புகழ் செய்யும், பொய்யா விளக்கம்; இகழ்ந்து ஒருவன்
பேணாமை செய்வது பேதைமை; காணாக்
குருடராச் செய்வது மம்மர்; இருள் தீர்ந்த
கண்ணராச் செய்வது, கற்பு.

 

பொய்யாமை புகழை ஏற்படுத்தும், அறியாமை முறையற்ற தீய செயலைச் செய்யத் தூண்டும், கல்லாமை அறியாமையை ஏற்படுத்தும், கல்வி அறிவை உண்டாக்கி ஒளிபெறச் செய்யும்.

இருவரும் அடுத்த பத்தே நிமிடத்தில் அந்த மருத்துவமனையில் இருந்தனர்.அங்கு ப்ரஜீஷை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து இருப்பதாய் வரவேற்றாளினிப் பெண் கூற இரண்டாம் தளத்தில் இருந்த அறையை நோக்கி ஓடினர்.

அதற்குள் ராஜீவ் மோகனுக்கு விஷயத்தைக் கூறியிருக்க அடுத்த முக்கால் மணி நேரத்தில் மோகனும் சௌமியாவும் அங்கு வந்திருந்தனர்.

சௌமியா ஒருபுறம் அழுது கொண்டேயிருக்க மோகன் ராஜீவிடம் விவரங்களைக் கேட்டறிந்தார்.இருவரையும் பார்த்தவர்களுக்கு இன்னும் வேதனை அதிகமாகியது.ஒவ்வொரு நிமிடமும் யுகமெனக் கழிய சில நிமிடங்களில் வெளியே வந்த மருத்துவரை நால்வருமாய் சூழ்ந்து கொண்டனர்.

“டாக்டர்??!”

“மைல்ட் அட்டாக்..நிறைய ட்ரிங்க் பண்ணிருக்கார்…இப்போ ப்ராப்ளம் இல்ல..பட் அகெயின் குடிக்காம பார்த்துக்கோங்க…”

“டாக்டர் அவனுக்கு…இந்த வயசில அட்டாக் எல்லாம்???”

“சான்ஸ் இருக்கு சார்..பட் நல்ல வேளையா காப்பாத்துற ஸ்டேஜ்ல இருக்கார்…கொஞ்ச நேரத்துல வார்ட்க்கு மாத்திருவாங்க அப்போ போய்ட்டு பாருங்க…”,என்றவர் அங்கிருந்து நகர மோகன் அயர்வாய் இருக்கையில் அமர்ந்தார்.

“ப்பா..கவலைப்படாதீங்க…அவனுக்கு ஒண்ணும் இல்ல…”

“ம்ம்…இப்போதான் அவன் கொஞ்சமாவது எங்களோட நேரம் செலவழிக்க ஆரம்பிச்சான்னு சந்தோஷப்பட்டேன்..அதுக்குள்ள என்ன என்னவோ நடந்துருச்சு..”

“எல்லாத்துக்கும் காரணம் நான் தான்..அவன் அப்போவே வேண்டாம்னு சொன்னான் நான் தான் கேட்கவே இல்ல…”,என்று சௌமியா அவர் பங்கிற்கு புலம்ப ஆரம்பித்திருந்தார்.

அத்தனையையும் வெறும் பார்வையாளராய் மட்டுமே நின்றுப் பார்த்துக் கொண்டிருந்ததாள் அபூர்வா.அத்தனையும் கடந்த ஒருவித குற்றவுணர்வு அவளை உள்ளுக்குள் இருந்து அழுத்திக் கொண்டிருந்தது.எப்போது அவனைக் காண்போம் என்ற பதட்டத்திலேயே இங்கு நடப்பதையும் கண்காணித்துக் கொண்டிருந்தாள்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் ப்ரஜீஷ் வார்டிற்கு மாற்றப்பட்டிருக்க சோர்வாய் படுத்திருந்தவனைப் பார்த்து மேலும் கலங்கியது பெத்த மனம்.

“ப்ரஜி…அம்மாவை மன்னிச்சுரு டா…உன்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துட்டேன்..”

“ம்மா…”

“சௌமி..இப்போ எதுக்கு அதெல்லாம் பேசிகிட்டு..ப்ரஜி ஒண்ணும் இல்ல..இன்னும் இரண்டு நாள்ல வீட்டுக்குப் போய்டலாம்னு சொல்லிருக்காங்க..நல்லா ரெஸ்ட் எடு தேவையில்லாத எதையும் யோசிக்காத சரியா..”

“ம்ம் பா..”

வரும் அவசரத்தில் அவனுக்குத் தேவையானவற்றை எடுத்து வராததால் சௌமியாவை வீட்டில் விட்டுவிட்டு அதையும் எடுத்து வருவதாய் கூறி அங்கிருந்துக் கிளம்பினார் மோகன்.

அதுவரையிலும் அடக்கி வைத்திருந்த அழுகை மொத்தமாய் வெளிவர கைகளில் முகத்தைப் புதைத்து அழுது தீர்த்தாள் அபூர்வா.மோகனை வழியனுப்பிவிட்டு உள்ளே வந்த ராஜீவோ பதறிவிட்டான்.

“ஹே அபூர்வா…அதான் ஒண்ணுமில்லனு டாக்டர் சொல்லிட்டாங்கல…அழாத டா..வா வந்து அவனைப் பாரு…”,என்றவன் அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.

இருவரையும் பார்த்து கடினப்பட்டு புன்னகையை வர வைத்தவனாய் ப்ரஜீஷ் கண்களை மெதுவாய் மூடித் திறந்தான்.

“இப்படி பயமுறுத்திட்டியே டா…”

“உண்மையா நானே பயந்துட்டேன்..உங்களையெல்லாம் திரும்ப பார்ப்பேன்னு தோணவேயில்ல..”

“ஏன்டா இப்படியெல்லாம் பேசுற…”

“ஆனா ராஜீவ்..கெட்டப் பழக்கத்துல முங்கியிருந்தப்போ கூட நல்லா தான் டா இருந்தேன்..இப்போ நிலைமையைப் பாரு..”,என்றவன் மெதுவாய் கூறிவிட்டு சிரிக்க அபூர்வாவின் கண்கள் மீண்டும் கலங்கியது.

இருந்தும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவளாய்,”நல்ல ரெஸ்ட் தான் தேவை உங்களுக்குத் தேவையில்லாம மனசைப் போட்டு குழப்பிக்காதீங்க..”

“ஆமாடா..நல்ல ரெஸ்ட் எடு…நாங்க வெளியில் இருக்கோம்.இங்க இருந்தா நீ பேசிட்டே இருப்ப…வா அபூர்வா..”,என்றவன் அவளோடு வெளியிலிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

“நீ கிளம்பு டா…நான் இங்க பாத்துக்குறேன்…அப்பா வந்தவுடனே நான் கிளம்பி வரேன்..”

“ம்ம் சரி ணா…”,என்றபடி எழுந்துக் கொண்டவள் ஏதோ யோசனையில் இருப்பது புரிய தானே கேப் புக் செய்து தருவதாய் கூறி அவளை காத்திருக்குமாறு கூறினான்.

அடுத்த இரு தினங்களும் அபூர்வாவின் மனம் மொத்தமும் ஒரே சிந்தனையைச் சுற்றியே இருந்தது.சரியா தவறா…இது சாத்தியமா எனப் பலவாறாய் சிந்தித்தவள் பின் ஒரு முடிவுடன் ப்ரஜீஷைக் காண மருத்துவமனைக்குச் சென்றாள்.

இன்று மாலையில் டிஸ்சார்ஜ் என்ற நிலையில் காலையில் அவனைப் பார்த்துவிட்டு அப்படியே வேலைக்குச் செல்வதற்குத் தயாராகி வந்திருந்தாள் அபூர்வா.

“குட் மார்னிங்…இப்போ எப்படியிருக்கீங்க”

“ஐ அம் குட்..பேஷண்ட் நானா நீயா?ஏன் இப்படி வந்துருக்க”

“ஹான் அதெல்லாம் ஒண்ணுமில்ல…கொஞ்சம் வேலை அதிகம் அதான்…”

“ஓ…சாப்டியா?”

“இல்ல ஆபீஸ் போய்ட்டு தான்..”

“என்னாச்சு உனக்கு ?”

“ஒண்ணுமில்ல..எப்போ டிஸ்சார்ஜ்?”

“பில் செட்டில்மெண்ட் எல்லாம் முடிச்சு எப்படியும் மதியானதுக்கு மேல ஆய்டும்…”

“ஓ…வீட்ல இருந்து யாரும் வரலையா?”

“நைட் அப்பா தங்கிருந்தாங்க..இப்போ தான் வீட்டுக்குப் போய்ட்டு வரேன்னு கிளம்பினாங்க..”

“ம்ம்ம்..”

“ஹலோ என்ன?”, ஆழ் மூச்செடுத்தவளாய் கண்களை இறுக மூடிக் கொண்டவள்,

“நான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன்..எனக்குத் தெரியும் எந்த விதத்துலேயும் நான் உங்களுக்குப் பொருத்தம் கிடையாது.

ஆனா கண்டிப்பா வாழ்க்கையோட கடைசி வரை ஒரு நல்ல ப்ரெண்டா என்னால இருக்க முடியும்..உங்க முடிவை நீங்க யோசிச்சு சொல்லுங்க.. வரேன்…”, என மூச்சு விடாமல் பேசி முடித்தவள் ஒரு நொடி கூட நிற்காது அறையை விட்டு வெளியேறியிருந்தாள்.

அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருந்தவனுக்கோ சில நொடிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. என்னவாயிற்று இவளுக்கு என்ன கூறுகிறாள். ஏன் இப்படி ஒரு முடிவெடுத்திருக்கிறாள் என ஒன்றும் புரியவில்லை.

எதாவது கேட்கலாம் என்றால் நிற்காமல் சென்றுவிட்டாள். ராஜீவ் வந்தால் அவனிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டவனுக்கு இன்னமும் அவளின் வார்த்தைகள் தான் காதில் ஒலித்துக் கொண்டிருந்தன.

சற்று நேரத்தில் அங்கு வந்த ராஜீவ் அவனது யோசனையான முகத்தைக் கவனித்து என்னவெனக் கேட்க அபூர்வா வந்ததையும் அவள் கூறியதையும் அவனிடம் ப்ரஜீஷ் கூறினான்.

“அபூர்வா வா இப்படி சொன்னது?”

“எனக்கும் அதான் புரில சின்னப் பொண்ணு டா..எனக்குத் தெரிஞ்சு அவளால தான் இதெல்லாம் எனக்கு நடக்குதுனு நினைச்சுட்டு இப்படி சொல்லிருப்பானு நினைக்குறேன்…”

“ம்ம் இருக்கலாம்…ஆபீஸ் போய்ட்டு அவகிட்டப் பேசிட்டு சொல்றேன் ப்ரஜி…”,என்றவனுக்குமே இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியாமல் போயிருந்தது.

அலுவலகத்தை அடைந்த பின் முதல் வேலையாய் அவளைத் தேடிச் சென்றவன் தனதறையில் மேசைமேல் தலை சாய்ந்து கண் மூடியிருந்தவளைப் பார்த்துச் சற்று நிதானித்தான்.

“அபூர்வா…”

“ஹான்..அண்ணா வாங்க…எப்போ வந்தீங்க..”

“இப்போ தான்…என்னாச்சு உடம்பு சரியில்லையா?”

“அது அதெல்லாம் இல்லையே ஏன்…”

“ம்….நான் ஹாஸ்பிட்டல்ல இருந்து தான் வாரேன்..”,என்று அவன் கூறியதைக் கேட்டவளின் முகத்தில் எவ்வித பதட்டமோ பயமோ இல்லை.

“ஏன் அப்படி சொல்லிட்டு வந்த டா?”

“……”

“நீ தேவையில்லாம உன்னைக் குழப்பிக்குறியோனு தோணுது..”

“இதுல குழப்பிக்க என்ன ணா இருக்கு…என் முடிவுல எந்த மாற்றமும் இல்லை.”

“ஏன் இந்த திடீர் முடிவுனு தான் கேட்குறேன்?”

“எல்லாத்துக்கும் ஆரம்பம்னு ஒண்ணு இருந்து ஆகணுமே அது தான் இது..”

“இப்படி பேசினா என்னால எதுவுமே பண்ண முடியாது அபூர்வா.நீ ரொம்பவே நிதானமான பொண்ணு…அப்பறம் இந்த விஷயத்துல மட்டும் ஏன் இப்படி அவசரப்பட்ட?”

“வேற என்ன அண்ணா பண்ண சொல்றீங்க…வாழ்க்கையில நாம சொல்றதைக் கேட்டு அதுல இருக்குற நல்லதைப் புரிஞ்சுகிட்டு தன்னையே யாராலயாவது மாத்திக்க முடியுமா?அதுவும் உங்க ப்ரெண்ட் மாதிரி ஒருத்தரால அது சாத்தியமா?

ஆனா அவரு மாறிருக்கார் ணா…இத்தனைக்கும் அவருக்காக நான் பெருசா எதுவுமே பண்ணிடல..அப்படியிருக்க…ஆனா அதுக்கெல்லாம் அவருக்குப் பதிலுக்குக் கிடைச்சது என்ன சொல்லுங்க…இப்போ திருந்தினாலும் முன்னாடி செஞ்ச தவறுகளுக்கான தண்டனைகளா இது இருக்கலாம்..

ஆனா என்னால ஏத்துக்க முடியல ணா…திரும்பத் திரும்ப அவர் மனசுல இருக்குற ஒரு விஷயம்…முன்னாடி கூட நல்லாதான் இருந்தேன்..இப்போ திருந்தனும் நினைக்குற அப்போ என்ன எல்லாம் நடக்குதுங்குறது தான்.

திரும்பவும் ஒரு வேளை அவர் அந்த வாழ்க்கைக்குள்ள மறுபடியும் போயிட்டார்னா திரும்ப வர்றது ரொம்பவே கஷ்டம் ணா…அதைவிட அதனால அவர் உயிருக்கு எதுவும் ஆபத்து வந்தா…அந்தக் குற்றவுணர்ச்சியே என்னை அழிச்சுரும்..”

“நீ சொல்ற எல்லாமே சரி தான் டா..ஆனா அதுக்காக…அவனுக்கும் உனக்கும் 12 வயசு வித்தியாசம் இருக்கு..அதில்லாம இரண்டு வீட்டுப் பெரியவங்களும் இதுக்கு சம்மதிக்கணும்..எல்லாத்துக்கும் மேல ப்ரஜிக்கே இதுல விருப்பம் இருக்கணும்..இது எதையுமே யோசிக்காம…”

“அவரு கண்டிப்பா சம்மதம் சொல்லுவாரு..எனக்கு நம்பிக்கை இருக்கு…அதுக்கப்பறம் மத்தவங்களைப் பத்தி யோசிக்கலாம்..வேற என்ன சொல்றதுனு தெரில ணா..”

“இப்படி சொன்னா…”

“அண்ணா ப்ளீஸ்…முடிஞ்சா எனக்காக அவர்கிட்ட பேசுங்க..இல்லைனா விடுங்க நான் பார்த்துக்குறேன்..இப்போதைக்கு என் முடிவுல எந்த மாற்றமும் இல்ல…”,என்றவள் கண்களில் வழிந்தக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவனுக்கு முதுகு காட்டி நின்று கொள்ள அதற்கு மேல் அவளிடம் பேச எதுவுமில்லை என்று உணர்ந்தவனாய் அங்கிருந்து சென்றிருந்தான் ராஜீவ்.

ப்ரஜீஷ் அவளிடம் பேசிவிட்டுத் தனக்கு அழைக்கும்படி கூறியிருந்ததால் தனதறைக்கு வந்தவன் அவனுக்குப் போனில் அழைத்து விஷயத்தைக் கூற ப்ரஜீஷோ உச்சக்கட்ட கோவத்தில் மாலை அபூர்வாவை அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்கு வருமாறு கத்திவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தான்.