிக்கனும் புரியுதோன்னோ?”
“சரி அண்ணி..”
“சனிக்கிழமை ஆனால் நான் கால் பண்ணி கேட்பேன்.உனக்கும் தான் திவ்யா.”
ராகவ் ஏதோ கூற லேசாய் அவன் தலைப்பிடித்து ஆட்டிச் சிரித்தவளை கண்களுக்குள் நிரப்பிக் கொண்டவன் அழைப்பைத் துண்டித்திருந்தான்.
மதியம் உணவு வேளையில் ஏழிசையை அழைத்தான் வீரேந்திரன்.அவனது பெயரைப் பார்த்தவளுக்கு மனம் குதுகலித்தது.
“ஹலோ சாப்டேளா?”
“ஓய் மாமி யாரைக் கேட்டு சாப்பாடு கொடுத்து விட்ட?”
“…”
“உன்னை தான் டி..”
“எப்படியும் வெளில இருந்து வாங்கி ஆபீஸில் தான் சாப்பிட போறேள்..அதுக்கு ஆத்து சாப்பாடே சாப்பிடலாம் தான?”
“யாரு கொண்டு வந்து கொடுத்தது?”
“வேணிகிட்ட சொல்லி காவலுக்கு இருக்குறவா கிட்ட கொடுக்க சொன்னேன்.சாப்ட்டேளா?”
“ம்ம்..நீ சாப்பிட்டியா?””
“இல்லை இனி தான்..”
“என்ன குடும்பமே இன்னைக்கு எண்ணெய் குளியலா?”,என்றவனின் குரலில் சிரிப்பிருந்தது.