அனைவருமாய் உண்டு முடித்திருக்க அவன் அருகிலேயே வரத் தயங்கும் வேணி கையைப் பிசைந்த வண்ணம் சாதாரணம் போல் தட்டை கைகளில் எடுக்க என்னவென்பதாய் ஏறிட்டவனைப் பார்த்து ஓடாத குறையாக தட்டோடு உள்ளே சென்று விட்டாள்.
கை கழுவ எழுந்தவன் லேசாய் சமையலறையில் எட்டிப் பார்க்க அவனது தட்டில் மீண்டும் பதார்த்தங்களை நிரப்புவதைப் பார்த்தவனுக்கு ஏழிசைக்காக என்பது புரிந்தது.மாடியின் வராண்டாவிலேயே நின்றவன் அங்கு வந்த வேணியிடம் இருந்து தட்டை வாங்கிக் கொண்டு வந்திருந்தான்.
“என்ன சொல்லு இதை என்ன பண்றது?”
“இல்லை.உங்கத் தட்டிலேயே வேணியை சாப்பாட்டு போட்டு கொண்டு வரச் சொன்னேன்.”,என்றவள் விட்டால் ஓடி விடுவது போல் இருந்தாள்.
ஒரு இட்லியைப் பிய்த்து சாம்பாரில் தோய்த்தவாறே அவளது கண்ணை ஏறிட்டவன்,
“அதுதான் இது சாப்பிடு..”,என்று அவளது வாயருகில் கொண்டு செல்ல ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தன.
மறுக்காமல் அதை வாங்கிக் கொண்டவள் தவறியும் பார்வையை அவன் மீது செலுத்தவில்லை.வீரேந்திரனுக்கும் அது வசதியாகி விட்டதோ என்னவோ காண் சிமிட்டாமல் அவளையே பார்த்திருந்தான்.
பாதி சாப்பாட்டிலேயே நெளிந்தவள் போதும் என்று முணுமுணுக்க கையில் எடுத்திருந்த ஒரு வாய் இனிப்பை மட்டும் வாங்கிக் கொள் என்றபடி கொடுத்தவன் கையில் இருந்ததை பாதியை மட்டும் அவளுக்கு ஊட்டிவிட்டு யோசிக்காமல் மீதீயைத் தன் வாய்க்குள் திணித்திருந்தான்.
“நான் புதுசு கொண்டு வர சொல்றேன்.அதை ஏன்..”
“என்னோட தட்டில் நீ சாப்பிடற அப்போ உன்னோட எச்சில் ஒண்ணும் தப்பில்ல.”,என்றவன் அவள் எதிர்பார்க்காத நேரம் சட்டென அவது இதழ்களில் முத்தம் வைத்துச் சென்றிருந்தான்.
நடந்ததை உணர்ந்து அதிர்ந்திருந்தவளுக்கு கடைசி வாய் உணவு தொண்டையில் சிக்கிக் கொள்ள புரையேறியிருந்தது.கை கழுவி வந்தவன் தன் கையோடு கொண்டு வந்திருந்த தண்ணீரைக் குடிக்க வைத்தான்.
அவசரமாய் குடித்தலில் பாதி தண்ணீர் வெளியே வடிந்திருக்க அவளையேப் பார்த்திருந்தவன் இடுப்பில் சொருகியிருந்த அவளது சேலை தலைப்பை இழுத்ததில் இன்னுமாய் அவன்மேல் விழுந்தாள் ஏழிசை.
இரு கைகளையும் தூக்கிப் பிடித்த வண்ணம் அவனருகில் நிற்பது பெரும் இம்சையாய் இருக்க அவனோ கருமமே கண்ணாய் முந்தானையால் அவள வாய் துடைத்து விட்டான்.
“நான் உள்ளே போறேன்”,என்று அவள் கூறியது அவளுக்கே கேட்டதோ தெரியவில்லை.மெதுவாய் அவள் தலையில் இருந்த கிளிப்பை கழட்டிவிட முடிக்கற்றைகள் மொத்தமாய் அவள் முகம் மறைத்திருந்தது.
“உள்ளே போலாம் ப்ளீ..”,எனும்போதே அவளை மொத்தமாய் கைகளில் ஏந்தியிருந்தான் வீரேந்திரன்.
“என்ன பண்றேள்..”,என்று கிட்டத்தட்ட காதுக்குள் கத்தியவளைக் குலுக்கியவனாய்,
“கத்தாத டி மாமி..அப்பறம் கீழே போட்டுருவேன்”,என்றதும் கண்களையும் வாயையும் இறுக மூடிக் கொண்டாள்.
அறையில் கட்டிலில் இறக்கிய நொடி வேகமாய் பின் சாய்ந்து சம்மணமிட்டு அமர்ந்து கொண்டாள் ஏழிசை.
“நீங்க கோபப்பட்டாலே தேவலை போல இருக்கு நேக்கு”,என்றதைக் கேட்டு வாய்விட்டுச் சிரித்தான் வீரேந்திரன்.
“நான் ஏற்கவே சொல்லிட்டேன் பயத்தைக் கம்மி பண்ணிக்கோனு நீ தான் கேட்க மட்ற..”
“அது நீங்க பக்கத்துல வந்தாலே நேக்கு கை கால்லெலல்லாம் நடுங்கறது.நான் என்ன செய்யட்டும்..”
“நான் ஒண்ணு கேட்குறேன் உண்மையை சொல்லணும்?”
“என்னது?”
“உனக்கு நிஜமாவே என்னைப் பார்த்தா பயம் எல்லாம் இல்லை.ஒரு சின்ன தயக்கமும் நிறைய நிறைய வெட்கமும் இருக்கு.அது ஏன்னும் என்னால புரிஞ்சுக்க முடியுது..”
“!!!!”
“ஆனாலும் ஊரையே பார்த்து பயப்படுறவளுக்கு என்னோட இத்தனை சகஜமா பழக இவ்வளவு சீக்கிரம் எப்படி முடியுது..”
“!!!!”
“என்கிட்ட எதையோ மறைக்குற என்ன அது?”,என்றவன் அவளது முடிக்கற்றைகளை இருபுறமும் ஒதுக்கிவிட்டான்.
“…”
“என்னை ஏற்கனவே பார்த்திருக்கியா?”
“ஐயோ பகவான் சத்தியமா இல்லை..நம்புங்கோ..”
“எதுக்கு இவ்வளவு பதட்டப்படுற..நான் சாதாரணமா தான் கேட்டேன்.”
“காலேஜ்ல நேக்கு பெருசா ப்ரெண்ட்ஸெல்லாம் கிடையாது.காவ்யாவும் நானும் ஒரே பென்ஞ்ச்.அவளுமே உங்களோடது பெரிய குடும்பம்னால எல்லாரோடையும் சகஜமா பழகினது இல்ல.
பக்கத்துல இருந்ததுனாலேயோ என்னவோ நாங்க க்ளோஸாயிட்டோம்.அப்பறம் எங்க அப்பாவும் உங்ககிட்ட தான் வேலை பாக்குறார்னு தெரிஞ்சவுடனே அவளுக்கும் எந்த தயக்கமும் இல்ல.
வீட்டை விட்டு தனியா வந்ததுனாலே அவ நிறைய பேசுவா.உங்க எல்லாரைப் பத்தியும் சொல்லுவா.
அதுவும் நீங்கனா தனி ப்ரியம் அவளுக்கு.ஒரு நாளைக்கு பத்து நிமிஷமாவது உங்களைப் பத்தி பேசலைனால் அவளுக்குத் தூக்கம் வராது.
அப்படியிருக்க நாலு வருஷப் படிப்பில் உங்களைப் பத்தி எவ்வளவு கேட்டுருப்பேன்னு யோசிச்சு பாருங்கோ.அப்போ இருந்தே காவ்யா ஓட அண்ணன்னா உங்க மேல தனி மரியாதை உண்டு நேக்கு.
உங்களையெல்லாம் பார்த்தது இல்லையே தவிர நிறைய கேள்விப்பட்டதுனால ஓரளவு சகஜமா இருக்க முடியுறது.காவ்யாவோட அண்ணாவை கல்யாணம் பண்ணிக்க போறவா..”,என்றவள் தயங்கி நிறுத்த சற்று சாய்ந்து படுத்தவன் என்னவென்பதாய் அவளை ஏறிட,
“கல்யாணம் பண்ணிக்க போறவா ரொம்ப அதிர்ஷடசாலினு நினைச்சுருக்கேன்.உங்க தொழில் பத்தி எல்லாம் அப்பாவும் சொன்னது இல்ல காவ்யாவும் சொன்னது இல்ல.அந்த பயம் தான் முதல் இரண்டு நாள் இருந்தது.
ஆனால் எல்லாத்தையும் விட உங்க பக்கத்துல பாதுகாப்பா உணர்றேன்.மத்தவாளை பார்த்தா வர்ற பயம் உங்க மேல வர்றல.நீங்க என் ஆத்துக்காரர்ங்கிறது கூட அதுக்கு காரணமா இருக்கும்.என்னை நன்னா பார்த்துக்குறேள்.புரிஞ்சுக்குறேள்..அதான் நானும் இயல்பா இருக்கேன்னு தோணுறது.
நிஜமா சொல்றேன் என் அம்மாவுக்கு அப்பறம் நான் இவ்வளவு பேசுறது உங்களோட மட்டும் தான்.”,என்றவளின் கண்களில் உண்மையும் தவிப்பும் கொட்டிக் கிடந்தது.
அவள் முடிக்கும் வரை அமைதி காத்தவன் சட்டென அவளின் தோள் பற்றி தன்னருகில் சாய்த்திருந்தான்.
“அப்போ இனி இவ்வளவு தூரம் இருந்தா போதும்..ம்ம்?”
“நீங்க ரொம்ப மோசம்..”
“இந்த வயசுல இப்படி மல்கோவா மாமியை பக்கத்தில் வைச்சுகிட்டு இரண்டு நாளுக்கு மேல நல்லவனா இருக்க முடியலையே..”
“…”
“இந்த மாமி வேற எப்போ பார்த்தாலும் என்னையே தேடுறா..அப்பறம் நான் இப்படி தான் இருக்கணும்.”
“நல்ல கண்ணை உருட்டி உருட்டி பேச எங்க கத்துக்கிட்ட..”,என்றவன் கண்களில் விரல்களால் வருடினான்.
“நான் போட்டுமா..”
“ம்ம்..”,என்றவன் சிறிதும் நகராமல் இருக்க அவளோ மருதாணி கைகளை வைத்துக் கொண்டு என்ன செய்வதென புரியாமல் தவித்தாள்.
இரண்டொரு நொடிகளில் கையை மெத்தையில் வைத்து ஒரு பக்கமாய் அவளை நோக்கிப் படுத்தவன் அவளது கரங்கள் தன்னை தடுக்கப் போவதில்லை என்பதை உணர்ந்து மெதுவாய் தன்னிதழை அவளிடத்தில் சேர்த்திருந்தான்.
சட்டென விழிகளை மூடிக் கொண்டவள் முத்தத்தை உணர ஆரம்பித்து அதனுள் தொலைந்து போகத் தொடங்கியிருந்தாள்.
முதல் முத்தம் இருவரையுமே பலப்பல உணர்வுகளுக்குள் தள்ள ஆணவனின் கரமோ அவளின் வெற்றிடையில் பரவியது.
எதையும் பற்றிக் கொள்ள கூட முடியாமல் அவஸ்தையில் இருந்தவள்,
“வீரா..ப்ளீஸ்..”,என்று முனக,அவளின் நிலை உணர்ந்தவனாய் விலகி அமர்ந்து அவளும் எழுந்து கொள்ள உதவினான்.
“ஸ்..ஸாரி…நான்..என்னால..”,என்றவள் விட்டால் அழுது விடுவாள் போல் இருக்க தன் தோள் சாய்த்துக் கொண்டான் வீரேந்திரன்.
“ரிலாக்ஸ்..”
“…”
“ஆர் யூ ஓகே?”
“ம்ம்..”
“சரி கீழே போ..”,என்றவனைப் பார்த்த வண்ணம் எழுந்து நின்றவள் தன் கோலத்தைப் பார்த்து தயங்கி நின்றாள்.
புன்னகையோடு அவள் பின் சென்றவன் அங்கிருந்த க்ளிப்பை எடுத்துப் போட்டுவிட்டு புடவையை சரி செய்து விட்டான்.
இன்னுமும் அவள் முகத்தின் இரத்த ஓட்டம் அதிகரித்து தான் இருந்தது.
ஆமோதிப்பாய் தலையசைத்தவள் கதவருகில் சென்று நின்று கொள்ள வீரேந்திரன் வேண்டுமென்றே அவளை உரசிய வண்ணம் சென்று மேல் தாழ்ப்பாளை இறக்கினான்.
பட்டாம் பூச்சியாய் பறந்து ஓடுபவளைப் பார்க்க பார்க்கத் தெவிட்டவில்லை அவனுக்கு.
கட்டிலில் விழுந்தவனுக்கு இன்னமும் அவள் வாசனை அங்கு இருப்பதைப் போன்ற ஒரு மாயை.ஒரு வேளை இருபதுகளில் திருமணம் நடந்திருந்தால் கூட சற்று தயக்கம் விலகல் எல்லாம் இருந்திருக்குமோ..இப்போதோ வயதிற்கே உரிய முதிர்ச்சி அனைத்திலும்.
அவளுக்கு அவனைப் பிடித்திருக்கிறது என்பதே பெரும் போதையாய் இருந்தது.அவளோடு கலந்துவிட துடிக்கும் மனதை கட்டுப்படுத்தும் வழி தான் தெரியாமல் போய்விட்டிருந்தது வீரேந்திரனுக்கு.
அவனின் நினைவிலேயே வெளியே சென்றவள் படிகளில் ஏறி வந்த உமையாளைக் கவனியாது இடித்துக் கொண்டாள்.
“ஹே அறிவிருக்கா?”,என்றவள் தன் உடையை சரிபார்க்க ஏழிசையோ பதட்டமாய்,
“சாரி சாரி உமையாள் கவனிக்கல..”,
“நீயெல்லாம் என் பேர் சொல்லி பேசுற அளவு இருக்கு என் நிலைமை எல்லாம் தலையெழுத்து..நகரு”,என்றபடி சென்று விட ஏழிசைக்கு முகம் வாடிவிட்டது.
ஒன்றும் கூறாமல் கீழே வந்தவளை வீரேந்திரனின் அத்தை அழைத்தார்.
“இங்கே வா ஏழிசை தலையெல்லாம் என்ன இப்படி கலைஞ்சுருக்கு”,என்றதும் தன்னவனின் நினைவில் பழைய மலர்ச்சி அதுவாய் வந்திருந்தது.
“வேணி போய் ஒரு சீப்பும் புதுசா கட்டின மல்லிச்சரமும் கொண்டு வா”,என்றவரைப் பார்த்து தயங்கியவளாய்
“பரவால்ல அத்தை.நான் அப்பறம் தலை வாரிக்குறேன்.நீங்க ரெஸ்ட் எடுங்கோ.”
“இதெல்லாம் ஒரு வேலையா..உன் முடி நீளத்துக்கு அரிசி சடை பின்னினா அழகா இருக்கும்.”,எனும் போதே பர்வதமும் ராஜராஜனும் அங்கு வந்தனர்.
“சின்ன மாமியாரும் மருகளும் என்ன கதை பேசிட்டு இருக்கீங்க.”
“அண்ணா மருமகளுக்கு தலைவாரி விட போறேன்.”,பெரியவர்கள் இருவரும் ரசனையாய் அவர்களோடு அருகில் அமர்ந்தனர்.
“கண்ணம்மா உன்னோட புடவைக்கு ப்ளவுஸ் தைச்சு வந்துருச்சு டா மறக்காம அப்பறமா போட்டு பார்த்துரு.”
“சரி மா..”
“இந்திரா எங்கே காணவே காணும்?”
“அவர் மாடியில் ரூமில தான் இருக்கார் பா..”
“தலையை வாரி முடிச்சு கொஞ்ச நேரம் போய் ரெஸ்ட் எடு ஏழிசை.சாய்ந்திரம் ஆறு மணிக்கு ஆரம்பிச்சா வரவேற்பு எப்போ முடியுமோ தெரியாது.தொழில் வட்டம் பெருசு இல்லையா..”
“சரி அத்தை..”
“உங்கப்பா இத்தனை வருஷமா இங்க வேலைப் பார்த்தும் ஒரு நாள் கூட நீ இங்க வந்ததில்லையே?”
“ஆமா மா..நான் கூட அப்பாகிட்ட அழைச்சிண்டு போக சொல்லி கேட்பேன்.என்னவோ கூட்டிண்டு வந்தது இல்ல.”
“அண்ணி அவ முடி அடர்த்திக்கு இங்க பாருங்களேன்.நால்லாயிருக்கு இல்ல?”
“அட ஆமா ராணி..”,என்றபடி பெண்கள் இருவரும் ஏழிசைக்குத் திருஷ்டி கழித்தனர்.கையிலிருந்த மருதாணியை கழுவிவிட்டு வந்தவளை அறைக்குச் செல்லும்படி பர்வதம் கூறிவிட,
மீண்டும் தனதறைக்கா!!என்றிருந்தது ஏழிசைக்கு.நிச்சயமாய் வம்பு செய்வான் என்று உணர்ந்தவளாய் மெதுவாய் நடந்து சென்றாள்.
எத்தனை மெதுவாய் நடந்தாலும் அறையை அடைந்து தானே ஆக வேண்டும்.மெதுவாய் கதவைத் திறந்து தலையை மட்டும் விட்டு எட்டிப் பார்த்தவள் அவனை காணாமல் நிம்மதி பெருமூச்சு விட்டபடி உள்ளே நுழைந்தாள்.