எண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் ஒண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லால் – கண்ணில்லான்
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு

விளக்கம்
கண் தெரியாத குருடன் , மாங்காய் அடிக்க முயற்சி செய்து அவன் கையில் வைத்திருந்த கோலை இழப்பதை போல், ஒருவன் காலம் அறியாமல் ஒரு செயலைச் செய்தால் அவனிடன் உள்ளதையும் இழக்க நேரிடும்.

நாம் செய்த புண்ணியத்தின் பலனாக, ஒரு காரியம் கைகூடும் வேலை வரும் வரை நாம் செய்யும் எந்த முயற்சியும் பலன் தராது, அதனால் காலம் கருதி ஒரு செயலை தொடங்க வேண்டும்.”

எப்போது மீட்டிங் முடியும் என தேன்மொழியும், இன்பரசனும் ஆவலாய் காத்திருந்தனர்.நல்ல வேளையாய் இறுதி வரையிலும் காயத்ரி அங்கிருக்க மீட்டிங்கை முடித்து அவளிடம் பேசுவதற்காக இருவருமாய் அவசர அவசரமாக வெளியேச் சென்றனர்.

பிரின்ஸ்பல் மற்றும் சில ஆசிரியர்களிடம் விடைபெற்று காரில் ஏறச் சென்ற நேரம் சிறு தயக்கத்தோடு அவளருகில் சென்று நின்றவர்களை என்னவென்பதாய் காயத்ரி பார்த்து நின்றாள்.

தேன்மொழி சட்டென,”ஹாய் அண்ணி..”,என்றவுடன் இருக்கும் இடம் மறந்து “ஹே”,என்றவள் அவள் கன்னம் தட்ட சிறியவர்கள் இருவருக்கும் இன்னுமுமாய் உற்சாகமாகிவிட்டது.

“தேன்மொழி,இன்பரசன் தான..இந்த காலேஜ்ல தான் படிக்குறீங்களா?எப்படியிருக்கீங்க இரண்டு பேரும்?”

“நாங்க நல்லாயிருக்கோம்..நீங்க எப்படியிருக்கீங்க?”,என்ற இன்பரசனைப் பார்த்து புன்னகைத்தவாறே சூப்பரா இருக்கேன் என கை ஜாடைக் காட்டியவளை மிகவுமே பிடித்துப் போனது.

“அண்ணன் நேத்து விஷயத்தைச் சொன்னவுடனே எங்களால நம்பவே முடியல..வாழ்த்துக்கள்”

“அட நீ வேற..அவன் ஓகே சொல்லிட்டான்னு என்னாலேயே நம்ப முடியல..”

“ஹா ஹா..புரியுது..ஆனந்த் அண்ணாவும் உங்களைப் பார்த்தா ரொம்ப சந்தோஷப்படுவான்..சீக்கிரமே மீட் பண்ணலாம்..”

“கண்டிப்பா..உங்க அண்ணன் என்னைக்கு சொல்றானோ அன்னைக்கு நான் ரெடி..சரி கொஞ்சம் வேலை இருக்கு கிளம்பட்டுமா?உங்க ரெண்டு பேரையும் பார்த்ததுல மீ ரொம்ப ஹேப்பி”,என்றவள் தேனை தன்னோடு சேர்த்துக் கொள்ள இன்பரசனுக்குக் கை குலுக்கினாள்.

அவளை அனுப்பிவிட்டு நகர்ந்தவர்களுக்கு மனம் சந்தோஷக் களிப்பில் இருந்தது.அன்பிற்கு திருமண பேச்சு என்ற ஒன்று தொடங்கியதிலிருந்தே ஒரு சிறு பயம் உண்டு தேன்மொழிக்கு.இன்பாவிடம் அடிக்கடி புலம்பியதுண்டு.

“ஏன் டா அண்ணாக்கு கல்யாணம் ஆகி அண்ணியா வர்றவங்களுக்கு நம்மளையெல்லாம் பிடிக்குமோ என்னவோ இல்ல..”

“ஏன் டி லூசு மாதிரி பேசுற..உன் கற்பனைக்கு அளவே இல்லையா?”

“டேய் நான் உள்ளதை தான் சொல்றேன்..இந்த காலத்துல யாரு கூட்டுக்குடும்பமா எல்லாம் இருக்க நினைப்பாங்க..ப்ரைவஸி எதிர்பார்ப்பாங்க இல்ல..”

“ம்ம் உனக்கே தெரியுதுல..அந்த ப்ரைவஸியை தேவையான நேரத்துல நாம கொடுத்துட்டா அவங்களுக்கு ஏன் பிடிக்காம போக போகுது..வரவங்க நம்மளுக்கு ஏத்த மாதிரி இருக்கணும்னு நினைக்காம நாம எப்படியிருந்தா வர்றவங்களுக்கு பிரச்சனை இல்லாம இருக்கும்னு யோசி..”

“பரவால்ல டா உன் ஆளுக்காக இப்போவே இவ்வளவு யோசிக்குறியே கிரேட்..”

“அடிங் கொழுப்புடி உனக்கு..என்னை காலை வாரலைனா உனக்குத் தூக்கம் வராதே..”

இப்படியான எண்ணங்கள் எல்லாம் இருந்தவர்களுக்கு இன்று காயத்ரியைப் பார்த்தது ஒருவித உற்சாக மனநிலை வந்திருந்தது.

“இன்பா அண்ணி செம ஜாலி டைப்னு நினைக்குறேன் இல்ல..”

“ம்ம் டி..அம்மா அப்பாக்கு கண்டிப்பா பிடிக்கும்..அண்ணி பேசுறதைப் பார்த்தா அண்ணே சீக்கிரமே வீட்ல பேசிரும்னு நினைக்குறேன்..”

“ஆமா…பேசட்டும் வீட்ல முதல் கல்யாணம் வரப்போகுது ஜாலி டா இன்பா..”

“ம்ம் சரி நீ போ நான் இப்போ வந்துட்றேன்..”

“அதான உன் ஆளுகிட்ட விஷயத்தை சொல்லாம இவ்வளவு நேரம் இருந்ததே பெரிய விஷயம்..போ போ..”,என்றவள் அவனது தலைத் தட்டிச் சென்றாள்.

கேன்டினுக்குச் சென்றவனின் பார்வை அவர்களின் வழக்கமான மேசைக்குச் செல்ல அழகாய் புன்னகைத்து அமர்ந்திருந்தாள் கிருத்திகா.

“மார்னிங் கிருத்தி..”

“மார்னிங் இன்பா.எங்க போயிட்ட மீட்டிங் அப்போவே முடிஞ்சுது இல்ல?”

“ம்ம் அண்ணியைப் பார்த்துட்டு வரேன்..”,என்றவன் விஷயத்தைக் கூற அவளுக்குமே அப்படியாய் ஒரு சந்தோஷம்.

“சூப்பர் டா..ப்பா..இத்தனை வருஷத்துக்கு அப்பறம் சேர்ந்துருக்காங்களா..சினிமால பார்க்குற மாதிரி இருக்கு..”

“அதே தான்.நேத்தில் இருந்து தேனை கையில பிடிக்க முடியல..”

“ஹா ஹா அவங்க எப்பவும் தனி ரகம்..”

“இதென்ன டி கொடுமை அவளை மட்டும் மரியாதையா கூப்பிடுற..என்னை மட்டும் வா போனு சொல்ற..”

“என்ன இருந்தாலும் அவங்க என் சீனியர் இல்லையா?”

“ஓகோ அப்போ நான்?”

“நீ…ம்ம்ம்..சிலரைப் பார்த்தா மரியாதையெல்லாம் கொடுக்கத் தோணாது..”

“ஏய்..”

“ஹா ஹா டென்ஷன் ஆகாத செல்லக்குட்டி..உன்னை இப்படி கூப்பிட தான் பிடிச்சுருக்கு..வாங்க போங்கனு சொன்னா எதோ ரொம்ப அந்நியமா இருக்கு டா..”

“அது சரி..”,என்றவன் புன்னகைத்து அவளது பின்னந்தலையைச் செல்லமாய் தட்டினான்.

இப்படியாய் இவர்களின் உரையாடல் இருக்க காரில் சென்று கொண்டிருந்தவள் அன்புச்செல்வனை அழைத்தாள்.

“சொல்லு காயூ.அந்த வாலுங்க என்ன சொல்றாங்க?”

“அடப்பாவிங்களா?அதுக்குள்ள சொல்லிட்டாங்களா?!”

“நீ மேடை ஏறும்போதே வீடியோ கால் பண்ணிட்டான் இன்பா.யூனிபார்ம்ல கம்பீரமா இருக்க டா..”

“தேங்க்ஸ் அன்பு..முக்கியமா ஒண்ணு சொல்றதுக்கு தான் கால் பண்ணேன்.”

“என்னாச்சு காயூ?!”

“லவ் யூ அன்பு..”

“ஓய்..”

“எப்போ தான் நீ திரும்ப எனக்கு சொல்லுவ.”

“கடையில இருக்கேன் காயூ..”

“நான் கூட தான் டிரைவர் பக்கத்துல இருக்கேன்..”

“உன்னை சமாளிக்குறது கொஞ்சம் கஷ்டம் தான் போல..”

“அடப்பாவி இரண்டாவது நாளே இப்படி சொல்றியே..இன்னும் ஒரு அம்பது அறுபது வருஷம் எப்படி சமாளிப்ப?”

“கல்யாணம் முடியட்டும் உன் எல்லா கேள்விக்கும் பதில் சொல்றேன்..”

“பாருடா!!”

“…”

“சிரிக்காத டா..”,சற்று சத்தமாகவே சிரித்தவனின் குரலில் அவளுக்குமே புன்னகை அதிகரித்திருந்தது.

“இன்னும் உனக்குள்ள தயக்கம் எதுவும் இருக்கா அன்பு?!”

“லூசு தேவையில்லாம யோசிக்காத..இத்தனை வருஷம் பொறுத்திருந்த உனக்கு இன்னும் கொஞ்ச நாள் பொறுக்க முடியாதா?”

“சார் எதோ பெருசா ப்ளான் பண்ற மாதிரி தெரியுதே?!”,என்றவளின் குரலில் அப்படியாய் ஒரு துள்ளல்.

“முப்பது வருஷ காதலையும் பத்திரமா உன்கிட்ட ஒப்படைக்குறதுனா சும்மாவா..”,என்ன கூறுவதென்று தெரியவில்லை காயத்ரிக்கு.

“ஹவ் அ குட் டே..வைச்சுரட்டுமா?”

“ம்ம் சரி..”

“லவ் யூ பொண்டாட்டி..பை”,என்றவன் அழைப்பைத் துண்டித்த பின்பும் பெண்ணவள் கைப்பேசியையே வெறித்திருந்தாள்.

அன்று மாலை அண்ணன்கள் இருவருக்காகவும் காத்திருந்து காலையில் நடந்ததெல்லாம் கூறிய பின்னர் தான் சந்தோஷம் முழுமையடைந்ததாய் தோன்றியது நம் இரட்டையர்களுக்கு..

நான்கு தினங்கள் கடந்திருந்த நிலையில் அன்புச்செல்வன் எப்போதும் போல் அதிகாலையிலேயே ஹோட்டலுக்கு கிளம்பியிருந்தவன் மீண்டும் பதினோரு மணியளவில் வீட்டிற்கு வந்தான்.

“கண்ணா என்ன டா இந்த நேரத்துல?”

“ம்மா….”

“இல்ல இந்த நேரத்துக்கு வர மாட்டியே அதான் கேட்டேன் எதுவும் சாப்பிடுறியா?”

“அதெல்லாம் வேணாம் மா..அப்பா எங்க காணும்?”

“பால் தீர்ந்து போச்சுனு வாங்கிட்டு வர சொன்னேன்..இப்போ வந்துருவாரு..”

“ம்மா..உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணுமே..”

“என்ன கண்ணா..”

“ம்மா..அது..எனக்கு..நான் ஒரு பொண்ணை விரும்புறேன்…”

“என்ட்றா சொல்ற?!!”

“அது நீ நினைக்குற மாதிரி இல்ல..இப்போதான் ஒரு வாரமா..”,என்றவன் தாயின் முகத்தைப் பார்க்க அவர் முகபாவத்திலிருந்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

“ஏன் மா எதுவும் பேச மாட்ற..”

“என்ன சொல்றது..உன் மனசுக்கு பிடிச்சுருந்தா சந்தோஷம் தான்.ஆனாலும் அப்பாகிட்ட பேசினா தான் தெரியும் பா..வரட்டும் பேசுவோம்.பொண்ணு பேர் என்ன?என்ன பண்றா?!”

“காயத்ரி மா..போலீஸில் இருக்கா..”

“என்னது??!!”,அவரது பதட்டத்தில் லேசாய் சிரித்து விட்டிருந்தான்.

“நீயாவே எதாவது முடிவுக்கு வந்துராத”,என்றவன் தனது கைப்பேசியில் அவளது புகைப்படத்தைக் காட்டினான்.

“லட்சணமா இருக்கா டா..”,எனும்போதே ராகவன் வந்துவிட அப்போதைக்கு பேச்சை நிறுத்தியவன் ஒரு சில விஷயங்களைப் பற்றி பொதுவாய் பேசிக் கொண்டிருந்தான்.கணவரைப் பார்த்தவாறே வந்தமர்ந்த ராகினி தயக்கத்தோடு பேச்சை ஆரம்பித்தார்.

“ஏனுங்..நம்ம அன்பு ஒரு பொண்ணைப் பத்தி இப்போ தான் சொன்னான்..”

“வரன் எதுவுமா ராகினி?”

“இல்லங்க அன்புக்கு ஒரு பொண்ணைப் பிடிச்சுருக்காம்..”

“???!”

“இரண்டு பேரும் விரும்புறாங்களாம்..இப்போ ஒரு வாராமா..எனக்கு என்ன சொல்றதுனு தெரிலிங்க..”

“என்னய்யா இது…பொண்ணு யாரு என்ன பண்றா..குடும்பம் எல்லாம்?”

“இங்க தான் பா..அவங்க அம்மாக்கு பராலிட்டிக் அட்டாக்..அப்பா கவர்ண்மெண்ட் வேலை..அவளும் நானும் எம்பிஏ ஒரே க்ளாஸ் தான்.அப்பறம் டச்ல இல்ல..கொஞ்ச நாளா தான் திரும்பவும் பேச ஆரம்பிச்சோம்..அப்பறம் அவ போலீஸ் பா..”

சட்டென ராகவன் நிமிர்ந்து ராகினியைப் பார்க்க அவருமே அதே யோசனையோடு தான் கணவரைப் பார்த்திருந்தார்.

“ப்பா..படிப்பை முடிச்சுட்டு நான் தொழில் தான் தொடங்கப் போறேன்னு சொன்னப்போ இருந்த அதே கலக்கம் இப்பவும் உங்க ரெண்டு பேர் முகத்துலேயும் இருக்கு.

அந்த முடிவெடுத்தது எப்படி தப்பில்லைனு நிருபிச்சேனோ அதே மாதிரி இந்த முடிவும் என் வாழ்க்கைக்கு நல்லதாக மட்டும் தான் இருக்கும்.நம்புங்கப்பா..”

“உன்னைப் பத்தி தெரியாதா அன்பு..பொண்ணு வீட்ல விஷயம் தெரியுமா?என்ன சொல்றாங்க?!”

“அவளோட அம்மாக்குத் தெரியும் அப்பாகிட்ட இனி தான் ப்பா பேசணும்.”

“சரி அந்தப் பொண்ணை வீட்ல பேச சொல்லு..பேசிப் பார்ப்போம்..”,என்றவர் உள்ளே சென்று விட ராகினியின் முகத்தில் புன்னகை அரும்பியது.

“அன்பு கண்ணா உன் கல்யாணத்துக்காக நான் போகாத கோவில் இல்ல..எந்தப் பிரச்சனையும் இல்லாம எல்லாம் நல்ல படியா முடியணும்.அந்தப் பொண்ணும் நீயும் பொருத்தமா இருக்கீங்க டா..”

“அவகிட்ட பேசுறியா மா?!”

“திடீர்னு பேசினா எப்படி எடுத்துக்குமோ..பாவம் வேலையில் இருக்க போகுது கண்ணா..”

“ஒரு நிமிஷம் இரு வரேன்..”,என்றவன் வாசலுக்குச் சென்று காயத்ரியை அழைத்தான்.

“சொல்லு அன்பு..”

“லவ் யூ பொண்டாட்டி..”

“ஹே..என்ன ஒரு அதிசயம்..நல்ல மூட்ல இருக்கீங்களோ சார்?”

“ம்ம் அம்மா அப்பாகிட்ட பேசிட்டேன்.உங்க அப்பாகிட்ட பேசிட்டு சொல்ல சொன்னாங்க..”

“டேய் என்ன நீ இந்த ஸ்பீட்ல போற..”

“இதுவே லேட்..சரி ஒரு நிமிஷம் ஃப்ரீயா?”

“ம்ம் காபி சாப்ட வந்தேன் என்ன சொல்லு அன்பு..”

“அம்மாகிட்ட பேசு கொடுக்குறேன்..”

“ஐயோ டேய் ஏன்டா இப்படி பண்ற?!”

“ஏன் இப்படி அலர்ற..”,என்றவன் சிரிக்க அவளோ இன்னும் பதட்டமானாள்.

“அவ்வளவு மோசமான மாமியார் எல்லாம் இல்ல காயூ..அப்பறம்..நாம இரண்டு பேரும் லவ் பண்றோம்னு தான் சொல்லிருக்கேன்..கல்யாணம் வரையும் அதையே மெயின்டெயின் பண்ணிக்கோ..தேவையில்லாத பேச்செல்லாம் இல்லாம இருக்கும் அதான்..”

“சரி அன்பு..”

“ம்ம் ஒரு நிமிஷம் இரு..ம்மா இந்தா காயத்ரி லைன்ல இருக்கா..”

“ஹலோ..”

“நல்லாயிருக்கீங்களா ம்மா..”

“நல்லாயிருக்கேன் மா..நீ எப்படியிருக்க..”

“ம்ம் நல்லாயிருக்கேன்..அப்பா எப்படியிருக்காங்க?!”

“நல்லாயிருக்கார் மா..காலேஜ்ல இருக்கும் போது ஒரு தடவை பங்ஷன்ல பார்த்துருக்கோம் இல்ல..”

“ஆமா நியாபகம் வைச்சுருக்கீங்களே..”

“எல்லாம் நல்லபடியா நடக்கட்டும் ஒருநாள் வீட்டுக்கு வா டா..அப்பா அம்மாகிட்ட பேசிட்டு சொல்லு..அன்புட்ட கொடுக்குறேன்..”

“காயூ..”

“….”

“ஓய் இருக்கியா?!”

“….”

“ஹலோ…”

“நான் அப்பறம் பேசுறேன் அன்பு..”,என்றவளின் குரல் நடுக்கத்திலேயே அவளது நிலைமை புரிந்திருந்தது அவனுக்கு.

மறுபடியும் அழைத்துப் பேச விரும்பாதவனாய் குறுஞ்செய்தி அனுப்பினான்.

“லூசு..என்னாச்சு?!”

“நீ என்னை நல்லா பாத்துப்பனு எனக்குத் தெரியும்..ஆனால் இந்தளவு எதிர்பார்க்கல அன்பு..தேங்க்ஸ்..”

“இனி நீ என் பொறுப்பு காயூ..இன்னொரு தடவை நீ அழக்கூடாது..நான் தான் அன்னைக்கே சொன்னேன்ல நிறைய தூரம் தனியா வந்துட்ட இனி ஒவ்வொரு நாளும் நான் கூட இருக்கணும், இருப்பேன்.சரியா?”

“லவ் யூ அழகு புருஷனே..”,என்றவளின் பதிலிலேயே அவள் சற்று தேறியிருப்பது தெரிந்தது அன்புச் செல்வனுக்கு.

“இப்படியே இரு இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தம்பி தங்கச்சியை மீட் பண்ணலாம்..”

“டீல்..நான் ரெடி இப்போவே..”,என்றவள் பற்கள் தெரிய இருக்கும் ஸ்மைலியை அனுப்பியிருந்தாள்.