“கோல் நோக்கி வாழும், குடி எல்லாம்; தாய் முலையின் பால் நோக்கி வாழும், குழவிகள்; வானத் துளி நோக்கி வாழும், உலகம்; உலகின் விளி நோக்கி இன்புறூஉம், கூற்று
குடிகள், அரசனது ஆட்சியால் உயிர் வாழும். குழந்தைகள் தாய்ப்பாலால் உயிர் வாழும். உயிர்கள் மழைத்துளியில் உயிர் வாழும். எமன் உயிர்களின் சாக்காட்டை எதிர்பார்த்து மகிழ்வான்.
அறைக்குள் நுழைந்த பத்தே நிமிடத்தில் அவனது தங்கையிடமிருந்து அழைப்பு வந்திருந்தது ப்ரஜீஷிற்கு.தாயின் வேலை தான் என்பதை உணர்ந்தவன் இடவலமாய் தலையசைத்தவாறு அழைப்பை ஏற்றுப் பேச ஆரம்பித்திருந்தான்.
“பாருடா…அண்ணா ஆனாலும் உன்னையே ஒருத்தங்க இப்படி மாத்திருக்காங்கனா பெரிய விஷயம் தான்..நீ நம்பர் தரலைனா பரவால்ல நான் அம்மாகிட்ட வாங்குறேன்…”
“என்னவோ பண்ணுங்க சும்மாவே இந்த வீட்ல உங்க ஆட்டம் தாங்காது..இதுல அவ இருக்காளே…ம்கூம்..நானும் அப்பாவும் என்ன ஆகப் போறோமோ…”,என்று விளையாட்டாய் கூறினாலும் அந்த நாளுக்காகக் காத்திருந்தான் ப்ரஜிஷ்.
அன்றைய தினமே மோகனும் சௌமியாவும் அபூர்வாவின் பெற்றோரிடம் பேசியிருக்க பதினைந்து தினங்களில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்.
“ஒண்ணும் பிரச்சனையில்ல..எங்க குடும்ப வழக்கப்படி குருவாயூர் கோவில்ல தான் கல்யாணம் நடக்கும்..அதனால நீங்களும் எதாவது கோவில்லயே ஏற்பாடு பண்ணிணா ரொம்ப நல்லாயிருக்கும்..
அதுமட்டுமில்லாம கடவுள் புண்ணியத்துல காசு பணம் போதும் போதும்ங்கிற அளவு எங்ககிட்ட இருக்கு..அதனால உங்கப் பொண்ணை மட்டும் எங்க வீட்டுக்கு அனுப்பானாலே எங்களுக்கு போதும்..பெருசா எந்த செலவும் பண்ணிக்காதீங்க..
இனி அபூர்வா எங்க வீட்டு பொண்ணு..அவளுக்கு வேணும்ங்கிறதை அவ புருஷனா ப்ரஜி செஞ்சு கொடுப்பான்..சந்தோஷமா ஏற்பாடுகளை மட்டும் பாருங்க..”,என்று மோகன் கூறிய விதத்தில் அவர்களின் மனம் குளிர்ந்து விட்டிருந்தது.
திருமணத்தை ஸ்ரீரங்கம் கோவிலில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர் அபூர்வாவின் பெற்றோர்.கோவில் என்பதால் மிகவும் நெருங்கிய சொந்தங்களை மட்டும் அழைத்துக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்தனர்.
ப்ரஜீஷின் தரப்பிலும் அவனது அம்மா அப்பா தங்கைகளின் குடும்பம் தவிர்த்து ராஜீவ் மட்டுமே கலந்துக் கொள்வதாய் முடிவெடுத்திருந்தனர்.திருமணம் மற்றும் வரவேற்பிற்கான வேலைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க இங்கு அபூர்வாவின் இடத்திற்கு வேறொருவர் வேலைக்கு அமர்த்தப்பாட்டாள்.
ப்ரஜீஷ் மொத்தமாய் ஆபீஸ் வேலைகளில் மூழ்கிப் போயிருந்தான்.உடல்நிலை காரணமாக எடுத்த ஓய்வினால் விட்டு வைத்திருந்த வேலைகளை எல்லாம் ஒவ்வொன்றாய் முடிக்கத் தொடங்கியிருந்தான்.
அங்கு அபூர்வாவிற்கோ சாப்பிட்டு உறங்குவது மட்டுமே வேலையாய் இருந்தது.பத்தே தினங்களில் சற்று உடல் எடை கூட கூடியிருப்பதாய் தோன்றியது அவளுக்கு.இன்னும் இரு தினங்களில் திருமணம் என்ற நிலையில் அன்றைய இரவு வேலை முடித்து வந்தவன் அவளுக்கு அழைத்திருந்தன்.
“அதுவும் நல்லது தான்..சோ இன்னும் ஒரு நாள் தான் இருக்கு..A&M க்ரூப்ஸ் மருமகளா ஆகுறதுக்கு தயாராய்டியா?”
“இல்ல…ப்ரஜீஷ்க்கு மனைவியாக தயாராய்ட்டேன்..”
“ம்ம் உனக்காக பேச சொல்லித் தரணும்..சரி ஒண்ணு கேட்கணும் உன்கிட்ட..”
“என்னது?”
“உண்மையாவே ஏன் என்னைப் பிடிக்குது உனக்கு?”
“பத்தே நாள்ல கல்யாணம் வரை வந்துட்டு இப்போ ஏன் இந்த டவுட் உங்களுக்கு?”
“டவுட்னு எல்லாம் இல்ல..சும்மா தெரிஞ்சுக்கலாமேனு தான்..”
“நமக்கு ரொம்ப நெருக்கமானவங்களுக்கோ பிடிச்சவங்காளுக்கோ இல்ல ப்ரெண்ட்ஸுக்கோ ஒரு கஷ்டம் வந்தா அது நம்ம மனசுக்கும் கஷ்டமா இருக்கும்..வருத்தப்படுவோம் எதாவது செய்ணும்னு நினைப்போம்..இதெல்லாம் தான் டெல்லியில இருந்த வரை எனக்கு உங்க மேல இருந்த ஒரு உணர்வு…
ஆனா அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல உங்களைப் பாக்குறதுக்குள்ள நான் பட்டபாடு எது எல்லா உறவுகளுக்காகவும் நமக்கு வராது..அதை புரிய வைக்க முடியுமானு கூடத் தெரில..அதுக்கப்பறம் முதல்ல தோணின விஷயம்..உங்களுக்காக எதாவது பண்ணணும்ங்கிறது தான்.
என்னனு யோசிச்ச அப்போ உங்களுக்கு கொடுக்குற அளவு என்கிட்ட எதுவுமே இல்லைங்கிற உண்மை உரைச்சுது..என்னோட அன்பும் அக்கறையும் தவிர..என்ன தான் ப்ரெண்ட் வெல் விஷ்ஷர்னு சொல்லி நாம கூட இருந்தாலும் உங்களுக்குத் தேவை அதையும் தாண்டின குடும்ப வாழ்க்கை தான்.
அப்படி தான் சட்டுனு உங்ககிட்ட வந்து என்னைக் கல்யாணம் பண்ணிக்கோங்கனு நான் கேட்டது.ஒரு வேளை அப்போவே எதாவது பேசி உடனே நீங்க மறுத்துருந்தாக் கூட மனசை மாத்திக்க முயற்சிப் பண்ணிருப்பேன்னு நினைக்குறேன்..ஆனா உங்களை யோசிங்கனு சொல்லி கொடுத்த அந்த ஒரு மாசம் என்னை ரொம்பவே மாத்திடுச்சு தினமும் நீங்க இல்லாத உங்க ரூமைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு மாதிரி கஷ்டமா இருக்கும்..உங்ககிட்ட பேசலாமானு நினைச்சு உங்க நம்பரை வச்சிட்டு அரை மணி நேரமா எல்லாம் உட்காந்துருக்கேன்..
அப்போ தான் தோணிச்சு சாதாரணமா ஆரம்பிச்ச விஷயமா இருந்தாக் கூட எனக்குள்ள என்னோட பார்ட்னரா நான் நினைச்ச முதல் ஆள் நீங்க தான்..ஒரு வேளை நீங்க பிடிக்கலைனு சொல்லிருந்தாலும் என் அப்பா அம்மா பாக்குற பையனை ஏத்துக்குறதுக்கு ரொம்பவே காலம் எடுத்துருக்கும்..
உங்களையே நினைச்சுட்டு இருந்துருப்பேன்னு பொய் எல்லாம் சொல்ல விரும்பல..ஏன்னா ஒரு பொண்ணா இந்த சொசைட்டில என்னால அப்படி இருந்துருக்க முடியாது..ஆனால் வாழ்க்கையில கடைசி வரைக்கும் உங்க முகம் மறக்காம இருந்துருக்கும்..”,என்றவள் முடித்த பின்பும் மறுபுறம் அமைதியாகவே இருந்தது.
“ஹலோ ஏன் எதுவும் பேச மாட்றீங்க..”
“ம்ம் ஒண்ணுமில்ல..”
“நீங்க கேட்டீங்களேனு தான் சொன்னேன் இப்போ இப்படி அமைதியா இருந்தா என்னனு நினைக்குறது?”
“ஒண்ணும் நினைக்க வேண்டாம்..எனக்கு உன் மேல லவ் ரொம்ப ரொம்ப அதிகமாகி உன்னை இப்போவே பார்க்கணும்னு மனசுல நினைச்சுட்டு இருக்கேன்னு புரிஞ்சுகிட்டா போதும்..”
“…..”
“அப்பூ..”
“ம்ம்ம்..”
“லவ் யூ சோ மச்…உன்னோட நிறைய பேசணும்..இன்னும் இருபத்தி நாலு மணி நேரத்தை எப்படி கழிக்கப் போறேன்னு தெரில…சரி போய் தூங்கு..நாளைக்கு சாய்ந்திரம் எல்லாருமா வீட்டுக்கு வரோம்..”
“ம்ம் சரி வச்சுரவா…”
“வேண்டாம்..”
“என்ன இது விளையாட்டு..வைக்குறேன்…போய் தூங்குங்க..குட் நைட்..”,என்றவள் முகமெல்லாம் வெம்மையுற்றிருந்தது.
மறுநாளின் விடியல் பலவித எதிர்பார்ப்போடு விடிந்திருந்தது இருவருக்கும்.அதிகாலையிலேயே கேரளாவிலிருந்து கிளம்பியவர்கள் மதியம் திருச்சியை அடைந்திருக்க சிறிது நேர ஓய்விற்குப் பின் மதிய உணவை முடித்துவிட்டு அபூர்வாவின் வீட்டிற்குக் கிளம்பினர்.
இங்கு அபூர்வாவிற்கு அவளது தங்கையும் தோழிகளுமாய் சேர்ந்து மிதமான ஒப்பனைகளைச் செய்து முடித்திருக்க பெரியவர்கள் வருபவர்களை வரவேற்கத் தயாராகியிருந்தனர்.
சிறிய அளவில் நிச்சயம் போன்று செய்து முடித்துவிட்டு இரவு அனைவருமாய் ஸ்ரீரங்கத்தில் தங்குவதாய் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.சற்று நேரத்தில் வாசலில் கேட்டக் கார் சத்தத்தில் அபூர்வைத் தவிர அத்தனை பேரும் வந்தவர்களை வரவேற்கச் செல்ல ப்ரஜீஷை விட ஆர்வமாய் அபூர்வாவிற்காக காத்திருந்தார் சௌமியா.
அங்கிருந்தவர்கள் அத்தனை பேரும் ப்ரஜீஷைப் பார்த்து பார்த்து தங்களுக்குள் ஏதேதோ பேசிக் கொள்ள அவனுக்கு இதெல்லாம் புது அனுபவமாய் இருந்தது.
அடுத்த பத்து நிமிடத்தில் கையில் அனைவருக்குமான காபி கோப்பைகளோடு வெளியே வந்தவளைப் பார்த்தவனின் கண்கள் பிறரறியாமல் விரிந்து மீண்டது.முதல் முறையாய் அபூர்வாவைப் புடவையில் பார்க்கிறான்.
அதுமட்டுமில்லாமல் உண்மையிலேயே இந்த பத்து நாட்களில் சற்று பொலிவேறியிருந்தாள்.அனைவருக்கும் காபியைக் கொடுத்துவிட்டு இறுதியாய் தன்னவனிடம் தட்டை நீட்டியவள் யாரும் பார்ப்பதற்குள் சட்டென அவனைத் தன் விழிகளுக்குள் நிரப்பிக் கொண்டாள்.
தெளிவான தீர்க்கமான ஒருத்தியாய் பார்த்திருந்தவளின் புது பரிமாணமாய் இந்த பதட்டமும் வெட்கமும் இருந்தன.அவை அவளை மேலும் அழகியாய் காட்டியது ப்ரஜீஷிற்கு.
“அண்ணா போதும் எல்லாரும் உன்னையே தான் பாக்குறாங்க..கொஞ்சமாவது அங்கிங்க கண்ணை நகர்த்த மாட்டியா..”
“என் பொண்டட்டியை நான் பாக்குறேன்..உனக்கு என்ன?”
“ம்ம் எனக்கு ஒண்ணுமில்ல பாரு அந்த பாட்டி கூட உன்னையேதான் பார்த்துட்டு இருக்காங்க..நாளைக்கு அப்பறம் உன் பக்கத்துலேயே உட்கார வச்சு பார்த்துட்டே இரு.இப்போ கொஞ்சம் உன் மாமனார்கிட்டேயும் பேசு..”என்றவள் அபூர்வாவை உள்ளே அழைத்துச் செல்வதைப் பார்த்து தன் தங்கையையும் அழைத்துக் கொண்டு அவளிடம் பேசச் சென்றாள்.
“ஹாய் அண்ணி..”
“ஐயோ நீங்க என்ன விட பெரியவங்க தான…பேர் சொல்லியேக் கூப்பிடுங்க..”
“அட எங்களைப் பத்திக் கூட அண்ணன் சொல்லிருக்காரா?”
“ம்..”
“பாரேன்..ஆனாலும் நீங்க ஒரு உலக சாதனையே பண்ணிருக்கீங்க..”
“ஏன் அப்படி சொல்றீங்க..”
“பின்ன அந்தசிடு மூஞ்சியவே இப்படி மாத்திருக்கீங்களே..”
“ஹே அண்ணா காதுல விழுந்தது உன்னை என்னப் பண்ணுவார் தெரியும்ல..”
“கேட்டா கேட்கடும் அவருக்கே பெரிய இடம் என் பக்கம் இருக்கு..”,என அபூர்வாவைக் காட்டிச் சிரித்தாள்.சில நிமிடங்களில் சௌமியா அங்கு வரவும் சாருலேகா,
“நினைச்சேன் என்னடா இன்னும் அம்மாவைக் காணுமேனு..தெரியுமா உங்களுக்காக அம்மா தமிழ் எல்லாம் கத்துக்குறாங்க..”
“வணக்கம் ஆன்ட்டி..”
“என்ன ஆன்ட்டி..அத்தைனு சொல்லு..உன்னைப் பார்க்கணும்னு சொல்லிட்டே இருந்தேன்..இந்த ப்ரஜி தான் விடவே இல்ல..ரொம்ப சந்தோஷமா இருக்கு..இதே போல நீங்க இரண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா இருக்கணும்”,என்றவர் அபூர்வாவைத் தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டார்.
அதன்பின் சம்பிரதாயங்கள் முடிந்து அனைவருமாய் ஸ்ரீரங்கத்திற்குத் தயாராக அபூர்வாவின் தந்தை அவர்கள் குடும்பத்திற்கென வேன் ஏற்பாடு செய்திருந்தார்.ப்ரஜீஷ் அபூர்வா தன்னோடு தன் காரில் வரட்டும் என்று கூறிவிட அத்தனைப் பேரின் கேலிச் சிரிப்பில் முகம் மலர்ந்து போனாள் அபூர்வா.
ப்ரஜீஷின் கார் முன்னே செல்ல மற்ற வாகனங்கள் அவர்களைப் பின் தொடர்ந்தன.பின்னிருக்கையில் அவனருகில் அமர்ந்திருந்தவள் அவனைப் பார்க்கும் திறனின்றி வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க அவளையே பார்த்திருந்தவன் தனது இடக் கரத்தால் அவளது வலக் கரத்தை அழுந்தப் பற்றினான்.
பட்டுப்புடவையும் தலை நிறைய மல்லிகையும் அழகை மேலும் மெருகூட்டியிருக்க கையிலிட்ட மருதானியும் கைநிறைத்த கண்ணாடி வளையல்களும் அத்தனை பாந்தமாய் இருந்தது அபூர்வாவிற்கு.
“ரொம்ப அழகாயிருக்க புடவையில..”புன்னகையைத் தவிர பதிலில்லை அவளிடத்தில்.
“வொய் ஆர் யூ சோ டென்ஸ்ட்..”
“அது…தெரில எதோ ஒரு மாதிரி..இன்னும் அங்க போனவுடனே எல்லாரும் வேற கிண்டல் பண்ணுவாங்க..”
“ஹா..நானுமே கவனிச்சேன்..ஏன் எல்லாரும் அப்படி பார்த்தாங்க..உன் தங்கச்சி கூட ஏதோ சொன்னா இல்ல..”
“ம்ம் பின்ன நீங்க இப்படி என்னையே மொறச்சு பார்த்துட்டு இருந்தா…அதுவுமில்லாம கல்யாணத்துக்கு முன்னாடி இந்த மாதிரி சேர்த்து அனுப்ப மாட்டாங்க..”
“உண்மையை சொல்லு நான் உன்னை மொறைச்சு பாக்குற மாதிரியா இருக்கு?”
“…..”
“வாட்??”
“நத்திங்..நீங்க கொஞ்சம் அமைதியா வந்தா நல்லாயிருக்கும்”,என்றவள் தன் முகச் சிவப்பை மறைக்க பாடு பட அதை ரசித்தவனாய்,
“அப்போ இந்த ப்ரிட்ஜ் போடுற கேப் இல்லாம நீ உட்காந்தா நான் பாட்டுக்கு அமைதியா இருப்பேன்..யூ ஆர் கீப் ஆன் ப்ளஷிங் அண்ட் மேக்கிங் மீ மேட்…”,என்றவனின் குரலில் இருந்த ஏதோ ஒன்றில் அவனது விழிகளுக்குள் நோக்கியவளாய் புன்னகையோடு அவனருகில் அமர்ந்து தோள் சாய்ந்துக் கொண்டாள்.