திரு ஒக்கும், தீது இல் ஒழுக்கம்; பெரிய
அறன் ஒக்கும், ஆற்றின் ஒழுகல்; பிறனைக்
கொலை ஒக்கும், கொண்டு கண்மாறல்; புலை ஒக்கும்,
போற்றாதார் முன்னர்ச் செலவு


நல்லொழுக்கம் செல்வம் போன்றது. முறையான இல்லற ஒழுக்கம் துறவறத்தைப் போன்று தூய்மையானது. பிறரைப் பழித்துப் புறங்கூறுதல் கொலை செய்தல் போன்றது. தம்மை மதியாதவரை மதித்தல் என்பது இழிதகைமையானது ஆகும்.

அன்றைய நாள் காலை சீக்கிரமே எழுந்துக் கிளம்பித் தயாரானவள் வெகுநேரமாகியும் அப்படியே அமர்ந்திருந்தாள்.தீபாவின் குரலால் நடப்பிற்கு வந்தவள் எதுவும் பதில் கூறாமல் அப்படியே அவளை வெறித்துக் கொண்டிருக்க,

“ஏன் டீ இப்படி இருக்க..யாருக்கும் இவ்வளவு சீக்கிரம் கிடைக்காத வாய்ப்பு…சந்தோஷமா ஏத்துப்பியா அதை விட்டுட்டு…

வேலைக் கொஞ்சம் அதிகமாகத் தான் இருக்கும்..ஆனாலும் அதுக்கேத்த சம்பளமும் கிடைக்கும் இல்ல…நம்மளை மாதிரி பொண்ணுங்க எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி என்ன சம்பாதிக்குறோமோ அதுதான் பெத்தவங்களுக்காக கொடுக்க முடியும்…கல்யாணம் ஆச்சுனா வரப் போறவன் குடும்பத்துக்கு தான் உழைச்சுக் கொட்டணும்..

அப்படி நினைச்சுக்கோ கஷ்டம் தெரியாது…என்ன டி நான் பாட்டுக்குப் பேசிட்டு இருக்கேன்..”

“ம்ம் சரிக்கா…போகப் போகப் பழகிடுவேன்னு நினைக்குறேன்…நான் கிளம்புறேன்…”,என்றவள் இயந்திரத்தனமாய் கிளம்பிச் சென்றாள்.

அலுவலகத்தின் நான்காவது தளத்தை அடைந்தவளுக்கு அன்றைய நாளின் நினைவுகளே முழுதாய் ஆக்கிரமித்திருந்தது.ஆழ்மூச்செடுத்தவளாய் முன்னேறிச் சென்றவள் ப்ரஜீஷ் மேனேஜிங் டேரெக்டர் என்றப் பெயர் பலகைத் தாங்கிய அறையின் முன் சென்று நின்றாள்.

எது எப்படியாயினும் தனக்கான வேலைகளை ஒழுங்காய் செய்ய வேண்டும் என்று மீண்டும் ஒரு முறைக் கூறிக் கொண்டு அவனது அறையின் அருகிலிருந்த அறைக் கதவைத் திறந்து உள்ளேச் சென்றாள்.

அது கிட்டத்தட்ட ராஜீவின் அறைப் போன்றே இருந்தது.அவளுக்கான நாற்காலி மேசை அருகில் சிறிய கப்போர்ட் என்று அழகாய் இருந்தது.தனது கைப்பையை மேசையில் வைத்துவிட்டு அதிலிருந்து தனதுப் பெயர்பலகையை எடுத்து அதற்க்கான இடத்தில் மாட்டி வைத்தவள் பக்கவாட்டில் திரும்ப கண்ணாடித் தடுப்புடன் மறுபுறத்தில் ப்ரஜீஷின் அறை தெரிந்தது.

அவளது அறையிலிருந்து அங்கு செல்வதற்கு வழியும் இருந்தது.அவனது காலி இருக்கையைப் பார்த்ததற்கே பயம் அதுவாய் மனதை நிறைத்திருந்தது.

அதற்கு மேல் அவளைச் சிந்திக்க விடாமல் நிமிர்ந்த நடையோடு கதவைத் திறந்து கொண்டு உள் நுழைந்தான் ப்ரஜீஷ்.அடுத்த நிமிடம் எதைப் பற்றியும் யோசிக்காமல் கையில் ஒரு குறிப்பேடும் பேனாவுமாய் உள்ளிருந்த வழி நுழைந்து அவனறைக்குள் சென்றாள்.

தனதிருக்கையில் அமர்ந்தவன் நிமிர்ந்துத் தன் முன் நிற்பவளைப் பார்க்க அப்போது தான் இன்று முதல் அவள் இந்தப் பதவியில் இருக்கப் போகிறாள் என்ற நினைவே வந்தது.

“குட்மார்னிங் சார்..”

“கால் மீ ப்ரஜீஷ்…இங்க இந்த சார் மேடம் கான்செப்ட் எல்லாம் கிடையாது..”

“ஆ…ஓ.கே..”

“சோ…நிஷா உங்களுக்குத் தேவையான எல்லா விவரங்களும் கொடுத்துருப்பாங்கனு நினைக்குறேன்..”

“யெஸ் சா…ப்ரஜிஷ்..”

“ம்ம்ம் ஒரு வேளை எதாவது சந்தேகம் னா ராஜீவ்…அதான் உங்க அண்ணன்கிட்ட கேட்டுக்கோங்க…பட் எக்காரணம் கொண்டும் என் வேலையில தப்பு நடக்கக் கூடாது..கீப் தட் இன் மைண்ட்..”

“கண்டிப்பா…என்னோட பெஸ்ட் கண்டிப்பா கொடுப்பேன்…”

“குட்…சோ இன்னையோட ஸ்கெடியூல் என்னனு நோட் பண்ணிக்கோங்க..அதுக்கு முன்னடி நம்ம ஜுவல்லரி ஷாப் சம்பந்தப்பட்ட பைல் வேணும் எடுத்துட்டு வாங்க…”

அபூர்வாவிற்கு ஆச்சரியம் தாங்கவில்லை.அன்று பார்த்தவனா இவன் எனும் அளவிற்குத் தெளிவானப் பேச்சும் தொழில் மீது கொண்ட சிரத்தையும் இருந்தது அவனது பாவனையில்..

தான் பயந்ததெல்லாம் வீண் என்று அவளே எண்ணுமளவிற்கு இருந்தது அவனது நடவடிக்கைகள்.அவனின் பேச்சிற்கு ஆமோதிப்பாய் தலையசைத்தவள் அந்தப் பைலை  எடுப்பதற்காக அவனது கபோர்டைத் திறக்க பெரிய மதுபாட்டில் ஒன்று அதில் இருந்தது.

ஒரு நொடிப் பதறியவளாய் அதைச் சட்டென மூடியவள் பக்கத்து கப்போர்டைத் திறந்து அவன் கேட்ட கோப்புகளை எடுத்துக் கொண்டு திரும்ப,ப்ரஜீஷோ அவளையேப் பார்த்திருந்தான்.

“ஹா….வேலை செய்யுற இடம் கோவில் மாதிரி..அங்க இதெல்லாம் வச்சுருக்கக் கூடாது..ஆனாலும் என்ன பண்றது பழக்கத்தை யாருக்காகவும் மாத்திக்குறப் பழக்கம் எனக்கு இல்லை..

எனிவே இனி அந்த கப்போர்டைத் திறக்காம இருந்தா உனக்குத் தேவையில்லாத கோபம் வர்றதைத் தடுக்கலாம்..”

“அது…அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல..”

“ம்ம் தட்ஸ் பெட்டர்…ஓகே அந்த பைலைக் கொடுங்க…”,என்றவன் அதில் மூழ்கி விட அபூர்வாவிற்கோ இவனை எந்த ரகத்தில் சேர்ப்பது என்றேத் தெரியாமல் போனது.

அன்று மதிய உணவு நேரத்திற்கு முன்பு வரை ஒரு நொடி கூட அவளால் மூச்சு விடக் கூட முடியவில்லை எனுமளவிற்கு ஏதாவது சொல்லிக் கொண்டே இருந்தான்.முதல் நாள் என்பதால் நிறைய விஷயங்களைப் பொறுமையாய் கற்றும் கொடுத்தான்.

எது புரிந்ததோ இல்லையோ அபூர்வாவிற்கு அவனைப் பற்றி புரிந்த ஒன்று, தொழில் வேலை என்று வந்துவிட்டால் அவன் முற்றிலுமாய் வேறு உலகத்திற்குள் வாழும் வேற்று கிரகவாசியாகவே மாறிவிடுவான் என்பதே அது.

மதிய உணவு வேளையில் அவன் வெளியே சென்றுவிட ராஜீவ் அபூர்வாவைப் பார்க்க வந்திருந்தான்.

“என்ன செகரெட்ரி மேடம்…பர்ஸ்ட் டே எப்படியிருக்கு?”

“நல்லாயிருக்கு ணா…நிறைய கத்துக்கிட்டேன்…தெரியாததை பொறுமையாச் சொல்லி கொடுத்தார்.கண்டிப்பா சீக்கிரமே நல்ல பேர் வாங்கிடுவேன்..”

“வெரி குட்…இப்படித் தைரியமா இருந்தா பார்க்க எவ்வளவு நல்லாயிருக்கு..எப்போ எந்த சந்தேகம்னாலும் என்கிட்ட கேளு சரியா…”

“கண்டிப்பா…உங்ககிட்ட தான் வருவேன்..வேற ஆப்ஷனே இல்லையே..”,என்றவள் புன்னகைக்க பதிலுக்குப் புன்னகைத்துச் சென்றான்.

இப்படியாய் ஒரு வாரகாலம் போனதேத் தெரியவில்லை எனும் அளவிற்கு அத்தனை விஷயங்களைக் கற்றுக் கொண்டாள் அபூர்வா.

ஒரு நாளில் அவளுக்கான வேலைகளையும் அட்டவணைப்படுத்திக் கொள்ள முடிந்தது.இன்னும் ஒரு படி மேலாக ப்ரஜீஷின் மீது தனி மரியாதையே வந்திருந்தது.

இப்படியான நிலையில் அன்று முக்கியமான மேட்டிங்கிற்குத் தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் அபூர்வா.

மீட்டிங் நடக்க போவது தாங்கள் புதிதாக ஒப்பந்தம் கையெழுத்திடப் போகும் கம்பெனியில் என்பதால் தேவையான ஆறேழு கோப்புகளைப் பலமுறைச் சரிபார்த்துத் தன் கைப்பையையும் எடுத்துக் கொண்டு அத்தனையையும் கையில் எடுத்துக் கொண்ட போது ஒரு பைலில் இருந்த இரண்டு மூன்று தாள்கள் அவளறியாமல் கீழே விழுந்திருந்தன.

ப்ரஜீஷ் அவனிடத்தில் இருந்து எழுந்துச் செல்வதைக் கண்டவளாய் வேகமாய் அவளும் அப்படியேச் சென்றிருந்தாள்.

மீட்டிங் தொடங்கி எல்லாம் சரியாய் சென்று கொண்டிருக்க ஒப்பந்ததாரர்கள் கையெழுத்திடும் நேரம் தாங்கள் தயார் செய்திருந்த பைலைக் கேட்டு ப்ரஜீஷ் அபூர்வாவிடம் கைநீட்ட அவளும் அதை எடுத்துக் கொடுத்தாள்.

ஒரு முறைச் சரி பார்ப்பதற்காக ப்ரஜீஷ் அதைப் புரட்டிப் பார்க்க முக்கியமாய் கையெழுத்திடும் பக்கங்கள் இல்லாமல் போயிருந்தன.

முன்னும் பின்னுமாய் இரண்டு முறைச் சரிபார்த்தும் தேவையானதைக் காணாமல் போக கோபத்தை அடக்கியவனாய் அவளைத் தன்பக்கம் அழைத்து மெதுவாய் பல்லைக் கடித்தபடி கேட்க அவளோ திருதிருவென முழித்து நின்றாள்.

அவன் அத்தனை நேரம் பொறுமையாய் இருந்ததே பெரிய விஷயம் எனுமளவிற்கு அத்தனைப் பேர் முன்னிலும் கண்மண் தெரியாமல் கத்தினான்.

“கொஞ்சமாவது அறிவிருக்கா…மீட்டிங்க்குத் தேவையானதை எல்லாம் எடுத்து வச்சுருக்கோமானு கூட பார்க்க மாட்டியா?அப்படி என்ன கவனம்?சாப்டுறதுக்கு மறந்துருக்கியா இல்லல…”

“சார்…அது….”,குரல் கம்மி கண்களின் பார்வையைக் கண்ணீர் மறைத்தது பெண்ணவளுக்கு.

“டோண்ட் க்ரியேட் அன் அன்னெசசரி சீன் நவ்…”,மீண்டுமாய் பல்லைக் கடித்தவனைப் பார்த்துத் தன்னைக் கட்டுப்படுத்தியவளாய்,

“மெயில் காப்பி இருக்கும்…ஒரு டூ மினிட்ஸ் ப்ரிண்ட் எடுத்துட்டு வந்துடுறேன்..”,என்றவள் அவனதுப் பதிலுக்குக் கூட காத்திராமல் மீட்டிங் அறையை விட்டு விறுவிறுவென வெளியேறியிருந்தாள்.

மீண்டும் உள்நுழைந்துத் தேவையானத் தாள்களை அவனிடத்தில் கொடுத்தவளுக்கு அங்கு யாரையும் பார்க்கும் திறனின்றிப் போக அப்படியே வெளியேறியிருந்தாள்.

பாத்ரூமிற்குச் சென்றவளுக்கு கண்களில் கண்ணீர் தாரை தாரையாய் பெருக்கெடுக்க தண்ணீர் கொண்டு முகத்தை வேக வேகமாய் துடைத்தெடுத்தவள் சில நிமிடங்களில் தன்னைத் தேற்றிக் கொண்டு வெளியே வருவதற்கும் ப்ரஜீஷ் அவளை அழைப்பதற்கும் சரியாய் இருந்தது.

“இங்க தான்…இதோ இப்போ வந்துடுறேன்..”,என்றவள் அவனிருக்கும் இடத்திற்குச் சென்றாள்.காருக்காக அவன் காத்திருக்க தன்னை நோக்கி வருபவளைப் பார்த்த நொடியிலேயேத் தெரிந்தது அவள் அழுதிருக்கிறாள் என.அவன் பேச வாய் திறக்கும் முன்னர் அவளே ஆரம்பித்திருந்தாள்.

“ரியலி சாரி சா…ப்ரஜீஷ்…இன்னொரு தடவை இப்படி நடக்காது..”

“என்னவோ சொன்ன மாதிரி இருந்துது!”

“ஐ அம் ரியலி சாரி..”

“இவ்வளவு சீக்கிரம் நீ சாரி கேட்குற நிலைமை வரும்னு நான் நினைக்கல…”,என்று குதர்க்கமாய் கூறியவனைப் புரியாமல் அவள் பார்க்க அதற்குள் கார் வந்துவிட்டதால் உள்ளே ஏறுமாறு செய்கை செய்தவன் அதற்குமேல் பேச்சை வளர்க்கவில்லை.

மதிய உணவு நேரத்தைக் கடந்து வெகு நேரம் ஆகிவிட்டிருந்ததால் ஓட்டுநரிடம் ஒரு ஹோட்டலின் பெயரைக் கூறி அங்குச் செல்லுமாறு கூறப் பதட்டமாய் தன்னைப் பார்த்தவளைக் கண்டு கொள்ளாது அமர்ந்திருந்தான்.

“இல்ல..நான் லஞ்ச் கையில் வச்சுருக்கேன்…ஆபீஸ் போயிட்டுச் சாப்பிட்டுக்குறேன்…”

“நான் என்ன பண்றது???”

அதற்குமேல் அவள் ஒன்றும் கூறாமல் ஜன்னலின் வழியேப் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.அடுத்த பத்து நிமிடத்தில் ஹோட்டலை அடைந்தவர்கள் உள்ளே செல்ல அதன் பிரம்மாண்டத்தைப் பார்த்து வாய் பிளந்து நின்றாள் அபூர்வா.

அவனைக் கண்டதும் சலாம் போட்டு அவர்களுக்கான மேஜையைத் தயார் செய்துக் கொடுத்துவிட்டு பணியாள் நகர கம்பீரமாய் அமர்ந்திருந்தவனின் எதிரில் குழந்தை போல் அமர்ந்திருந்தாள்.

“இதான் முதல் தடவையா?”

“ஹான்??!”

“இல்ல இப்படி பாத்துட்டு இருக்கியே இதுதான் முதல் தடவை ஹோட்டலுக்கு வர்றியானு கேட்டேன்..”

“ம்..ஆமா…”,என்றவளின் கண்கள் இன்னும் அங்கு நடந்ததை மறக்கவில்லை என்பதை எடுத்துரைக்க தன் இருக்கையில் வாகாய் சாய்ந்து அமர்ந்தவனாய்,

“ம்ம் அப்போ என்ன சொல்லிட்டு இருந்தேன்..ஹான் இத்தனை சீக்கிரம் நீ மன்னிப்பு கேட்குற நிலைமை வரும்னு நான் நினைக்கல…”

“ஏன் அப்படி சொல்றீங்க?தப்பு பண்ணிணா மன்னிப்பு கேட்டுத் தானே ஆகணும்..”

“ஹான்..ஆனா அன்னைக்கு நீ பண்ணிணதுக்கு மன்னிப்பு கேட்கலையே?”

“அது…”

“சொல்லு…”

“அன்னைக்கு என் மேல எந்தத் தப்பும் கிடையாது..அதனால தான் சொல்லல..”

“சோ அடமெண்ட்!”

“நீங்க அதை அப்படி எடுத்துகிட்டா நான் என்ன பண்ண முடியும்..தப்பு உங்க மேலனு தெரிஞ்சும் முதாலாளிங்கிறதுக்காக அதை என் மேல போட்டுக்க முடியாது இல்லையா…

அதுவுமில்லாம யாரா இருந்தாலும் தப்புக்குத் துணை போறது சரியான விஷயம் இல்லையே..”தயங்கித் தயங்கி எனினும் மனதில் இருப்பதை மறைக்காமல் கூறியவளிடம் மேலும் பேச்சை வளர்க்க நினைத்தவனாய்,

“எல்லாமே சரி ஆனா ஒருவேளை அந்தக் கோவத்துல நான் உன்னை வேலையை விட்டுத் தூக்கிருந்தா?”

“அப்படியும் நினைச்சேன்…சொல்லலப் போனா அதுதான் நடக்கும்னு எதிர்பார்த்து தான் மறுநாள் ஆபீஸுக்கு வந்தேன்..ஆனா நீங்க அப்படி எதுவும் பண்ணல…”

“ம்ம்..”,எனும்போதே அவர்களுக்கான உணவு வந்துவிட பேச்சை அப்படியே நிறுத்திவிட்டு அவளையே ஆராய்ச்சிப் பார்வை பார்த்திருந்தான் ப்ரஜீஷ்.

பணியாள் கொண்டு வந்து வைத்ததையெல்லாம் பார்த்ததும் ஒரு ஆச்சரியம் அவளது கண்ணில் அப்பட்டமாய் தெரிந்தது.தன் முன் இருப்பவற்றைப் பார்த்து என்ன செய்வதெனத் தெரியாமல் தவித்தவளைப் பார்த்து பொறுமையிழந்தவனாய்,

“என்ன பிரச்சனை உனக்கு??எது வேணுமோ சாப்பிட வேண்டியது தான?”

“இல்ல…இவ்வளவு எல்லாம் நான் சாப்பிட மாட்டேன்…அதான் வேஸ்ட் பண்ண வேண்டாமேனு…”

“ஓ காட்…ஏன் எல்லாத்துலேயும் எதாவது சொல்லிட்டே இருக்க…உனக்குத் தேவையானதை சாப்பிடு மத்ததை அவங்கத் தூக்கிட்டுப் போய் என்னவோ பண்ணிப்பாங்க…”

பசியோடு சேர்ந்த எரிச்சலில் அவன் போக்கில் கூறிவிட்டுத் தனக்கான உணவை உண்ண ஆரம்பித்திருந்தான் ப்ரஜீஷ்.

அவளோ தனக்கென இருந்த உணவில் கால் பங்கைக் கூட காலி செய்யாமல் தண்ணீரை அருந்திவிட்டு அமர்ந்தாள்.சாப்பிட்டு முடிக்கும் வரையிலுமே எதிரில் அப்படி ஒருத்தி இருப்பதாய் ஒரு நினைவு கூட இல்லாதவனாய் உணவை முடித்தவன் அதன் பின்பு தான் அவளைப் பார்த்தான்.

“போலாமா?”

“சா..ப்ரஜீஷ்…இதெல்லாம் அவங்க என்ன பண்ணுவாங்க?”

“வாட்??”

“இல்ல அது…”

“நான் வேணாப் போய் கேட்டுட்டு வரட்டுமா?”

“இல்ல..இதையெல்லாம் பார்சல் பண்ணி வாங்கிக்கட்டுமா..எவ்வளவு பணமோ நான் கொடுத்துடுறேன்..”

“பார்சல்??!!ஸ்டார் ஹோட்டல்ல வந்துட்டு…ஏன் என்ன பண்ண போற?”

“இதெல்லாம் எனக்கு முதல் தடவை…பொதுவா சாப்பாட்டை வீணாக்க மனசு வராது..பல நாள் சாப்பாடு இல்லாம என் அப்பா அம்மாவும் பட்டினியா எல்லாம் தூங்கிருக்காங்க…

இங்க வேலை செய்யுறவங்களுக்கு இதெல்லாம் பெரிய விஷயமா இருக்காது..அதான் பார்சல் வாங்கிட்டு போனாத் தேவைப்படுற யாருக்காவது கொடுக்கலாமேனு தான்…”

“…..”

“இல்ல வேண்டாம்னா வேண்டாம்..ஏதோ தோணிணதைக் கேட்டுட்டேன்…தப்பா எடுத்துக்காதீங்க…”

ஆள் மூச்செடுத்தவனாய் அங்கு வேலை செய்பவரை அழைத்து ஏதோக் கூற அவரும் சம்மதமாய் தலையசைத்த வண்ணம் அங்கிருந்ததை எடுத்துச் சென்றார்.

“எவ்வளவுனு சொன்னீங்கனா…..”

“தெரியாம உன்னை சாப்பிடக் கூப்டுட்டேன்..ப்ளீஸ் என் மூளையை மழுங்கடிக்காம அமைதியா இருக்கியா கொஞ்ச நேரம்…”

மீண்டும் அவனிடம் வசவு வாங்கத் திறனில்லாமல் வாயை மூடிக் கொண்டு அமர்ந்து கொண்டாள் அபூர்வா.