Skip to content
Post Views: 2
குறிஞ்சி – தோழி கூற்று (குறுந்தொகை)
செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கோ லம்பிற் செங்கோட் டியானைக்
கழல்தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே.
என்பது தோழி கையுறை மறுத்தது.
-திப்புத் தோளார்
தலைவன் தலைவிக்காக அவளது தோழியிடம் பூ தருகிறான். அதனை அவள் வாங்க மறுத்துச் சொல்லும் சொற்கள் இவை. தலைவியின் இருப்பிடம் குன்றம். அதில் குருதிநிறச் செங்காந்தள் மலர்கள் மிகுதியாக உள்ளன. நாங்கள் அதனைச் சூடிக்கொள்வோம். உன் பூ வேண்டாம் என்கிறாள்.
அழகிய காலை வேளை சூரியன் தன் செங்கதிர்களைப் பரப்பி அந்த நாளின் விடியலை பிரகாசமாக்கிக் கொண்டிருந்தான். சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாளோடு அருள்பாலிக்கும் சிவசைலம். தாமிரபரணி கொஞ்சி விளையாடும் தென்காசியின் அருகிலிருக்கும் சிறு கிராமம்.
திருநெல்வேலி மாநகரின் சிறப்பே இவை போன்ற சுற்றுலா தலங்களே. .
பாபநாசம்,மணிமுத்தாறு,அம்பாசமுத்திரம்,இன்னும் அதை சுற்றியுள்ள சிறு சிறு ஊர்களும் கூட இயற்கை எழில் கொஞ்சுவதாய் இருக்கும்.
இப்படியான அந்த ஊரின் மக்களால் பெரிய வீட்டு ஐயா என்றழைக்கப்டும் மகேந்திரநாதன் தன் துணைவி பாக்கியத்தோடு கோவிலில் நின்று பேசிக் கொண்டிருந்தார்.
“ஏலேய் யாரு இவுக?அத்தனை பேரும் பேசுறாவ?”
“ம்ம் இவுக தான் பெரிய வீட்டு ஐயாவும் அம்மாவும். . இந்த ஊர்லயே மதிப்பான குடும்பம். தென்காசியில ஆண்டவன் ஜவுளிக்கடல் இருக்கே அது இவுகளோடது தான். அது மட்டுமில்லாம சொந்தமா நெசவு கைத்தறினு நடத்தி அதுலயும் நிறைய பேருக்கு வேலை கொடுத்துருக்காக. .
போன வாரந்தான் இரண்டு பேருக்கும் எண்பதாங் கல்யாணம் கூட முடிஞ்சுது. ஊரையே கூட்டி திருவிழா மாதிரி நடத்தி போட்டாகனா பாத்துக்கோயேன்.
காசு பணம் இருந்தாலும் குணம் எல்லாருக்கும் வருமா சொல்லு. . அம்புட்டு பரிவா பேசுவாக எல்லார்ட்டையும். . உதவினு போனா முடியாதுங்கிற வார்த்தையே வராது. . அவுக குணத்துக்கு ஏத்த மாதிரியே மூணு புள்ளைங்க. .
அதைவிட பவுசா மூணு மருமவள்களும் அத்தனை சாமர்த்தியம். . இந்த காலத்துலயும் எல்லாரும் ஒண்ணா ஒரே வீட்ல சேர்ந்து இருக்காகனா பாத்துக்கோ. .
அதுமட்டுமில்லாம பேரன் பேத்தினு அம்புட்டும் கல்யாண வயசுல. . என்ன தான் நம்ம பெரிய ஐயா மாதிரி பசங்க பகுமானமா இருந்தலும், அவுகளோட மூத்த பேரன் எழிலமுதன் இருக்கான் பாரு. இந்த வயசுலயே அத்தனை கம்பீரம்.
வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுனு தான் இருக்கும் பேச்சு. நம்மூரு சல்லிப் பயலுக எல்லாம் பயப்படுற ஒரே ஆளு அவந்தேன். . யாரும் நின்னு பேசவே பயப்படுவாக. . கோபம் இருக்குற இடத்துல தான் குணமிருக்கும்னு சொல்லுவோமே அது இந்த புள்ளைக்கு நல்லாவே பொருந்தும். உதவினு யாரு வந்து நின்னாலும் யோசிக்காம செஞ்சு கொடுக்கும். ”
“அட என்னப்பா யாருனு கேட்டதுக்கே இந்தா பேச்சு பேசுதியே. . ”
“இதெல்லாம் ரொம்வே கம்மி லே. . என் பொண்ணுக்கு படிப்பு செலவுகூட இவுக தான் பர்த்துக்குறாக. . அப்பறம் பேச மட்டேனா…வந்துட்டான். . போ போ போய் பொலப்ப பாருவே. . ”
கோவிலிலிருந்து வீட்டிற்கு திரும்பியவர்கள் அந்த பெரிய வீட்டின் வராந்தாவிலேயே அமர குரல் கொடுப்பதற்குள் கையில் சொம்பு தண்ணீரோடு வந்து நின்றார் வெற்றிச் செல்வி.
பெரிய வீட்டின் மூத்த மருமகள். மூத்த மருமகள் என்பதற்கான கர்வமோ மிடுக்கோ இல்லாத சாந்த சொரூபிணி என்று தான் கூற வேண்டும். அதிர்ந்து ஒரு வார்த்தை பேசத் தெரியாதவர். ஆனாலும் யாரிடம் எந்த வேலையை எப்படி வாங்க வேண்டுமென நன்றாகத் தெரிந்தவர்.
அதுவும் அவரது கணவர் அதியமான் உட்பட. அதியமான் சற்றே கோபகாரர் எதற்கெடுத்தாலும் சட்டென பொறுமை இழக்கும் சுபாவம். இவர்களின் ஒரே புதல்வன் தான் எழிலமுதன்.
அதியமானிற்கு பிறகு நான்கு வருட இடைவேளியில் பிறந்தவர் அகத்தியன் அப்பாவும் அண்ணணுமே உலகம் அவருக்கு. அண்ணணும் மதினியும் காட்டும் பெண்ணைத் தான் திருமணம் செய்வதாய் உறுதியாய் கூறிவிட வெற்றிச் செல்வியின் தேர்வு தான் மலரொளி அகத்தியனின் சரிபாதி.
அவர் தேர்வு செய்ததினாலோ என்னவோ அவர்கள் இருவருக்கும் எந்தவித மன கசப்புகளும் இல்லாமல் போனது. அக்கா தங்கையாகவே இருந்தனர். அகத்தியன் மலரொளிக்கு ஒரு ஆண் மகவு பெயர் தமிழமுதன்.
எழிலை விட ஐந்து வயது இளையவன். ஓர் தாய் வயிற்றுப் பிள்ளை இல்லையெனினும் பெரியவர்கள் பிள்ளைகளுக்கு இடையில் எந்த பாகுபாடும் பார்த்ததில்லை.
இவர்களைத் தொடர்ந்து கிட்டதட்ட ஆறு வருடம் கழித்து பிறந்தவர் அதியன். பெரிய வீட்டின் கடைக்குட்டி. அந்த பெயருக்கு மிகவுமே பொறுத்தமானவர். அத்தனை வானர வேலைகளையும் செய்வார் சிறு வயது தொடங்கி வாலிப வயது வரையுமே. .
அனைவருக்கும் இளையவர் என்பதால் யாராலும் அவரின் குறும்புகளை ஓரளவுக்கு மேல் அடக்க முடியவில்லை. அதிலும் அண்ணன்கள் இருவரும் அத்தனை செல்லம் தம்பிக்கு.
அவருக்கு பெண் தேடுவதற்குள் வெற்றிச் செல்வியும் மலரொளியும் தான் ஒரு வழி ஆனார்கள். இப்படிஅப்படியாய் தேடி தன் கொழுந்தனாரை அடக்குவதற்காகவே பூம்பாவையை திருமணம் முடித்து வைத்தார்கள்.
ஆனால் காலக் கொடுமையோ என்னவோ பூம்பாவை சிறு பிள்ளையை விடவும் மோசம் அதியனே கடைகுட்டி எனில் பூம்பாவை அதற்கும்மேல்.
மாமியார் ஓரகத்தியென அத்தனை பேரிடமும் செல்லம் கொஞ்சிக் கொண்டிருப்பார். வீட்டிற்கு ஒரே பெண்ணாய் இருந்து வந்ததால் எந்த வேலையும் சரியாய் செய்ய தெரியாது.
மாமியாரிடம் அவ்வப்போது திட்டு வாங்கிக் கொண்டே ஒவ்வொன்றாய் இங்கு வந்தபின் கற்றுக் கொண்டார். பாக்கியத்திற்கு சில நேரங்களில் வெறுத்தே போய்விடும்.
“ஏட்டீ இம்புட்டு திட்டுறனே அப்போவாவது ஒரு வேலையை உருப்படியா செய்றியா?”
“அத்தே நா என்னத்த பண்ண நானெல்லாம் இவ்ளோ செய்றதே பெரிய விஷயம். . ஒண்ணுமே தெரியாம இருக்குறதுக்கு இது பரவால்லல. .
அதான் அக்கா ரெண்டு பேரும் அம்புட்டு அழகா வேலை பாக்குறாகளே. . நா பாக்காததையே சொல்லி காட்டுறீக அவுக ரெண்டு பேரையும் கொஞ்சம் பாராட்டலாம்ல. . ”
“உனக்கெல்லாம் வாய மட்டும் நாலு மொழத்துக்கு வச்சு அனுப்பிருக்கான் அந்த ஆண்டவன். என் மாமியாரெல்லாம் ஒரு வீட்டு வேலையை ஒண்ணா பாத்த என்னையே அந்த பேச்சு பேசுவாக. . எல்லாம் என் நேரம். . ”
என்று சலித்துக் கொண்டாலும் அவர்களுக்குமே பூம்பாவையின் பேச்சும் துறுதுறுப்பும் ரொம்பவே இஷ்டம். அதுவும் பெண் குழந்தை இல்லாத அவருக்கு மருமகள்கள் மூவருமே மகள்கள் தான்.
அதியன் பூம்பாவை தம்பதியருக்கு முகிலமுதன் அங்கயர்கண்ணி இரு பிள்ளைகள்.
என்னதான் பிள்ளைகளுக்கிடையில் வேற்றுமை இல்லையென்று கூறினாலும் எழிலமுதன் அந்த வீட்டின் முடிசூடா மன்னன் எனில் அங்கயர்கண்ணி அவர்களின் இளவரசி. வீட்டின் ஒரே பெண் வாரிசு மூன்று அண்ணன்களின் தங்கை கேட்கவா வேண்டும்.
எழிலையே ஏய்க்கும் ஒரே ஜீவன் அங்கயர்கண்ணி தான். என்ன வேண்டுமானாலும் அவனிடம் சாதித்துக் கொள்வாள். இப்படியான அழகான குடும்பத்தை பார்ப்பவரெல்லாம் மெச்சி போகாமல் இருந்தால் தான் ஆச்சரியம்.
மகேந்திரநாதன் பிறந்து வளர்ந்ததே இந்த சைவசைலத்தில் தான். மூன்று தலைமுறையாய் வசதி வாய்ப்பு பெருகினாலும் சொந்த மண்ணை விட்டு எங்கேயும் போகாமல் இருந்து வருகின்றனர்.
சாதாரண நெசவு தொழிலை பாராம்பரியமாக கொண்டிருந்த குடும்பத்தை மகேந்திர நாதன் சிறு கடை ஆரம்பித்ததின் மூலம் அடுத்த நிலைக்குக் கொண்டுச் சென்றார். அதன்பின் அவரின் மூன்று பிள்ளைகளுமாய் சேர்ந்து ஆண்டவன் ஜவுளிக் கடலாகவே மாற்றியிருந்தனர்.
இருந்தும் தங்கள் பாரம்பரியத்தையும் விடாமல் நெசவுத் தொழிலையும் பேணிக் காத்தனர்.
இன்றைய நிலையில் தொழிலின் மொத்த ராஜ்ஜியமும் எழிலமுதனிடம் தான். பன்னிரண்டாவது முடித்த கையோடு தொழிலை பார்த்துக் கொள்வதாய் கூறி அப்பாவோடு போய் நின்று கொண்டான்.
ஐந்து வருடங்களுக்குள்ளாகவே தனது தனித்தன்மையை தொழில் வட்டத்தில் பதித்து விட்டிருந்தான். ஆனால் தம்பிகள் இருவரையும் அவர்களின் விருப்பப்படி படிக்க வைத்தான்.
அதன்படி தமிழமுதன் எம் காம் முடித்து வங்கியில் பணிபுரிந்து வருகிறான். முகிலமுதன் தற்போது இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வர அங்கயர்கண்ணியோ வராத படிப்பை வா வானு சொல்லாதீங்களேன்னு அழுது புரண்டு பெரிய அண்ணனின் சொல்லுக்காக பி எஸ் ஸி இந்த வருடம் தான் சேர்ந்திருந்தாள்.
ஆச்சியும் தாத்தாவும் வந்த குரல் கேட்டு பாதி தூக்கத்தில் கலைந்த தலையோடு முட்டியை மறைத்தவாறு போட்ட பாவடையும் டி ஷர்டுமாய் வந்தவள் பாக்கியத்தின் மடியில் படுத்துக் கொண்டாள்.
“ஏட்டீ பொம்பள பிள்ளையா காலங்காத்தால எழுந்து அம்மா பெரிம்மாவுக்கு உதவி செய்யலாம்ல. . இப்படியே இருந்தா நாளைக்கு உன் மாமியாகாரி குமட்டுலயே இடிச்சு இடிச்சு எல்லாத்தையும் சொல்லி கொடுப்பா. . ”
“ஆச்சி. . காலையிலேயே ஆரம்பிக்காத. . அப்படி என் மேல கைய வச்சா நீ சும்மா விட்டுருவியா. . இல்ல என் அண்ணணுங்கதான் விட்டுருவாகளா?”,எனும் போதே தமிழமுதன் அங்கு கையில் காபியோடு வந்தான்.
“ம்ம் பின்ன உனக்கு பதிலா நாங்க வந்து அடி வாங்கணுமோ. . இதான் சான்ஸுனு நாலு அடி எக்ஸ்ட்ராவா போடசொல்லுவேன். ”
“தமிழு அப்படி சொல்லிப்புட்டியே யா. . உன் தங்கச்சியை இப்படி சொல்ல எப்படியா உனக்கு மனசு வந்துச்சு. . ”,என பக்கத்துவீட்டு கிழவி தொனியில் ஒப்பாரிப் பாட்டாய் பாட ஆரம்பித்தாள்.
உள்ளிருந்து பறந்து வந்த சோபாவின் தலையணை அவள் தலையை குறிப் பார்த்து வந்து விழ பின்னாடியே முகிலமுதன் வந்தான்.
“ஏட்டீ குட்டிச் சாத்தான் என்னத்துக்கு காலங்காத்தாலேயே இப்படி ஒப்பாரி வச்சுட்டுஇருக்க. . ”
“எருமமாடே ஏன்டா தலகாணியை தூக்கிப் போட்ட இன்னைக்கு நீ என்ன ஆகுறனு பாரு. . மகனே மாட்டுன நீ”,என்றபடி அவனைத் துரத்த ஆரம்பிக்க மகேந்திரநாதன் தலையில் கைவைத்து விட்டார்.
“இதுங்களோட நித்தம் இப்படி ஒரு போராட்டமா இருக்கே. . ஏய் சின்ன வாண்டு பொட்டபுள்ளையா கொஞ்சம் அடங்கித்தான் போயேன். அவனுக்கு சரிசமமா மல்லுக்கு நிக்குற. . ”
“ஏ தாத்தா என்ன பொட்ட புள்ளைனா குறைச்சலா. . பொம்பளை புள்ளைகிட்ட மல்லுக்கு நிக்குறான் அவனை அடங்கி உக்கார சொல்லு. . ”,என்று அவனைத் துரத்தியவாறே கத்திக் கொண்டிருந்தாள்.
இந்த ஆர்பாட்டத்தில் சமையலறைக்குள் இருந்து கையில் சட்டகப்பையோடு வந்த பூம்பாவை,
“ரெண்டு பேரு பஞ்சாயத்தை தீத்து வச்சே எனக்கு காலு போய்டும் போல இருக்கு. . பிள்ளையை கொடுக்க சொன்னா அந்த ஆண்டவன் எனக்கு ரெண்டு குட்டிச் சாத்தானை கொடுத்துருக்கான். வந்தேன் பழுக்க காச்சின கம்பியை கால்ல இழுத்துருவேன் இழுத்து. . நில்லுலே முகிலு…
அந்த கழுத தான் அடங்க மாட்றா நீயுமா. . நில்றா டேய். . ”,என அவரின் கத்தல்கள் எதுவும் அந்த இருவரையும் துளியும் பாதிக்கவில்லை. அடுத்த ஐந்தாவது நிமிடம் கேட்ட பைக் சத்தத்தில் அடித்துப் பிடித்து முகிலமுதன் தனதறைக்கு ஓட நமட்டுச் சிரிப்போடு தமிழ் காபியை பருகிக் கொண்டிருந்தான்.
அங்கயர்கண்ணியோ மூச்சு வாங்க வாசலை நோக்கி ஓடி பைக்கில் கைவைத்தவாறு நின்றாள்.
அந்த கருப்பு புல்லட்டை சென்டர் ஸ்டண்ட் போட்டு நிறுத்தியவன் வேட்டியை மடித்துக் கட்டியவாறே கண்ணாடியை கழட்டி சட்டையில் மாட்டினான்
எழிலமுதன் ஆறடிக்கும் சற்று அதிகமான உயரம் கட்டு மஸ்தான உடல்வாகு எந்த வேலைக்கும் அஞ்சாதவன் என்பதை பறைச் சாற்ற அதற்கு பொருத்தமாய் அவனின் கருமை வண்ணம்.
முறுக்கு மீசையை இன்னுமாய் முறுக்கியவவன் மறு கையால் அவளின் காதை பற்றி திருகினான்.
“ஸ்ஸ் ஆஆ அண்ணே அண்ணே வலிக்குதுணே…ப்ளீஸ் ப்ளீஸ். . ”
“எத்தனை தடவை சொல்லிருக்கேன் காலங்காத்தால அவனோட ஏழரையை கூட்டாதனு. . தெருமுனை வரை கேக்குதுட்டீ உன் சத்தம். நாள பின்னே கல்யாணத்துக்கு மாப்பிள்ளை தேடினா எவனும் நல்ல படியா ஒரு வார்த்தை சொல்ல மாட்டான். ”
“அண்ணே அவன்தே முதல்ல என்ன அடிச்சான் அதனால தான் நா அவனை துரத்தினேன். . ”
“போ போ போய் காலேஜுக்கு கிளம்புற வழியை பாரு. . போ. . ”,என்றவாறு ஆச்சி தாத்தாவோடு வந்து அமர்ந்தான்.
“என்ன டே லோட் எல்லாம் சரி பாத்து இறக்கிட்டியா?”
“ம்ம் ஆச்சு ஆச்சு. . எத்தனை வருஷம் பழக்கமானாலும் நாம தல தெரிஞ்சா தான் ஒழுங்கா வேலை பாக்குறானுக. . நீங்க எல்லாம் எல்லாரையும் நம்பி எப்படித்தேன் ஒப்படைச்சீகளோ. . ”
“ஏலேய் நா உங்கப்பனுக்கே அப்பன் லே. . என்னையே குறை சொல்லுதியோ…”
“ம்ம் உண்மையை சொன்னா கசக்கத்தான் செய்யும். . என்ன பாக்கியம் உன் வூட்டுகாரரு ரொம்பத்தேன் விரைப்பா பேசுறாரு என்னனு கேக்க மாட்டியா. . ”
“ஏலேய் என் பொண்டாட்டியையே பேரு சொல்லி கூப்பிடுதியோ. . தொலச்சுருவேன்ல. . ”,என தன் கைத்தடியை வைத்து அவனை லேசாய் தட்டினார்.
“என்ன தமிழு வேலைக்கு நேரமாகாலையா இங்கன உக்காந்து பராக்க பாத்துட்டு இருக்க”
“இதோ கிளம்பணும் ணே. . ”என்றவாறு எழுந்தவனை மறித்தவாறு கையில் காபியோடு வந்து நின்றார் மலரொளி. தமிழமுதனிடம் கண்சாடை காட்டியவாறு எழிலுக்கு காபி டம்ளரை நீட்டினார்.
“என்ன சித்தீ என்ன விசயம் பார்வை இங்கயும் கவனம் எங்கேயுமோ இருக்கே. . ”,என்றவனின் குரலில் நடப்பிற்கு வந்தவர் அப்போது தான் டம்ளரை அவனிடம் ஒழுங்காக நீட்டாததை உணர்ந்து மீண்டும் தமிழை ஒரு பார்வை பார்த்துச் சென்றார்.
“என்ன லே என்ன விஷயம் ஆகணுமாம் நம்ம அம்மைகளுக்கு. . உன்னை தூது விட்ராவ. . ”
“வேற என்ன எல்லாம் உன் கல்யாண விஷயம் தான். தரகர் நேத்து ஒரு பொண்ணு சாதகம் கொடுத்துட்டு போயிருக்காரு. . பொண்ணு வீடு பாபநாசம் தானாம். நல்ல குடும்பமாம். . உனக்கும் வயசாய்ட்டே போகுதுல. . ”
“ம்ம் இதுக்கு எத்தன தடவ தான் என் முடிவச் சொல்றது. எனக்கு இப்போதைக்கு கல்யாணத்துல எல்லாம் இஷ்டமில்ல. . கல்யாணம் பண்ணணும்னு தோணிணா நானே சொல்லுவேன். சும்மா நொய் நொய்னு பேசி மனுசன் உசுற எடுக்காம ஒழுங்கா போய் உனக்கு பொண்ணை பார்க்க சொல்லு போ. . ”
“ஏலேய் மூத்தவன் நீ இருக்கும் போது எப்படில அவனுக்கு பாக்க முடியும். . கூறுகெட்ட தனமா பேசாத எழிலு. . ”
“ஏ கிழவி அண்ணணுக்கு கலியாணம் ஆகலனு தெரிஞ்சு எவன் பொண்ணுதர ஒத்துக்குறானோ அவன் வீட்ல பொண்ணு எடு. . அத விட்டுட்டு என் உசுர வாங்காத. .
ஏலேய் உனக்கும் தாம்ல இவய்ங்க பேச்ச கேட்டு நீ உக்காந்தா இந்த ஜென்மத்துல உனக்கு கல்யாணம் நடக்காது சொன்னது புரியுதுல. . ”
என்றவன் வேகமாய் மாடிக்குச் சென்று விட பாக்கியமும் மகேந்திரநாதனும் தங்களுக்குள் புலம்ப ஆரம்பிக்க தமிழமுதன் சமையலறைக்குச் சென்றான்.
வழக்கம் போல் எந்த சலனமுமின்றி வெற்றிச் செல்வி வேலையை பார்த்துக் கொண்டிருக்க மலரொளி தான் புலம்பிக் கொண்டிருந்தார்.
“அக்கா இந்த பிள்ளைக்கு ரொம்பதேன் இடம் கொடுத்துட்டோம். கொஞ்மாவது சொல்றத கேக்குதானு பாருங்க. . முப்பத்திரெண்டு வயசாகுது. .
இவன் வயசு பசங்கலெல்லாம் இரண்டு புள்ளைக்கு அப்பனா இருக்கானுக. . நம்ம குடும்பத்தோட மொத கல்யாணம் கொஞ்சமாவது பெத்தவுகள பத்தி நினைக்க வேணாமா. . ”
“மலரு நா தான் சொல்லிட்டனே கல்யாணத்தை மட்டும் அவுக அவுக விருப்பப்படி தான் பண்ணியாகணும். விளையாட்டு காரியம் இல்ல மலரு. . அவன் போக்குல விடு அவனுக்கானவ இனிமேலா பொறக்கப் போறா?”
“அக்கா ஆனாலும் உங்கள மாதிரி பொறுமையெல்லாம் எனக்கு வராது. . பெரியவுகளும் இளையவரும் வரட்டும் நா இன்னைக்கு பேசிக்கிறேன். . ”
“ம்மா. . அவுக சொன்னவுடனே அண்ணே கேட்டுருமா. . ஏன்மா நீ வேற. . என்னவோ போ. . இன்னைக்கு ஒரு தீபாவளி இருக்கு அதுமட்டும் உறுதி. . நா போய் பொழப்பை பாக்குறேன். . ”
அடுத்த அரைணி நேரத்தில் மொத்த குடும்பமும் சாப்பாட்டு மேஜையில் ஆஜராக ஆண்கள் அனைவரும் அமர அவர்களோடு அங்கயர்கண்ணியும் அமர்ந்து கொள்ள பாக்கியம் கீழே அமர்ந்து உண்ண ஆரம்பித்தார்.
“இளையவரே நேத்து நம்ம எழிலுக்கு ஒரு சாதகம் வந்துதுல. . அதபத்தி சொன்னா வழக்கம் போல பாடுன பாட்டையேதேன் பாடுறான் நீங்களாவது என்னனு கேக்க கூடாதா?”,என மலரொளி ஆரம்பித்தார்.
“என்னலே எழிலு சாமியாரா போற நினைப்பு எதுவும் இருக்கோ. . அப்படி இருந்தா இப்போவே தெளிவா சொல்லிரு டே. . நல்ல இடமா பாத்து நாமளே ஆசிரமம் ஆரம்பிச்சுருவோம். . என்ன நான் சொல்றது?”
“சித்தப்பூ சோக் அடிக்கிறேன்னு கழுத்த அறுக்காதீக சொல்லிட்டேன். . இப்போ எதுக்கு இந்த தேவையில்லாத பேச்சோ எனக்கு புரியல. . ”
“ம்ம் எப்போ கேட்டாலும் இப்படியே சொல்லிட்டு அலையுறல நீ. . வீட்டுக்கு மூத்த புள்ள. . ஊர்ல கேக்குறவனுக்கெல்லாம் பதில் சொல்லி முடியல. .
உனக்கு பின்னாடி மூணு பேர் இருக்காகனு கொஞ்சமாவது நினைப்பிருக்கட்டும் சொல்லிப்புட்டேன். ”, என அதியமான் பட்டென கத்திவிட அந்த இடமே ஒரு நொடி அமைதியாகியது.
“பெரிப்பா இப்போ எதுக்கு இப்படி கத்துதீக. . அண்ணணுக்கு எப்போ தோணுதோ அப்போ அண்ணணே சொல்லும். . ”,என்ற அங்கயர்கண்ணியின் தலையிலேயே ஒரு இடி இடித்தார் பூம்பாவை.
“யம்மா ஏன் அடிக்க இப்போ. . உண்மையை தான சொல்லுதேன். . படிப்பு வராதவள படிக்க சொல்லுதீக. . கல்யாணம் வேணாம்னு சொன்னா பண்ணியே ஆகணும்ங்குறீக. . உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா?”
“ம்ம் ஆமா என் உயிரை எடுக்குறதுக்கு பதிலா இந்த நூத்து கிழவிக்கு கல்யாணத்தை பண்ணுங்க. . காலேஜ்ல கட்டுற பீஸாவது மிச்சமாகும். .
ம்மா தமிழோட சாதகத்தை குடு இன்னைக்கே தரகர்ட்ட குடுத்து வரன் பார்த்து தர சொல்றேன். இதுக்கு மேல இதுல பேச ஒண்ணுமில்ல. . ”, என்றவன் கையை கழுவி விட்டு எழுந்து விருவிருவென வண்டியை எடுத்துச் சென்றுவிட்டான்.
“ஏலேய் பெரியவனே உன் புள்ள இருக்கான் பாரு வர வர சொந்த வீட்டுலயே பட்டாளத்துகாரன் மாதிரி விறைப்பா தான் சுத்திட்டு இருக்கான். என்னவோ போ. . பேசாம தமிழுக்கு வரன் பார்க்க ஆரம்பிப்போம். .
அவன் இம்புட்டு பிடிவாதமா இருக்கும்போது யாரு என்ன செய்ய முடியும். அவனுக்கானவ எங்கயோ உக்காந்து கண்ணாமூச்சி ஆடிகிட்டு இருக்கா. . வரட்டும் கடவுளை வேண்டுறத தவிர நம்மகிட்ட ஒண்ணுமில்ல. . ”,என்றவாறு மகேந்திரன் உணவு உண்ண தொடங்க ஆற்றாமையோடு அனைவரும் அவரவர் வேலைக்கு கிளம்பினர்.
error: Content is protected !!