ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வா
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் – ஏற்றவர்க்கு
நல்ல குடிபிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து

விளக்கம்
கால் சுடும் அளவிற்கு நீர் வற்றி போய் வெரும் மணலாக ஆறு வற்றி போனாலும், அதை தோண்டுவோருக்கு, ஊற்று நீர் கொடுத்து இந்த உலகதிற்கு உதவும் நதியைப் போலே நல்ல மனம் படைத்தோர்,

நல்ல காரியங்கள் செய்யும் நல்ல குடியில் பிறந்தோர் தங்களுக்கு இல்லையென்றாலும் அடுத்தவர் கேட்கும் பொது தங்களிடம் உள்ள பொருளையும் கொடுத்து உதவுவார்கள்.

அனைவரும் ஆவலாய் எதிர்பார்த்திருந்த திருமண நாளும் வந்திருந்தது.அதிகாலையிலேயே கிளம்பி இரு குடும்பமும் மருதமலை கோவிலை அடைந்திருக்க மணப்பெண் அலங்காரத்தில் தன்னருகில் நின்றிருந்தவளைத் தாண்டி விழியகற்றவில்லை அன்புச்செல்வன்.

காயத்ரியின் முகமோ அத்தனை பூரிப்பும் புன்னகையுமாய் இருக்க பார்த்திருந்த பெற்றவர்களுக்கு மனம் நிறைந்து போனது.சிறியவர்கள் அவர்களின் அருகில் நின்று ஆர்பரித்துக் கொண்டிருக்க குறித்த நேரத்தில் காயத்ரியை தன் மனைவியாக்கிக் கொண்டான் அன்புச் செல்வன்.

ஆனந்தன் இன்பா தமிழ் மூவரும் மணமக்களைச் சூழ்ந்து கொள்ள காயத்ரி ஒவ்வொரு நொடியையும் மனதிற்குள் பத்திரப்படுத்திக் கொண்டிருந்தாள்.

அங்கிருந்து கிளம்பியவர்கள் காயத்ரியின் வீட்டிற்குச் சென்று சம்பிரதாயங்களை முடித்து மணமக்களை அழைத்துக் கொண்டு அன்புச்செல்வனின் வீட்டிற்குக் கிளம்பியிருந்தனர்.காரில் மணமக்களோடு ஆனந்தன் ஏறிக்கொள்ள மற்றவர்கள் வேனில் அவர்களைப் பின் தொடர்ந்தனர்.

“வாழ்த்துக்கள் அண்ணி..வெல்கம் ஹோம்..”

“தேங்க் யூ தம்பி..”,என்றவளைப் பாசமான பார்வைப் பார்த்து திரும்பி அமர்ந்து கொண்டான்.

“வாழ்த்துக்கள் பொண்டாட்டி..”,மெல்லிய குரலில் கூறிய வண்ணம் அவளது வலது கையை எடுத்து தன் இடக்கைக்குள் வைத்துக் கொண்டவனைக் காதல் பொங்கப் பார்த்திருந்தாள்.

“லவ் யூ அன்பு..”,என்றவளின் குரல் லேசாய் கரகரத்து ஒலித்தது.புரிந்துக் கொண்டவனாய் அவளது கையை அழுத்திப் பிடித்தவன் கண்களாலேயே அழாதே என்று எச்சரிக்க எப்போதும் போல் தன் விரிந்த புன்னகையை பதிலளித்தவள் சற்றுத் தெளிந்திருந்தாள்.

“ஈவ்னிங் ரிசெப்ஷன் வரை வீட்டுல கூட்டம் இருக்கும் காயூ..முடிஞ்ச வரை நான் உன்கூடவே தான் இருப்பேன்.அப்படியே தனியா இருக்கும் போது யாரும் எதுவும் பேசினாலும் பெருசா கண்டுக்காத.அம்மாவும் தேனும் உன்னைக் கண்டிப்பா தனியா விடமாட்டாங்க சரியா..”

“ம்ம்..நம்ம வீட்டுக்குத் தானே வரேன்..நான் பாத்துக்குவேன் அன்பு..நீ வந்தவங்களை கவனி..”,என்றவளை மெச்சுதலாய் பார்த்திருந்தான்.

மாலை வரவேற்பிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க நெருங்கிய சொந்தங்கள் அனைத்தும் அன்புவின் வீட்டை நிறைத்திருந்தனர்.

காயத்ரி மனதளவில் பயங்கர பதட்டத்தில் இருந்தாலும் முகத்தில் எதையும் காட்டாமல் சாதாரணமாய் இருந்தாள்.சம்பிரதாயங்கள் முடியும் வரை அவளருகிலேயே அன்பு இருக்க ஓரளவு சாதாரணமாக இருக்க முடிந்தது.

அதன்பின் காயத்ரியை உள் அறையில் அமருமாறு பெரியவர்கள் கூற அன்பு வந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தான்.தேன்மொழி அவளருகிலேயே அமர்ந்திருந்தாள்.

“அண்ணி டென்ஷனா இருக்கா..நாளையிலிருந்து நாம மட்டும் தான் இருப்போம்..இன்னைக்கு ஒரு நாள் வேற ஆப்ஷனே இல்ல..”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல டா..”,என்றவள் அவளோடு பேச எத்தனிக்க ஒரு பெண்கள் கூட்டம் அறையை ஆக்கிரமித்துக் கொண்டது.

“என்ன தேனு உன்ற அண்ணி என்ன சொல்றா?!”

“எங்க அன்பு ரெம்ப சாது குணம்..அவனுக்கு போலீஸ் பொண்ணு தான் பொண்டாட்டியா வரணும்னு இருந்துருக்கு..”

“என்ன மா எத்தனை வருச காதல் உங்களோடது?!”

“எங்க அண்ணனும் மதினியும் கூட மறைச்சுட்டாங்களே..இதான் எங்க குடும்பத்துல நடக்குற முதல் காதல் கல்யாணம்.”

“ம்ம் அன்புக்கும் வயசு ஏறுதுல அதான் எதுவும் சொல்லாம சட்டுபுட்டுனு கல்யாணத்தை முடிச்சுடாக..”

“வேலைக்குப் போக போறியா இல்லை அன்பு வேலையை விட சொல்லிட்டானா?”

“ஒரே காலேஜ்னா கல்யாணத்துக்கு முன்னாடியே அடிக்கடி வீட்டுக்கு வந்துருப்பியே..”

காயத்ரிக்கோ ஐயோவென்றானது எத்தனை எத்தனை கேள்விகள்.என்னவெல்லாம் யோசிக்கிறார்கள்.அன்பு ஏன் தங்கள் காதலைப் பற்றிய மொத்த உண்மையையும் கூறாமல் விட்டான் என்பதை உணர்ந்தவளுக்கு அவனின் மீதான காதல் இன்னுமாய் அதிகரித்திருந்தது.

அவளறியாமல் மனம் அவனின் அருகாமையை வேண்டி நின்றது.அதை வெளிப்படுத்தத் தெரியாதவளாய் தவித்தவளின் முக சுணக்கம் கண்டு தேன்மொழி அவளைச் சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு வெளியே சென்றாள்.

சில நொடிகளில் காயத்ரியின் கைப்பேசி அழைக்க எடுத்துப் பார்த்தவளின் முகம் பூவாய் மலர்ந்து போனது.

“அன்பு..”

“பொண்டாட்டி, சொல்லி தான அனுப்பினேன்..”

“அந்த வாலு வந்து என்ன சொன்னா உன்கிட்ட..”

“ம்ம் அண்ணி உன்னை ரொம்ப தேடுறாங்கனு சொன்னா..”

“ஹே..அப்படியெல்லாம் முகத்துல காட்டிக்கல நான் ஒண்ணும்..”

“அப்போவே தெரியுதுனா பார்த்துக்கோயேன்..”

“…”

“காயூ..”

“ம்ம்..”

“சமத்தா கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பியாம்..ரிசெப்ஷன்ல அழகா அம்சமா ரெடியாகி என் பக்கத்துல வந்து நின்னுப்பியாம்..வேற எதையும் நினைக்காத இப்போ..வாசல்ல தான் இருக்கேன்..உள்ளே வர முடியாத நிலைமை..புரியுதுதான?”

“இந்தப்பக்கம் திரும்பி பாரு அன்பு”

அறையின் ஜன்னல் வழியாக அவனைப் பார்த்தவளின் முகம் தெளிந்திருக்க முகம் நிறைத்த புன்னகையோடு,”நான் பாத்துக்குறேன்..நீ போய் வந்தவங்களை கவனி அன்பு”,என்றவளைப் பார்த்து கண்சிமிட்டி நகர்ந்தான்.

சரியாய் தேன்மொழி அந்த நேரம் உள்ளே வர அவளைப் பார்த்தவளின் புன்னகை இன்னுமாய் பெரிதானது.

“ஹப்பாடா..இப்போ தான் இன்னும் அழகா இருக்கீங்க அண்ணி..”,என்றவளைப் பாசமாய் அணைத்துக் கொண்டாள்.

மாலை வரவேற்பிற்காக அவளைத் தயார்படுத்த அழகு நிலையத்திலிருந்து வந்திருக்க அன்பு மாடியில் தயாராகிக் கொண்டிருந்தான்.

நேரம் ரெக்கைக் கட்டிக் கொண்டு பறக்க,சொந்தபந்தங்கள் அனைவரும் முன்னே கிளம்பியிருக்க தேன்மொழியும்,அவளது பெரியப்பா மகளும் காயத்ரியோடு இருந்தனர்.ஆனந்தனும் இன்பாவும் அன்புவோடு கீழே வர யாருமில்லாமல் ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தவனை நோக்கி அவனது பெரியப்பா  மகள் வந்தாள்.

“வாக்கா..குட்டிஸ் எங்க?”

“அவங்க எல்லாம் மண்டபத்துக்கு போயாச்சு டா..ஆமா நிஜமாவே நீ லவ் மேரேஜ் தான் பண்ணிருக்கியா?”

“ஏன் இப்படி…”

“பின்ன என்னடா அரேண்ஞ் மேரேஜ் பண்ணி வைச்சாலே அவனவன் பொண்டாட்டியைப் பார்க்குறதுக்கு கிடைக்குற கேப்ல எல்லாம் அலையுவான்.நீ என்ன டா னா..”

“அட அக்கா..நானே இப்போ தான் கீழே வந்தேன்.”

“ம்ம் கதை சொல்லாத..போ போய் டக்னு பார்த்துட்டு வா அவளுக்கும் உன்னைப் பார்க்கணும்னு இருக்காதா..”

“தேங்க்ஸ் அக்கா..”,என்றவன் புன்னகைத்து கதவைத் திறக்க அவனை அங்கு எதிர்பாராதவளுக்கோ மனம் கொள்ளா சந்தோஷம்.

“ஹே..”

“அட என்னடி என் போலீஸ் பொண்டாட்டியை இப்படி மாத்திருக்காங்க..”

“எனக்கே என்னவோ போல இருக்கு அன்பு..நல்லாயில்ல தான..”

“அம்சமா இருக்க காயூம்மா..”,என்றவன் நெற்றியில் அழுத்தமாய் இதழ் பதித்து விடுவித்தான்.

அத்தனை நேரமும் மனதிலிருந்த கலக்கமெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டதை உணர்ந்தவள் அவன் மேல் ஆதரவாய் சாய்ந்து கொண்டாள்.

“என்னவோ மேஜிக் வைச்சுருக்க டா..உன்னைப் பார்த்தாலே மனசு ரொம்ப லேசாகிடுது..”

“இதுதான் அந்த மேஜிக் என்றவன் அவளது தாலியைச் சுட்டிக்காட்டிய வண்ணம்,”ஐயாக்கு இப்போ லைசென்ஸ் இருக்குமா எந்த இடைஞ்லும் இல்லாம உன் மேல லவ்வை பொழிய வேணாமா..”

“ஆனாலும் நீ இப்படி ஒரு காதல் மன்னன்னு எனக்குத் தெரியாம போச்சு..”

அவன் பதில் கூற வரும் நேரம் கதவு தட்டும் ஓசைக் கேட்க இரவு பேசலாம் என்று சைகைக் காட்டிவிட்டு கதவைத் திறந்து வெளியே சென்றிருந்தான்.

 ஐந்தரை மணியளவில் வீட்டிலிருந்து கிளம்பியவர்கள் அடுத்த பதினைந்து நிமிடங்களில் மண்டபத்தை அடைந்திருக்க அடுத்த ஐந்து மணிநேரமும் பம்பரமாய் சுழன்றது.

அன்புவின் தொழில்வட்டம் நண்பர்கள் ஒருபுறம் எனில் காயத்ரியின் டிபார்ட்மெண்ட் மக்கள் இன்னொருபுறம்.வந்தவர்கள் அனைவருக்கும் பெண்ணைப் பற்றிய பேச்சாய் தான் இருந்தது.

காயத்ரியின் உயர் அதிகாரி மேடையேற அவருக்கு மரியாதை கொடுக்கும் வண்ணம் விரைப்பாய் தன் உயரத்திற்கு நிமிர்ந்து நின்றவள் நொடியில் இயல்பிற்குத் திரும்பியிருந்தாள்.

அவளைப் பார்த்துக் கொண்டிருந்த அன்புச் செல்வனுக்கோ மிகவும் பெருமையாய் இருந்தது.

“வாழ்த்துக்கள் அன்புச்செல்வன்.வாழ்த்துக்கள் காயத்ரி.”

“தேங்க் யூ சார்.தேங்க் யூ ஃபார் கம்மிங்.”

“இட்ஸ் மை ஃப்ளஷர் மை கேர்ள்.காயத்ரி மாதிரி சின்சியரான ஆபீசரைப் பாக்குறது ரொம்ப கஷ்டம் மிஸ்டர் அன்புச்செல்வன்.அவ்ளோ டெடிகேட்டடா இருப்பா.எப்போ கல்யாணம்னு கேட்டா மட்டும் ஒரு சிரிப்பு தான் பதில் வரும்.

நான் கூட நினைச்சேன் நல்ல பொண்ணு..ஒரு வேளை அவளோட வேலைனால தான் கல்யாணம் தள்ளிப் போகுதோனு.இப்போ தான தெரியுது அதுக்கு காரணம் நீங்கனு..”,என்று கூறி அவர் வெடிச் சிரிப்பு சிரித்தார்.

காயத்ரி லேசாய் புன்னகைக்க அன்பிற்கோ சற்று கூச்சமாய் இருந்தது.மேலும் சில நொடிகள் பேசிவிட்டு இருவரையும் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்துவிட்டு அவர் கீழே இறங்கியிருந்தார்.

கான்ஸ்டபிளில் இருந்து கமிஷனர் வரை அவளுக்காக வந்திருந்ததிலேயே அவளது வேலை மீதான நேர்த்தி அவனுக்குப் புரிந்து இருந்தது.

“அக்கா..மாமாவும் நீங்களும் செம தூள்”,என்றபடி வந்த பெண்ணை வரவேற்று அன்பு புன்னகைக்க,

“ஹெட் கான்ஸ்டபில் மல்லிகா”,என்று அறிமுகப்படுத்தினாள்.

“அதெல்லாம் ஊருக்கு தான்..நான் இவங்க தங்கச்சி இவங்க என் அக்கா”,என்றவள் உரிமையாய் அவளை அணைத்து நிற்க புன்னகை மாறாமல் அவர்களின் உரையாடலைக் கேட்டிருந்தான்.

சிறிவர்களின் ஆட்டம் பாட்டமென அரங்கமே களைக் கட்டியிருக்க காயத்ரியின் பெற்றோருக்கு மனம் நிறைவாய் இருந்தது.

இரவு வீட்டிற்கு வரும் போதே மணி பதினொன்றைத் தொட்டிருக்க அவசர அவசரமாய் ராகினியும் அன்புவின் அக்காவும் சேர்ந்து காயத்ரியை தயார் செய்து மாடிக்கு அனுப்பி வைத்தனர்.

வெளியில் பேச்சு சத்தம் கேட்டதுமே கதவருகே வந்திருந்தவன் கதவைத் திறந்து புன்னகையோடு அவளை வரவேற்றான்.

“வெல்கம் காயூ..”,சிறு புன்னகையோடு தலையசைத்தவள் கையிலிருந்த பாலை அங்கிருந்த டேபிளில் வைத்துவிட்டு அன்பின் அருகில் வந்து நின்றாள்.

அத்தனை சோர்வையும் மீறி ஒருவித இதம் அவளது முகத்தில் பரவியிருந்தது.வந்தவள் சிறிதும் யோசிக்காமல் தன்னவனை இறுக அணைத்துக் கொண்டாள்.அதை எதிர் பார்த்திருந்தவனும் தன்னோடு இன்னுமாய் சேர்த்துக் கொண்டான்.

“ஹேப்பியா பொண்டாட்டி..”

“ம்ம்ம்..”

“நம்ம ரூம்க்கு முதல் தடவை வந்துருக்க பார்க்க மாட்டியா?”

“ம்ஹும்..”,என்று தலையசைத்தவளின் முகம் இன்னும் அவன் மார்பிலேயே இருக்க அவளது கண்ணீர் அன்புவின் சட்டையை நனைத்தது.

“லூசு..இதுக்கு தான் பேச்சை மாத்துறேன்..நிமிர்ந்து பாரு..”அதற்கும் இடவலமாய் தலையசைத்தவளின் அழுகை அதிகரித்திருந்தது.

அவளின் நிலையுணர்ந்தவனாய் மெதுவாய் அவளோடு நகர்ந்து கட்டிலில் அமர அப்போதும் தன்னைக் கட்டுப்படுத்தினாளில்லை.

“ஓய்..ஏன் டி இப்படி பண்ற..இங்க பாரு..”,என்றவன் கட்டாயமாய் அவளைப் பிரித்து முகத்தை கைகளில் ஏந்திக் கொண்டான்.

“கனவு மாதிரி இருக்கு அன்பு..”

“…”

“இதெல்லாம் நடக்கும்னு நான் நினைக்கவேயில்ல..எல்லாத்துக்கும் மேல உன்னோட இந்த காதலும் பாசமும்..வாழ்க்கையில வேற எதுவுமே வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்..”

“…”

“லவ் யூ சோ மச் அன்பு..”,என்றவள் முகத்திலிருந்த அவனது கரத்தில் இதழ் பதித்தாள்.

“உன் நிலைமையை புரிஞ்சுக்க முடியுது காயூமா…ஆனாலும் நீ இப்படி அழறதை என்னால தாங்கிக்க முடியல..இதுவரை போனதெல்லாம் போகட்டும் இனி நாம இரண்டு பேருமா ரசிச்சு ரசிச்சு ஒரு ஒரு நாளும் வாழணும்..

சரி சொல்லு காலையிலிருந்து ரொம்ப டென்ஷனா..தேனு  ரொம்ப புலம்பினா..”

“இல்ல புது இடம் புது மனுஷங்க..அதான் கொஞ்சம் ஒரு மாதிரி இருந்துச்சு.ஆனா அந்த வாலு என்னை விட்டு நகரவேயில்லை..”,என்றவள் தன்னை மீட்டிருந்தாள்.

“ம்ம் சின்னதுங்க இரண்டுக்குமே அப்படி ஒரு பாசம் உன்மேல..ஆனந்தனும் அப்படி தான் ஆனாலும் ரொம்ப வெளிக் காட்டிக்க மாட்டான்.ஆனால் இவங்க ரெண்டு பேரையும் கையில் பிடிக்க முடியல..”

“அதென்னவோ சரி தான்..”,என்றவள் லேசாய் கழுத்தைப் பிடித்த வண்ணம் சாதாரணமாய் அமர முயற்சிக்க,

“போய் டிரெஸை மாத்திட்டு வா காயூ..நல்ல டயர்டா தெரியுற..அப்பறம் பேசலாம்..”,என்றவன் கழுத்தை இதமாய் நீவியடி அனுப்பி வைத்தான்.

இரண்டு நிமிடங்களில் காயத்ரி வந்த போது அவனுமே இரவு உடைக்கு மாறியிருந்தான்.கட்டிலின் பின்பகுதியில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தவன் அவளை நோக்கி தன் கையை நீட்ட,அதை இறுகப் பற்றிக் கொண்டவளாய் அவனருகில் அமர எத்தனித்தாள்.

சட்டென தடுத்தவன் அவனது மடியை கைக்காட்ட அதற்காகவே காத்திருந்தவளாய் நொடியும் தாமதியாது படுத்துக் கொண்டாள்.

ஒரு வார்த்தையும் பேசவும் கேட்கவும் வேண்டுமென்ற எண்ணம் இல்லாமல் போயிருந்தது இருவருக்கும்.

சில நிமிடங்கள் அமைதியிலேயே கரைய பின் எழுந்தவள் அவனையும் படுத்துக் கொள்ளுமாறு கூறினாள்.அவளுக்கு இடம் கொடுத்து தள்ளிப் படுத்தவன் அவளையே பார்த்திருந்தான்.

“என்ன போலீஸம்மா ஐஸ்கிரீம் சாப்பிட போலாமா?”,என்றவன் கண்சிமிட்டிச் சிரிக்க திருமணத்திற்கு முன் இருவரும் சென்று வந்த நினைவு வந்தவளுக்கு முகம் சிவந்து போய்விட்டிருந்தது.

அவனது கண்களின் அழைப்பைப் புரிந்தவள் அமைதியாய் இமை தாழ்த்திக் கொள்ள சம்மதத்தை உணர்ந்தவன் மெதுவாய் அவளின் இதழ்களைத் தன் வசப்படுத்திக் கொண்டான்.இரண்டொரு நிமிடங்கள் அப்படியே கடந்திருக்க தன்னவளிடமிருந்து விலகினான்.

“லவ் யூ பொண்டாட்டி.நிம்மதியா தூங்கு நிறைய ரெஸ்ட் தேவை உனக்கு”,என்றவன் அவளது முடிக்கற்றைகளை காதோரம் ஒதுக்கி விட அந்த கையை அப்படியே கன்னத்தில் அழுத்திப் பிடித்த படி கண்ணயர்ந்திருந்தாள்.